Monday, 11 September 2017

இரசியாவின் போர்ப்பயிற்சி போரைக் கொண்டு வருமா?

Zapad 2017 என்பது பனிப்போருக்கும் பின்னர் இரசியா செய்யும் மிகப்பெரிய போர்ப்பயிற்ச்சியாகும். செப்டம்பர் 14-ம் திகதி  முதல் 20-ம் திகதி வரை இந்தப் போர்ப்பயிற்ச்சி இரசியாவிலும் பெலரஸிலும் நடக்கவிருக்கின்றது. Zapad என்றால் மேற்கு என்று பொருள்படும். இது நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும். 2008-ம் ஆண்டு ஜோர்ஜியாவையும் 2014-ம் ஆண்டு உக்ரேனையும் இரசியா போர்ப்பயிற்ச்சி என்ற போர்வையிலேயே ஆக்கிரமித்தது. அதனால் இரசியாவின் அயல் நாடுகள் இப்போர்ப்பயிற்ச்சியினால் அச்சமடைந்துள்ளன. Zapad 2017 போர்ப்பயிற்ச்சியில் எழுபதினாயிரம் முதல் ஒரு இலட்சம் படையினர் ஈடுபடலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இணையவெளியிலும் போர்ப்பயிற்ச்சி
தற்போது போர்ப்பயிற்ச்சி என்னும் போது அதில் இணையவெளிப் போர்முறைமை(cyber warfare) அதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. இரசியாவின் இணையவெளிப் போர் முறைமை படைத்துறை நிலையங்களை மட்டும் இலக்கு வைப்பதல்ல என மேற்கு நாடுகளின் ஊடகங்கள் குற்றம் சுமத்துகின்றன. இரசியாவின் இணையவெளித் தாக்குதல்கள் மருத்துவமனைகள், குடிநீர் வழங்கல், மின் விநியோகம் போன்றவற்றைச் செயலிழக்கச் செய்யலாம். அதனால் பல உயிரிழப்புக்கள் ஏற்படலாம். எஸ்த்தோனியாவிலும் உக்ரேனிலும் இரசியா இணையவெளித் தாக்குதல்களில் ஏற்கனவே ஈடுபட்டது என்றும் குற்றம் சாட்டப்படுகின்றது.

அவன் போட்ட கணக்கொன்று இவன் போட்ட கணக்கொன்று
இரசியாவின் Zapad 2017 என்னும் போர்ப் பயிற்ச்சி இரசியாவின் மேற்குப் புறத்திலும் லித்துவேனியா, லத்வியா, எஸ்தோனியா ஆகிய போல்ரிக் நாடுகளினதும் போலாந்தினதும் எல்லையிலும் உள்ள பெலரஸ் நாட்டிலும் இரசியாவின் கட்டுப்பாட்டில் உள்ள கலினின்கிராட்  என்ற போல்ரிக்கடற் துறைமுகத்திலும் நடக்கும். இந்தப் போர்ப் பயிற்ச்சியில் ஒரு இலட்சம் படையினர் கலந்து கொள்ளவிருக்கின்றனர் என மேற்கு நாட்டு ஊடகங்கள் சொல்கின்றனர். ஆனால் 5,500 இரசியப்படைகளும் 7,200 பெலரஸ் படைகளும் 70 விமானங்கள், 250 தாங்கிகள், 200 ஆட்டிலறி முறைமைகள், பத்து கடற்படைக் கப்பல்களுடன் பயிற்ச்சி நடக்கவிருக்கின்றது என்றார் இரசியாவின் துணைப் பாதுகாப்புத் துறை அமைச்சர் லெப்டினண்ட் ஜெனரல் அலெக்சாண்டர் ஃபோமின்.

57 நாடுகள் பத்திரமாக இருக்க ஒப்பமிட்ட பத்திரம்
போர் ஒத்திகை அல்லது பயிற்ச்சி செய்யும் போது தவறுதலாக மோதல்கள் நடக்காமல் இருக்கவும் போர் ஒத்திகை அல்லது பயிற்ச்சி என்ற போர்வையில் திடீர் ஆக்கிரமிப்புக்கள் செய்வதைத் தடுக்கவும் ஐரோப்பிய நாடுகள் ஓர் உடன்பாட்டிற்கு வந்திருந்தன. 57 உறுப்பினர்களைக் கொண்ட ஐரோப்பிய பாதுகாப்பிற்கும் ஒத்துழைப்பிற்குமான அமைப்பு வியன்னாவில் ஒப்பமிட்ட பத்திரத்தின்படி 9,000 மேற்பட்ட படையினரைக் கொண்ட போர் ஒத்திகை செய்யும் போது அதுபற்றிய முன்னறிவித்தலை மற்ற நாடுகளுக்கு கொடுக்க வேண்டும், 13,000இற்கு மேற்பட்ட படையினரைக் கொண்ட போர் ஒத்திகை செய்யும் போது மற்ற நாடுகளைப் பார்வையாளர்களாக அழைக்க வேண்டும். இரசியா தனது போர் ஒத்திகையில் பங்கு பற்றும் படையினரின் எண்ணிக்கையை வேண்டுமென்றே குறைத்துக் கூறுகின்றது என மேற்கு நாட்டு ஊடகங்கள் குற்றம் சுமத்துகின்றன. 2013-ம் ஆண்டு நடந்த போர்ப்பயிற்ச்சியின் போது 75,000இற்கும் மேற்பட்ட இரசியப் படையினர் பங்கு பற்றியிருந்தனர்.

சிரியா இரசியாவின் ஏரியா
இரசியா கடந்த பல ஆண்டுகளாக 2020இல் தனது படைத்துறையை உலகின் முதல் தர படையாக மாற்றும் திட்டத்தை செயற்படுத்தி வருகின்றது. தனது படைத் தொழில்நுட்பத்தை அமெரிக்காவிற்கு சவால் விடக்கூடிய வகையில் அது மாற்றியமைத்துக் கொண்டிருக்கின்றது. அத்திட்டத்தில் பெரும்பகுதி நிறைவேற்றப்பட்டு விட்டது என்பத இரசியா சிரியாவில் நிரூபித்துள்ளது. சிரியாவில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தி சிரியாவினூடாக மேற்காசியாவில் இருந்து நிலத்தடிக் குழாயூடாக மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கு எரிவாயு விநியோகம் செய்து மேற்கு ஐரோப்பிய நாடுகள் தமது எரிவாயுத் தேவைக்கு இரசியாவில் தங்கியிருப்பதைப் பெருமளவில் குறைக்கும் திட்டத்தை நிறைவேற்ற விடாமல் புட்டீன் தடுத்துவிட்டார்.

கலினின்கிராட்
இரசியாவின் பெருவல்லரசு நிலைக்கு அதன் மிதவெப்பத் துறைமுகங்கள் (warm water ports) அவசியமாகும். அதனால் தான் தனது கிறிமியாவில் உள்ள கடற்படைத் துறைமுகங்களை இரசியா இழக்க விரும்பாமல் நேட்டோவிலும் ஐரோப்பிய ஒன்றியத்திலும் உக்ரேன் இணைய முன்னர் கிறிமியாவை இரசியா தனதாக்கிக் கொண்டது. போல்ரிக் கடலில் லித்துவேனியாவிற்கும் போலந்திற்கும் இடையில் உள்ள கலினின்கிராட் நகரமும் அதன் துறைமுகங்களும் இரசியாவிற்கு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்ததாகும். கலின்கிராட் நகர் ஒரு exclave ஆகும். ஒரு நாட்டுக்கு சொந்தமான வேறு நாடுகளால் சூழப்பட்ட நிலப்பரப்பை exclave என்பர். கலினின்கிராட் நகரும் அதிலுள்ள கடற்படைத் தளமும் பாதுகாப்பாக இருப்பதற்கு லித்துவேனியா, எஸ்தோலியா, லத்வியா ஆகிய நாடுகள் இரசியாவசமாக இருப்பது அவசியம். அத்துடன் இந்த மூன்று நாடுகளும் இரசியாவின் வசமாக அல்லது இரசிய சார்பாக இருப்பது இரசியாவிற்கு ஒரு கவசமாகும்.
ஆளுக்கு ஆள் சுரண்டியபடி இருப்பாங்கள்
2014-ம் ஆண்டில் இருந்து இரசியா நேட்டோ நாடுகளின் எல்லையில் சீண்டுதல்களைச் செய்வது அதிகரித்துள்ளது என்கின்றது நேட்டோப் படைத்துறைக் கூட்டமைப்பு. 2013-ம் ஆண்டிலும் பார்க்க நேட்டோ நாடுகளின் எல்லையில் இரசியப் போர்விமானங்கள் பறப்பது 70 விழுக்காடு அதிகரித்துள்ளனவாம். இரசியாவின் நடவடிக்கைகளால் உக்ரேன் நாடு அதிக அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகியுள்ளது என அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. போகோள அமைப்பின்படி உக்ரேனை இரசியா மூன்று திசைகளில் ஆக்கிரமிக்கலாம். இரசியாவின் படைவலுவின் முன் உக்ரேனால் நின்று பிடிப்பது கடினம். குறைந்த செலவுடன் படை நகர்வுகளையும் படை நடவடிக்கைகளையும் தன்னால் செய்ய முடியும் என்பதை சிரியாவில் இரசியா நிரூபித்துள்ளது. இரசிய எல்லையில் நேட்டோப் போர்விமானங்கள் பறப்பதும் அத்து மீறுவதும் நடப்பதுண்டு. சிலவேளைகளில் வாரத்துக்கு 24 பறப்புகளை நேட்டோ போர் விமானங்கள் இரசிய எல்லையில் செய்வதுண்டு.

பங்கு போட்டுக் கொண்ட பெரிசுகள்
1939-ம் ஆண்டு சோவியத் ஒன்றியத்தின் வெளியுறவுத் துறை அமைச்சர் வியசெஸ்லவ் மொலொடோவும் ஜேர்மனிய வெளியுறத்துறை அமைச்சர் ஜோக்கிம் வொன் ரிப்பெண்ட்ரொப்பும்  கைச்சாத்திட்ட மொலொடோவ்-ரிப்பெண்ட்ரொப் உடன்படிக்கையின் படி இரு நாடுகளும் ஒன்றை ஒன்று ஆக்கிரமிப்பதில்லை என ஒத்துக் கொள்ளப்பட்டது. அந்த உடன்படிக்கையின் ஒரு இரகசிய இணைப்பின் படி போலாந்து, லித்துவேனியா, லத்வியா, எஸ்தோனியா, பின்லாந்து, ருமேனியா ஆகிய நாடுகளை சோவியத் ஒன்றியமும் ஜேர்மனியும் எப்படிப் பங்கு போட்டுக் கொள்வது என்பது பற்றியும் இரு நாடுகளும் ஒத்துக் கொண்டன. இந்த உடன்படிக்கையைத் தொடர்ந்து இரு நாடுகளும் போலந்தை ஆக்கிரமித்துப் பங்கு போட்டுக் கொண்டன. பின்லாந்தை சோவியத் ஆக்கிரமித்துக் தன்னுடன் இணைந்துக் கொண்டது. ருமேனியாவின் ஒரு பகுதியும் சோவியத்தின் வசமானது. சோவியத் ஒன்றியம் 1940-ம் ஆண்டு எஸ்தோனியா, லத்வியா, லித்துவேனியா ஆகிய போல்ரிக் நாடுகளைத் தனதாக்கிக் கொண்டது.

இரசியக் குடியேற்ற வாதம்
லித்துவேனியா, லத்வியா, எஸ்தோனியா ஆகிய நாடுகள் 1991-ம் ஆண்டு சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் தனி நாடுகள் ஆகியதுடன் 2004-ம் ஆண்டு நேட்டோப் படைத்துறைக் கூட்டமைப்பிலும் ஐரோப்பிய ஒன்றியத்திலும் இணைந்து கொண்டன.. இந்த நகர்வுகளை இரசியா தனக்கு அச்சமூட்டும் செயல்களாகப் பார்த்தது. லத்வியாவில் ஐந்து இலட்சம் இரசியர்கள் உள்ளனர். அது மொத்த மக்கள் தொகையின் 38% ஆகும். எஸ்த்தோனியாவில் மூன்று இலட்சம் இரசியர்கள் வாழ்கின்றனர். அது மொத்த மக்கள் தொகையின் 26%ஆகும். லித்துவேனியாவில் 175000 இரசியர்கள் மட்டுமே அதாவது மொத்த மக்கள் தொகையில் 5.8%. ஆகும். உக்ரேனில் உள்ள 17 விழுக்காடு இரசியர்களை வைத்து இரசிய அதிபர் விளடிமீர் விளையாடிய அரசியல் சதுரங்கத்திலும் பார்க்க அதிக அளவு விளையாட்டை லத்வியாவிலும் எஸ்த்தோனியாவிலும் விளையாட முடியும் என போல்ரிக் நாடுகளின் மக்கள் அச்சமடைந்துள்ளனர். உக்ரேனிய அரசுக்கு எதிராக அங்கு வாழும் இரசியர்கள் கிளர்ச்சி செய்தது போல போல்ரிக் நாடுகளான எஸ்தோனியா, லத்வியா, லித்துவேனியா ஆகிய நாடுகளில் உள்ள இரசியர்கள் கிளர்ச்சி செய்தவதற்கான வாய்ப்புக் குறைவு என்று சொல்லலாம். உக்ரேனிய மக்களின் வாழ்கைத் தரத்திலும் பார்க்க இரசியர்களின் வாழ்க்கைத் தரம் உயர்வானது. ஆனால் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்த மூன்று எஸ்த்தோனியா, லத்வியா, லித்துவேனியா ஆகிய போல்ரிக் நாடுகளின் வாழ்க்கைத் தரம் இரசியாவில் வாழும் இரசியர்களின் வாழ்கைத் தரத்திலும் உயர்வானது. அத்துடன் போல்ரிக் நாடுகளின் ஆட்சி முறைமையும் இரசிய ஆட்சி முறையிலும் மேம்பட்டது. இதனால் இரசியாவால் ஆக்கிரமிக்கப்பட்ட நாட்டில் வாழ்வதிலும் பார்க்க ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்த நாடுகளில் வாழ்வதை அவர்கள் விரும்புகின்றார்கள். அத்துடன் இம்மூன்று நாடுகளிலும் வாழும் இரசியர்கள் பல ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் குடியேறி வாழவும் வேலை தேடிச் செல்லவும் முடியும்.

கடுகு சிறிசு காரம் பெரிசு
2012-ம் ஆண்டு லத்வியாவில் இரசியா இரண்டாவது அரச மொழியாக இருப்பது ஒரு கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பின் மூலம் ஒழிக்கப்பட்டது. எஸ்த்தோனியாவில் இரசியர்களுக்கு எதிரான கடுமையான நிலைப்பாடு காணப்படுகின்றது. சோவியத் ஒன்றியம் எஸ்த்தோனியாவைத் தன்னுடன் இணைத்த பின்னர் குடியேறிய  இரசியர்களுக்கு அங்கு குடியுரிமை இல்லை. தேர்தலில் வாக்களிக்க முடியாது. விண்ணப்பம் மூலம் குடியுரிமை பெறுவதற்கு அவர்கள் எஸ்த்தோனிய மொழியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 2015-ம் ஆண்டு ஜனவரியில் ஓர் ஆக்கிரமிப்பின் போது எப்படி நடந்து கொள்வது என்பது தொடர்பான கையேடு ஒன்று லித்துவேனிய அரசால் மக்களுக்கு வழங்கப்பட்டது.

சும்மா இருந்தாலே வெல்லலாம்
2018 மார்ச் மாதம் நடக்கவிருக்கும் அதிபர் தேர்தலில் விளடிமீர் புட்டீன் வெற்றி பெறுவது நிச்சயம். அவருக்கான மக்கள் ஆதரவு எண்பது விழுக்காட்டிலும் அதிகமாகவுள்ளது. இந்த நிலையில் எந்த ஒரு போல்ரிக் நாட்டையோ ஆக்கிரமித்தால் அது மேற்கு நாடுகள் தமது பொருளாதாரத் தடைகளை அதிகரிக்க வாய்ப்புண்டு. அதனால் புட்டீனைப் பொறுத்தவரை இரசியப் படைகள் எல்லை தாண்டிச் சென்று இன்னொரு நாட்டை ஆக்கிரமிக்க வேண்டிய அவசியம் அரசியல் ரீதியாக இல்லை. ஆனால் அவரது கனவான சோவியத் ஒன்றியம் போல் ஒரு பேரரசைக் கட்டி எழுப்ப வேண்டும் என்பதற்கு முதற் பலியாகப் போவது போல்ரிக் நாடுகள் தான்.

சற்று இறங்கிய இரசியா
முதலில் தானும் பெலரஸ் நாடும் இணைந்து செய்யும் போர்ப்பயிற்ச்சிக்கு மேற்கு நாடுகளை வியன்னாப் பத்திரத்துக்கு இணங்க பார்வையாளர்களாக அழைக்காத இரசியா பல எதிர்ப்புக்களைத் தொடர்ந்து மூன்று பார்வையாளர்களை அழைத்தது. நேட்டோவின் செயலதிபர் ஜென்ஸ் ஸ்ரொல்ரென்பெர்க் இரசியாவும் பெலரஸும் விடுத்த மூவருக்கும் மட்டும் விடுத்த அழைப்பு அந்த இரு நாடுகளும் தமது பன்னாட்டுக் கடமையைக் குறைத்து மதிப்பிட்டுள்ளதைக் காட்டுகின்றது என்றார். மேலும் நேட்டோ செயலதிரான முன்னாள் நோர்வே தலைமை அமைச்சர் இந்தப் போர்ப்பயிற்ச்சி என்ற போர்வையில் பெலரஸில் இரசியா பாரிய தளம் ஒன்றை அமைக்க இரகசியமாக முயல்கின்றது எனவும் ஐயப்பட்டார். பெலரஸில் ஏற்கனவே சுமார் எட்டு இலட்சம் இரசியர்கள் வாழ்கின்றனர். பெலரஸில் இரசியா பாரிய படைத்தளம் அமைத்தால் து போலாந்துக்கு பெரும் அச்சுறுத்தலாக அமையும். 2013-ம் ஆண்டு இரசியா செய்த போர்ப்பயிற்ச்சியின் போது போலந்து மீது அணுக்குண்டுத் தாக்குதல் நடத்துவதற்கான பயிற்ச்சியும் செய்யப்பட்டது என மேற்கு ஐரோப்பிய நாடுகள் குற்றம் சுமத்தின.

ஜேர்மனியின் நிலைப்பாடு
2017 செப்டம்பர் 7-ம் திகதி எஸ்தோனியாவில் ABCD என சுருக்கமாக அழைக்கப்படும் The Annual Baltic Conference on Defence நடைபெற்றது. அங்கு உரையாற்றிய ஜேர்மன் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜுரி லுயிக் போல்ரிக் நாடுகளின் பாதுகாப்பிற்கு தனது நாட்டின் உத்தரவாதத்தை வழங்கினார். இரசியாவுடன் ஒரு முறுகல் நிலையை ஜேர்மன் விரும்புவதில்லை. இரசியாவிற்கும் ஜேர்மனிக்கும் இடையிலான வர்த்தகம் அதனால் பாதிக்கப்படும் என ஜேர்மனியர்கள் கருதுகின்றார்கள். ஆனால் புட்டீனின் மீண்டும் ஒரு சோவியத் ஒன்றியம் போன்ற ஒரு பேரரசைக் கட்டி எழுப்பும் கனவால் தமக்கு ஆபத்து என்பதை அவர்கள் உணர்ந்துள்ளார்கள். ABCD மாநாட்டில் ஜேர்மன் பாதுகாப்புத் துறை அமைச்சரின் உரை போல்ரிக் நாடுகளுக்கும் போலாந்திற்கும் ஆறுதல் அளிப்பதாக அமைந்திருந்தது.

போர் வருமா?

இற்றைக்கு இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த கிரேக்க சரித்திரவியலாளரும் விஞ்ஞான பூர்வமான சரித்திரவியலினதும் யதார்த்த அரசியலினதும் தந்தையாகக் கருதப்படுபவருமான துசிடைட்ஸ் (Thucydides) ஓர் அரசு ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கும் போது இன்னும் ஓர் அரசு வளர்ச்சியடைந்தால் ஒரு போர் நடப்பது தவிர்க்க முடியாது எனச் சொல்லியுள்ளார். மன்னர் ஜார் தலைமையில் இரசியா பேரரசாக உருவெடுத்த போது துருக்கியுடன் போர் புரிய வேண்டியிருந்தது. லெனில் தலைமையில் சோவியத் ஒன்றியம் பேரரசாக உருவெடுத்த போது ஜேர்மனியுடன் போர் செய்ய வேண்டியிருந்தது. பின்னர் உலக ஆதிக்கத்தில் ஐக்கிய அமெரிக்காவும் சோவியத் ஒன்றியமும் போட்டி போட்ட போது நேரடியான மோதல் தவிர்க்கப்பட்டது. இப்போது புட்டீன் தலைமையில் இரசியா உலக அரங்கில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட முயலும் போது ஒரு பெரும் போர் நடக்குமா?

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...