Friday, 19 November 2021

இரசியாவின் S-500 வான் பாதுகாப்பு முறைமை அமெரிக்காவிற்கு சவாலாகுமா?

  


நீண்ட காலமாக எதிர்பார்த்திருந்த இரசியாவின் S-500 வான் பாதுகாப்பு முறைமையின் முதலாவது அலகு உருவாக்கப்பட்டுள்ளது. இது புலப்படாத்தன்மை கொண்ட ஐந்தாம் தலைமுறைப் போர்விமானங்களையும் இனம் கண்டு தாக்கி அழிக்கக் கூடியது என நம்பப்படுகின்றது. இது மரபுவழிக் குண்டுகளையும் அல்லது அணுக் குண்டுகளையும் தாங்கி வரும் பத்து எறியியல் ஏவுகணைகளை (Ballistic Missiles) ஒரேயடியாக இடைமறித்து அழிக்கக் கூடியது. S-500இல் இருந்து வீசப்படும் இடைமறித்துத் தாக்கும் ஏவுகணைகள் ஒலியின் வேகத்திலும் பார்க்க 14 மடங்கு (Mach-14) வேகத்தில் பாயக் கூடிய மீயுர்-ஒலிவேக (Hypersonic) ஏவுகணைகளாகும். இவற்றினுடைய செயற்படு நேர்ம் 3 செக்கண்ட்களாகும். முந்தைய S-400இன் செயற்படு நேரம் 10செக்கண்ட்களாகும். எதிரியின் மீயுர்-ஒலிவேக (Hypersonic) ஏவுகணைகளையும் இடை மறித்து அழிக்கக் கூடியது. S-500 இன் முதலாவதாக 2018இல் பரீட்சிக்கப்பட்டது. 2022-ம் ஆண்டின் நடுப்பகுதியில் இரசியப் படைகள் இவற்றை முழுமையாக பாவிக்க முடியும்.

ஒரு வான்பாதுகாப்பு/ஏவுகணை எதிர்ப்பு முறைமை மூன்று பாகங்களைக் கொண்டது:

1. இனம் காண் நிலையம் (Radar Unit)

இனம் காண் நிலையம் எதிரி வீசும் எறிகணைகளையும் ஏவுகணைகளையும் இனம் கண்டு அவற்றின் வேகத்தையும் பாதையையும் கட்டுப்பாட்டகத்திற்கு அறிவிக்கும்.

2. கட்டுப்பாட்டகம் (Control Centre )

இனம்காண் நிலையம் அனுப்பும் தகவல்களை வைத்தும் தன்னிடம் இருக்கும் உள்ளக ரடார்களையும் வைத்து எதிரி விசிய ஏவுகணைகள் அல்லது எறிகணைகள் தாக்கவிருக்கும் இடத்தை அறிந்து கொள்ளும். தாக்கப்படும் இடம் சேதம் விளைவிக்கக் கூடியது என்றால் ஏவுகணை வீசிகளுக்கு ஏவுகணை வீசவேண்டிய வேகம்இலக்கு பற்றிய தகவல்களை வழங்கும்.

3. ஏவுகணை வீசிகள் ( Missile Launchers)

ஏவுகணை வீசிகள் கட்டுப்பாட்டகத்தில் இருந்து கிடைக்கும் தகவலகளின் அடிப்படையில் எதிரிகளின் ஏவுகணைகளை அல்லது எறிகணைகளை இடையில் வைத்து அழிக்கக் கூடிய ஏவுகணைகளை வீசும். ஒரு கட்டுப்ப்பாட்டகத்தின் கீழ் பல ஏவுகணை வீசிகள் இருந்து செயற்படும். வீசப்படும் ஏவுகணைகள் ஒலியிலும் பார்க்க பல மடங்கு வேகத்தில் பாயும். இந்த ஏவுகணைகளின் வேகம் எதிரியின் ஏவுகணைகளிலும் பார்க்க அதிக வேகத்தில் பாயக்கூடியவையாக இருத்தல் அவசியம்.

சீன DF-41 ஏவுகணைகளை அழிக்க முடியாது

இரசியாவின் S-500இல் உள்ள ஏவுகணைகள் ஒலியிலும் பார்க்க 14 மடங்கு வேகத்தில் (Mach-14) பாயக்கூடியவை என்பதால் ஒலியிலும் 25மடங்கு  வேகத்தில் (Mach-25)  பாயும் சீனாவின் DF-41 ஏவுகணைகளை இடைமறிக்க முடியாமல் போகலாம். S-500 இன் ஏவுகணைகளான 77N6-N, 77N6-N1 200கிமீ/124மைல்கள் உயரம்வரை பாய்ந்து எதிரியின் ஏவுகணைகளை அழிக்கவல்லன. S-500இன் அடுத்த கட்ட முறைமைக்கு S-550 எனப் பெயரிடப்பட்டுள்ளது. அது பற்றிய விபரங்களை இரசியா வெளிவிடவில்லை.

அமெரிக்கப் பெருமைக்கு பேரிடி என்னும் இரசியா

இரசியர்கள் தங்களது S-500 வான் பாதுகாப்பு முறைமை ஒரு மந்திர குண்டு (Silver Bullet) எனப் பெருமைப்பட்டுக் கொண்டதுடன் அது அமெரிக்காவின் பெருமைக்கு பேரிடியாக அமையும் எனக் கூறியுள்ளனர்.

அமெரிக்காவின் ஐந்தாம் தலைமுறைப் போர்விமானங்களான F-22 Raptor, F-35 Lighting ஆகிய ஐந்தாம் தலைமுறைப் போர்விமானங்களை S-400 ஏவுகணை எதிர்ப்பு முறைமையால் இனம் காணமுடியாது எனக் கருதப்பட்டது. சிரியாவில் இரசியாவின் S-400 நிறுத்தப் பட்டிருந்த பிரதேசங்களில் இஸ்ரேல் அங்கு தன்னிடமுள்ள F-35 புலப்படா விமானங்களை பறக்க விட்டு பரிசோதித்ததாக செய்திகள் வெளிவந்திருந்தன. F-35 முதலில் போர் முனையில் பாவித்தது இஸ்ரேல் என இஸ்ரேலியப் படைத்துறையினர் பகிரங்கமாக பெருமைப்பட்டுக் கொண்டனர். ஆனால் அது எங்கு எப்போது என இஸ்ரேலியர்கள் சொல்லவில்லை. அது சிரியாவாக இருக்க வேண்டும் என ஊகம் தெரிவிக்கப்பட்டது.

அமெரிக்காவின்  THAAD & S-400



அமெரிக்காவின்  Terminal High Altitude Area Defence என்னும் வான்பாதுகப்பு முறைமை தாட் (THAADஎனச் சுருக்கமாக அழைக்கப்படும். அதிலும் பார்க்க இரசியாவின் S-400 வான்பாதுகாப்பு முறைமை சிறந்ததாக விளங்கியது. அமெரிகாவின் தாட் உயர் மட்டத்தில் வரும் ஏவுகணைகளையும் விமானங்களையும் மட்டும் இடைமறித்து அழிக்க வல்லது. ஆனால் இரசியாவின் S-400 அதி உயர்மட்டம்உயர் மட்டம்தாழ் மட்டம் ஆகிய மூன்று வகையான ஏவுகணைகளையும் விமானங்களையும் இடை மறித்து அழிக்க வல்லன. அத்துடன் தாட் ஒரு செக்கண்டிற்கு முன்னூறு கிமீ வேகத்திலும் குறைவான வேகத்தில் வரும் ஏவுகணைகளை மட்டும் இடைமாறிக்கும் வல்லமை கொண்டவையாக இருந்தன. ஆனால் இவற்றுடன் செய்மதிகளில் இருந்து செயற்படும் Space Based Infrared System (SBIS) மற்றும் விமானங்களில் இருந்து செயற்படும் Airborne Lace ஆகியவை இணக்கப்பட்ட பின்னர் அவற்றின் செயற்பாடுகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. S-400 ஒரு செக்கண்டிற்கு 480கிமீ வேகம் வரை பாயும் ஏவுகணைகளை இடைமறிக்க வல்லன. ஒரு S-400இன் விலை $500மில்லியன் ஆனால் ஒரு தாட் முறைமையில்ன் விலை அதிலும் பார்க்க ஆறு மடங்காகும். வான் பாதுகாப்பு முறைமையில் இரசியா அமெரிக்காவிலும் பார்க்க ஒரு படி முன்னேறியுள்ளது என்பதை S-400 நிலை நாட்டியது. S-500 இன்னும் ஒரு படி முன்னேற்றத்தை சுட்டிக் காட்டுகின்றது.

சீனாவிற்கும் இந்தியாவிற்கும் S-500

S-500 வான் பாதுகாப்பு முறைமையை S-400இல் இருந்து மேம்படுத்தாமல் அதன் ரடார்கள்கணினி முறைமைகள்ஏவுகணை வீசும் முறைமைகள்ஏவுகணைகள் ஆகியவற்றை முற்றிலும் புதியனவாக இரசியர்கள் உருவாக்கியுள்ளன. இரசியா சீனாவிற்கும் இந்தியாவிற்கும் S-500 வான்பாதுகாப்பு முறைமையை விற்பனை செய்ய முன்வந்துள்ளது. இதனால் பாதிப்படையப் போவது

கரிசனை கொள்ள வேண்டிய ஜேர்மனி

2021 ஏப்ரலில் ஜேர்மன் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜேர்மனிக்கு இரசியாவால் ஏற்படப்போகின்ற இடர் நேரடியானதும் திட்டவட்டமானதுமாகும் என்றார். ஜேர்மனியிடம் இருக்கும் பழைய Tornado போர் விமானங்கள் இரசியாவின் ஐந்தாம் தலைமுறைப் போர்விமானங்களை எதிர்கொள்ள முடியாதவை. இரசியாவின் S-500 செயற்படத் தொடங்கியதும் ஜேர்மன் போர் விமானங்கள் இரசியாப் பக்கம் தலைகாட்டவே முடியாது.

அமெரிக்காவின் B-21 Raider இரசியாவின் S-500ஐ அழிக்குமா?

அமெரிக்காவின் B-21 Raider போர்விமானங்கள் இன்னும் பத்து ஆண்டுகளில் எதிரி நாடுகள் உருவாக்கும் ஏவுகணை எதிர்ப்பு முறைமையை தகர்க்க வல்லது என அதன் உற்பத்தியாளர்கள் Northrop Grumman Corporation தெரிவித்துள்ளது. அமெரிக்கா 2022-ம் ஆண்டு களமிறக்கும் B-21 போர்விமானங்கள் அமெரிக்காவில் இருந்து கிளம்பி எதிரியின் எந்த ரடார்களுக்கும் புலப்படாமல் உலகின் எந்தப் பாகத்திலும் குண்டுகளை வீசிவிட்டு மீண்டும் அமெரிக்கா திரும்பக் கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளன. திடீர்த்தாக்குதலாளி என்னும் குறியீட்டுப் பெயர் கொண்ட இந்த வகை விமானங்கள் ஆறாம் தலைமுறையை சார்ந்தவை. Northrop Grumman நிறுவனத்தின் சிறந்த வெப்ப முகாமைத் (Thermal management) தொழில் நுட்பம் அதனிடம் B-21 விமான உற்பத்தி ஒப்படைக்கப் பட்டமைக்கான முக்கிய காரணமாகக் கருதப்படுகின்றது. சிறந்த வெப்ப முகாமையால் எதிரிகளின் வெப்பம்-தேடி ஏவுகணைகளால் தாக்கப்பட முடியாத தன்மையை B-21 பெறுகின்றது. Northrop நிறுவனத்தின் ஆறாம் தலைமுறைத் தாக்குதல் விமானத் தொழில் நுட்பங்களில் சிறந்த stealth எனப்படும் ரடாருக்குப் புலப்படாத்தன்மைசிறந்தswept-wing fighter பொறிமுறைபல் வேறுபட்ட இலக்குகளை தாக்கும் வலிமை மிக்க லேசர் படைக்கலன்கள் போன்றவை உள்ளன. இணைய வெளி ஊடுருவல்கள் மூலம் எதிரி நாடுகள் B-21  இன் இரகசியங்களைத் திருடாமல் இருக்க பெரு முயற்ச்சிகள் எடுக்கப் பட்டுள்ளன. B-21 Raider இரசியாவின் வான்பாதுகாப்பு முறைமைகளை தகர்க்கக் கூடியவை என அதன் உற்பத்தியாளர்களான Northrop Grumman Corporation சொல்கின்றனர்.

இரசியாவின் வான்பாதுகாப்பு முறைமைகளான S-400, S-500 போன்றவற்றிற்கு ஈடான வான்பாதுகாப்பு முறைமைகள் அமெரிக்காவிடம் இல்லை. ஆனால் அமெரிக்காவின் ஆறாம் தலைமுறைப் போர்விமானங்கள் இரசிய வான்பாதுகாப்பு முறைமைகளை தகர்கக் கூடியவையா என்பதை ஒரு போர்க்களத்தில் தான் பார்க்க முடியும்.

Wednesday, 17 November 2021

பைடன் – ஜின்பிங் சந்திப்பும் தைவானின் பாதுகாப்பும்

  


2021 நவம்பர் 15-ம் திகதி அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் சீன அதிபர் ஜீ ஜின்பிங்கும் மெய்நிகர் வெளியில் உரையாடுகையில் தைவானிய அரசு தைவானின் தற்காப்பு தொடர்பான கேந்திரோபாயக் கொள்கை பற்றிய பத்திரமும் பகிரங்கப் படுத்தப்பட்டுளது. தைவானை சீனா கைப்பற்றி விடுமா என்ற கரிசனையில் அமெரிக்காவும் தைவானை அமெரிக்கா அங்கிகரித்து விடுமா என்ற ஐயத்தில் சீனாவும் இருக்கும் நிலையில் இரு நாட்டு அதிபர்களும் சந்தித்துள்ளனர்.

மோசமான ஐந்து ஆண்டுகள்

2016-ம் ஆண்டு டொனால்ட் டிரம்ப் தேர்தலில் வென்றவுடன் தைவான் அதிபர் தொலைபேசி மூலம் டிரம்புடன் பத்து நிமிடம் உரையாடியது சீனாவை விசனப்படுத்தியது. 2018-ம் ஆண்டு இரு நாடுகளுக்கும் இடையில் வர்த்தகப் போர் (ஒரு நாட்டிலிருந்து செய்யப்படும் இறக்குமதிக்கு மற்ற நாடு அதிக வரி விதித்தல் அல்லது இறக்குமதிகளைத் தடை செய்தல்) ஆரம்பமானதில் இருந்து அமெரிக்க சீன உறவில் விரிசல் விழ ஆரம்பித்தது. 2019-ம் ஆண்டு உலகெங்கும் பரவிய கொவிட்-19 தொற்று நோய் சீனாவில் இருந்து ஆரம்பித்தது என்ற குற்றச் சாட்டை அப்போதைய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்வைத்த போதும் அமெரிக்க சீனாவிடையிலான உறவு பாதிப்பிற்கு உள்ளானது. பின்னர் ஈரானுக்கு எதிரான பொருளாதாரத் தடையை சீனாவின் ஹுவாவே நிறுவனம் மீறியது எனக் குற்றம் சாட்டிய அமெரிக்கா அதன் உரிமையாளரின் மகளை கனடாவில் தடுத்து வைக்கும் வேண்டுகோளை கனடிய அரசிடம் விடுத்திருந்தது. ஹுவாவே நிறுவனத்தின் Meng Wanzhou கனடா தடுத்து வைக்கப்பட்டமைக்கு பதிலடியாக கனடிய ஊடகவியலாளர்க இருவரை சீனா தடுத்து வைத்தது. இதனாலும் அமெரிக்க சீன உறவு பாதிக்கப்பட்டது. 2020 ஆகஸ்ட்டில் அமெரிக்க சுகாதாரத்துறை அமைச்சர் தைவான் சென்றது சீனாவைக் கடும் விசனத்திற்கு உள்ளாக்கியது. 2021-10-28இலன்று தைவானின் அதிபர் சாய் இங் வென் தைவானின் அமெரிக்கப் படையினர் தங்கியிருந்து தைவானியப் படையினருக்கு பயிற்ச்சி வழங்குகின்றார்கள் என்பதைப் பகிரங்கப்படுத்திய போது சீனாவின் பதில் சினம் மிருந்ததாக இருந்தது. அப்படிப் பயிற்ச்சி வழங்குவது சீனா படை நடவடிக்கை மூலம் தைவானைக் கைப்பற்ற வேண்டும் என்ற நிலைப்பாட்டை தீவிரப்படுத்துகின்றது என சீனா பதில் வழங்கியது. அந்நியப் படைகளுடனான ஒத்துழைப்பை தைவான் அதிகரிக்கும் போது சீனப் படைகள் தைவானை நோக்கி வரும் வேகமும் அதிகரிக்கும் என சீனப் பொதுவுடமைக் கட்சியின் ஊடகமான குளோபல் ரைம்ஸ் கருத்து வெளியிட்டது.

தணிக்க முயலும் பைடன்

ஜோ பைடன் அமெரிக்க அதிபராக பதவியேற்ற பின்னர் சீன அமெரிக்க முறுகலை தணிக்கும் நகர்வுகளைச் செய்து வருகின்றார். சீன அதிபரும் இரு நாடுகளுக்கும் இடையிலான முறுகல்கள் சீனப் பொருளாதாரத்தை பாதிக்கும் என உணரிந்து செயற்படுகின்றார். சீனா தொடர்ந்து 7%இற்கும் அதிகமான பொருளாதார வளர்ச்சியை பேணாவிடில் சீனாவில் பல சமூக குழப்பங்கள் ஏற்படலாம். இந்த நிலையிலேயே ஜோ பைடன் – ஜீ ஜின்பிங் சந்திப்பு 15/11/2021 நடை பெற்றது. பைடன் – ஜின்பிங் சந்திப்பின் போது தைவானின் தற்போதைய நிலையை சீனா ஒரு-தரப்பாக மாற்ற முயல்வது தைவானில் அமைதியை பாதிப்பிற்கு உள்ளாக்கும் என்றார் அமெரிக்க அதிபர் பைடன். அதற்கு ஜின்பிங்கின் பதில் காரம் நிறைந்ததாக இருந்தது. தைவானின் சுதந்திரத்திற்கு உதவி செய்வது நெருப்புடன் விளையாடுவது போலாகும்அப்படி விளையாடுபவர்கள் எரிபடுவார்கள்.” என்றார். ஜீ ஜின்பிங். இச் சந்திப்பிற்கு முன்னரே அமெரிக்க அதிபர் தைவானைப் பாதுகாக்க தேவையான எல்லாவற்றையும் அமெரிக்கா செய்யும் என்றார். தைவானை ஒரு தனிநாடாக அமெரிக்கா ஏற்றுக் கொள்ளவில்லை. ஒரு சீனா என்ற நிலைப்பாட்டில் தான் இருப்பதாக அமெரிக்கா சொல்கின்றது. ஆனால் 1979இல் அமெரிக்கப் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தைவான் பாதுகாப்புச் சட்டம் அமெரிக்கா தைவானைப் பாதுகாக்க உதவி செய்யும் எனச் சொல்கின்றது. தைவானுடன் அமெரிக்காவிற்கு அரசுறவு இல்லைதைவானை ஒரு நாடாக அமெரிக்கா ஏற்றுக் கொள்ளவில்லை. அமெரிக்கா தைவானுக்கு தொடர்ச்சியாக படைக்கலன்களை விற்பனை செய்கின்றது. இவற்றால் தைவான் தொடர்பாக அமெரிக்காவின் கொள்கை “கேந்திரோபாய குழப்ப நிலை” என விபரிக்கப்படுகின்றது.

தெளிவாக்கப்படுமா கேந்திரோபாய குழப்ப நிலை?

அண்மைக் காலங்களாக தைவான் தொடர்பாக அமெரிக்கா ஒரு தெளிவான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்ற வலியுறுத்தல் அமெரிக்க தரப்பில் இருந்து முன்வைக்கப்படுகின்றது. அமெரிக்க சீன உறவு பாதிக்கப்படாமல் இருக்க “கேந்திரோபாய குழப்பநிலை” தவிர்க்க முடியாதது. அதை அப்படியே வைத்துக் கொண்டு தைவானை இப்படியே (தனிநாடாக அங்கீகரிக்காமல்) வைத்திருப்பது ஆபத்து அற்றது. அதனால் தான் அதற்கு கேந்திரோபாயக் குழப்ப நிலை என்னும் பெயர் சூட்டப்பட்டுள்ளது. சீனா தைவானைக் கைப்பற்ற வேண்டும் என்ற கருத்தை தீவிரமாக முன்வைக்கும் போது அதைப் பாதுகாப்போம் என அமெரிக்கா அழுத்திச் சொல்கின்றது. 1996-ம் ஆண்டு தைவானை ஆக்கிரமிக்க சீனா தயார் செய்த போது அப்போதைய அதிபராக இருந்த பில் கிளிண்டன் இரண்டு விமானம் தாங்கிக் கப்பல்களை சீனாவிற்கும் தைவானிற்கும் இடையிலான தைவான் நீரிணக்கு அனுப்பியவுடன் சீனா தனது முயற்ச்சியைக் கைவிட்டது. பதினைந்து ஆழ்கடல் துறைமுகங்களைக் கொண்ட தைவானை சீனா கைப்பற்றினால் அதன் கடற்படை வலிமை மிகவும் அதிகமாகும். பசுபிக் பிராந்தியத்தில் சீனா அமெரிக்காவிற்கு அச்சுறுத்தல் கொடுக்கக் கூடிய நாடாக மாறும். அதனால் தைவானை சீனா கைப்பற்றுவதை அமெரிக்கா எந்த வகையிலும் தடுக்கும்.

தைவானின் பாதுகாப்பை முள்ளம் பன்றிக்கு ஒப்பிடுகின்றனர். தன்னை இரையாக்க வரும் மிருகங்களில் தன் முள்ளால் குத்தும் சிறு மிருகமான முள்ளம் பன்றியைப் போல் தைவானாலும் தன் எதிரிக்கு இழப்பை ஏற்படுத்த முடியும். தைவானின் தேசிய பாதுகாப்புச் சபை எப்படி சீன ஆக்கிரமிப்பை எதிர்கொள்வது என்பது பற்றிய திட்டங்கள் அடங்கிய பத்திரதை பகிரங்கப்படுத்த முன்னரே அதை ஜப்பானிய ஊடகம் ஒன்று அம்பலப்படுத்தியுள்ளது. அதன்படி தைவான் சீனப்படைகளுக்கு எதிராக எடுக்கும் நடவடிக்கைகள் பற்றி விபரிக்கப்பட்டுள்ளது:

1. போரையும் வெளி படைத்துறை அச்சுறுத்தலையும் தடுத்தல்.

2. தைவான் நீரிணையைக் கடக்கும் போது எதிரிக்கு பாரிய இடர்களை ஏற்படுத்துதல்.

2. தைவான் நீரிணையைக் கடக்கும் எதிரிக்கு அதிக ஆளணி இழப்புக்களை ஏற்படுத்தல்,

3. தைவான் நீரிணையை கடப்பதில் எதிரிக்கு உள்ள வலிமையற்ற புள்ளிகளை இனம் காணுதல்,

4. கடல் மூலம் தைவானைக் கைப்பற்ற முடியாது என்ற நிலையை உருவாக்குதல்.

ஆகியவை தைவானின் உபாயங்களாக இருக்கின்றன. ஆனால் தைவான் சீனாவின் மேற்குக் கரையில் உள்ள பொருளாதார நிலைகளை, குறிப்பாக ஷாங்காய், ஹொங் கொங் ஆகிய நகரங்களை நிர்மூலம் செய்யக் கூடிய ஏவுகணைகளை தானே உற்பத்தி செய்து வைத்திருக்கின்றது. சீன ஆக்கிரமிப்புக்கான ஏற்பாடுகளைச் செய்யும் போது தைவான் தனது ஏவுகணைகளை வீசலாம்.

இடர் மிகுந்த ஈருடகத் தாக்குதல்

உலகப் போர் வரலாற்றில் ஈரூடகத் தாக்குதல் (நீர் ஊடாக சென்று தரையில் தாக்குதல் செய்தல்) எதிரி எதிர்பாராத இடத்தில் எதிர்பாராத நேரத்தில் எதிரிக்கு தெரியாமல் செய்யப்படும் போதே வெற்றியளிக்கும் என்பது விதியாகும். தற்போதைய செய்மதி அவதானிப்புகள் வேவுவிமானங்கள், கண்காணிப்பு விமானங்கள் ஆகியவற்றின் அபரிமிதமான வளர்ச்சி ஈரூடகத் தாக்குதலை இடர் மிக்கதாக மாற்றியுள்ளது. சீனாவிடம் தைவானை தரைமட்டமாக்கக் கூடிய ஏவுகணைகள் தேவைக்கு அதிகமாக உள்ளன. ஆனால் படையினரை பெரும்ளவில் கொண்டு போய் தைவானில் இறக்குவது ஆபத்தானதாகும். அதுவும் எந்த ஒரு போர் முனை அனுபவமும் இல்லாத சீனப் படையினரை ஒரு எதிரி மண்ணில் வான் மூலமோ தரை மூலமோ இறக்குவதில் உள்ள ஆபத்தை சீனப் படைத்துறையினர் நன்கு அறிவர். போரில் அனுபவம் இல்லாதவர்களால் பயிற்ச்சி வழங்கப்பட்ட சீனப் படையினரை போர் அனுபவம் மிக்க படையினரால் பயிற்ச்சி வழங்கப்பட்ட தைவானியப் படையினர் ஒச்ரு மரபு வழிப் போரில் சமாளிக்க முடியும். தைவானியர்கள் கரந்தடிப் போர் முறைமையையும் பாவிக்கலாம்.

2021 நவம்பர் 3-ம் திகதி அமெரிக்கப் படைத்தளபதி ஜெனரல் மார்க் மில்லியின் கருத்துப் படி அடுத்த 24 மாதங்களுக்குள் சீனா தைவான் மீது போர் தொடுக்காது ஆனால் தைவானைக் கைப்பற்றக் கூடிய வலிமையை சீனா பெருக்கிக் கொண்டே இருக்கும்.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...