ஒஸ்ரியா, பெல்ஜியம், பல்கேரிய, குரோசியா, சைப்பிரஸ், செக் குட்யரசு, டென்மார்க், எஸ்த்தோனியா, பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, கிரேக்கம், ஹங்கேரி, அயர்லாந்து, இத்தாலி, லத்வியா, லித்துவேனியா, லக்ஸம்பேர்க், மோல்ரா, நெதர்லாந்து, போலாந்து, போர்த்துக்கல், ருமேனியா, சிலோவேக்கிய, சிலோவேனியா, ஸ்பெயின், சுவீடன் ஆகிய 27 நாடுகளின் கூட்டமைப்பாக ஐரோப்பிய ஒன்றியம் இருகின்றது. அது ஓர் அரசியல் மற்றும் பொருளாதாரக் கூட்டணியாகும். அதற்கு என ஒரு நாடாளுமன்றம், நீதித்துறை போன்றவை இருந்தாலும் அது ஒரு நாடு அல்ல. ஐரோப்பிய ஒன்றியத்தின் உருவாக்கம் ஒரு செழுமையையும் அமைதியையும் அடிப்படையாகக் கொண்டது. ஒரு வல்லரசாக வேண்டும் என்ற அடிப்படையில் ஒன்றியம் உருவாக்கப்படவில்லை. செழுமைக்கும் அமைத்திக்கும் படைவலிமை அவசியமாகும்.
எது பெருவல்லரசு?
எது பெருவல்லரசு என்பது பற்றி பொதுவாக ஒத்துக் கொள்ளப்பட்ட வரையறை இல்லை. இரண்டாம் உலகப் போரின் போது அமெரிக்கா, பிரித்தானியா, சோவியத் ஒன்றியம் ஆகியவை உலகப் பெருவல்லரசாக கருதப்பட்டன. பனிப்போர்க் காலத்தின் போது அமெரிக்காவும், சோவியத் ஒன்றியமும் உலகப் பெருவல்லரசாகக் கருதப்பட்டன. தற்போது அமெரிக்கா உலகப் பெருவல்லரசாக கருதப்படுகின்றது. இரசியாவும் சீனாவும் உலகப் பெருவல்லரசு என்போரும் உண்டு. அவை இரண்டும் உலகப் பெருவல்லரசாக உருவெடுத்துக் கொண்டிருக்கின்றன என்போரும் உண்டு. உலகப் பெருவல்லரசு என்பது உலகின் எப்பாகத்திலும் தனது ஆதிக்கத்தை தனது பொருளாதார மற்றும் படைவலிமையால் நிலைநாட்டக் கூடியதாகவும் உலக அமைப்புக்களில் தன் ஆதிக்கத்தை செலுத்தக் கூடியதாகவும் உலக வர்த்தக ஒழுங்கை உருவாக்கக் கூடியதாகவும் உலக ஒழுங்கை நிலைநாட்டக் கூடியதாகவும் இருக்கும்.
வலிமை மிக்க நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியம்
பிரான்ஸ் என்கின்ற ஐக்கிய நாடுகள் சபையால் ஏற்றுக் கொள்ளப்பட்ட வல்லரசு நாடு ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பு நாடாக இருக்கின்றது. அத்துடன் ஜேர்மனி, ஸ்பெயின், இத்தாலி, போர்த்துக்கல் ஆகியவை வலிமை மிக்க படைத்துறையைக் கொண்ட நாடுகள். G-7 நாடுகளிலும் G-20 நாடுகளிலும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளான ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி ஆகிய நாடுகள் இருக்கின்றன. ஐரோப்பிய ஒன்றியத்தின் மக்கள் தொகை 447மில்லியன். சீனாவிற்கும் இந்தியாவிற்கும் அடுத்தபடியாக அதிக மக்கள் தொகை ஐரோப்பிய ஒன்றியத்தில் இருக்கின்றது. அதன் மொத்த உற்பத்தி உலகின் உற்பத்தியில் 14% ஆக இருக்கின்றது. மற்ற வல்லரசு நாடுகளின் மொத்த உற்பத்தி உலக உற்பத்தியுடன் பார்க்கையில் அமெரிக்கா 15.83%, சீனா 15.82%, பிரித்தானியா 2.2%. பெயரளவு(Nominal) தனிநபர் வருமானம் எனப் பார்க்கும் போது ஐரோப்பிய ஒன்றியம்-$41,504, சீனா $16,642, இந்தியா $2191, அமெரிக்கா $65,100 என இருக்கின்றது. சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் பொருளாதாரத்தில் பின் தங்கியிருந்த பல நாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்து கொண்டன. அவற்றின் பொருளாதாரம் வளர்ச்சியடைந்து கொண்டிருக்கின்றன. அவற்றின் பொருளாதாரம் மேம்படும் போது ஐரோப்பிய ஒன்றியத்தின் தனிநபர் வருமானம் மேலும் அதிகரிக்கும். உலக வர்த்தகத்திலும் அதன் செயற்பாட்டை முடிவு செய்வதிலும் ஐரோப்பிய ஒன்றியம் அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இணையாக நிற்கின்றது.
மென்வல்லரசு
ஒரு நாடு வல்லரசா என்பதை அதன் படைவலிமையும் பொருளாதார வலிமையும் முடிவு செய்கின்றன. ஒரு நாடு மென்வல்லரசா என்பதை அதன் அரசியல் மதிப்பு, கலாச்சார விழுமியங்கள், வெளிநாட்டுக் கொள்கை ஆகியவை முடிவு செய்கின்றன. பன்னாட்டு அமைப்புக்களில் ஒரு நாட்டுக்கு இருக்கும் ஆதரவும் மென்வல்லரசுத் தனைமையை முடிவு செய்யும் போது கருத்தில் கொள்ளப்படும். உலகின் முதல்தர மென்வல்லரசாக பிரான்ஸ் இருக்கின்றது. ஜெர்மனி மூன்றாம் இடத்தில் இருக்கின்றது. ஐரோப்பிய ஒன்றியம் படைத்துறையிலும் பொருளாதாரத் துறையிலும் அமெரிக்காவையும் சீனாவையும் விஞ்சக் கூடிய நிலையில் இருக்கின்றது. வல்லரசு என்பது கண்டங்களைத் தாண்டி தனது படைகளையும் பொருளாதாரத்தையும் மென்வலு அழுத்தத்தையும் முன்னிறுத்தி தனது விருப்பத்தை நிறைவேற்றக் கூடிய அரசாகும். ஐரோப்பிய ஒன்றியத்தால் அப்படிச் செய்ய முடியும். 2021-ம் ஆண்டு தென் சீனக் கடலின் சுதந்திரமான கடற்போக்குவரத்தை உறுதி செய்ய பிரான்ஸ், நெதர்லாந்து, ஜேர்மனி ஆகிய நாடுகள் தம் கடற்படையை அங்கு அனுப்பின. அமெரிக்காவும் பிரித்தானியாவும் அங்கு படையனுப்பிய வேற்றுப் பிரதேச நாடுகளாக இருந்தன.
பொருளாதாரத்தை மேம்படுத்த படைத்துறை அவசியம்
Alexandar Stubb 2008-ம் ஆண்டு பின்லாந்தின் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த போது ஐரோப்பிய ஒன்றியம் உலகின் மிகப்பெரிய அரசியல் ஒன்றியமாகவும் மிகப்பெரிய ஒற்றைச் சந்தையாகவும் மிகப்பெரிய நன்கொடையாளராகவும் இருப்பதால் அதை ஒரு உலகப் பெருவல்லரசு (World Superpower) எனச் சொல்லலாம் ஆனால் படைத்துறையும் வெளியுறவுத் துறையும் அதற்கு ஏற்றாற் போல் இல்லை என்றார். 2018-ம் ஆண்டின் பின்னர் அமெரிக்காவின் ஐரோப்பா தொடர்பான நிலைப்பாட்டில் ஏற்பட்ட மாற்றம் ஐரோப்பிய நாடுகளை பாதுகாப்புச் செலவை அதிகரிக்க வைத்தது. பொருளாதார மேம்பாடும் படைத்துறையும் கைகோர்த்துச் செல்ல வேண்டியவை. பிரித்தானியாவின் பொருளாதாரமும் அதன் படைவலிமையும் இணையாக வளர்ந்த போதுதான் அது ஓர் உலகப் பெருவல்லரசாக உருவெடுத்தது. தற்போது அமெரிக்காவும் அதையே செய்கின்றது. சோவியத் ஒன்றியத்தின் படைத்துறை வளர்ச்சிக்கு ஈடாக அதன் பொருளாதாரம் வளரவில்லை. சீனா தனது பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்ப தன் படைத்துறையைப் பெருக்குகின்றது.
2014இல் வெளிப்பட்ட வலிமையின்மை
2014-ம் ஆண்டு இரசியா உக்ரேனை ஆக்கிரமித்த பின்னர் தனது பாதுகாப்பு தொடர்பாக கரிசனை கொண்ட போலாந்து அமெரிக்காவிற்கு பணம் கொடுத்து தனது நாட்டில் அமெரிக்காவை படைத்தளம் அமைக்கும் படி வேண்டியது. இது ஐரோப்பிய நாடு ஒன்று தனது பாதுகாப்பிற்கு இன்னொரு கண்டத்தில் உள்ள ஒரு நாட்டைத் தேடிச்செல்ல வேண்டிய நிலை உள்ளது என்பதைச் சுட்டிக் காட்டுகின்றது. இதன் பின்னர் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு என ஒரு கேந்திரோபாய சுதந்திரம் அவசியம் என்ற கருத்து உறுப்பு நாடுகளிடையே பரவத் தொடங்கியது. 2022இன் ஆரம்பத்தில் இரசியா உக்ரேனுக்கு எதிராக பெரும் படையைக் குவித்தமை ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்புரிமை பெற்றுள்ள இரசிய எல்லையில் இருக்கும் சிறிய நாடுகளை தமது பாதுகாப்பையிட்டு கரிசனை கொள்ள வைத்துள்ளது.
தனித்துவத்தை விரும்பும் பிரான்ஸ்
பிரான்ஸ் அமெரிக்காவிடமிருந்து தனித்து இருக்க வேண்டும் என்ற விருப்பமுடையது. அது தனக்கு தேவையான படைக்கலன்களை தானே உற்பத்தி செய்கின்றது. அவற்றில் பலவற்றை பிரான்ஸால் மலிவு விலையில் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்ய முடியும். பிரான்ஸ் தனது கேந்திரோபாய தன்னாளுமையை விட்டுக் கொடுக்க விரும்பவில்லை. ஐரோப்பிய ஒன்றியமும் அதே நிலைப்பாட்டுடன் இருக்க வேண்டும் என பிரான்ஸ் நினைக்கின்றது. ஐரோப்பிய ஒன்றியத்திற்கு என ஒரு தனியான படையணி தற்போது இல்லை, ஆனால் அதன் உறுப்பு நாட்டுப் படைகளுக்கு என ஐரோப்பிய ஒன்றியம் தனியான படைத்துறை கட்டுப்பாடு-கட்டளையகத்தை வைத்திருக்கின்றது. பிரித்தானிய ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்த போது ஒன்றியத்திற்கு என ஒரு படையணி இருப்பதைக் கடுமையாக எதிர்த்தது. பிரித்தானியா ஒன்றியத்தில் இருந்து வெளியேறிய பின்னர் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு என ஒரு படையணி உருவாகும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.
நேட்டோ
ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள 27 நாடுகளில் 21 நாடுகள் நேட்டோ படைத்துறைக் கூட்டமைப்பின் உறுப்பு நாடுகளாக உள்ளன. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் படைவலிமை அதிகரிக்கும் போது அவை தமது பாதுகாப்பில் நேட்டோவின் முதன்மை நாடான அமெரிக்காவில் தங்கியிருப்பது குறைக்கப்படுவதுடன். நேட்டோவின் வலிமையும் அதிகரிக்கும். வலிமை அதிகரித்த நேட்டோவில் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆதிக்கமும் அதிகரிக்கும். அமெரிக்க ஆதிக்கத்தை ஐதாக்கும். ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள பல நாடுகள் அப்படி நடப்பதை விரும்புகின்றன.