Friday 3 December 2021

அமெரிக்க நீர்மூழ்கிமீது சீன நீர்மூழ்கி மோதியதா?

 


2021 ஒக்டோபர் 2-ம் திகதி அல்லது அதற்கு முன்னர் அமெரிக்காவின் அணுவலுவில் இயங்கும் USS CONNECTICUT என்னும் நீர்மூழ்கிக்கப்பல் கடலுக்கடியில் இனம் தெரியாத பொருள் ஒன்றின் மீது மோதியதால் அதில் பயணித்துக் கொண்டிருந்த 11 கடற்படையினர் காயப்பட்டுள்ளனர் என செய்திகள் வெளிவந்திருந்தன.  இந்த செய்தியை அமெரிக்கா 7-ம் திகதி தான் வெளியிட்டது. USS CONNECTICUT இந்த நிகழ்வின் பின்னர் குவாம் தீவில் உள்ள அமெரிக்கப் படைத்தளத்தைச் சென்றடைந்தது. USS CONNECTICUT பனிப்போர் காலத்தில் தேவை ஏற்படின் சோவியத் ஒன்றியத்தின் நீர்மூழ்கிக் கப்பல்களை துரிதமாக தாக்கி அழிப்பதற்கு 1990களில் $3பில்லியன் டொலர் செலவில் உருவாக்கப் பட்ட நீர்மூழ்கிக்கப்பலாகும். அந்த வகை நீர்மூழ்கிக் கப்பல்களுக்கு கடல் ஓநாய் என்ற குறியீட்டுப் பெயருண்டு.



தொடர்ந்து பயணித்த USS CONNECTICUT

USS CONNECTICUTஇன் அணித்தலைவர் அந்த நீர்மூழ்கிக் கப்பலில் அணு உலை பாதிப்பிற்கு உள்ளாகவில்லை என்றதுடன் அது செயற்படு நிலையில் உள்ளது என்றார். மோதலின் பின்னர் அது 1500மைல்கள் பயணித்தது. ஆனால் அப்பயணம் நீருக்கடியில் இல்லாமல் நீரின் மேற்பரப்பில் செய்யப்பட்டது. 

தகவல் சூறையாடும் USS CONNECTICUT

National Interest என்னும் அமெரிக்க ஊடகம் USS CONNECTICUT நீர்மூழ்கிக்கப்பலில் நவீன உளவறியும் கருவிகள் பொருத்தப்பட்டிருக்கலாம் என்கின்றது. அது செல்லும் கடற் பிரதேசத்திலும் கரையிலும் உள்ள தொடர்பாடல்களைப் அக்கருவிகள் பதிவு செய்யக் கூடியவை என்கின்றது அந்த ஊடகம். தென் சீனக்கடல் போன்ற ஆழம் குறைந்த கடலில் உளவு பார்ப்பதற்கு சாதாரண கப்பல்களிலும் பார்க்க நீர்மூழ்கிக்கப்பல்கள் சிறந்தவை. National Interest எப்படிப் பட்ட பொருளில் USS CONNECTICUT மோதியது என்பதை உறுதி செய்யவில்லை என்கின்றது.

சீனாவின் கருத்து

சீனாவின் South China Morning Post ஊடகமும் மர்மமான பொருள் ஒன்றில் USS CONNECTICUT மோதியதாக செய்தி வெளியிட்டுள்ளது. US Naval Institute News இன் இணயத்தளத்திலும் தெரியாத நீரடியில் இருந்த பொருள் ஒன்றின் மீது மோதியதாக செய்தி வெளியிட்டுள்ளது. அணுக்கசிவு ஆபத்தை இனம் காணுவதற்காக மோதல் நடந்த இடம் பற்றிய தகவல்களை சீனா அமெரிக்காவிடம் கோரியுள்ளது. அமெரிக்கா அந்த நீர்மூழ்கிக் கப்பலகளில் பயணித்தவர்களைத் தனிமைப் படுத்து அணுக்கதிர்வீச்சுக்கு அவர்கள் உள்ளாகியுள்ளார்களா என ஆய்வு செய்கின்றது. மோதிய நீர்மூழ்கிக்கப்பல் பல விஞ்ஞானிகளாலும் நிபுணர்களாலும் ஆய்வு செய்யப்படுகின்றது.

ஹைனன் தீவு மோதல்

2001-ம் ஆண்டு ஏப்ரல் முதலாம் திகதி தென் சீனக் கடலில் பறந்து கொண்டிருந்த அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான EP-3 SERIES-II Signal Intelligence என்னும் உளவு விமானத்தை இரண்டு சீனாவின் J-811 இடைமறிப்பு விமானங்கள் சூழ்ந்து கொண்டன. அதில் ஒரு விமானம் EP-3 AERIES-II இன் கீழ்ப்பகுதியில் மோதியது. அதில் இருந்த ஒருவர் விமானத்தில் இருந்து வெளியேறி காணாமல் போனார். விமானத்தில் பயணித்த ஏனைய 24 பேரும் அவசர மாக சீனாவின் ஹைனன் தீவில் சீன அனுமதியுடன் தரையிறங்கினர். அவர்களையும் விமானத்தையும் சீனா கைப்பற்றியது. விமானத்தின் தொழில்நுட்பத்தை அறிய அதை சீன நிபுணர்கள் அக்கு வேறு ஆணி வேறாக பிரித்துக் கொண்டனர். அமெரிக்கா தனது விமானத்தையும் பயணிகளையும் திருப்பித் தருமாறு வற்புறுத்திய போது. விமானத் துண்டங்களையும் பயணிகளையும் திருப்பிக் கொடுத்தது. EP-3 AERIES-II உளவு விமானம் பன்னாட்டு வான்பர்ப்பில் பறந்து கொண்டே நூறுமைல்களுக்கும் அப்பால் உள்ள தொடர்பாடல்களை பதிவு செய்யவும் அங்குள்ள இலத்திரனியல் கருவிகளில் உள்ள தகவல்களைச் சூறையாடவும் வல்லது. அதன் ஆபத்தை உணர்ந்தே சீனா அதன் மீது மோதி தரையிறக்கியது. இதே போன்று USS CONNECTICUT நீர்மூழ்கிக்கப்பலுக்கும் நடந்திருக்கலாம் எனவும் கருதப்படுகின்றது.

தாமதம் ஏன்?

ஒக்டோபர் 2-ம் திகதி நடந்த நிகழ்வை அமெரிக்கா பகிரங்கமாக அறிவிக்க ஏன் ஐந்து நாட்கள் தாமதித்தது என்ற கேள்வி இந்த நிகழ்வில் சீனா தொடர்புபட்டிருக்கலாம் என்ற ஐயத்தை ஏற்படுத்துகின்றது. சீனா USS CONNECTICUT உள்ள உணரிகளால் இனம் காணப்படாத மூலகங்களால் ஆக்கப்பட்ட பொருள்களை அது வரும் வழியில் வைத்திருக்கலாம் எனவுக் கருதப்பட்டது.

செய்மதிப் படங்கள்

Type – 94 Jin Class SSBN என்ற சீனாவிற்கு சொந்தமான அணுவலுவில் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல் அமெரிக்க கப்பல் சேதத் திற்கு உள்ளான வேளையில் சேதமடைந்த நிலையின் இன்னொரு சீனக் கடற்கலம் வழிகாட்ட நீரின் மேற்பரப்பில் பயணித்து சீனாவின் வடகிழக்கு மாகாணமான லயோனிங்கின் கடற்கரையில் உள்ள Bohai Shipyard சென்று திருத்தப்படுவதாக செய்திகள் வெளிவந்துள்ளன. HI Sutton என்ற படைத்துறை ஆய்வாளர் தனது hisutton.com என்ற இணையத்தளத்தில் ஐரோப்பிய விண்வெளி முகவரகத்தின் செய்மதியான Sentinel-2 எடுத்த படங்களை ஆதாரமாகக் காட்டியுள்ளார். ஆனால் இரண்டும் ஒன்றின் மீது ஒன்று மோதியிருக்கலாம் என அவர் கருத்து வெளியிடவில்லை. ஆனால் Elmer Yuen என்பவர் இந்திய Youtube Channel ஒன்றிற்கு அமெரிக்காவின் USS CONNECTICUT நீர்முழ்கிமீது சீனாவின் Type – 94 Jin Class SSBN நீர்மூழ்கி மோதியது என்கின்றார். ஆனால் அது உறுதிப்படுத்த முடியாதது என்றும் சொல்கின்றார்.


அணுவலுவில் இயங்கும் நீர்மூழ்கிகள் இரண்டு ஒன்றின் மீது ஒன்று மோதுவது பாரிய சூழல் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது. அணு உலைகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் சீன நீர் மூழ்கி மோதியிருக்குமா?

Thursday 2 December 2021

இரசிய விரிவாக்கம் உண்மையா?

  




2021 நவம்பர் 2-ம் திகதி இரசியக் கட்டுப்பாட்டில் உள்ள கிறிமியாவில் இருந்து கருக்கடலில் உள்ள எதிரிக் கப்பல்களை அழிக்கும் பயிற்ச்சிகளை மேற்கொள்வதன் மூலம் இரசிய அதிபர் விளடிமீர் புட்டீன் தனது வேட்டியை மடித்துக் கட்டிய நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தனது ஆறவது கடற்படைப் பிரிவை USS Mount Whitney என்னும் ஈருடக கட்டளைக் கப்பல் தலைமையிலும் P-8A என்னும் நீர்மூழ்கி எதிர்ப்பு உளவு (Anti-submarine spy planes) விமானங்களின் துணையுடனும் கருங்கடலுக்கு 2021 4-ம் திகதி அனுப்பியுள்ளார்.

நேட்டோ விரிவாக்கம்

1989இல் சோவியத் ஒன்றியத்தின் பிடியில் இருந்த கிழக்கு ஜெர்மனியில் நடந்த மக்கள் கிளர்ச்சியால் ஜெர்மனியை கிழக்கு மேற்கு எனப் பிரித்த பேர்லின் சுவர் உடைக்கப்பட்டது. சோவியத் ஒன்றியம் கிழக்கு ஜேர்மனியை விட்டுக் கொடுக்கும் போது  நேட்டோ விரிவாக்கம் செய்யப்பட மாட்டாது என ஒரு வாய் மூலமான உறுதி மொழியை அப்போதைய அமெரிக்க அதிபர் ஜோர்ஜ் புஷ் இரசிய அதிபர் மிக்கையில் கொர்பச்சோவிற்கு வழங்கியிருந்தார். ஆனால் 1991இன் இறுதியில் சோவியத் ஒன்றியம் வீழ்ச்சியடைந்த பின்னர் பல முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகளும் அவற்றின் படைத்துறைக் கூட்டமைப்பான வார்சோ ஒப்பந்த நாடுகள் அமைப்பின் உறுப்பு நாடுகளும் நேட்டோவிலும் ஐரோப்பிய ஒன்றியத்திலும் இணைக்கப்பட்டன. இதை இரசியா தன்னை தனிமப்படுத்தும் முயற்ச்சியாகப் பார்த்தது. ஜோர்ஜியாவும் உக்ரேனும் இரசியாவின் கவசப் பிராந்திய நாடுகள் என இரசியப் படைத்துறையினர் கருதுகின்றனர். அவை நேட்டோ படைத்துறைக் கூட்டமைப்பில் இணைவது இரசியாவின் இருப்புக்கு ஆபத்து என்பது உண்மையாகும். உக்ரேன் இரசியாவின் எதிரிகளில் கைகளில் இருந்தால் இரசியா ஒரு வல்லரசு என்ற நிலையை இழக்க வேண்டி வரும் என்னும் அளவிற்கு உக்ரேனின் பூகோள அமைப்பு இருக்கின்றது. உக்ரேனின் கிறிமியா இரசியா வசம் இல்லாமல் இரசியக் கடற்படை இயங்க முடியாது என்னும் அளவிற்கு அது இரசியாவிற்கு முக்கியம் வாய்ந்தது.



ஜோர்ஜிய வரலாறு

ஜோர்ஜியாவும் உக்ரேனும் இரசிய வெளியுறவுக் கொள்கையின் இரண்டு கண்கள் எனச் சொல்லலாம். இரண்டு நாடுகளும் நேட்டோ படைத்துறைக் கூட்டமைப்பிலே அல்லது ஐரோப்பிய ஒன்றிய பொருளாதார-அரசியல் கூட்டமைப்பிலோ இணையாமல் தடுப்பது இரசியாவின் கோந்திரோபங்களில் முதன்மையானது. இரண்டு நாடுகளினதும் பகுதிகளை இரசியா ஆக்கிரமித்து தன்னுடன் இணைத்து வைத்துள்ளது. ஒரு தனி நாடாக இருந்த ஜோர்ஜியாவை 1804-ம் ஆண்டு இரசியா ஆக்கிரமித்துக் கொண்டது. இரசியாவில் 1918இல் நடந்த பொதுவுடமைப் புரட்சியின் போது ஜோர்ஜியா தனிநாடாகப் பிரிந்து சென்றது. 1921-ம் ஆண்டு இரசிய செம்படையினர் ஜோர்ஜியாவை ஆக்கிரமித்து இரசியா உருவாக்கிக் கொண்டிருந்த சோவியத் ஒன்றியத்தில் இணைத்துக் கொண்டது. ஜோர்ஜியாவில் பிறந்த ஜோசப் ஸ்டாலின் சோவியத் ஒன்றியத்தின் உச்சத் தலைவராகப் பணியாற்றி அதை படைத்துறையிலும் பொருளாதாரத்திலும் மேம்படுத்தி ஒரு வல்லரசாக மாற்றியதுடன் இரண்டாம் உலகப் போரில் வெற்றியடையவும் வைத்தார். அவர் சோவியத் ஒன்றியத்தின் மக்களுக்கு எதிராக கடுமையாக நடந்து கொண்டார். அதனால் ஸ்டாலினின் செயலை அவரது எதிரிகள் Mass Terror என அழைத்தனர். 1953இல் ஸ்டாலின் மறைந்த பின்னர் ஆட்சிக்கு வந்த நிக்கித்தா குருசேவ் கொண்டு வந்த சீர்திருத்தங்களை ஜோர்ஜியாவில் உள்ள பொதுவுடமைவாதிகள் கடுமையாக எதிர்த்ததுடன் 1956-ம் ஆண்டு ஜோர்ஜியாவை தனிநாடாகப் பிரகடனப்ப்டுத்தினர். அவர்களை சோவியத் ஒன்றியம் இரும்புக்கரங்களால் நசுக்கியது. 1991-ம் ஆண்டு ஜோர்ஜியாவில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பின் பின்னர் அது தனிநாடாக உருவாக்கப்பட்டது. இருந்தும் பல இரசியப் படைத்தளங்கள் ஜோர்ஜியாவில் தொடர்ந்தும் இருக்க அனுமதிக்கப்பட்டது. 1992இல் ஜோர்ஜியாவின் ஒரு பகுதியான தெற்கு ஒசெசிட்டியாவிலும் அப்காசியாவிலும் பிரிவினை வாதம் தலை தூக்கியது. 1993இல் இரசியாவின் சுதந்திர நாடுகளின் பொதுநலவாயம் என்னும் அமைப்பில் ஜோர்ஜியா இணைந்து கொண்டது. அதனால் ஜோர்ஜியாவில் இருந்த பிரிவினைவாதப் பிரச்சனையைத் தீர்க இரசியா உதவி செய்தது. இரசிய அமைதிப் படை ஜோர்ஜியாவில் நிலை கொண்டது. 2002-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அமெரிக்கப் படையினர் ஜோர்ஜியப் படையினருக்கு பயிற்ச்சி வழங்க அங்கு சென்றனர். இது இரசிய ஜோர்ஜிய உறவில் விரிசலை ஏற்படுத்தியது. 2002 செப்டம்பர் மாதம் இரசியாவின் செஸ்னியப் பிரதேசத்தில் உள்ள பிரிவினைவாதிகளுக்கு ஜோர்ஜியா உதவி செய்யக் கூடாது என இரசிய அதிபர் புட்டீன் எச்சரித்தார். 2003 நவம்பரில் ஜோர்ஜியாவில் நடந்த ரோஸ் புரட்சியால் அதிபர் Shervardnadze பதவி விலகினார். 2006-ம் ஆண்டு ஜோர்ஜியா ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒத்துழைப்பு ஒப்பந்தம் செய்தது. ஜோர்ஜியா ஐரோப்பிய் ஒன்றியத்தில் இணைய விரும்பியது. அதேவேளை ஜோர்ஜியா அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைத்துறைக் கூட்டமைப்பில் இணையும் கருத்துக் கணிப்பு வெற்றி பெற்றதுடன் அது ஜோர்ஜிய நாடாளுமன்றத்திலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதனால் இரசியா கடும் விசனமடைந்தது. ஜோர்ஜியாவின் ஒரு பகுதியான தெற்கு ஒசெசிட்டியாவிலும் அப்காசியாவிலும் பிரிவினைவாதத்தை இரசியா ஊக்குவித்தது. ஜோர்ஜியாமீது ஓகஸ்ட் 8-ம் திகதி இரசியா பெரும் ஆக்கிரமிப்பு போரைச் செய்தது. தெற்கு ஒசெசிட்டியாவும் அப்காசியாவும் தனிநாடுகளாகப் பிரகடனப் படுத்தப்பட்டன. அவற்றை இரசியா, வெனிசுவேலா, சிரியா, நிக்கிராகுவா ஆகிய நாடுகள் அங்கீகரித்தன. நேட்டோவினதும் ஐரோப்பிய ஒன்றியத்தினதும் கிழக்கு நோக்கிய விரிவாக்கம் இரசியாவின் எல்லை வரை சென்று இரசியாவின் இருப்புக்கு அச்சுறுத்தலாகியது. பின்னர் 2008-ம் ஆண்டு ஜோர்ஜியாவுடன் இரசியா புரிந்த போருடன் நேட்டோவின் விரிவாக்கத்தை இரசியா ஒரு முடிவிற்கு கொண்டு வந்தது. 2015-ம் ஆண்டு இரசியப் படையினர் தெற்கு ஒசெசிட்டிய-ஜோர்ஜிய எல்லையில் மேலும் ஒன்றரை கிலோ மீட்டர் முன்னேறின.


இரசியாவை நேட்டோவால் தடுக்க முடியுமா?

உக்ரேனையும் ஜோர்ஜியாவையும் இரசியா ஒரு போர் மூலம் முழுமையாக கைப்பற்ற முயன்றால் அதைத் தடுக்க இரசியாவிற்கு எதிராக நேட்டோ படையினர் தாக்குதல் நடத்த முடியுமா? உக்ரேனின் கிறிமியாவை இரசியா ஆக்கிரமித்த போது இரசிய அரசுறவியலாளர்கள் தமது ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளைத் தடுத்தால் தம்மால் அமெரிக்காவை ஒரு கதிர்விச்சு மிக்க சாம்பல் மேடாக்க முடியும் என எச்சரித்திருந்தனர். உக்ரேனை ஆக்கிரமிக்கும் நடவடிக்கையை இரசியா மிகவும் இரகசியமாகவே மேற்கொண்டது. கணினிகள் பாவிக்காமல் பழைய தட்டச்சுக்கள் பாவிக்கப்பட்டன. தகவல் பரிமாற்றங்கள் பழைய முறையில் செய்யப்பட்டன. இரசியாவுடனான நேட்டோ நாடுகளின் மோதல் ஜேர்மனியில் பெரும் பொருளாதாரப் பாதிப்பை ஏற்படுத்தும். அதேவேளை 2008-ம் ஆண்டின் பின்னர் ஏற்பட்ட பொருளாதாரச் சரிவில் இருந்து சிறிதாக மீண்டு கொண்டிருக்கும் ஜேர்மனிக்கு இப்போது ஒரு போர் பொருளாதார ரீதியில் பெரும் பின்னடைவை ஏறபடுத்தும். ஜேர்மனியும் யூரோ வலய நாடுகளும் உறுதியாக நின்றால் இரசியாவை பொருளாதார ரீதியிலும் படைத்துறை ரீதியிலும் பணிய வைக்க முடியும் என சில ஆய்வாளர்கள் கருதுகின்றனர். வல்லரசு நாடுகள் எப்படியும் ஒரு போரைத் தவிர்க்கவே முயற்ச்சிக்கும். ஜேர்மனியுடன் பெரும் பொருளாதார ஒத்துழைப்பைச் செய்யும் பிரித்தானியா ஜேர்மனியின் விருப்பப்படி நடக்கவே விரும்புகின்றது. உக்ரேன் மீண்டும் தனது படையை தன் கிழக்குப் பிராந்தியத்திற்கு அனுப்பியுள்ளது.

மோல்டோவா

உக்ரேனையும் ஜோர்ஜியாவையும் தவிர மோல்டோவா நாடும் இரசியாவின் ஆக்கிரமிப்பு அச்சத்தை எதிர்கொள்கின்றது. பதின் மூன்று இலட்சம் மக்களைக் கொண்ட ஐரோப்பாவில் வறிய நாடான மோல்டோவா நாட்டில் ஐந்தாயிரம் படையினர் உள்ளனர். இரசியா மோல்டோவாவை ஆக்கிரமித்தால் அந்த ஐயாயிரம் படையினரில் ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் இரசியாவுடன் இணைந்து விடுவார்கள். ஏற்கனவே மோல்டோவாவின் ஒரு பிராந்தியமான திராண்ட்னீஸ்டர்(Transdniester) பிரிவினை கோரியுள்ளது. அங்கு இரசியர்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றார்கள்.

போல்ரிக் நாடுகளும் நடுவண் ஆசிய நாடுகளும்

எஸ்தோனியா நாட்டின் மக்கள் தொகையில் காற்பங்கினர் இரசியர்கள். இது இரசியாவிற்கு வாய்ப்பான ஒரு நிலையாகும். இதே போல் லத்வியா நாட்டின் மூன்றில் ஒரு பங்கினர் இரசியர்களாகும். இதுவும் இரசியாவிற்கு ஒரு வாய்ப்பான நிலையாகும். ஆனால் இவ்விரண்டு நாடுகளும் நேட்டோ படைத் துறைக்கூட்டமைப்பில் உறுப்புரிமை பெற்ற நாடுகளாகும். நேட்டோ நாடு ஒன்றின் மீது வேறு நாடு படை எடுத்தால் மற்ற எல்லா நாடுகளும் அது தம் நாட்டின் மீது படை எடுத்தது போல் பாவித்து அந்த நாட்டைப் பாதுகாக்க வேண்டும். அத்துடன் ஐரோப்பிய ஒன்றியத்திலும் இவை இரண்டும் உறுப்புரிமை பெற்றுள்ளன. தனியாட்சியாளர்(சர்வாதிகாரி) அலெக்ஸானடர் லுக்கஷென்காவினால் ஆட்சி செய்யப்படும் பெலரஸ் நாடு இரசியாவுடன் நல்ல உறவுகளை பேணுகின்றது. இரசியாவுடன் பெலரஸை இணைக்கும் முயற்ச்சிகள் பல தடவை மேற்கொள்ளப்பட்டுள்ளன. கஜகஸ்த்தான் நாடும் இரசியாவுடன் நெருங்கிய நட்பைப் பேணுகின்றது. கஜகஸ்த்தானின் வட பிராந்தியங்களில் இரசியர்கள் பெரும்பான்மையாக வாழுகின்றனர்.

உக்ரேன் எல்லையில் 2021 டிசம்பர்ல் குவித்திருக்கும் இரசியப் படைக்கலன்களினதும் படையினரதும் எண்ணிக்கை முழுமையாக உக்ரேனை ஆக்கிரமிக்கப் போதுமானதாக இல்லை என சில படைத்துறை நிபுணர்கள் கருதுகின்றனர். முழுமையான தயாரிப்புக்கு இன்னும் இரண்டு மாதங்கள் தேவைப்படலாம் எனவும் அவர்கள் சொல்கின்றனர். உக்ரேன் நேட்டோவில் உறுப்புரிமை கொண்ட நாடாக இல்லாத போதிலும் அது நேட்டோவுடன் தனது பாதுகாப்பு தொடர்பாக பல பங்காண்மை ஒப்பந்தங்களைச் செய்துள்ளது. 1997இல் தனித்துவமான பங்காண்மைப் பட்டயத்தில் இரு தரப்பும் கையொப்பமிட்டுள்ளன. 2009இல் குறைநிரப்பு பிரகடனத்தில் ஒப்பமிட்டுள்ளன. ஆனால் இந்த ஒப்பந்தங்கள் 2014இல் உக்ரேனின் கிறிமியாவை இரசியா அபகரித்த போது உக்ரேனுக்கு கைகொடுக்கவில்லை. 

இரசியா உலக அரங்கில் தான் 1991இற்கு முன்பு வைத்திருந்த நிலையை மீளப் பெற வேண்டும் என நினைக்கின்றது.

Tuesday 30 November 2021

அப்பாவிகள் பாதிக்கப்படும் ஈரான் – இஸ்ரேல் இணையவெளிப் போர்

  


போர் என்றால் அப்பாவிகள் கொல்லப்படத்தான் செய்வார்கள் எனச் சொல்லிக் கேள்விப் பட்டிருக்கின்றோம். Rt Rev Dr Rowan Williams என்னும் திருநாமம் கொண்ட ஆர்ச் பிஷப் ஒஃப் கண்டபரி (Archbishop of Canterbury) இங்கிலாந்து தேவாலயத்தின்(Church of England) அதி உயர் ஆண்டகையாக இருந்தவர். 2007ஆம் ஆண்டு மே மாதம் இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டிருந்த Archbishop of Canterbury Rt Rev Dr Rowan Williams அவர்கள் இலங்கையில் தமிழர்களுக்கு எதிரன சிங்களப் படை நவடிக்கைகளைப் பற்றி இப்படிக் குறிப்பிட்டார்:

  • "It is undoubtedly inevitable that what you might call surgical military action against terrorism should take place",

Archbishop Williams said in reports filed by TamilNet and the BBC Sinhala service on May 11, 2007. அவரது கருத்துப்படி சிங்களவர்களின் படை நடவடிக்கை பயங்கரவாதத்திற்கு எதிரான ஒன்று. அது சந்தேகத்திற்கு இடமின்றி தவிர்க்க முடியாத ஒரு சத்திர சிகிச்சை. இதைக் கடுமையாக எதிர்த்து ஒரு சிங்கள ஆங்கிலிக்கன் கிருத்தவர் Rt Rev Dr Rowan Williamsஅவர்களுக்கு கடிதம் எழுதியிருந்தார். அதில் முக்கியமான அம்சம்:

What your irresponsible comments have done are to :-

1. Encourage even greater violation of the human rights of the Tamil civilian population by the Sri Lankan Armed Forces.

2. Give invaluable support to Sinhalese ethno-religious chauvinists who are determined to make multi-ethnic, multireligious, multilingual and multicultural Sri Lanka into a Sinhala-Buddhist nation. Today, these extremist elements in Colombo are celebrating your comment – an indication of the damage that has been done by a flippant remark.

3. Strengthen the stance of President Rajapakse and his brothers to establish a fascist dictatorship and embark on a genocidal massacre of the Tamils in the North-East. The photograph of Rajapakse greeting you has been circulated all over the world, enhancing his flagging international image and decreasing yours.

4. Make Tamil civilians in the North-East, who are being brutalised by the current murderous regime, feel that their suffering is of no concern to you, and that what is being done to them is inevitable ‘surgical military action” which “should take place”.

இது இங்கிலாந்து திருச்சபையும் தமிழர்களின் முதுகில் குத்தியது என்பதற்கு ஓர் எடுத்துக் காட்டு.

பலவகைப் போர்கள்

விடுதலைப் போர், சுதர்ந்திரப் போர், அறப்போர், ஆக்கிரமிப்பு போர், பயணப் போர், தாக்குதல் போர், தற்பாதுகாப்புப் போர், கரந்தடிப் போர், விடுவிப்புப் போர், பயங்கரவாதத்திற்கு எதிரான போர், ஈடற்ற போர், தரைப்போர், வான் போர், கடற்போர், விண்வெளிப்போர், நிலகீழ்ப்போர், சாம்பல் வலயப் போர், மதப்போர், நிகராளிப்போர், இணையவெளிப்போர் எனப் போரில் பல வகைகளுண்டு.

ஆனால் ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் நடக்கும் போரில் நிகராளிப் போரும் இணையவெளிப்போரும் முக்கியமானவை. ஒரு தரப்பு மற்றத் தரப்பிற்கு எதிராக முன்றாம் தரப்புகளுடாக தாக்குதல் செய்வது நிகராளிப் போராகும். ஈரான் இஸ்ரேலுக்கு எதிராக ஹமாஸ் அமைப்பு, ஹிஸ்புல்லா அமைப்பு ஆகியவற்றினூடாக தாக்குதல் செய்வது நிகராளிப் போராகும்.

ஒரு கணினியில் அல்லது கணினித் தொகுதியில் இருந்து இன்னொரு கணினி அல்லது கணினித் தொகுதிகளுக்குள் இலத்திரனியல் மூலமாக நுழைந்து தகவல்களைத் திருடுதல், தகவல்களை அழித்தல் இணையவெளி ஊடுருவல் என அழைக்கப்படுகின்றது. அப்படிப்பட்ட ஊடுருவல் மூலம் ஒரு கணினியை அல்லது கணினித் தொகுதியை செயற்படாமல் செய்வது இணையவெளித் தாக்குதல் எனப்படும். இவையிரண்டையும் இணையவெளிப் போருக்குள் அடங்கும்.

ஈரான் மீது பலவகையான இணையவெளித் தாக்குதல்களை இஸ்ரேல் செய்து வருகின்றது. அவற்றில் மிகவும் பிரபலமானது Stuxnet என்னும் வைரஸ் மூலம் ஈரானிய யூரேனியம் பதப்படுத்தல் மீது அமெரிக்காவுடன் இணைந்து இஸ்ரேல் செய்த தாக்குதலாகும். அது பற்றிய விபரங்களை இந்த இணைப்பில் காணலாம்.

https://www.veltharma.com/2012/06/blog-post_05.html

கமெய்னி எரிபொருள் எங்கே?

2021 ஒக்டோபர் மாத இறுதியில் ஈரானின் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் உள்ள கொடுப்பனவு முறைமைகள் (payment systems) மீது இஸ்ரேல் செய்ததாகக் கருதப்படும் இணையவெளித் தாக்குதலில் மூலம் சேதப்படுத்தப் பட்டது என்ற செய்தியை அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகள் நவம்பர் 27-ம் திகதி அம்பலப்படுத்தினர்.. இதனால் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசையில் மக்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அது மட்டுமல்ல ஈரானில் உள்ள இலத்திரனியல் அறிவிப்புப் பதாகைகளில் கமெய்னி எரிபொருள் எங்கே எனக் கேட்கும் வாசகங்கள் இலத்திரனியல் ஊடுருவல் மூலம் பதிவு செய்யப்பட்டும் உள்ளது. பாதிக்கப்பட்ட 4,300 எரிபொருள் நிரப்பு நிலையங்களின் கொடுப்பனவு முறைமையை மீளச் செயற்பட வைக்க 12 நாட்கள் எடுத்தன. இந்தத் தாக்குதல் ஈரானில் உள்ளவர்களின் உதவியின்றி நடந்திருக்க முடியாது என பெயர் குறிப்பிட விரும்பாத ஈரானிய கணினித்துறை நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார். இஸ்ரேலின் இந்தத் தாக்குதல் ஈரானின் ஒரு தாக்குதலுக்கு பதிலடியாகச் செய்யப்பட்டது. ஈரானில் இருந்து இஸ்ரேலின் தன்னினச் சேர்க்கையாளர்களின் இணையத்தை ஊடுருவி பெற்ற தகவல்களை சமூக வலைத்தளங்களில் அம்பலப்படுத்தப்பட்டது. பலரது பாலியல் தொடர்புகள் அதில் வெளியிடப்பட்டுள்ளது. இதனால் பல இஸ்ரேலியப் பிரபலங்கள் சங்கடத்திற்கு உள்ளாகினர்.

இஸ்ரேலின் தாக்குதலால் விரக்தியடைந்த ஈரானியர்கள் சிரியாவின் Homs மாகாணத்தில் உள்ள Al Tanf இல் இருக்கும் 200 படையினரைக் கொண்ட அமெரிக்கப் படைத்தளத்தின் மீது ஆளில்லா விமானங்களால் தாக்குதல் நடத்தினர் என அமெரிக்கா அறிவித்தது

2021 ஏப்ரல் மாதம் ஈரானின் தொடருந்து சேவை நிலையங்களில் தொடருந்துகள் வரும் நேரம் அறிவிக்கும் இலத்திரனியல் பதாகைகளில் தாமதம், இரத்து, போன்ற வாசகங்களை பதிவேற்றி பயணிகளையும் தொடருந்து சேவைகளையும் குழப்பி ஈரானிய மக்களுக்கு பெரும் அசௌகரியங்கள் ஏற்படுத்தப்பட்டன. சில அறிவிப்புக்களில் கமெய்னிக்கு அழைப்பு விடுக்கவும் எனவும் பதிவுகள் மாற்றப்பட்டன.

2021-ம் ஆண்டு ஈரானிய யூரேனியப் பதப்படுத்தலில் மின்வெட்டு, ஏவுகணை உற்பத்தி நிலையத்தில் தீவிபத்து எனவும் இணைய வெளித்தாக்குதல் மூலம் நடந்தன.

இஸ்ரேலிலி இருந்து செய்யப்படுவதாக கருதப்படும் இணையவெளித் தாக்குதல்கள் ஈரானிய சிறைச்சாலைகளையும் விட்டு வைக்கவில்லை. அங்குள்ள கணினித் தொகுதிகளில் செய்யப் பட்ட ஊடுருவல்களால் பல சிறைக்கைதிகளின் தகவல்கள் மாற்றப்பட்டதால் கைதிகள் மீது அட்டூழியங்கள் நடந்தன.

2019-ம் ஆண்டு ஈரானில் இருந்து அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் கணினித் தொகுதிகளில் செய்யப்பட்ட தாக்குதல்களால் பல நூறு மில்லியன் டொலர்கள் இழப்பீடு ஏற்பட்டதாக செய்திகள் வெளிவந்தன.

பொதுமக்களுக்கு அசௌகரியங்கள் ஏற்படுத்தக் கூடிய இணைய வெளித்தாக்குதல்கள் தாற்போது அதிகரித்துச் செல்கின்றன என்பதை இஸ்ரேலும் ஈரானும் ஒன்றின் மீது ஒன்று செய்யும் தாக்குதல்கள் உறுதி செய்கின்றன.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...