இலங்கை வரலாற்றை எழுதிவரும் பாவை சந்திரன் அவர்கள் ஜனதா விமுக்தி பெரமுன என்ற மக்கள் விடுதலை முன்னணியின் ஆயுதப் புரட்சி பற்றி எழுதும் போது இந்திராகாந்தி அரசின் சாதுரியமான செயல் ஒன்றை குறிப்பிட மறந்துவிட்டார்.
மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் ஒரு சராசரிச் சிங்களவரைப் போலவே ரோஹண விஜயவீர ஒரு இந்திய எதிர்ப்பாளர். அவர் தனது புரட்சியைப் பரப்புவதற்கு சிங்கள மக்களிடை இருந்த இந்திய எதிர்ப்பை நன்கு பயன் படுத்தினார். அவரது கொள்கைப் பரப்பில் மூன்றில் ஒரு பகுதி இந்திய விரிவாக்கம் என்பதை அடிப்படையாகக் கொண்டது.
- ஒரு நாள் இந்தியன்கள் இலங்கைக்கு நடந்து வருவாங்கள் என்று சொல்வார்.
- ஒரு புளிய மரம் தனது நிழலில் இன்னொரு மரத்தை வளர விடாது அதுபோலவே இந்தியாவும் இலங்கையை உருப்படவிடாது.
- இந்தியா ஒரு மூன்றாம் உலக நாடல்ல அது குண்டூசியிலிருந்து விமானம் வரை தயாரிக்கிறது.
இப்படிப் பல இந்தியப் பூச்சாண்டி.
இந்திரா காந்தி அம்மையார் மக்கள் விடுதலை முன்னணியின் நடவடிக்கைகளை தனது உளவுத்துறை மூலம் நன்கு கவனித்து வந்தார். இலங்கையிலும் பார்க்க இந்தியா அதன் நடவடிக்கைகள் பற்றி நன்கு அறிந்திருந்தது. மக்கள் விடுதலை முன்னணி ஆயுதப் புரட்சி தொடங்குவதற்கு இரு நாட்களுக்கு முன்னதாக இந்தியா வெளிநாட்டமைச்சு தமது கடற்படைக் கப்பல் ஒன்று உங்கள் நாட்டுக்கு அண்மையில் பழுதடைந்து விட்டது உங்கள் கொழும்புத் துறை முகத்தில் நுழைய அனுமதி வேண்டும் என்று இலங்கை வெளிநாட்டமைச்சிடம் அனுமதி கேட்டுப் பெற்று கொழும்பில் ஒரு கடற்படைக் கப்பல் வந்துவிட்டது. அதே பாணியில் மறுநாள் இன்னொரு கப்பலும் வந்துவிட்டது. இரு கப்பல்கள் நிறைய கூர்க்காப் படையினர் தயார் நிலையில்.
மக்கள் விடுதலை முன்னணியின் ஆயுதப் புரட்சி தொடங்கியது இலங்கை அதிகாரிகள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநயக்காவைத் தொடர்பு கொள்ள முயற்சித்தால் அவர் சொகுசுப் படமாளிகை ஒன்றில் ஆங்கிலப் படம் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தார். இதற்குள் நாட்டின் சிலபாகங்கள் புரட்சியாளர்களின் கட்டுப்பாட்டுக்குள். உதவிக்கு சிறிமாவோ இந்திரா காந்தியைத் தொடர்பு கொண்டார். இந்திரா அம்மையார் சொன்னார் "ஆம் பிரச்சனை இல்லை எங்கள் இரு கப்பல்கள் நிறைய வீரர்கள் கொழும்புத் துறைமுகத்தில் நிற்கிறார்கள்." பின்னர் இந்தியாவிலிருந்து ஒரு தொகை உலங்கு வானூர்திகளும் இலங்கை வந்தன.