ஈரானின் ஏவுகணைகள் இஸ்ரேல் வரைக்கும் பாய்ந்து தாக்கக் கூடிய நிலையும் இஸ்ரேலிய விமானங்கள் ஈரான் வரை சென்று தாக்கக் கூடிய வலிமையையும் தற்போது பெற்றுள்ள நிலையில் இரு நாடுகளைச் சூழவுள்ள பிராந்திய போட்டியில் பெரும் மாறுதல் ஏற்பட்டுள்ளது. அரபுக்கள், யூதர், ஈரானியர் என்ற முப்பெரும் இனங்களுக்கிடையிலான் போட்டியையும் அது மாற்றி அமைத்துள்ளது. ஈரானின் அச்சுறுத்தலுக்கு உள்ளான அரபு நாடுகள் நேரடியாகவும் மறைமுகமாகவும் இஸ்ரேலுடன் பல வழிகளில் ஒத்துழைக்கின்றன. ஈரானின் படைத்துறை வளர்ச்சியும் அது இரசியா, சீனா, வட கொரியா ஆகியவற்றுடன் அதிகரிக்கும் ஒத்துழைப்பும் அரபி நாடுகளைக் கரிசனை கொள்ள வைத்துள்ளது.
இஸ்ரேலுடன் படைத்துறைப் பயிற்ச்சி
ஐக்கிய அரபு அமீரகம், பாஹ்ரேன் ஆகிய் நாடுகள் அமெரிக்காவுடனும் இஸ்ரேலுடனும் இணைந்து ஐந்து நாள் போர்ப்பயிற்ச்சியை செங்கடலில் 2021 நவம்பர் மாதம் செய்தன. உலகத்தை வியப்பிற்கு உள்ளாக்கிய இந்தப் போர்ப்ப்யிற்ச்சியைத் தொடர்ந்து 2022 பெப்ரவரி 2-ம் திகதி IMX-22 என்னும் பெயரில் சவுதி அரேபியா, ஓமான் ஆகிய நாடுகள் அமெரிக்காவுடனும் இஸ்ரேலுடனும் இணைந்து ஒரு போர்ப்பயிற்ச்சியை நடத்தின. ஏழு ஆண்டுகளாக நடக்கும் இப்போர்ப்பயிற்ச்சியில் இஸ்ரேல் முதற் தடவையாக இணைந்து கொண்டது. பாரசீகக் குடா அரபுக் கடல், ஓமான் வளைகுடா, செங்கடல், வட இந்துமாக்கடல் என பரந்த கடற்பரப்பில் நடந்த இப்போர்ப்பயிற்ச்சியில் அமெரிக்காவின் ஐந்தாவது கடற்படைப்பிரிவு முக்கிய பங்கு வகித்தது. இஸ்ரேலுடன் அரசுறவை வைத்துக் கொள்ளாத சவுதி அரேபியா அதனுடன் இணைந்து போர்ப்பயிற்ச்சியை மேற் கொண்டமைக்கு காரணம் ஈரானின் படைத்துறை வளர்ச்சி பற்றிய கரிசனையே.
பொது எதிரி ஈரான்
சவுதி அரேபியாவிற்கு வேறு நாடுகள் படைக்கலன்களை அல்லது படைத்துறைத் தொழில்நுட்பங்களை வழங்கும் போது இஸ்ரேல் தவறாமல் தனது ஆட்சேபனையை தெரிவிக்கும். ஆனால் சவுதி அரேபியாவின் ஏவுகணை உற்பத்திக்கு சீனா உதவி செய்த போது இஸ்ரேல் ஏதும் பேசவில்லை. சவுதியின் ஏவுகணைகள் இஸ்ரேல் மீது வீசப்பட மாட்டாது என இஸ்ரேல் நம்பும் அளவிற்கு இரு நாடுகளுக்கும் இடையில் உறவு இரகசியமாகவும் பகிரங்கமாகவும் வளர்ந்துள்ளது. அந்த ஏவுகணைகள் ஈரான் மீது வீசப்படுவதற்கான வாய்ப்புக்களே அதிகம் என இஸ்ரேல் அறியும். 2020 செப்டம்பரில் இஸ்ரேலுடன் ஐக்கிய அமீரகமும் பாஹ்ரேனும் அரசுறவுகளை ஏர்படுத்திக் கொண்டமைக்கு பொது எதிரியான ஈரானுக்கு எதிரான கூட்டு அமைக்க வேண்டும் என்ற நோக்கமே காரணம். 2012-ம் ஆண்டு ஈரானின் வடக்கு எல்லையில் உள்ள இஸ்லாமிய நாடாகிய அஜர்பைஜானின் விமானத்தளங்களை இஸ்ரேலிய விமானங்கள் பாவிப்பதற்கு இரகசியமாக அனுமதி வழங்கப்பட்டது. அதற்காக இஸ்ரேல் தனது படைக்கலன்களை தடையின்றி அஜர்பைஜானுக்கு விற்பனை செய்ய ஒத்துக் கொண்டது. 2020-ம் ஆண்டு நடந்த அஜர்பைஜான் – ஆர்மினியப் போரில் அஜர்பைஜான் வெற்றி பெற்றதில் துருக்கியினது பகிரங்கப் பங்களிப்பும் இஸ்ரேலின் இரகசியப் பங்களிப்பும் முக்கிய பங்களித்தன. 2021 செப்டம்பரில் ஈரானிய ஊடகம் ஒன்று ஈரானுக்கும் இரசியாவிற்கும் எதிராக அஜர்பைஜானை அமெரிக்கா, துருக்கி, இஸ்ரேல் ஆகிய நாடுகள் பாவிக்க சதி செய்வதாக குற்றம் சாட்டியிருதது.
ஈரானின் சியா பிறைத்திட்டம்
பல பொருளாதாரப் பிரச்சனைகளுக்கு மத்தியிலும் மேற்காசியாவிலும் வட ஆபிரிக்காவிலும் படைத்துறை அடிப்படையிலும் அரசுறவியல் அடிப்படையிலும் வலிமை மிக்க நாடாக ஈரான் இருக்கின்றது. உள்நாட்டிலேயே பல படைக்கலன்களை உருவாக்குவதில் ஈரான் தொடர்ச்சியாக வெற்றி கண்டு வருகின்றது. ஈராக், சிரியா, லெபனான், யேமன் ஆகிய நாடுகளில் ஈரானின் ஆதிக்கம் வலிமையாக உள்ளது. ஈராக், சிரியா, லிபியா, எகிப்து ஆகிய நாடுகளை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரும் ஈரானின் சியா பிறைத் திட்டத்தின் முதல் இலக்கு ஈராக், இரண்டாம் இலக்கு சிரியா. சிரியாவில் ஈரான் செய்த படைத்துறை மற்றும் அரசுறவியல் நகர்வுகள் சியா இஸ்லாமியரான பஷார் அல் அசாத்தை பதவியில் நீடிக்கச் செய்கின்றதுடன் இரசியாவையும் துருக்கியையும் ஈரானுடன் ஒத்துழைக்கச் நிர்ப்பந்தித்துள்ளது. அசாத்தை பதவியில் இருந்து அகற்ற சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் உட்படப் பல அரபு நாட்டு ஆட்சியாளர்கள் எடுத்த முயற்சி ஈரானின் நகர்வுகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. ஈரானின் சியா பிறைத்திட்டம் நிறைவேறி அதனால் அணுக்குண்டு உற்பத்தி செய்யும் திறனையும் பெற்றால அதை மத்திய தரைக்கடலில் ஒரு வல்லரசாக்கும்.
மேனா பிரதேசம்
அமெரிக்கா தனது வெளியுறவுக் கொள்கையில் மேனா (MENA) எனப்படும் மத்திய கிழக்கு-வட ஆபிரிக்கப் பிரதேசத்திற்கு அதிக முக்கியத்துவம் கடந்த நூறு ஆண்டுகளுக்கு மேல் கொடுத்து வந்தது. இப்போது அமெரிக்கா தனது கவனத்தை இந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் அதிகரித்து மேனா பிரதேசத்தில் குறைக்கின்றது. அமெரிக்காவின் மேனா பிரதேசக் கொள்கை எரிபொருள் விநியோகம், கடற்போக்குவரத்து, இஸ்ரேலின் பாதுகாப்பு, இஸ்லாமிய தீவிரவாத ஒழிப்பு, ஈரானை அடக்குதல் ஆகியவை முதன்மையானவை. இஸ்ரேல் படைத்துறையிலும் உளவுத்துறையிலும் முன்னேறிய ஒரு நாடாக இருக்கின்றது. இஸ்ரேலின் அயல் நாடுகள் தனித்தோ அல்லது பல ஒன்றிணைந்தோ அதன் மீது தாக்குதல் செய்ய முடியாத நிலையில் இருக்கின்றன. ஆனால் ஈரான் இஸ்ரேல் கரிசனை கொள்ளும் அளவிற்கு தனது படைக்கல உற்பத்தியை பெருக்குகின்றது. ஈரான் தனது ஏவுகணை உற்பத்தியிலும் யூரேனியப் பதப்படுத்தலை துரிதப்படுத்துவதிலும் அதிக அக்கறை காட்டுகின்றது. இஸ்லாமிய தீவிரவாதிகள் பலரை அமெரிக்கா அழித்த நிலையிலும் பல அரபு நாட்டு செல்வந்தர்கள் இஸ்லாமிய தீவிரவாத அமைப்புக்களுக்கு நிதி வழங்குவதைக் நிறுத்திய நிலையிலும் மத்திய கிழக்கில் இஸ்லாமிய தீவிரவாதம் தீவிரமடைய முடியாத நிலையில் உள்ளது. அமெரிக்காவின் உள்ளூர் எரிபொருள் உற்பத்தி பெருமளவில் அதிகரித்திருப்பதால் அது தனது தேவையின் 40%ஐ உள்நாட்டில் இருந்து பெற்றுக் கொள்கின்றது. 42% மற்ற அமெரிக்க நாடுகளில் இருந்து பெறப்படுகின்றது. தனது தேவையில் 12%ஐ மட்டுமே வளைகுடா நாடுகளில் இருந்து அமெரிக்கா பெறுகின்றது. அதனால் அமெரிக்காவில் தமது பாதுகாப்புக்கு தங்கியிருந்த வளைகுடா நாடுகள் தமது பாதுகாப்பில் மாற்றம தேவை என்பதை உணர்ந்துள்ளன. அமெரிக்காவின் மேனா பிரதேசக் கொள்கையில் ஈரானை அடக்குதல் மட்டுமே அதன் அதிக கவனத்தைப் பெறுகின்றது. ஈரானை அடக்கும் பொறுப்பை இஸ்ரேலும் அரபு நாடுகளும் இணைந்து மேற் கொண்டால் தனது பாரம் குறையும் என்பதால் அரபு நாடுகளுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான படைத்துறை ஒத்துழைப்பை அமெரிக்கா தொடர்ந்து மேம்படுத்திக் கொண்டிருக்கின்றது. ஈராக் மற்றும் ஆப்கானிஸ்த்தான் என்னும் ஈரானின் இரண்டு எல்லை நாடுகளில் அமெரிக்கப் படையினர் பெருமளவில் இருந்தமை ஈரானுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்தது. ஈராக்கை தனது செய்மதி நாடாக்க ஈரான் விரும்புகின்றது. மேற்காசியாவிலும் வட ஆபிரிக்காவிலும் அமெரிக்கா செலுத்தி வந்த அக்கறை மெல்ல மெல்ல குறைந்து கொண்டு போகின்றது.
மேனா பிரதேசத்திற்கான குவாட் அமைப்பு
அமெரிக்கா, இரசியா, ஐக்கிய அமீரகம், இந்தியா ஆகிய நாடுகளை இணைத்து மேனா பிரதேசத்திற்கான குவாட் அமைப்பு உருவாக்க இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ் ஜெயசங்கர் இஸ்ரேலுக்கு பயணம் மேற்கொண்டிருந்த போது ஏற்பாடு செய்யப்பட்டது. 2021-10-20-ம் திகதி இந்த நான்கு நாடுகளும் ஒரு மெய்நிகர் கூட்டத்தையும் ஜெய்சங்கர் இஸ்ரேலில் இருக்கும் போது நடத்தினார்கள். மேனா பிரதேசக் குவாட் அமைப்பு ஈரானைக் கையாள்வதுடன் சீனாவையும் அப்பிரதேசத்தில் எதிர் கொள்வதற்கும் மத்திய தரைக் கடலில் இருந்து அரபுக் கடல்வரையான பிரதேசத்தை அந்த நாடுகளும் தமக்கு சாதகமாக வைத்திருப்பதற்கும் உருவாக்கப்பட்டது.
ஈரானின் ஆதரவுடன் வட யேமனில் இருந்து செயற்படும் ஹூதி எனப்படும் அன்சர் அல்லா அமைப்புப் போராளிகள் சவுதி அரேபியா, ஐக்கிய அமீரகம் ஆகியவற்றின் மீது தாக்குதல் செய்வது. போல் இஸ்ரேல் மீது தாக்குதல் செய்ய முடியாத நிலை உள்ளது. 2300கிமீஇற்கும் அதிகமான தொலைவில் இருக்கு ஹூதி போராளிகளால் டெல் அவீவ் மீது ஆளிலிப் போர் விமானத்தாக்குதல் செய்ய முடியாது. ஈரானின் ஆளிலிப் போர்விமானங்களின் பற்ப்பு தூரம் அதிகரிக்கும் போது மேலும் பல மாற்றங்களை மேனா பிரதேசத்தில் எதிர்பார்க்கலாம்.