Monday 20 April 2020

போர்மீது போர் தொடுக்கும் கொரொனா


கொரொனா நச்சுக் கிருமியின் தாக்கம் பொருளாதாரத்தில், ஆட்சி முறைமையில் மட்டுமல்ல படைத்துறையிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றது. முகாம்களில் இருக்கும் உலகின் பல்வேறு நாடுகளின் படையினர் தொற்று நோய்ப் பரவலால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு முகாமில் ஒருவருக்கு தொற்று நோய் வந்தாலே அது அந்த முகாமையே முடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஒரு போருக்கு உகந்த நிலையில் உலகம் இப்போது இல்லை என எண்ணும அளவிற்கு கொரொனா நச்சுக் கிருமியால் உருவாகும் கொவிட்-19 தொற்று நோய் பரவி உள்ளது.

விநியோகச் சங்கிலி
ஒரு போர் நடக்கும் போது படையினருக்கு தேவையான உணவு, சுடுகலன்கள், பின்புல ஆதரவு போன்றவற்றிற்கு என பெரிய ஆளணி தேவை. ஒரு பாரிய விநியோகச் சங்கிலி போரின்போது செயற்பட வேண்டும். இணையவெளிப் படையினர் ஒரு சிறிய அறைக்குள் ஒன்றாக இருந்து தமது படை நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். படையினரும் அவர்களுப் பின்புல ஆதரவு வழங்குவோரும் சமுதாய விலகலைக் கடைப்பிடிக்க முடியாது. கொடிய தொற்று நோய் பரவுகின்ற வேளையில் பலர் நோய் வாய்ப்பட்டு போர்முனையை விட்டு வில்க வேண்டி வரும். கொவிட்-19இற்கான மருந்தும் தடுப்பு மருந்தும் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டு பாவனைக்கு வரும் வரை ஒரு போரை நடத்துவது இயலாத ஒன்றாக ஆகிவிட்டது.

உதிரிப்பாகங்கள்
எண்ணெய் இறைப்பான்கள், நீர்ம அழுத்திகள் (hydraulic) போன்ற பல உதிரிப்பாகங்களை அமெரிக்கப் விமானப் படைத்துறைக்கு வழங்கும் Eaton Aerospace என்ற நிறுவனம் தற்போது இயங்க முடியாத நிலையில் உள்ளது. ஊழியர்கள் எவரும் அங்கு வேலைக்குப் போக முடியாத நிலை. ஈற்றனின் விநியோகம் இன்றி அமெரிக்காவின் முதன்மைப் போர் விமானமான F-35 பறப்புக்களை தொடர்ச்சியாக மேற்கொள்ள முடியாது. அமெரிக்க வான் படையின் பாரிய விமானமான KC-46 tanker படையினரையும் தளபாடங்களையும் போர் முனைக்கு எடுத்துச் செல்ல முடியாது. இது போல பல உலக நாடுகளின் படைத்துறைக்கு வழங்கல் சேவை செய்து வரும் பல நிறுவனங்கள் தற்போது செயற்பட முடியாத நிலையில் உள்ளன. ஒரு போர் நடந்தால் அவசியமான பல உதிரிப் பாகங்கள் போர் முனைக்கு எடுத்துச் செல்ல முடியாது.

அமெரிக்கக் கடற்படை

அமெரிக்கக் கடற்படை ஆளணி கொரோனா நச்சுக்கிருமியால் பல சிக்கலான பிரச்சனைகளைச் சந்தித்துள்ளது. 2020 ஏப்ரல் முதல் வாரத்தில் அமெரிக்கக் கடற்படையின் உச்ச பதவியான் செயலாளர் பதவியில் இருந்தவர் தனது பதவியில் இருந்து விலகிக்கொண்டார். அவரது இடத்திற்கு இன்னொருவரை அதிபர் நியமிக்க அதை அமெரிக்கப் பாராளமன்றம் அனுமதிக்க வேண்டும். கொவிட்-19 தொற்று நோய்பரவலால் பாராளமன்றம் கூட முடியாத நிலையில் புதியவரை நியமித்தல் சிக்கலாக இருக்கின்றது. அமெரிக்கக் கடற்சார் படையினரில் இரண்டாயிரத்திற்கு மேற்பட்டோர் கொவிட்-19 நோயினால் பாதிக்கப் பட்டுள்ளனர்.

ஐரோப்பியப் படையினர்
பல ஐரோப்பிய நாடுகள் தமது நாடுகளில் கொவிட்-19 தொற்று நோய் தீவிரமடைந்தால் படையினரின் உதவியைப் பெற வேண்டி இருக்கும். ஐரோப்பிய நாடுகள் பல  தமது எல்லைகளை மூடி இருப்பதை உறுதி செய்யவும் படையினர் தேவைப்படுகின்றனர்.  பிரெஞ்சுக் கடற்படைக் கப்பல்கள் தமது நடமாட்டத்தை பெருமளவு குறைத்துள்ளன. பிரெஞ்சுப் படையினரைல் அறுநூறுக்கு மேற்பட்டவர்களுக்கு கொவிட்-19 நோய் தொற்றியுள்ளது. இத்தாலியின் படைத் துறைத் தளபதியையும் அந்த நோய் விட்டுவைக்கவில்லை. அத்துடன் ஒரு துணைத்தளபதி நோயால் கொல்லப்பட்டார். ஸ்பெயினில் 230 படையினருக்கு கொவிட்-19 தொற்று நோய் பிடித்துள்ளமையால் முவாயிரத்திற்கு மேற்பட்ட படையினர் தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர். பிரித்தானியப் படையினரில் 20,000 பேர் கொவிட்-19 சேவைக்கு என ஒதுக்கப்பட்டுள்ளனர். படையினரின் உலங்கு வானூர்திகள் சுகாதார சேவையினரின் வழங்கல்கள் பலவற்றை மேற்கொள்கின்றன.

சீனா மூன்றாம் உலகப் போரை வென்றதா?
கொரோனா நச்சுக் கிருமியைப் பரப்பியதன் மூலம் ஒரு துப்பாக்கி வேட்டுக் கூட வெடிக்காமல் சீனா மூன்றாம் உலகப் போரை வென்று விட்டது என இணையவெளிகளில் விரைவாக ஒரு செய்தி 2020 மார்ச் மாதம் பரவி இருந்தது. கொரொனா நச்சுக் கிருமி பரவிய பின்னர் சீனா எந்த ஒரு நாட்டினதும் ஒரு சதுர் அங்குல நிலத்தைக் கூடக் கைப்பற்றவில்லை. அதன் உலக ஆதிக்கம் அதிகரிக்கவில்லை. சில நாடுகளுக்கு முக மூடிகளை வழங்கி சீன முகமூடி அரசுறவியல் (Mask Diplomacy) செயற்பாட்டை மேற் கொண்டது. பல நாடுகள் சீனாவிடமிருந்து வாங்கிய பல தொற்று நோய் ஆய்வுக் கருவிகளும் பல சுவாசப் பெட்டிகளும் செயற்படாதவைய இருந்தன என்ற குற்றச்சாட்டு பரவலாக முன்வைக்கப்பட்டன. சீனப் பொருட்கள் தரமற்றவை என்ற விம்பம் அதனால் ஒளிர்வு பெற்றது.

சீனாவின் செயற்கைத் தீவுகள் பின்னடைவைச் சந்திக்குமா?
சீனா தனது கட்டுமானத் திறனைப் பயன் படுத்தி தென் சீனக் கடலில் செயற்கைத் தீவுகளை உருவாக்கியதுடன் அங்கு பெரும் படைக்கலன்களையும் நிறுத்தியது. ஆனால் சீனா அவசரமாகக் கட்டிடங்களும் படைக்கலன்களும் துரிதமாக துருப்பிடிக்கத் தொடங்கின. பல ஏவுகணைச் செலுத்திகள் மூன்று மாதங்களில் பயன் படுத்த முடியாத அளவிற்கு துருப் பிடித்துப் போயின. செயற்கைத் தீவுகளில் உள்ள ரடார்கள், துறைமுகச் சுவர்கள் நீர் வழங்கு குழாய்கள் போன்றவையும் துருபிடிக்கின்றன. இதனால் துருப்பிடிக்காத மூலப் பொருட்களையும் பூச்சுக்களையும் கண்டு பிடிக்கும் ஆய்வில் சீனா தீவிரமாக இறங்கிய வேளையில் சீனாவை கொரொனா நச்சுக் கிருமிகள் தாக்கத் தொடங்கின.

தைவான் மீதான் மிரட்டலை அதிகரித்த சீனா
உலகமெல்லாம் கொவிட்-19 தொற்று நோய் பற்றி கவலையடைந்து இச்ருக்கையில் 2020 பெப்ரவரி 10-ம் திகதி சீனக் குண்டு விமானங்கள் சீன-தைவான் கடல் எல்லை தாண்டிப் பறந்ததைத் தொடர்ந்து அமெரிக்காவின் பி-52 குண்டு வீச்சு விமானங்கள் தைவானின் கிழக்குக் கடற்கரைப் பிராந்தியத்தில் பறந்தன. 2020 மார்ச் 16-ம் திகதி சீனா தைவானை ஆக்கிரமிக்கும் போர்ப்பயிற்ச்சியை சீனா மேற்கொண்டது. அமெரிக்காவின் முன்னாள் அதிபர் தைவானுக்கு விற்பனை செய்யத் தயங்கிய எஃப்-16 போர்விமானங்களில் அறுபத்தாறை டொனாட் டிரம்ப் ஆட்சி தைவானுக்கு எட்டு பில்லியன் டொலர்களுக்கு விற்பனை செய்திருந்தது. ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் அமெரிக்காவின் ஆதிக்கத்தின் முதுகெலும்பு எனக் கருதக் கூடிய தியொடோர் ரூஸ்வெல்ற் விமானம் தாங்கிக் கப்பல் கொவிட்-19 தொற்று நோய் அதில் பணிபுரிபவர்கள் இடையே பரவிய படியால் அது குவாம் தீவில் முடக்கபட்டுள்ளது. அதில் உள்ள ஐயாயிரத்துக்கு மேற்பட்ட படையினரையும் தொற்று நோய் ஆய்வுக்கு உட்படுத்த அமெரிக்கா முடிவு செய்தது. 2020 மார்ச்சில் அமெரிக்கப் படையினர் தமது நட்பு நாடுகளுடன் செய்த போர்ப்பயிற்ச்சிகளை தொற்று நோய் அச்சம் காரணமாக நிறுத்தியிருந்த வேளையில் சீனா கம்போடியாவுடன் இணைந்து தனது போர்ப்பயிற்ச்சியை மேற்கொண்டது.

போருக்கு உகந்ததாக பொருளாதாரம் இல்லை
பன்னாட்டு நாணய நிதியம் 2020இல் உலகப் பொருளாதாரம் 3விழுக்காட்டால் தேய்வடையும் என எதிர்வு கூறியுள்ளது. ஐக்கிய அமெரிக்காவின் 5.9 விழுக்காட்டாலும், யூரோ வலய நாடுகள் 7.5விழுக்காட்டலும், ஜப்பான் 5.2விழுக்காட்டாலும் பிரித்தானியா 5.6விழுக்காட்டாலும் பொருளாதார தேய்வை 2020இல் சந்திக்கும். குறைந்தது எட்டு விழுக்காடாவது வளர வேண்டிய இந்தியாவினதும் சீனாவினதும் பொருளாதாரஙக்ள் 2020இல் சொற்ப அளவிலேயே வளரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சீனாவின் பொருளாதாரம் 1.2விழுக்காட்டாலும் இந்தியாவின் பொருளாதாரம் 1.9விழுக்காட்டாலும் வளர்ச்சியடையும் எனவும் அந்த நிதியம் எதிர்வுகூறியுள்ளது. இந்த நிலையை மாற்றியமைத்து

மேற்காசியாவில் சிரிய மக்களின் பரிதாப நிலை
சிரியப் போரால் பாதிக்கப் பட்டு சிரியா, துருக்கி, ஜோர்தான் போன்ற நாடுகளில் சுகாதார வசதிகள் குறைந்த முகாமகளில் தங்கியிருக்கும் சிரியர்கள் நடுவே கொரோனா நச்சுக் கிருமி பெரும் அழிவை ஏற்படுத்தலாம் என அஞ்சப் படுகின்றது. அத்துடன் இந்த சூழலை தமக்கு சாதகமாகப் பயன்ப்டுத்தி மீனும் ஐ எஸ் போன்ற போராளிக் குழுக்கள் தலை தூக்க்லாம். ஈராக்கில் உள்ள அமெரிக்கப்படையினரும் கொவிட்-19 நோயின் தாக்கத்திற்கு உள்ளாகி இருக்கின்றார்கள். அவர்கள் மீது ஈரானின் ஆதரவுப் படைக்குழுக்கள் தாக்குதல் செய்யலாம் என்ற கரிசனையில் அவர்கள் மீது தாக்குதல் நடத்தினால் ஈரான் மீது அமெரிக்கப் படை கடுமையான தாக்குதலை மேற்கொள்ளலாம் என அதிபர் டிரம்ப் பகிரங்க எச்சரிக்கை விடுத்தார். யேமனில் போராளிகள் போர் நிறுத்தத்திற்கு உடன்பட்டுள்ளனர்.

கிழக்கு ஐரோப்பா
இரசியா உட்பட பல முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகளில் கொவிட்-19இன் தாக்கம் குறைந்த அளவே உள்ளது. சோவியத் ஒன்றிய காலத்தில் பல மத்திய ஆசிய நாடுகளில் அவ்வப் போது எலிகளால் பரவு பிளேக் நோய் தொற்றுவதுண்டு. அவற்றை சமாளிக்கும் பொறி முறை சோவியத் ஒன்றிய நாடுகளில் உருவாக்கப் பட்டது. அவை இப்போதும் செயற்படு நிலையில் உள்ளது. அந்த நாடுகள் இறுக்கமனா எல்லை மூடல்களைக் கடைப்பிடிப்பதாலும் அரசின் சமுக விலகல் உத்தரவு சரியாகப் பின்பற்றப் படுவதாலும் கொவிட்-19 தொற்று நோய் பரவல் தடுக்கப் பட்டுள்ளது. ஆனால் இரசியா இப்போது போர் ஒன்றைத் தொடுக்கும் அளவிற்கு அதன் பொருளாதார நிலை இல்லை.
கொவிட்-19 தொற்று நோயும் அதனால் உருவான பொருளாதார பிரச்சனையும் இன்னும் இரண்டு ஆண்டுகளுக்காவது ஒரு புதிய போர் முனை திறக்கப்படும் வாய்ப்பை பெருமளவு குறைத்துள்ளது.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...