உக்ரேனில் அமைதியை
ஏற்படுத்துவதற்காக அமெரிக்காவின் உக்ரேனுக்கான சிறப்புப் பிரதிநிதி கேர்ட்
வொல்கரும் இரசிய அதிபர் விளடிமீர் புட்டீனின் சிறப்பு ஆலோசகர் விலடிஸ்லே
சுர்கோவும் 2017 நவம்பர் 13-ம் திகதி நடத்திய பேச்சு வார்த்தையில் ஒரு சுமூகமான
உடன்பாடு எட்டப்படவில்லை. சேர்பியத் தலைநகர் பெல்கிரேட்டில் நடந்த இந்த மூன்றாவது
சுற்றுப் பேச்சு வார்த்தையின் முடிவில் இரு நாடுகளும் அமைதி ஏற்படுத்துவது
தொடர்பாக வெவ்வேறு எண்ணக்கருக்களைக் கொண்டிருப்பதாகவும் ஆனால் அமைதிக்கான பேச்சு
வார்த்தை தொடரும் எனவும் தெரிவித்தனர்.
முதல் இரு சுற்றுப் பேச்சு
வார்த்தைகள்
அமெரிக்க மற்றும் இரசியப்
பிரதிநிதிகளான வொல்கரும் சுர்கோவும் பெல்கிரேட்டில் 2017 ஓகஸ்ட் 21-ம் திகதி முதலாவது சுற்றுப் பேச்சு வார்த்தையும் ஒக்டோபர் 7-ம் திகதி இரண்டாம்
சுற்றுப் பேச்சு வார்த்தையும் நடத்தியிருந்தனர். கேர்ட் வொல்கரும் முன்பு நேட்டோவிற்கான அமெரிக்கப்
பிரதிநிதியாகக் கடமையாற்றியவர். இரசியப் பிரதிநிதி விலடிஸ்லே சுர்கோவிற்கு எதிராக
ஐரோப்பிய ஒன்றியம் பயணத் தடை விதித்திருந்தது. முதலாம் சுற்றுப் பேச்சு
வார்த்தையில் எந்த இணக்கமும் ஏற்படவில்லை. பேச்சு வார்த்தை சுமூகமாகவும்
நேர்மையுடனும் நடைபெற்றது என இருதரப்பினரும் முடிவில் தெரிவித்தனர். இரண்டாம்
பேச்சு வார்த்தையில் ஐக்கிய் நாடுகள் சபையின் அமைதிப்படையை உக்ரேனுக்கு அனுப்புவது
பற்றிய கருத்து முன் வைக்கப்பட்டது.
உக்ரேன் பிரச்சனையின்
வரலாறு
1991-ம் ஆண்டு சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பின் உக்ரேன்
தனி நாடாகியது. அப்போது சோவியத் ஒன்றியத்தின்
மூன்றில் ஒரு பங்கு அணுக் குண்டுகள் உக்ரேன் நாட்டின் வசமாகியது. இதானால் உக்ரேன் உலகிலேயே
ஐக்கிய அமெரிக்காவிற்கும் இரசியாவிற்கும்
அடுத்த படியாக மூன்றாவது பெரிய அணுக்குண்டு
நாடாக உருவெடுத்தது. ஆனால் ஐக்கிய அமெரிக்காவும்
இரசியாவும் அதை விரும்பவில்லை. அரசியல் உறுதிப்பாடில்லாத ஒரு புதிய நாட்டிடம் அதிக
அணுக்குண்டுகள் இருப்பது எங்கு போய் முடியும்
என்ற அச்சம் பல நாடுகளிடம் அப்போது இருந்தது. உக்ரேனின் முதல் அதிபர் லியோனிட் கிரவ்சக் தமது நாட்டில் உள்ள
அணுக்குண்டுகளை இரசியாவிடம் ஒப்படைத்து அவற்றை அழிப்பதற்கு நிபந்தனை அடிப்படையில் ஒப்புக்கொண்டார். அவர் கேட்ட
நிபந்தனை பியூடப்பெஸ்ற் குறிப்பாணை அதாவது
The Budapest Memorandum என்னும் பெயரில் ஏற்றுக்
கொள்ளப்பட்டது. அதன்படி உக்ரேனின் பிராந்திய
ஒருமைப்பாட்டை இரசியா, ஐக்கிய அமெரிக்கா, பிரித்தானியா ஆகிய நாடுகள் உறுதி செய்வதாக ஒத்துக் கொண்டன. சோவியத் ஒன்றியத்தின்
வீழ்ச்சிக்குப் பின்னர் தனது ஆதிக்க நிலப்பரப்பை
இரசியா விரிவாக்கவே விரும்பியது. அதன் முதல் முயற்ச்சியாக இரசியாவும், உக்ரேனும், பெலரசும் இணைந்து சுதந்திர
நாடுகளின் பொதுநலவாயம் என்னும் கூட்டமைப்பை 1991-ம் ஆண்டு டிசம்பர் மாதம் உருவாக்கின.
பின்னர் இதில் ஆர்மினியா, அஜர்பைஜான், கஜகஸ்த்தான், கிர்க்கிஸ்த்தான், மோல்டோவா, தேர்க்மெனிஸ்த்தான், தஜிகிஸ்த்தான், உஸ்பெக்கிஸ்த்தான்
ஆகிய நாடுகள் இணைந்தன. 1993-ம் ஆண்டு ஜோர்ஜியாவும்
இணைந்து கொண்டது. பின்னர் உக்ரேன்,
ஜோர்ஜியா, தேர்க்மெனிஸ்த்தான்
ஆகிய நாடுகளில் நடந்த ஆட்சி மாற்றத்தால் அவை இந்த இரசியா தலைமையிலான சுதந்திர நாடுகளின்
பொதுநலவாயம் என்னும் கூட்டமைப்பில் இருந்து வெளியேறின. ஆனால் உக்ரேனை ஐரோப்பிய
ஒன்றியத்திலும் நேட்டோவிலும் இணைக்கும் சதிகள் திரைமறைவில் நடப்பதை அறிந்த இரசிய
அதிபர் விளடிமீர் புட்டீன் கடும் சினமடைந்தார். உக்ரேன் நேட்டோவில் இணைந்தால்
இரசியா ஒரு வல்லரசு என்ற நிலையை இழக்க நேரிடும் எனப் படைத்துறை நிபுணர்கள்
கருத்துத் தெரிவிக்குமளவிற்கு இரசியாவிற்கு உக்ரேன் கேந்திர முக்கியத்துவம் மிக்க
நாடாகும். உக்ரேனை ஐரோப்பிய ஒன்றியத்திலும் நேட்டோவிலும் இணைப்பதற்கு ஏற்ப அங்கு
ஆட்சி மாற்றம் அரங்கேற்றப்பட்டு பெட்றே பொரோஷெங்கோ (Petro Poroshenko)உக்ரேனின் ஆட்சி
பீடத்தில் ஏறினார். கிறிமியாத் தீபகற்பம் உட்பட்ட உக்ரேனின் கிழக்குப்
பிராந்தியத்தில் இரசியர்களே அதிகம் வாழ்கின்றனர். இரசியாவுடன் எல்லையைக் கொண்ட
இப்பிராந்தியத்தில் இரசியர்களே பெரும்பான்மையினராக வாழ்கின்றனர். இவர்கள் சோவியத்
ஒன்றியத்தில் உக்ரேன் இணைந்திருந்த வேளையில் குடியேறியவர்கள். இதனால் உக்ரேனின்
கிழக்குப் பிராந்தியத்தில் பிரிவினைவாதம் இலகுவாக உருவாக்கப்பட்டது. இரசியா
கிறிமியாவை தன்னுடன் இணைத்துக் கொண்டது. உக்ரேனின் கிழக்குப் பிராந்தியத்தில்
பெருமளவு இரசியப் படைகள் கனரகப் படைகலன்களுடன் இரகசியமாக நிலைகொண்டிருப்பதாக
மேற்கு நாடுகள் குற்றம் சாட்டுகின்றன.
வெளுக்காத கிழக்கு
உக்ரேனின்
கிழக்குப் பிராந்தியத்தில் உள்ள டொனெட்ஸ்க், லுதன்க்ஸ்க் (Donetsk and Luhansk) ஆகிய மாகாணங்கள் இரசிய ஆதரவுப் பிரிவினைவாதிகளின் கட்டுப்பாட்டில்
இருக்கின்றன. அந்த மாகாணங்களில் உள்ள அமைதியற்ற சூழலை முடிவுக்குக் கொண்டுவர அங்கு
ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப்படையினரை நிறுத்த இரசியாவும் அமெரிக்காவும்
முயல்வதாகத் தெரிவித்தன. பிரிவினைவாதிகளுக்கும் உக்ரேன் அரசுக்கும் மோதல் நடக்கும்
உக்ரேனின் கிழக்குப் பிராந்தியத்தில் கனரகப் படைக்கலன்கள் இருக்கக் கூடாது என்பது
அமெரிக்காவின் நிலைப்பாடு என கேர்ட் வொல்கர் பேச்சு வார்த்தைக்கு முன்னர் கருத்து
வெளியிட்டிருந்தார்.
உறை
நிலையில் இருந்து உருகு நிலை
உக்ரேனின் கிழக்குப்
பிராந்தியம் நவம்பரில் பனியால் மூடப்பட்டு உறைந்து போய் இருக்கும். அங்கு நடந்த
போரும் கடந்த சில மாதங்களாக உறைநிலையிலேயே இருந்தது. Luhansk People's Republic என்று தம்மைப் பிரகடனப் படுத்தி ஒரு “அரசை” லுதன்க்ஸ்க் மாகாணத்தில் நடத்தி வருபவர்களுக்கு இடையில் ஒரு குழப்ப நிலை
2017 நவம்பர் 27-ம் திகதி உருவானது. உள்துறை அமைச்சர் Igor Kornetஐ அரசுத் தலைவர்
Igor
Plotnitsky பதவி நீக்கம் செய்வதாக அறிவித்தார். ஆனால் காவற்துறையைத் தன்வசம் வைத்திருந்த உள்துறை அமைச்சர் Igor Kornet அதிபர் Igor Plotnitskyஐ பதவி நீக்கம் செய்தார்.
இதனால் Igor
Plotnitsky இரசியாவிற்குத் தப்பி ஓடினார். டொனெட்ஸ்க்
மாகாணத்தில் இருந்து வந்த படையினர் Igor Kornetஇற்கு உதவி செய்து Igor Plotnitskyஇன் ஆதரவாளர்களைக் கைது
செய்தனர். பின்னர் Igor Plotnitsky உடல் நலமின்மையால் பதவி விலகுவதாக அறிவித்தார். பாதுகாப்புத் துறை
அமைச்சர் Leonid Pasechnik இடைக்கால அரசுத் தலைவராகப் பதவி ஏற்றுக் கொண்டார். இரசியாவில்
ஏற்பட்டஉள்ளகப் போட்டியால் உக்ரேனில் பதவிப் போட்டி நடப்பதாக மேற்கத்தைய ஊடகங்கள் கருத்து
வெளியிட்டுள்ளன.
எந்த எல்லையில் அமைதிப்படை?
ஐக்கிய நாடுகள் சபையின்
அமைதிப்படையினரை இரசிய ஆதரவாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள உக்ரேனின்
பிரதேசங்களையும் ஏனைய உக்ரேன் பிரதேசத்திற்கும் இடையிலான எல்லையில் நிறுத்தப்பட
வேண்டும் என 2017 செப்டம்பரில் இரசிய அதிபரி விளடிமீர் புட்டீன்
தெரிவித்திருந்தார். அதற்கு உக்ரேனில் இருந்தும் மேற்கு நாடுகளில் இருந்தும் கடும்
எதிர்ப்புக்கள் கிளம்பின. அதனால் உக்ரேனின் கிழக்குப் பிராந்தியத்தில் உக்ரேனைய
அரசு ஏதும் செய்ய முடியாத நிலை ஏற்படும். ஆனால் இரசியா தனது படையினரையும்
படைக்கலன்களையும் உக்ரேனில் உள்ள தனது ஆதரவாளர்களுக்கு தொடர்ந்து தடையின்றி
அனுப்பலாம் என அதை எதிர்ப்பவர்கள் கருத்து வெளியிட்டனர். அதனால் இரசிய அதிபரின்
முன்மொழிவு உக்ரேனை இரண்டாகப் பிரிக்கும் சதி என விமர்சிக்கப்பட்டது. அதைத்
தொடர்ந்து தனது முன்மொழிவுகள் பேச்சு வார்த்தை மூலம் மாற்றக் கூடியது என புட்டீன்
தெரிவித்திருந்தார். உக்ரேனும் மேற்கு நாடுகளும் இரசிய உக்ரேன் எல்லையில் ஐக்கிய
நாடுகள் சபையின் அமைதிப்படையினர் நிறுத்தப்பட வேண்டும் என விரும்புகின்றன.
மின்ஸ்க் உடன்படிக்கை
உக்ரேனின்
கிழக்குப் பிராந்தியத்தில் உள்ள டொனெட்ஸ்க் ஆகிய மாகாணங்களில் 2014 ஏப்ரல் மாதம் பிரிவினைவாதிகளுக்கும் உக்ரேன்
அரசுக்கும் இடையில் தொடங்கிய மோதலில் பத்தாயிரத்திற்கு மேலானவர்கள் பலியாகியுள்ளனர்.
இருதரப்பினருக்கும் இடையில் மோதலைத் தவிர்க்கும் பேச்சு வார்த்தைகள் செப்டம்பர்
2014இலும் பெப்ரவரி 2015இலும் பெலரஸ் தலைநகர் மின்ஸ்கில் நடந்து மோதல் தவிர்ப்பு
ஒப்பந்தங்கள் செய்யப்பட்டன. அதற்கு மின்ஸ்க் உடன்படிக்கை எனப் பெயரும் இடப்பட்டன.
இருதரப்பினரும் அதை மீறி மோதலில் ஈடுபட்டனர். அமெரிக்காவின் உக்ரேனுக்கான சிறப்புப் பிரதிந்தி கேர்ட்
வொல்கரும் இரசிய அதிபர் விளடிமீர் புட்டீனின் சிறப்பு ஆலோசகர் விலடிஸ்லே
சுர்கோவும் 2017 நவம்பர் 13-ம் திகதி நடத்திய பேச்சு வார்த்தையின் முடிவில்
வெளிவிட்ட கூட்டறிக்கையில் மின்ஸ்க் உடன்படிக்கைப் படி மோதல் தவிர்ப்புச்
செய்வதற்கு அரசியல் ரீதியாகவும் படைத்துறை ரீதியாகவும் செயற்திட்டங்கள்
மேற்கொள்ளப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப் பட்டிருந்தது.
பொருளாதாரத் தடையும்
அமைதிப்படையும்
2014இல் உக்ரேனின் கிறிமியாவை
இரசியா தன்னுடன் இணைத்தமைக்கும் உக்ரேனின் கிழக்குப் பிராந்தியத்தில் இரசியா
பிரிவினைவாதிகளுக்கு ஆதரவு கொடுப்பதற்கும் எதிராக ஐரோப்பிய ஒன்றியமும்
அமெரிக்காவும் கனடாவும் இரசியாவிற்கு எதிராக கடுமையான பொருளாதாரத் தடைகளை கொண்டு
வந்தன. உக்ரேனில் மேற்கு நாடுகளின் வேண்டுகோளின் படி ஐநா அமைதிப்படையை
நிறுத்தினால் அதற்குப் பதிலாக இரசியா மீதான பொருளாதாரத் தடையை நீக்க வேண்டும் என்ற
இரசியாவின் கோரிக்கையை ஜேர்மனி உடனடியாக நிராகரித்தது. இரண்டையும் தொடர்புபடுத்தக்
கூடாது என்பது மேற்கு நாடுகளின் நிலைப்பாடாகும்.
முழு உக்ரேனும்
இரசியாவிற்கு வேண்டும்
இரசியாவிற்கு கிறிமியா
கட்டாயம் வேண்டும். இரசியாவின் கடற்படைக்கு அது மிக முக்கியமாகும். அடுத்து
இரசியாவிற்கு மேற்கு நாடுகளிடமிருந்து தன்னைப் பாதுகாக்க முழு உக்ரேனும்
அவசியமாகும். உக்ரேன் இரசியாவின் பாதுகாப்புக் கவசமாகும் என்பதாலே உக்ரேன்
இரசியாவின் எதிரிகள் வசமானால் இரசியா தனது வல்லரசு என்ற நிலையை இழக்க வேண்டும்
எனத் தெரிவிக்கப்படுகின்றது. முழு உக்ரேனையும் வன்முறை மூலம் இரசியமயமாக்க
முடியாது. இரசியா உக்ரேனின் டொனெட்ஸ்க் ஆகிய இரசியர்கள் பெரும்பான்மையினராக வாழும் மாகாணங்களை
மட்டும் தனதாக்கினால் அது இரசியாவின் பாதுகாப்பிற்கு உத்தரவாதமளிக்காது.
தொடர்ந்தும் அந்த இரு மாகாணங்களில் உள்ள பிரிவினைவாதிகளுக்கு கொடுக்கும் ஆதரவு
முழு உக்ரேனியர்களையும் இரசியாவிற்கு எதிராகத் திருப்பிக் கொண்டிருக்கின்றது.
இரசியாவிற்கு செலவு மிக்க உக்ரேன்
மேற்கு நாடுகளின்
பொருளாதாரத் தடைகளாலும் சரிந்து போன எரிபொருள் விலையாலும் இரசியப் பொருளாதாரம்
பாதிப்புக்கு உள்ளாகியது. உக்ரேனின் டொனெட்ஸ்க் ஆகிய மாகாணங்களில் உள்ள அரச ஊழியர்களின்
சம்பளத்திற்கும் ஓய்வூதியத்திற்கு மட்டும் இரசியா ஆண்டு தோறும் ஒரு பில்லியன்
அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமாகச் செலவு செய்கின்றது என ஜேர்மனிய நிறுவனம் ஒன்று
மதிப்பிட்டுள்ளது. இரசியா செய்யும் மொத்தச் செலவு ஆண்டு ஒன்றிற்கு ஆறு பில்லியன்
டொலர்களுக்கும் அதிகம் என உக்ரேனிய அரச நிறுவனம் ஒன்றின் மதிப்பீடு
தெரிவிக்கின்றது. இது சற்றி மிகைப்படுத்தப்பட்ட மதிப்பீடு எனவும்
கருதப்படுகின்றது. ஒரு முடிவில்லாத பிரச்சனைக்கு இரசியா தொடர்ந்து பெருந்தொகைப்
பணத்தை செலவு செய்ய முடியுமா?
டிரம்பின் கைகளைக்
கட்டிப்போட்ட பாராளமன்றம்
உக்ரேன் விவகாரச் சிக்கலில்
இருந்து இரசியாவைத் தப்ப வைக்கத்தான் டொனால்ட் டிரம்பை விளடிமீர் புட்டீன்
தேர்தலில் வெற்றியடைய வைத்தார் என்ற குற்றச் சாட்டு சட்ட அடிப்படையில்
அமெரிக்காவில் நிரூபிக்கும் நிலையை ஒட்டி நகர்வுகள் இப்போது அரங்கேறிக்
கொண்டிருக்கின்றன. டொனால்ட் டிரம்ப் இரசியாவிற்கு உக்ரேன் விவகாரத்தில் எந்தவித
விட்டுக் கொடுப்பும் செய்ய முடியாத அளவிற்கு அமெரிக்கப் பாராளமன்றத்தின் இரு
அவைகளிலும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
சிரியாவில் பஷார் அல்
அசாத்திற்கு எதிரான போரில் இரசியா தலையிட்டு அதை உக்ரேன் விவகாரத்தில் பேரம்
பேசும் இரசியாவின் உத்தி வெற்றியளிக்கவில்லை. இரண்டையும் தொடர்பு படுத்த மேற்கு
நாடுகள் விரும்பவில்லை. ஆனால் சிரியாவில் அசாத்தின் ஆட்சியைப் பாதுகாப்பதில்
விளாடிமீர் புட்டீன் வெற்றியடைந்தார். வட கொரியாவிலும் அமெரிக்காவிற்குப் பிரச்சனை
கொடுக்கும் வகையில் புட்டீன் செயற்படுகின்றார். ஆனால் புட்டீனின் இந்த
நடவடிக்கைகளுக்குப் பதிலடியாக அமெரிக்கா உக்ரேனுக்கு தாக்குதல் படைக்கலன்களை
வழங்கத் தொடங்கியுள்ளது. ஆரம்பத்தில் இரசியாவின் நட்புறவை அடிப்படையாக வைத்து உக்ரேனுக்கு
கடுமையான தாக்குதல் படைக்கலன்களை அமெரிக்கா வழங்காமல் இருந்தது. இரசியா
தொடர்ச்சியாக பல முனைகளில் அமெரிக்காவிற்குப் பிரச்சனை கொடுப்பதைச் சாக்காக
வைத்துக் கொண்டு இரசியாவிற்கு சவால் விடக்கூடிய படைக்கலன்கள் உக்ரேனுக்கு இப்போது
வழங்கப்படுகின்றன.
சோவியத் ஒன்றியத்தின்
உறுப்பு நாடாக இருந்தபோது சிறந்தபடைக்கலன் உற்பத்தி செய்யும் பிரதேசமாக உக்ரேன்
இருந்தது. விமானம் தாங்கிக் கப்பல்கள் சிறந்த தாக்குதல் போர்விமானங்கள் உக்ரேனில்
தயாரிக்கப்பட்டன. அணுக்குண்டு தயாரிக்கக் கூடிய தொழில்நுட்ப அறிவு
உக்ரேனியர்களிடம் இருக்கின்றது. ஆளில்லாப் போர்விமானங்களை உக்ரேனுக்கு வழங்க
அமெரிக்கா மறுத்ததனால் உக்ரேன் தானாகவே ஆளில்லாப் போர்விமானங்களை
உருவாக்கிவிட்டது. அவற்றில் மொத்தம் ஐம்பது கிலோ கொண்ட நான்கு குண்டுகளையோ அல்லது
இரு வானில் இருந்து நிலத்தை நோக்கி வீசும் ஏவுகணைகளையோ எடுத்துச் செல்லலாம். ஆமைப்புறா
என்னும் பொருள்பட உக்ரேன் மொழியில் Gorlytsa எனப் பெயரிடப்பட்டுள்ள
உக்ரேனின் ஆளில்லாப் போர் விமானங்கள் ஆயிரம் கிலோமீட்டர்களுக்கு அதிகமாக ஏழு
மணித்தியாலம் பறக்கக் கூடியவை. ஐயாயிரம் மீட்டர்களுக்கு அதிகமான உயரத்தில் பறக்கக்
கூடியவை.
இரசியாவுடன் அதிக அளவு
வர்த்தகத்தை செய்து வந்த ஜேர்மனி இரசியாவிற்கு எதிரான பொருளாதாரத் தடையால் தனது
ஏற்றுமதி வருமானத்தை இழந்துவிட்டது. உக்ரேனில் ஒரு சுமூகமான தீர்வு விரைவில்
வருவதை ஜேர்மனி பெரிதும் விரும்புகின்றது. அத்துடன் இரசியாவில் இருந்து மலிவாகவும்
இலகுவாகவும் எரிபொருளை ஜேர்மனி இறக்குமதி செய்ய விரும்புகின்றது.
உக்ரேனியப் பிரச்சனை
பொருளாதாரத் தடை, சிரியாவில் தலையீடு, அமெரிக்கத்
தேர்தலில் குறுக்கீடு, வட கொரியாவில் பிரச்சனை எனச் சுற்றி
இப்போது மூன்றாவது சுற்றுப் பேச்சு வார்த்தை வரை இழுபடுகின்றது. ஆனால் மோசமடைவது
உக்ரேனின் பொருளாதாரம்.