Monday, 31 December 2018

2018இல் உலகம் பட்டபாடும் 2019இல் படப்போவதும்


பங்குச் சந்தை வீழ்ச்சி, எரிபொருள் வீழ்ச்சி, அமெரிக்கப் படைகள் சிரியாவில் இருந்து வெளியேற்றம், இந்தோனேசியாவில் ஆழிப்பேரலை, இஸ்ரேலியப் பாராளமன்றம் கலைப்பு, எனப் பல வியப்பூட்டும் நிகழ்வுகளுடன் 2018-ம் ஆண்டு முடிவடைகின்றது. அமெரிக்க சீன வர்த்தகப் போர், இரசியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையில் இரண்டாம் பனிப்போர் ஆரம்பம் போன்ற பல பிரச்சனைகளை 2018-ம் ஆண்டு 2019இடம் விட்டுச் செல்கின்றது. 2018இல் கொதிநிலையில் இருந்த பிரதேசங்களில் முக்கியமானவை தென் சீனக் கடல், சிரியா, உக்ரேன், வெனிசுவேலா, யேமன் ஆகியவையாகும்.

மாறும் நூற்றாண்டு
இந்த நூற்றாண்டில் உலகை மாற்றிக் கொண்டிருப்பவை செயற்கை விவேகம், கணினிகள் போல் செயற்படும் கைப்பேசிகளும் அவற்றின் பாவனைகள் பரவலாகுதலும், முப்பரிமான் அச்சுக்கலை, தேசியவாதிகள் வெளிநாட்டில் உற்பத்தி செய்வதை நிறுத்தி உள்நாட்டில் உற்பத்தி செய்வதற்கு கொடுக்கும் ஊக்கம், தானாக இயங்கும் விமானங்கள் மற்றும் கார்கள், மூலப்பொருட்களை மாற்றும் விஞ்ஞானம், புதிதாக கண்டு பிடிக்கப்படும் எரிபொருட்கள் ஆகியவையாகும். இந்த நூற்றாண்டின் பெரும் சவாலாக அமைவது சூழல் பாதுகாப்பும் உலக வெப்பமாதலு ஆகும். நாடுகள் தமக்கிடையே இணைந்து அமைப்புக்களை உருவாக்கி செயற்படுவது சென்ற நூற்றாண்டில் பரவலாக நடந்தது. இந்த நூற்றாண்டில் அந்த அமைப்புக்கள் உடையும் ஆபத்தை எதிர் நோக்குகின்றன.

போர்க்களமாகும் விண்வெளி
2018-ம் ஆண்டு அமெரிக்கா விண்வெளிக்கு என ஒரு தனியான படைப்பிரிவை ஆரம்பித்தது. இரசியாவும் சீனாவும் விண்வெளியில் போர் புரிவதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளன. 2018இல் அமெரிக்காவிலும் பார்க்க சீனா அதிக கலன்களை விண்வெளிக்கு அனுப்பியுள்ளது. நீல் ஆம்ஸ்ரோங்க் அன்று சொன்னதை இப்போது இப்படி மாற்ற வேண்டும்:  “one small step for destruction; one giant leap to eliminate mankind.” 2019 ஆண்டு விண்வெளி படைத்துறை மயமாகும். ஒரு நாட்டின் செய்மதிகளை மற்ற நாடு அழிப்பது செய்மதிகள் மூலமான உளவு, வேவு, கண்காணிப்பு போன்றவற்றைச் செய்வது போன்றவை மட்டுமல்ல செய்மதிகளூடாக எதிரி நாட்டின் இணைவெளி ஊடுருவல் செய்து உட்கட்டுமானங்களையும், குடிசார் வசதிகளை நிர்மூலம் செயவதும் இனி இலகுவாக்கப்படும்.

திசை மாறும் அமெரிக்கா
2018இன் இறுதியில் சிரியாவில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறும் என டிரம்ப் அறிவித்தது அமெரிக்காவின் நட்பு நாடுகளை வியப்பில் ஆழ்த்தியது. துருக்கிய அதிபருடன் தொலைபேசியில் உரையாடிய பின்னர் டிரம்ப் இதை அறிவித்தார். அவரது பாதுகாப்புச் செயலரையே அது பதவி விலக வைத்தது.  ஒரு பெருமுதலாளி தன் உள்மன உந்தல்களுக்கு ஏற்ப முடிவுகளை எடுத்துச் செயற்படுவது போல் வெள்ளை மாளிகையில் இருந்து நாட்டையும் உலகத்தையும் ஆட்டிப்படைக்கும் டொனால்ட் டிரம்பை சமாளிக்க முயன்று தோல்வியடைந்து வெளியேறுபவர்கள் வரிசையில் அவரது பாதுகாப்புச் செயலாளர் ஜிம் மத்தீஸும் இணைந்து கொண்டார். இந்தச் செய்தியுடன் அமெரிக்காவின் 2018-ம் ஆண்டு முடிந்தது. 2019இல் டிரம்ப் அவருக்கு ஆமாம் எனத் தலை ஆட்டுபவர்களாலும் அவரது குடும்ப உறுப்பினர்களாலும் சூழப்பட்டிருப்பார். 2019இல் அவரில் அதிகம் செல்வாக்கு செலுத்துபவராக அவரது யூத மருமகன் ஜெரார்ட் குஷ்ணர் திகழ்வார் என்பது பலஸ்த்தீனியர்களுக்கு ஆபத்தான ஒரு செய்தியாகும். 2018-ம் ஆண்டு டொனால்ட் டிரம்பின் அமைச்சரவையில் இருந்து விலக்கப்பட்டவர்களில் வெளியுறவுத் துறைக்குப் பொறுப்பாக இருந்த ரெக்ஸ் ரில்லர்சனும் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருந்த எச் ஆர் மக்மஸ்ரரும் முக்கியமானவர்கள். அமெரிக்கப் பாராளமன்றதின் மூதவை டிரம்பின் குடியரசுக் கட்சியின் கட்டுப்பாட்டிலும் மக்களவை மக்களாட்சிக் கட்சியின் கட்டுப்பாட்டிலும் 2019இல் இருக்கும். மக்களவை டிரம்பிற்கு எதிரான பல விசாரணைகளை முடுக்கி விடலாம். தனது கட்சிக்குள் தனக்கான ஆதரவுத் தளத்தை டிரம்ப் தக்க வைப்பாரா என்பது கேள்விக்குறி. 2020-ம் ஆண்டு நடக்கவிருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் வெற்றிக்கு டிரம்பின் செயற்பாடுகள் பாதகமாக அமையும் என அக்கட்சியினர் உணர்ந்தால் அவர்களில் பலர் 2019இல் டிரம்பிற்கு எதிராக திரும்புவர்

அசைக்க முடியாத புட்டீன்
இரசியாவில் தொடரும் பொருளாதாரப் பிரச்சனை இரசியர்களின் வாழ்க்கைத் தரத்தைக் குறைத்துக் கொண்டே போகும். 2014 -ம் ஆண்டில் இருந்து மேற்கு நாடுகளின் பொருளாதாரத் தடையால் அதன் மொத்த தேசிய உற்பத்திக்கு ஆறு விழுக்காடு இழப்பீடு ஏற்பட்டுள்ளது. இரசியாவிடம் கணிசமான வெளிநாட்டுச் செலவாணி கையிருப்பு உண்டு. அதிபர் புட்டீனுக்கு ஆலோசனை சொல்ல சிறந்த பொருளாதார நிபுணர்கள் உள்ளனர் 2019இல் இரசியாவில் பெறுமதி சேர் வரி 18விழுக்காட்டில் இருந்து 20 விழுக்காடாக அதிகரிக்கப் படவிருக்கின்றது. ஓய்வு பெறும் வயது அதிகரிக்கப் படவிருக்கின்றது. ஆரோக்கியமற்ற உணவுகள் கீதான வரி அதிகரிக்கப்படவிருக்கின்றது. இவற்றால் இரசிய மக்கள் புட்டீனுக்கு எதிராக 2019இல் கிளர்ச்சிகள் செய்வார்கள். ஆனால் புட்டீனை ஆட்சியில் இருந்து அகற்றக் கூடிய அளவு கடுமையான கிளர்ச்சியாக இருக்காது.

பலஸ்த்தீனியர்களும் இஸ்ரேலும்
2018-ம் ஆண்டும் பலஸ்த்தீனியர்கள்குக்கு சோதனை மிகுந்த ஆண்டாகவே இருக்கும். மேற்குக் கரையில் அவர்களின் உரிமைகள் படிப்படையாக பறிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இனிப் பேச்சு வார்த்தையில் ஜெருசலத்திற்கு பலஸ்த்தீனியர்கள் உரிமை கொண்டாட முடியாது என்ற நிலைப்பாட்டை அமெரிக்காவும் இஸ்ரேலும் எடுத்துள்ளன. 1948-ம் ஆண்டு நடந்த அரபு இஸ்ரேலியப் போரின் போது அகதிகளாக்கப் பட்டவர்களும் அவர்களது வழித்தோன்றல்களும் மீண்டும் தமது நிலத்திற்கு செல்ல உரித்துடையவர்கள் என்ற தீர்மானம்-194 1948 டிசம்பர் 11-ம் திகதி ஐக்கிய நாடுகள் சபையில் நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மானத்தின் அகதிகள் என்ற வரைவிலக்கணத்தினும் பலஸ்த்தீனியர்கள் வரமாட்டார்கள் என்ற சதியை அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து உலக அரங்கில் நிலைநிறுத்த 2019-இல் செய்து முடிக்கும். தனது எதிரிகளை அடக்குவதில் வெற்றி கண்ட இஸ்ரேல் தன உள்நாட்டு அரசியலில் உள்ள குழப்ப நிலையை தெளிவாக்க முடியாத நிலையில் பாராளமன்றத்தைக் கலைத்துள்ளது. 2019 ஏப்ரல் மாதம் அங்கு பாராளமன்றத் தேர்தல் நடக்கும். சிரியாவில் இருக்கும் ஹிஸ்புல்லாவினதும் ஈரானின் நிலைகளில் இருந்து லெபனானுக்கு படைக்கலன்கள் எடுத்துச் செல்லப்படுவதைத் தடுக்க இஸ்ரேல் பல விமானத் தாக்குதல்களை சிரியாவில் செய்து வந்தது. 2018 செப்டம்பரில் இஸ்ரேலின் விமானத் தாக்குதலுக்கு எதிராக சிரியப் படைகளில் விமான எதிர்ப்பு முறைமை செயற்பட்ட போது இரசியப் போர்விமானம் ஒன்று தவறுதலாக சுட்டு வீழ்த்துப்பட்டு அதிலிருந்த 15 இரசியப் படையினர் கொல்லப்பட்டனர். அத்துடன் இரசியாவிற்கும் இஸ்ரேலுக்கும் இடையில் சிரியா தொடர்பான எழுதப்படாத ஒரு புரிந்துணர்வு உடன்படிக்கை முடிவிற்கு வந்ததது. 2018இல் சிரியாவில் அதிபர் பஷார் அல் அசத்தின் ஆட்சி உறுதி செய்யப்பட்ட நிலையில் ஹிஸ்புல்லா 2019இல் லெபனானில் தனது ஆதிக்கத்தை உறுதி செய்யும். அதை முறியடிக்க 2019இல் இஸ்ரேல் தன்னால் முடிந்த எல்லாவற்றையும் செய்யும். மேற்குக் கரையிலும் காசா நிலப்பரப்பிலும் உள்ள பலஸ்த்தீனியர்கள் அடக்கப்பட்ட நிலையில் இஸ்ரேல் 2019இல் ஹிஸ்புல்லாவை அடக்குவதற்காக பல நடவடிக்கைகளைச் செய்யும்.

மீண்டும் கால்வாரப்படும் குர்திஷ் மக்கள்
22 நாடுகளைக் கொண்ட மேற்காசியாவில் நான்காவது பெரிய இனமான குர்திஷ் மக்கள் 2018இல் மீண்டும் அமெரிக்காவால் கால்வாரப்பட்டுள்ளார்கள். தொடர்ந்து தனிநாட்டுக்காகவும் இனக்கொலைக்கு எதிராகவும் போராடிக் கொண்டிருக்கும் குர்திஷ் மக்களை மீண்டும் அமெரிக்கா தன் தேவைக்காகப் பாவித்து விட்டு தூக்கி எறிந்துவிட்டது. ஈராக்கில் உள்ள குர்திஷ் மக்களுக்கும் ஒரு அதிகாரப் பரவலாக்கம் பெற்ற ஒரு பிரதேசம் உண்டு. ஆனால் சிரியாவில் உள்ள வை.பி.ஜி போராளிக் குழு 2019இல் பெரும் ஆபத்தை எதிர்நோக்குகின்றது. அவர்கள் மீது துருக்கி போர் தொடுக்கலாம். அவர்களுக்கு எதிராக சிரிய அரச படைகளும் தாக்குதல் செய்து அவர்களின் கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசத்தில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டலாம். அவர்கள் எதிர்த்து போரடி பெரும் இழப்பைச் சந்திக்க வேண்டும் அல்லது மீண்டும் மலைகளுக்குள் பதுங்க வேண்டும்.

ஈடுகொடுத்து நிற்கும் ஈரான்
ஈரானுக்கு எதிராக இஸ்ரேலுடன் இணைந்து அமெரிக்கா பல நகர்வுகளை மேற்கொண்டது. ஈரானுடன் அமெரிக்காவும் மற்ற நான்கு வல்லரசுகளும் ஜேர்மனியும் செய்த யூரேனியப் பதப்படுத்தல் தொடர்பான ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறி ஈரானுக்கு எதிராக பொருளாதாரத் தடைகளை மேற்கொண்டது. உலகச் சந்தையில் எரிபொருள் விலையை வீழ்ச்சியடையச் செய்ய சவுதி அரேபியாவும் அமெரிக்காவும் செய்யும் நடவடிக்கைக்கள் இரசியாவிற்கும் ஈரானுக்கும் எதிரான நகர்வே. 20180ம் ஆண்டு பல தடவைகள் ஈரானில் அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் அமெரிக்காவினதும் இஸ்ரேலினிதும் திரைமறைவுச் சதிகள் அல்ல என்பதை மறுக்க முடியுமா? 2019-ம் ஆண்டு ஈரானிய மக்கள் பெரும் பொருளாதாரச் சுமையை தாங்கிக் கொள்ள வேண்டியிருக்கும். ஈரானின் பொருளாதாரத்தை சீனா சுரண்டுவது 2019இல் அதிகரிக்கும். இரசியா ஈரானில் முதலீடு செய்வதுடன் படைத்துறை ஒத்துழைப்பையும் அதிகரிக்கும். ஈரானுக்கு அமெரிக்கா, இஸ்ரேல், சவுதி அரேபியா போன்ற நாடுகள் கொடுக்கும் நெருக்கடிகளால் ஈரான் பல பிரச்சனைகளை எதிர் கொள்ள வேண்டி வந்தாலும் அது அசைக்க முடியாத நாடு என்பது 2019இல் உறுதி செய்யப்படும்.

அமெரிக்க சீன வர்த்தகப்போர்.
அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையில் 2018இல் உருவாகிய வர்த்தகப் போர் இரு நாட்டுப் பொருளாதாரங்களிலும் பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றது. உலகின் முன்னணி இறக்குமதி நாட்டுக்கும் முன்னணி ஏற்றுமதி நாட்டுக்கும் இடையில் தொடங்கிய வர்த்தகப் போர் 2019இலும் தொடரும் ஆனால் சில விட்டுக்கொடுப்புக்களை செய்து இரு நாடுகளும் போரைத் தணிக்கும் ஆனால் போர் முடிவிற்கு வராது. ஒரு நாட்டுப் பொருட்களின் இறக்குமதி மீது மற்ற நாடு வரி விதிப்பது தொடரும் ஆனால் அதிகரிக்கப்படாமல் இருக்கும். சிறிய குறைப்புக்கள் செய்யப்படலாம்.

பாக்கிஸ்த்தானின் கள்ளத் தொடர்புகள்
ஆப்கானிஸ்த்தானில் உருவான இஸ்லாமியத் தீவிரவாதத்தால் பாக்கிஸ்த்தான் 77,000 படையினரையும் 107பில்லியன் டொலர்களையும் இழந்துள்ளது. அதற்கான நன்றியாக பாக்கிஸ்த்தானுக்கான நிதி உதவியை அமெரிக்கா நிறுத்திவிட்டது என பாக்கிஸ்த்தான் அதிருப்தியடைந்துள்ளது. பாக்கிஸ்த்தானுக்கு அமெரிக்கா செய்த நிதி உதவிக்கு பதிலாக தமக்குக் கிடைத்ததெல்லாம் பொய்யும் ஏமாற்றமும்தான் என 2018இல் அமெரிக்க அதிபர் ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார். அமெரிக்க பாக்கிஸ்த்தானிய உறவு ஆப்க்கானிஸ்த்தானையோ அல்லது இஸ்லாமியத் தீவிரவாதத்தையோ மட்டும் கொண்டது அல்ல. இந்திய எழுச்சியை தடுப்பதற்கும் பயன்பட்டது. ஆனால் இப்போது சீன எழுச்சியை தடுக்க அமெரிக்காவிற்கு இந்தியா அவசியம் தேவைப்படுகின்றது. 208இல் மோசமாக இருந்த  அமெரிக்க பாக்கிஸ்த்தானிய உறவு 2019இல் மேலும் மோசமடையும். ஆனால் முறிவடையாது.
இந்தியாவில் தேர்தலோ தேர்தல்!
இந்தியாவின் பாராளமன்றத்தின் மக்களவைக்கான தேர்தல் 2019 மே மாதம் நடக்கவிருக்கின்றது. அதற்கு முன்னோடியாக மத்தியப் பிரதேசம், ராஜஸ்த்தான், சதிஷ்கர், மிஸ்ரோம், தெலங்கானா ஆகிய ஐந்து மாநிலங்களுக்கு நடந்த தேர்தலில் மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாரதிய ஜனதாக் கட்சி படுதோல்வியைச் சந்தித்தது. காங்கிரசுக் கட்சிக்கு செல்வாக்கு அதிகரிப்பதாக மாநிலக் கட்சிகள் உணர்ந்தால் அவை காங்கிரசுடன் கூட்டணி அமைக்க விரும்பலாம். தெலங்கானாவில் வெற்றி பெற்ற கே சந்திரசெகர் ராவ் பிற மாநிலங்களுக்குப் பயணம் செய்து மூன்றாம் அணி ஒன்றை அமைப்பதற்கான முயற்ச்சியில் ஈடுபட்டார். ஏற்கனவே இப்படியான ஒரு முயற்சியில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பனர்ஜீ ஈடுபட்டுள்ளார். மூன்றாம் அணி என்பது காங்கிரசின் வெற்றி வாய்ப்பைக் குறைப்பதற்கான ஒன்றே. சரக்கு மற்றும் சேவை வரியும் பண நோட்டுக்களைச் செல்லுபடியற்றதாக்கியதும் ஆளும் பாரதிய ஜனதாக் கட்சியின் செல்வாக்கை மக்கள் மத்தியில் சரித்தது. சரக்கு மற்றும் சேவை வரிவிதிப்பில் மக்கள் விரும்பத்தக்க சில மாற்றங்களை பாஜக அரசு கொண்டு வரவிருக்கின்றது. அத்துடன் உலகச் சந்தையில் சரியும் எரிபொருள் விலையும் ஆளும் கட்சிக்கு சாதகமாக அமையவிருக்கின்றது. உலகச் சந்தையில் எரிபொருள் விலை தாழ் நிலையில் 2019 மே மாதம் வரை இருக்க வேண்டும். பன்னாட்டு நாணய நிதியம் இந்தியப் பொருளாதாரத்தின் எதிர்காலம் பற்றி சாதகமான அறிக்கையை வெளியிட்டதுடன் 2019-ம் ஆண்டு இந்தியப் பொருளாதாரத்தின் மொத்த உற்பத்தி பிரித்தானியாவிலும் பார்க்க அதிகரித்து இந்தியா உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாக உருவெடுக்கும் என எதிர்வு கூறியுள்ளது
பிரச்சனைகளைச் சமாளிக்கும் சீனா
2018இல் சீனா பல பிரச்சனைகளை எதிர் கொள்ள வேண்டியிருந்தது. ஏற்றுமதியில் தங்கியிருக்கும் பொருளாதாரத்தை சீர்திருத்த எடுக்கும் முயற்ச்சிகளுக்கான பயன்கள் மிக மெதுவாகவே பயன் தருகின்றன. தொழில்நுட்பத்திலும் படைத்துறையிலும் சீனாவின் மேம்பாடு 2019இலும் சிறப்பானதாகவே இருக்கும். தென் சீனக் கடலில் சீனாவை அசைப்பது கடினம் என உலகம் உணர்ந்து கொள்ளும் நிலை 2019இல் உருவாகும். அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு மறைமுக எதிர்ப்புக்கள் அதிகரிக்கும். சீனாவும் இரசியாவும் பல துறைகளில் ஒத்துழைக்க வேண்டிய நிர்ப்பந்தத்தை இரு நாடுள் மீதும் அவற்றின் எதிரிகளின் வளர்ச்சியும் சதியும் அதிகரிக்கும். சீனாவின் ஒரு வலயம் ஒரு பாதை என அழைக்கப்படும் புதிய பட்டுப்பாதைத் திட்டத்திற்கு எதிரான பரப்புரைகளை மேற்கு நாடுகளால் தீவிரமாக மேற்கொள்ளும்.
சலங்கை அறுந்த இலங்கை.
அடிபட்ட புலியாக மஹிந்த 2018இன் இறுதிப் பகுதியில் மஹிந்த ராஜபக்சவும் மைத்திரிபால சிரிசேனாவும் இணைந்து இலங்கை கலங்கடித்தனர். மஹிந்த தலைமை அமைச்சராக தொடர முடியாமல் போனது இருவருக்கும் அவமானகரமானதாகும். 2009-ம் ஆண்டின் பின்னர் உலக அரங்கில் ஒரு மோசமான தலைக்குனிவு இலங்கைக்கு 2018இல் ஏற்பட்டது. 2019இல் மஹிந்தவும் மைத்திரியும் ரணிலின் ஆட்சிக்கு 2019இல் தொல்லைகள் கொடுக்கலாம் ஆனால் தொலைக்க முடியாது. இதுவரை காலமும் சராசரியாக 4.5 விழுக்காடு பொருளாதார வளர்ச்சியைக் கண்ட இலங்கைப் பொருளாதாரம் தற்போது மூன்று விழுக்காடு மட்டுமே வளர்கின்றது.
இணையவெளியின் ஆண்டு
2018-ம் ஆண்டு இணைய வெளியின் ஆண்டாக இருந்தது. 2019-ம் அப்படியே தொடரும். 2019இல் இணையவெளிப் பாதுகாப்பில் எல்லோரும் அதிக கவனம் செலுத்துவர். சமுகவலைத்தளங்கள் தம்மீது மக்களுக்கு ஏற்பட்ட அவநம்பிக்கையைக் களைய பல விதங்களில் முயற்ச்சி செய்யும்.
2018இன் சோதனைகள் 2019இலும் தொடரும் வேதனைகள் தீராது.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...