1979-ம் ஆண்டில் இருந்தே அமெரிக்க அதிபர்கள் ஈரானுக்கு எதிராக கடுமையான கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். ஈரானுக்கு எதிரான படைநடவடிக்கை பற்றி பல அதிபர்கள் கருத்து வெளியிட்டதுண்டு. ஜிம்மி கார்ட்டரின் தோல்வியில் முடிவடைந்த தாக்குதல் முயற்ச்சிக்குப் பின்னர் யாரும் ஈரானுக்கு எதிராகத் தாக்குதல் செய்ய முன்வரவில்லை. ஈரானிக்கு எதிராக அமெரிக்காவின் புதிய அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவிக்கும் கருத்துக்கள் புதியவை அல்ல ஆனால் சற்றுத் தீவிரமானவை. ஈரானுக்கு எதிரான செயற்பாட்டில் அணுக்குண்டு உட்பட எம்மிடம் இருக்கும் எல்லாத் தெரிவையும் பாவிக்கத் தயங்க மாட்டோம் என்பது டிரம்பின் புதிய நிர்வாகத்தின் மிரட்டலாக இருக்கின்றது.
2017இன் ஆரம்பபத்தில் ஈரான் மேற்கொண்ட ஏவுகணைப் பரிசோதனைகள் ஈரானுடன் செய்து கொண்ட உடன்பாட்டுக்கும் ஐக்கிய நாடுகள் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கும் முரணானது என்பது டிரம்பின் நிலைப்பாடாக இருக்கின்றது. ஈரானின் ஏவுகணைப் பரிசோதனை மட்டுமல்ல ஈரானின் ஆதரவு பெற்ற யேமன் தீவிரவாதிகள் சவுதி அரேபியாவின் கப்பல் மீது தாக்குதல் நடத்தியதும் அமெரிக்காவை ஆத்திரப்படுத்தியுள்ளது. சிரியாவில் அமெரிக்காவின் கேந்திரோபாய நோக்கங்கள் பின்னடைவைச் சந்திக்க வைத்ததில் ஈரான் பெரும் பங்கு வகுத்தது.
ஈரானை அமெரிக்கா எதிர்ப்பதற்கான முக்கிய காரணங்கள்:
1. இஸ்ரேலை உலக வரைபடத்தில் இருந்து அழிக்க வேண்டும் என்ற ஈரானின் கொள்கை.
2. இஸ்லாமியத் தீவிரவாதிகளுக்கு ஈரான் ஆதரவு வழங்குவது.
3. ஈரான் தான் ஒரு வல்லரசாக வேண்டும் என்ற திட்டத்துடன் இருப்பது.
4. சவுதி அரேபியாவின் மன்னர் குடும்பத்தையும் அதன் ஆட்சி முறைமையும் ஈரான் எதிர்க்கின்றது.
5. அமெரிக்கா இறக்கட்டும் என்ற வாசகத்தை ஈரான் அடிக்கடி சொல்வது.
ஈரான் பயங்கரவாதத்தை ஏற்றுமதி செய்கிறதாம்
சியா முஸ்லிம் நாடான ஈரான் சுனி முஸ்லிம் அமைப்புக்களான அல் கெய்தா கமாஸ் ஆகியவற்றுடன் தொடர்பு வைத்து பல உதவிகளைச் செய்து வருகின்றது. லெபனானில் செயற்படும் சியா முஸ்லிம் அமைப்பான ஹிஸ்புல்லா ஈரானின் செல்லப் பிள்ளையாகும். உலகெங்கு இஸ்லாமியத் தீவிரவாதத்தை ஏற்றுமதி செய்யும் நாடாக ஈரான் செயற்படுகின்றது என்பது அமெரிக்கா அடிக்கடி வைக்கும் குற்றச் சாட்டாகும்.
2001-ம் ஆண்டில் இருந்து ஒசாமா பின் லாடனின் ஒரு மனைவியான கைரியா சபரும் அவர் மகன் ஹம்சா பின் லாடனும் ஈரானிலேயே தங்கி இருக்கின்றனர். ஹம்சா தற்போது அல் கெய்தாவின் முக்கிய தலைவராக உருவெடுத்துள்ளார்.
ஹோமஸ் நீரிணை
ஜோர்ஜ் டபிளியூ புஷ் ஈரானுக்கு எதிரான ஒரு போரைத்
2002-ம் ஆண்டு திட்டமிட்டார். கணினிகளில் செய்யப்பட்ட ஓப்புச்செயலாக்கிய போரில் (simulated war) அமெரிக்காவால் ஈரானுக்கு எதிரான போரில் வெல்ல முடியாது எனக் காணப்பட்டது. அத்துடன் நாள் ஒன்றிற்கு 17மில்லியன் பீப்பாய் மசகு எண்ணெய் அனுப்பப்படும் ஹோமஸ் நீரிணை மூடப்படும் நிலை உருவாகும் என்பது மட்டுமல்ல உலகெங்கும் உள்ள அமெரிக்க நிலைகள் மீது ஈரானுக்கு ஆதரவான இஸ்லாமியப் போராளிகள் தாக்குதல் நடத்தலாம் எனவும் அஞ்சப்பட்டது. அமெரிக்காவின் மேற்காசியப் படைத்தளம் இருக்கும் பாஹ்ரேய்ன் ஒரு சுனி முஸ்லிம் நாடாகும். அங்கு ஈரான் பிரச்சனையை உருவாக்கலாம் என்பதும் கருத்தில் கொள்ளப்பட்டது. இதன் விளைவாக பிரித்தானியாவின் சதம் ஹவுஸ் ஆய்வு மையம் மேற்காசிய எரிபொருள் மீதான தங்கியிருப்பை ஆபிரிக்காவில் உள்ள எரிபொருள் வளங்களை பயன்படுத்துவதன் மூலம் குறைக்கலாம் எனக் கண்டறிந்தது. அதனால் நைஜீரியாவிலும் யேமனிலும் எரிபொருள் இருப்புக்கள் பல மேற்கு நாடுகளின் உதவியுடன் கண்டு பிடிக்கப்பட்டு அங்கு எரிபொருள் உற்பத்திகள் செய்யப்பட்டன. அமெரிக்க ஆய்வு நிறுவனம் ஈரான் மீது இணையவெளித் தாக்குதல்கள் செய்வதையும் ஈரானிய விஞ்ஞானிகளை கொலை செய்வதையும் முன் மொழிந்ததாகவும் கூறப்படுகின்றது.
இன்னும் ஒரு திருகுப் புள்ளி
உலக எரிபொருள் விநியோகத்தின் திருகுப் புள்ளிகளுள் ஒன்றாக பப் அல் மண்டெப் (Bab Al-Mandeb) இருக்கின்றது. இது செங்கடலையும் ஏடன் வளைகுடாவை இணைக்கும் நீரிணையாகும். தென் யேமனுக்கும் எதியோப்பியாவிற்கும் இடையில் இருக்கும் இந்த நீரிணையை யார் கட்டுப்படுத்துவது என்ற போட்டி ஈரானுக்கும் சவுதி அரேபியாவிற்கும் இடையில் நிலவுகின்றது. இரண்டு நாடுகளும் யேமனில் உள்ள சியா சுனி முஸ்லிம்களை மோதவிட்டு தமது ஆதிக்கத்தை நிலைநாட்ட முயல்கின்றது. அமெரிக்கப் படைத்துறை நிபுணர்கள் சவுதி அரேபியா செய்யும் போர்க்குற்றங்களுக்கு பின்புல ஆதரவு வழங்கிக் கொண்டிருக்கின்றனர். ஈரானை எப்படியாவது இந்தப் பிராந்தியத்தில் இருந்து விரட்ட வேண்டும் என அமெரிக்கா கங்கணம் கட்டிக் கொண்டிருக்கின்றது. அல் கெய்தா மற்றும் ஐ எஸ் அமைப்புக்களின் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் எனப் பெயரிட்டு இந்த புவிசார் அரசியல் போட்டி நடக்கின்றது.
தொடங்கியது டுவிட்டர் போர்
ஈரானின் எறியியலுக்குரிய ஏவுகணைகள் (Ballistic
Missiles) பரிசோதனையை 2017 ஜனவரி 29-ம் திகதி செய்திருந்தது. அதைத் தொடர்ந்து ஈரான் நெருப்புடன் விளையாடுவதாக டொனால்ட் டிரம்ப் தனது டுவிட்டரில் பதிவிட்டிருந்தார். டிரம்பின் ஆலோசகர்கள் ஈரான் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் தீர்மான 2231ஐ மீறியதாகத் தெரிவித்ததுடன் ஈரானுக்கு தாம் அறிவுறுத்தல் விடுவதாகவும் மிரட்டினார். ஈரானியப் வெளியுறவுத்துறை அமைச்சர் மொஹமட் ஜவாட் ஜரீஃப் ஈரானுக்கு தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் உரிமை உண்டு என்றும் அமெரிக்க அச்சுறுத்தலுக்கு ஈரான் அசையாது என்றும் தனது டுவிட்டரில் பதிவிட்டார்.
எங்ககிட்ட வச்சுக்காதே என்னும் ஈரான்
ஈரானின் உச்சத் தலைவர் அயத்துல்லா அல் கமெனியின் வெளியுறவுத் துறை ஆலோசகர் அலி அக்பர் வெலயாட்டி அல் ஜசீராவிற்கு வழங்கிய பேட்டியில் ஈரான் மேற்காசியா தொடர்பான தனது நிலைப்பாட்டை மாற்றப் போவதில்லை அதனால் அமெரிக்கா தனது மூட்டை முடிச்சுக்களுடன் இந்தப் பிராந்தியத்தில் இருந்து வெளியேற வேண்டும் என்றார். மேலும் அவர் ஈரானின் ஏவுகணைத் திட்டத்தை நிறுத்த அமெரிக்கா எடுக்கும் முயற்ச்சிகள் ஒரு மோசமான கற்பனையாகும். எமது புரட்சிக்குப் பின்னர் அமெரிக்காவால் எம்மை ஏதும் செய்ய முடியாமல் போனது என்றும் சொனார். வெலயாட்டி. ஈரானுக்கு எதிரான அமெரிக்க மிரட்டல் நீண்ட காலமாகத் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது நாம் அஞ்சப்போவதில்லை என மார்தட்டினார் வெலயாட்டி. 2017 பெப்ரவரி 10-ம் திகதி ஈரானிய மதவாதப் புரட்சியின் 38-ம் ஆண்டு நிறைவு நிகழ்வின் போது இலட்சக் கணக்கான ஈரானியர்கள் உச்சத் தலைவரின் தலைமையின் கீழ் கூடி அமெரிக்கா இறக்கட்டும் எனக் குரலெழுப்பினர்.
தீர்மானத்துக்கும் ஆன்மா உண்டாம்
ஈரான் தொடர்பாக 2010-ம் ஆண்டு ஐநா
பாதுகாப்புச் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்-1929இல் சொல்லப்பட்ட வாசகங்களில் ஒன்று
“Iran
shall not undertake any activity” எனவும்; 2015-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானம்-2231இல் உள்ள வாசகம்
“Iran
is called upon not to undertake any activity related to ballistic
missiles” எனவும் இருக்கின்றன. இவற்றில் shall not என்பது உத்தரவு எனவும், called upon என்பது அறிவுரை எனவும் நிபுணர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். 2015-ம் ஆண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட முன்னர் ஈரான் ஏவுகணைப் பரிசோதனையை மேற்கொண்டிருந்தால் அது தீர்மானத்தை மீறியதாகும். 2010-ம் ஆண்டு செய்த தீர்மானத்தை 2015-ம் ஆண்டு செய்த தீர்மானம் பிரதியீடு செய்ததால் அது இப்போது நடைமுறையில் இல்லாததாகக் கருதப்படுகின்றது. ஈரான் 2017 ஜனவரியில் செய்த எவுகணைப் பரிசோதனை ஐநா பாதுகாப்புச் சபையின் 2015 தீர்மானம்-2231ஐ மீறவில்லை. காரணம் அது ஈரானின் ஏவுகணைப் பரிசோதனையைத் தடை செய்யவில்லை. செய்ய வேண்டாம் என அறிவுரை மட்டும் சொல்கின்றது. 2010-ம் ஆண்டின் தீர்மானத்தில் இருந்த ஏவுகணைப் பரிசோதனையைத் தடைசெய்யும் வாசகம் 2015-ம் ஆண்டுத் தீர்மானத்திலும் இருப்பதை அமெரிக்கா வலியுறுத்தியது ஆனால் தீர்மானம் தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்திய இரசியா, சீனா, பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி ஆகிய நாடுகள் அதற்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. இதனால் பராக் ஒபாமா அமெரிக்காவில் உள்ள வலதுசாரிகளின் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானார். ஈரானின் ஏவுகணைப் பரிசோதனை ஐநா தீர்மானத்தின் ஆன்மாவை அழித்துவிட்டது என்கின்றது அமெரிக்கா. ஈரான் தான் பரிசோதித்த ஏவுகணைகள் அணுக்குண்டுகளைத் தாங்கிச் செல்லவில்லை என்கின்றது. ஆனால் ஈரான் அணுக்குண்டுகளைத் தாங்கிச் செல்லக் கூடிய ஏவுகணைகளைப் பரிசோதிக்கக் கூடாது என்கின்றது அமெரிக்கா.
ஒபாமாவும் ஈரானும்
அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவைப் பொறுத்தவரை அவர் ஈரானுடன் ஒரு
போரை விரும்பவில்லை. ஈரானை அணுக்குண்டு தயாரிப்பதில் இருந்து தடுக்க அவர் முன் இருந்த
தெரிவுகள்: 1. இஸ்ரேல் ஈரானிய அணு ஆய்வு நிலையங்கள் மீது தாக்குதல் நடத்த வேண்டும்.
2. அமெரிக்கா ஈரானிய அணு ஆய்வு நிலையங்கள் மீது தாக்குதல் நடத்த வேண்டும். 3 அல்லது
இரு நாடுகளும் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்த வேண்டும். ஒபாமா இதில் எதையும் விரும்பவில்லை. இது அமெரிக்காவின் மிக நெருக்கமாக மிக நீண்டகால
நட்பு நாடுகளாக இருக்கும் இஸ்ரேலையும் சவுதி அரேபியாவையும் கடும் அதிருப்திக்கு உள்ளாக்கி
இருந்தது. ஈரானுடனான பேச்சு வார்ததையை விரும்பாதவர்கள் இந்தப் பேச்சு வார்த்தையை கரடியுடன்
நடனமாடுவதற்கு ஒப்பிட்டிருந்தனர். ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான பிரச்சனை
இன்னும் பல ஆண்டுகளுக்குத் தொடரும் என அவர்கள் எச்சரித்திருந்தனர். ஈரானுடனான பிரச்சனை
வெறும் யூரேனியம் பதப்படுத்தல் பிரச்சனை மட்டுமல்ல. ஈரானின் ஆதரவுடன் செயற்படும் தீவிரவாதக்
குழுக்கள் உலக அமைதிக்குப் பெரும் அச்சுறுத்தல்கள் எனவும் அவர்கள் எச்சரித்தார்கள்.
அமெரிக்கா இரசியா சீனா பிரித்தானியா பிரான்ஸ் ஆகிய ஐந்து வல்லரசு நாடுகளும் ஜேர்மனியும்
இணைந்து ஒரு மிக நீண்ட பேச்சு வார்த்தையை நடத்தி ஈரானின் யூரேனியம் பதப்படுத்தலை மட்டுப்படுத்தியிருந்தன.
ஆனால் ஈரானுடன் எட்டப்பட்ட உடன்பாட்டையிட்டு சவுதி அரேபியாவும் இஸ்ரேலும் அதிருப்தியை
வெளிவிட்டன. பராக் ஒபாமா ஈரானின் உச்சத் தலைவர் கமெனிக்கு ஐ எஸ் அமைப்பினருக்கு எதிரான
போரில் ஆதரவு தரும்படி இரகசியக் கடிதம் ஒன்றையும் அனுப்பியதாக உறுதிப்படுத்தப்படாத
செய்திகளும் வெளிவந்திருந்தன.
இரசியாவின் பங்கு
ஈரானின் தாக்குதல் வீச்சுக்குள் இரசியா இருப்பதால் ஈரான் ஒரு அணுக்குண்டு தயாரிப்பதை
இரசிய விரும்பாது. அதை அனுமதிக்கவும் மாட்டாது. ஆனால் மத்திய தரைக்கடலில் படைத்துறைச்
சமநிலையைப் பேணுவதற்கும் அமெரிக்காவிற்குப் பிரச்சனை கொடுப்பதற்கும் இரசிய ஈரானிய உறவு
இரசியாவிற்கு தேவையான ஒன்று என்பது சிரியாவில் நிறுவப்பட்டுள்ளது. இரசியாவின் தற்போதைய
படைவலு நிலையில் அதற்கு ஈரானின் நட்பு அவசியமாகும். ஈரானுக்கு எதிரான ஒரு போர் நடக்கும்
போது இரசியா இரண்டு வகையில் பயன்பெறும். முதலாவது போரால் உலகச் சந்தையில் எரிபொருள்
விலை அதிகரிக்கும். அதனால் இரசியாவின் எரிபொருள் ஏற்றுமதி வருமானம் அதிகரிக்கும். போர்
செய்யும் ஈரான் இரசியாவிடமிருந்து படைக்கலன்களை வாங்கும்.
சீனாவும் ஈரானும்.
சீனா ஈரானில் பெரு முதலீடுகளைச் செய்துள்ளது. ஒரு சீனாத் தொழிலதிபர் மட்டும் பொருளாதாரத்
தடையின் போது ஈரானில் 200மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான முதலீட்டை ஈரானில்
செய்திருந்தார். நாம் ஈரானில் இருந்து விலகி இருந்த போது சீனர்கள் அந்த இடைவெளியை நன்கு
நிரப்பி விட்டார்கள். ஈரானுடனான வர்த்தகத்தைப் பொறுத்த வரை நாம் பின் தங்கி விட்டோம்
என்றார் ஒரு மேற்கு ஐரோப்பிய அரசுறவியலாளர். பொருளாதாரத் தடையின்போது ஈரானின் மிகப்பெரிய
வர்த்தகப் பங்காளியாகவும் ஈரானில் மிக அதிக அளவு முதலீடு செய்யும் நாடாகவும் சீனா மாறிவிட்டது.
அமெரிக்காவின் தண்டனைகளில் இருந்து தப்ப இதற்கென தனியாக புது வங்கிகள் சீனாவால் உருவாக்கப்
பட்டன. இரண்டு பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான தொடருந்துப் பாதை சீனாவால் ஈரானில்
நிர்மாணிக்கப்பட்டது. ஈரானிற்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்
பட்டபோது அதை தனது அதிகாரத்தை(வீட்டோ) பாவித்து இரத்துச் செய்யாததால் ஈரான் சற்று அதிருப்தி
அடைந்திருந்தது. அத்துடன் ஈரானுடன் நடந்த யூரேனியம் பதப்படுத்துவதை நிறுத்தக் கோரும்
பேச்சு வார்த்தையில் சீனா அமெரிக்காவுடன் ஓத்துழைத்திருந்தது. ஆனாலும் பொருளாதாரத்
தடையால் வந்த இடைவெளியை சீனா தந்திரோபாயமாக தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டது.
ஈரானியத் தலைநகர் ரெஹ்ரானில் நிலத்தில் இருந்து உயர்த்தப் பட்ட பெருந்தெரு
(elevated highway), நிலத்திற்குக் கீழான தொடருந்துச்
சேவை போன்றவற்றை சீனா நிர்ம்ணித்தது. போக்குவரத்திற்குத் தேவையான தொடருந்து வண்டிகளும்
சீனாவில் இருந்து ஏற்றுமதி செய்யப் பட்டன. ஈரானில் ஒரு போர் நடந்து தனது
முதலீடுகள் பாதிக்கப்படுவதை சீனா விரும்பாது.
ஈரானிய மதவாதப் புரட்சி நடந்ததில் இருந்து அந்த மதவாத அரசைக்
கவிழ்க்க அமெரிக்கா தொடர் முயற்ச்சிகள் பல எடுத்தது. ஈரானுக்கு எதிரனா சதாம் ஹுசேய்னின் எட்டு ஆண்டுப் போரில் அமெரிக்கா மறைமுகமாக உருவாக்கியிருந்தது. ஈரானில் உள்ள குர்திஷ் மக்களையும் கிளர்ச்சி செய்ய திரைமறைவு ஆதரவு வழங்கியது. இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து பல இணையவெளித் தாக்குதல்களை ஈரானுக்கு எதிராக நடத்தின. ஈரானில் உல்ல பலுச்
இனக்குழுமத்தினரின் தீவிரவாத நடவடிக்கைகளுக்கு பாக்கிஸ்த்தானில் உள்ள பலுச் போராளிக்
குழுக்களூடாக அமெரிக்கா உதவிகள் பல செய்தது. ஈரானுக்கு எதிரான பொருளாதாரத் தடை எதிர்பார்த்த
அளவிற்கு ஈரானைப் பணிய வைக்கவில்லை. ஈரானுக்கு எதிராக ஈராக் இருந்த போதே ஈரானை அமெரிக்காவால்
ஒன்றும் செய்ய முடியவில்லை. இப்போது ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் நிலைப்பாட்டில் தான் சம்பந்தப்பட விரும்பவில்லை என ஈராக் அறிவித்துள்ள நிலையில் ஈரானை அமெரிக்காவால் அடக்க முடியாது.
உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க: ulaham@gmx.com
உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க: ulaham@gmx.com