ஒரு நாடு ஆக்கிரமிக்க இலகுவானதா இல்லையா என்பது
அதன் படைவலுவில் மட்டும் தங்கியில்லை. அதன் பூகோள அமைப்பு, நிலப்பரப்பு, காலநிலை,
அதன் நட்பு நாடுகள் போன்றவையும் முக்கியமானதாகும். நேட்டோவில்
புதிதாக இணைந்துள்ள லித்துவேனியா, லத்வியா, எஸ்தோனியா ஆகிய மூன்று நாடுகளையும் இரசியாவால் அறுபது
மணித்தியாலங்களுக்குள் ஆக்கிரமிக்க முடியும். ஆனால் மற்ற நேட்டோ நாடுகள் அந்த
ஆக்கிரமிப்பின் பின்னர் இரசியாவுக்கு எதிராக எடுக்கக் கூடிய அரசுறவியல் மற்றும்
பொருளாதார் நடவடிக்கைகள் இரசியாவைத் தடுத்துள்ளன.
சுவிற்சலாந்து – பல
வழிகளில் பாதுகாப்பு
சுவிற்சலாந்து தனது இயற்கை
அமைப்புடன் பல செயற்கைக் கட்டமைப்புக்களைச் செய்தது மட்டுமல்லாமல் நெடுங்காலமாக
நடுநிலை நாடாக இருந்து கொண்டு ஆக்கிரமிக்கப்பட முடியாத நிலையில் இருக்கின்றது. பல
மலைத் தொடர்களால் சூழப்பட்டுள்ள சுவிஸ் அந்த மலைகளுக்குள் பெரும் படையணி தங்கி
இருந்து தாக்குதல் செய்யக் கூடிய குகைகளை அமைத்துள்ளது. அந்த மலைகளின்
நுழைவாசல்கள் ஆக்கிரமிப்பாளர்கள் வரும் போது வெடித்துச் சிதறக் கூடிய இரகசிய
ஏற்பாடுகளையும் அது செய்துள்ளது. பாலங்களும் பெரும் தெருக்களும் வெடித்துச்
சிதறக்கூடிய வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இப்படி மூவாயிரம் இடங்கள்
வெடித்துச் சிதறக்குடியவையாக உள்ளன என சுவிஸ் அரசு சொன்னாலும் உண்மையில் ஆறாயிரம்
இடங்கள் வெடித்துச் சிதறக் கூடியவை என நம்பப்படுகின்றது. உலகிலேயே முதலில் எல்லோருக்கும்
படைத்துறைப் பயிற்ச்சி வழங்கி அவர்கள் தேவை ஏற்படும் போது கட்டாயமாக படைச்
சேவைக்கு அழைக்கும் சட்டம் சுவிஸில் உண்டு. இதனால் ஒன்றரை இலட்சம் நிரந்தரப்
படையினரைக் கொண்ட சுவிஸில் தேவை ஏற்படும் போது நாற்பது இலட்சம் படையினர் போர்
முனையில் செயற்படுவர். சுவிஸ் சிறந்த முறையில் ஆட்சி செய்யப்படும் நாடாகும்.
உலகிலேயே அதிகாரப் பரவலாக்கம் உச்ச நிலையில் உள்ள நாடு சுவிஸ். அதன் நடுநிலைத்
தன்மையால் பல உலக அமைப்புக்கள் சுவிஸ்ஸில் நிலை கொண்டுள்ளன. அது சுவிஸ் ஒரு சமாதான
நாடாக இருக்க மேலும் உதவுகின்றது.
ஐஸ்லாந்து
மலைகள் எரிமலைக்குழம்பு, பனிப்பாறைகள் ஆகியவற்றால் சூழப்பட்ட
ஐஸ்லாந்தும் ஆக்கிரமிக்கப்பட முடியாத ஒரு நாடாகும். அத்துடன் அங்கு பெரிய
துறைமுகங்கள் ஏதும் இல்லை. அதனால் எதிரி நாட்டுப் படைகள் போய் தரையிறங்க முடியாது.
உலகிலேயே அமைதியான நாடாகாக் கருதப்படும் ஐஸ்லாந்து தனது கரையோரப் பகுதியை கடுமையான
கண்காணிப்புடனும் பாதுகாப்புடனும் பேணிவருகின்றது.
நியூசிலாந்து
நியூசிலாந்தின் பூகோள
அமைப்பு அதன் பாதுகாப்புக்கு உகந்ததாக இருக்கின்றது. அதன் அண்மை நாடான ஒஸ்ரேலியாவே
ஆயிரம் மைல் தொலைவில் இருக்கின்றது. நியூசிலாந்தை ஆக்கிரமிக்கும் படைகள் கடினமான
மலைகளைக் கடக்க வேண்டும். அந்த மலைகளிலும் காடுகளிலும் இருந்து நியூசிலாந்துப்
படையினர் கரந்தடித் தாக்குதலை மேற்கொண்டு எதிரிகளை அழித்தொழிக்கலாம்.
ஒஸ்ரேலியா
பெரு நிலப்பரப்பும்
நாற்புறமும் கடலால் சூழப்பட்ட நிலையும் ஒஸ்ரேலியாவின் பாதுகாப்பு அரண்களாகும். இவற்றால்
இரண்டாம் உலகப் போரின் போது ஒஸ்ரேலியாவை ஜப்பான் ஆக்கிரமிக்காமல் விட்டது. தற்போது
சீனாவால் உருவாகியுள்ள அச்சுறுத்தலைச் சமாளிக்க ஒஸ்ரேலியா அமெரிக்காவுடன்
படைத்துறை ஒத்துழைப்பைப் பேணுவதுடன் அமெரிக்கப் படைகளையும் அங்கு நிலை கொள்ள
அனுமதித்துள்ளது. ஒஸ்ரேலியாவிடமும் வலுமிக்க கடற்படை உண்டு. பல பன்னாட்டு படை
நடவடிக்கைகளில் நேட்டோப் படையினருடன் இணைந்து செயற்பட்டு தனது படையினரின் போர்
முனை அனுபவத்தை பேணிவருகின்றது.
ஜப்பான் – ஆக்கிரமிப்பதே
அதன் வரலாறு
மேற்கு நாடுகளைப் போரில்
கலங்கடித்த பெருமை ஜப்பானுக்கு உண்டு. இரசியாவைப் போரில் வென்ற பெருமை ஜப்பானுக்கு
உண்டு. தென் கொரியா சீனா ஆகிய நாடுகளை மட்டுமல்ல இரண்டாம் உலகப் போரின் போது
பிரித்தானியப் படைகளை மலேயா, பர்மா போன்ற பல தூர கிழக்கு நாடுகளில் இருந்து
விரட்டி அடித்தது ஜப்பான். உலகிலேயே அணுக் குண்டால் தாக்கப்பட்ட நாடு ஒரே நாடு
ஜப்பான். அதன் போராடும் திறனை வேறு வழிகளால் அழிக்க முடியாததாக இருந்தது. இரண்டாம்
உலகப் போரின் பின்னர் அமெரிக்கா ஜப்பானின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் வழங்கி அது
ஒரு தாக்குதல் படையை வைத்திருக்க முடியாது என அதன் அரசியலமைப்பு யாப்பில்
இருந்தாலும் பாதுகாப்புக்கு மட்டுமான படை என்னும் பெயரில் உலகில் படைவலுவில்
முன்னணி நாடாக இருக்கும் ஜப்பான் தீவை ஆக்கிரமிக்க முடியாது. அதன் விமானப் படை
உலகின் ஐந்தாவது பெரியதாக இருக்கின்றது.
ஈரான் – தீவிரவாத
அமைப்புக்கள் பெரும் துணை
மதவாதமும் மக்களாட்சியும்
இணைந்த அரசக் கட்டமைப்பு தேசப்பற்றும் கல்வியறிவும் மிக்க மக்கள் அர்பணிப்புடன்
போர் புரியக் கூடிய படையினர் ஆகியவை ஈரானின் பாதுகாப்பை உறுதி செய்கின்றன.
ஈராக்கில் ஆக்கிரமிப்புக் எதிராக நீண்ட நாள் சளைக்காமல் போராடி வெற்றி கண்டவர்கள்
ஈரானியர். மேற்கு நாடுகளின் பொருளாதாரத் தாடைக்கு எதிராக நின்று பிடித்தவர்கள்
ஈரானியர். மத்திய கிழக்கில் பெரிய படை ஈரானினுடையது. பல மலைத் தொடர்களைக் கொண்ட
ஈரானின் பூகோள அமைப்பும் அதன் பாதுகாப்பிற்கு வலுவூட்டுகின்றது. பல இஸ்லாமிய
விடுதலை அமைப்புக்களுக்கு உதவி செய்வதால் அந்த விடுதலை அமைப்புக்களின் ஆதரவு
ஈரானின் வலிமையாகின்றது. ஈரானுக்கு எதிராக தாக்குதல் நடத்தும் நாடுகளுக்கு எதிராக
பல இஸ்லாமிய விடுதலை அமைப்புக்கள் தீவிரவாதத் தாக்குதல்களை தொடுக்கும் என்ற அச்சம்
ஐக்கிய அமெரிக்காவையே கரிசனை கொள்ள வைத்துள்ளது. ஈரான் மீது அமெரிக்க விமானங்கள்
தாக்குதல் நடத்தினால் நாம் அமெரிக்காவிற்கு எதிராகத் தாக்குதல் நடத்துவோம் என
லெபனானில் இருந்து செயற்படும் ஹிஸ்புல்லா அமைப்பு 2015-ம் ஆண்டு
தெரிவித்திருந்தது.
கனடா
உலகப் பெரு வல்லரசான
அமெரிக்காவை அயல் நாடாகவும் நெருங்கிய நட்பு நாடாகவும் கொண்டிருக்கும் கனடா வடக்கே
வடதுருவத்தையும் தெற்கே ஐக்கிய அமெரிக்காவையும் மற்ற இரு புறங்களிலும் பசுபிக்
மாக் கடலையும் அத்லாந்திக் மாக்கடலையும் எல்லைகளாகக் கொண்டுள்ளது. உலகிலேயே
இரண்டாவது பெரிய நிலப்பரப்பையும் நேட்டோ உறுப்புரிமையையும் கொண்ட கனடாவை
ஆக்கிமிக்க முடியாது.
ஐக்கிய இராச்சியம்
உலகப் பெரு வல்லரசாக இருந்த
ஐக்கிய இராச்சியம் இன்றும் பொருளாதாரத்திலும் படைவலுவிலும் உலகில் முன்னணி நாடாக
இருக்கின்றது. நாற்புறமும் கடலால் சூழப்பட்ட ஐக்கிய இராச்சியம் சிறந்த
படைத்துறையைக் கொண்ட ஒரு வல்லரசாகும். இதனால் அது இன்றும் ஒரு ஆக்கிரமிக்கப்பட
முடியாதநாடாகும். உலகின் முதற்தரப் பயிற்ச்சி மட்டுமல்ல அனுபவம் மிக்க படையணி
அர்ப்பணிப்புடன் போர் புரியக் கூடியது. உலகிலேயே சிறந்த சிறப்புப் படையணியைக்
கொண்டது ஐக்கிய இராச்சியம். கடற்போக்குவத்திலும் கடற்போரிலும் பல நூற்றாண்டு
அனுபவத்தைக் கொண்டது.
இரசியா
உலகிலேயே பெரிய அளவு
நிலப்பரப்பைக் கொண்ட இரசியாவை முழுமையாக ஆக்கிரமிப்பது முடியாத ஒன்று என்பது
சரித்திரத்தால் நிரூபிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல அதன் கால நிலையும்
ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஏதுவானது அல்ல என்பதையும் நெப்போலியனும் ஹிட்லரும் செய்த
ஆக்கிரமிப்பு சுட்டி நிற்கின்றது. இரசியாவின் முழு வட எல்லை பனிப்பாறைகளாலான
வடதுருவமாகும். தென் புறமுள்ள பல நாடுகள் வலுவற்ற சிறிய நாடுகளாகும். இரசியாவின்
பெரு நிலப்பரப்பில் அநேக மலைகளும் ஆறுகளும் உள்ளன. அப்படிப்பட்ட பெரு நிலப்பரப்பை
ஆக்கிரமித்து கட்டுப்பாட்டில் வைத்திருக்கக் கூடிய படை வலிமை எந்த நாட்டுக்கும்
இல்லை. படைத்துறை வலு என்று பார்க்கும் போதும் இரசியா உலகில் முன்னணியில்
நிற்கின்றது. உலகிலேயே அதிக எண்ணிக்கையான அணுக்குண்டுகளை வைத்திருக்கும் நாடு
இரசியாவாகும்.
ஐக்கிய அமெரிக்கா
ஐக்கிய அமெரிக்காவும்
சாதகமான பூகோள அமைப்பைக் கொண்டது. மொத்த உலகப் படைத்துறைச் செலவில் மூன்றில் ஒரு
பகுதி அமெரிக்காவினுடையது. அதன் படைத்துறைத் தொழில்நுட்பம் தன்னிகரில்லாதது. அதன்
படைகள் உலகின் எங்காவது ஒரு மூலையில் படைநடவடிக்கை செய்து கொண்டே இருக்கின்றன.
உலகில் நடக்கும் பத்து படை மோதல்களில் ஒன்பதில் அமெரிக்கா சம்பந்தப்பட்டிருக்கும்.
உலகெங்கும் பல நூற்றுக் கணக்கான படைத்தளங்களை வைத்திருக்கும் அமெரிக்கா தாக்குதலே
சிறந்த பாதுகாப்பு என்னும் கொள்கையைக் கொண்டது. உலகிலேயே அதிக அளவு துப்பாக்கி
பாவனையில் உள்ள நாடு அமெரிக்காவாகும். அமெரிக்காவில் சராசரியாக நூற பேருக்கு 112
துப்பாக்கிகள் என்ற அளவில் துப்பாக்கிப் பாவனை அங்கு உண்டு. இரசியாவில் நூறு
பேருக்கு எட்டு என்ற அளவிலேயே துப்பாக்கிப் பாவனையில் உண்டு. அமெரிக்காவிற்கு
அடுத்ததாக அதிக அளவு துப்பாக்கி பாவனையில் உள்ள யேமனில் நூற்றுக்கு 54 என்ற
அளவிலேயே துப்பாக்கி பாவனையில் உண்டு. இதனால் அமெரிக்காவை யாராவது ஆக்கிரமிக்க
முயன்றால் ஒவ்வொரு குடிமகனும் துப்பாக்கியுடன் களத்தில் இறங்கலாம்.
பிரான்ஸ்????
பிரான்ஸ் ஒரு வல்லரசாக
இருந்தாலும் அதை ஆக்கிரமிக்கப்பட முடியாத நாடு என எந்த ஒரு படைத்துறை நிபுணர்களும்
அதை வகைப்படுத்தவில்லை. படைத்துறைத் தொழில்நுட்பத்தில் பிரான்ஸ் முன்னணியில்
இருந்தாலும் அதன் படைகட்டமைப்பும் படை முகாமைத்துவமும் இரண்டாம் போரின் போது
சரியானதாக இருக்கவில்லை.
இந்தியாவையும் சீனாவையும்
ஆக்கிரமிக்கலாம்!!!!
இந்தியாவும் சீனாவும்
ஆக்கிரமிக்கப் பட முடியாத நாடுகளாக வகைப்படுத்தப்படவில்லை. இந்தியா
மொகாலயர். பிரித்தானியா சீனா போன்றவற்றால் ஆக்கிரமிக்கப்பட்ட நாடு. கார்கில்
போரில் வெல்ல இந்தியாவிற்கு இஸ்ரேலின் உதவி தேவைப்பட்டது. இந்தியாவின் எல்லைகளில்
சீனப்படைகள் ஊடுருவி படை நிலைகளை நிறுவுவது பல தடவைகள் நடந்துள்ளன. இந்தியாவில்
பெரும் உள்நாட்டுக் குழப்பத்தை அல்லது பிரிவினைவாத அமைப்புக்களைத் தூண்டி இந்தியாவை சீனாவும் பாக்கிஸ்த்தானும்
இணைந்து ஆக்கிரமிக்க முடியும். வரலாற்று ரீதியாகப் பாருக்கும் போது சீனா 470 தடவைகள் ஆக்கிரமிக்கப்பட்ட நாடு. ஆக்கிரமிப்பாளர்களால் அது பல இன்னல்களுக்கு ஆளாகியுள்ளது. இரசியா விலகி இருந்தால் அல்லது நடு நிலை வகித்தால்
சீனாவை இந்தியா ஜப்பான் அமெரிக்கா ஆகிய மூன்று நாடுகளும் இணைந்து ஆக்கிரமிக்க
முடியும். சீனாவிடம் எண்ணிக்கை அடிப்படையில் உலகிலேயே பெரிய படை இருந்தாலும்
தொழில்நுட்ப ரீதியிலும் போர் முனை அனுபவ ரீதியிலும் அது பின் தங்கியுள்ளது. ஒரு
சீனப் படை வீரனிடம் இருக்கும் கருவிகளின் பெறுமதி 1500 அமெரிக்க டொலர்களாகவும் ஓர்
அமெரிக்கப் படைவீரனிடம் இருக்கும் கருவிகளின் பெறுமதி 17,000
டொலர்களுக்கு அதிகமானதாகவும் இருப்பது இரு நாடுகளுக்கும் இடையிலான
தொழில்நுட்ப வித்தியாசத்தைக் காட்டுகின்றது. 2030-ம் ஆண்டளவில் சீனாவும்
இந்தியாவும் ஆக்கிரமிக்கப்பட முடியாத நாடுகளாக உருவெடுக்கும்.
எதிர் காலத்தில் தொழில்நுட்ப வளர்ச்சி கொண்டுவரவிருக்கும்
செயற்கை விவேகம் படைத்துறையில் கணனிகளால் இயக்கப்படும் இயந்திர மனிதர்களை போர்
முனையில் ஈடுபடுத்தும். அந்த தொழில்நுட்பம் பெருவளர்ச்சியடைய முன்னர் மக்கள்
தொகையும் அதன் கட்டமைப்பும் போர் புரியும் திறனில் கணிசமான பங்கை வகிக்கும். அதிக
இளையோரைக் கொண்ட இந்தியா அந்த வகையில் உலக அரங்கில் மற்ற நாடுகள் பார்த்து கரிசனை
கொள்ளக் கூடிய நிலையை இன்னும் பத்து ஆண்டுகளில் அடையும்.