Showing posts with label எகிப்து. Show all posts
Showing posts with label எகிப்து. Show all posts

Tuesday, 26 January 2016

கொலையுதிர் காலமான அரபு வசந்தம்

ஜனவரி-25-ம் திகதி எகிப்தில் அரபு வசந்தந்தின் ஐந்தாவது ஆண்டு நிறைவு நாள். கடந்த நான்கு ஆண்டுகளாக ஜனவரி-25ம் திகதி அதிக சுதந்திரம் கோரும் பெரும் ஆர்ப்பாட்டங்களுடன் நினைவு கூரப்படும். இந்த ஆண்டு எதுவும் நடக்கவில்லை. நடக்காமல் விட்டதற்கான காரணம் போதிய சுதந்திரம் கிடைத்தமையால் அல்ல உள்ள சுதந்திரமும் பறிக்கப் பட்டுவிட்டது. மக்கள் கைது செய்யப் படலாம் என்ற அச்சத்தில் எகிப்திய அரபு வசந்தத்தம் உருவான தஹ்ரீர் சதுக்கப் பக்கம் போகவில்லை. ஜனவரி - 25இற்கு மூன்று மாதங்களுக்கு முன்னரே பலர் கைது செய்யப்பட்டுவிட்டனர். ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்யக் கூடியவர்கள் கடுமையாகக் கண்காணிக்கப் பட்டனர். அவர்கள் கூடக் கூடிய இடங்கள் தீவிர சோதனைகளுக்கு உள்ளாக்கப் பட்டன.

அரபு வசந்தத்தின் பிறப்பிடமான துனிசியாவில் அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் மீண்டும் தலை தூக்கியுள்ளன. அங்கு எழு இலட்சம் பேர் வேலையின்றி இருக்கின்றார்கள். இது மக்கள் தொகையின் 15 விழுக்காடாகும். 62 விழுக்காடான பட்டதாரிகள் வேலையின்றியும், இளையோரில் 38 விழுக்காட்டினர் வேலையின்றியும் இருக்கின்றனர். இது ஒரு மக்கள் எழுச்சியின் பிறப்பிடமாக மீண்டும் உருவாகியுள்ளது. ஊரடங்குச் சட்டம் அங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

துனிசியாவின் மொஹமட் பௌஜிஜி (Mohamed Bouazizi) மறக்கப்பட்டுவிட்டார். எகிப்த்தின் அஸ்மா மஹ்பூஸ் என்றால் யாருக்கும் தெரியாது. இஸ்லாமியர்களின் வேலை இறை நம்பிக்கை அற்ற அமெரிக்கர்களை ஒழித்துக் கட்டுவதே என அல் கெய்தா பரப்புரை செய்து கொண்டிருக்க. இஸ்லாமியப் "பயங்கரவாதத்திற்கு" எதிராக அமெரிக்கா போராடிக் கொண்டிருக்க. இஸ்லாமியர்களும் மனிதர்களே அவர்களும் இம்மண்ணில் வாழ வேண்டும் என எழுந்தவர்கள்  இவர்கள் இருவரும். அரபு மக்கள் தமது மக்கள் எழுச்சியை மல்லிகைப் புரட்சி என அழைத்தனர். மேற்கு நாட்டு ஊடகங்கள் அதை அரபு வசந்தம் என அழைத்தன. துனிசியா, எகிப்து, லிபியா, சூடான் ஆகிய நாடுகளில் ஆட்சியாளர்கள் பதவியில் இருந்து விரட்டப்பட்டனர். 14 மாத எழுச்சியில் 4 ஆட்சியாளர்களின் மொத்த 117 ஆண்டுகால ஆட்சி முடிவிற்குக் கொண்டு வரப்பட்டது.

துனிசியாவில் தந்தையற்ற தன் குடும்பத்தைக் காப்பாற்ற தெருவோரம் பழவியாபாரம் செய்து கொண்டிருந்த மொஹமட் பௌஜிஜியை எழு அமெரிக்க டொலர்கள் பெறுமதியான பணத்தை இலஞ்சமாகக் கொடுத்த மறுத்தமைக்காக துனிசிய அரச காவற்துறையைச் சேர்ந்த பெண் ஒருத்தி தாக்கி அவன் முகத்தில் காறி உமிழ்ந்தாள். அவன் தற்கொலை செய்து கொள்ள துனிசியாவில் உருவான இளையோர் எழுச்சி மேற்காசியவிலும் வட ஆபிரிக்காவிலும் உள்ள பல நாடுகளிற்கும் பரவியது. அல்ஜீரியா, லிபியா, எகிப்து, சிரியா, சூடான், சவுதி அரேபியா, பாஹ்ரேன், ஈராக் எனப் பல நாடுகளில் மக்கள் ஆடம்பர வாழ்கை வாழும் அக்கிரம ஆட்சியாளர்களுக்கு எதிராகக் கிளர்ந்தனர். மன்னராட்சி அல்லது படைத்துறையினரின் ஆட்சி மட்டுமே மேற்காசிய மற்றும் வட ஆபிரிக்க நாடுகளில் நடக்கின்றன.


ஒரு புரட்சி என்பது அக்கிரமம் பிடித்த ஆட்சியாளர்களை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும், ஆட்சி முறைமையை மாற்ற வேண்டும், ஆட்சி பிழையானவர்களின் கைகளுக்குப் போகமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மக்கள் வாழ்வு மேம்பட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். எகிப்திய மக்கள் 18நாட்கள் நடத்திய "புரட்சியின்" மூலம் பெப்ரவரி 11-ம் திகதி ஹஸ்னி முபாரக்கைப் பதவியில் இருந்து விரட்டினர். ஆனால் புரட்சி என்பது ஒரு ஆட்சியாளரை மாற்றுவதுடன் முற்றுப் பெறுவதல்ல என்பதற்கு எகிப்து ஒரு நல்ல உதாரணமாக அமைகிறது. எகிப்த்தில் உருவான மக்கள் எழுச்சி அமெரிக்காவின் பாதுகப்புத்துறையினரையும் உளவுத் துறையினரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. அமெரிக்கா தான் பாதுகாத்து  வந்த அடக்கு முறை ஆட்சியாளர்களில் ஒருவரான ஹஸ்னி முபாரக்கைக் கைவிடும் அளவிற்கு நிலை மோசமாக இருந்தது.

துனிசீய மக்கள் ஆரம்பித்து வைத்த அரபு வசந்தத்தால் உந்தப்பட்ட எகிப்திய மக்கள் ஒரு திடமான சக்தியாக திரண்டு அதிக இரத்தம் சிந்தாமல்  18 நாட்கள் நடத்திய "புரட்சியின்" மூலம் 2011பெப்ரவரி 11-ம் திகதி ஹஸ்னி முபாரக்கைப் பதவியில் இருந்து விரட்டினர். ஐக்கிய அமெரிக்காவின் உளவுத் துறை எகிப்தியப் படையினரை புரட்சியை எதிர்க்காமல் இருப்பதை உறுதி செய்தது. இதனால் எகிப்தியப் படைத்துறைக்கு புரட்சியாளர்களால் எந்த விதப் பாதிப்பும் ஏற்படவில்லை. எகிப்தியப் படைத்துறையின் உயர்பதவிகளில் இருப்போர் அமெரிக்காவில் பயிற்ச்சி பெற்றவர்கள். இந்தப் புரட்சியை முன்னெடுப்பதில் முன்னணியில் நின்று செயற்பட்டவர் ஒரு இளம் பெண். அஸ்மா மஹ்பூஸ் என்ற 26 வயதான எகிப்தியப் பெண் ஹஸ்னி முபராக்கின் அடக்கு முறைக்கு எதிராக தனியான ஒரு போராட்டத்தை ஆரம்பித்தாள். முதலில் முகவேட்டில் அனைவரையும் தஹ்ரீர் சதுக்கத்தில் திரளும்படி அழைப்பு விடுத்தாள். அவளது அழைப்பை மூன்று இளைஞர்கள் மட்டுமே வந்தனர். முகவேட்டின் மூலம் தகவலை அறிந்த காவற்துறை அவர்கள் நாலு பேருக்கும் முதல் அங்கு திரண்டுவிட்டனர். அந்த மூன்று இளைஞர்களையும் கைது செய்த காவற்துறையினர் அஸ்மா மஹ்பூஸை எச்சரித்து விட்டுச் சென்றனர். அத்துடன் அஸ்மா மஹ்பூஸ் சளைக்கவில்லை பின்னர் ஒரு காணொளியைத் தயாரித்து அதன் மூலம் நான் மீண்டும் தஹ்ரீர் சதுக்கம் செல்வேன் உங்களுக்குத் தன்னம்பிக்கை இருந்தால் என்னுடன் வாருங்கள் என்று அறை கூவல் விடுத்தாள். அது பெரும் மக்கள் எழுச்சியாக மாறி 18 நாட்களில் ஹஸ்னி முபராக்கின் ஆட்சியை எகிப்த்தில் இருந்து அகற்றியது. ஆனால் தொடர்ந்து ஆட்சியைக் கைப்பற்றியவர்களோ புரட்சியை முன்னெடுத்த இளைஞர்களின் மதசார்பற்ற கொள்கைக்கு முரணான இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பினர். அவர்களின் ஆட்சி ஹஸ்னி முபாராக்கின் ஆட்சியிலும் பார்க்க மோசமானதாக அமைந்தது. இதனால் இளைஞர்கள் மீண்டும் கிளர்ந்து எழுந்தபோது இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பை ஆட்சியில் இருந்து அகற்றி விட்டு படையினர் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்டனர். மீண்டும் மக்கள் அடக்கு முறை ஆட்சிக்கு உள்ளாகி உள்ளனர். இன்னும் ஒரு மக்கள் எழுச்சி எகிப்தில் ஏற்பட தற்போது வாய்ப்பில்லை. எகிப்தின் தேசிய வருமானத்தில் முக்கிய பங்கு வகித்த உல்லாசப் பயணத்துறை மோசமாகப் பாதிக்கப் பட்டுள்ளது. இளையோர் மத்தியிலான வேலைவாய்ப்பின்மையே அரபு வசந்தத்திற்கு வித்திட்டது. அது அரபு வசந்த எழுச்சிக்கு முன்பிருந்ததை விட இப்போது அதிகரித்துள்ளது.  எகிப்தின் பாதீட்டுப் பற்றாக்குறை பத்து விழுக்காட்டிலும் அதிகம். அதன் கடன் பளு அதன் அதன் மொத்தத் தேசிய உற்பத்தியிலும் அதிகமானதாகும்.

லிபியாவில் அரபு வசந்தம் ஒரு பெரும் உள்நாட்டுப் போராக வெடித்தது. கடாஃபியைப் பதவியில் இருந்து வெளியேற்றத் துடித்த மேற்கு நாடுகள் அவரது படையினருக்கு எதிராக போர் விமனத் தாக்குதல்கள் வழிகாட்டி ஏவுகணைத் தாக்குதல்களைத் தொடுத்து அவரை ஆட்சியில் இருந்து அகற்றிக் கொல்ல வழி வகுத்தன. தேர்தலுக்காக கடாஃபியிடம் இருந்து பணம் பெற்ற அரசியல்வாதிகளின் இரகசியங்கள் அவருடன் அழிக்கப்பட்டன. லிபியா இப்போது ஒரு தேறாத தோல்வியடைந்த நாடக இருக்கின்றது. இரண்டு அரசுகள் இப்போது அங்கு ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டிருக்கின்றன. பல போர்ப்பிரபுக்கள் மத்தியில் லிபிய மக்கள் சிக்குண்டு கொண்டிருக்கின்றனர். ஆபிரிக்காவின் செல்வந்த நாடுகளில் ஒன்றான லிபியாவில் உலகின் தலை சிறந்த சமூக நலக் கொடுப்பனவுகள் கடாஃபியின் ஆட்சியால் செய்யப்பட்டன. அறுபது இலட்சம் மக்களும் நன்கு வாழக்கூடிய எண்ணெய் வளம் அங்கு இருக்கின்றது. ஆனால் 2015-ம் ஆண்டு டிசம்பரில் லிபியாவின் அரசியல்வாதி ஒருவர் அடுத்த சோமாலியாவாக லிபியா மாறப்போகின்றது என எச்சரித்தார்.

சிரியாவின் அரபு வசந்த எழுச்சி முதலில் சியா மற்றும் சுனி முஸ்லிம்களுக்கு இடையிலான போட்டியாக மாறியது. பின்னர் ஈரானுக்கும் சவுதி அரேபியாவிற்கும் இடையிலான போட்டிக்களமானது. தற்போது உலக வல்லரசுகளின் போட்டிக் களமாகியுள்ளது. சிரிய நகரங்களின் அரைவாசி தரைமட்டமாகிவிட்டது. தற்போது பிரச்சனை பஷார் அல் அசாத்தின் அடக்குமுறை மிக்க ஆட்சியை அகற்றுவதல்ல இஸ்லாமியத் தீவிரவாதத்தை எப்படி ஒழிப்பது என்பதே! மற்ற எல்லா நாடுகளையும் விட மோசமான உயிரிழப்பு சிரியாவிலேயே ஏற்பட்டது. மூன்று இலட்சத்திற்கு மேலான அப்பாவிகள் கொல்லப் பட்டனர். 65இலட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் இடப்பெயர்வுக்கு உள்ளாகியுள்ளனர்.

அரபு வசந்தத்தின் பின்னர் ஈராக் மூன்றாகப் பிளவு பட்டுள்ளது. சியா முஸ்லிம்களின் ஆட்சி, குரிதிஷ் மக்களின் ஆட்சி, ஐ எஸ் அமைப்பினரின் ஆட்சி என மூன்று ஆட்சிகள் அங்கு நிலவுகின்றன. அதன் பொருளாதாரம் மோசமாகின்றது. ஈராக்கில் யதீஷியர்கள் இனக்கொலைக்கு உள்ளானார்கள்.

சவுதி அரேபியாவிலும் பாஹ்ரேனிலும் உருவான மக்கள் எழுச்சியையும் அதை சவுதி அரேபியப் படைகள் மூர்க்கத்தனமாக அடக்கியதைப் பற்றியும் மேற்கு நாட்டுப் பத்திரிகைகள் பெரிது படுத்தவில்லை. அமெரிக்காவின் படைத்தளமுள்ள பாஹ்ரேனில் ஈரானிய ஆதரவுக் கிளர்ச்சிக்காரர்கள் பெரும் போராட்டம் செய்தனர். நிலைமை மோசமானவுடன் சவுதி அரேபியா தனது படைகளை அங்கு அனுப்பி கிளர்ச்சிக்காரர்களை அடக்கியது. பஹ்ரேனில் அரபு வசந்தத்தின் பின்னர் மோசமான அடக்கு முறை நிலவுகின்றது.

அரபு நாடுகளில் ஓர் நல்ல ஆட்சி முறைமை இருந்ததில்லை. அவ்வப்போது வந்த ஒரு சில ஆட்சியாளர்களைத் தவிர மற்ற எல்லா ஆட்சியாளர்களும் ஊழல் மிக்கதும் திறனற்றதுமான ஆட்சியையே செய்தனர். துனிசியாவைத் தவிர எல்லா நாடுகளிலும் அரபு வசந்தத்திற்கு முன்னர் இருந்ததிலும் பார்க்க மோசமான ஆட்சி, மோசமான அடக்கு முறை, மோசமான மனித உரிமை மீறல்கள், மோசமான பொருளாதாரச் சூழல் ஆகியவை நிலவுகின்றன. இவற்றில் மாற்றம் ஏற்படக் கூடிய நிலைமை அண்மையில் இல்லை. அரபு வசந்தம் துயரைத் தவிர வேறு எதையும் கொண்டு வரவில்லை.

Monday, 10 August 2015

எகிப்தில் இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பு வன்முறையில் இறங்குமா

இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பு வன்முறையை வெறுக்கும் அமைப்பு. 1928-ம் ஆண்டு எகிப்த்தில் உள்ள சான்றோர்களால் உருவாக்கப்பட்ட இந்த அமைப்பு மூன்று இலட்சத்திற்கு மேற்பட்ட உறுப்பினர்களுடன் உலகிலேயே செல்வாக்கு மிகுந்த அமைப்பாக இருக்கின்றது. அமெரிக்கா, இந்தியா உட்பட எண்பத்து ஐந்திற்கு மேற்பட்ட நாடுகளில் இதன் செயற்பாடு உண்டு. இது தற்போது எகிப்தில் தடை செய்யப்பட்டுள்ளது. இது மக்களும் அரசும் இஸ்லாமிய மத வழிகாட்டலுக்கு இணங்க நடக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றது. எகிப்தில் உள்ள இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பு பல மருத்துவ மனைகள், வியாபார நிலையங்கள், பாடசாலைகள், வங்கிகள், பராமரிப்பு நிலையங்கள், மலிவு விலைக்கடைகள் எனப் பலவற்றை நிர்வகித்து வந்தது. முன்னாள் எகிப்திய அதிபர் அப்துல் கமால் நாசர் கொலையில் இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பு சம்பந்தப்பட்டிருப்பதாக சந்தேகித்து அது முன்பும் தடை செய்யப்பட்டும் இருந்தது. இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பு 1970முதல் வன்முறைகளைக் கைவிட்டு மக்களாட்சியில் நம்பிக்கையுடன் ஒரு தாராளவாதக் கொள்கையுடைய அமைப்பாக மாறியதாகக் கருதப்பட்டது.

தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட மேர்சி
எகிப்த்தில் 2011-ம் ஆண்டு பெப்ரவரி மாதம் இளையோரால் முன்னெடுக்கப்பட்ட அரபு வசந்தம் கிளர்ச்யின் பின்னர் ஏற்பட்ட அரசியல் இடைவெளியை அப்போது நன்கு கட்டமைக்கப் பட்ட அமைப்பாக இருந்த இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பு நன்கு பயன்படுத்திக் கொண்டது. அப்புரட்சியின் போது இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பின் தலைவர் மொஹமட் மேர்சி சிறையில் இருந்து தப்பிக் கொண்டார். அவர் 2012-ம் ஆண்டு நடந்த தேர்தல்களில் வெற்றி பெற்று எகிப்தின் அதிபர் பதவிக்கு வந்தார். அவர் நாட்டில் இஸ்லாமிய மதவாத ஆட்சியை ஏற்படுத்த முயன்றார். ஆனால் எகிப்தியப் புரட்சியில் ஈடுபட்ட இளையோர் எகிப்தில் ஒரு மத சார்பற்ற ஆட்சியை ஏற்படுத்தவே விரும்பினர். இதனால் அவர்கள் இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பிற்கு எதிராகக் கிளர்ந்து எழுந்தனர். இதைத் தனக்கு வாய்ப்பாகப் பயன் படுத்திய எகிப்தியப் படைத் துறையினர் எகிப்தை மீண்டும் தமது பிடிக்குள் கொண்டு வந்தனர். இஸ்லாமிய சகோரத்துவ அமைப்புத் தடை செய்யப் பட்டு மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு இறப்புத் தண்டனையும் விதிக்கப்பட்டது. அவர் இன்று(ஓகஸ்ட்-2015) வரை சிறையில் இருக்கின்றார். நாற்பதினாயிரத்திற்கு மேற்பட்ட இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பினர் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேர்சியின் பேச்சாளராகத் தொழில் பார்த்த பெண்ணுக்குக் கூட ஆளில்லா நிலையில் தூக்குத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

சகோதரத்துவ அமைப்பிற்கு எதிரான வன்முறைகள்
இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பைத் தடை செய்த எகிப்தின் படைத்துறையினரின் அரசு அதற்கு எதிராக என்றும் இல்லாத அளவு அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்து விட்டது. அவர்களில் ஆயிரத்திற்கு மேற்பட்டவர்களுக்கு  இறப்புத் தண்டனை நீதி மன்றங்களால் விதிக்கப்பட்டுக் கொல்லப்பட்டனர். பலர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பின் ஆதரவு நாடாக துருக்கி இருக்கின்றது. துருக்கியில் அந்த அமைப்பின் தொலைக்காட்சி ஒளிபரப்பு நிலையம் இருக்கின்றது.

அமைதியா வன்முறையா என்ற குழப்பம்
தொடரும் அடக்கு முறைகளால் பல இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பினர் வன்முறைசார் போராட்டத்தைத் தாம் ஆரம்பிக்க வேண்டும் என குமுறுகின்றனர். ஆனால் அதன் தலைமை அமைதியான வழிகளைக் கடைப்பிடிக்கும் படி உறுதியாகச் சொல்கின்றது. இதனால் கட்டுப்பாட்டிற்குப் பெயர் போன அந்த அமைப்புக்குள் குழப்பம் உருவாகியுள்ளது. எகிப்திய அரசு எல்லா இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பினரையும் பயங்கரவாதிகளாகக் கருதுகின்றது. சிறையில் இருந்து 2015 மே மாதம் விடுதலையான சகோதரத்துவ அமைப்பின் தலைவர்களில் ஒருவரான மஹ்மூட் குஜ்லான் அடக்கு முறை மிகுந்த அரசுக்கு எதிராக வன்முறைப் போராட்டத்தை ஆரம்பிப்பது தணலைக் கையில் எடுப்பது போலாகும் என்றார். மேலும் அவர் அமைதியைக் கடைப்பிடித்தல் படைக்கலன்களை ஏந்துவதிலும் பார்க்க வலிமையானது. இப்படிச் சொன்னதால் அவர் பலரது கண்டனங்களுக்கும் உள்ளானார்.

பிளவுகள்
ஏற்கனவே இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பின் பலஸ்த்தீனக் கிளையினர் பிளவடைந்து வன் முறையில் இறங்கியதால் உருவாகிய அமைப்புத்தான் காசா நிலப்பரப்பில் இருந்து செயற்பட்டு இஸ்ரேலுக்குப் பெரும் சவாலாக இருக்கும் ஹமாஸ் அமைப்பு. 1987இல் ஏற்பட்ட இந்தப் பிளவின் இஸ்ரேலிய உளவுத் துறையும் பலஸ்த்தின விடுதலை இயக்கத்தை வலுவிழக்கச் செய்யும் நோக்குடன் பங்கு பற்றி இருந்தது. இது போன்ற இன்னும் ஒரு பிளவு சகோதரத்துவ் அமைப்புக்குள் தோன்றுமா என்ற அச்சம் உருவாகியுள்ளது. அத்துடன் ஐ எஸ் எனப்படும் இஸ்லாமிய அரசு அமைப்பு எகிப்தில் தனது நடவடிக்கைகளை விரிவு படுத்துகின்றது. அல் கெய்தாவின் தற்போதைய தலைவராக இருக்கும் அய்மன் அல் ஜவஹாரி இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பில் இருந்து பிரிந்து சென்றவரே.

எகிப்திய ஆட்சியாளரை தண்டிக்கச் சொல்லும் அறிஞர்கள்
இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பைச் சேர்ந்த அறிஞர்கள் எகிப்தை ஆளும் அதிபர் அப்துல் ஃபட்டா அல் சிசியின் ஆட்சிக்குத் துணை செய்பவர்களும் ஊழியம் செய்பவர்களும் இஸ்லாமிற்கு எதிராகச் செயற்படும் குற்றவாளிகள் என்கின்றனர். இக்குற்றாவாளிகள் கொல்லப்பட வேண்டும் எனவும் அவர்கள் சொல்கின்றனர். 2015-ம் ஆண்டு ஜனவரி மாதம் 31-ம் திகதி எகிப்தின் சினாய் பிரதேசத்தில் நடந்த குண்டு வெடிப்பிற்கு ஐ எஸ் அமைப்புடன் தொடர்புடைய ஒரு அமைப்பு உரிமை கோரி இருந்தது. ஆனால் எகிப்திய அதிபர் அப்துல் பட்டா அல் சிசி அந்தக் குண்டு வெடிப்பை இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பே செய்ததாகக் குற்றம் சாட்டினார்.

அமெரிக்கா தீண்ட விரும்பாத சகோதரத்துவ அமைப்பு
2015 ஜூன் மாதம் இஸ்லாமியச் சகோதரத்துவ அமைப்பைச் சேர்ந்தவர்கள் அமெரிக்கா பயணம் செய்த போது அவர்களை அமெரிக்க அரசு சந்திக்க மறுத்து விட்டது.  1950களிலும் 1960களிலும் அப்போதைய எகிப்தின் அதிபர் அப்துல் கமால் நாசர் இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பிற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுத்தார். மத சார்பற்றவரான நாசர் மதவாத அமைப்பான இஸ்லாமிய சகோதரத்து அமைப்பினருக்கு எதிராகச் செயற்பட்டார். அதிலும் மோசமான நடவடிக்கைகள் 2013-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த அல் சிசியால் எடுக்கப்படுகின்றது.

தம்மை ஆய்வு செய்யும் சகோதரத்துவ அமைப்பு
இத்தகைய சூழ் நிலையில் இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பை ஒரு புரட்சிகர அமைப்பாக மாற்ற வேண்டும் என அமைப்பின் பல மட்டங்களில் இருந்தும் கோரிக்கைகள் வலுக்கின்றன. அமைப்பின் மேல் மட்ட உறுப்பினர்கள் 2011-ம் ஆண்டு அரபுப் புரட்சியினால் அப்போதைய படைத்துறை ஆட்சியாளர் ஹஸ்னி முபராக்கின் ஆட்சியைக் கலைத்ததில் இருந்து  2013-ம் ஆண்டு மொஹமட் மேர்சியின் ஆட்சி கலைக்கப்பட்டமை வரை தமது அமைப்பின் செயற்பாடுகளை கவனமாக ஆராய்ந்து வருகின்றனர்.  தமது அமைப்பைச் சேர்ந்த இளையோர் சினாயில் இருந்து செயற்படும் அன்சர் பெயிற் அல்-மக்திஸ் (Ansar Beit al-Maqdis) என்னும் ஐஸ் எஸ் அமைப்பினருடன் தொடர்புடைய அமைப்புடனோ அல்லது நேரடியாக ஐ எஸ் அமைப்பினருடனோ இணைவதையிட்டுக் கரிசனை கொண்டுள்ளது. எகிப்த்தில் புரட்சித் தண்டனை என்னும் பெயரிலும் பிரபல எதிர்ப்பியக்கம் என்னும் பெயரிலும் இரு புதிய அமைப்புக்கள் உருவாக்கியுள்ளன.  இவை வன்முறைப் போராட்டங்களை ஏற்கனவே ஆரம்பித்து விட்டன.

மாறவேண்டும்
தற்போதைய எகிப்திய ஆட்சியாளர்கள் கொடூரமான முறையில் இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பு உறுப்பினர்களையும் ஆதரவாளர்களையும் கையாளும் போது அமைப்பு தனது வன்முறை அற்ற கொள்கையை மாற்ற வேண்டிய கட்டாயம் அதிகரித்து வருகின்றது. அல்லாவிடில் அதற்குள் பிளவு ஏற்படும் அல்லது ஐ எஸ் அமைப்பை நாடி அதன் உறுப்பினர்கள் செல்வார்கள்.

Monday, 9 June 2014

எகிப்தில் தேர்தல் மூலம் படைத்துறை ஆட்சி!



எகிப்தில் முதற்தடைவையாக மக்களாட்சி முறைமைப் படி தேர்வு செய்யப்பட்ட அதிபர் முஹமட் மேர்சியைப் 2013 ஜூலை முதலாம் திகதி பதவியில் இருந்து தூக்கி எறிந்த எகிப்தியப் படைத் துறைத் தலைவர் அப்துல் ஃபட்டா அல் சிசி ஒரு தேர்தல் மூலம் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். படையினரின் பிடியில் இருந்து நாட்டை விடுவித்து மக்களாட்சியை ஏற்படுத்த வேண்டும் என எகிப்திய இளைஞர்கள் செய்த அரபு வசந்தம் என்னும் புரட்சி தடம் மாறிப் போய்விட்டது.

2011-
ம் ஆண்டு உருவான எகிப்தியப் புரட்சியின் பின்னணி.

1.
ஏப்ரல்-6 இயக்கம்(April 6 Movement)
அல் மஹால்லா அல் குப்ரா என்னும் எகிப்திய நகரில் 2008 ஏப்ரில் 6-ம் திகதி அங்குள்ள தொழிற்சாலை ஊழியர்களால் வேலை நிறுத்தத்திற்காக ஆரம்பிக்கப்பட்டது “ஏப்ரல் 6 இயக்கம்” என்னும் பேஸ்புக் குழு. ஏப்ரல் 6-ம் திகதி சகல ஊழியர்களும் கறுப்புப் பட்டி அணிந்து வேலைக்குச் செல்லாமல் வீட்டில் இருக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் ஆரம்பிக்கப்பட்டது இந்த இயக்கம். இதன் ஆரம்பகர்த்தாக்கள் அஹ்மட் மஹேர், அஸ்மா மஹ்ஃபவுஸ், இஸ்ரா அப்துல் பட்டா ஆகியோர்கள். அஹ்மட் மஹேர் 2009இல் வேறு பதினாறு பேருடன் கைது செய்யப்பட்டார். அவரது ஆதரவு இணையத் தளங்கள் முடக்கப்பட்டன. இந்த இயக்கத்திற்கு ஆதரவு பல்கிப் பெருகி இலட்சக்கணக்கன இளைஞர்கள் இதில் இணைந்து கொண்டனர். பெரும்பாலானோர் 20இற்கும் 30இற்கும் இடைப்பட்ட வயதுடைய படித்தவர்களே. மதசார்பற்ற இந்த இயக்கத்தினரே ஹஸ்னி முபராக்கை பதவியில் இருந்து விலக்கும் மக்கள் எழுச்சியை ஆரம்பித்தனர். ஏப்ரல் 6 இயக்கத்தைப் போலவே பல இயக்கங்கள் முபராக்கிற்கு எதிரான புரட்சியில் ஈடுபட்டிருந்தன. பல அமைப்புக்களின் கூட்டணியே முபராக்கை விரட்டியது.

2.
அஸ்மா மஹ்பூஸ் என்னும் ஒரு இளம் பெண்
அஸ்மா மஹ்பூஸ் என்னும் ஒரு இளம் பெண் முகப்புத்தகம் மூலம் இளைஞர் போராட்டத்திற்கு அறைக்கூவல் விடுத்தாள் . ஆரம்பத்தில் அதிக ஆரவாரம் இல்லை. ஆனால் அவள் கைது செய்யப்பட்டு எச்சரிக்கப்பட்டபின் அவளுக்கு பெரும் ஆதரவு கிடைத்தது. ஏப்ரல்-6 இயக்கமும் இணைந்து கொண்டது. எகிப்தின் சகல தரப்பினரும் தஹ்ரீர் சதுக்கத்தில் திரளத் தொடங்கினர் எகிப்திய இளைஞர்கள் முபராக் ஆட்சியின் கொடூரம் சம்பந்தப்பட்ட படங்கள் காணொளிகளை சமூக வலைத்தளங்கள் மூலம் பகிர்ந்து பகிரங்கப்படுத்தினர். வால் கொனிம் எகிப்திய எழுச்சி ஏற்பாட்டாளர் சமூக வலைத்தளங்கள் இருந்திருக்காவிடில் இந்த எழுச்சித் தீ மூட்டப்பட்டிருக்கது என்கிறார். facebook.com/ElShaheeed என்ற முகப்புத்தகப் பக்கத்திற்கு ஒரு சில வாரங்களில் எட்டு இலட்சம் இரசிகர்கள் திரண்டார்கள். எகிப்திய எழுச்சி ஏற்ப்பாட்டாளர்கள் தங்கள் எழுச்சிக்கான நாளைக் கவனமாகத் தேர்ந்தெடுத்தனர். ஜனவரி 25-ம் திகதி எகிப்திய மக்களால் மிகவும் வெறுக்கப்படும் எகிப்தியக் காவல்துறையினரின் விழாவிற்கான பொது விடுமுறை நாள். அதை எழுச்சியாளர்கள் தமது எழுச்சியின் ஆரம்ப நாளாகத் தேர்ந்தெடுத்தனர். முப்பது ஆண்டுகளாக மக்கள் அடக்கி வைத்திருந்த ஆத்திரம் வெளிப்படும் நாளாக அது அமைந்தது. எகிப்தின் எழுச்சியாளர்கள் எகிப்திய படைத்துறையினருடன் நல்ல உறவை வளர்ப்பதில் மிகக் கவனமாகச் செய்ற்பட்டனர். நீங்களும் மக்களும் ஒன்றே என்ற அடிப்படையில் அவர்கள் படைத்துறையினருடன் நடந்து கொண்டனர்.  பின்னர் இசுலாமிய சகோதரத்துவ அமைப்பு களமிறங்கியது. இசுலாமிய சகோதரத்துவ அமைப்பு அலெக்சாண்ட்ரியா போன்ற நைல் நதிக் கரையோர நகரங்களின் தெருக்களில் தனது ஆதரவாளர்களை இறக்கிப் போராட வைத்தது. இளைஞர்கள் புரட்சி ஆர்ப்பாட்டம் செய்யும் போது இசுலாமிய சகோதரத்துவ அமைப்பின் முக்கிய தலைவர்களுள் ஒருவரான மொஹமட் மேசி சிறையை உடைத்துக் கொண்டு தப்பினார். இதுவே அவருக்குப் பெரும் பிரச்சனையாக பின்னர் அமைந்தது

3.
இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பு
இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பு மூன்று இலட்சத்திற்கு மேற்பட்ட உறுப்பினர்களுடன் உலகிலேயே செல்வாக்கு மிகுந்த அமைப்பு. இது  எகிப்தில் செயற்பட்ட ஒழுங்கு படுத்தப்பட்ட மிகப்பெரிய அரசியல் அமைப்புமாகும். இது மக்களும் அரசும் இஸ்லாமிய மத வழிகாட்டலுக்கு இணங்க நடக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது. எகிப்தில் உள்ள இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பு பல மருத்துவ மனைகள், வியாபார நிலையங்கள், பாடசாலைகள், வங்கிகள், பராமரிப்பு நிலையங்கள், மலிவு விலைக்கடைகள் எனப் பலவற்றை நிர்வகித்து வந்தது. முன்னாள் எகிப்திய அதிபர் அப்துல் கமால் நாசர் கொலையில் இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பு சம்பந்தப்பட்டிருப்பதாக சந்தேகித்து அது முன்னர் தடை செய்யப்பட்டும் இருந்தது. இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பு 1970முதல் வன்முறைகளைக் கைவிட்டு மக்களாட்சியில் நம்பிக்கையுடன் ஒரு தாராளவாதக் கொள்கையுடைய அமைப்பாக மறி வருவதாக சில ஆய்வாளர்கள் கருதினர். இசுலாமிய சகோதரத்துவ அமைப்புக்கு இருந்த மிகப்பரவலான ஆதரவு இருந்தபடியால் அது இளைஞர்களின் போராட்டத்துடன் இணைந்தவுடன் ஹஸ்னி முபராக்கின் படைத்துறை ஆட்சி ஆட்டம் கண்டது.

4.
விட்டுக் கொடுத்த அமெரிக்கா.
லிபியாவில் அரபு வசந்தம் பெரும் உள்நாட்டுப் போராக மாறியிருந்த போது எகிப்தில் பெரும் உயிரிழப்பின்றி புரட்சி வெற்றி பெற்றது. அமெரிக்காவின் எகிப்தியப் பிடியான எகிப்தியப் படைத்துறை கவனமாகக் காய்களை நகர்த்தி தன் இருப்பை உறுதி செய்து கொண்டது. ஹஸ்னி முபராக்கை பதவி விலகச் செய்தது. எழுச்சியைக் கட்டுப்படுத்த அமெரிக்க ஆலோசனைப்படி நியமிக்கப்பட்ட துணைத் தலைவர் ஒமர் சுலைமான் ஒரு முபாரக் கையாளே. அவருடன் பேச்சு வார்த்தை நடத்தும்படி ஹிலரி கிளிண்டன் எகிப்திய மக்களைக் கேட்டுக் கொண்டார். அது எகிப்திய மக்களை ஆத்திரபடுத்தியது. ஒமர் சுலைமான் சாட்டுக்கு சில அரச ஒட்டுக் கட்சிகளுடன் பேச்சு வார்த்தை நாடாத்தினார். ஒமர் சுலைமான் எகிப்திய மக்கள் மக்களாட்சிக்குத் தயாரில்லை என்று கூறிக்கொண்டார். மக்கள் ஆத்திரம் இன்னும் அதிகமானது. அமெரிக்கா சில விட்டுக் கொடுப்புக்களைச் செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டது. அரசியலமைப்பு இரத்துச் செய்யப்பட்டது. பாராளமன்றம் கலைக்கப்பட்டது. உச்ச படைத்துறைச் சபை (Supreme Military Council)  பாதுகாப்புத் துறை அமைச்சரும் முபராக்கின் நீண்டநாள் ஆதரவாளருமான முஹமட் தந்தாவியின் தலைமையில் கொண்டு வரப்பட்டது. தரிக் அல் பிஸ்ரி என்னும் கல்விமான் தலைமையில் அமைக்கப் பட்ட குழு புதிய அரசியல் அமைப்பை வரையும் பணியில் ஈடுபட்டுள்ளது.

தன்னை முன்னிலைப்படுத்திய மொஹமட் மேர்சி விரட்டப்பட்டார்.
புரட்சி செய்த இளைஞர்களிடம் ஒரு கட்டமைக்கப்பட்ட அரசியல் கட்சி இல்லாமையினால் நன்கு கட்டமைக்கப்பட்ட இசுலாமிய சகோதரத்துவ அமைப்பு 2011-ம் ஆண்டு நவம்பரில் நடந்த பாராளமன்றத் தேர்தலிலும் 2012 ஜூனில் நடந்த அதிபர் தேர்தலிலும் வெற்றி பெற்றது. மொஹமட் மேர்சி எகிப்திய அதிபரானார். அவர் தன்னை முன்னிலைப்படுத்தியும் இசுலாமிய ஷரியாச் சட்டப்படி நாட்டை நடத்தவும் முனைந்தார். தனது அதிகாரத்தை அதிகப்படுத்தும் படி சட்டங்களை பிரகடனப்படுத்தினார். ஒரு மத பக்தரான அப்துல் ஃபட்டா அல் சிசியைப்  படைத் துறை அதிபராக்கினார். 2012 நவம்பரில் இசுலாமிய சகோதரத்துவ அமைப்பு ஒரு புதிய அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கியது.  மேர்சி நாட்டை மோசமான நிலைக்கு இட்டுச் செல்கின்றார் என உணர்ந்த இளைஞர்கள் மீண்டும் 2013 ஜூன் மாதம் மேர்சியின் முதலாம் ஆண்டு நிறைவின் போது கிளர்ந்து எழுந்தனர். மேர்சியால் நியமிக்கப்பட்ட படைத் துறைத் தளபதி அப்துல் ஃபட்டா அல் சிசி  மேர்சியை பதவியில் இருந்து விலக்கிச் சிறையில் அடைத்தார். சிறை உடைப்பும் அவருக்கு எதிரான ஒரு குற்றச் சாட்டாகும்.

மொஹமட் மேர்சிக்குப் பின்னர் இடைக்கால அதிபராக அட்லி மன்சூர் படைத்துறையினரால் நியமிக்கப்பட்டார். இசுலாமிய சகோதரத்து அமைப்பினர் வேட்டையாடப்பட்டனர். பலர் கொல்லப்பட்டனர். 2013 செப்டம்பரில் இசுலாமிய சகோதரத்துவ அமைப்பு தடைசெய்யப்பட்டது. ஒரே நாளில் எழுநூறு இசுலாமிய சகோதரத்துவ அமைப்பினருக்கு எதிராக "நீதி விசாரணை" செய்யப்பட்டு இறப்புத் தண்டனை விதிக்கப்பட்டது. படைத் துறைத் தளபதி அப்துல் ஃபட்டா அல் சிசி 2014 ஜனவரியில் ஒரு புதிய அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கினார்.

எகிப்திற்கு புதிய அரசமைப்புச் சட்டப்படி அதிபர் தேர்தல் நடக்கும் என அறிவித்த அப்துல் ஃபட்டா அல் சிசி தானே அதிபர் தேர்தலில் போட்டியிடவும் செய்தார். மே 26, 27,28 திகதிகளில் தேர்தல் நடந்தது. அவருக்கு எதிரானவர்கள் தேர்தலைப் புறக்கணிக்கும் படி வேண்டுதல் விடுத்தனர். 2012 ஜூனில் மேர்சி வெற்றி பெற்ற தேர்தலில் வாக்காளர்களில் 52விழுக்காட்டினர் வாக்களித்தனர். அதிலும் அதிகமானவர்களை வாக்களிக்கச் செய்ய சிசி பலத்த முயற்ச்சி செய்தார். இரண்டுதடவைகள் தேர்தல் இறுதி நேரம் நீடிக்கப்பட்டு ஒரு நாளில் முடிவடைய வேண்டிய தேர்தல் மூன்று  நாட்கள் நடந்தன. வாக்காளரக்ளில் 47.5 விழுக்காட்டினர் மட்டுமே வாக்களித்தனர். ஆனால் சிசி வாக்களித்தவர்களில் 96 விழுக்காட்டினருக்கு அதிகமானவர்களின் வாக்குகளைப் பெற்றார். ஆனால் சிசிக்கு எதிரானவர்கள் தேர்தலில் முறைகேடுகள் நடந்தன என்றும் வாக்களித்தவர்களின் தொகை மிகைப்படுத்தப்பட்டவை என்றும் குற்றம் சாட்டுகின்றனர்.

2014-
ம் ஆண்டு உருவாக்கப் பட்ட அரசியலமைப்பின் படி இன்னும் எட்டு ஆண்டுகளுக்கு எகிப்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் எகிப்த்தின் படைத் துறையினரின் உச்ச சபையில் இருந்தே நியமிக்கப்பட வேண்டும். எகிப்திய தலைமை அமைச்சரையோ வேறு எந்த அமைச்சரையோ அதிபர் பதவி நீக்கம் செய்ய முடியாது. இனி வரும் பாராளமன்றத் தேர்தலில் இசுலாமிய சகோதரத்துவ அமைப்பால் தமது வேட்பாளர்களை வேறு அமைப்புக்களின் சார்பில் நிறுத்த முடியும்.

மொத்தத்தில் எகிப்தில் படைத்துறையினருக்கு எதிராக 2011இல் மக்கள் செய்த எழுச்சி தடம் மாறி இப்போது படைத்துறையினரின் கையில் வேறு விதமாக ஆட்சி மீண்டும் போய் இருக்கின்றது. மேற்கு நாட்டு ஊடகங்கள் அப்துல் ஃபட்டா அல் சிசி யின் ஆட்சியை விரும்புகின்றன. அவர் எகிப்தில் ஒரு உறுதியான ஆட்சியை அமைப்பார், எகிப்தின் பொருளாதாரத்தை நன்கு முன்னேற்றுவார், மக்களுக்கும் படைத்துறையினருக்கும் இடையிலான உறவை மேம்படுத்துவார் என ஆசிரியத் தலையங்கங்கங்களும் ஆய்வுக் கட்டுரைகளும் எழுதித் தள்ளுகின்றன. எகிப்த்தில் இசுலாமிய சகோதரத்துவ அமைப்பு ஆட்சியில் அமர்ந்ததை சவுதி அரேபியா விரும்பவில்லை. மேர்சியின் ஆட்சியுடன் அமெரிக்கா உறவை வளர்த்ததையும் சவுதி அரேபியா விரும்பவில்லை. சவுதி-அமெரிக்க உறவில் பாதிப்பு ஏற்பட்டது. மல்லைகைப் புரட்சியின் பின்னர் கடந்த மூன்று ஆண்டுகளாக மத்திய கிழக்கில் ஒரு சமநிலைக் குழப்பம் ஏற்பட்டுவிட்டது. இதை எகிப்தின் புதிய ஆட்சியாளர் மூலம் சீர் செய்ய அமெரிக்காவும் மேற்கு ஐரோப்பிய நாடுகளும் விரும்புகின்றன. மல்லிகைப் புரட்சியும் அதைத் தொடர்ந்து துனிசியா, எகிப்த்து, லிபியா, சிரியா ஆகிய நாடுகளில் நிலவும் குழப்பங்களும் வட அமெரிக்க மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகளின் கைகளை மீறியனவையாகவே இருக்கின்றன.

எகிப்தில் தேர்தலில் வெற்றி பெற்ற சிசிக்கு தொலைபேசி மூலம் வாழ்த்துத் தெரிவித்தார் பன்னாட்டு நாணய நிதியத்தைன் நிர்வாக இயக்குனர் Christine Lagarde. எகிப்திய மக்களுக்குத் தேவையான உதவியை பன்னாட்டு நாணய நிதியம் தயாராக இருப்பதாக அவர் சிசியிடம் தெரிவித்தார். மேற்கு உலகு நாடுகளுக்கு சார்பானவர்கள் எந்த நாட்டிலாவது ஆட்சியில் அமர்ந்தால் அங்கு பன்னாட்டு நாணய நிதியம் நிதி உதவி செய்வதும் கடன் கொடுப்பதும் ஒரு வழமையான நிகழ்வுகளாகும்.

சிறையில் இருக்கும் பதவி விலக்கப்பட்ட மொஹமட் மேர்சி புதிய அதிபர் தேர்தல் ஒரு படைத்துறையினரின் கலகம் என்றும் தனது ஆதரவாளர்களை அதற்கு எதிராகக் கிளர்ந்து எழும்படியும் அறைகூவல் விடுத்துள்ளார். எகிப்தில் உள்ள இசுலாமியத் தீவிரவாதிகள் புதிய ஆட்சியில் திருப்தியடையவில்லை. மதசார்பற்றவர்களும் எகிப்தில் அரபு வசந்தத்தை ஆரம்பித்தவர்களும் இசுலாமிய சகோதரத்துவ அமைப்பிலும் பார்க்க சீர்திருத்தப்பட்ட படைத்துறையினரின் ஆட்சி பரவாயில்லை எனக் கருதுகின்றனர். எஞ்சியவர்கள் யார் ஆண்டாலும் நாட்டில் அமைதியும் பொருளாதார அபிவிருத்தியும்தான் முக்கியம் எனக் கருதுகின்றனர். சிசி பதவிக்கு வந்த பின்னர் சிசி மூவாயிரம் பேர்வரை கொல்லப்பட்டுவிட்டனர் என அவரது எதிரிகள் குற்றம் சாட்டுகிறார்கள். சிசி பல ஊடகங்களைத் தடை செய்துள்ளார்.

26
உல்லாசப் பயணிகளுக்கான நிலைகள், 8 புதிய விமான நிலையங்கள், 22 கைத்தொழில் வலயங்கள் ஆகியவையும் அப்துல் ஃபட்டா அல் சிசியின் தேர்தல் வாக்குறுதிகளில் அடங்கும். அவரது திட்டங்களுக்கு 140 பில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படும். சிசி பதவி ஏற்ற மறு நாளே எகிப்திய உல்லாசப் பயணத் துறையை மீளவும் கட்டி எழுப்ப ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான நிதியம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

மகிழ்ச்சியில் இஸ்ரேல்.   
இசுலாமிய சகோதரத்துவத்தின் ஆட்சி எகிப்தில் ஒழித்துக் கட்டப்பட்டமை   இஸ்ரேலைப் பொறுத்தவரை ஒரு மகிழ்ச்சிகரமான நிகழ்வு. இசுலாமிய சகோதரத்துவ அமைப்பு உருவாக்கிய படைக்குழுதான் காசாவில் செயற்படும் ஹமாஸ் இயக்கம். இசுலாமிய  சகோதரத்துவ அமைப்பு ஆட்சிக்கு வந்தவுடன் துள்ளிக் குதித்த பல அமைப்புக்களில் ஹமாஸ் முக்கியமானது. மேர்சியின் ஆட்சி கலைக்கப் பட்டபின்னர் ஹமாஸிற்கு எதிரான சில நடவடிக்கைக்கள் எகிப்தில் எடுக்கப்பட்டன. ஹமாஸிற்க்கு ஈரானில் இருந்து கிடைக்கும் படைக்கல விநியோகங்களில் பெரும் பகுதி எகிப்தினூடாகச் செல்லும் சுரங்கப்பாதைகளினூடாக் நடக்கின்றன. எகிப்தின் ஊடாகச் செல்லும் சுரங்கப்பாதைகள் ஹ்மாஸின் பொருளாதர வருவாய்க்கும் முக்கியமானதாகும்.

எகிப்து மீண்டும் மேற்குலக சார்பு நாடானால் சிரியாவிற்கும் ஈரானிற்கும் ஆபத்து என்பதை அவற்றின் ஆட்சியாளர்கள் நன்கு உணர்வார்கள். அவர்கள் எகிப்தில் இசுலாமிய மதவாதிகளை ஊக்குவிக்கலாம். இனிவரும் காலங்களில் எகிப்து பொருளாதார மேம்பாட்டில் அதிக கவனம் செலுத்த வேண்டிய வேளை உள்நாட்டுக் கலவரங்களையும் சமாளிக்க வேண்டும். சிசியின் உயிருக்கே ஆபத்து ஏற்படலாம்.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...