ஈரானுடன் 2015-ம் ஆண்டு
ஐக்கிய அமெரிக்கா, இரசியா, சீனா,
பிரித்தானியா, பிரான்ஸ் ஆகிய ஐக்கிய நாடுகள்
சபையின் பாதுகாப்புச் சபையின் நிரந்தர உறுப்பு நாடுகள் ஐந்தும் ஜேர்மனியும்
இணைந்து ஈரானின் யூரேனியப் பதப்படுத்தல் தொடர்பாக ஒரு ஒப்பந்தம் செய்திருந்தன.
ஈரானுடன் ஒப்பந்தம் செய்த அந்த ஆறு நாடுகளும் P-5+1 என அழைக்கப்பட்டன. அந்த ஒப்பந்தத்தை 90 நாட்களுக்கு
ஒரு தடவை அமெரிக்க அதிபர் மீளாய்வு செய்து உறுதிப்படுத்தும் கையொப்பம் இட வேண்டும்.
2017-ம் ஆண்டு ஒக்டோபரில் அதை உறுதிப் படுத்தும் கையொப்பமிட அமெரிக்க அதிபர்
டொனால்ட் டிரம்ப் மறுத்துவிட்டார்.
P-5+1 நாடுகளுடன் ஈரான்
ஒப்பந்தம் செய்த பின்னர் 2015-ம் ஆண்டு மே மாதம் அமெரிக்கப் பாராளமன்றம் ஈரான் அணு
மீளாய்வுச் சட்டம் (Iran Nuclear Agreement Review Act) ஒன்றை பல இழுபறிகளுக்குப் பின்னர் நிறைவேற்றியது. ஆரம்பத்தில் அச்சட்டம்
ஈரானால் ஏற்றுக் கொள்ளாத வகையில் இருந்தது. அதனால் அதை தனக்கு இருக்கும்
நிறைவேற்று அதிகாரத்தைப் பாவித்து இரத்து செய்வேன் என அப்போது அமெரிக்க அதிபராக
இருந்த பராக் ஒபாமா பாராளமன்றத்தை மிரட்டினார். அதனால் அச் சட்டத்தில் பல
தரப்பினரும் ஏற்றுக் கொள்ளும் வகையில் பல மாற்றங்கள் செய்யப்பட்டன. அதனால் 100
உறுப்பினர்களைக் கொண்ட அமெரிக்கப் பாராளமன்றத்தின் மூதவையில் 98 உறுப்பினர்களின்
ஆதரவுடனும் 435 உறுப்பினர்களைக் கொண்ட மக்களவையில் 400
உறுப்பினர்களின் ஆதரவுடனும் நிறைவேற்றப்பட்டது. இரு அவைகளிலும் மூன்றில் இரண்டு
பெரும்பான்மைக்கு மேலான ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டமையால் அதை அதிபர் இரத்துச் செய்ய
முடியாத நிலை ஏற்பட்டது. 2016 நவம்பரில் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி
பெற்று 2017 ஜனவரியில் பதவி ஏற்ற டொனால்ட் டிரம்ப் இரண்டு தடவைகள் ஈரானுடனான
ஒப்பந்தத்தை தனது கையொப்பத்தை இட்டு உறுதி செய்துள்ளார். 2017 ஒக்டோபர் 15-ம்
திகதி அதை அவர் உறுதி செய்யவில்லை.
ஈரானின்
யூரேனியப் பதப்படுத்தல் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையில் இரண்டு முக்கிய தீர்மானங்கள் 2010-ம் ஆண்டிலும் 2015-ம் ஆண்டிலும் நிறைவேற்றப்படிருந்தன. 2010-ம் ஆண்டு ஐநா பாதுகாப்புச் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்-1929இல் சொல்லப்பட்ட வாசகங்களில் ஒன்று “Iran shall not undertake any activity” எனவும்;
2015-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானம்-2231இல் உள்ள வாசகம் “Iran
is called upon not to undertake any activity related to ballistic missiles”
எனவும் இருக்கின்றன. இவற்றில் shall not என்பது உத்தரவு எனவும், called upon என்பது அறிவுரை எனவும் நிபுணர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். 2015-ம் ஆண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட முன்னர் ஈரான் ஏவுகணைப் பரிசோதனையை மேற்கொண்டிருந்தால் அது தீர்மானத்தை மீறியதாகும்.
2010-ம் ஆண்டு செய்த தீர்மானத்தை 2015-ம் ஆண்டு செய்த தீர்மானம் பிரதியீடு செய்ததால் அது இப்போது நடைமுறையில் இல்லாததாகக் கருதப்படுகின்றது.
ஈரான் 2017 ஜனவரியில் செய்த எவுகணைப் பரிசோதனை ஐநா பாதுகாப்புச் சபையின் 2015 தீர்மானம்-2231ஐ மீறவில்லை. காரணம் அது ஈரானின் ஏவுகணைப் பரிசோதனையைத் தடை செய்யவில்லை. செய்ய வேண்டாம் என அறிவுரை மட்டும் சொல்கின்றது. 2010-ம் ஆண்டின் தீர்மானத்தில் இருந்த ஏவுகணைப் பரிசோதனையைத் தடைசெய்யும் வாசகம்
2015-ம் ஆண்டுத் தீர்மானத்திலும் இருப்பதை அமெரிக்கா வலியுறுத்தியது ஆனால் தீர்மானம் தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்திய இரசியா, சீனா, பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி ஆகிய நாடுகள் அதற்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. இதனால் பராக் ஒபாமா அமெரிக்காவில் உள்ள கடும் போக்குடைய வலதுசாரிகளின் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானார். ஈரானின் ஏவுகணைப் பரிசோதனை ஐநா தீர்மானத்தின் ஆன்மாவை அழித்து விட்டது என்பது டொனால்ட் டிரம்ப்பினதும் மற்றும் பல அமெரிக்கக் கடும் போக்காளர்களினதும் நிலைப்பாடாகும்.
ஈரான் தான் பரிசோதித்த ஏவுகணைகள் அணுக்குண்டுகளைத் தாங்கிச் செல்லவில்லை என்கின்றது. ஆனால் ஈரான் அணுக்குண்டுகளைத் தாங்கிச் செல்லக் கூடிய ஏவுகணைகளைப் பரிசோதிக்கின்றது என்கின்றது டிரம்பின் நிர்வாகம்..
ஈரான் இலேசுப்பட்ட நாடல்ல
மேற்காசியாவையும் வட ஆபிரிக்காவையும் பொறுத்தவரை சவுதி அரேபியாவிற்கு
அடுத்ததாக ஈரான் இரண்டாவது பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட நாடாகும். அப்பிராந்தியத்தில்
2016-ம் ஆண்டு அதன் மொத்தப் பொருளாதார உற்பத்தி 412.2 பில்லியன் அமெரிக்க
டொலர்களாகும். எகிப்திற்கு அடுத்த படியாக அதிக மக்கள் தொகை கொண்ட நாடாகும். ஈரானின்
மக்கள் தொகை 78.8மில்லியனாகும். மிள் எழுச்சியுறக்கூடியதும் தாங்குதறன் கொண்டதுமான
பொருளாதாரம், தொழில்நுட்ப விஞான வளர்ச்சி, கலாச்சார மேம்பாடு
ஆகிய மூன்றும் முக்கிய தூண்களாகக் கொண்டு ஈரானை அதன் மதவாத ஆட்சியாளர்கள் வழிநடத்துகின்றார்கள்.
ஈரானியப் பொருளாதாரம் ஈரான் மீதான மேற்கு நாடுகளின் பொருளாதாரத் தடையை நீக்கிய பின்னர்
பெரிதளவில் சீரடையவில்லை. தற்போதைய அதிபர் ஹசன் ரௌஹானியின் பொருளாதாரச் சீர்திருத்தம்
எதிர்பார்த்த வெற்றியளிக்கவில்லை என பழமைவாதிகள் வாதிடுகின்றனர். ஈரானில்
தீவிரவாதிகளின் கை ஓங்குவதைத் தடுக்கவே ஈரானுக்குச் சில விட்டுக் கொடுப்புக்களைச்
செய்து 2015-ம் ஆண்டு P-5+1 நாடுகள் ஒப்பந்தம் செய்தன.
ஈரானை அமெரிக்கா எதிர்ப்பதற்கான முக்கிய காரணங்கள்:
1. இஸ்ரேலை உலக வரைபடத்தில் இருந்து அழிக்க வேண்டும் என்ற ஈரானின்
கொள்கை.
2. இஸ்லாமியத் தீவிரவாதிகளுக்கு ஈரான் ஆதரவு வழங்குவது.
3. ஈரான் தான் ஒரு வல்லரசாக வேண்டும் என்ற திட்டத்துடன் இருப்பது.
4. சவுதி அரேபியாவின் மன்னர் குடும்பத்தையும் அதன் ஆட்சி முறைமையும்
ஈரான் எதிர்க்கின்றது.
5. அமெரிக்கா இறக்கட்டும் என்ற வாசகத்தை ஈரான் அடிக்கடி சொல்வது.
ஈரான் ஏவுகணைகளை பரிசோதனை செய்வதைத் தொடர்ந்து நடத்தினால் அதனால் தொலைதூரம் அதிக எடைகளைத் தாங்கிக் கொண்டு செல்லக் கூடிய ஏவுகணைகளை
உருவாக்க முடியும். ஒலியிலும் பார்க்க பல மடங்கு வேகத்தில் பாயக் கூடிய
ஏவுகணைகளைப் பெருமளவில் உற்பத்தி செய்யும் நிலை உருவானால் அது இஸ்ரேலின்
இருப்பிற்கு பெரும் அச்சுறுத்தலாகும். காசா நிலப்பரப்பில் இருந்து ஹமாஸ்
அமைப்பினர் மூலமாகவும் லெபனானில் இருந்து ஹிஸ்புல்லா அமைப்பினர் மூலமாகவும்
ஒலியிலும் பார்க்கப் பல மடங்கு வேகத்தில் பாயக் கூடிய ஏவுகணைகளை பெருமளவு
ஏவுகணைகளை இஸ்ரேலை நோக்கி வீசினால் அவற்றில் சில இஸ்ரேலின் ஏவுகணை எதிர்ப்பு
முறமைகளையும் தாண்டிச் சென்று இஸ்ரேலைத் தாக்கி பெரும் அழிவை ஏற்படுத்த முடியும்.
ஈரானை ஒட்டியுள்ள ஹோமஸ் நீரிணையிலும் மத்திய
தரைக்கடலிலும் அமெரிக்கா பலது படை நிலைகளை நிறுத்தியுள்ளது. ஈரானின் ஏவுகணைத்
தொழில்நுட்பத்தில் வளர்ச்சியடைந்தால் அமெரிக்கப் படை நிலகள் பல ஆபத்துக்கு
உள்ளாகும்.
இஸ்ரேலும் சவுதி அரேபியா உட்பட அமெரிக்காவின்
மற்ற நட்பு நாடுகள் கூட ஈரானுடன் 2015-ம் ஆண்டு செய்யப்பட்ட ஒப்பந்தம் கடுமையற்றது
எனச் சொல்லி பலத்த எதிர்ப்பைக் காட்டியிருந்தன.
சிரியாவிலும் ஈராக்கிலும் ஈரானின் ஆதிக்கம்
அதிகரித்து விட்டது
சிரியாவில் அதிபர் பஷார் அல அசாத்தைப் பதவியில்
இருந்து அகற்றும் முயற்ச்சியில் அமெரிக்கா தோல்வி கண்டு விட்டது. ஈராக்கில்
ஈராக்கிய அரசும் குர்திஷ் பிராந்திய அரசும் மோதலைத் தவிர்க்க வேண்டும் என
அமெரிக்கா வேண்டு கோள் விடுத்திருந்தது. ஆனால் குர்திஷ் போராளிகள் வசமிருந்து
எரிபொருள் வளம் மிக்க கேர்க்குக் பிராந்தியத்தை குர்திஷ் போராளிகளிடமிருந்து ஈராக்
கைப்பற்றியது. அந்தத் தாக்குதைல் ஈரானின் சிறப்புப் படையணியைச் சேர்ந்தவர்கள்
நேரடியாகச் சம்பந்தப் பட்டிருந்தனர் எனச் சொல்லப்படுகின்றது. ஈரானின் இது போன்ற
செயறாடுகள் அமெரிக்காவை விரக்தியடைய செய்கின்றது. அந்த விரக்தியின் வெளிப்பாடுதான்
ஈரானுடன் செய்து கொண்ட உடன்படிக்கை இரத்து எனவும் சொல்ல முடியும்.
மோதாமல் மோதும் ஈரானும் அமெரிக்காவும்
1979-ம் ஆண்டில் இருந்தே ஈரானுக்கும்
அமெரிக்காவிற்கும் இடையில் ஒரு மோசமான உறவு நிலவி வருகின்றது. 1979-ம் ஆண்டு ஈரானில் மதவாதப் புரட்சியால் மதவாதிகள்
அரசைக் கைப்பற்றியவுடன் 60 அமெரிக்கர்களை 444 நாட்கள் பணயக் கைதிகளாக
வைத்திருந்தனர். மதப் புரட்சிவாதிகள் கைது செய்ய முயன்ற மன்னர் ஷாவிற்கு அமெரிக்கா
புகலிடம் கொடுத்துக் காப்பாற்றியது. பணயக் கைதிகளை விடுவிக்க ஈரான் மீது செய்த
முயற்ச்சி தோல்வியில் முடிவடைந்த பின்னர் அமெரிக்காவும் ஈரானும் நேரடியாக
மோதவில்லை. ஆனால் ஈரானுடன் ஆதரவுடன் செயற்படும் ஹிஸ்புல்லா போராளிகள் 1983இலும்
1984இலும் அமெரிக்கப் படையினர் மீது லெபனானில் பெரும் தாக்குதல்களை மேற்கொண்டு பல
அமெரிக்கப் படையினரைக் கொன்றனர். ஈரானுக்கு எதிராக ஈராக்கின் சதாம் ஹுசேய்ன் போர்
தொடுத்த போது அமெரிக்கா மறை முகமாக ஈராக்கிற்கு பெரும் உதவிகளைச் செய்தது. சவுதி
அரேபியா, தன்சானியா, கென்யா
ஆகிய இடங்களில் உள்ள அமெரிக்கத் தூதுவரகங்கள் மீது தாக்குதல் நடத்திய
தாக்குதல்களின் பின்னணியில் ஈரான் இருப்பதாக அமெரிக்கா கருதுகின்றது. ஈரானில் உள்ள குர்திஷ் மக்களையும்
கிளர்ச்சி செய்ய திரைமறைவு ஆதரவு வழங்கியது. இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து பல இணையவெளித்
தாக்குதல்களை ஈரானுக்கு எதிராக நடத்தின. ஈரானில் உல்ல பலுச் இனக்குழுமத்தினரின் தீவிரவாத
நடவடிக்கைகளுக்கு பாக்கிஸ்த்தானில் உள்ள பலுச் போராளிக் குழுக்களூடாக அமெரிக்கா உதவிகள்
பல செய்தது. ஈரானுக்கு எதிரான பொருளாதாரத் தடை எதிர்பார்த்த அளவிற்கு ஈரானைப் பணிய
வைக்கவில்லை. ஈரானுக்கு எதிராக ஈராக் இருந்த போதே ஈரானை அமெரிக்காவால் ஒன்றும் செய்ய
முடியவில்லை. இப்போது ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் நிலைப்பாட்டில் தான் சம்பந்தப்பட
விரும்பவில்லை என ஈராக் அறிவித்துள்ள நிலையில் ஈரானை அமெரிக்காவால் அடக்க முடியாது.
ஒன்றின் மீது ஒன்று குரோதம் கொண்ட ஈரானினதும்
அமெரிக்காவினதும் படைகள் தற்போது ஈராக்கிலும் சிரியாவிலும் ஒன்றுடன் ஒன்று மோதக்
கூடிய வகையில் நிலை கொண்டுள்ளன. ஈரானுடனான P-5+1 நாடுகள் செய்த ஒப்பந்தத்தை டிரம் உறுதி
செய்யும் ஒப்பந்தத்தை அமெரிக்க அதிபர் உறுதி செய்ய மறுத்தாலும் அது உடனடியாக
ஒப்பந்தத்தைப் பெருமளவில் பாதிக்காது. அமெரிக்கப் பாராளமன்றம் ஈரான் மீதான
பொருளாதாரத் தடையை கொண்டு வரும் போது தான் பிரச்சனை உருவாகும். அதன் பின்னர் ஈரான்
தனது யூரேனியப் பதப்படுத்தலைத் தீவிரமாகத் தொடர்ந்தால் முதலாவதாக இஸ்ரேல்
இரகசியமாக ஈரானிய அணு உற்பத்தி நிலைகளைத் தாக்கி அழிக்க முயலலாம். இரண்டாவதாக
ஈரானிய அணுக்குண்டு அச்சுறுத்தலைச் சமாளிக்க சவுதி அரேபிய பாக்கிஸ்த்தானின் உதவியை
நாடலாம். ஒன்றில் பாக்கிஸ்த்தானின் உதவியுடன் சவதி அரேபிய அணுக்குண்டு
தயாரிக்கலாம் அல்லது பாக்கிஸ்த்தானிடமிருந்து அணுக்குண்டுகளைக் கொள்வனவு செய்யலாம்.
இவை யாவும் மேற்காசியப் பிராந்தியத்தின் நிலைமையை மேலும் மோசமாக்கும்.