
இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் தயாரிக்கப் பட்டபோது இந்தியாவின் பேரினவாதியான ஜவகர் லால் நேரு மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் வழங்கப் படுவதைத் தடுத்தார். இந்தியாவில் உள்ளது ஒரு அதிகாரப் பரவலாக்கமே அதிகாரப் பகிர்வு அல்ல. அதிகாரப் பரவலாக்கம் என்பது ஒரு நிர்வாக ஏற்பாடு மட்டுமே. அதிகாரப் பரவலாக்கத்தில் பிராந்திய அலகுகளுக்கு வழங்கப்பட்ட அதிகாரம் மைய அதிகாரத்தின் கட்டுப்பாட்டுக்குள்ளே இருக்கும்.
இலங்கையில் எழுச்சி பெற்ற தமிழ்த் தேசியவாதம் வெற்றி பெற்றால் அது இந்தியப் பேரினவாதிகளின் ஆதிக்கத்திற்கு ஆபத்து ஏற்படும் என்ற உணர்வில் இந்தியப் பேரினவாதம் 1980களில் செயற்படத் தொடங்கியது. அது இலங்கைப் பேரினவாதிகளுடன் கைகோத்துக் கொண்டது. அதிலிருந்து அது தமிழர்களுக்கு நண்பன் போல் நடித்து தமிழர்களுக்கு எதிரான மோசமான அடக்கு முறையில் ஈடுபட்டுள்ளது. இந்தியாவின் முன்னாள் பிரதம மந்திரியான ராஜீவ் காந்தி இலங்கை இனப் பிரச்சனை தொடர்பாகக் கூறும் போது இந்தியாவில் உள்ள அதிகாரப் பரவலாக்கதிற்கு கூடுதலான எந்த ஒன்றையும் இலங்கைத் தமிழர்களுக்கு வழங்கும் படி தன் இலங்கை அரசை வற்புறுத்தப் போவதில்லை என்று கூறியிருந்தார்.
இந்தியப் பேரினவாதத்தின் எல்லை தாண்டிய அடக்கு முறை முள்ளிவாய்க்காலில் முடிவடைந்த தமிழர்களுக்கு எதிரான் போருடன் முடிவடையவில்லை. தமிழ்த் உணர்வின் எந்த ஒரு அம்சத்தையும் இந்தியப் பேரினவாதம் விட்டு வைக்கப் போவதில்லை என்பதை அதன் இலங்கைப் பாராளமன்றத் தேர்தலுக்கு முன்னரான காய் நகர்வுகள் கோடிட்டுக் காட்டுகின்றன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சில கொள்கைகளின் அடிப்படையில் 2001-ம் ஆண்டு உருவாக்கப் பட்டது. அது விடுதலைப்புலிகளை தமிழ் மக்களின் ஒரே பிரதிநிதிகளாக ஏற்று கொண்டதுடன் அதை வலியுறுத்தியும் வந்தது. அந்த அடிப்படையில் அது இலங்கயில் 2001 இலும் 2004 இலும் நடந்த தேர்தல்களில் வெற்றியீட்டியது இந்தியாவிற்கு பெரும் எரிச்சலை ஏற்படுத்தியது.
இப்போது இந்தியா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உருமாற்றம் கொள்கை மாற்றம் செய்யும் முயற்ச்சியில் வெற்றி கண்டு வருவதாகத் தெரிகிறது. இந்தியாவின் தமிழர்களுக்கு எதிரான சதிகளை மோசடிகளை வெளிக் கொண்டு வந்தவர்களை ஓரம் கட்டப் பட்டுள்ளனர். இவர்களை ஓரம் கட்டிவிட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் புது முகங்கள் இணைக்கப் பட்டுள்ளனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்திய நிகழ்ச்சி நிரலில் அகப் பட்டுள்ளதாக அதன் தலைவர் இராசவரோதயம் சம்பந்தனிடம் வினவியபோது அதை அவர் நீதி மன்றத்தில் குற்றவளி குற்றச்சாட்டை மறுப்பது போல் அதற்கு ஆதாரம் இல்லை என்றுதான் மறுத்தார். இந்தியா தமிழர்களுக்கு துரோகமிழைத்தது அதை நாம் நம்பமாட்டோம் என்று கூறவில்லை. இலங்கையில் செயற்படும் பல இந்திய அடிவருடிகளை இந்திய அடிவருடிகள் என்று நிரூபிப்பதற்கு எந்த ஆதாரமும் இல்லையே!
எல்லை தாண்டிய இந்தியப் பேரினவாதம் தமிழர்களுக்கு மட்டும்தான் விரோதமானதா? இந்தியா ஒரு புளிய மரம் அது தன் நிழலில் எந்த ஒரு மரத்தையோ ஒரு சிறு புல்லையோ வளரவிடாது என்று ரோஹண விஜெயவீர கூறியதை சிங்கள மக்கள் மறந்துவிட்டார்களா?