பன்னாட்டு
நாணய நிதியம் 2017-ம் ஆண்டுக்கான உலகப் பொருளாதார எதிர்பார்ப்பு தொடர்பான தனது ஜூலை மாத அறிக்கையை வெளிவிட்டுள்ளது. கடந்த ஆறுமாதங்களாக உலகப் பொருளாதாரத்தின் போக்கினை அவதானித்து ஏற்கனவே வெளிவிட்ட அறிக்கையை அது புதிப்பித்துள்ளது. ஐக்கிய அமெரிக்காவிலும் ஐக்கிய இராச்சியத்திலும் தான் ஏற்கனவே வெளிவிட்ட பொருளாதார வளர்ச்சி எதிர்பார்ர்புக்களை பநாநிதியம் குறைத்துள்ளது. இவை இரண்டினதும் பொருளாதார வளர்ச்சி எதிர்பார்த்ததிலும் பார்க்க 0.2விழுக்காடு குறைவாக வளரும் என நிதியம் எதிர்வு கூறுகின்றது. உலகின் ஏனைய நாடுகளில் பெரும்பாலானவற்றின் பொருளாதார வளர்ச்சி எதிர்பார்த்ததிலும் அதிகமாக இருக்கும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.
அமெரிக்க நடுவண் வங்கி வாங்கியதை விற்கப் போகின்றது.
அமெரிக்க நடுவண் வங்கியின் ஆளுநர் சபைத் தலைவர் ஜனெட்
யெலென் 2017 ஜூலை 26-ம் திகதி நடந்த வங்கியின் நிதிக் கொள்கைக் கூட்டத்தின்
பின்னர் அமெரிக்காவில் விலை அதிகரிப்பு விழுக்காடு தொடர்ந்து குறைந்த நிலையில்
இருக்கின்றது என்பதனால் அமெரிக்க வட்டி விழுக்காடு அதிகரிக்கப்படவில்லை என
அறிவித்தார். ஆனால் அமெரிக்கப் பொருளாதாரம் தொடர்பான எதிர்பார்ப்பு நம்பிக்கைக்கு
உரியதாக இருப்பதால் அடுத்த கூட்டத்தில் அமெரிக்க மைய வங்கி தனது ஐந்தொகை நிலையை
மாற்றியமைக்கும் எனவும் தெரிவித்தார். அமெரிக்கப் பொருளாதாரம் நலிவடைந்த நிலையில்
இருக்கும் போது செய்த அளவுசார் தளர்ச்சி (Quantitative easing (QE)
மீளப்பெறப்படும் என எதிர்பாக்கப்படுகின்றது. அளவுசார் தளர்ச்சியின் போது
இலத்திரனியல் காசு உருவாக்கப்பட்டு அமெரிக்க அரசின் கடன் முறிகளை நடுவண் வங்கி
வாங்கியிருந்தது. அவற்றை இனி விற்பனை செய்யலாம்.. அதனால் நாட்டில் உள்ள
பணப்புழக்கம் குறைக்கப்படும். எதிர்கால விலைவாசி அதிகரிப்பு அதனால்
கட்டுப்படுத்தப்படும்.
புது
நோயாளி
2017-ம் ஆண்டு வளர்ச்சியடைந்த நாடுகளின் பொருளாதார வளர்ச்சி இரண்டு விழுக்காடாக இருக்கும் என முன்னர் எதிர்பார்க்கப்பட்டது. தற்போது அது மூன்றாக உயர்த்தப்பட்டுள்ளது. வளர்ச்சியடைந்த நாடுகளில் பொருளாதார ரீதியாக நோயாளியாகக் கருதப்பட்ட ஜப்பான் 2017-ம் ஆண்டு 1.5 விழுக்காடு பொருளாதார வளர்ச்சியைக் காட்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது. தற்போது ஜப்பானின் இடத்தை பிரித்தானியா பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வேறு சில பொருளாதார ஆய்வுகள் பன்னாட்டு நாணய நிதியம் எதிர்பார்ப்பது போல் பிரித்தானியா 1.7விழுக்காடு வளராது எனச் சொல்கின்றன. அந்த ஆய்வுகள் பிரித்தானியா 1.2 விழுக்காடு மட்டுமே வளரும் என எதிர்வு கூறுகின்றன. பிரித்தானியாவின் பவுண்டின் பெறுமதி வீழ்ச்சி அங்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலைகளை அதிகரித்தது. ஆனால் இந்த விலை அதிகரிப்பு மக்களின் செலவைக் கட்டுப்படுத்தியதால் பொருளாதார வளர்ச்சி தூண்டப்படவில்லை. வளர்ச்சியடைந்த நாடுகள்
பொருளாதார வளர்ச்சிக்கு உகந்த அரச நிதிக்கொள்கையையும் நாணயக் கொள்கையையும் (fiscal and monetary policy) கடைப்பிடித்தமை வெற்றியளிக்கின்றன.
இரு
புறமும் வளர்ச்சி
பொருளாதார
வளர்ச்சியை இருவகையில் தூண்டலாம். ஒன்று வேண்டல் (demand side) பக்கம் மற்றது வழங்கல் அல்லது நிரம்பல் (supply side) பக்கம். மக்களின் கொள்வனவைக் கூட்டி அதன் மூலம் பொருளாதாரத்தை வளர்ச்சியடையச் செய்தலும். மற்றது நிறுவனங்கள் தமது முதலீடுகளை அதிகரிப்பதன் மூலம் உற்பத்தியை அதிகரிக்கலாம். J.P. Morganஇன் கணிப்பின் படி உலக மக்களின் பொருட் கொள்வனவுச் செலவு (consumers’ expenditure in the goods
sector) 2017இன்
இரண்டாம் காலாண்டில் ஐந்து விழுக்காடு அதிகரித்துள்ளது. அதே வேளை உலகெங்கும் முதலீடுகளுக்கான செலவு ஆறு விழுக்காடு அதிகரித்துள்ளது. இது இயல்பான பொருளாதாரச் சுழற்ச்சியா அல்லது உலக நாடுகளும் உலக பொருளாதார அமைப்புக்களும் தொடர்ச்சியாக ஆறு ஆண்டுகள் எடுத்த நடவடிக்கையில் பலாபலனாகும். ஆனால் J.P. Morgan போன்ற நிறுவனங்கள் உலக பங்கு சந்தை வியாபாரத்தை அதிகரிக்க இப்படியான நற்செய்திகளை வெளிவிடும் இலுமினாட்டி கும்பல்களில் ஒன்று என்பதையும் நாம் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும்.
அமெரிக்கா
ஆடினால் உலகம் அதிருமா?
ஐக்கிய
அமெரிக்காவில்
பொருளாதார வளர்ச்சியின் வேகத்தைக் குறைக்கும் நடவடிக்கையில் அரசு ஈடுபடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அமெரிக்காவில் தொடர்ச்சியாக வேலையற்றோர் தொகை குறைந்து கொண்டு போவதால் பொருளாதார வளர்ச்சி வேகம் குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. தொடர்ந்து வீழ்ச்சியடையும் வேலையற்றோர் தொகையால் ஊதிய அதிகரிப்பு ஏற்பட்டு நாட்டில் பணவீக்கம் உருவாகும் என அமெரிக்க அரசு அஞ்சுகின்றது. அதனால் நாட்டின் வட்டி விழுக்காட்டைக் கூட்டி பொருளாதார வளர்ச்சி வேகம் குறைக்கப்படலாம்.
அமெரிக்காவின் பல
வங்கிகளின் ஐந்தொகை நிலைமை 2007-ம் ஆண்டு நடந்த உலகப் பொருளாதார வீழ்ச்சியின் போது மோசமாக இருந்தன. ஆனால் தற்போது அந்த வங்கிகளின் நிலைமைகள் பெருமளவு சீரடந்துள்ளது. அவற்றின் நீர்மை விகிதங்கள் (liquidity ratios) உயர்ந்துள்ளன. 2007இன் பின்னர் யூரோவலய நாடுகளின் வங்கிகள் பலவும் மோசமான நிலையில் இருந்தன. ஆனால் எல்லா வங்கிகளினதும் நிதி நிலைமை சீரடையவில்லை எனச் சொல்லலாம். ஐரோப்பிய ஒன்றியத்தின் ஐரோப்பிய நடுவண் வங்கி பல கட்டுப்பாடுகளை விதித்தது.
நிழல்
வங்கிகள்
அரசு
அனுமதி பெற்ற வங்கிகளின் செயற்பாட்டை அரசுக்குத் தெரியாமல் செய்யும் நிறுவனங்கள் அல்லது தனிப்பட்டவர்கள் நிழல்வங்கிகள் எனப்படும். 2007-ம் ஆண்டின் பின்னர் வங்கிகளின் திரவத் தன்மை குறைந்ததாலும் வங்கிகள் கடன் வழங்குவது தொடர்பாக நடுவண் வங்கிகள் கட்டுப்பாடு விதித்ததாலும் நிழல் வங்கிகள் உருவாகின. சீனாவில் மட்டும் நிழல் வங்கிகள் எட்டு ரில்லியன் டொலர்கள் பெறுமதியான கடனை வழங்கியிருந்தன. நிழல் வங்கிகளின் செயற்பாடுகள் உலகப் பொருளாதாரத்தின் உறுதியற்ற நிலையை மோசமாக்கின. வங்கிகள் வருவிகளுக்கு (derivatives) நிதி வழங்குவதைக் கட்டுப்படுதிய போது அமெரிக்காவிலும் மேற்கு ஐரோப்பாவிலும் நிழல்வங்கிகள் அத்துறைக்கு கடன் வழங்கின. இதனால் அமெரிக்க நடுவண் வங்கி சில வங்கிகள் முறிவடையும் நிலையில் இருந்து மீட்க வேண்டிய நிலையும் ஏற்பட்டது. முக்கியமாக வருவிகளுக்கு நிதி வழங்கிய AIG என்ற காப்புறுதி நிறுவனத்தை மீட்க 180பில்லியன் டொலர்கள் தேவைப்பட்டது. G-20 நாடுகள் 2009-ம் ஆண்டு உலக நிதி நிலைமையை சீர்படுத்த உருவாக்கிய நிதி உறுதிப்பாட்டுச் சபை (Financial Stability Board) மூலமாக எடுத்த பல நடவடிக்கைகள் நிழல் வங்கிகளின் செயற்பாட்டை பெருமளவு கட்டுப்படுத்தியுள்ளதாக 2017 ஜூலையில் நடந்த G-20 மாநாட்டில் தெரிவிக்கப்பட்டது. அதே வேளை நிழல்வங்கிகள் வேறு வடிவத்தில் வரலாம் எனவும் அங்கு எச்சரிக்கை விடப்பட்டது.
Macro-prudential policy
நாட்டில்
பணப்புழக்கத்தையும்
கடன் அதிகர்ப்பதையும் கட்டுப்படுத்துவதற்கு வட்டி விழுக்காட்டை அதிகரிப்பதிலும் பார்க்க வேறு சிறந்த நடவடிக்கைகள் என்ன எடுக்கலாம் என்பதைக் கண்டு பிடிப்பது தொடர்பாக உலக வங்கியியல் நிபுணர்களும் முன்னணி நாடுகளின் நடுவண் வங்கிகளும் கடுமையாக வேலை செய்கின்றன. வங்கிகள் கடன் கொடுக்கும் போது நம்பிக்கையாக சமர்ப்பிக்கப்படும் சொத்துக்கள் அல்லது அக்கடன் மூலம் பெறவிருக்கும் வருவாமானங்கள் இடையிலான விகிதத்தைக் கட்டுப்படுத்துவதும் ஒரு உபாயமாக முன்வைக்கப்பட்டுள்ளது. இதை macro-prudential policy என அழைக்கின்றனர். இது என்னும் பரீட்சிக்கப்படவில்லை. கடன்படுபவர்கள் தமது சொத்துக்களின் மதிப்பை அல்லது பெறும் கடன் மூலம் வரவிருக்கும் வருமான அதிகரிப்பை பல்வேறு வழிகள் மூலம் வேண்டுமென்றே அதிகரித்து மதிப்பிட்டு கடன் பெறும் போது வங்கிகளுக்குச் சமர்ப்பிக்கலாம்.
G-20 முயற்ச்சிகள்
G-20 நாடுகளும் அவற்றின் நிதி உறுதிப்பாட்டுச் சபையும் (Financial Stability Board) மீண்டும் ஓர் உலக நிதி நெருக்கடி ஏற்படாதிருக்க தொடர்ந்து பல நடவடிக்கைகளை எடுத்து அதில் ஓரளவு வெற்றியும் கண்டுள்ளன. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்ட தனியார் நிறுவனங்களைக் கட்டுப்படுத்தும் சட்டங்களை அதிபர் டொனால்ட் டிரம்ப் தளர்த்திக் கொண்டிருக்கின்றார். அவ்வகையான தளர்த்தல் அமெரிக்க வங்கித்துறையின் கடன் வழங்கும் தகமையை 2ரில்லியன் டொலர்களால் அதிகரிக்கும். வங்கிகளின் கடன் வழங்கல் மீதான கட்டுப்பாடு உலக அரசுகளின் கடன் முறிகளின் விலையைக் குறைத்துள்ளது. `
எதிர்ம பணவிக்கம்(deflation)
எதிர்ம பணவிக்கம்(deflation)
2007-ம் ஆண்டின் பின்னர் உலகப் பொருளாதாரம் வளர்ச்சியடையாமல் இருந்தமைக்கு ஒரு காரணியாக எதிர்ம
பணவிக்கம்(deflation)
முன்வைக்கப்பட்டது. ஜப்பானிலும் ஐரோப்பிய ஒன்றியத்திலும் இது பெரும் பிரச்சனையாக கருதப்பட்டது. சீனாவின் பொருளாதார வளர்ச்சி குன்றியமையால் உலகச் சந்தையில் மூலப் பொருட்களிற்கான தேவை குறைந்தது. இரசியாவிற்கு எதிரான மேற்கு நாடுகளின் நடவடிக்கையாலும் ஷேல் எரிவாயு உற்பத்தியாலும் ஒபெக் நாடுகள் உற்பத்தியைக் குறைக்கத் தவறியமையாலும் எரிபொருள் விலை வீழ்ச்சியடைந்தது. மசகு எண்ணெய் விலை 140 டொலரில் இருந்து 50 டொலருக்குக் கீழ் குறைந்தது. வெனிசுவேலாவில் ஏற்பட்ட உள்நாட்டுக் குழப்பமும்
அதற்காக அமெரிக்கா அந்த நாட்டுக்கு எதிராக எடுத்த பொருளாதார தடையும் 2017 ஓகஸ்டில்
மசகு எண்ணெய் விலையை 50 டொலருக்கு உயர்த்தி உள்ளது. எரி பொருள் விலை 50 டொலர்கள் வரை
குறைந்திருப்பதால் பொருட்களின்
விலையும் குறைவானதாக இருந்தது. எதிர்மபணவீக்கம் தற்போது
இல்லை என்றாலும் தாழ்
பணவீக்கம்
(lowflation) இப்போது ஒரு பிரச்சனையாக இருக்கின்றது. சரியான பொருளாதார வளர்ச்சிக்கு பணவீக்கம் குறைந்தது இரண்டு விழுக்காடாக இருக்க வேண்டும் என்பது பொருளாதார நிபுணர்களினது கருத்து. பெரும்பாலும் எல்லா முன்னணி நாடுகளின் நடுவண் வங்கிகளும் இரண்டு விழுக்காடு பணவீக்கத்தை இலக்காகக் கொண்டு செயற்படுகின்றன.
யூரோ
வலய நாடுகளில் தற்போது பணவீக்கம் ஒரு விழுக்காடாக இருக்கின்றது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கு இது தடையாக உள்ளது. அமெரிக்காவில் கடந்த சில ஆண்டுகளாக பணவீக்கம் எதிர்பார்த்ததிலும் பார்க்க குறைவாகவே உள்ளது என்றாலும் அது தற்போது இரண்டு விழுக்காட்டிலும் சற்று அதிகமாக உள்ளது. இதனால் வட்டி விழுக்காட்டைத் தாழ் நிலையில் வைத்திருக்க வேண்டியுள்ளது. அது யூரோ நாணயத்தின் பெறுமதிக்கு உகந்தது அல்ல. பொருளாதாரம் வளர்ச்சியடையும் போது பணவீக்கம் உருவாகும் என்பது பொதுவான கணிப்பு. ஆனால் கடந்த 2016-ம் ஆண்டின் ஆரம்பத்தில் இருந்து பல மேற்கு நாடுகளில் சீரான பொருளாதர வளர்ச்சியும் தாழ்பணவீக்கமும் நிலவுவது பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. பொருளாதாரச் சுழற்ச்சி இந்த வளர்ச்சிக்குக் காரணமாக இருந்தால் அடுத்த பொருளாதார விழ்ச்சி வராமல் இருக்க பணவிக்கம் உகந்த நிலையில் இருக்க வேண்டும். எரிபொருள் விலை வீழ்ச்சியடையும் நிலைதோன்றும் போதெல்லாம் அமெரிக்காவில் ஷேல் எரிகாற்று உற்பத்தி அதிகரிக்கப்படுகின்றது. எரிபொருள் விலை குறைந்த அளவில் இருப்பதால் எரிபொருள் உற்பத்தி நாடுகளின் வருமானம் பதிக்கப்பட அந்த நாடுகளின் கொள்வனவும் முதலீடும் குறைந்திருக்கின்றது. இது உலகப் பொருளாதார மொத்த உற்பத்தியைக் குறைக்கின்றது. அது உலகின் எரிபொருள் தேவையைக் குறைக்கின்றது. இந்தச் சுழற்ச்சி உலகப் பொருளாதாரத்தை தொடர்ந்து வளரவிடாமல் தடுக்கலாம்.
அமெரிக்கா
தனது நாட்டில் மக்கள் செய்யும் செலவை அளவிட Personal consumption expenditures
(PCE) Index என்னும்
சுட்டியைப் பாவிக்கின்றது. இது மக்கள் தமது வருமானத்தில் எந்த அளவைச் செலவிடுகின்றார்கள் என்பதைக் காட்டும். 2017 பெப்ரவரிவரை இந்த சுட்டி ஒரு சீரான ஏறு முகத்தில் இருந்தது அதன் பின்னர் ஒரு தளம்பல் நிலையை அடைந்துள்ளது. மார்ச்சில் அது வீழ்ச்சியடைந்தது. பின்னர் ஏப்ரலில் அது அதிகரித்தது. தொடர்ந்து மேயில் மீண்டும் வீழ்ச்சியடைந்தது.
உலகப் பொருளாதாரத்திற்கு இப்போது தேவைப்படுவது:
விலைகள் உயர உற்பத்தியாளர்களின் இலாபம் உயரும்
இலாபம் உயர முதலீடு உயரும்
முதலீடு உயர பொருளாதாரம் வளரும்