2900கிலோ எடையுள்ள மார்க்-84 குண்டுகளை ஐக்கிய அமெரிக்கா சவுதி அரேபியாவிற்கு விற்பனை செய்கின்றது. இக்குண்டு ஒன்று வீசப் படும் இடத்தில் 15மீட்டர் அகலமும் 11 மீட்டர் ஆழமும் கொண்ட பெரிய குழியை உருவாக்க வல்லது. அத்துடன் 381மில்லி மீட்டர் உலோகத்தை அல்லது மூன்றரை மீட்டர் கொங்கிறீட்டைத் துளைத்துக் கொண்டு சென்று வெடிக்கவும் வல்லது. இக்குண்டுகளை சவுதி அரேபியா யேமனில் வீசுகின்றது. அதனால் குழந்தைகள் உட்படப் பல அப்பாவிகள் கொல்லப் படுகின்றார்கள். யேமன் மக்கள் தொகையில் 83 விழுக்காட்டினர் வெளியாரின் உதவிகளால் தமது வயிற்றை நிரப்ப வேண்டிய பரிதாபகர நிலைக்குத் தள்ளப் பட்டுள்ளனர். இந்த அவலத்துக்குக் காரணம் என்ன?
ஹாதி ஹூதி இனக்குழும மோதலா?
2011-ம் ஆண்டு யேமனிலும் அரபு வசந்தம் எனப்படும் மக்கள் எழுச்சி உருவானது. அதுவும் சிரியாவைப் போலவே ஒரு பெரும் உள்நாட்டுப் போராக மாறியது. அதை ஹூதி இனத்தவர் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தி ஆட்சியைக் கைப்பற்ற முயன்றனர். அவர்களுக்கு ஈரானும் லெபனானில் இருந்து செயற்படும் சியா அமைப்பான ஹிஸ்புல்லாவும் ஆதரவு வழங்கின. தலைநகர் சனாவை 2014-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஹூதி போராளிகள் கைப்பற்றி அப்தரப்பு மன்சூர் ஹாதியைப் பதவியில் இருந்து விரட்டினர். ஆனால் தானே உண்மையான யேமன் ஆட்சியாளர் என்கின்றார் அவர். ஆனால் முன்னாள் யேமன் அதிபர் அலி அப்துல்லா சலேஹ் யேமனின் ஹாதி இனக்குழுமத்தினரதும் ஹூதி இனக்குழுமத்தினரதும் ஆதரவைப் பெற்றிருந்தார். ஆனால் யேமன் பிரச்சனை வெறும் ஹாதி - ஹூதி இனக் குழுமங்களுக்கு இடையிலான மோதல் மட்டுமல்ல.
சவுதி ஈரான் மோதலா?
ஈரானும் ஹிஸ்புல்லாவும் ஹூதிகளின் போராட்டத்திற்கு தமது ஆதரவைத் தெரிவித்து வருகின்ற போதிலும் தாம் படைத்துறையாக யேமனில் எந்தத் தலையீட்டையும் செய்யவில்லை என தொடர்ந்து தெரிவித்து வருகின்றன. பூகோள ரீதியில் யேமன் ஈரான் சார்பு ஆட்சியாளர்களின் கைகளில் இருப்பது சவுதி அரேபியாவிற்குப் பின்னடைவை ஏற்படுத்தலாம். செங்கடலுக்கும் ஏடன் வளை குடாவிற்கும் இடையிலான குறுகிய மண்டெப் நீரிணை (Mandeb Strait) யேமனை ஒட்டியே இருக்கின்றது. அதன் ஒரு புறத்தில் யேமனும் மறு புறத்தில் சோமாலியாவும் எதியோப்பியாவும் இருக்கின்றன. இந்த சிக்கலான நிலையில் யேமனில் சவுதியின் எதிரிகள் ஆட்சியில் அமர்வது ஆபத்தானதாகும். இதனால் 2015 மார்ச் மாதம் 26-ம் திகதி சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப் படையினர் யேமனில் ஹூதி இனத்தினர் மீது தாக்குதல் தொடுக்கத் தொடங்கினர். எகிப்து, மொரொக்கோ, சூடான், ஐக்கிய அரபு அமீரகம், குவைத், காட்டார், பாஹ்ரேன் ஆகிய நாடுகள் சவுதி அரேபியா தலைமையில் முதலில் விமானத் தாக்குதல்களை மேற்கொண்டனர். சோமாலியா இந்தக் கூட்டுப் படையினர் தனது நிலம், வானம், கடல் ஆகியவற்றைப் பாவிக்க இந்தக் கூட்டுப் படியினருக்கு அனுமதி வழங்கியுள்ளது. பாக்கிஸ்த்தானும் யேமனில் தாக்குதல் நடத்தும் நாடுகள் கூட்டமைப்பில் சேரவேண்டுமென சவுதி அரேபியா வற்புறுத்தியது ஆனால் பாக்கிஸ்த்தானியப் பாராளமன்றம் மறுத்து விட்டது. அரபு நாட்டிலேயே மிக வலுவுடைய படையினரைக் கொண்ட எகிப்து 800 படையினரை 2015-09-09-ம் திகதி அனுப்பியது. அத்துடன் குவைத் யேமனுக்குப் படை அனுப்பாமல் சவுதி அரேபியாவிற்கு அதன் எல்லைகளைப் பாதுக்காக்க தனது படையினரை அனுப்பியது. ஓமான் படையினரை அனுப்பவில்லை. சவுதி அரேபியாவும் ஐக்கிய அரபு அமீரகமும் மட்டுமே யேமனின் அதிக அக்கறை காட்டுகின்றன.
சுனி சியா மோதலா?
ஈரானும் சவுதி அரேபியாவும் நேரடியாக மோதாமல் மறைமுகமாக மோதுகின்றன. இந்த மோதல்களுக்கு சுனி சியா மோதல் என வெளியில் காட்டப் படுகின்றன, செய்திகளில் அடிபடுகின்றன. ஆனால் உண்மையான மோதல் சவுதி அரேபியாவை தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் அல் சவுத் அரச குடும்பத்தினருக்கும் ஈரானைத் தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் மதவாதிகளுக்கும் இடடயில் உள்ள மோதலே உண்மையான காரணம், சிரியாவில் ஈரானின் பிடியைத் தொடராமல் தடுக்க சவுதி அரேபியா எடுக்கும் முயற்ச்சி அங்கு பெரும் இரத்தக் களரியை கடந்த ஐந்து ஆண்டுகளாக ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றது. அங்கு நடப்பவை உலக அரங்கில் பெரும் செய்தியாக அடிபடுவது போல் சவுதி அரேபியா யேமனில் செய்யும் அட்டூழியங்கள் பெரிதாக வெளிவருவதில்லை. யேமனில் நடக்கும் மோதலை ஹாதிகளுக்கும் ஹூதிகளுக்கும் இடையிலான மோதலாகக் காட்டப் படுகின்றது. அதில் ஹாதிகள் சுனி இஸ்லாமியர்கள், ஹூதிகள் சியா முஸ்லிம்கள். ஹூதி இனக்குழுமத்தைச் சேர்ந்தவர்கள் அப்துல் மலிக் அல் ஹூதி என்பவரின் தலைமையில் அன்சரல்லா என்னும் அமைப்பில் இணைந்து போராடுகின்றார்கள்.
ஐ எஸ் அமைப்பு - அல் கெய்தா அமைப்பு மோதலா
யேமனில் அல் கெய்தாவின் செல்வாக்கை இஸ்லாமிய அரசு அமைப்பால் அசைக்க முடியவில்லை. இஸ்லாமிய அரசு அமைப்பு தனது யேமன் கிளையை 2014-ம் ஆண்டு உருவாக்கியது. அரபுக் குடாநாட்டிற்கான அல் கெய்தா அமைப்பில் ஆயிரக் கணக்கானா உறுப்பினர்கள் இருக்கின்றார்கள். இஸ்லாமிய அரசு அமைப்பில் நூற்றுக் கணக்கானவர்கள் மட்டுமே இருக்கின்றனர். இஸ்லாமிய அரசு அமைப்பின் முன்னணித் தலைவர்கள் பலர் சவுதி அரேபியர்களாக இருப்பதால் யேமனியர்கள் மத்தியில் அவர்களால் செல்வாக்குப் பெற முடியவில்லை. சவுதி அரேபியாடன் எல்லையைக் கொண்ட யேமனின் கிழக்குப் பிரதேசத்தில் அல் கெய்தா வலுவுடன் இருக்கின்றது. ஐக்கிய அமெரிக்காவின் ஆளில்லாப் போர் விமானங்கள் யேமனில் அல் கெய்தா உறுப்பினர்கள் மீது அடிக்கடி தாக்குதல்கள் நடத்திக் கொல்வதால் அவர்களால் முழுமையாகச் செயற்பட முடியவில்லை. ஆனால் இஸ்லாமிய அரசு அமைப்பு அடிக்கடி சியா இஸ்லாமியர்களான ஹூதிகள் வாழும் பகுதியில் அடிக்கடி தாக்குதல்கள் செய்கின்றது. அவற்றில் பெரும்பான்மையானவை சியா பள்ளிவாசல்களே. இப் பள்ளிவாசல் தாக்குதல்களை அல் கெய்தா கண்டனம் தெரிவிப்பதுண்டு. சவுதி அரேபியா தலைமையிலான கூட்டமைப்பு நாடுகள் யேமனில் செய்யும் தாக்குதல்களைச் சாதகமாகப் பயன்படுத்தி யேமனின் தென் பகுதியில் உள்ள நகரான அல் முக்கல்லாவையும் துறைமுக நகரான ஏடனையும் தன் வசப்படுத்திக் கொண்டது.
சவுதியின் சமாதான முன்னெடுப்பு
2012-ம் ஆண்டு சவுதி அரேபியா யேமனில் ஒரு சமாதான முன்னெடுப்பைச் செய்தது. ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை இந்த சமாதான முன்னெடுப்புக்கு ஆதரவு வழங்கின. அதன் படி யேமனின் ஆட்சிப் பொறுப்பில் இருந்து சலேஹா விலக்கப் பட்டு துணை அதிபர் Abed Rabbo Mansour Hadi அதிபராக்கப் பட்டார். இந்த சமாதான முன்னெடுப்பை பல ஹாதி இளையோர்களும் ஹூதிகளும் நிராகரித்தனர். இவர்களுடன் பதவியில் இருந்து அகற்றப்பட்ட சலேஹாவின் ஆதரவாளர்களும் இணைந்து கொண்டனர்.
ஐக்கிய அமெரிக்காவின் அயலாக்கம் (outsourcing)
யேமனில் தனது நாட்டுப் படையினர் காலடி எடுத்து வைப்பதில்லை என்பதில் சவுதி அரேபியா உறுதியாக இருந்தது. ஆனால் அமெரிக்காவின் வற்புறுத்தலின் பேரில் சவுதி அரேபியப் படையினர் யேமன் சென்றனர். உங்களுக்கான போரை நாம் செய்ய முடியாது. உங்களுக்கான போரை நீங்களே செய்து கொள்ளுங்கள் என மேற்காசியாவிலும் வட ஆபிரிக்காவிலும் உள்ள நட்பு நாடுகளுக்கு ஐக்கிய அமெரிக்கா தெரிவித்து விட்டது. இதனால் அமெரிக்கா தனது உலக ஆதிக்கத்தையும் அயலாக்கம் செய்துவிட்டது. இதனால் தனது படையினருக்கான ஆளணி இழப்பைத் தவிர்க்க முடியும். போர் புரியும் நாடுகளுக்கான படைக்கலன் விற்பனை மூலம் அமெரிக்கா பெரும் இலாபம் ஈட்ட முடியும். அப்பாவிகளைக் கொன்ற பழியில் இருந்தும் அமெரிக்காவால் தப்ப முடியும். சவுதி அரேபியா ஒரு போர் முனையைத் திறந்ததன் மூலம் தனது படையினருக்கு போர் முனை அனுபவத்தையும் சவுதி அரேபியா வழங்குகின்றது. ஒரு பிராந்தியத்தில் புவிசார் நிலைமைகள் அமெரிக்காவிற்கோ அல்லது அதன் நட்பு நாடுகளுக்கோ பாதகமாக அமையும் போது அங்கு தன் படைகளை அனுப்பாமல் அப்பிராந்திய நாடுகளின் படைகளைக் கொண்டே நிலைமையை தனக்கு சாதகமாக மாற்றும் அமெரிக்காவின் கள ஆய்வு சவுதி யேமனியில் நடக்கின்றது. ஐக்கிய அமெரிக்கா தனது செய்மதிகள் மூலமும் ஆளில்லாப் போர் விமானங்கள் மூலமும் உளவுத் தகவல்களைத் திரட்டி சவுதி அரேபியா தலைமையிலான கூட்டமைப்புப் படைகளுக்கு வழங்குகின்றன.
சவுதி அரேபியா தலைமையிலான கூட்ட்டுப்படையினர் யேமனின் 80 விழுக்காடு தமது கட்டுப்பாட்டில் இருப்பதாகச் சொல்கின்றனர். ஆனால் தலைநகர் சனாவும் இப், தாஜ் ஆகிய நகரங்களும் ஹூதிகளின் கட்டுப்பாட்டிலேயே இருக்கின்றன. தென் பகுதியும் தென் கிழக்குப் பகுதியும் அல் கெய்தா மற்றும் இஸ்லாமிய அமைப்பு ஆகியவற்றின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன. யேமனில் 25 இலட்சம் மக்கள் இடப்பெயர்வுக்கு உள்ளாகியுள்ளனர். ஆயிரக் கணக்கானோர் கொல்லப் பட்டுள்ளனர். பாடசாலைகள் மக்களுக்குத் தேவையான உள் கட்டுமானங்கள் பல குண்டு வீச்சுக்களால் அழிக்கப்படுகின்றன. ஆனால் இராணுவ இலக்குகள் மீது மட்டுமே தாம் தாக்குதல் செய்வதாக சவுதி அரேபியா கூறுகின்றது. பன்னாட்டு மன்னிப்புச் சபையும் மற்றும் பல அமைப்புக்களும் யேமனில் எல்லாத் தரப்பினரும் போர்க்குற்றம் புரிவதற்கான காத்திரமான ஆதாரங்களை முன்வைக்கின்றன. ஆனால் இந்த ஆதாரங்கள் எதுவும் ஐக்கிய அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ் ஆகிய நாடுகள் சவுதி அரேபியா தலைமையிலான கூட்டமைப்பு நாடுகளுக்கு படைக்கலன்களை விற்பனை செய்வதை நிறுத்தவில்லை. 2013-ம் ஆண்டில் இருந்து சவுதி அரேபியாவிற்கு ஐக்கிய அமெரிக்கா 35.7 பில்லியன் டொலர்கள் பெறுமதியான படைக்கலன்களை விற்பனை செய்துள்ளது. இவற்றில் 18,440 குண்டுகளும் 1500 ஏவுகணைகளும் அடக்கம். பிரித்தானியா டேவிட் கமரூனின் ஆட்சியில் சவுதி அரேபியாவிற்கு விற்பனை செய்த படைக்கலன்களின் பெறுமதி 9பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமாகும். இத்தனைக்கும் மத்தியில் ஜெனீவாவில் உள்ள மனித உரிமைக்கழகத்தின் ஆலோசனைத் தலைவராக சவுதி அரேபியாவைச் சேர்ந்தவர் நியமிக்கப்பட்டுள்ளார்!
கள ஆய்வு வேறு இடங்களில் பயன்படுத்தப்படுமா?
யேமனில் தாக்குதல் நடத்தும் சவுதி அரேபியா தலைமையிலான கூட்டமைப்பின் படைகளின் கட்டளை-கட்டுப்பாட்டுப் பணியகம் அமெரிக்க மற்றும் பிரித்தானிய படைத்துறை நிபுணர்களால் நிரம்பி வழிகின்றது. வெவ்வேறு நாடுகளின் படைகளை மேற்கு நாட்டுப் படைகள் சொகுசுக் இருக்கைகளில் அமர்ந்து கொண்டு கணniத் திரைகள் மூலம் போர் முனையில் நெறிப்படுத்துவது பற்றிய கள ஆய்வு வெற்றியளித்தால் அது தென் சீனக் கடல் கிழக்கு ஐரோப்பியா போன்றவற்றிலும் பயன்படுத்தப்படலாம்.
Subscribe to:
Posts (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
சீனாவிற்கு எதிரான படைத்துறை ஒத்துழைப்பில் சிறந்த நட்பாக இந்தியாவைக் கருதும் அமெரிக்காவிற்கு ஏமாற்றமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2019 மார்ச்...