Wednesday, 24 November 2021

உக்ரேனை இரசியா ஆக்கிரமிக்குமா?

  


94,000 இரசியப் படையினர் உக்ரேன் எல்லையில் குவிக்கபட்டு போர் பயிற்ச்சியில் ஈடுபட்டுள்ளனர் என அமெரிக்கப் பாதுகாப்புத்துறையை மேற்கோள் காட்டி புளூம்பேர்க் ஊடகம் 2021 நவம்பர் 21-ம் திகதி தகவல் வெளியிட்டது. உக்ரேன் அரசு பிரிவினைவாதிகள் கையில் உள்ள உக்ரேனின் கிழக்குப்பகுதியில் உள்ள Donetsk மற்றும் Luhansk பிரதேசங்களில் இரசியப் படைகள் தமது ஆக்கிரமிப்புத் தாக்குதல் தயார் நிலையை விரிவு படுத்தி வருகின்றன என அறிவித்துள்ளது. உக்ரேனின் இறைமைக்குட்பட்ட அந்த இரண்டு பிரதேசங்களும் 2014இல் தம்மை தனி நாடுகளாக பிரகடனப் படுத்தியுள்ளன. 2014இல் உக்ரேனின் கிறிமியாப் பகுதியை இரசியா தன்னுடன் இணைத்துக் கொண்டது. அமெரிக்கப் படைத்துறையினர் மற்ற நேட்டோ உறுப்பு நாடுகளுக்கு உக்ரேன் எல்லையை நோக்கி இரசியா படைநகர்வு செய்வதைப் பற்றி அறிவுறுத்தியுள்ளார். அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலர் அண்டனி பிளிங்கென் உக்ரேனை ஆக்கிரமிப்பது பற்றி இரசியாவிற்கு தன் எச்சரிக்கையையும் தெரிவித்துள்ளார்

எல்லைகளில் தொல்லை

இரசியா உக்ரேன் எல்லையில் படைகளைக் குவிக்கையில் இரசியாவின் நட்பு நாடான பெலரஸ் போலாந்து எல்லையில் பெருமளவு தஞ்சக் கோரிக்கையாளர்களை மேற்காசிய நாடுகளில் இருந்து கொண்டு வந்து குவித்திருந்தது. ஐரோப்பிய ஒன்றியம் பெலரஸ் மீது மேலும் பொருளாதாரத் தடையை அதிகரிக்கலாம் என அறிவித்ததைத் தொடர்ந்து பெலரஸ் தஞ்சக் கோரிக்கையாளர்களை போலாந்து எல்லையில் இருந்து அகற்றி விட்டது. பெலரஸின் பின்னால் இரசியா நின்று செயற்படுவதாக மேற்கு நாட்டு ஊடகங்கள் குற்றம் சுமத்தின. இரசியா மேன் படையினரையும் (Reserve Force) என்றுமில்லாத அளவில் திரட்டுவதாக செய்திகள் வெளிவந்துள்ளன. 2021 நவம்பர் முதலாம் திகதி அமெரிக்க உளவுத்துறையான சிஐஏயின் அதிபர் வில்லியம்ஸ் பேர்ண் இரசியா சென்று உக்ரேனை இரசியா ஆக்கிரமிப்பிற்கு எதிரான அமெரிக்காவின் எச்சரிக்கையை இரசியாவிடம் தெரிவித்திருந்தார்.

கேந்திர முக்கியம்மிக்க உக்ரேன்

இரசியாவிற்கு அடுத்தபடியாக ஐரோப்பாவில் இரண்டாவது பெரிய நிலப்பரப்பைக் கொண்ட நாடாக இருக்கும் உக்ரேன் இரசியாபோலாந்துசுலோவேனியாஹங்கேர்பெலரஸ்மொல்டோவாருமேனியா ஆகிய நாடுளுடனும் அஜோவ் கடலுடனும் செங்கடலுடனும் எலைகளைக் கொண்டுள்ளது. இரசிய எல்லையில் உக்ரேனுக்குள் உயர் மலைத் தொடர் இருப்பது இரசியாவைப் பொறுத்தவரை உக்ரேன் ஒரு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த நாடாகும். உக்ரேன் இரசியாவின் எதிரிகளின் கைகளில் இருந்தால் அது இரசியாவிற்கு பெரும் அச்சுறுத்தலாக அமையும். அதனால் உக்ரேன் நேட்டோவில் இணைவதை எந்த விலை கொடுத்தும் தடுப்பதற்கு இரசியா தயாராக உள்ளது என்பதை உக்ரேனுக்கு எதிராக இரசியா 2014இல் செய்த படை நடவடிக்கை எடுத்துக் காட்டுகின்றது.

இரசியாவின் செய்மதி அழிப்பு ஏவுகணைப் பயமுறுத்தல்

இரசியா தனது செய்மதி அழிப்பு ஏவுகணைகளை (AST Anti Satellite Missiles) 2021 நவம்பர் 15-ம் திகதி வெற்றிகரமாக பரிசோதித்தது. இரசியாவில் இருந்து விண்ணை நோக்கி செலுத்தப்பட்ட ஏவுகணை Direct-Ascent missile வகையைச் சார்ந்தது. அது தரையில் இருந்து செலுத்தப்பட்டு நேரடியாக இலக்கின் மீது மோதி வெடிக்கக் கூடியது. விண்வெளியி இருந்த இரசியாவின் சொந்த செய்மதி ஒன்றை அது அழித்த போது பல துண்டங்களாக சிதறியது. அத்துண்டங்கள் வான்வெளியில் உள்ள பல செய்மதிகளுக்கு ஆபத்தானவை என்பதால் அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிலையமான நாசா கடும் விசனமடைந்தது. இரசியாவால் முப்பதிற்கு மேற்பட்ட அமெரிக்க செய்மதிகளை அழித்து அமெரிக்க படையினரைக் “குருடாக்க” முடியும் என்ற இரசிய உளவுத்துறை தெரிவித்தது.

பொருளாதார காரணிகள்

உக்ரேன் இரசியாவின் யூரேசியா பொருளாதாரக் கூட்டணையில் இணைய வேண்டும் என இரசியா விரும்புகின்றது. இரசியா பொருளாதார வலிமையை அடைவதை விரும்பாத மேற்கு நாடுகள் உக்ரேன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதை விரும்புகின்றன. ஆனால் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதறகான நிபந்தனைகளை நிறவு செய்யும் அளவிற்கு அதன் பொருளாதாரம் இன்னும் மேன்மையடையவில்லை. அதனால் ஐரோப்பிய ஒன்றியம் உக்ரேனுடன் சில வர்த்தக் ஒப்பந்தங்களைச் செய்துள்ளது. அவற்றின்படி ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆழமானதும் முழுமையானதுமான சுதந்திர வர்த்தக வலயத்தில் உக்ரேனும் ஒரு நாடாக இணைந்துள்ளது. இதில் உக்ரேனைப்போலவே மொல்டோவா, ஜேர்ஜியா ஆகிய நாடுகளும் உள்ளன.

இருதலைக் கொள்ளியெறும்பாக அமெரிக்கா

அமெரிக்கா இந்தோ பசுபிக் பிராந்தியத்தில் அதிக கவனம் செலுத்துவதற்காக இரசியாவுடனான தனது முறுகல் நிலையை உறை நிலையில் வைத்திருக்க முடிவு செய்திருந்தது. இரசியா உக்ரேன் மீதும் சீனா தைவான் மீதும் ஒரேயடியாக தாக்குதல் செய்தால் அமெரிக்காவால் இரண்டு முனைகளில் அதிக அளவு மீயுயர் ஒலிவேக ஏவுகணைகளை (Hypersonic Missiles) வைத்திருக்கும் இரு வல்லரசு நாடுகளுடன் போர் செய்ய முடியாது. இதை இரசியா தனக்கு சாதகமாகப் பார்க்கின்றது. அத்துடன் 2010-ம் ஆண்டில் இருந்து அமெரிக்காவிற்கு பல தொல்லைகளை இரசியா கொடுத்து வருகின்றது. சிரியாவில் அமெரிக்காவை வலுவிழக்கச் செய்தது. அமெரிக்காவில் பல இணையவெளி ஊடுருவல் இரசியாவில் இருந்து செய்யப்பட்டதாக அமெரிக்கா குற்றம் சாட்டியிருந்தது.

இரசியாவின் வரவு செலவுக் கணக்கு

உக்ரேனின் டொன்பாஸ் பகுதிக் கிளர்ச்சிக்காரர்களுக்கு உதவி செய்வதற்கு இரசியா பெருமளவு செலவழிக்க வேண்டி இருக்கின்றது. உக்ரேனை முழுமையாக கைப்பற்றினால் இந்தச் செலவுகளைத் தவிர்க்கலாம் என்ற கருத்து இரசியாவில் முன்வைக்கப்பட்டுள்ளது. 2014-ம் ஆண்டில் இருந்ததிலும் பார்க்க உக்ரேனியப் படைகள் தற்போது அதிக பயிற்ச்சியும் மேலதிகப் படைக்கலன்களையும் அமெரிக்காவிடமிருந்து பெற்றுள்ளது. இரசியாவின் ஆக்கிரமிப்புத் திமிரால் உக்ரேனியர்கள் அதிக சினம் கொண்டுள்ளனர். அதனால் உக்ரேனியப் படையினர் அதிக ஈடுபாட்டுடன் இரசியர்களை எதிர்ப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. உக்ரேனை பெருமளவு இழப்புக்களுடன் இரசியா கைப்பற்றினாலும் அதை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்க இரசியா பெருமளவு செலவு செய்ய வேண்டியிருக்கும்.



இரசியாவின் தாக்குதல் திட்டம்

உக்ரேனின் உளவுத்துறையின் அதிபர் ஜெனரல் கிரிலொ பனரனோவ் வெளியிட்ட தகவலின் படி இரசியா வானில் இருந்து ஆகாயக்குடைகள் மூலம் தரையிறக்கல், கடல்வழி ஈரூடக தரையிறக்கல், தரைவழி நகர்வு ஆகியவற்றின் மூலம் உக்ரேனை ஆக்கிரமிக்க திட்ட மிட்டுள்ளது. உக்ரேனை இரசியா பத்து முனைகளில் நாற்பது Battalion Tactical Groups (BTGS) மூலம் தாக்கலாம் என்றான் பனரனோவ். 94,000 படையினர் 1200 தாங்கிகள், 1600 சேணேவிகள், (ஆட்டிலெறிகள்), 330 போர்விமானங்கள், 75 கப்பல்கள், 6 நீர்மூழ்கிகள் போன்றவற்றுடன் உக்ரேனை ஆக்கிரமிக்கலாம். மிகவுக் குளிரான கால நிலை நிலவும் ஜனவரி இறுதி அல்லது பெப்ரவரி ஆரம்பித்தில் இரசியா தனது ஆக்கிரமிப்பை மேற்கொள்ளலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. இரசியப் படைத்துறையின் பேச்சாளர் உலகெங்கும் படைகளை அனுப்பும் நாடுகள் எமது நாட்டு எல்லைக்குள் எமது படையினர் செய்யும் நகர்வுகளை போர் என பீதியைக் கிளப்புகின்றனர் என்றார். இரசிய உளவுத்துறையின் (SVR) அறிக்கை: அமெரிக்கா பயமூட்டுகின்றது. (“Whipping up hysteria”) எனத் தெரிவிக்கின்றது.

Tuesday, 23 November 2021

சீன டெனிஸ் வீராங்கனை Peng Shuai கணாமற் போனது ஏன்?

 


ZHANG GAOLI என்னும் சீனாவின் முன்னாள் துணை தலைமை அமைச்சர் 2018-ம் ஆண்டு தன்னை மிரட்டி உடலுறவு கொண்டதாக Peng Shuai நவம்பர் இரண்டாம் திகதி சீன சமூக வலைத்தளமான Weiboவில் குற்றம் சாட்டினார். அவரது பதிவு 34 நிமிடங்களில் நீக்கப்பட்டது.

சீனப் பொதுவுடமைக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் ஜியாங் ஜெமின் தற்போதைய பொதுச் செயலாளரும் அதிபருமான ஜீ ஜின்பிங் மீது கடும் அதிருப்தியில் உள்ளார். ஜீ ஜின்பிங்கை அவர் பதவியில் இருந்து அகற்ற முயற்ச்சி செய்யலாம் என ஜீ அஞ்சுகின்றார். அதனால் அவரது ஆதரவாளரகளை பொதுவுடமைக் கட்சியில் இருந்து அகற்ற ஜீ முயற்ச்சி செய்கின்றார். ஜீ ஜின்பிங் இலக்கு வைத்தவர்களில் முக்கியமானவர் சீனாவின் முன்னாள் துணை தலைமை அமைச்சர் ZHANG GAOLI ஆகும். அவர் மீதுதான் சீன டெனிஸ் வீராங்கனை Peng Shuai பாலியல் குற்றச் சாட்டை சுமத்தினார். சீனாவில் இது போன்று பொதுவுடமைக் கட்சியின் உயர் அதிகாரிகள் மீது விளையாட்டு வீரர்கள் குற்றம் சாட்டுவதில்லை. Peng Shuai குற்றம் சாட்டு வைத்தமையை ஜீ ஜின்பிங் தன் எதிரிகளை பழிவாங்க செய்யும் நகர்வுகள் என முதலில் மேற்கு நாடுகள் குற்றம் சாட்டியிருந்தன.

இரண்டு தடவை விம்பிள்டனிலும் பிரெஞ் திறந்த போட்டியிலும் வெற்றி பெற்ற டெனிஸ் வீராங்கனை Peng Shuai பாலியல் குற்றச் சாட்டை வைத்த சில நாட்களில் காணாமல் போய்விட்டார். அவர் பற்றிய செய்திகள் யாவும் தணிக்கை செய்யப்பட்டன. ZHANG GAOLI மீது சுமத்தப் பட்ட குற்றச் சாட்டு போல் மேலும் பல பொதுவுடமைப் புள்ளிகள் மீதும் டெனிஸ் வீராங்கனை Peng Shuai குற்றம் சுமத்தலாம் என்பதால் அவரது வாயை மூடுவதற்காக அவர் தடுத்து வைக்கப்பட்டிருக்கலாம். அல்லது வேறு பல சீனப் பெண் விளையாட்டு வீரர்களும் இதே போன்ற குற்றச் சாட்டை வைக்கத் தொடங்கினால் பல சீன தலைகளில் தலைகளுக்கு இடர் ஏற்படலாம் என்ற அச்சத்திலும் டெனிஸ் வீராங்கனை Peng Shuai தடுத்து வைக்கப்பட்டிருக்கலாம்.

சீனாவில் தமக்கு இழைக்கப்பட்ட பாலியல் கொடுமைகளை பல்கலைக்கழக மாணவிகள், ஊழியர்கள், விளையாட்டு வீரர்கள் சீன அதிகாரிகளுக்கு எதிராக சுமத்திய போது குற்றம் சாட்டப்பட்டவர்கள் தண்டிக்கப்படுவதில்லை, குற்றம் சாட்டுபவர்களே தண்டிக்கப்படுகின்றார்கள் என அமெரிக்க ஊடகங்கள் குற்றம் சாட்டுகின்றன.

Peng Shuai தனக்கு இழைக்கப்பட்ட கொடுமையை #MeToo பரப்புரையாளர்களிடம் முறையிட்டார். சீனா பெண்ணுரிமைச் செயற்பாட்டாளர்களை விரும்புவதில்லை. #MeToo பரப்புரையாளர்களை சீனா கடுமையாக வெறுக்கின்றது. எட்டு வயதில் டெனிஸ் ஆடத் தொடங்கிய 12 வயதில் இருதய சிகிச்சை செய்யப்பட்டார். அதன் பின்னர் அவர் டெனிஸ் விளையாட முடியாது எனச் சொன்ன போதும் அவர் தன் விடா முயற்ச்சியால் சீனாவின் சிறந்த விளையாட்டு வீரர்ராக உருவெடுத்தார். சீனாவின் விளையாட்டுத் துறையின் விதிகளின் படி விளையாட்டு வீரர்கள் உலக அரங்கில் விளையாடுவதால் கிடைக்கும் வருவாயின் அரைப்பங்கை அரசுக்கு கொடுக்க வேண்டும். இதை எதிர்த்து முதல் போர்க்கொடி உயர்த்தையவர் Peng Shuai. நாட்டுக்காக விளையாட மாட்டேன் என அவர் சூளுரைத்தபோது அவரைத் தேசத் துரோகியாக சீன ஊடகங்கள் சித்தரித்தன.

2021-11-21 ஞாயிற்றுக் கிழமை 35 வயதான Peng Shuai ஒலிம்பிக் அதிகாரி தோமS பச்சுடன் காணொளியில் உரையாடியதாக செய்தி வெளிவந்தது. இருந்தும் அவரது பாதுகாப்பு பற்றி அந்த அதிகாரி திருப்தியடையவில்லை. அவருடன் உரையாடலில் கலந்து கொண்ட பெண் அதிகாரி ஒருவர் Peng Shuai நலமுடன் இருப்பது நிம்மதியளிக்கின்றது என்றார்.

உலக டெனிஸ் அமைப்பின் அதிகாரி 2021 நவம்பர் 22 திங்கட் கிழமை Peng Shuai உடன் இன்னும் ஒரு காணொளி உரையாடலை மேற்கொண்டார். WTA எனப்படும் உலக டெனிஸ் அமைப்பின் தலைவர் ஸ்டீவ் சைமன் Peng Shuaiஇன் பாதுகாப்பு உறுதி செய்யப்படாதவிடத்து தங்கள் அமைப்பில் இருந்து சீனாவை வெளியேற்றுவோம் என்றும் கருத்து வெளியிட்டிருந்தார். இரு பெரும் டெனிஸ் ஆட்டக்காரர்களான Roger Federer, Rafael Nadal ஆகியோர் Peng Shuaiஇற்கு ஆதரவாக கருத்து வெளியிட்டனர். 2022 பெப்ரவரியில் சீனாவில் குளிர்கால ஒலிம்பிக் போட்டி நடைபெறவிருக்கின்றது. மேற்கு நாடுகள் அதைப் புறக்கணிப்பதற்கு காரணம் தேடிக் கொண்டிருக்கையில் Peng Shuai காணாமல் போகச் செய்யப்பட்டுள்ளார். பன்னாட்டு விளையாட்டு அமைப்புக்கள் அவர் மீது காட்டிய அக்கறைக்கு சீன அரசு பணிந்து விட்டதா?

Monday, 22 November 2021

ஜெர்மனியின் தெரிவு ஜப்பானின் பாதையா சுவிஸின் பாதையா?

  


ஜெர்மனியின் புதிய அரசு தனது பொருளாதாரப் பாதையையும் தேசியப் பாதுகாப்பையும் ஒன்றுக்கு ஒன்று ஈடு செய்யும் வகையில் நகர்வுகளை மேற்கொள்ள வேண்டும். ஜெர்மனி தனது பாதுகாப்பிற்கு ஒதுக்கும் நிதி போதாது என அதன் நேட்டோ நட்பு நாடான அமெரிக்கா குற்றம் சாட்டுகின்றது. ஜெர்மனி பாதுகாப்பிற்கு அதிக நிதியை செலவிட்டால் அதிக வரி சேகரிக்க வேண்டும். அது பொருளாதாரத்தைப் பாதிக்கும். இரசியாவிற்கும் சீனாவிற்கும் எதிராக கடுமையான நிலைப்பாட்டை ஜெர்மனி எடுத்தால் அந்த இரண்டு நாடுகளுடனான வர்த்தகம் பாதிக்கப்படலாம். ஜெர்மனியின் இந்த நிலைப்பாட்டில் அமெரிக்காவிற்கு உடன்பாடில்லை.

இரசிய – பெலரஸ் படை ஒத்திகை

இரசியா பெலரஸுடன் இணைந்து ஆண்டு தோறும் செய்யும் “மேற்கு” என்னும் பெயர் கொண்ட படைத்துறை ஒத்திகை போல்ரிக் நாடுகளையும் சுவிஸ், பின்லாந்து போன்ற நடுகளையும் ஜெர்மனியையும் கைப்பற்றும் இலக்குடன் செய்யப்படுவதாக இருக்கின்றது என்ற குற்றச் சாட்டு 2017-ம் ஆண்டில் இருந்தே முன் வைக்கப்படுகின்றன. நேட்டோ நாடுகள் செய்யும் ஒத்திகை எப்படி இரசிய ஆக்கிரமிப்பை முறியடிப்பது என்பதை இலக்காகக் கொண்டுள்ளன. மிகப் பெரிய நிலப்பரப்பைக் கொண்ட இரசியாவை கைப்பற்றி ஆளக் கூடிய படை வலிமை உலகின் எந்த ஒரு நாட்டிடமும் இல்லை. ஆனால் மேற்கு நாடுகள் இரசியா பிளவு படுவதை விரும்புகின்றன.

ஜெர்மனியின் பசுமைக் கட்சியும் சமூக மக்களாட்சிக் கட்சியும்

ஜெர்மனியின் பசுமைக் கட்சியும் சமூக மக்களாட்சிக் கட்சியும் தமது மண்ணில் அணுக்குண்டுகள் இருக்கக் கூடாது என்ற கொள்கையைக் கொண்டுள்ளது. அமெரிக்கா ஜெர்மனியில் வைத்துள்ள படைத்தளங்களில் அணுக் குண்டுகளும் உள்ளன. உலக அமைதிக்கும் மனித குலத்தின் இருப்புக்கும் அணுக்குண்டுகள் மிக ஆபத்தானவை. ஆனால் ஜெர்மனியின் போட்டி நாடான இரசியாவிடம் உலகிலேயே அதிக அளவில் அணுக்குண்டுகள் உள்ளன. அத்துடன் சீனாவின் DF-41 போன்ற மீயுயர்-ஒலிவேக ஏவுகணைகள் ஜெர்மனி வரை பாய்ந்து அணுக்குண்டுகளை வீச வல்லன. அணுக்குண்டு ஒழிப்பு என்பது உலக நாடுகள் ஒருங்கிணைந்து செய்ய வேண்டிய ஒன்றாகும். ஜெர்மனி போன்ற உலக வர்த்தகத்தில் தங்கியிருக்கும் பெரிய நாடு ஒன்று தன் பாதுகாப்பிலும் ஒழுங்கான உலக வர்த்தகத்திலும் அதிக கவனம் செலுத்த வேண்டும். ஜெர்மனிய மக்கள் தேர்தலில் வாக்களிக்கும் போது தமது நாட்டின் வெளியுறவுக் கொள்கையையோ அல்லது பாதுகாப்பையோ பெரிது படுத்துவதில்லை. ஆனால் 2021-ம் ஆண்டு நடந்த தேர்தலில் ஆப்கானிஸ்த்தானில் இருந்து நேட்ட்ப்ப் படைகளின் வெளியேற்றம் தொடர்பாக கணிசமான அளவு கருத்துப் பரிமாற்றம் செய்யப்பட்டது. ஜெர்மனியின் சமூக மக்களாட்சிக் கட்சியும், பசுமைக் கட்சியும் பழமைவாத மக்களாட்சிக் கட்சியும்(FDP) இணைந்து அமைத்துள்ள புதிய அரசின் வெளிநாட்டு கொள்கை மற்றும் பாதுகாப்புத் தொடர்பான நிலைப்பாடும் செயற்பாடுகளும் முந்தைய அரசினது கொள்கைகளில் இருந்து எவ்வளவு தூரம் வேறுபடும் என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.

பனிப்போரில் பயனடைந்த ஜெர்மனி

ஜப்பானும் ஜெர்மனியும் இரண்டாம் உலகப் போரின் போது அமெரிக்காவால் தோற்கடிக்கப்பட்ட நாடுகள். பின்னர் அவ்விரண்டு நாடுகளும் அமெரிக்காவின் நட்பு நாடுகளாகின. இரண்டிலும் அமெரிக்கா படைத்தளம் அமைத்து வைத்துள்ளது. இரண்டு நாடுகளும் அமெரிக்காவுடன் இணைந்து தமது பொருளாதாரத்தை முன்னேற்றியுள்ளன. இரண்டு நாடுகளும் தமது பாதுகாப்பிற்கு அமெரிக்காவில் தங்கியுள்ளன. அமெரிக்காவிற்கும் சோவியத் ஒன்றியத்திற்கும் இடையிலான பனிப்போரில் ஜெர்மனியின் பாதுகாப்பு முக்கியத்துவம் பெற்றிருந்தது. சோவியத் ஒன்றியத்தை சார்ந்து இருந்த கிழக்கு ஜெர்மனி பனிப்போரின் முடிவில் மேற்கு ஜெர்மனியுடன் ஒன்றிணைக்கப்பட்டது. தற்போது உலக நாடுகளின் படைவலிமைப் பட்டியலில் ஜப்பான் 5-ம் இடத்திலும் ஜெர்மனி 15-ம் இடத்திலும் உள்ளன.

நாட்டின் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்தும் ஜப்பான்

சீனாவின் அச்சுறுத்தலை எதிர் கொள்ள ஜப்பான் தனது படைவலிமையை அதிகரித்துக் கொண்டே போகின்றது. சின்சே அபே ஜப்பானிய தலைமை அமைச்சராக இருந்த போது 2013-ம் ஆண்டு ஜப்பான் தனது வெளியுறவுத் துறையையும் படைத்துறையையும் மறுசீரமைப்புச் செய்தது. ஜப்பானின் தேசிய பாதுகாப்புச் சபை உருவாக்கப்பட்டு தேசிய பாதுகாப்பு கேந்திரோபாயம் வகுக்கப்பட்டது. அவசர பாதுகாப்பு தேவை ஏற்படும்போது செயற்படுவதற்கென அமைச்சரக்ளைக் கொண்ட ஒரு சபையும் அமைக்கப்பட்டது. 2021-ம் ஆண்டு தலைமை அமைச்சர் ஃபுமியோ கிஷிடா பொருளாதாரப் பாதுகாப்பிற்கான அமைச்சு ஒன்றை உருவாக்கினார். ஜப்பானின் ஏற்றுமதியில் 20% சீனாவிற்கு செல்கின்றது ஆனால் அமெரிக்காவிற்கும் ஜெர்மனிக்கும் போகும் ஏற்றுமதி 8% மட்டுமே. இருந்தும் புவிச்சார் அரசியல் நிலைமைகளை ஜப்பான் கருத்தில் கொண்டு சீனாவிற்கு எதிரான தன் நகர்வுகளை ஜப்பான் மேற்கொள்கின்றது. தைவானை சீனா ஆக்கிரமித்தால் ஜப்பானுக்கு ஏற்படப் போகும் இடர்களுக்கு ஈடாக அல்லது அதிலும் அதிகமான இடர்களை இரசியா உக்ரேனை ஆக்கிரமிப்பதால் ஜெர்மனி உள்ளிட்ட மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்படும்.

சுவிஸ்லாந்தின் பாதுகாப்பு

சுவிற்சலாந்து தனது இயற்கை அமைப்புடன் பல செயற்கைக் கட்டமைப்புக்களைச் செய்தது மட்டுமல்லாமல் நெடுங்காலமாக நடுநிலை நாடாக இருந்து கொண்டு ஆக்கிரமிக்கப்பட முடியாத நிலையில் இருக்கின்றது. பல மலைத் தொடர்களால் சூழப்பட்டுள்ள சுவிஸ் அந்த மலைகளுக்குள் பெரும் படையணி தங்கி இருந்து தாக்குதல் செய்யக் கூடிய குகைகளை அமைத்துள்ளது. அந்த மலைகளின் நுழைவாசல்கள் ஆக்கிரமிப்பாளர்கள் வரும் போது வெடித்துச் சிதறக் கூடிய இரகசிய ஏற்பாடுகளையும் அது செய்துள்ளது. பாலங்களும் பெரும் தெருக்களும் வெடித்துச் சிதறக்கூடிய வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இப்படி மூவாயிரம் இடங்கள் வெடித்துச் சிதறக்குடியவையாக உள்ளன என சுவிஸ் அரசு சொன்னாலும் உண்மையில் ஆறாயிரம் இடங்கள் வெடித்துச் சிதறக் கூடியவை என நம்பப்படுகின்றது. உலகிலேயே முதலில் எல்லோருக்கும் படைத்துறைப் பயிற்ச்சி வழங்கி அவர்கள் தேவை ஏற்படும் போது கட்டாயமாக படைச் சேவைக்கு அழைக்கும் சட்டம் சுவிஸில் உண்டு. இதனால் ஒன்றரை இலட்சம் நிரந்தரப் படையினரைக் கொண்ட சுவிஸில் தேவை ஏற்படும் போது நாற்பது இலட்சம் படையினர் போர் முனையில் செயற்படுவர். சுவிஸ் சிறந்த முறையில் ஆட்சி செய்யப்படும் நாடாகும். உலகிலேயே அதிகாரப் பரவலாக்கம் உச்ச நிலையில் உள்ள நாடு சுவிஸ். அதன் நடுநிலைத் தன்மையால் பல உலக அமைப்புக்கள் சுவிஸ்ஸில் நிலை கொண்டுள்ளன. அது சுவிஸ் ஒரு சமாதான நாடாக இருக்க மேலும் உதவுகின்றது. ஜெர்மனியும் சுவிற்சலாந்தைப் போல் நடு நிலை பேணிக் கொண்டு படைத்துறைச் செலவை குறைக்க வேண்டும் என்ற கருத்து ஜெர்மனியில் முன்வைக்கப்படுகின்றது. பூகோள அமைப்பும் புவிசார் அரசியல் சூழ்நிலையும் ஜெர்மனிக்கு ஓர் உறுதியான பாதுகாப்புத் தேவை என்பதை வலியுறுத்துகின்றன.

தைவானை சீனா கைப்பற்றுவதை தடுக்கும் வகையில் தைவானை நோக்கி ஜப்பான் தனது ஏவுகணைகளை நிறுத்தியுள்ளது. அத்துடன் சீனாவிற்கு சவால் விடக் கூடிய அளவில் தனது படை வலிமையையும் பெருக்குகின்றது. இரசியா  உக்ரேனை ஆக்கிரமிப்பதற்கு எதிராக என்ன நகர்வுகளை ஜெர்மனி செய்கின்றது? தம்மை ஆக்கிரமித்து பல கொடுமைகள் செய்த ஜப்பான் மீது சீனர்களுக்கு ஜப்பான் மீது கடுமையான வெறுப்பு உள்ளது. தம்மை ஆக்கிரமித்த ஜெர்மனியை தோற்கடித்த இரசியர்களுக்கு ஜெர்மனி மீது அந்த அளவு வெறுப்பு இல்லை என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

Sunday, 21 November 2021

ஏன் அழுதார் ஆந்திர எதிர்க்கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு?

 

 
மட்ராஸ் மாநிலத்தின் ஒரு பகுதியாக ஆந்திரப் பிரதேசம் இருந்தது. தற்போது தெலுங்கானா என அழைக்கப்படும் பிரதேசம் நிஜாம் என்னும் ஒரு இஸ்லாமிய மன்னரின் கீழ் ஹைதராபாத் நிஜாம் என்னும் பெயரில் தெலுங்கு மொழி பேசும் பிரதேசமாக வெள்ளையர் ஆட்சியின் கீழ் இருந்தது. மொழிவாரியாகப் பிரிக்கும் போது மட்ராஸின் தெலுங்கு மக்கள் வாழும் பிரதேசத்தை பிரித்து தெலுங்கானாவுடன் இணைத்து ஆந்திரப் பிரதேசம் என்னும் மாநிலமாக உருவாக்கப்பட்டது. பின்னர் Andhra Pradeshஐ ஆந்திரம், தெலங்கானா என இரண்டாகப் பிரித்தார்கள்.

 மறைந்த நடிகர் என் டி ராமராவ் ஆரம்பித்த தெலுங்கு தேசம் கட்சியின் தற்போதைய தலைவராக அவரின் மகளின் கணவர் சந்திரபாபு நாயுடு இருக்கின்றார். அவர் இப்போது எதிர்க்கட்சித் தலைவர். (வாரிசுகள் இல்லாமல் இந்திய அரசியல் இல்லை) ஆந்திரப் பிரதேசத்தின் பிரபலமான இன்னோர் அரசியல்வாதி YSR ராஜசேகர ரெட்டி. இவர் காங்கிரசுக் கட்சியில் இருந்து பிரிந்து வந்தவர். இவர் போட்டியிட்ட எல்லாத் தேர்தல்களிலும் வெற்றி பெற்றவர். காங்கிரசுக் கட்சி மாநிலத் தலைவர்களை மதிப்பதில்லை என்பதற்கு இவரும் ஓர் உதாரணம். இவர் காங்கிரசுக் கட்சியில் இருந்து பிரிந்து வந்து YSR congress என்னும் கட்சியை ஆரம்பித்து மாநிலத்தில் ஆட்சியைக் கைப்பற்றியவர். தற்போது அவரது மகன் ஜகன்மோகன் ரெட்டி ஆந்திராவின் முதல்வராக இருக்கின்றார். (வாரிசுகள் இல்லாமல் இந்திய அரசியல் இல்லை) YSR காங்கிரசின் சட்ட மன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சித் தலைவரான சந்திரபாபு நாயுடுவையும் அவரது மனைவியையும் பற்றி இழிவாகப் பேசினார்கள். இதனால் சினமடைந்த சந்திரபாபு சட்ட மன்றத்தில் காரசாரமாகப் பேசினார். ஆந்திர சட்ட சபையை கௌரவர்களின் சபைக்கு ஒப்பிட்டார். 2024-ம் ஆண்டு ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்டு முதல்வராகத்தான் சபைக்கு வருவேன் எனச் சொல்லி சட்ட சபையில் இருந்து வெளியேறிவிட்டார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்திக்கையில் தனக்கு ஏற்பட்ட அவமானத்தைச் சொல்லி தேம்பி அழுதார். YSR காங்கிரசின் உறுப்பிர்கள் அவர் நாடகமாடுகின்றார் என்றனர். தனது மனைவியும் முன்னாள் முதல்வர் என் டி ராம ராவின் மகளுமான புவனேஸ்வரி எக்காலத்திலும் அரசியலில் ஈடுபடவில்லை என்றார். அவரை அவமானப் படுத்திவிட்டார்கள் என்றார். தான் கௌரவத்திற்காக கௌரவத்துடன் வாழ்பவர் என்றார். தனது மனைவியின் கௌரவத்தை பாதுகாக்க தான் பேச முற்பட்ட போது அவைத்தலைவர் (சபாநாயகர்) தன் ஒலிவாங்கியை துண்டித்துவிட்டார் என்றார் நாயுடு. 

 YSR காங்கிரசுக் கட்சியைச் சேர்ந்த நடிகை ரோஜா செல்வராகவன் சந்திரபாபு நாயுடுவின் கட்சியினர் சபைக்கு ஒரு காணொளியைக் கொண்டு வந்து காட்டி அது நான் நடித்த நீலப்படம் என்று சொன்னீர்கள். அப்போது உங்களுக்கு நீதி என்றால் என்னவென்று தெரியவில்லையா எனக் கேள்வி எழுப்பியுள்ளார். YSR காங்கிரசுக் கட்சித் தலைவரும் முதல்வருமான ஜகன்மோகன் ரெட்டி உள்ளூராட்சித் தேர்தலில் படுதோல்வியடைந்த சந்திரபாபு நாயுடு நாடகம் என்கின்றார்.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...