Saturday, 11 September 2021

இறந்தும் அமெரிக்காவைத் தோற்கடித்த பின் லாடன்


 9/11 நியூ யோர்க் நகர இரட்டைக் கோபுரத் தாக்குதல் அமெரிக்காவையும் உலகையும் அதிர வைத்தது. பின் லாடனின் அல் கெய்தா அமைப்பின் உறுப்பினர்கள் அமெரிக்கா சென்று கடன் அட்டை மூலம் விமான ஓட்டுனர் பயிற்ச்சி பெற்று மூன்று விமானங்களைக் கடத்தி இரண்டால் இரட்டைக் கோபுர்த்தைதாக்கினர். அமெரிக்கப் பாதுகப்புத் துறை இருக்கும் பெண்டகனைத் தாக்கச் சென்ற மூன்றாவது விமானத்தில் இருந்த பயணி ஒருவருக்கு தீவிரவாதிகள் விமானங்களை கடத்துகின்றார்கள் என்ற சேதியை அவரது மனைவி அனுப்பினார். அவர் மற்றப் பயணிகளுடன் சேர்ந்து விமானியைத் தாக்க விமானம் இடையில் விழுந்து நொருங்கியது. 

இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்கு வழி செய்த அல் கெய்தா தலைவர் பின் லாடனைப் பிடிக்க அமெரிக்கா மூன்று ரில்லியன் டொலர்களைச் செலவு செய்தது. 

பின்லாடனை எப்படிக் கண்டு பிடித்தனர் என்ற விபரம் அறிய கீழே உள்ள இணைப்பை சொடுக்கவும்(Click):

பின் லாடன் இருப்பிடம் அறிந்த விபரம்  : https://www.veltharma.com/2011/05/blog-post_04.html

அமெரிக்காவை அழித்த பின்னர்தான் இஸ்லாமிய அரசை நிறுவ முடியும் என்ற கொள்கையுடைய பின் லாடன் செய்த இரட்டைக் கோபுரத் தாக்குதலின் பின்னர் அமெரிக்காவின் பாதுகாப்புச் செலவு அதிகரிக்கப்பட்டது. உள்நாட்டுப் பாதுகாப்புக் கெடுபிடிகளால் அமெரிக்காவின் வருமானம் குறைந்தது. அமெரிக்காவின் கடன் பளு அதிகரித்தது. இரண்டு தடவை அமெரிக்கா கடன் நெருக்கடியில் சிக்கியது. 

அமெரிக்கா சந்தித்த நிதி நெருக்கடி பற்றி அறிய இந்த இணைப்பிற்கு செல்லவும்: http://www.veltharma.com/2013/01/blog-post_3.html

இரட்டைக் கோபுரத் தாக்குதலின் பின்னர் அமெரிக்கா அறிவித்த பயங்கரவாதத்திற்கு எதிரான போருக்கு அமெரிக்கா எட்டு ரில்லியன் டொலர்களுக்கு மேல் செலவழித்தது. 2008-ம் ஆண்டு அமெரிக்காவும் பல மேற்கு நாடுகளும் சந்தித்த பொருளாதார நெருக்கடிக்கு அதுவே காரணமாக அமைந்தது.

பொருளாதாரத் தாக்குதல்

ஆப்கானிஸ்த்தானில் சோவியத் ஒன்றியத்தின் ஆக்கிரமிப்புக்கு எதிராக முஜாஹிதீன் அமைப்புடன் இணைந்து போராடிய பின்  லாடன் அறிந்து கொண்ட உண்மை எதிரியைத் தோற்கடிக்க அவன் பொருளாதாரத்தை சிதைக்க வேண்டும் என்பதே. ஆப்கானை ஆக்கிரமித்ததால் அதிகரித்த பாதுகாப்புச் செலவு சோவியத்தில் நிதி நெருக்கடியை உருவாக்கி சோவியத் ஒன்றியம் 1991இல் வீழ்ச்சியடைந்தது. அமெரிக்க நிதிச் சந்தையின் இருதயமாக இருந்த இரட்டைக் கோபுரத்தை பின் லாடன் தெரிவு செய்தது ஒரு பொருளாதாரத் தாக்குதலுக்குத்தான். தாக்குதலின் பின்னர் அமெரிக்காவின் பங்குச் சந்தைக்கு 16% இழப்பு ஏற்பட்டதை பின் லாடன் தன் அமைப்பினருக்கு சுட்டிக்காட்டினார். அந்த இழப்பின் பெறுமதி 640பில்லியன் டொலர்கள் என்றும் அதைத் தொடர்ந்து வந்த இழ்ப்புக்களையும் கூட்டினால் அமெரிக்காவின் மொத்த இழப்பு ஒரு ரில்லியன் டொலர் என்றார் பின் லாடன். அல் கெய்தா செலவழிக்கும் ஒவ்வொரு டொலருக்கும் அமெரிக்காவிற்கு ஒரு மில்லியன் இழப்பை ஏற்படுத்தும் என தன் அமைப்பினருக்கு பின் லாடன் போதித்தார். இரட்டைக் கோபுரத் தாக்குதலின் பின்னர் அமெரிக்கப் பங்குச் சந்தையின் வீழ்ச்சியின் எதிரொலியாக உலகெங்கும் பங்குகளின் விலை வீழ்ச்சியடைந்தன. அதனால் உலகெங்கும் ஏற்பட்ட இழப்பு அளவிடப்படவில்லை. தாக்குதலின் பின்னர் காப்புறுதிக் கட்டணங்கள் அதிகரித்தன.

பலஸ்த்தீனியர்களின் விடுதலை

1998-ம் ஆண்டு அல் கெய்தா அமைப்பினர் கென்யாவிலும் தன்சானியாவிலும் உள்ள அமெரிக்க தூதுவரகங்கள் மீது தாக்குதல் நடத்தி 224பேரைக் கொன்று 4,000பேரைக் கொன்றனர். அமெரிக்காவை அழித்த பின்னர்தான் பல்ஸ்த்தீனியர்களின் விடுதலை பெற முடியும் என்பதிலிலும் பின் லாடன் உறுதியாக இருந்தார். இந்த இரண்டு தூதுவரகங்களிலும் தாக்குதல் நடத்திய பின்னர் பில் லாடன் விடுத்த அறிக்கையில் பலஸ்த்தீனியர்கள் பாதுகாப்பாக வாழ முடியும் என்ற நிலையை உறுதி செய்யும் வரை அமெரிக்கர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றார்.

Investopedia என்னும் அமெரிக்க ஊடகத்தில்:

When America was attacked by terrorists on September 11, 2001, the entire business community felt the blow. Stock markets immediately nosedived, and almost every sector of the economy was damaged economically. The U.S. economy was already suffering through a moderate recession following the dotcom bubble, and the terrorist attacks added further injury to the struggling business community.வ்

எரிபொருள் என்னும் நலிவுப் புள்ளி (weakest point)

எரிபொருள் விலயேற்றம் அமெரிக்க பொருளாதாரத்தை பாதிக்கும் என தன் அமைப்பினருக்கு போதித்த பின் லாடன் தனது தாய் நாடாகிய சவுதி அரேபியாவில் உள்ள எரிபொருள் உற்பத்தி நிலையங்களைத் தாக்கும் படி உத்தரவிட்டார். அதற்காக அரபிய குடாநாட்டிற்கான அல் கெய்தா என்னும் ஒரு கிளை அமைப்பையும் உருவாக்கி பல எண்ணிக்கையிலான சிறு தாக்குதல்களை செய்ய தன் ஆதரவாளர்களைப் பணித்தார். அவரது அந்த உபாயத்தை Strategy of Thousand Cuts என அமெரிக்கப் படைத்துறை நிபுணர்கள் விபரித்தனர். 

ச்

அமெரிக்காவிற்கு அல் கெய்தாவால் ஏற்பட்ட அச்சுறுத்தலாலும் அதனால் ஏற்பட்ட பொருளாதாரச் சரிவாலும் அமெரிக்காவில் இனக்குரோதமும் வலது சாரிக் கொள்கையும் வளர்ச்சியடைந்தது. அல் கெய்தாவால் கொல்லப்பட்ட அமெரிக்கர்களின் எண்ணிக்கையிலும் பார்க்க அதிக அளவு அமெரிக்கர்கள் வலதுசாரிகளால் கொல்லப்பட்டனர். பின் லாடன் கொல்லப்பட்ட பின்னர் அது மேலும் அதிகரித்தது. அதன் விளைவாக மக்களாட்சியில் நம்பிக்கையற்ற டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபரானார். அவர் தேர்தலில் தோற்கடிக்கப்பட்டபோது அவரது ஆதரவாளர்களின் வன்முறை அமெரிக்க மக்களாட்சிக்கு பெரும் சவாலாக அமைந்தது. 

பின் லாடனைப் பின்பற்றிய தலிபான்கள்

ஆப்கானிஸ்த்தானுக்கு வெளியே தாக்குதல் செய்வதைத் தவிர்த்து வந்த தலிபான்கள் போரைத் தாம் இழுத்தடித்தால் அமெரிக்காவில் பொருளாதார்ப் பாதிப்பை ஏற்படுத்தலாம் என நம்பி போராடினார்கள். ஹக்கானி போன்ற அமைப்புக்களை போரில் பங்கு பெறச் செய்து தமது ஆளணி இழப்புக்களைக் குறைத்தார்கள். தலிபான்களிடம் பிடிபட்ட அமெரிக்கர்களிடம் அவர்கள் சொல்வது "கடிகாரம் உங்கள் கையில் ஆனால் நேரம் எங்கள் கையில்" அதாவது உங்களிடம் தொழில்நுட்பம் இருக்கின்றது அதனால் நேரத்தை வாங்க முடியாது போர் அதிக காலம் இழுபடும் போது நீங்கள் விலகிக் கொள்வீர்கள். தலிபான்கள் நினைத்தது நடந்தது மட்டுமல்ல உலகெங்கும் உள்ள இஸ்லாமிய தீவிரவாதிகள் அல்லா எம்பக்கம் இருக்கின்றார். அவர் மீது நம்பிக்கையற்றவர்களை எம்மால் அழிக்க முடியும் என்ற நம்பிக்கையைப் பெற்றுள்ளனர். 2066-ம் ஆண்டு உலகில் இஸ்லாமியர்களே பெரும்பான்மையான மக்களாக இருப்பார்கள். 

கடந்த ஓராண்டாக அமெரிக்காவில் இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் தாக்குதலில் யாரும் கொல்லப்படவில்லை. கடந்த இருபது ஆண்டுகளில் அப்படிக் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை107 பேர் மட்டுமே. பாதுகாப்புச் செலவையும் உளவுத்துறைச் செலவையும் அதிகரித்தே இப்படி உயிரிழப்பு குறைக்கப்பட்டுள்ளது. 9/11 தாக்குதலுக்குப் பின்னர் தீவிரவாதிகளை ஆளில்லாவிமானங்கள் மூலக் கொல்லும் திறனை அமெரிக்கா பெருமளவு வளர்த்துள்ளது. தீவிரவாதிகளின் தொடர்பாடலை உலகெங்கும் ஒட்டுக் கேட்கும் திறனையும் பல நாடுகள் வளர்த்துள்ளன. 

அல் கெய்தா உறுப்பினர்களில் பெரும்பான்மையானோர் ஆப்கானிஸ்த்தானில் அழிக்கப்பட்டாலும் அதில் இருந்து உருவாகிய ஐ எஸ், அல் ஷபாப், பொக்கோ ஹரம், அல் நஸ்ரா போன்ற பல அமைப்புக்கள் இன்னும் செயற்பட்டுக்கொண்டே இருக்கின்றார்கள். அமெரிக்காவின் பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் வெற்றியடையவுமில்லை. அமெரிக்காவில் அமைதி வரவுமில்லை.

Thursday, 9 September 2021

தலிபான்களின் காபந்து அரசு தேறுமா?

 

அமெரிக்கா தலைமையிலான அந்நியப் படையினர் வெளியேறி மூன்று வாரங்களின் பின்னர் தலிபான் அமைப்பு 2021 செப்டம்பர் 7-ம் திகதி ஆப்கானிஸ்த்தானுக்கான காபந்து அரசை அறிவித்துள்ளது. மூன்று வார தாமதம் உள்ளக இழுபறியா அல்லது நன்கு சிந்திக்க வேண்டி இருந்ததாலா என்பது பற்றி அறிய முடியவில்லை. அமெரிக்க சஞ்சிகை ஒன்று அதை all-Male அரசு என விபரித்துள்ளது. ஒரு நாளேடு பழைய தலிபான் போன்ற புதிய தலிபான்களைப் பாருங்கள் என்றது. முன்னைய ஆப்கான் அரசின் மகளின் விவகார அமைச்சர் ஹ்பீபா சராபி தலிபான்கள் மாறிவிட்டார்கள் என மேற்கு நாடுகள் நம்பியமை தவறு தான் சுட்டிக் காட்டியது உண்மையாகி விட்டது என்றார். இந்திய ஊடகம் ஒன்று தலிபான்களின் காபந்து அரசில் பாக்கிஸ்த்தானின் முத்திரை நன்கு பதிந்துள்ளது என்கின்றது.

அரசின் முக்கிய உறுப்பினர்கள்

தலிபான்கள் அறிவித்த காபந்து அரசின் தலைமை அமைச்சர் பொறுப்பில் உள்ள முல்லா முகம்மத் ஹசன் அக்குண்ட் ஐக்கிய நாடுகள் சபையால் தடை விதிக்கப்பட்ட ஒருவராவார். அத்துடன் அமெரிக்க குற்றத் தடுப்பு பிரிவான எஃப்.பி.ஐயால் தேடப்படும் ஒருவருமாவார். தலிபானின் உயர் அவையான ரெக்பாரி சுராவின் தலைமைப் பதவியை அவர் நீண்டகாலமாக வகித்திருந்தார். 1996 முதல் 2001வரை ஆப்கானிஸ்த்தானில் நடந்த தலிபான்கள் ஆட்சியில் வெளியுறவுத் துறை அமைச்சராகவும் துணைத் தலைமை அமைச்சராகவும் அக்குண்ட் பணியாற்றினார். அவரது துணைத் தலைமை அமைச்சராக தலிபான்கள் சார்பில் அமெரிக்காவுடன் கட்டார் தலைநகர் டோகாவில் பேச்சு வார்த்தை நடத்திய முல்லா பரதார் நியமிக்கப்பட்டுள்ளார். அவரும் மற்ற துணை தலைமை அமைச்சர் அப்துல் சலாம் கனாஃபியும் ஐக்கிய நாடுகள் சபையால் தடைவிதிக்கப்பட்டவர்கள்.

ஐக்கிய நாடுகள் சபை: பெண்ணங்கு இல்லை

கழுவுற மீனில் நழுவுற மீனாக இருப்பதில் வல்லவரான ஐக்கிய நாடுகள் சபையின் பேச்சாளரான ஃபர்ஹான் ஹக் நாடுகளை அங்கீகரிப்பது தமது சபையின் பணியல்ல, அது உறுப்பு நாடுகளின் வேலை என்றார். ஆனால ஐக்கிய நாடுகள் சபையின் மகளிர் அமைப்பின் பொறுப்பாளர் பிரமிளா பற்றன் பெண்களுக்கு காபந்து அரசில் இடம் கொடுக்காமயை சுட்டிக்காட்டி அது புதிய அரசு பெண்களையும் சிறுமிகளையும் எப்படிக் கையாளப் போகின்றது என்பதை கேள்விக்குள்ளாக்கியிருக்கின்றது என்றார்.

சீனாவின் அரைகுறை வரவேற்பு. பொன்னொன்று கண்டேன்

ஆப்கானிஸ்த்தானில் மூன்று வாரங்கள் சட்ட அடிப்படையிலான ஆட்சியின்மையை முடிவிற்கு கொண்டு வந்தமையை வரவேற்பதாக சீனா அறிவித்துள்ளது. அதன் வரவேற்பு புதிய அரசையும் உள்ளடக்கியதாக தெரியவில்லை. ஆனால் புதிய அரசு அமைந்தமைக்கு “China attaches great important” என்ற சீனாவின் சொற்தொடரில் வரவேற்பையோ பாராட்டுதலையோ காணவில்லை. ஆனால் காபந்து அரசு அமைய முன்னரே தலிபான்களுடன் தாம் சிறந்த உறவை விரும்புவதாக சீனா அறிவித்து விட்டது. ஆப்கானிஸ்த்தானில் இருக்கும் கனிம வழங்கள் மீது நீண்ட காலமாக கண்வைத்திருக்கும் சீனா அதில் முடங்கிப் போயிருக்கும் தமது முதலீடு முதலீட்டைப் பிணை எடுப்பதையிட்டு அதிக கரிசனை கொண்டுள்ளது.

காத்திருக்கும் இரசியா

புதிய காபந்து அரசு தொடர்பாக புது டில்லியில் உள்ள இரசிய அரசுறவியலாளரிடம் ஊடகர்கள் கேள்வி எழுப்பிய போது இரசியா காந்திருந்து செயற்படும் எனப் பதிலளிக்கப்பட்டது. ஆனால் இரசியா ஆப்கானிஸ்த்தானில் இருந்து வரும் பயங்கரவாதத்தை எப்படிக் கையாள்வது என்பது பற்றி இந்தியாவுடன் கலந்துரையாடியுள்ளது.

மேற்கு நாடுகளின் எதிர்வினை

ஐரோப்பிய ஒன்றியம் தன் புதிய ஆப்கான் அரசு தொடர்பாக தனது அதிருப்தியை வெளியிட்டது. ஆப்கானிஸ்த்தானுக்கான அங்கீகாரத்தையும் மனிதநேய உதவிகள் பற்றியும் கருத்தில் கொள்வதற்கு உகந்த வகையில் ஆப்கான் அரசு அங்குள்ள பல்வேறு சமூகத்தினரையும் மதத்தினரையும் உள்ளடக்கியதாக இல்லை என்றார் ஐரோப்பிய ஒன்றியத்தின் பேச்சாளர் பீட்டர் ஸ்டனோ கருத்து வெளியிட்டுள்ளார். ஆப்கானிஸ்த்தானுக்கு பலதரப்பினரையும் உள்ளடக்கிய அரசியல் அவசியமான ஒன்றாகும் எனக் கருத்து வெளியிட்டுள்ளது. பல்வேறு சமூகத்தினரையும் பெண்களையும் உள்ளடக்கிய அரசியலின் அவசியத்தை பிரித்தானியா வலியுறுத்துகின்றது. அமெரிக்கா புதிய ஆப்கான் அரசின் உறுப்பினர் சிலரின் கடந்த காலச் செயற்பாடுகளும் அவர்களின் தொடர்புகளும் தம்மைக் கரிசனைக்கு உள்ளாக்குவதாக அறிவித்தது. அமெரிக்காவின் கருத்தில் கண்டனம் கலந்திருக்கவில்லை. அமெரிக்கா தலிபான்களின் சொற்களிலும் பார்க்க செயல்களை வைத்தே அவர்களை மதிப்பீடு செய்யும் எனவும் அமெரிக்க வெளியுறவுத் துறைப் பேச்சாளர் தெரிவித்தார்.

ஜேர்மனியில் கூட்டம்

2021 செப்டம்பர் 08-ம் திகதி அமெரிக்காவும் ஜேர்மனியும் இணைந்து ஆப்கானிஸ்த்தானை எப்படிக் கையாள்வது தொடர்பாக ஒரு கூட்டத்தை ஜேர்மனியின் ரம்ஸ்ரின் நகரில் உள்ள அமெரிக்க விமானப்படைத் தளத்தில் நடத்தின. ஜேர்மன வெளியுறவுத் துறை அமைச்சர் ஹெய்க்கோ மாஸ் அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலர் அண்டனி பிளின்கென் ஆகியோர் சந்தித்து அது தொடர்பாக உரையாடினார்கள். ஆப்கானிஸ்த்தானுக்கு அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக அதிக அளவு படையினரை ஜேர்மனி கடந்த 20 ஆண்டுகளில் அனுப்பியிருந்தது. இருபதிற்கு மேற்பட்ட நாடுகள் கலந்து கொண்ட இக்கூட்டம் ஆப்கானிஸ்த்தான் எதிர்காலத்தை மாற்றியமைக்கலாம் என்றிருந்த நிலையில் அந்த நாடுகளின் எதிர்பார்ப்புகளுக்கு மாறாக ஆப்கானிஸ்த்தானின் காபந்து அரசு அமைந்துள்ளது.

இந்தியாவின் நிலைப்பாடு

தலிபான் அமைப்பின் முக்கிய உறுப்பினரான அனஸ் ஹக்கானி அமெரிக்காவின் குவாட்டனாமோ சித்திரவதைக் கூடம் உட்பட பல சிறைகளைக் கண்டவர். அவர் கஷ்மீர் பிரச்சனையில் தாம் தலையிடப்போவதில்லை என அறிவித்துள்ளார். தலிபான் அமைப்பினர் இந்தியாவிற்கு எதிரானவர்கள் என இந்திய ஊடகங்கள் உட்பட பன்னாட்டு ஊடகங்கள் பொய்ப்பரப்புரை செய்வதாக அனஸ் ஹக்கானி ஊடகங்களுக்கு பேட்டியளித்துள்ளார். மேலும் அவர் தமது எதிரிகளுக்கு இந்தியா உதவி செய்தமையை தாம் மறந்து இந்தியாவுடன் நல்லுறவை விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார். இந்தியா மேற்கு நாடுகள் போல் ஆப்கானிஸ்த்தானுடனான உறவில் பெண்ணுரிமை மற்றும் மனித உரிமை போன்றவற்றைக் கருத்தில் எடுத்துக் கொள்ளாது என்பதால் தலிபான்கள் இந்தியாவுடனான உறவை விரும்புகின்றார்கள் என்பது மட்டுமல்ல இந்தியாமீது பாக்கிஸ்த்தானிலும் பார்க்க அதிக விருப்புக் கொண்ட ஆப்கானிஸ்த்தானின் பஷ்ரூன் இனக்குழுமத்தைச் சேர்ந்தவர்கள் தலிபான்களில் பெரும்பான்மையானவர். இந்தியா இதை எழுதும் வரை இந்தியா புதிய ஆப்கான் அரசைப்பற்றி கருத்து வெளியிடவில்லை. இந்தியாவின் தாமதத்தை “கேந்திரோபாய காத்திருப்பு” என இந்திய அரசு ஆதரவாளரகளும் “துணிச்சலான முடிவெடுக்க முடியாமை” என இந்திய அரசை கடுமையாக விமர்ச்சிப்பவர்களும் கூறுகின்றனர். தலிபான்களின் இஸ்லாமியக் கோட்பாடு இந்தியாவின் டில்லிக்கு வடக்கே உள்ள தியோபந்த் என்னும் சிறு நகரத்தில் உள்ள ஒரு பள்ளிவாசலில் உருவானது. தியோபந்தி இஸ்லாமியர்கள் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் மகாத்மா காந்தியுடன் இணைந்து போராடினவர்கள். பஷ்ரூன் இனத்தினர் பலர் இந்தி சினிமாத்துறையில் சிறந்து விளங்குவதால் இந்தி சினிமாப் படங்களை ஆப்கானிஸ்த்தானில் வாழும் பஷ்ரூன்கள் விரும்பிப்பார்ப்பதால் அவர்கள் இதயங்களில் இந்தியாவிற்கு ஓர் இடம் உண்டு.

இந்தியாவின் உள்நாட்டுப் பாதுகாப்புப் பிரச்சனையா?

தலிபான்கள் காபந்து அரசை அறிவித்தற்கு முதல் நாள் அதாவது செப்டம்பர் 6-ம் திகதி தலிபான்களுக்கு ஆதரவாக பாக்கிஸ்த்தானிய ஆளில்லா விமானங்கள் பஞ்ஷீர் பள்ளத்தாக்கில் தாக்குதல் நடத்தியவுடன்ச் இந்திய தலைமை அமைச்சர் நரேந்திர மோடி ஓர் அவசரக் கூட்டத்தைக் கூட்டினார். பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ் நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித் ஷா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவால் ஆகியோர் கலந்து கொண்டனர். ஆப்கானிஸ்த்தானில் நடந்த மாற்றம் இந்தியாவின் வெளியுறவுத் துறைப் பிரச்சனை மட்டுமல்ல அதன் உள்நாட்டுப் பாதுகாப்பு பிரச்சனையுமாகும். அமெரிக்கா ஆப்கானிஸ்த்தானில் இருந்து வெளியேறியவுடன் கஷ்மீர் மக்கள் அங்குள்ள இந்தியப் படையினரைப் பார்த்து ஒரு நாள் நீங்களும் இப்படி வெளியேறுவீர்கள் என்றனர். ஆப்கானிஸ்த்தானில் நடந்த மாற்றம் உலகெங்கும் உள்ள இஸ்லாமியப் போராளி அமைப்புக்களுக்கு பெரும் உற்சாகத்தைக் கொடுத்துள்ளது. கஷ்மீர் போராளிகள் அதற்கு விதிவிலக்கல்ல. மோடியின் செப்டம்பர் – 6-ம் திகதிக் கூட்டத்தில் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்ஷங்கர் கலந்து கொண்டதாக தகவல் இல்லை ஆனால் நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கலந்து கொண்டார். ஆப்கானிஸ்த்தானில் இந்தியா செய்த முன்று பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான முதலீட்டைப் பற்றியும் அவர்கள் விவாதித்திருக்கலாம். 2021 செப்டம்பர் 10-ம் திகதி ஐநா பாதுகாப்புச் சபையில் உரையாற்றிய இந்திய உறுப்பினர் டி. எஸ் திருமூர்த்தி ஆப்கானிஸ்த்தான் எந்த ஒரு நாட்டின் மீது தாக்குதல் செய்வதற்கான தளமாகப் பாவிக்கப்படக்க் கூடாது என்றார். 

சர்ச்சைக்குரிய சிராயுதீர்ன் ஹக்கானி

பல நாடுகளும் பார்த்து முகம் சுளிப்பது உள்துறை அமைச்சர் சிராயுதீர்ன் ஹக்கானியையே. அமெரிக்காவால் பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்ட ஹக்கானி அமைப்பின் தலைவரான சிராயுதீர்ன் ஹக்கானியும் அமெரிக்க சட்ட நிறைவேற்றுப் பிரிவால் தேடப்படும் ஒருவராவர். ஹக்கானி அமைப்பை இந்தியாவிற்கு எதிராக பாக்கிஸ்த்தானின் உளவுத் துறையும் படைத்துறையும் வளர்த்தெடுத்தன எனக் குற்றம் சாட்டப்படுகின்றது. அந்த அமைப்பின் தலைவர் சிராயுதீர்ன் ஆவர்.

பாக்கிஸ்த்தான் உண்மையைச் சொல்லாது என்பதால் அதன் கருத்தை கருத்தில் எடுக்கத் தேவையில்லை. மூன்று ரில்லியன் டொலர் பெறுமதியான கனிம வளங்களைக் கொண்ட நாடாக ஆப்கானிஸ்த்தான் இருப்பதாலும் அங்குள்ள உட்கட்டுமான உட்கட்டுமான முதலீட்டு வாய்ப்பாலும் பல நாடுகளின் முதலீட்டாளர்கள் நாக்கைத் தொங்கப் போட்டுக்கொண்டு காத்திருக்கின்றார்கள் என்பது புதிய ஆப்கான் காபந்து அரசு தொடர்பாக யாரும் கண்டனம் தெரிவிக்காமல் இருப்பதில் இருந்து தெரிய வருகின்றது. அமெரிக்காவில் முடக்கப்பட்டுள்ள ஆப்கானிஸ்த்தானின் 9.5பில்லியன் பெறுமதியான சொத்துக்களும் உலக வங்கியும் பன்னாட்டு நாணய நிதியமும் இடை நிறுத்தி வைத்திருக்கும் உதவித் தொகைகளையும் கருத்தில் கொண்டு தலிபான்கள் தமது காபந்து அரசை அமைக்கவில்லை என்பது அந்த அரசில் தீவிரப்போக்குடையோரை உள்ளடக்கியதில் இருந்து தெரிய வருகின்றது.

Tuesday, 7 September 2021

இஸ்ரேலின் சிறையில் இருந்து தப்பிய பலஸ்த்தீனியப் போராளிகள்

 



பலஸ்த்தீனிய இஸ்லாமிய புனிதப் போர் அமைப்பினர் ஐந்து பேரும் அக்சா மாவீரர் படையின் முன்னாள் கட்டளைத் தளபதி ஜகாரியா ஜுபெய்தி ஆகியோர் இஸ்ரேலின் உயர் பாதுகாப்பு ஏற்பாடுகள் மிக்க ஜிபோவா சிறையில் இருந்து 2021 செப்டம்பர் 5-ம் திகதி அதிகாலை ஒரு மணியளவில் தப்பி ஓடினார்கள். அவர்கள் சுரங்கம் வெட்டி அதனூடாக தப்பி ஓடினார்கள் எனப்படுகின்றது. ஜகாரியா ஜுபெய்தி Intifada என்னும் கல்லெறி போராட்டத்தின் அடையாளமாகப் பார்க்கப்படுபவர் என்பது மட்டுமல்ல பல தற்கொலைத் தாக்குதல்களுக்கு உபாயங்கள் வகுத்தவரும் ஆவர். 1976-ம் ஆண்டு பிறந்த ஜுபெய்தி இஸ்ரேலிய அரசால் மிகவும் தேடப்பட்டவராக இருந்தவர். பின்னர் 2007-ம் ஆண்டு இஸ்ரேலின் பொதுமன்னிப்பு உடன்பட்டு தனது படைக்கலன்களை பலஸ்த்தீனிய தேசிய அதிகார சபையிடம் கையளித்தவர். ஆனால் அவருக்கு வழங்கிய மன்னிப்பை 2011 டிசம்பரில் இரத்துச் செய்தது.

தப்பி ஓடியவர்களில் நால்வர் இரட்டை ஆயுள் தண்டனை பெற்றவர்கள். ஜகாரியா ஜுபெய்தியின் மீதும் மற்றொருவர் மீதும் வழக்கு நடந்து கொண்டிருக்கின்றது. 1998-ம் ஆண்டின் பின்னர் முதல் தடவையாக இஸ்ரேலிய சிறையில் இருந்து பலஸ்த்தீனியர்கள் தப்பி ஓடியுள்ளனர். மொனடேல் யக்கூப் நபீட் , யக்கூப் காசிம், யக்கூப் முகம்மது கத்ரி, நயீம் கமாம்ஜீ, மக்மூட் அப்துல்லா ஆடா, என்பன ஜகாரியா ஜிபெய்தியுடன் தப்பிச் சென்ற மற்றக் கைதிகளின் பெயர்கள் என அல் ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது. அவர்களுடைய கழிப்பறையில் இருந்து சுரங்கம் தோண்டுவதற்கு வெளியார் உதவி கிடைத்திருக்க வேண்டும் எனக் கருதப்படுகின்றது.



இஸ்ரேலின் உயர் பாதுகாப்புச் சிறையில் இருந்து பலஸ்த்தீனிய போராளிகள் தப்பிச் சென்றது இஸ்ரேலுக்கு மிகவும் அதிர்ச்சியளிக்கும் செயல் என பல போராளி அமைப்புக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளன. இது மன உறுதியுடன் தொடர்ச்சியாகப் போராடினால் எதையும் சாதிக்கலாம் என்ற நம்பிக்கையை தமக்கு தருவதாக பல போராளிகள் கருத்து தெரிவித்துள்ளனர். இவர்களைப் போல் ஐயாயிரத்துக்கு மேற்பட்ட பலஸ்த்தீனியர்கள் இஸ்ரேலிய சிறைகளில் வைக்கப்பட்டுள்ளனர். காசா நிலப்பரப்பில் ஹமாஸ் போராளிகள் இனிப்பு பரிமாறினர்.

இஸ்ரேலிய தலைமை அமைச்சர் இந்த சிறைத் தப்பி ஓட்டத்தை ஒரு கடுமையான நிகழ்வு (Serious Incident) என்றார். உண்மையில் இது இஸ்ரேலுக்கு ஒரு மோசமான மூக்குடைப்பு.

Monday, 6 September 2021

சீனா சமூகவுடமையை(சோசலிஸம்) வலியுறுத்துவது ஏன்?

  


சீனாவின் ஏற்றுமதி சார் பொருளாதார வளர்ச்சியால் அங்கு வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களின் தொகை மொத்த மக்கள் தொகையின் 3.3விழுக்காடாக உள்ளது. இதை இந்தியாவின் 29.3 விழுக்காடு வறியோர் தொகையுடன் ஒப்பிடுகையில் ஆச்சரியமாக இருக்கின்றது. இருந்தும் சீன அதிபர் ஜீ ஜின்பிங் சீனாவில் சமத்துவமின்மை ஒழிக்கப்படவேண்டும் என உறுதியாகச் சொல்லி இருக்கின்றார். பொதுவுடமை மற்றும் சமூகவுடமையை வலியுறுத்தி வந்த சீனா 1979இல் அவற்றில் இருந்து விலகி அரை முதலாளித்துவ நாடாக தன்னை மாற்றி பொருளாதாரச் சீர்திருத்தத்தை அறிமுகம் செய்தது. அதனால் (அரசால் கட்டுப்படுத்தப்பட்ட, தனிமைப்படுத்தப்பட்ட, திறனற்ற) சீனப் பொருளாதாரம் பெரும் வளர்ச்சியை கண்டு கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் சீன அதிபர் ஜீ ஜின்பிங் நாட்டின் பல்வேறு பிராந்தியங்களிடையேயும் பல்வேறு மக்களிடையேயும் சமமான வருமானப்பங்கீடு சமூகவுடமையின் முக்கிய அம்சங்களாக இருப்பதுதான் சீனப்பாணி நவீனமயமாக்குதலாகும் என்கின்றார்.

சீன மக்களின் செல்வ நிலை உயர்த்தப்பட வேண்டும்

சீனப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக திகழும் ஏற்றுமதியும் உட்கட்டுமான அபிவிருத்தியும் இப்போது தடைகளைச் சந்தித்துள்ளன. சீனாவின் பொருளாதார வளர்ச்சி இனி சீன மக்களின் கொள்வனவில் தங்கியிருக்க வேண்டும். அதற்கு சீனமக்களின் வருமானம் அதிகரிக்கப்பட வேண்டும். அமெரிக்கர்களின் சராசரி தனிநபர் வருமானம் சீனர்களின் தனிநபர் வருமானத்திலும் 5.78 மடங்கு அதிகமானதாக உள்ளது. அதனால் உலகின் செல்வந்த நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா ஐந்தாவதாகவும் சீனா 57வதாகவும் உள்ளன. அமெரிக்காவின் மொத்த தேசிய உற்பத்தியில் அமெரிக்கர்களின் கொள்வனவின் பங்கு எழுபது விழுக்காடாகும். சீனாவில் அது 39 விழுக்காடாக உள்ளது. பொருளாதாரத்தில் முன்னணியில் இருக்கும் நாடுகளில் அது 55 விழுக்காட்டிற்கும் அதிகமாக இருக்கின்றது. அமெரிக்காவின் ஏற்றுமதி அதன் இறக்குமதியிலும் பார்க்க ஐந்து விழுக்காடு குறைவாகும். அதனால் அமெரிக்காவின் மொத்த தேசிய உற்பத்தியில் ஐந்து விழுக்காடு குறைக்கப்படுகின்றது. சீனப் பொருளாதாரம் உலக அரங்கில் உறுதியாக நிற்பதற்கு அது ஏற்றுமதியில் தங்கியிருப்பது குறைக்கப்பட்டு உள்நாட்டு மக்களின் கொள்வனவில் தங்கியிருக்க வேண்டும். அதற்கு சீன மக்களின் செல்வ நிலை உயர்த்தப்பட வேண்டும். சீனத் தலைமை அமைச்சர் லீ கெக்க்யாங் இதற்காக ஒரு புதிய திட்டத்தை முன் வைத்துள்ளார். சீனாவில் உற்பத்திக் காரணிகளை திறன்படச் செயற்படுத்தல், அதிக வருமானம் உள்ளவர்களிடம் வரி அறவிட்டு குறைந்த வருமானமுள்ளவர்களுக்கு உதவி செய்தல், செல்வந்தர்கள் தாமாகவே வருமானம் குறைந்தவர்களுக்கு உதவி செய்தல். சீனாவின் புதிய திட்டம் “பொதுச் செழுமை” என அழைக்கப்படுகின்றது. சீனப் பொதுவுடமைக் கட்சி தனது செயற்திட்டங்களில் பொதுச் செழுமை முதலிடம் வகிக்கின்றது. சீன அதிபர் ஜீ ஜின்பிங் 2021-ம் ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் ஆற்றிய உரைகளில் 65 தடவை “பொதுச் செழுமை” என்ற பதம் பாவிக்கப்பட்டுள்ளது

அரை முதலாளித்துவ சீனா?

1978-ம் ஆண்டு “திறந்த கதவு” கொள்கை என்னும் பெயரில் சீனா வெளிநாட்டு முதலீடுகளையும் வேற்று நாடுகளுடனான வர்த்தகத்திர்கும் வழிவகுத்த1979-ம் ஆண்டு பொருளாதார சீர்திருத்தத்தை ஆரம்பித்த சீனா 1979இல் அமெரிக்காவுடன் உறவையும் உருவாக்கியது. அதே ஆண்டில் சீனாவில் பல சுதந்திர வர்த்தக வலயங்கள் ஆரம்பிக்கப்பட்டன. அப்போது ஆரம்பித்த சீனப் பொருளாதார வளர்ச்சி இன்றுவரை வளர்ந்து கொண்டே இருக்கின்றது. உலக சரித்திரத்தில் எந்த ஒரு நாடும் 40 ஆண்டுகள் தொடர்ச்சியான வளர்ச்சியைக் காணவில்லை. தற்போது சீன அதிபர் ஜின்பிங் முன்வைக்கும் சமூகவுடமைக் கொள்கை சீனாவை “அரை முதளாளித்துவ நாடு” என்ற நிலையில் இருந்து விலக்கி முழுமையான சமூகவுடமை நாடு என்ற நிலையை நோக்கி நகர்த்தினாலும் சீனா தனது தனியார் துறை தொடர்ந்து பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்க வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருக்கின்றார். சீனா அமெரிக்காவை விஞ்சி பொருளாதாரத்தில் வளராது என்கின்றார் கலிபோனியப் பல்கலைக்கழகமொன்றில் அரசறிவுத்துறைக்கு பொறுப்பான சீனரான MINXIN PEI.

சீனச் செல்வந்தர்கள்

ஒரு பில்லியன் டொலர்களுக்கும் அதிக சொத்துக்களை கொண்ட செல்வந்தர்கள் அமெரிக்காவில் 724பேரும் சீனாவில் 626பேரும் இந்தியாவில் 140பேரும் உள்ளனர். அதிக செல்வந்தர்கள் இருப்பது ஒரு முதலாளித்துவ நாடாக இருக்கும் அமெரிக்காவிற்கு உகந்ததாக இருக்கலாம். ஆனால் சோசலிஸ நாடாக இருக்க முயலும் சீனாவிற்கு அது உகந்ததல்ல என்பது சீன அதிபர் ஜீ ஜின்பிங்கின் கருத்து. சீனா இரசியாவிடமிருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். இரசியா பொதுவுடமையைக் கைவிட்டு மக்களாட்சி நாடாக மாற்றப்பட்டாலும் அங்கு சில பெரும் செல்வந்தர்கள் பொருளாதாரத்தில் ஆதிக்கம் செலுத்துகின்றனர். இரசிய அதிபர் விளடிமீர் புட்டீன் கூட ஒரு பெரும் செல்வந்தரே. சில பெரும் செல்வந்தர்கள் கையில் ஒரு நாட்டின் பொருளாதாரமும் ஆட்சியும் இருப்பதை சிலராண்மை (Oligarchy) என்பர். இது மக்களாட்சிக்கும் சமுக்வுடமை ஆட்சிக்கும் முரணானதாகும். அதனால் சீனாவில் பெரும் செல்வந்தர்கள் உருவாகுவதை சீன அதிபர் ஜீ ஜின்பிங் ஐயத்துடன் நோக்குகின்றார். சீனாவின் பெரும் செல்வந்தர்களில் ஒருவரான ஜக் மாவிற்கு சொந்தமான நிறுவனம் தனது பங்குகளை பொது மக்களுக்கு விற்பனை செய்ய முற்பட்ட போது ஜீ ஜின்பிங் அதைத் தடை செய்தார். அதைத் தொடர்ந்து ஜக் மாவிற்கு சொந்தமான நிறுவனங்களின் பங்குகளின் விலை வீழ்ச்சியடைந்ததால் அவரது செல்வம் பத்து பில்லியன் டொலர்களால் குறைந்து போனது.

நடுத்தர வருமானப் பொறியை சீனா தவிர்க்க வேண்டும்

வருமானம் குறைந்த மக்களைக் கொண்ட நாட்டில் ஊழியக் கொடுப்பனவு குறைந்த அளவில் இருப்பதால் அங்கு செய்யப்படும் வெளிநாட்டு முதலீடுகள் வருமானம் கூடிய நாடுகளில் செய்யப்படும் முதலீடுகளிலும் பார்க்க அதிக இலாபத்தைத் தரும். தொடர்ச்சியான வெளிநாட்டு முதலீட்டால் மக்களின் வருமானம் அதிகரித்து வேலைவாய்ப்பின்மை குறைந்து கொண்டு போகும். அதனால் அந்த நாடு நடுத்தர வருமான நாடாக வளரும். அப்போது அந்த நாட்டில் ஊழியக் கொடுப்பனவு அதிகமாகும். அதனால் அந்த நாட்டில் வெளிநாட்டு முதலீடு குறையத் தொடங்கும். மக்கள் தொடர்ச்சியாக நடுத்தர வருமானமுள்ளவர்களாக மட்டும் இருப்பார்கள். இதை நடுத்தர வருமானப் பொறி என்பர். இதனால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறையத் தொடங்கும். சீன அரசு தமது நாடு நடுத்தர வருமானப் பொறிக்குள் சிக்காமல் இருக்க பெரு முயற்ச்சி செய்கின்றது. சீனாவில் நடுத்தர வருமானம் கொண்ட மக்கள் தொகை தற்போது 400 மில்லியன்களாகும். இதை 2025இல் இருமடங்காக உயர்த்த சீன அரசு திட்டமிட்டுள்ளது.

சீன அதிபரினதும் தலைமை அமைச்சரினதும் புதிய கொள்கைகளுக்கு இணங்க சீனாவின் பெரும் செல்வந்தர்களில் ஒருவரான மா ஹுவாரெங்கிற்கு சொந்தமான டென்செண்ட் (Tencent) நிறுவனம் பொதுச் செழுமைக்கு என 7.7பில்லியன் டொலர்களை ஒதுக்கியுள்ளது. இந்த நிதி ஒதுக்கீடு குறைந்த வருமானமுள்ள மக்களின் நலன்களுக்காகப் பயன்படுத்தப்படும். இது போன்று மேலும் பல செல்வந்தர்கள் நன் கொடைகளை வழங்கியுள்ளனர்.

செல்வந்தர்களின் பிள்ளைகளின் கல்வியில் கைவைத்த சீனா

சீனாவில் உள்ள பல தனியார் கல்வி நிறுவனங்கள் வெளிநாட்டு முதலீடுகளுடன் இயங்குகின்றன. இவற்றில் பல செல்வந்தர்களின் பிள்ளைகள் கல்வி கற்று வந்தனர். அதனால் அவர்களின் கல்வித்தரம் மற்றப் பிள்ளைகளின் கல்வித்தரத்துடன் ஒப்பிடுகையில் மிகவும் உயர்ந்த்தாகவும் உலகத் தரமானவயாகவும் இருந்தன. சீன அரசு ஒரே நாளில் அந்த கல்வி நிறுவனங்களை மூடி விட்டது. இதனால் பல வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பெரும் இழப்பீட்டைச் சந்தித்தனர். கல்வியில் சமத்துவம் நிலவ வேண்டும் என்ற எண்ணத்துடன் இதைச் செய்ததாக சீன அரசு அறிவித்தது.

சீனப் பொதுவுடமைக் கட்சியிலும் ஆட்சியிலும் தனக்கு என ஓர் அசைக்க முடியாத இடத்தை பெற்றுள்ள ஜீ ஜின்பிங் மக்கள் மத்தியிலும் ஓர் அசைக்க முடியாத இடத்தைப் பெறுவதற்காக “பொதுச் செழுமை”, சமூகவுடமை போன்ற பதங்களை கையில் எடுத்துள்ளாரா என்ற ஐயமும் எழுந்துள்ளது. பெரும் செல்வந்தர்கள் ஒன்றிணைந்து சீனாவின் ஆட்சி முறைமையையே மாற்றியமைக்க முயல்வார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஜீ ஜின்பிங் பல கலைஞர்கள் புகழின் உச்சிக்கு போவதற்கு எதிராகவும் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றார். பெரும் புகழ் பெற்ற சீன நடிகை ஒருவர் தண்டிக்கப்பட்டுள்ளார். கலைஞர்களுக்கு இரசிகர் மன்றம் அமைப்பவை போன்றவற்றையும் அவர் தடை செய்துள்ளார். இவை செல்வ சம பங்கீட்டுகாக அல்ல.

 

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...