அமெரிக்கா பல நாடுகளுக்கு தனது படைகளை
அனுப்புவது எல்லோருக்கும் தெரியும். ஆனால் அமெரிக்கா பெருமளவில் தனியார்
படைகளைகளைப் பாவிப்பது பலருக்கும் தெரியாது. தனியார் படையினரின்
துணை இன்றி அமெரிக்கா எந்த நாட்டுக்கும் தனது படைகளை அனுப்ப முடியாது என்ற நிலை
இப்போது உருவாகியுள்ளது. அமெரிக்காவின் படை மற்றும் சிறப்புப் படையணிகளில்
பணிபுரிந்தவர்கள் இந்தத் தனியார் படையில் செயற்படுகின்றனர். இவர்கள் அதிகாரிகள்
மட்டத்தில் செயற்பட பல நாடுகளையும் சேர்ந்தவர்கள் இந்த தனியார் படையில்
இணைந்துள்ளனர். தீவிரவாத இயக்கக்ங்களில் முன்பு பணிபுரிந்தவர்கள் முன்னாள்
போர்ப்பிரபுக்களும் அவர்களின் படையினரும் கூட அமெரிக்காவின் தனியார் படையில்
இணைக்கப்படுகின்றனர். இந்த தனியார் படையின் சொந்தக்காரர்கள் பெருமளவு பணத்தை
இலாபமாகப் பெறுகின்றனர்.
கூலிப்படையினரின் செயற்பாடுகள்
படையினருக்கான பின்புல வழங்கல் ஆதரவு, படையினருக்கன ஆபத்துப் பகுப்பாய்வு செய்தல், உளவுபார்த்தல் போன்றவற்றில் தனியார் துறையினரி ஈடுபடுத்தல் ஆட்சேபனைக்கு
உரியதல்ல. இரண்டாம் ஜோர்ஜ் புஷ் அமெரிக்க அதிபராக இருந்த போதே அமெரிக்கா
படைத்துறையில் தனியார் துறையினரைப் பெருமளவில் அனுமதித்தது. ஆனால் 1991-ம் ஆண்டு
பனிப்போர் முடிவுக்கு வந்த பின்னர் அமெரிக்கா தனது படைத்துறைச் செலவைக்
குறைப்பதற்காக படைத்துறையில் தனியாரையும் அதிக அளவில் ஈடுபடுத்தத் தொடங்கியது. தனியார்
படைத்துறையை ஆரம்பித்து வைத்தவர் ஜெரால்ட் போர்ட்டின் பாதுகாப்புத் துறைச் செயலராக
இருந்த டொனால்ட் ரம்ஸ்பெல்ட் ஆகும். மனித உரிமைகளை மீறும் அமெரிக்காவின் நட்பு
நாடுகளிற்கு அமெரிக்கா தனது படைகளைப் பகிரங்கமாக அனுப்பி அந்த ஆட்சியாளர்களைப்
பாதுகாப்பதில்லை. அந்த நாடுகளுக்கு அமெரிக்காவில் உள்ள தனியார் படை நிறுவனங்கள்
“சேவை” செய்ய இரகசியமாக அனுமதியும் உதவியும் செய்கின்றது. பனிபோரின் பின்னர் இது
பெருமளவில் அதிகரித்தது. உலகெங்கும் உள்ள தனியார் படை நிறுவனங்களில் 70 விழுக்காடு
அமெரிக்காவிலும் பிரித்தானியாவிலும் பதிவு செய்யப்பட்டுள்ள்ன.
பல நாடுகளில் தனியார் படை நிறுவனங்கள்
ஒஸ்ரேலியாவில் இரண்டு தனியார் படை நிறுவனங்களும், கிப்ரால்டரில் ஒன்றும், பெருவில் ஒன்றும், தென் ஆபிரிக்காவில் ஒன்றும், பிரித்தானியாவில் ஆறும், ஐக்கிய அமெரிக்காவில் பதின்நான்கும் இருக்கின்றன. இவை மட்டுமல்ல சீனா உட்படப் பல நாடுகளில் தனியார் படை நிறுவனங்கள் உண்டு.
2016-ம் ஆண்டு பெப்ரவரி மாதம் பிரித்தானியப் பத்திரிகையான கார்டியன் உலக கூலிப்படைத் தொழிலில் பிரித்தானியா நடுநாயகமாக இருக்கின்றது என்னும் தலைப்பில் ஒரு கட்டுரையையும் வெளிவிட்டது. G4S என்பது உலகிலேயே மிகப்பெரிய தனியார் படை நிறுவனமாகும். பிரித்தானியாவில் பல தனியார் படை நிறுவங்னகளும் தனியார் பாதுகாப்பு நிறுவனங்களும் இயங்குகின்றன. கடாபி லிபியாவில் கொல்லப்பட்ட பின்னர் அங்கு உள்ள எரிபொருள் நிறுவனங்களுக்கு பிரித்தானியாவின் G4S இன் பாதுகாப்புப் பிரிவு பாதுகாப்பு வழங்கியது.
தனியார் பாதுகாப்பு நிறுவனங்கள்
தனியார் பாதுகாப்பு நிறுவனங்கள் தனியார் படை நிறுவனங்களில் இருந்து சற்று வேறுபட்டவையாகும். பாதுகாப்பு நிறுவனங்கள் வலிந்த தாக்குதலில் ஈடுபடுவதில்லை. அவை தமது ஒப்பந்தக்காரர்களையும் அவர்களது சொத்துக்களையும் பாதுகாப்பதற்காக செயற்படும் ஒரு தேர்ச்சி பெற்ற படையணியாகும். பிரித்தானியாவில் இரு வகை நிறுவனங்களின் மொத்த எண்ணிக்கை 46 என்கின்றது கார்டியன். ஈராக்கில் சதாமிற்கு எதிரான போரின் போது பிரித்தானியாவின் 80 தனியார் படைக் கம்பனிகள் இயங்கியதாகவும் கார்டியன் அம்பலப்படுத்தியது. இதுபோல உலங்கெங்கும் பிரித்தானியாவைச் சேர்ந்த நூற்றுக்கு மேற்பட்ட தனியார் படை நிறுவனங்களும் பாதுகாப்பு நிறுவனங்களும் செயற்படுகின்றன.
ஆப்கானிஸ்த்தானுக்கு அனுப்ப யோசனை
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்
பதவிக்கு வர முன்னரே ஆப்கானிஸ்த்தானுக்கு அதிக படையினரை அனுப்பப்போவதாக
முழங்கியிருந்தார். எல்லாவற்றையும் மாற்றி யோசிக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட்
டிரம்ப் பதினாறு ஆண்டு காலமாக நடக்கும் ஆப்கானிஸ்த்தான் போரையும் வித்தியாசமாக
அணுகவிருக்கின்றார். ஆப்கானிஸ்த்தானில் அமெரிக்காவின் இரு
பெரும் தனியார் படைகளைக் கொண்ட நிறுவனங்களின் சேவைகளைப் பெறுவதே அதிபர் டிரம்பின்
புதிய அணுகு முறையாகும். எரிக் டி பிரின்ஸ் என்னும் பெரும் செல்வந்தரின் பிளக்வோட்டர்
வேர்ல்ட்வைட்(Blackwater
Worldwide) என்னும் படைகளையும் ஸ்றீவன் ஃபெயின்பேர்க்
என்னும் செல்வந்தரின் டைய்ன் கோர்ப் இண்டர்நசனல்(DynCorp International) என்னும் படைகளையும் பாவிக்கும்
திட்டத்தை அமெரிக்க வெள்ளை மாளிகையின் கேந்திரோபாய வகுப்பாளர் எஸ் கே பனன்
முன்வைத்துள்ளார். தனியார் துறைப் படை என்பது கூலிப் படையினருக்கு வைத்த கௌரவப்
பெயராகும்.
அமெரிக்காவின் இரு பெரும் கூலிப்படை
நிறுவனங்கள்
வெள்ளை மாளிகையின் 2017 ஜூலை ஆரம்பத்தில்
நடந்த ஆப்கானிஸ்த்தான் தொடர்பான கொள்கை மீளாய்வுக் கூட்டத்தில் பிளக்வோட்டர் வேர்ல்ட்வைட் மற்றும்
டைய்ன் கோர்ப் ஆகிய நிறுவனத்தைச் சேர்ந்தவர்களும் கலந்து கொள்ள டிரம்ப்பின்
தலைமைக் கேந்திரோபாய வகுப்பாளரான எஸ் கே பனன் ஏற்பாடு செய்திருந்தார். ஆனால்
டிரம்பின் வெளியுறவுத் துறைச் செயலர் ஜிம் மத்தீஸ் ஆப்கான் தொடர்பான கொள்கை
மீளாய்வில் வெளியார் கலந்து கொள்வதைத் தான் விரும்பவில்லை எனச் சொல்லி
வெளியேறிவிட்டார். டிரம்ப்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினண்ட் ஜெனரல் எச்
ஆர் மக்மஸ்டரும் அதே கருத்தைக் கொண்டிருந்தார். இந்த நிகழ்வு வெள்ளை மாளிகையில்
டிரம்ம்பின் அமைச்சர்கள் மற்றும் முக்கிய ஆலோசகர்கள் மத்தியில் ஒற்றுமை இன்மையை
எடுத்துக் காட்டுகின்றது. இந்த இரண்டு தனியார் படை நிறுவனங்களில்
அமெரிக்காவிற்காகப் போர் புரிந்து பெரும் தொகைப்பணத்தை இலாபமாக ஈட்டிக்
கொண்டிருக்கின்றன. அமெரிக்காவின் ஜோர்ஜ்ரவுண் பல்கலைக்கழகப் பேராசிரியர் சோன்
மக்பேட் அதிகரித்துவரும் தனியார் படைகளின் செயற்பாடுகள் குறிந்து ஆய்வு செய்து
“புதிய கூலிப்படைகள்” என்னும் நூலை எழுதியுள்ளார். அதில் அவர் இந்தக் தனியார்
படைகளில் பணிபுரிபவர்களில் பெரும்பாலானவர்கள் அமெரிக்காவைச் சேர்ந்தவர்களல்லர்
என்பதையும் அம்பலப்படுத்தியதுடன் அதில் உள்ள தார்மீகப் பிரச்சனைகள் பற்றியும்
விளக்கியுள்ளார். அந்நூலில் அவர் 21-ம் நூற்றாண்டில் உலகம் 20-ம் நூற்றாண்டைப்
போல் இல்லாமல் 12-ம் நூற்றாண்டுக்குப் பின் தள்ளப்படுகின்றது எனச் சொல்லுகின்றார்.
12-ம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் நடந்த பல போர்களில் பெரும்பாலும் கூலிப்படையினரே
ஈடுபடுத்தப்பட்டனர். 21-ம் நூற்றண்டில் அதிகரிக்கும் தனியார் படையணிகளும்
அவற்றினது போர் நடவடிக்கைகளும் பெரும் பணம் படைத்தவர்களும் கூட்டாண்மைகளும்தான்
இனி உலகப் பெருவல்லரசுகளாகுமா என்ற அச்சத்தை எழுப்பியுள்ளது என்கின்றார் பேராசிரியர் சோன் மக்பேட். தனியார் படை ஒன்றில் இருந்து வெளியேறிய ஒரு முன்னாள் கடல்சார் படைவீரர்
தனியார் படையில் போதைப் பொருள் பாவனை அதிகம் என்றும் சிறுவர்களை பாலியல்
தொழிலாளர்களாகப் பாவிப்பதும் உண்டு என அம்பலப்படுத்தினார். பன்னாட்டு
அரசுறவியலாளர்களைப் போல் ஈராக்கில் செயற்படும் அமெரிக்கத் தனியார் படையினர் மீது
ஈராக்கிய சட்டங்களில் இருந்து பாதுகாப்பு முன்பு இருந்தது. ஈராக்கியப் பொது
மக்களால் இந்தத் தனியார் படையினர் கடுமையாக வெறுக்கப்பட்டனர். அமெரிக்க அரசு
வேண்டுமென்றே தனியார் படைகளை அழுக்கான வகையில் செயற்பட அனுமதிக்கின்றது என
ஈராக்கிய மக்கள் நம்புகின்றனர். முக்கியமாக அமெரிக்காவின் உயர் நிலைப் படை அதிகாரிகள்
ஈராக்கில் பயணங்கள் மேற்கொள்ளும் போது அவர்களின் பாதுகாப்பிற்காக தனியார் படையினர்
ஈராக்கிய மக்களை மிகவும் கேவலமாக நடத்துவதை வழமையாகக் கொண்டிருந்தனர்.
இடத்தையும்
பெயரையும் மாற்றிய பிளக்வோட்டர் நிறுவனம்
அமெரிக்கத்
தனியார் படை நிறுவனமான பிளக்வோட்டர் வேர்ல்ட்வைட்
அமெரிக்காவில் மனித உரிமைச் செயற்பாட்டாளர்களின் பிடியில் இருந்து
தப்புவதற்காக தனது பெயரை Frontier Services Group (FSG) என மாற்றி வேறு
ஒரு நிறுவனத்திற்கு விற்பனை செய்வது போல் பதிவும் செய்துள்ளது. அது இப்போது
அபுதாபியில் பதிவு செய்யப்பட்டு எரிக் பிரின்ஸ் என்பவருக்குச்
சொந்தமானதாகியுள்ளது. எரிக் பிரின்ஸ் அமெரிக்காவின் கடல்சார் படையின் சிறப்புப்
படையணியான சீல் குழுவில் பணிபுரிந்தவராவர். சீல் பிரிவினருக்கு உலகிலேயே
தொழில்நுட்ப ரீதியிலும் தாக்குதிறன் ரீதியிலும் சிறந்த பயிற்ச்சி வழங்க்கப்படுவது
எல்லோரும் அறிந்த உண்மை.
ஈராக்கில் கூலிப்படையினரின் அட்டூழியம்
ஈராக்கில் அமெரிக்காவின் தனியார்
படைப்பிரிவான பிளக்வோட்டர் வேர்ல்ட்வைட் 2007-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16-ம்
திகதி அவர்களது வாகனத் தொடரணி ஒரு நாள் வாகன நெருக்கடியில் சிக்குப் பட்டிருந்தது.
தீவிரவாதிகள் தம்மைத் தாக்கலாம் என்ற அச்சத்தில் அவர்கள் பத்து நிமிடம் வரை
தெருவில் நின்ற வாகனங்கள் மீது கண்டபடி சுட்டுத்தள்ளி வகன நெருக்கடியை இல்லாமல்
செய்தனர். இதனால் பல அப்பாவிப் பொது மக்கள் அநியாயமாகக் கொல்லப்பட்டனர். தம்மீது
தீவிரவாதிகள் தாக்க்குதல் செய்த படியால் தாம் தாக்குதல் செய்ததாக “வழமையான கதையை”
அவர்கள் அவிழ்த்து விட்டனர். ஆனால் சம்பவத்தை ஒரு ஈராக்கிய அரச அதிகாரி நேரில்
கண்டபடியால் இப்போது அவர்கள் மீது ஈராக்கில் வழக்கு நடக்கின்றது. ஈராக்கியப்
படையினரின் சோதனைச் சாவடியில் வாகனங்களை சோதனைக்காக நிறுத்தியதால்தான் வாகன
நெருக்கடி தோன்றியிருந்தது.
சீனாவிற்குப் பணி
புரியும்
அமெரிக்கத்
தனியார்
படை
சீனாவின்
One Belt, One Road (OBOR) என
அழைக்கப்படும்
புதிய பட்டுப்பதைத் திட்டம் ஆபத்து நிறைந்த பல பிரதேசங்களை உள்ளடக்கியது. அதற்கான பாதுகாப்புக்கு சீனா அபுதாபியில் உள்ள எரிக் பிரின்ஸுக்கு சொந்தமான தனியார் படை நிறுவனத்தின் சேவையைப் பெறுகின்றது.
எரிக் பிரின்ஸ் அமெரிக்க சீல் பிரிவில் பணி புரிந்தவர் என்பதால் அமெரிக்கா மிக இரகசியமாக வைத்திருக்கும் சீல் பிரிவின் பயிற்ச்சி நுட்பங்களை சீனா பெற்றுக் கொள்ள முயற்ச்சி செய்யலாம். ஈராக்கில் பிளக்வோட்டர் பணி செய்ய இரண்டு பில்லியன் டொலர்கள் பெறுமதியான ஒப்பந்தத்தை ஏற்பட்டு செய்தவரே தற்போது Frontier Services Group (FSG) இற்கு புதியபட்டுப்பாதைப் பாதுகாப்பு ஒப்பந்தத்தை ஏற்பாடு செய்துள்ளார். எரிக் பிரின்ஸ் தனது நிறுவனம் சீனாவின் வெளிநாட்டுக் கொள்கையை முன்னெடுக்கவில்லை அதன் வர்த்தகத்திற்கான பாதுகாப்பை மட்டுமே செய்கின்றோம் என இலண்டனில் இருந்து வெளிவரும் பினான்சியல் ரைம்ஸ் பத்திரிகைக்கு கூறியுள்ளார். ஆனால் அமெரிக்கரான பிரின்ஸ் அமெரிக்காவின் போட்டி நாடான சீனாவிற்கு பணி செய்வதன் மூலம் ஒரு தேசத் துரோகியாவும் உண்மையான கூலிப்படையாகவும் தன்னை வெளிப்படுத்துகின்றார் என்ற குற்றச் சாட்டு முன்வைக்கப்படுகின்றது. அது மட்டுமல்ல எரிக் பிரிஸ் இரசியர்களுடனும் அடிக்கடி சந்திப்புக்களை மேற்கொள்கின்றார் என்றும் செய்திகள் வெளிவருகின்றன.
சீனா மட்டும்
விட்டு வைக்குமா
உலகின் பல்வேறு
நாடுகளில் சீனா கட்டுமானங்களில் முதலீடு செய்கின்றது. அந்த கட்டுமானப் பணிகளில்
சீனர்களே பெருமளவு வேலை செய்கின்றனர். அவர்களுக்கான பாதுகாப்பை
வழங்க சீனா பல தனியார் பாதுகாப்பு நிறுவங்களை உருவாக்கியுள்ளது. இவை அரசின் அனுசரணையுடன் உருவாக்கப்பட்டு செயற்படுகின்றன. உலகெங்கு வியாபிக்கும் சீனாவின் வர்த்தக நலன்களைப் பாதுகாக்க சீனாவின் படையினரை
அனுப்பவதில் பல சிக்கல்கள் இருக்கின்றன. இதனால் தனியார் பாதுகப்புப்
படை அவசியமான ஒன்றாகிவிட்டது.
செயற்கை
விவேகமும் தனியார் படையும்
செயற்கை
விவேகம் (artificial
intelligence) என்பது ஒரு தனித்துவமான துறையாக உருவெடுத்து மிக
வேகமாக வளர்ந்து வருகின்றது. மனித வாழ்வில் கணினிகள் செலுத்தும் ஆதிக்கத்திலும்
அதிகமாக இனி வரும் காலங்களில் செயற்கை விவேகம் ஆதிக்கம் செலுத்தப் போகின்றது.
படைத்துறையிலும் செயற்கை விவேகம் பரவலாகப் பாவிக்கப் படப் போகின்றது. ரொபோக்கள்
எனப்படும் இயந்திர மனிதர்களும் செயற்கை விவேகமும் போர் முனைகளில் பெரும் ஆபத்தாகக்
கைகோர்த்துக் கொண்டிருக்கின்றது. இது தனியார் படை நிறுவனங்கள்
பெருவளர்ச்சியடைவதற்கு வாய்ப்பாக அமையவிருக்கின்றது.
ஒரு
காலத்தில் மருத்துவமனைகள் என்பது அரச நிறுவனமாக மட்டும் இருக்க முடியும் என பல
நாடுகளில் கருதப்பட்டது. தற்போது உலகெங்கும் தனியார் மருத்துவமனைகள் தவிர்க்க
முடியாதவையாக இருக்கின்றன. அது போலவே தனியார் படைகளும் விரைவில் தவிர்க்க
முடியாதவையாகிவிடும்