Thursday, 11 May 2017

பல் முனைகளில் சீனா எதிர் கொள்ளும் மும்முனைப் பிரச்சனைகள்

கடந்த முப்பது ஆண்டுகளாக வேறு எந்த நாடும் அடையாத பொருளாதார அபிவிருத்தியை சீனா அடைந்துள்ளது. உலகில் இரண்டாவது பெரிய பொருளாதாரமாகவும் உலகில் இரண்டாவது பெரிய படைத்துறைச் செலவு செய்யும் நாடாகவும் சீனா இப்போது இருக்கின்றது. 2030இல் சீனா உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடாக வரும் என எதிர் பார்க்கப்படுகின்றது. ஏற்கனவே அமெரிக்காவிலும் பார்க்க அதிக அளவு உலக வர்த்தகத்தை சீனா செய்கின்றது.
மற்ற நாடுகளிலும் பார்க்க அதிக அளவு உட்கட்டுமான முதலீட்டை சீனா அதிக அளவு நாடுகளில் செய்துள்ளது. எல்லாக் கண்டங்களிலும் பல பில்லியன் டொலர்கள் பெறுமதியான முதலீட்டை சீனா செய்துள்ளது. ஆசியாவில் உள்ள நாடுகள் பலவற்றின் பொருளாதார நடுவமாக சீனா மாறியுள்ளதுஇவை யாவும் சீனா தன்னை படைத்துறை ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் ஓர் உலகப் பெருவல்லரசாக உருவாக்கும் முயற்ச்சியே.

சீனாவின் மூன்று அதிகார மையங்களும் மூன்று கோடுகளும்
சீனப் பொதுவுடமைக் கட்சி, சீன அரசு, சீனப்படைத்துறை ஆகிய மூன்று அதிகார மையங்களும் சீனாவின் பாட்டாளி வர்க்கத்தை மேம்படுத்த உருவாக்கப்பட்டவை. சீனப் பொதுவுடமைக் கட்சி தன் பொதுவுடமைச் சித்தாந்தங்களை ஒரு புறம் தள்ளி வைத்துவிட்டு 2001-ம் ஆண்டு உலக வர்த்தக நிறுவனத்தில் இணைந்தபடியால் பல கோடி பாட்டாளிகள் வறுமைக் கோட்டின் கீழ் இருந்து மீட்கப்பட்டார்கள். அப்படி ஒன்று செய்திருக்காவிட்டால் சீனப் பாட்டாளிகள் பொறுமைக் கோட்டைத் தாண்டிக் அரசுக்கு எதிராகக் கிளர்ந்து எழுந்து இருப்பார்கள். இப்போது மக்கள் தங்கள் அடிப்படை உரிமைகள் பற்றிச் சிந்தித்துக் கொண்டு இருக்கின்றார்கள். இந்தியா பொருளாதாரத்தில் சீனாவை மிஞ்சிப் போகுமானால் இந்தியாவைப் போல் ஒரு மக்களாட்சியை சீனர்கள் விரும்பலாம். அது மூன்று அதிகார மையங்களுக்கும் அச்சுறுத்தலாக அமையும். அது மட்டுமல்ல சீனா தனது தேச எல்லைக் கோட்டை விரிவாக்க எடுக்கும் முயற்ச்சி அதன் அயல் நாடுகளை ஒன்று திரட்டச் செய்யலாம். இதுவும் சீனாவின்று அச்சுறுத்தலான ஒன்றே.

சீனாவைச் சுற்றி மூன்று முனைகள்
1. ஹொங் கொங் தீவு சீனாவின் ஆட்சிக்குக் கீழ் உள்ள ஒரு பிரதேசம். ஒரு நாடு இரு ஆட்சிமுறைமைகள் என்ற அடிப்படியில் சீனா ஹொங் கொங்கை ஆட்சி செய்கின்றது. 1888-ம் ஆண்டில் இருந்து 99 ஆண்டுகள் குத்தகை அடிப்படையில் பிரித்தானிய ஆட்சியின் கீழ் இருந்த ஹொங் கொங் மக்கள் பிரதான சீனாவில் வாழும் மக்களை கல்வியறிவு அற்றவர்களாகவும் பண்பற்றவர்களாகவும் பார்க்கின்றனர். அதனால் தம்மை சீனர்கள் என அழைக்கப்படுவதை தாம் விரும்புவதில்லை. சீனப் பொதுவுடமைவாதிகள் ஹொங் கொங் மக்களை மக்களாட்சியால் பழுதாக்கப் பட்டவர்களாகப் பார்க்கின்றார்கள். சீனாவில் இருந்து ஹொங் கொங் பிரிந்து செல்வதற்கு ஒரு போதும் அனுமதிக்கப் போவதில்லை என்பதை ஹொங் கொங் மக்கள் நன்கு அறிவர். ஆனால் அவர்கள் தமக்கு அதிக ஆட்சி அதிகாரம் பெற விரும்புகின்றனர். ஹொங் கொங் மக்களைப் பார்த்து சீனாவில் வாழும் மக்கள் மக்களாட்சியை விரும்புபவர்களாக மாறலாம் என்பதை இட்டு சீன ஆட்சியாளர்கள் அதிக கரிசனை கொண்டுள்ளார்கள்.
2. கொரியத் தீபகற்பகம் முழுவதையும் இரண்டாம் உலகப் போரின் பின்னர் ஒரு பொதுவுடமை நாடாக்க சீனாவும் இரசியாவும் எடுத்த முயற்ச்சி மூன்று ஆண்டுப் போரின் பின்னர் கொரியத் தீபகற்பம் வட கொரியா தென் கொரியா என இரு நாடுகளாக பிரிக்கப்பட்டது. தென் கொரியா அமெரிக்க ஆதரவு நாடாக பொருளாதார முன்னேற்றம் கண்டதுடன் அங்கு 52,000 அமெரிக்கப் படையினர் உள்ளனர். சீனாவிற்கு அச்சுறுத்தல் விளைவிக்கக் கூடிய படைக்கலன்களை அமெரிக்கா அங்கு நிறுத்தியுள்ளது சீனாவிற்குப் பெரும் தலையிடி.
3. தைவான் தீவைத் தன்னுடைய ஒரு மாகாணம் என்று சொல்லும் சீனா ஒரே நாடு என்பது என் விதி (0ne country principle) என்கின்றது. சீனாவும் தைவானும் ஒரே நாடு என்பது எமது கொள்கை (One country policy) ஆனால் அது விதியல்ல என்கின்றது அமெரிக்கா. தைவானுக்கு பல வலிமை மிக்க போர் விமானங்களை அமெரிக்கா விற்பனை செய்கின்றது. அமெரிக்காவின் ஐந்தாம் தலைமுறைப் போர் விமானமான F–35 விமானங்களை வாங்க தைவான் பெரு முயற்ச்சி எடுக்கின்றது. அத்துடன் சீனாவைத் தாக்கக் கூடிய அளவில் பெருமளவு ஏவுகணைகளை தைவான் உற்பத்தி செய்கின்றது. தைவானை சீனாவிற்கு எதிரான அமெரிக்காவின் நிலையான விமானம் தாங்கிக் கப்பல் என்று கூட சில படைத்துறை நிபுணர்கள் விபரிப்பதுண்டு.

சீனாவை சுற்றி மூன்று நாடுகள்
1. ஜப்பான் அணுப்படைகலன்களை ஏந்தக் கூடிய வகையில் நிலைமைகள் மாறலாம் என அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலர் ரெக்ஸ் ரில்லர்சன் தெரிவுத்துள்ளார். எம்முன்னால் பல தெரிவுகள் உள்ளன. ஆனால் எதிர்காலத்தில் என்ன நடக்கும் எனச் சொல்ல முடியாது என்றார் ரில்லர்சன்.  அணுக்குண்டுகள் இல்லாத கொரியக் குடாநாடு அணுக்குண்டு இல்லாத பிராந்தியமாக மாறினால் ஜப்பான் அணுக் குண்டுகளை உள்ள நாடாகுவதை இல்லாமற் செய்யலாம் என்றார் மேலும் அவர்.  ஜப்பான் தொடர்பாக அமெரிக்க அணுகு முறையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஜோர்ஜ் டபிளியூ புஷ் அமெரிக்க அதிபராக இருக்கும் போது வட கொரியா அணுக்குண்டு உற்பத்தி செய்வதை நிறுத்தாவிடில் தென் கொரியா, ஜப்பான், தைவான் ஆகியவை அணுக்குண்டுகளைப் பெறும் என சீனாவிற்கு எச்சரிக்கை விடப்படிருந்தது.
2. இந்தியா உலகின் முன்னணி நாடுகளில் வேகமாக வளர்ந்து வருகின்றது. முதலீடுகளிற்கான இலாப விகிதாசாரத்தில் சீனாவிலும் பார்க்க இந்தியா முன்னணியில் இருக்கின்றது. சீனாவின் ஏற்றுமதிச் சந்தையைப் பறிக்கக் கூடிய நிலையில் சீனா இருப்பதுடன் படைத்துறையிலும் சீனாவிற்கு ஆபத்து விளைவிக்கக் கூடிய வகையில் உருவெடுக்கின்றது. சீனா இரசியாவிடம் இருந்து எஸ்-யூ-35 போர்விமானங்களை வாங்கி தனது வான் ஆதிக்கத்தை நிலை நிறுத்தியுள்ளது. அதைத் தகர்க்கும் வகையில் இந்தியா தான் இரசியாவிடமிருந்து வாங்கு வைத்திருக்கும் எஸ்-யூ-30 போர் விமானங்களை எஸ்-யூ-35 போர் விமானங்கள் போல் மேம்படுத்தப் போகின்றதாக அறிவித்துள்ளது. அத்துடன் இந்தியாவின் பிரம்மோஸ் ஏவுகணைகள் சீனாவிற்குப் பெரும் சவாலாக இருக்கையில் மேற்கு ஐரோப்பிய நாடுகளின் Meteror என்னும் வானில் இருந்து வானுக்கு ஏவும் ஏவுகணைகளை வாங்கவுள்ளது. வான் சண்டையில் ஏவுகணைகள் தற்போது உள்ள வான் ஏவுகணைகளில் தலை சிறந்ததாகக் கருதப்படுகின்றது. வானாதிக்கத்தில் சீனாவை மிஞ்சக் கூடிய வகையில் இந்தியா உருவெடுத்து விடுமா என்ற நிலை உருவாகியுள்ளது.
3. இரசியா சீனாவின் நடபை விரும்பினாலும் மத்திய ஆசிய நாடுகளில் சீனாவின் விரிவாக்கத்தை இரசியா விரும்பவில்லை. இரசியாவிற்கு மேற்கு உள்ள கிழக்கு ஐரோப்பிய நாடுகளை ஐரோப்பிய ஒன்றியம் அபகரிக்க இரசியாவிற்கு தெற்கில் உள்ள மத்திய ஆசிய நாடுகளை சீனா அபகரிப்பதை இரசியா தனக்கான அச்சுறுத்தலாகவே எடுத்துக் கொள்ளும். உக்ரேனில் நடந்தது போன்ற ஒரு படை நகர்வு மத்திய ஆசிய நாடுகளில் சீனாவிற்கு எதிராக நடக்கலாம்.

உள்நாட்டில் சீனாவின் மும்முனைப் பிரச்சனைகள்.
சீனாவின் உள்நாட்டில் ஊழல், இஸ்லாமியத் தீவிரவாதம், மக்களில் முதியோர் தொகை அதிகரிப்பு ஆகியவை மூன்று பெரும் தலையிடிகளாகும். துருக்கியைப் பூர்வீகமாகக் கொண்ட உய்குர் இனமக்கள் சீனாவின் சின் ஜியாங் பிராந்தியத்தில் வசிக்கின்றனர். இஸ்லாமியர்களான இவர்கள் பிரிவினை வேண்டிப் போராடுகின்றார்கள். சீனாவின் உள்ள ஊழலை ஒழிக்க அதிபர் ஜி ஜின்பிங் எடுக்கும் நடவடிக்கைகள் பொதுவுடமைக் கட்சியில் குழப்பத்தை உருவாக்கியுள்ளது. சீனாவின் முதியோர் தொகை குறைவாகவும் இளையோர் தொகை குறைவாகவும் இருப்பது பெரும் பிரச்சனையாக இருக்கின்றது. சினா உலகப் பொருளாதார வல்லரசாகுவதற்கு இதுவே பெரும் தடையாகும். 

முப்பெரும் பொருளாதாரப் பிரச்சனைகள்
1. மிகையான உற்பத்தி சாதனங்கள்
உலகெங்கும் சீனாவின் ஏற்றுமதிக்காக உருவாக்கப் பட்ட உற்பத்தி சாதனங்கள் பல இப்போது பயன்பாடற்று இருக்கின்றன. இவற்றின் அரசுக்கு சொந்தமான பல நிறுவனங்கள் இலாபத்திறனற்றுக் கிடக்கின்றன.
2. உயர் தொழில்நுட்பத்துக்கு மாற முடியாத நிலைமை
சீனா தனது உற்பத்தியை உயர் தொழில்நுட்பத்திற்கு மாற்ற எடுக்கும் முயற்ச்சி வெற்றியளிக்கவில்லை. ஏற்கனவே முன் தங்கியுள்ள மேற்கு நாடுகள் சீனா தனது தொழில்நுட்பத்தை மேம்படுத்தும் போது தாமும் மேம்படுத்தி தொழில்நுட்ப இடைவெளியை சீனாவால் குறைக்க முடியாத நிலையை உருவாக்குகின்றன.
3. உள்ளூராட்சிச் சபைகளின் நிதி நிலைமை
சீனாவின் பல உள்ளுராட்ச்சிச் சபைகள் கடன் பளுவால் தவிக்கின்றன. அவற்றுக்கு கடன் கொடுத்த சீன அரச வங்கிகள் அறவிட முடியாக் கடன்களால் தவிக்கின்றன.
நம்ப முடியாத மூன்று நண்பர்கள்
சீனாவிற்கு என்று ஒரு நெருங்கிய நட்பு நாடு இல்லை அது ஒரு தனித்த வல்லரசு என்று சொல்லப்படுகின்றது. சீனாவின் நடபுப் பட்டியலில் முன்னணியில் இருப்பவை வட கொரியா, இரசியா. பாக்கிஸ்த்தான் ஆகியவையாகும். இரசியாவிடமிருந்து படைக்கலன்கள் வாங்குவதற்கு சீனா அதை தன் நட்பு நாடாக வைத்திருக்க முயல்கின்றது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளினதும் வட அமெரிக்க நாடுகளினதும் பொருளாதார மிரட்டல்களைச் சமாளிக்கவும் படைக்கலன்களை விற்பனை செய்யவும் இரசியாவிற்கு சீனா தேவைப் படுகின்றது. இரண்டு நாடுகளும் பொதுவுடமை நாடுகளாக இருந்த போது கூட நெருங்கிய நட்பு நாடுகளாக இருந்திருக்க வில்லை. ஒன்றை ஒன்று ஐயத்துடனேயே பார்த்து வந்தன. பாக்கிஸ்த்தானுக்கு அமெரிக்காவும் தேவை சீனாவும் தேடை என்ற நிலையில் இருக்கின்றது. சீனாவின் தரைவழிப் பட்டுப்பாதைக்கும் கடல்வழிப் பட்டுப்பாதைக்கும் பாக்கிஸ்த்தான் அவசியம் தேவைப்படுகின்றது. வட கொரியா இப்போது தன அணுக்குண்டு அடாவடித்தனத்தால் சீனாவிற்கு ஒரு பிரச்சனையாக இருக்கின்றது.

மூன்று பிடிகள்
1. பொதுவுடமைக் கட்சியின் நாட்டின் மீதான பிடி, 2. பொதுவுடமைக் கட்சியின் 3, படையினர் மீதான பிடி
எல்லாவற்றிலும் ஜி ஜின்பிங்கின் பிடி

மூன்று குற்றச் சாட்டுக்கள்
1. உள் நாட்டு வர்த்தகர்களுக்கு ஊக்கமளிக்க வெளிநாட்டு வர்த்தகர்களுக்குப் பாதகமாக நடந்து கொள்ளுதல். 2. இணையவெளித் திருட்டு. 3. போலியான பொருளாதாரப் புள்ளிவிபரங்கள்

மூன்று கடன் பளுக்கள்
1. உள்ளூராட்சி நிறுவனங்கள். 2. கூட்டாண்மைக் கடன். 3. வங்கிகள்

சீனா விரும்பாதவை மூன்று
1. வெளிநாட்டு வர்த்தக நிறுவனங்கள் 2. தொண்டு நிறுவனங்கள், 3. வெளிநாட்டு ஊடகங்கள், வெளிநாட்டு ஊடகங்கள் போன்றவை தனது நாட்டில் குழப்பத்தை விளைவிக்கலாம் என்ற அச்சம் சீனாவுக்கு உண்டு, அவற்றிற்கு எதிரான கட்டுப்பாடுகளை சீனா அதிகரித்துக் கொண்டே போகின்றது. இந்த மூன்றிற்கும் எதிராகச் செயற்பட காவற்துறைக்கு சீன அரசு அதிக அதிகாரங்களை வழங்கியுள்ளது கல்விமான்கள், எழுத்தாளர்கள், ஆய்வாளர்கள் ஆகியவர்கள் தனது நாட்டில் வந்து தனது ஆட்சி முறைமைக்கு எதிரான கருத்துரைகளை வழங்குவார்களா என்ற அச்சம் சீனாவிடம் உள்ளது. வளர்ச்சியடைந்த நாடுகள் இந்த மூன்று துறைகளையும் சேர்ந்த நிபுணர்களை வைத்து அடிக்கடி பல மாநாடுகள், கலந்துரையாடல்கள், கருத்துப் பரிமாற்றங்கள் போன்றவற்றைச் செய்கின்றது. அது நாட்டின் வளர்ச்சிக்கு உதவுகின்றது. மேற்கு நாடுகள் என்னதான் குடிவரவுக்கு எதிரான கருத்துக்களை முன்வைத்தாலும் வெளிநாட்டில் இருந்து நிபுணத்துவம் பெற்றவர்கள் வந்து தமது நாடுகளில் குடியேறுவதை ஊக்குவித்துக் கொண்டே இருக்கின்றது.

சீனா அமெரிக்காவுடன் செய்ய விரும்பாதவை மூன்று
சீனா அமெரிக்காவுடன் ஒரு வர்த்தகப் போரையும், படைக்கல உற்பத்திப் போட்டியையும், நேரடி மோதலையும் செய்யக் கூடாது என்பதை உணர்ந்துள்ளது. இவை இரு நாட்டுக்கும் பெரும் கேடு விளைவிக்கக் கூடியவை என்பதை இரு நாடுகளும் நன்கு உணர்ந்துள்ளன.


இவை முன்றும்தான் உலக அமைதிக்குக் காரணிகளாக இருக்கின்றன. இருக்கப்போகின்றன. 

Tuesday, 9 May 2017

களங்களில் இறங்கிய அமெரிக்காவின் 5-ம் தலைமுறைப் போர்விமானங்கள்

அமெரிக்காவின் லொக்ஹீட் மார்ட்டின் நிறுவனம் நானூறு பில்லியன் டொலர்கள் செலவழித்து உருவாக்கிய 2457  F-35 என்னும் ஐந்தாம் தலைமுறைப் போர் விமானங்களில் சில பல களங்களில் இறங்கியுள்ளன. F-35 போர் விமானத்தின் விமானியின் இருக்கை விமானத்தில் இருந்து சற்று மெல் உயர்த்தப்பட்டு அரைக் கோளவடிவக் கண்ணாடியால் மூடப்பட்டிருக்கும். இதனால் விமானி எல்லாத் திசைகளிலும் பார்க்க முடியும். இதுவரை எந்த ஒரு விமானமும் இந்த வகையில் வடிவமைக்கப்படவில்லை. அத்துடன் எந்த ஒரு ரடாருக்கும் புலப்படாத்தன்மை கொண்டது F-35. மேலும் அதில் உள்ள உணரிகள் உயர்தரமானவை. இதனால் எதிரிகளிற்குத் தெரியாமல் எதிரியின் பிராந்தியத்துள் நுழைந்து வானாதிக்கம் செலுத்துவதில் அது சிறந்து விளங்குகின்றது.

Hot loading என்னும் உடன் ஏற்றல்
குண்டுகளை வீசிவிட்டு வரும் விமானங்கள் தரையிறங்கி இயந்திரத்தை நிறுத்திய பின்னரே அதில் படைக்கலன்களை ஏற்ற முடியும். ஆனால் F-35 போர் விமானங்கள் குண்டு வீசிவிட்டு வந்து தரையிறங்கி இயந்திரத்தை நிறுத்தாமலே குண்டுகளையும் ஏவுகணைகளையும் மீள் நிரப்பல் செய்ய முடியும். இதனால் குண்டு வீச்சுக்கள் தாமதமின்றி செய்ய முடியும். அத்துடன் F-35 போர்விமானங்களுக்கு எந்த இடத்தில் வைத்தும் எரிபொருள் மீள்நிரப்ப முடியும். பொதுவாக விமானங்களுக்கு எரிபொருள் நிரப்ப தனியிடம் அமைக்கப்படும்.

F-35 போர் விமானங்கள் பரிஸ் காட்சியில் இல்லை
2017 ஜூன் மாதத்தில் பிரெஞ்சுத் தலைநகர் பரிசில் நடக்கவிருக்கும் விமானக் கண்காட்சியில் அமெரிக்காவின் F-35 போர் விமானங்கள் பங்கு பெறமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் போர் விமான உற்பத்திக்கும் பிரெஞ்சுப் போர் விமான உற்பத்திக்கும் இடையில் இருக்கும் போட்டியின் ஓர் அம்சமாகவே இது பார்க்கப்படுகின்றது. பிரெஞ்ச் ரஃபேல் போர் விமானங்களை இந்தியா வாங்கியது அமெரிக்கர்களை ஆத்திரமும் பொறாமையும் அடைய வைத்தது. F-35 இன் உற்பத்தியாளர்களான லொக்ஹீட் மார்ட்டின் நிறுவனத்தினர் தமக்கு பரிஸ் விமானக் காட்சி ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுக்கவில்லை என்கின்றனர். 2015-ம் ஆண்டு பிரித்தானியாவில் நடந்த காட்சியில் F-35 இன் B வகையைச் சேர்ந்த விமானங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. பிரித்தானியா, பெல்ஜியம், பின்லாந்து, சுவிற்சலாந்து, ஸ்பெயின், நோர்வே ஆகிய ஐரோப்பிய நாடுகள் மட்டுமல்ல துருக்கி கூட F-35 போர்விமானங்களை வாங்கவிருக்கும் போது பிரான்ஸ் அதில் எந்தவித அக்கறையும் காட்டவில்லை. பிரான்ஸின் ரஃபேல் போர் விமானங்கள் F-35உடன் ஒப்பிடுகையில் புலப்படாத்தன்மைத் தொழில் நுட்பத்தில் மிகவும் பின் தங்கியவை.

எஸ்த்தோனியாவிற்கு F-35
இரசியா 2017-ம் ஆண்டின் இறுதிக்குள் தனது படைகளை நேட்டோ நாடுகளுக்கு அச்சுறுத்தல் கொடுக்கும் வகையில் பெலரஸ் நாட்டில் நிறுத்தவிருக்கின்றது. அத்துடன் பெலரஸ் படைகளுடன் இணைந்து பெரும் படை ஒத்திகையையும் செய்யவிருக்கின்றது. இந்த ஒத்திகைக்கு ஜப்பாட்-2017 என்னும் குறியீட்டுப் பெயரும் சூட்டப்பட்டுள்ளது. இது பற்றிக் கருத்து வெளியிட்ட எஸ்த்தோனியா நாட்டுப் பாதுகாப்புத் துறை அமைச்சர் மார்க்கஸ் சங்கா (Margus Tsahkna) இரசியா தனது படை நகர்வுக்கு என தொடருந்துப் பெட்டிகளை பெலரஸுக்கு அனுப்பியுள்ளது. படை ஒத்திகைக்கு என்னும் போர்வையில் பெலரஸ் செல்லும் இரசியப் படைகள் திரும்பி இரசியா செல்ல மாட்டாது எனவும் மார்க்கஸ் தெரிவித்தார். இரசியா தான் கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கு அச்சுறுத்தல் விடுக்கவில்லை என்றும் இரசிய அச்சுறுத்தல் என்னும் புரளியைக் கிளப்பி அமெரிக்கா தனது படைகளையும் படைக்கலன்களையும் இரசிய எல்லைகளில் குவிக்கின்றது என்றும் குற்றம் சாட்டுகின்றது. அமெரிக்கா 4000 படையினரை போல்ரிக் நாடுகளிலும் போலந்திலும் சுழற்ச்சி முறையில் நிறுத்தியுள்ளதையும் இரசியா சுட்டிக் காட்டியுள்ளது. இந்த நிலையில் அமெரிக்காவின் F-35 போர் விமானங்கள் எஸ்த்தோனியா சென்றுள்ளன. இரசிய எல்லையில் இருந்து 150 மைல்கள் தொலைவில் உள்ள எஸ்த்தோனியாவின் அமாரி விமானத்தளத்தில் F-35 போர்விமானங்கள் பறப்புப் பயிற்ச்சிகளில் ஈடுபடவுள்ளன.

கலிங்கிராட்டில் உள்ள எஸ்-400 உடன் F-35
போல்ரிக் கடலை ஒட்டி போலாந்துக்கும் லித்துவேனியாவிற்கு இடையில் உள்ள காலிங்கிராட் என்னும் சிறிய பிரதேசத்தை இரசியா தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்கின்றது. அதில் உள்ள இரசியக் கடற்படையினரைப் பாதுகாக்க இரசியா தனது எஸ்-400 ஏவுகணை எதிர்ப்பு முறைமையை எஸ்த்தோனியாவில் நிறுத்தப்பட்டிருக்கும் F-35 சமாளிக்கும் என எதிர்பார்க்கப் படுகின்றது. எஸ்த்தோனியாவைத் தொடர்ந்து மற்ற ஒரு போல்ரிக் நாடான ருமேனியாவிற்கும் F-35 போர்விமாங்கள் அனுப்பி வைக்கப்படவிருக்கின்றன.

இஸ்ரேல் பலப்பரீட்சை செய்து பார்த்ததா?
அமெரிக்க வான்படைக்கு அடுத்தபடியாக F-35 போர்விமானங்களைப் பாவித்த நாடு இஸ்ரேலாகும். 2017 ஜனவரியில் இரண்டு F-35 இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்டது. பின்னர் 2017 ஏப்ரலில் மூன்று அனுப்பப்பட்டன. அது சிரிய வான்வெளியில் புகுந்து சிரியாவில் இருந்து ஹிஸ்புல்லா அமைப்பினர் லெபனானுக்கு எடுத்துச் செல்லும் படைக்கலன்களை அழித்தது. F-35 போர்விமானங்களை சிரியாவில் உள்ள இரசியாவின் எஸ்-400 ஏவுகணை எதிர்ப்பு முறைமைகளால் இனம் காண முடியாமல் போய்விட்டதா என்ற கேள்வி எழும்பியுள்ளது. இரசியா தனது ஏவுகணை எதிர்ப்பு முறைமைகளையும் ரடார்களையும் அமெரிக்கப் போர்விமானங்களுக்கு எதிராகப் பரிசோதனை செய்யும் முகமாக சிரியாவில் நிறுவியிருந்தது. இதை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தி F-35 புலப்படாத்தன்மையைப் பரிசோதிக்க அமெரிக்கா இஸ்ரேல் மூலம் சிரியாவுக்குள் அனுப்பியிருக்கலாம் என ஊகிக்கப்படுகின்றது. சிரிய உள்நாட்டுப் போர் ஆரம்பித்ததில் இருந்து சிரியாவில் இருந்து படைக்கலன்களை ஹிஸ்புல்லா அமைப்பினர் லெபனானுக்கு எடுத்துச் சென்று இஸ்ரேலிய எல்லையில் நிறுத்துவதைத் தடுக்க பல தடவைகள் இஸ்ரேலிய போர் விமானங்கள் சிரியாவுக்குள் அத்து மீறிப் புகுந்து தாக்குதல்கள் செய்தன. ஆனால் இரசிய ஏவுகணை எதிர்ப்பு முறைமைகள் சிரியாவில் நிறுத்தப்பட்ட பின்னர் இஸ்ரேல் இரசியாவிடம் தனது ஆட்சேபனைகளைத் தெரிவித்திருந்தது. இஸ்ரேலின் எல்லா விமான நடமாட்டங்களையும் சிரியாவில் உள்ள எஸ்-400 ஏவுகணை எதிர்ப்பு முறைமைகளால் அவதானிக்க முடியும். இப்படியிருக்கையில் சிரியாவில் பல படைக்கலக் கிடங்குகளை இஸ்ரேல் 2017 ஜனவரிக்குப் பிறகு அழித்தது எப்படி என்ற கேள்விக்கு விடையாக இஸ்ரேல் F-35 போர்விமானங்களைப் பாவித்தது என ஊகிக்கலாம். பிரெஞ்சு உளவுத் துறையின் தகவல்களை இரகசியமாகப் பெற்ற பிரெஞ்சு ஊடகவியலாளர் ஒருவர் இஸ்ரேல் F-35 போர்விமானங்கள் மூலம் சிரியாவில் தாக்குதல்கள் செய்தன எனக் கூறுகின்றார். அமெரிக்காவின் F-35 போர்விமானங்களையும் இரசியாவின் எஸ்-400 ஏவுகணை எதிர்ப்பு முறைமைகளையும் ஒப்பிட்டு பல படைத்துறை நிபுணர்கள் தொடர்ச்சியாக எழுதிவந்த ஆய்வுகளுக்கு இஸ்ரேல் விடையளித்து விட்டதா? இதே வேளை சிரியாவில் வேதியியல் குண்டுகள் வெடித்ததைத் தொடர்ந்து மத்தியதரைக் கடலில் உள்ள அமெரிக்காவின் வழிகாட்டல் ஏவுகணைதாங்கி நாசகாரக் கப்பல்களில் இருந்து சிரிய விமானத் தளத்தை நோக்கி வீசப்பட்ட 59 ரொமொஹோக் ஏவுகணைகளில் ஒன்று ஏவப்பட்டவுடன் சிதறிவிட்டது. ஏனயவற்றில் 30 மட்டுமே இலக்கைத் தாக்கின. மிகுதி 28இற்கும் என்ன நடந்தது என்பதைப்பற்றி படைத்துறை நிபுணர்கள் தலைமுடியைப் பிய்த்துக் கொண்டிருக்கின்றனர். அவற்றை இரசிய ஏவுகணை எதிர்ப்பு முறைமை இடைமறித்து அழித்திருக்கலாம் என ஓர் ஊகம். இரண்டாவது ஊகம் சற்று மோசமானது. தான் சிரியாமீது ஏவுகணை வீசப் போவதை அமெரிக்கா இரசியாவிற்கு முன் கூட்டியே அறிவித்திருந்தது. இதனால் இரசியாவின் இணையவெளிப் போராளிகள்  இணையவெளி ஊடுருவல் மூலம் அமெரிக்காவின் ரொமொஹொக் ஏவுகணைகளைத் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து அவற்றை மத்திய தரைக் கடலில் விழச் செய்திருக்கலாம். ரொமொஹோக் வழிகாட்டல் ஏவுகணைகளின் பாயும் பாதை விழும் இலக்கு போன்றவை கணினிகள் மூலம் தீர்மானிக்கப்படுபவை. F-35 போர்விமானங்களை களமுனையில் பாவித்து அதில் உள்ள சிறப்புத்தன்மைகள் பற்றியும் குறைபாடுகள் பற்றியும் லொக்கீட் மார்ட்டீனுக்கு சிறந்த அறிக்கை கொடுக்கக் குடிய திறன், அறிவு, அனுபவம் ஆகியவை இஸ்ரேலிய விமானப்படையினரிடம் தாராளமாக உண்டு என்பதாலேயே இஸ்ரேலுக்கு முதலாவதாக F-35 போர்விமானங்கள் வழங்கப்பட்டன.

F-35 இஸ்ரேலுக்கு சாதகமான படைத்துறைச் சமநிலை.
இஸ்ரேலுக்கு அமெரிக்கா F-35 போர்விமானங்களைக் கொடுப்பதால் அமெரிக்காவின் நட்பு நாடுகள் அதிருப்தியடைந்துள்ளன. மொத்தம் ஐம்பது F-35 போர்விமானங்களை இஸ்ரேல் வாங்கவிருக்கின்றது. ஆண்டு தோறும் அமெரிக்கா 3பில்லியன் அமெரிக்க டொலர்களை அமெரிக்காவிடமிருந்து நிதி உதவியாகப் பெறுகின்றது. இந்த நிதி உதவியைப் பாவித்தே இஸ்ரேல் F-35 போர் விமானங்களை வாங்குகின்றது. 1970-ம் ஆண்டில் இருந்து F-15 மற்றும் F-16 போன்ற அமெரிக்கப் போர்விமானங்கள் மூலம் இஸ்ரேல் மேற்காசியாவிலும் வட ஆபிரிக்காவிலும் தனது வானாதிக்கத்தைச் செலுத்தி வந்தது. ஈரான், ஈராக், சிரியா போன்ற நாடுகள் அணுக்குண்டு உற்பத்தி செய்ய முயன்ற போது அந்த ஆய்வு நிலையங்களை இஸ்ரேல் தாக்கியழித்தது. இதனால் ஈரான் தனது ஆய்வு நிலையத்தை மலைப்பாறைகளின் கீழ் மேற்கொண்டது. இனி இஸ்ரேல் தன்னிடமுள்ள ஐம்பது F-35 மூலம் தனது வானாதிக்கத்தை மேலும் அதிகரிக்கப்போகின்றது. இஸ்ரேலுக்குச் சாதகமாக இருக்கும் படைத்துறச் சமநிலை இன்னும் பல ஆண்டுகளுக்குத் தொடர்ப்போகின்றது.

F-35ஐ வாங்க முயலும் தைவான்
தைவான் தனது பாதுகாப்பிற்கும் சீனாவின் ஆக்கிரமிப்பைத் தவிர்ப்பதற்கும் அமெரிக்கா வழங்கும் படைக்கலன்களில் பெரிதும் தங்கியுள்ளது. தைவான் அமெரிக்காவிடமிருந்து F-35 போர் விமானங்களை வாங்கப் பெரும் முயற்ச்சி செய்கின்றது. அதிலும் F-35-B போர்விமானங்களை வாங்குவதில் அதிக அக்கறை காட்டுகின்றது. F-35B போர் விமானங்கள் குறுகிய தூரம் மட்டும் ஓடி மேல் எழுந்து செல்லக் கூடியவை. சீனாவுடனான உறவைப் பாதிக்கும் என்பதால் F-35 தைவானுக்கு விற்பனை செய்யப்பட மாட்டாது. 1992-ம் ஆண்டு ஜோர்ஜ் எச் டபிளியூ புஷ் புதியரகப் போர் விமானங்களை விற்பனை செய்ய அனுமதி வழங்கினார். நிக்சனுக்குப் பிறகு வந்த அதிபர்களில் அவர் மட்டுமே சீனாவின் விருப்பத்திற்கு மாறாகச் செயற்பட்டார். 2010-ம் ஆண்டு பராக் ஒபாமா 6.4பில்லியன் டொலர்கள் பெறுமதியான படைக்கலன்களை விற்பனை செய்தார். சீனாவின் ஆட்சேபனையால் F-16 போர்விமானங்கள் அதில் உள்ளடக்கப்படவில்லை. தைவான் ஆகக் குறைந்தது புதுப்பிக்கப்பட்ட F-16 போர்விமானங்களையாவது அமெரிக்காவிடமிருந்து வாங்கும். சீன வான் ஆதிக்கத்தைச் சமாளிக்க தைவான் தரையில் இருந்து வானுக்கு வீசக் கூடிய ஏவுகணைகளில் அதிக கவனம் செலுத்துகின்றது. தப்பித்தவறி தைவான் சீனாவால் கைப்பற்றப்பட்டால் F-35 சீனாவின் கைகளுக்குப் போய்விடும் என்ற அச்சமும் அமெரிக்கா தைவானுக்கு F-35 போர்விமானங்களை விற்பனை செய்வதைத் தடுக்கின்றது.

ஜப்பானிலும் பிரித்தானியாவிலும்  F-35
சீனா அடிக்கடி வலாட்டி வரும் கிழக்குச் சீனக் கடல் பிராந்தியத்தில் அதன் கொட்டத்தை அடக்க அமெரிக்கா தனது F-35 போர்விமானங்களை ஜப்பானில் நிறுத்தியுள்ளது. F-35 போர்விமானங்கள் ஜப்பானுக்கு சென்ற பின்னர் சீன விமானங்கள் ஜப்பானிய எல்லைக்குள் அத்து மீறுவதை நிறுத்தியுள்ளதாகவும் கூறப்படுகின்றது. பிரித்தானியாவிற்கு எட்டு F-35 போர்விமானங்கள் ஏப்ரல் 2017 இல் சென்றன. அங்கு அவை மற்ற நேட்டோ நாடுகளின் போர்விமானங்களுடன் இணைந்து வான் சண்டை மற்றும் பல விதமான தாக்குதல்கள் செய்யும் பயிற்ச்சிகளில் ஈடுபட்டன.


உலகின் பல்வேறு பகுதிகளுக்கு குறைந்த எண்ணிக்கையினால F-35 போர்விமானங்கள் சென்ற போதிலும் மிக அதிக எண்ணிக்கையான விமானிகள் சென்றுள்ளனர். அவர்கள் சுழற்ச்சி முறையில் பல பயிற்ச்சிகளில் ஈடுபட்டுள்ளனர். இது இனி வரும் காலங்களில் F-35 போர் விமாங்கள் மூலம் அமெரிக்கா தனது உலக வானாதிக்கத்தை நிலை நிறுத்த முயல்கின்றமையை எடுத்துக் காட்டுகின்றது. இதற்குப் போட்டியாக இரசியாவும் சீனாவும் தமது ஏவுகணை எதிர்ப்பு முறைமைகளையும் போர்விமானங்களையும் தரமுயர்த்த நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளன.


Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...