
1983-ம் ஆண்டு ஜூலை மாதம் 23-ம் திகதி விடுதலைப் புலிகள் இராணுவத்திற்கு எதிராகசெய்த தாக்குதலை மையப் படுத்தியே உலகத்தின் இலங்கையின் இனப் பிரச்சனை தொடர்பான பார்வை இதுவரை இருந்து வந்தது.
இலங்கை சுதந்திரமடைந்த பின்னர் பெரும்பாலான தமிழர்களின் வாக்குரிமை பறித்ததிற்கு எதிராக தமிழர்கள் ஆட்சேபித்தனர் ஆனால் ஆயுதம் ஏந்தவில்லை.
தமிழர்களின் நிலங்களில் இருந்து அவர்களை விரட்டியடித்து விட்டு அங்கு சிறையிலிருந்த சிங்களக் குற்றவாளிகளுக்கு மன்னிப்பளித்து குடியேற்றியபோது தமிழர்கள் செய்வதறியாது கைபிசைந்து நின்றனர். கையில் ஆயுதம் ஏந்தவில்லை.
சிங்களம் ஆட்சி மொழியாக்கப் பட்ட போது தமிழர்கள் அமைதி வழியில் எதிர்ப்புத் தெரிவித்த போது மோசமான வன்முறை தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டது.
இவற்றை எல்லாம் சர்வதேச சமூகம் அறிந்தும் அறியாதது போலிருந்தது.
1983இற்குபின் தமிழ் ஆயுதக் குழுக்கள் இலங்கை அரசுக்கு எதிராக செய்த தாக்குதல்கள் இலகுவாக பயங்கரவாத நடவடிக்கை என முத்திரை குத்தப் பட்டது. ஆயுத இயக்கங்களின் நடவடிக்கை சுமூகமான உலகமயமாக்கலுக்கு தடையென்றுணர்ந்த மேற்கு நாடுகளின் ஊடகங்கள் விடுதலைப் போராட்டங்களை கொச்சைப் படுத்தின.
பிராந்திய ஆதிக்கத்தை வளர்க்க நினைத்த நாடுகளும் தமிழர் உரிமைப் போராட்டத்தை தமக்கு சாதகமாக்கிவிட்டு அழிக்க முயன்றன.
ரொனால்ட் ரீகன் - மார்கரெட் தட்சர் ஆட்சிக் காலங்களில் சர்வதேச நியமங்கள் ஒரு அசிங்க வடிவத்தை எடுத்தன. உலகமயமாக்கலுக்காக எந்த நாடும் திரைமறைவில் எந்த அசிங்க நடவடிக்கை எடுக்கலாம் என்ற நிலைப்பாடு உரம் பெற்றது. சோவியத்தின் வீழ்ச்சியும் பனிப்போர் முடிவும் இதற்கு வசதி செய்து கொடுத்தன.
இத்தனை தடைகளுக்கும் மத்தியில் தமிழ்த்தேசியம் தனது ஆயுத போராட்டத்தை வலுப்படுத்திக் கொண்டே இருந்தது. அமெரிக்க இரட்டைக் கோபுரத்தின் மீதான தாக்குதலைத் தொடர்ந்து புஷ் நிர்வாகத்தின் மூடத்தனமான முடிவுகளால் நியாயமான ஆயுத போராட்டங்கள் பயங்கரவாதமென சட்டபூர்வ முத்திரை குத்தப்பட்டது. பிராந்திய ஆதிக்க வெறியர்களின் நிர்வாகத்தில் இருந்த சாதி வெறியர்களுக்கு சாதியத்தை ஒழித்த தமிழ்த்தேசிய போராட்டத்தை ஒழித்துக் கட்டக் கிடைத்த அரிய சந்தர்ப்பத்தை சாதுரியமாகப் பயன்படுத்தினர். இலங்கை அரசிற்கு இனக்கொலைக்கான ஆதரவு இலகுவாக பல தரப்பிலிருந்தும் சித்தாந்த வேறுபாடோ சிந்தனை வேறுபாடோ இன்றிக் கிடைத்தது.
வரலாற்றில் என்றுமே இடம் பெறாத மோசமான இனக்கொலையும் வன்முறையும் இலங்கையில் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. தகவல் தொழில் நுட்ப வளர்ச்சியும் உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களும் தமிழர்கள் தமக்கெதிரான கொடுமைகளை ஒரளவிற்கு வெளிக்கொண்டுவர மற்றவர்களின் கவனத்தை ஈர்க்க பெரும் பங்காற்றினர். கண்மூடித்தனமாக இருந்த ஐக்கிய நாடுகளின் உயர்மட்டத்தின் மூடிய கண்களுக்குள்ளும் தமிழர்களின் அவலம் எடுத்துச் செல்லப்பட்டது. பாராமுகங்களின் மூக்கடி வரை தமிழர் அவலங்கள் எடுத்துச் செல்லப் பட்டது.
1983ஜூலை மாதத்தை மையப் படுத்திய உலகத்தின் பார்வை இப்போது 2009 மே மாதத்தை மையப் படுத்தி பார்க்க ஆரம்பித்து விட்டது.