Showing posts with label பலஸ்த்தீனம். Show all posts
Showing posts with label பலஸ்த்தீனம். Show all posts

Tuesday, 31 May 2022

அல் அக்சா பள்ளிவாசலில் கைஓங்கும் யூதர்களும் கையாலாகத அரபுக்களும்

 2022 ஏப்ரல் மாதம் 17-ம் திகதி கிருத்தவர்களின் உயிர்த்தெழுந்த ஞாயிறு, இசுலாமியர்களின் நோன்பு நடக்கும் வேளையிலும் யூதர்களின் நோன்பு நடக்கும் வேளையிலும் நிகழ்ந்தது. முப்பத்தி மூன்று ஆண்டுகளுக்கு ஒரு தடவை இப்படி நடப்பதாக கூறுகின்றார்கள். இம் மூன்று மத்தினருக்கும் புனித இடமான ஜெருசேலத்தில் உள்ள பழைய நகரில் எப்போதும் போல் இல்லாத வகையில் இஸ்ரேலியர்களும் 2022 ஏப்ரலில் அரபுக்களும் மோதிக் கொண்டனர். ஜெருசேலம் பழைய நகர் யூதர்களின் புனித இடமாகக் கருதப்படுகின்றது. இறை தூதர் நபி வர முன்னர் மட்டுமல்ல பரபிதா தன் ஒரே ஒரு குமாரரை புவியில் உள்ள பாவிகளை இரட்சிக்க அனுப்ப முன்னரே ஜெருசேலத்தில் பழைய நகர் யூதர்களின் புனித இடமாக இருந்து வருகின்றது. மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே ஜெருசேலம் உலகன் நடுப்புள்ளியாக இருந்ததாகத யூதர்கள் கருதுகின்றனர். யூதர்களின் புனித இடமான மலைக்கோவில் (Temple Mount) ஜெருசேலம் பழைய நகரில் உள்ளது.  இஸ்லாமியர்கள் நபிகள் நாயகம் புவியில் இருந்து வானுலகம் நோக்கி பயணைத்த புனித இடம் ஜெருசேலம் எனச் சொல்கின்றனர். அவரகள் ஜெருசேலம் பழைய நகரில் அல் அக்சா என்னும் பள்ளிவாசலை உருவாக்கி அதை அவர்கள் மக்கா, மதினா போன்ற மிகப் புனிதமான இடமாக கருதுகின்றனர். யேசு நாதர் போதனை செய்த, சிலுவையில் அறையப்பட்ட, உயிர்த்து எழுந்த தலம் ஜெருசேலம் நகராகும். ஜெருசேலத்தில் உள்ள பழைய நகரைச் சுற்றி மதில் கட்டியெழுப்பப்பட்டுள்ளது. அங்கு கிருத்தவர்களுக்கு எனவும், ஆர்மினியர்களுக்கு எனவும் (அவர்கள் மரபுவழி கிருத்தவர்கள்) யூதர்களுக்கு எனவும் இஸ்லாமியர்களுக்கு எனவும் தனித்தனி நிலப்பரப்புக்கள் உள்ளன. 

1967 போர் வெற்றி ஊர்வலம்

யூதர்கள் 1967-ம் ஆண்டு நடந்த அரபு இஸ்ரேல் போரில் தாம் வெற்றி பெற்றதையும் தங்களது புனித தலமாகிய கிழக்கு ஜெருசேலம் நகரைக் கைப்பற்றியதையும் ஆண்டு தோறும் கொண்டாடி வருகின்றனர். அதை ஒட்டி அவர்கள் தங்கள் கொடியுடன் பழைய நகர் முழுவதும் ஊர்வலம் போவார்கள். போகும் போது பலஸ்த்தீனிய அரபுக்கள் மீது தாக்குதல் நடத்துவதை வழமையாகக் கொண்டுள்ளனர். ஊர்வலத்தில் அரபுக்கள் அழிக என கூச்சலிட்டுக் கொண்டு யூதர்கள் செல்வார்கள். கிழக்கு ஜெருசேலம் பழைய நகர் யூதர்களின் இறையாண்மைக்கு உட்பட்டது என்பதை உணர்த்தும் வகையில் அவர்கள் இஸ்லாமியர்களின் நிலப்பரப்புக்களூடாக ஊர்வலம் செல்வார்கள். 2022 ஏப்ரல் 17-ம் திகதி உயிர்த்த ஞாயிறு நடந்த மோதலைத் தொடர்ந்து மே மாதம் 29-ம் திகதி யூதர்கள் ஊர்வலம் போகும் போது மோதல் கடுமையாக இருந்தது. 2022 மே மாதம் 29-ம் திகதி ஞாயிற்றுக் கிழமை அரபுக்களுக்கும் யூதர்களுக்கும் இடையில் நடந்த மோதலில் 150இற்கும் மேற்பட்ட பலஸ்த்தீனியர்கள் காயமடைந்தனர். மூன்று யூத காவல் துறையினர் காயமடைந்தனர். நூற்றுக்கு மேற்பட்ட பலஸ்த்தீனியர்கள் கைது செய்யப்பட்டனர். அல் அக்சாவினுள் பலஸ்த்தீனியர்கள் நுழைய முடியாமல் இஸ்ரேலியர் தடுத்து நின்றனர். பலஸ்த்தீனியர்கள் கடுமையாகத் தாக்கப்பட்டனர். ஒரு இளம் பெண் கடுமையாகத் தாக்கப் படும் காணொலிவெளியிடப்பட்டுள்ளது.

தீவிரவாத இஸ்ரேலியர்கள்

இஸ்ரேலின் தீவிரதேசியவாதக் கட்சியின் தலைவரான இதமர் பென் வீர் தலைமையில் பல தீவிரதேசியவாத யூதர்க்ள் 2021-05-29 ஞாயிற்றுக் கிழமை காலை இஸ்லாமியர்களின் புனித தலமான அல் அக்சாவை ஆக்கிரமித்திருந்தனர். அல் அக்சாவின் அல் கிபிலி வணக்க மண்டபத்தில் அவர்கள் நிலை கொண்டுள்ள்னர். பலஸ்த்தீன செம்பிறைச் சங்கம் தமது அவசர நோயாளர் வண்டி காயமடைந்தவர்களை எடுக்கச் சென்றபோது தாக்கப்பட்டதாக தெரிவிக்கின்றனர். தீவிரவாத யூதர்கள் இஸ்லாமியர்களின் அல் அக்சா பள்ளிவாசலையும் மலைக் குவிமாடத்தையும் (Dome of the Rock) அகற்றிவிட்டு யூதர்களின் வழிபாட்டிடங்கள் அமைக்கப் படவேண்டும் என அடம் பிடிக்கின்றனர். இஸ்ரேலியச் சட்டப்படியும் யூத தலைமை மத குருவின் கட்டளைப்படியும் யூதர்கள் அல் அக்சா பள்ளிவாசலில் தமது மத தொழுகையை நடத்தக் கூடாது. இருந்தும் 2022 மே மாதம் யூத தீவிரவாதிகள் அல் அக்சா பள்ளிவாசலில் தமது மத தொழுகையைச் செய்தனர்.

2021 மோதலில் காசா நிலப்பரப்பில் கடும் தாக்குதல்

2021-ம் ஆண்டு மே மாதம் ரம்ழான் நோன்பு தொழுகையின் போது அல் அக்சா பள்ளிவாசலில் உள்ள ஒலி பெருக்கியில் இருந்து வரும் ஒலி யூதர்களின் போர் வெற்றிக் கூட்டத்தில் ஆற்றுகின்ற உரைக்கு இடையூறாக இருந்ததால் இஸ்ரேலிய காவல் துறையினர் அல் அக்சாவினுள் சென்று ஒலிபெருக்கியை உடைத்தனர். அப்போது இரு தரப்பு மோதல் உருவானது. பல்ஸ்த்தீனியர்கள் கற்களையும் இஸ்ரேலிய காவல் துறையினர் கண்ணீர்ப் புகைக் குண்டுகளையும் வீசினர். இந்த மோதலால் சினமடைந்த கமாஸ் அமைப்பினர் தமது காசா நிலப்பரப்பில் இருந்து இஸ்ரேல் மீது எறிகணைத் தாக்குதல்களை நடத்தினர். அதனால் காசா நிலப்பரப்பின் மீது இஸ்ரேலியப் படையினர் கடும் தாக்குதல்களை செய்தனர். பதினொரு நாட்கள் தொடர்ந்த மோதலில் அரபு பலஸ்த்தீனியர்கள் வாழும் காசா நிலப்பரப்பில் பல கட்டிடங்களை இஸ்ரேல் தரைமட்டமாக்கியது. 2022 நடக்கும் மோதலில் இதுவரை கமாஸ் அமைப்பினர் அமைதியாக இருப்பதை பலரும் வியப்புடன் பார்க்கின்றனர். 2021-ம் ஆண்டு கமாஸிற்கு விழுந்த அடியில் இருந்து இன்னும் அது மீளவில்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது. அல்லது கமாஸ் அமைப்பினர் தமது மக்களின் பொருளாதார நிலை மீது அதிக கவனம் செலுத்துகின்றனர் எனவும் கருத இடமுண்டு. இஸ்ரேல் இப்போது கமாஸ் அமைப்பினரின் ஏவுகணைகளையும் எறிகணைகளையும் ஆளிலிவிமானங்களையும் எதிர் கொள்ளக் கூடிய லேசர் படைக்கலன்களை உருவாக்கியுள்ளது. அவற்றிற்கு தேர்வுக் களம் அமைத்துக் கொடுக்க கமாஸ் அமைப்பினர் விரும்பவில்லையா? 

  • The International Union of Muslim Scholars இஸ்லாமிய நாடுகள் அல் அக்சா பள்ளிவாசலை பாதுகாக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

1967இல் நடந்த போரில் கிழக்கு ஜெருசேலத்தை ஜோர்தானிடமிருந்து இஸ்ரேல் அபகரித்துக் கொண்டது. 2019இல் டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவில் ஆட்சியில் இருக்கும் போது அதை இஸ்ரேலின் ஒரு பகுதியாக இணைத்துக் கொண்டது. ஐக்கிய நாடுகள் சபையும் பல உலக நாடுகளும் கிழக்கு ஜெருசேலம் யூதர்களுக்கு சொந்தமானது அல்ல எனக் கருதுகின்றனர். ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானங்களின் படி கிழக்கு ஜெருசேலம் ஓரு ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசமாகும். பன்னாட்டு சட்டங்களின் படி ஆக்கிரமிக்கப் பட்ட பிரதேசத்தில் ஆக்கிரமித்த நாடு குடியேற்றங்களைச் செய்ய முடியாது. பன்னாட்டு நியமங்களுக்கும் சட்டங்களுக்கும் எதிராகச் செயற்பட்டு இசுலாமியர்களின் புனித இடமாகிய அல் அக்சாவை இழிவுபடுத்தும் இஸ்ரேலுடன் உறவை எப்படி வளர்ப்பது என்பது பற்றி பல அரபு நாடுகளின் ஆட்சியாளர்கள் கவனம் செலுத்திக் கொண்டிருக்கின்றனர். இசுலாமியர்களின் முப்பெரும் புனித இடங்களில் ஒன்றான அல் அக்சாவில் இஸ்லாமியர்கள் நிம்மதியாக வழிபட முடியவில்லை. அரபு நாடுகளில் உள்ள தீவிரவாதிகளின் நகர்வுகளை நன்கு அவதானிக்கும் இஸ்ரேலிய உளவுத்துறையின் உதவி அரபு நாடுகளின் ஆட்சியாளர்களுக்கு அவசியம் தேவைப்படுகின்றது. அதை வைத்துக் கொண்டு தமது நாடுகளில் உள்ள தீவிரவாதிகள் ஆட்சியைக் கைப்பற்றாமல் அரபு நாடுகளின் ஆட்சியாளர்கள் தடுக்கின்றார்கள்.

Tuesday, 7 September 2021

இஸ்ரேலின் சிறையில் இருந்து தப்பிய பலஸ்த்தீனியப் போராளிகள்

 



பலஸ்த்தீனிய இஸ்லாமிய புனிதப் போர் அமைப்பினர் ஐந்து பேரும் அக்சா மாவீரர் படையின் முன்னாள் கட்டளைத் தளபதி ஜகாரியா ஜுபெய்தி ஆகியோர் இஸ்ரேலின் உயர் பாதுகாப்பு ஏற்பாடுகள் மிக்க ஜிபோவா சிறையில் இருந்து 2021 செப்டம்பர் 5-ம் திகதி அதிகாலை ஒரு மணியளவில் தப்பி ஓடினார்கள். அவர்கள் சுரங்கம் வெட்டி அதனூடாக தப்பி ஓடினார்கள் எனப்படுகின்றது. ஜகாரியா ஜுபெய்தி Intifada என்னும் கல்லெறி போராட்டத்தின் அடையாளமாகப் பார்க்கப்படுபவர் என்பது மட்டுமல்ல பல தற்கொலைத் தாக்குதல்களுக்கு உபாயங்கள் வகுத்தவரும் ஆவர். 1976-ம் ஆண்டு பிறந்த ஜுபெய்தி இஸ்ரேலிய அரசால் மிகவும் தேடப்பட்டவராக இருந்தவர். பின்னர் 2007-ம் ஆண்டு இஸ்ரேலின் பொதுமன்னிப்பு உடன்பட்டு தனது படைக்கலன்களை பலஸ்த்தீனிய தேசிய அதிகார சபையிடம் கையளித்தவர். ஆனால் அவருக்கு வழங்கிய மன்னிப்பை 2011 டிசம்பரில் இரத்துச் செய்தது.

தப்பி ஓடியவர்களில் நால்வர் இரட்டை ஆயுள் தண்டனை பெற்றவர்கள். ஜகாரியா ஜுபெய்தியின் மீதும் மற்றொருவர் மீதும் வழக்கு நடந்து கொண்டிருக்கின்றது. 1998-ம் ஆண்டின் பின்னர் முதல் தடவையாக இஸ்ரேலிய சிறையில் இருந்து பலஸ்த்தீனியர்கள் தப்பி ஓடியுள்ளனர். மொனடேல் யக்கூப் நபீட் , யக்கூப் காசிம், யக்கூப் முகம்மது கத்ரி, நயீம் கமாம்ஜீ, மக்மூட் அப்துல்லா ஆடா, என்பன ஜகாரியா ஜிபெய்தியுடன் தப்பிச் சென்ற மற்றக் கைதிகளின் பெயர்கள் என அல் ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது. அவர்களுடைய கழிப்பறையில் இருந்து சுரங்கம் தோண்டுவதற்கு வெளியார் உதவி கிடைத்திருக்க வேண்டும் எனக் கருதப்படுகின்றது.



இஸ்ரேலின் உயர் பாதுகாப்புச் சிறையில் இருந்து பலஸ்த்தீனிய போராளிகள் தப்பிச் சென்றது இஸ்ரேலுக்கு மிகவும் அதிர்ச்சியளிக்கும் செயல் என பல போராளி அமைப்புக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளன. இது மன உறுதியுடன் தொடர்ச்சியாகப் போராடினால் எதையும் சாதிக்கலாம் என்ற நம்பிக்கையை தமக்கு தருவதாக பல போராளிகள் கருத்து தெரிவித்துள்ளனர். இவர்களைப் போல் ஐயாயிரத்துக்கு மேற்பட்ட பலஸ்த்தீனியர்கள் இஸ்ரேலிய சிறைகளில் வைக்கப்பட்டுள்ளனர். காசா நிலப்பரப்பில் ஹமாஸ் போராளிகள் இனிப்பு பரிமாறினர்.

இஸ்ரேலிய தலைமை அமைச்சர் இந்த சிறைத் தப்பி ஓட்டத்தை ஒரு கடுமையான நிகழ்வு (Serious Incident) என்றார். உண்மையில் இது இஸ்ரேலுக்கு ஒரு மோசமான மூக்குடைப்பு.

Monday, 14 January 2019

அமெரிக்க இஸ்ரேலிய உறவின் நடுவில் பலஸ்த்தீனம்


இஸ்ரேலியத் தலைமை அமைச்சர் பெஞ்சமின் நெத்தன்யாஹூ வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை எனது நண்பன் என்றே விளிப்பார். டிரம்ப் ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்கத் தூதுவராக நியமித்த நிக்கி ஹேலி இஸ்ரேலில் தேர்தலில் போட்டியிட்டால் பெரு வெற்றி பெறும் அளவிற்கு இஸ்ரேலியர்களின் நன்மதிப்பைப் பெற்றிருந்தார். 31-12-2018 பதவியில் இருந்து விலகிய அவர் தன் பதவிக் காலத்தில் இஸ்ரேலுக்கு மிகவும் சாதகமாக நடந்து கொண்டார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மருமகன் ஜெரார்ட் குஷ்ணர் யூதர். அவர் யூத மரபுகளை இறுக்கமாகக் கடைப்பிடிப்பதுடன் இஸ்ரேலின் தீவிர ஆதரவாளர். அத்துடன் அவர் சவுதி அரேபிய இளவரசன் பின் சல்மனுடன் நெருங்கிய நட்பானவரும் ஆவார்.

அமெரிக்க அதிபராக இஸ்ரேலின் கையாள்
நிக்கி ஹேலி அமெரிக்காவின் ஐநாவிற்கான தூதுவர் பதவியில் இருந்து விலகியது டிரம்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜோன் போல்ரனையும் வெளியுறவுத் துறைச் செயலர் மைக் பொம்பியோவையும் ஆச்சரியப்பட வைத்தது. டிரம்ப், போல்ரன் பொம்பியா ஆகிய மூவரையும் முந்திக் கொண்டு நிக் ஹெலி இரசியாவிற்கு எதிராக மேலதிக பொருளாதாரத் தடை கொண்டு வரப்படும் என நிக்கி அறிவித்திருந்தார். இது அவருக்கு எதிராக பல வெள்ளை மாளிகை அதிகாரிகளைத் திருப்பியது. அதனால் அவர் பதவி விலக வேண்டிய சூழல் உருவானது எனச் சில செய்திகள் சொல்கின்றன. இருந்தும் இஸ்ரேலுக்கு மிக வேண்டியவரான நிக்கி ஹேலி அமெரிக்க அதிபராக்க யூதப் பெரும் செல்வந்தர்கள் ஆயத்தம் செய்கின்ரார்கள். அதற்கான வேலைகளைக் கவனிக்கவே நிக்கி ஹேலி பதவி விலகினார் என்றும் சில செய்திகள் அடிபடுகின்றன.

மேற்குகரைக் குடியேற்றங்களை டிரம்ப் ஆதரிக்கின்றாரா?
டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராக  தெரிவு செய்யப்படுவதற்கு முந்திய 22 மாதங்களில் பலஸ்த்தீனிய மேற்குக் கரையில் யூதர்களுக்கு 4476 குடியிருப்பு வீடுகள் கட்டப்பட்டன. டிரம்ப் அமெரிக்க அதிபராகிய பின்னரான 21 மாதங்களில் அங்கு 4476 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. அதாவது பலஸ்த்தீனிய நிலங்களை அபகரித்து யூதர்கள் குடியேறுவது மூன்று மடங்காக அதிகரித்துள்ளது. இதற்குக் காரணம் டிரம்ப் இஸ்ரேலுக்கு ஆதரவாகச் செயற்படுவதுதான். இரசியாவில் உள்ள யூதப் பெரும் செல்வந்தர்கள் டிரம்பை அமெரிக்க அதிபர் தேர்தலில் வெல்ல வைக்க இரசிய அதிபர் புட்டீனுக்கு ஊக்கம் கொடுத்தனர் எனவும் சில செய்திகள் குற்றம் சாட்டுகின்றன. 1949-ம் ஆண்டு உலக நாடுகள் கையொப்பமிட்டு உருவாக்கிய ஜெனிவா நான்காவது உடன்படிக்கையின் படி ஆக்கிரமித்த ஒரு நாடு ஆக்கிரமித்த நாட்டில் தனது மக்களைக் குடியேற்ற முடியாது.

இஸ்ரேலியத் தலைநகராக ஜெருசேலம்
ஜெருசேலத்தை இஸ்ரேலியத் தலைநகராக்குவதை டிரம்ப் ஏற்றுக் கொண்டார். 2017-ம் ஆண்டு டிசம்பரில் இதை அமெரிக்கா திரும்பப் பெறவேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையில் ஒரு தீர்மானம் எகிப்த்தால் முன்மொழியப்பட்டது.  பாதுகாப்புச் சபையில் அமெரிக்காவைத் தவிர எல்லா நாடுகளும் அதை ஆதரித்தன. அப்போது ஐநாவிற்கான அமெரிக்கத் தூதுவராக இருந்த நிக்கி ஹேலி தன் கைவளையல் கலகலவென ஒலிக்க சுட்டு விரல் நீண்டிருக்க தன் வலது கையை உயர்த்தி அத்தீர்மானத்தை நிராகரித்தார்.

பலஸ்த்தீனத்தின் ஐநா முழு உறுப்புரிமை முயற்ச்சி
2014-ம் ஆண்டு 29-ம் திகதி பலஸ்த்தீனத்தை ஒரு நாடாக ஏற்றுக் கொள்ளும் முன் மொழிவை ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையில் ஜோர்தான் முன்வைத்தது. இந்த முன்மொழிவில் இஸ்ரேல் பலஸ்த்தீனத்துடனான பேச்சு வார்த்தைகளை ஓராண்டுக்குள் முடிவுக்குக் கொண்டு வரவேண்டும், (ஜோர்தானிய ஆற்றின்) மேற்க்கும் கரையிலும் கிழக்கு ஜெருசலத்தில் இருந்தும் இஸ்ரேலியப் படைகள் மூன்று ஆண்டுகளுக்குள் வெளியேற வேண்டும், கிழக்கு ஜெருசலம் பலஸ்த்தீனத்தின் தலைநகராக்கப்பட வேண்டும், பலஸ்த்தீனியர்களில் நிலங்களில் இஸ்ரேலியக் குடியேற்றங்கள் நிறுத்தப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகளும் உள்ளடக்கப்பட்டிருந்தன. ஜோர்தானின் முன்மொழிவை இரசியா, சீனா, பிரான்ஸ், ஆர்ஜெண்டீனா, சாட், சிலி, லக்சம்பேர்க், ஆகிய எட்டு நாடுகள் ஆதரித்தன. ஐக்கிய இராச்சியம், லித்துவேனியா, நைஜீரியா, கொரியக் குடியரசு, ருவண்டா ஆகிய நாடுகள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. ஐக்கிய அமெரிக்காவும் அவுஸ்திரேலியாவும் எதிர்த்து வாக்களித்தன. ஐந்து வல்லரசு நாடுகளை நிரந்தர உறுப்பினர்களாகவும் பத்து நாடுகளை தற்காலிக உறுப்பினர்களாகவும் கொண்ட ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையில் வல்லரசு நாடான ஐக்கிய அமெரிக்காவின் எதிர்ப்பால் ஜோர்தானின் முன் மொழிவு நிராகரிக்கப்பட்டது. 2017 டிசம்பரில் ஜெருசேலத்தை இஸ்ரேலியத் தலைநகராக்குவதற்கு எதிரான தீர்மான முன்மொழிவு தோற்கடிக்கப்பட்ட பின்னர் ஐக்கிய நாடுகள் சபைக்கான பலஸ்த்தீன தூதுவர் டானி டன்னும் பலஸ்த்தீனிய தேசிய அதிகார சபையின் அதிபர் மஹ்மூட் அப்பாஸும் ஐக்கிய நாடுகள் சபையில் முழு உறுப்புரிமை பெறும் எனச் சூளுரைத்தனர். அதைத் தொடர்ந்து அவர்கள் பன்னாட்டரங்கில் தமது உறுப்புரிமைக்கு ஆதரவாக ஆதரவு திரட்ட கடும் முயற்ச்சி மேற்கொண்டனர். இதற்கு எதிராக இஸ்ரேல் செய்த பரப்புரையால் அந்த முயற்ச்சியை பலஸ்த்தீனியர்கள் கைவிட்டனர்.

பன்னாட்டு நீதிமன்றில் இஸ்ரேலை நிறுத்த முடியாது
பலஸ்த்தீனிய அதிகார சபையின் அதிபர் மஹ்மூட் அப்பாஸ் பலஸ்த்தீனத்தை பன்னாட்டு நீதிமன்றில் ஓர் உறுப்பு நாடாக 2015இல் இணைத்தார்.ஐக்கிய அமெரிக்கா, கனடா, மற்றும் சில ஐரோப்பிய நாடுகள் பலஸ்த்தீனம் பன்னாட்டு நீதி மன்றில் உறுப்புரிமை பெறக்கூடாது என வற்புறுத்தி வந்தன. பன்னாட்டு நீதி மன்றத்தில் உறுப்புரிமை பெற்றால் பலஸ்த்தீன அதிகார சபைக்கு வழங்கும் நிதி உதவியை தாம் நிறுத்தி விடுவதாக இந்த நாடுகள் மிரட்டின. இஸ்ரேலும் தன் பங்கிற்கு மிரட்டியது. இவற்றின் மத்தியில் பலஸ்த்தீனம் பன்னாட்டு நீதி மன்றில் தன் உறுப்புரிமையைப் பெற்றுக் கொண்டது. 2018 மே மாதம் பலஸ்த்தீனியர்கள் பன்னாட்டு நீதி மன்றில் இஸ்ரேலை விசாரிக்கும் படி முறையிட்டனர். 2017-ம் ஆண்டு ஐநா மனித உரிமைக்கழக ஆணையாளரின் அறிக்கையையும் தமக்கு ஆதரவாக அவர்கள் முன்வைத்தனர். ஏற்கனவே (2015)பன்னாட்டு நீதி மன்ற வழக்குத் தொடுனர் (Prosecutor Fatou Bensouda) பலஸ்த்தீனத்தில் நடப்பவை தொடர்பாக விசாரணையை ஆரம்பித்திருந்தார். பன்னாட்டு நீதி மன்ற விசாரணையாளருக்கு இஸ்ரேலுக்கு எதிரான ஆதாரம் நிறைந்த தகவல்களைத் திரட்டுவதி சிரமம் இருக்கின்றது. அல் ஹக் என்ற பலஸ்த்தீனிய தன்னார்வ மனித உரிமைகள் அமைப்பு தகவல்களைத் தொடர்ந்து வழங்கி வருகின்றது. பன்னாட்டு நீதி மன்றம் 2002-ம் ஆண்டு செய்யப்பட்ட ரோம் உடன்படிக்கையின் படி உருவாக்கப்பட்டது. உலகின் மோசமான மனித உரிமை மீறல்களை விசாரிப்பது இதன் தலையாய பணியாகும். இந்த நீதி மன்றத்தின் நியாய ஆதிக்கம் (விசாரிக்கும் உரிமை) இந்த உடன்படிக்கையில் கையொப்பமிட்டு உறுப்புரிமை பெற்ற நாடுகளின் குடிமக்கள் மீது மட்டுமே உண்டு. இஸ்ரேல் இந்த உடன் படிக்கையில் கையொப்பம் இடாத படியால் அதன் மீது இந்த நீதிமன்றில் குற்றம் சாட்ட ஐநா பாதுகாப்புச் சபையின் ஒத்துழைப்பும் தேவைப்படும். பாதுகாப்புச் சபையின் ஒத்துழைப்பைப் பெறாமல் பார்த்துக் கொள்ள இஸ்ரேலுக்கு அமெரிக்கா இருக்கின்றது.

F-35 விமானங்கள் இஸ்ரேலிற்கு தனித்துவமாக உருவாக்கப்பட்டன.
தற்போது உலகின் மிகச் சிறந்த போர்விமானமாகக் கருதப்படும் அமெரிக்காவின் F-35 விமானங்களை ஐக்கிய இராச்சியம், இத்தாலி, ஒஸ்ரேலியா, கனடா, நோர்வே, இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கு அமெரிக்கா விற்பனை செய்தது. அதில் இஸ்ரேல் மட்டும்தான் இரகசியமாக F-35 சிரியாவில் தாக்குதல் செய்யப் பயன்படுத்தியது. தனக்கு ஏற்ற வகையில் அந்த விமானங்களில் மாற்றங்கள் செய்து தரவேண்டும் என பல நாடுகள் வேண்டுகோள் விடுத்திருந்தன. ஆனால் இஸ்ரேலுக்கு மட்டுமே அமெரிக்காவின் லொக்ஹீட் மார்ட்டின் நிறுவனம் மாற்றங்கள் செய்யப்பட்ட விமானங்களை விநியோகிக்க ஒத்துக் கொண்டது.

ஈரானுக்கு எதிராக அமெரிக்கா
ஈரானுடனான யூரேனியப் பதப்படுத்தல் தொடர்பான உடன்படிக்கையில் இருந்து அமெரிக்காவை டிரம்ப் ஒருதலைப்பட்சமாக வெளியேற்றினார். இது இஸ்ரேலினதும் சவுதி அரேபியாவின் தூண்டுதலின் பேரிலும் அமெரிக்கா மேற்கொண்ட நகர்வாகும். அமெரிக்காவின் நட்பு நாடுகளான ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் எதிர்ப்புக்களுக்கு மத்தியிலும் அமெரிக்கா இந்த நகர்வை மேற்கொண்டதுடன் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் நிறுவனங்கள் ஈரானுடன் வர்த்தகத்தை மேற்கொண்டா அவற்றுக்கு தண்டம் விதிக்கின்றது.

பலஸ்த்தீனம் யுனெஸ்க்கோவில் இணைய அமெரிக்க எதிர்ப்பு.
யுனெஸ்க்கோவில் பலஸ்த்தீனம் இணைந்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்காவும் இஸ்ரேலும் யுனெஸ்க்கோவில் இருந்து 2018இன் இறுதியில் இருந்து விலகிக் கொண்டன. ஐநாவின் ஒரு துணை அமைப்பான யுனெஸ்க்கோவை ஆரம்பித்த நாடுகளில் ஒன்றான அமெரிக்கா அதன் நிதி வரவில் 22விழுக்காட்டை பங்களிப்பாக செய்து வந்தது.

இஸ்ரேலை அதிருப்திப்படுத்தும் அமெரிக்காவின் நகர்வுகள்
இஸ்ரேலை அதிருப்திப் படுத்தும் சில நகர்வுகளை அமெரிக்க அதிபர் டிரம்ப் அண்மையில் செய்திருந்தார். ஒன்று சிரியாவில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறும் என்ற அறிவிப்பு. இரண்டாவது ஈரான் தனக்குத் தேவையானவற்றை சிரியாவில் செய்யலாம் என டிரம்ப் கருத்து வெளியிட்டது. முதலாவது நகர்வை பின்னர் டிரம்ப் சற்று மாற்றிக் கொண்டார். சிரியாவில் இருந்து அமெரிக்கப் படைகள் படிப்படியாகவே வெளியேறும் என பின்னர் அறிவிக்கப்பட்டது. இரண்டாவது நகர்வு டிரம்ப் வழமையாக டுவிட்டரில் செய்யும் அதிரடிகளில் ஒன்றாகும். இஸ்ரேலின் திருத்தியபதிப்பு F-16 (அமெரிக்க உற்பத்தி) போர் விமானங்களை குரோசியாவிற்கு இஸ்ரேல் விற்பனை செய்வதற்கு டிர்ம்பின் நிர்வாகம் அனுமதி கொடுக்கவில்லை. இஸ்ரேல் வசமுள்ள 20 ஆண்டுகள் பாவித்த F-16 போர்விமானங்களை குரோசியாவிற்கு விற்பனை செய்ய முயன்றது. அதற்கு அமெரிக்காவின் அனுமதியை இஸ்ரேல் பெறாமல் விற்பனை செய்தமை அமெரிக்காவிற்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான விற்பனை நிபந்தனைகளை மீறிய செயல் என அமெரிக்கா கருதியது.

மேற்காசியாவில் டொனால்ட் டிரம்பின் கொள்கை ஒபாமாவின் கொள்கையின் தொடர்ச்சியே. அமெரிக்காவின் மேனா பிரதேசம் என சுருக்கமாக அழைக்கப்படும் மேற்காசிய மற்றும் வட ஆபிரிக்கப் பிரதேசத்திற்கான கொள்கை முக்கியமாக மூன்று கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டது:
1. உலக எரிபொருள் விநியோகம்
2. இஸ்ரேலின் பாதுகாப்பான இருப்பு
3. ஈரானையும் இஸ்லாமிய தீவிரவாதத்தையும் அடக்குதல்.

2017-ம் ஆண்டே அமெரிக்கா எரிபொருள் உற்பத்தியில் தன்னிறைவு பெற்றுவிட்டது. எரிபொருளுக்காக மேனா பிரதேசத்தில் எரிபொருளுக்கான அமெரிக்காவின் கேந்திரோபாய முக்கியத்துவம் குறைந்து விட்டது. ஆனால் மற்ற நாடுகளுக்கான எரிபொருள் விநியோகம் தடைபட்டால் அது அமெரிக்காவின் பொருளாதாரத்தையும் பாதிக்கும். அதனால் மற்ற ஐரோப்பிய நாடுகளும் சீனாவும் இந்தியாவும் சீரான எரிபொருள் விநியோகத்திற்கு பொறுப்பேற்க வேண்டும் என அமெரிக்கா கருதுகின்றது.

Monday, 12 June 2017

இஸ்ரேலின் ஆறு நாள் போரும் ஐம்பது ஆண்டு கால ஆக்கிரமிப்பும்

இஸ்ரேலுக்கும் எகிப்து, சிரியா, ஜோர்தான ஆகிய அரபு நாடுகளுக்கும் இடையில் 1967-ம் ஆண்டு ஜூன் 5-ம் திகதி முதல் 11-ம் திகதி வரையிலான ஆறு நாட்கள் போர் நடந்து ஐம்பது ஆண்டுகள் முடிவடைந்து விட்டன. இந்த ஐம்பது ஆண்டுகளில் இஸ்ரேல் படைத்துறை, தொழில்நுட்பம், பொருளாதாரம் ஆகியவற்றில் அசைக்க முடியாத ஒரு நாடாக வளர்ந்து விட்டது. அரபு நாடுகள் உள்நாட்டுப் போர்களாலும் நாடுகளிடையிலான பூசல்களாலும் பெரும் குழப்ப நிலையில் உள்ளன.

குழப்பங்கள் மிகு அரபுநாடுகள்
இஸ்ரேலை ஒழித்துக் கட்ட வேண்டும் என 1967-ம் ஆண்டு சூழுரைத்த நாடுகள் இப்போது தமது பிரச்சனைகளுக்குள் மூழ்கிப் போய் இருக்கின்றன. சினாய் பாலைவனத்தில் செயற்படும் ஐ எஸ் அமைப்பினர் மீது எகிப்தும், சவுதி அரேபியாவும் ஐக்கிய அமீரகமும் யேமனிலும், எகிப்தும் ஐக்கிய அமீரகமும் லிபியாவிலும், ஜோர்தானும் துருக்கியும் சிரியாவிலும் ஈராக்கிலும் தமது கவனத்தைச் செலுத்திக் கொண்டிருக்கின்றன. இவை போதாது என்று கட்டார் நாட்டுக்கும் மற்ற வளைகுடா நாடுகளுக்கும் இடையில் முறுகல் நிலை தோன்றியுள்ளது. அரபு நாடுகளால் இப்போது இஸ்ரேலுக்கு எதிராக ஏதும் முடியாத அளவிற்கு இஸ்ரேல் வலுவாக இருக்கின்றது. இஸ்ரேலின் நில அபகரிப்புக்களுக்கும் அத்துமீறிய குடியேற்றங்களுக்கும் இந்த நாடுகள் அவ்வப்போது குரல் கொடுக்க மட்டுமே முடியும். பலஸ்த்தீனியர்களுக்கு என்று ஒரு நாடு உருவாகுவது சாத்தியமற்ற ஒன்றாகும்.

இஸ்ரேலின் உருவாக்கம்
1948-ம் ஆண்டு பிரித்தானியா பலஸ்த்தீனத்தின் ஆட்சிப் பொறுப்பை ஐக்கிய நாடுகள் சபையிடம் கையளித்தது. பலஸ்த்தீனத்தில் ஒரு இசுலாமியர்களுக்கு என ஓர் அரசு உருவாகாமல் தடுக்கும் நோக்கத்துடன் இப்படிச் செய்யப்பட்டது. புனித பெத்தேலேகம் இசுலாமிய அரசிடம் அகப்படக்கூடாது என்பதே நோக்கம். ஐக்கிய நாடுகள் சபையின் பலஸ்த்தீனத்திற்கான சிறப்பு ஆணைக்குழுவின் (UNSCOP) பரிந்துரையின் படி ஐநா தீர்மானம் 181இன் மூலம் பலஸ்த்தீனம் இரு நாடுகளாகப் பிரிப்பதாக முடிவு செய்யப்பட்டது. அதன் படி யூதர்கள் இஸ்ரேலை தனி நாடாகப் பிரகடனப் படுத்தினர். அப்போது பலஸ்த்தீனத்தின் 85விழுக்காடு நிலம் அரபு பலஸ்த்தீனியர்களிடமும் 7 விழுக்காடு நிலம் யூதர்களிடமும் இருந்தது. தீவிர சியோனிச வாதியான இஸ்ரேலின் முதல் தலைமை அமைச்சரான டேவிட் பென் குயோன் தமக்கென ஓர் அரசு உருவானால் தம்மால் முழுப் பலஸ்த்தீனத்தையும் ஆள முடியும் என ஏற்கனவே சொல்லியிருந்தார். தீர்மானம் 181ஐ அரபு நாடுகள் கடுமையாக எதிர்த்தன. தற்போதைய இஸ்ரேல், காசா நிலப்பரப்பு, மேற்குக் கரை ஆகிய மூன்றையும் உள்ளடக்கியதே பலஸ்த்தீனம் அது அரபுக்களுடையது என்பது அரபுக்களின் நிலைப்பாடாக இருந்தது.

அரபுக்களின் ஆத்திரம்
இஸ்ரேல் என்ற நாடு தமக்கு மத்தியில் உருவானதை அரபு நாட்டு ஆட்சியாளர்கள் இஸ்ரேலைக் கைப்பற்ற முற்பட்டனர். 1948 மே மாதம் 15ம் திகதி அரபு லீக் உறுப்பு நாடுகளான சிரியா, ஈராக், எகிப்து, ஜோர்டான் ஆகியவையும் புனிதப் போர்ப்படையும் அரபு விடுதலைப் படையும் புதிய இஸ்ரேல் நாட்டுக்கு எதிராகப் படையெடுத்தன. இந்தப் போரின் போது பெத்தெலேகம் நகரை ஒரு பகுதியாகக் கொண்ட ஜெருசலத்தை ஜோர்தான் தன்னுடன் இணைத்துக் கொண்டது.

புலிவருது என ஏமாற்றிய இஸ்ரேல்
இஸ்ரேலிய விமானங்கள் காலை 7 மணியளவில் வானில் பறப்பதை அரபு நாட்டு ரடார்கள் அவதானித்தன. வானில் பறக்கும் விமானங்கள் சிறிய தூரம் பறந்து விட்டு ரடார் அலைவரிசைகளுக்கு புலப்படாத உயரத்தில் பறந்து விட்டு பின்னர் தமது தளம் திரும்பும். இது ஒரு நாள் அல்ல இரு நால் அல்ல இரண்டு ஆண்டுகள் தொடர்ந்து நடந்தது. ஆனால் 1967-ம் ஆண்டு ஜூன் மாதம் 5-ம் திகதியும் அதே மாதிரி நடந்தது. வழமை போல அரபு நாட்டு விமானங்கள் அவற்றை அவதானித்து விட்டு வழமை போல் பேசாமல் இருந்து விட்டன. ஆனால் அன்றைய நாள் இஸ்ரேலிய விமானங்கள் எகிப்த்தினுள் பறந்து சென்று எகிப்திய விமானங்களை ஏறக்குறைய முற்றாக அழித்தன. அது அரபு நாடுகளுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான ஆறு நாட் போரை ஆரம்பித்து வைத்தது. இஸ்ரேலுக்கு எதிராக ஒரு போரைத் தொடுத்து அதை உலக வரைபடத்தில் இருந்து துடைத்தழிக்க வேண்டும் என சூளுரைத்த நாடுகள் திணறடிக்கப்பட்டன.

ஒற்றைக் கண்ணால் ஒரு தொலை நோக்கு
1967-ம் ஆண்டு இஸ்ரேலின் போர் வெற்றிக்குக் காரணமாக இருந்தவர் ஒரு கண்ணைப் போரில் இழந்த தளபதி மோஸே தயான். 1967 போரில் அரபுக்கள் தோல்வியடைந்த பின்னர் பலஸ்த்தின அரபுக்கள் மேற்குக் கரையில் இருந்தும் வெளியேறத் தொடங்கினர். ஆனால் மோஸே தயான் அவர்களைத் தடுத்து அங்கேயே இருக்கும்படி செய்தார். அவர்களுக்கு வேண்டிய கல்வி மற்றும் இருப்பிட வசதிகளைச் செய்து கொடுத்தார். இது அவர் செய்த பெரும் பிழை எனச் சில இஸ்ரேலியர்கள் வாதிடுகின்றனர். அவர்களை அப்போது மேற்குக் கரையில் இருந்தும் காஸாவில் இருந்தும் முழுமையாக விரட்டியிருக்க வேண்டும் என்கின்றனர் அவர்கள். ஆனால் முழுமையாக விரட்டப்பட்டால் அது இன்னும் பெரிய ஆபத்தாக மாறியிருக்கும் என்பது மோஸே தயானின் கணிப்பாக இருந்திருக்கலாம்.

ஈர் அரசுத் தீர்வும் நல்லிணக்கம் போலவே
மூன்று புறங்கள் தன்னை அழிக்க முயலும் அரபு நாடுகளாலும் நான்காம் புறம் மத்திய தரைக்கடலாலும் சூழப்பட்ட சிறு நிலப்பரப்பு இஸ்ரேலாக 1967-ம் ஆண்டின் முன்னர் இருந்தது. 1967-ம் ஆண்டின் பின்னர் தொடர்ச்சியாக இஸ்ரேல் நில அபகரிப்பையும் யூதக் குடியேற்றத்தையும் செய்து கொண்டிருக்கின்றது. இஸ்ரேல் என்ற ஒரு நாடு இருக்கக் கூடாது என்ற அரபு நாடுகளிடம் பலஸ்த்தீனியர்களுக்கு என ஓர் அரசு, இஸ்ரேலுக்கு ஓர் அரசு என ஈர் அரசுத் தீர்வை முன்வைத்தது அமெரிக்கா. அதற்கு நிபந்தனையாக அரபு நாடுகள் இஸ்ரேலின் இருப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும் எனச் சொல்லப்பட்டது. அரபு நாடுகள் அதை ஏற்றுக் கொண்டன. ஆனால் ஈரான் இன்றுவரை ஏற்றுக் கொள்ளவில்லை. 1967-ம் ஆண்டுக்கு முன்னர் இருந்த எல்லைகளுக்கு ஏற்ப பலஸ்த்தீனிய இஸ்ரேல் பிரச்சனைக்குத் தீர்வு காண வேண்டும் என பராக் ஒபாமா தெரிவித்த கருத்துக்கு இஸ்ரேலில் பலத்த எதிர்ப்புக் கிளம்பியது.

கார்ட்டூம் தீர்மானமும் காம்டேவிட் ஒப்பந்தத் துரோகமும்.                       1967 ஓகஸ்ட் மாத இறுதியில் சூடானியத் தலைநகர் கார்ட்டூமில் கூடிய அரபு லீக் நாடுகள் செப்டம்பர் முதலாம் திகதி ஒரு தீர்மானத்தை நிறைவேற்றின. அதில் மூன்று இல்லைகள் இருந்தன: 1. இஸ்ரேலுடன் சமாதானம் இல்லை. 2. இஸ்ரேலை அங்கிகரிப்பதில்லை. 3. இஸ்ரேலுடன் பேச்சு வார்த்தை இல்லை.ஆனால் எகிப்தின் முன்னாள் அதிபர் அன்வர் சதாத் இந்தத் தீர்மானத்தை மீறி 1979-ம் ஆண்டு அமெரிக்க அனுசரணையுடன் அமெரிக்க நகர் காம்ப் டேவிட்டில் இஸ்ரேலுடன் ஒரு உடன்படிக்கையைச் செய்து கொண்டார். இதற்கான கையூட்டாக அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது என்ற குற்றச் சாட்டு முன்வைக்கப்படுகின்றது. இது அவர் பலஸ்த்தீனிய மக்களுக்குச் செய்த பெரும் துரோகமாகும். இந்த உடன்படிக்கையின் பின்னர் எகிப்தியப் படைத்துறைக்கு அமெரிக்கா ஆண்டு தோறும் இரண்டு பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான உதவிகளை வழங்கி வருகின்றது. இந்த உடன்படிக்கையின் பின்னர் எகிப்து அரபு இஸ்ரேலிய மோதல் பலஸ்த்தீனிய இஸ்ரேல் மோதலால் மட்டுப்படுத்தப்பட்டது. எகிப்து இந்த மோதலில் ஒரு நடு நிலை நாடாகியது.

பலஸ்த்தீனிய விடுதலை இயக்கம்
1964-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட பலஸ்த்தீனிய விடுதலை இயக்கம் 1967-ம் ஆண்டின் பின்னர் இஸ்ரேலுக்கு எதிராகப் பலவகையில் போராடியது. அதற்கு எதிராக ஜோர்தான் 1970-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தாக்குதல் நடத்தியது. அது கறுப்பு செப்டம்பர் என அழைக்கப்படுகின்றது. அதன் பின்னர் சிரியாவும் லெபனானில் தங்கியிருந்த பலஸ்த்தீனிய விடுதலை இயக்கத்தினர் மீது தாக்குதல் நடத்தியது. பலஸ்த்தீனிய விடுதலை இயக்கமும் அதன் தலைவரும் பல்வேறு பேச்சு வார்த்தைகளுக்கு அழைக்கப்பட்டு ஏமாற்றப்பட்டனர். இஸ்ரேலின் நில அபகரிப்புக்களையோ அத்து மீறிய குடியேற்றங்களையோ அது மேற்கொள்ளும் மனித உரிமை மீறல்களையோ ஜெனீவாவில் உள்ள மனித உரிமைக்கழகம் தடுக்கவுமில்லை தண்டிக்கவுமில்லை.

இஸ்ரேலிய வான்படை
1967-ம் ஆண்டு நடந்த போரில் வான் ஆதிக்கம் போரை வெல்லும் என்பதை இஸ்ரேல் உணர்ந்து கொண்டது. தன்னிலும் பார்க்க பல மடங்கு படையினரைக் கொண்ட அரபு நாடுகளை இஸ்ரேலால் வெற்றி கொள்ளக் கூடிய நிலையை உருவாக்கியது. 1967இல் நடந்த போரில் பிரெஞ்சுத் தயாரிப்பு மிராஜ் போர்விமாங்கள் சிறப்பாகச் செயற்பட்ட பின்னர் தனது நாட்டில் உள்ள இஸ்லாமியர்களினதும் இஸ்லாமிய நட்பு நாடுகளினதும் வெறுப்பில் இருந்து விடுபட பிரான்ஸ் இஸ்ரேலுக்கு படைக்கலன்களை விற்பனை செய்வதை நிறுத்தியது. தன்னிடம் ஏற்கனவே உள்ள மிராஜ் விமானங்களினது தொழில்நுட்பங்களைப் பிரதி பண்ணியும் பிரான்ஸ் புதிதாக உருவாக்கும் தொழில்நுட்பங்களை தனது உளவுப்படை மூலம் திருடியும் இஸ்ரேல் தன்னுடைய கஃபீர் போர்விமானங்களை உருவாக்கத் தொடங்கியது. பிரான்ஸ் வேண்டுமென்றே இஸ்ரேல் தனது தொழில்நுட்பங்களைத் திருட அனுமதித்தது என்ற குற்றச் சாட்டும் உண்டு. எழுபதுகளில் அமெரிக்காவின் F-15 Eagles போர்விமானங்களை இஸ்ரேல் வாங்கியது. இஸ்ரேலின் பாதுகாப்புச் செலவு அதன் மொத்தத் தேசிய உற்பத்தியின் 24விழுக்காடாகவும் இருந்தது. அதன் போர்விமானத் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு உதவியது. இதனால் 1980களில் இஸ்ரேல் தனது லவி என்னும் நான்காம் தலைமுறைப் போர்விமானத்தை உருவாக்கியது. லவி போர்விமானங்கள் வெற்றிகரமான செயற்பாடு அமெரிக்கப் போர்விமான உற்பத்தியைப் பாதிக்கும் என்பதால் அமெரிக்கா லவியின் உற்பத்தியால் அதிருப்தியடைந்தது. இதனால் இஸ்ரேலிய அமைச்சரவை லவியின் உற்பத்தியைக் கைவிட்டன. இஸ்ரேல் தனது வான்படைக்குத் தேவையான போர்விமாங்களை அமெரிக்காவிடமிருந்து வாங்குகி அதில் மாற்றங்களை செய்யும் திறனை இஸ்ரேல் பெற்றுள்ளது. இதனால் அவற்றின் பறப்பு தூரம் செயற்படு திறன் போன்றவை அதிகரிக்கப்படுகின்றன.

1967-ம் ஆண்டு நடந்த போரால் தமது இருப்பிடங்களில் இருந்து வெளியேறிய பலஸ்த்தீனியர்கள் இன்றுவரை சொந்த வீடுகளுக்குத் திரும்பவில்லை. ஆறு நாட் போர் முடிந்தவுடன் இஸ்ரேல் மேற்குக் கரையில் ஒரு மக்கள் தொகைக் கணக்கெடுப்பை மேற்கொண்டது. அப்போது அங்கு இருந்தவர்களை மட்டுமே மேற்குகரையில் வதிவிட உரிமையுள்ள பலஸ்த்தீனியர்கள் என இஸ்ரேல் அடம்பிடிக்கின்றது. போரால் இடம் பெயர்ந்தவர்களை மட்டுமல்ல படிப்பு வேலை வாய்ப்பு போன்றவற்றிற்காக தற்காலிகமாக வெளிநாடுகளுக்குச் சென்றிருந்தவர்களையும் இஸ்ரேல் அங்கு மீளச்செல்ல அனுமதிக்கவில்லை. 
பெரும்பாலான வீடுகளில் இஸ்ரேலியர்கள் குடியேறியுள்ளனர். இஸ்ரேலை ஒழித்துக் கட்ட வேண்டும் என 1967-ம் ஆண்டு சூழுரைத்த நாடுகள் இப்போது தமது பிரச்சனைகளுக்குள் மூழ்கிப் போய் இருக்கின்றன. சினாய் பாலைவனத்தில் செயற்படும் ஐ எஸ் அமைப்பினர் மீது எகிப்தும், சவுதி அரேபியாவும் ஐக்கிய அமீரகமும் யேமனிலும், எகிப்தும் ஐக்கிய அமீரகமும் லிபியாவிலும், ஜோர்தானும் துருக்கியும் சிரியாவிலும் ஈராக்கிலும் தமது கவனத்தைச் செலுத்திக் கொண்டிருக்கின்றன. இவை போதாது என்று கட்டார் நாட்டுக்கும் மற்ற வளைகுடா நாடுகளுக்கும் இடையில் முறுகல் நிலை தோன்றியுள்ளது. அரபு நாடுகளால் இப்போது இஸ்ரேலுக்கு எதிரான எந்த போர் நடவடிக்கையிலும் ஈடுபட முடியாத அளவிற்கு இஸ்ரேல் வலுவாக இருக்கின்றது. இந்த நாடுகள் காசா நிலப்பரப்பில் எந்த இனவழிப்பை இஸ்ரேல் செய்தாலும் அதற்கு எதிராக எந்த படைநடவடிக்கையும் செய்ய முடியாது. இஸ்ரேலின் நில அபகரிப்புக்களுக்கும் அத்துமீறிய குடியேற்றங்களுக்கும் இந்த நாடுகள் அவ்வப்போது குரல் கொடுக்க மட்டுமே முடியும். பலஸ்த்தீனியர்களுக்கு என்று ஒரு நாடு உருவாகுவது சாத்தியம் குறைந்த ஒன்றாகும்.


Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...