இந்தியாவின்
29 மாநிலங்களில் லக்சத்வீப், மிசோரம், நாகலாந்து,
மெகாலயா, ஜம்மு கஷ்மீர், அருணாச்சலப் பிரதேசம், மனிபுரி,
பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் இந்துக்கள் சிறுபான்மையினராக வாழ்கின்றனர். பிஹார், சதிஸ்க்கர்,
டில்லி, ஹரியானா, இமாச்சல் பிரதேசம், ஜார்கண்ட்,
மத்தியப் பிரதேசம், ராஜஸ்த்தான், உத்தரப் பிரதேசம், உத்தரக்காண்ட் ஆகிய
மாநிலங்களில் மட்டும் இந்தி மொழி பேசுபவர்கள் அதிகமாக வாழ்கின்றனர். இந்தியாவின் 1.324பில்லியன் மக்களில் 79.8 விழுக்காட்டினர் இந்துக்களாகும். அதேவேளை இந்தி மொழி பேசுபவர்களின் எண்ணிக்கை 42 விழுக்காட்டிற்கும் குறைவானவர்களே.
காங்கிரசின் இந்தித்துவா
இந்தி
மொழி பேசுபவர்களின் ஆதிக்கத்தை இந்தியா முழுவதும் நிலை நிறுத்துவதுதான்
இந்தித்துவா ஆகும். காங்கிரசுக் கட்சியின் நோக்கமும் அதுவாகும். அதற்காக அது தன்னை மதசார்பற்ற ஓர் அமைப்பாகக் காட்டிக் கொள்கின்றது. இந்தியா முழுவதும் இந்தியை திணிக்க வேண்டும் என்பது காங்கிரசின் கொள்கையாக இருந்தாலும் அதை நிறைவேற்றுவது கடினம் என்பதை காங்கிரசுக் கட்சியினர் உணர்ந்துள்ளனர். இந்தி மொழி பேசுபவர்களின் அதிகாரத்தை காங்கிரசுக் கட்சி நேரு-காந்தி
குடும்பத்திடம் ஒப்படைத்துள்ளது. இதுதான் இந்தித்துவக் கொள்கையாகத் தற்போது இருக்கின்றது. இந்தியத்துவா சாதிகளை ஏற்கவில்லை என
பகிரங்கமாகச் சொல்லிக் கொண்டாலும் சாதிகளின் அடிப்படையில் மற்ற சிறுபான்மை இனங்களை
பிரித்தாளுவதன் மூலம் தனது ஆதிக்கத்தை நிலை நிறுத்தலாம் என்ற நம்பிக்கையுடன்
செயற்படுகின்றது. இந்தித்துவா பரந்துபட்ட கலாச்சாரத்தை ஏற்றுக் கொண்டுள்ளது.
இந்தியக் கலாச்சாரத்தில் மேற்கு நாட்டுக் கலாச்சாரத்தின் தாக்கத்தையோ
தாக்குதல்களையோ அது கண்டு கொள்வதில்லை. இந்தியாவின் ஆட்சி வங்காளியான நேதாஜி
சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் கைக்களுக்குப் போகாமல் இருக்க இந்தி மொழி பேசுபவர்கள்
ஆங்கிலேயர்களுடன் ஒத்துழைத்தனர். பின்னர் சுதந்திர இந்தியாவின் முதலாவது தலைமை
அமைச்சராக குஜராத்தியரான சார்தார் வல்லபாய் பட்டேல் வராமல் இந்தி மொழி பேசுபவர்கள்
பார்த்துக் கொண்டனர்.
இந்திய அரசியலமைப்பில் இந்தித்துவா
இந்தியாவின் அரசியலமைப்பை உருவாக்கியவர்களில் பண்டிதர்
ஜவகர் லால் நேருவும் அம்பேத்காரும் முக்கியமானவர்கள் இருவருமே மதசார்பற்ற இந்திய
ஒன்றியத்தை உருவாக்க விரும்பினார்கள். அதனால் உலகிலேயே சிறந்த மதசார்பற்ற
அரசியலமைப்பை இந்தியா கொண்டுள்ளது. மாநிலங்களுக்கு அதிக அதிகாரங்கள் வழங்க
அம்பேத்கார் விரும்பினார் ஆனால் இந்தி மொழிபேசும் பெரும்பான்மை இனத்திடம் அதிக
அதிகாரங்கள் இருக்க வேண்டும் என நேரு விரும்பினார். பெரும்பான்மைவாதியான நேரு தன்
கையில் அதிக அதிகாரங்கள் இருக்கச் செய்ய நடுவண் அரசிடம் அதிக அதிகாரங்களைக்
குவித்தார். இந்தித்துவா இந்திய அரசியலமைப்பில் இணைக்கப்பட்ட ஒன்று.
இந்துத்துவா
இந்தி
மொழியையும் இந்து மதத்தையும் இந்தியா முழுவதும் ஏற்றுக் கொள்ள வைப்பது என்பது ஒரு நீண்ட கனவாகக் கொண்டவர்கள் பலர் இந்தியாவில் உண்டு. இந்தியாவில் உள்ள இந்து அல்லாதவர்களின்
மூதாதையர்கள் இந்துவாக இருந்து ஆக்கிரமிப்பாளர்களால் மதமாற்றம் செய்யப்பட்டவர்கள்.
அவர்களை பரப்புரை மூலமாகவோ அல்லது கட்டாயப்படுத்துவதன் மூலமாகவோ மீண்டும்
இந்துக்களாக மாற்றி இந்தியா முழுவதும் இந்துக்கள் இருக்க வேண்டும் என
நினைப்பதுதான் இந்துத்துவா. இந்துத்துவா சாதிகள் இல்லை எனப் பகிரங்கமாக
அறிவித்தாலும் அது பார்ப்பனிய ஆதிக்கத்தை அடிப்படையாகக் கொண்டது. இந்துத்துவா
இந்தி மொழிக்கு முக்கியத்துவம் கொடுத்தாலும் சமஸ்கிருதம் உன்னதமான மொழி என்றும்
மற்றவை அதிலும் கீழான மொழி என்றும் கருதுகின்றது. வழிபாடுகள் சமஸ்கிருதத்தில்
நடைபெற வேண்டும் என்றும் மற்ற மொழிகளில் பூசைகள் செய்வது ஏற்றுக் கொள்ள முடியாது
என்றும் இந்துத்துவா கருதுகின்றது. இந்துக் கலாச்சாரத்தில் மற்ற நாட்டுக்
கலாச்சாரங்கள் தாக்கம் செலுத்துவதை இந்துத்துவா கடுமையாக எதிர்க்கின்றது. காதல்
திருமணம் பாவகரமான செயல் என அது கருதுகின்றது. வெளிநாடுகளில் இருந்து வந்த காதலர்
தினம் போன்றவற்றை அது கடுமையாக எதிர்க்கின்றது. பெண்கள் அடக்கமாக நடக்க வேண்டும்
உடல் தெரிய ஆடை அணியக் கூடாது என்றும் கருதும் இந்துத்துவா பெண் என்பவள் ஆணிற்கு
சேவை செய்யப் பிறந்தவள் என்ற மனு தர்ம சாஸ்த்திரத்தை ஏற்றுக் கொண்டுள்ளது.
விஷ்வ
ஹிந்து பரிசத்தின் கார் வாப்சி
விஷ்வ
ஹிந்து பரிசத் அமைப்பினர மீண்டும் வீட்டுக்கு என்ற பொருளுடைய கார் வாப்சி திட்டத்தை நிறைவேற்றி வருகின்றனர். அது இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்களை இந்துக்களாக மாற்றும் முயற்ச்சியாகும். இந்தியாமீது மொகாலயப் படையெடுப்பால் பல இந்துக்கள் இஸ்லாமியர்கலாக கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டனர். அவர்களை மீண்டும் இந்துக்களாக மாற்றுவதே கார் வாப்சி திட்டமாகும். இது போலவே ஐரோப்பியர்கள் இந்தியாவில் கிரிஸ்த்தவத்திற்கு மாற்றியவர்களை மீண்டும் இந்து மதத்திற்கு மாற்ற வேண்டும் என்பதும் கார் வாப்சி திட்டத்தின் நோக்கமாகும். இந்தியாவில் எல்லோரும் இந்துக்களாகவே இருந்தார்கள் ஆனால் படையெடுப்பினால் அவர்கள் வேற்று மதங்களைத் தழுவினார்கள் என்ற உண்மை இந்துத்துவா அமைப்பினரை ஆத்திரமடைய வைக்கின்றது. மதமாற்றம் தெலுங்கானா, ஆந்திரப் பிரதேசம், கோவா
ஆகிய மாநிலங்களில் பரீட்சார்த்தமாக மேற்கொள்ளப்பட்டன. பல பட்டியல் சாதியினர் மதம் மாறுவதற்கு நிபந்தனையாக தமக்கு கல்வி வேலைவாய்ப்பு போன்றவற்றில் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்துவதும் நடந்தது. 2014-ம்
ஆண்டு ஆந்திரப் பிரதேசத்திலும் தெலுங்கானவிலும் எண்ணாயிரம் பேர் மதமாற்றம் செய்யப்பட்டனர் என்கின்றது விஷ்வ ஹிந்து பரிசத் அமைப்பு.
இஸ்லாமியர்களுக்கு எதிரான அடக்குமுறை
இந்துத்துவா மற்ற மதங்களுக்கு எதிரான அடக்கு முறையை
இந்தியாவின் அதிக அளவு மக்கள் தொகையைக் கொண்ட உத்தரப் பிரதேசத்தில் கடுமையாகப்
பிரயோகித்து வருகின்றது. மாட்டிறைச்சி உண்பவர்கள் மீது தாக்குதல் நடத்துவது அங்கு
அடிக்கடி நடக்கின்றது. இறைச்சிக்காக மாட்டிறைச்சியைக் கொண்டு சென்றதாகக்
கருதப்படும் ஓர் இஸ்லாமிய இளைஞனை வற்புறுத்தி மாட்டு மூத்திரத்தை குடிக்கவும் சாணியை
உண்ணவும் வைத்த சம்பவங்கள் நடந்தன. காதலர்களாக உலவிய ஒரு ஆணையும் பெண்ணையும்
பிடித்து நிர்வாணமாக்கி அடித்து ஒருவரை ஒருவர் மாறி மாறி தூக்கிச் செல்ல
நிர்ப்பந்திக்கப்பட்டனர். ஆணைத் தூக்க முடியாமல் பெண் சரிந்து விழுந்த போது அவள்
கடுமையாகத் தாக்கப்பட்டாள். பல கிரிஸ்த்தவர்கள் கட்டாயமாக மத மாற்றம் செய்யப்பட்டு
அவர்களது தேவாலயங்கள் இந்துக் கோவில்களாக மாற்றப்பட்டன. பாடசாலைகள் தோறும் ஆர் எஸ்
எஸ் மற்றும் விஷ்வ ஹிந்து பரிசத் அமைப்பினர் சென்று இந்து மதவெறியை ஊட்டும்
வகையில் பரப்புரை செய்வதாகவும் குற்றச் சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. உத்தரப்
பிரதேசத்தில் உள்ள இராமர் பிறந்த இடமான அயோத்தி, கங்கை நதியின் முக்கிய
இடமான வரணாசி, கண்ணன் அவதரித்த இடமான மதுரா ஆகிய மூன்றும்
புனித தீர்த்த தலங்களாக பிரகடனப்பட்டுள்ளன. இந்தியாவின் ஆன்மிகத் தலைநகர் வரணாசி
என்கின்றனர் இந்துத்துவாவாதிகள்.
காதல்
ஜிஹாதிகள்
இஸ்லாமிய
இளைஞர்கள் இந்துப் பெண்களைக் காதலில் விழவைத்து அவர்களைத் திருமணம் செய்து இந்துக்களை மதம் மாற்றுகின்றார்கள் என்ற குற்றச் சாட்டை இந்துத்துவாக் கொள்கையுடையவர்கள் முன் வைக்கின்றார்கள். கேரள மாநிலத்தில்அப்படிப்பட்ட திருமணம் ஒன்றை செல்லுபடியற்றதாக்க வேண்டும் என ஓர் இந்துப் பெற்றோர் வழக்கும் தொடுத்தனர். இந்து மதத்திற்கு எதிரான ஒரு பெரும்
சதியின் ஒரு பகுதியாகத் தமது மகள் ஒரு இஸ்லாமிய இளைஞனால் மூளைச் சலவை செய்யப்பட்டு
அகிலா என்ற அவளது பெயரும் ஹாதியாவாக மாற்றப்பட்டது என்பது அந்தப் பெற்றோரின்
வாதமாக இருந்தது. கீழ்
நீதிமன்றம் அத்திருமணம் செல்லுபடியற்றது என்ற தீர்ப்பை வழங்கினாலும் உச்ச நீதி மன்றம் அத்திருமணம் சட்ட பூர்வமானது எனத் தீர்ப்பளித்தது.
இந்துத்துவாவும் இந்தியும்
இந்துத்துவா தனது பிரதான ஆதரவுத் தளம் இந்தி மொழி
பேசுபவர்கள் என்பதை உணர்ந்துள்ளது. இந்தி பேசும் மக்களைக் கொண்ட பிரதேசம் மற்ற
இனங்களாள் சூழப்பட்டுள்ளது என்பதை இந்துத்துவாவினரும் இந்தித்துவாவினரும்
உணர்ந்துள்ளனர். இந்தி பேசும் மாநிலங்களின் வடக்கே பாக்கிஸ்த்தானும் வட கிழக்கே
சீனாவும் உள்ளன. இந்துக் குடியரசாக இருந்த நேப்பாளம் தற்போது மதசார்பற்ற நாடாக மாறியுள்ளது.
இந்தி பேசும் மாநிலங்கள் மேற்கில் பஞ்சாப் மற்றும் குஜராத் மாநிலங்கள் உள்ளன.
இதில் குஜராத் மொழி இந்தி மொழிக்கு நெருக்கமான மொழி என்பதாலும் இந்தியாவிலேயே மத
நம்பிக்கை மிக்கவர்களாக குஜராத்தியர்கள் இருப்பதாலும் அது இந்துத்துவாவிற்கும்
இந்தித்துவாவிற்கும் ஏற்புடையவர்கள். ஆனால் குஜராத்தியர்களின் பொருளாதார மேம்பாடு
இந்திய பேசுபவர்களைப் பொறாமையடையச் செய்கின்றது. 2012-ம் ஆண்டு இந்தி குஜராத்தியர்களுக்கு ஒரு அந்நிய மொழி என குஜராத் உயர் நீதி மன்றம் தீர்ப்பளித்தது. பஞ்சாப் இந்தித்துவாப்
பேரினவாதிகளுடன் தனிநாட்டுப் போர் புரிந்து பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது.
தமக்கு எதிராக இழைக்கப்பட்ட கொடுமைகள பஞ்சாபியர்கள் இலகுவில் மறக்க மாட்டார்கள். மும்பை
மாநிலத்தில் வாழும் மராத்தியர்கள் இந்துத்துவாவுடன் இணங்கிப் போக முடியாமல்
இருக்கின்றனர். ஆனால் இந்தி மொழியைக் கடுமையாக எதிர்க்கின்றனர். இந்தி மொழி பேசும்
மாநிலங்களுக்கு தெற்கில் ஆந்திரா, கர்நாடகா, கேரளா
தமிழ்நாடு ஆகியவை இருக்கின்றன. இவற்றில் இந்துத்துவா கொள்கைகளுக்கு கேரளாவிலும்
தமிழ்நாட்டிலும் கடும் எதிர்ப்பு உண்டு. தமிழ்நாட்டிலும் கர்நாடகாவிலும் இந்தி
மொழித் திணிப்பிற்கு கடும் எதிர்ப்பு உண்டு. இந்தி மொழி பேசும் மாநிலங்களுக்கு
கிழக்காக மேற்கு வங்கம், பிகார், ஜார்கண்ட்,
ஒடிசா ஆகிய மாநிலங்கள் இருக்கின்றன. வங்காளியர்கள் இந்துத்துவாவிற்கு
எதிர்ப்பையும் இந்தித்துவாவிற்கு கடும் எதிர்ப்பையும் காட்டுகின்றனர். நிலங்களால்
சூழப்பட்ட இந்தி பேசும் இந்துக்கள் தமது இருப்பிற்கு துறை முகங்கள் அவசியம்
என்பதையும் தமக்கென பெரும் கடற்கரைப் பிரதேசம் தேவை என்பதையும் உணர்ந்துள்ளனர். இந்தியாவின்
முழுக் கடற்கரைப் பிரதேசத்தையும் நடுவண் அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர
உருவாக்கப்பட்ட திட்டம்தான் சாகர் மாலா.
ஒன்று பட முடியாத சிறுபான்மை இனங்கள்
இந்தியாவில் உள்ள இந்தி மொழி பேசாத மக்கள் ஒரு கூட்டணியாக
இணைந்து செயற்பட முடியாத நிலையில் உள்ளனர். ஒரு பொதுவான தலைமை இல்லை. ஒரு பொதுவான
கொள்கை அவர்களிடம் இல்லை. மாரத்தியர்களும் தமிழர்களும் ஒற்றுமையாக இல்லை.
தமிழர்களும் மலையாளிகளும் ஒருவர்க்கு ஒருவர் போட்டி நிலையில் உள்ளனர். கர்நாடகாவை
தமிழர்கள் வெறுக்கும் நிலை அதிகரிக்கின்றது. தெலுங்கர்களால்
ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதாக தமிழர்கள் நினைக்கின்றனர். இது 41 விழுக்காடு இந்தி மொழி பேசும்
மக்களுக்கு பெரும் வாய்ப்பாக அமைகின்றது. இந்தி மொழித் திரைப்படங்கள் இந்தியாவெங்கும் பிரபலம் என்பது இந்தி மொழிக்கு வலிமை சேர்க்கின்றது.
ராகுல் காந்தியால் வலுவிழக்கும் இந்தித்துவா
காங்கிரசுக் கட்சியின் தலைமை ராகுல் காந்தியின் கையில்
இருக்கும்வரை அக் கட்சி தேர்தல்களில் வெல்ல முடியாது என்ற நிலை உள்ளது. நேரு
காந்தி குடும்பத்தின் கடைசித் தலைவராக ராகுல் காந்தி உருவெடுத்து வருகின்றார்.
காங்கிரசுக் கட்சிக்குள் ஓர் உள்ளக புரட்சி அவசியமான ஒன்றாகும். அல்லாவிடில் நேரு
உருவாக்கிய இந்தித்துவா இல்லாமற் போய்விடும். இந்தித்துவா இந்துத்துவாவுடன்
சங்கமமாகிவிடும்.
தற்போது உள்ள சூழலில் இந்துத்துவாவும் இந்தித்துவாவும் சிறுபான்மை
இனங்களால் சவால் விட முடியாத நிலையில் உள்ளன.