Saturday, 7 April 2012

படங்கள்: தெரிவதெல்லாம் தெய்வத் திருமுகங்கள்???

கண்ணில் தெரிபவற்றிற்குக் கருத்துக் கொடுத்தால் எமக்குப் பிடித்தவை தெரியுமா?  அல்லது மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லம் பேய் என்பதா?

பூவில் பிள்ளையார்!!!!!!!!!!!!!!!

ரொட்டியில் கருகிய பாகத்தில் தேவன் திருமுகம்

வால்மாட் பற்றுச் சீட்டில் தெய்வத் திருமுகம்

மின் அழுத்தியில் தெய்வத் திருமுகம்

வாகனக் கண்ணாடியில் உள்ள தூசியில் ஆண்டவர்

மரக்கதவில் ஆண்டு வளையங்களில் ஆண்டவன் உருவம்

நியூத்திரன் உடுவில் தெய்வீகக் கை

பாறைப் பிளவுகளில் தெய்வக் கரம்


தீயில் பாப் ஆண்டவர்

கண்ணாடி நிறப்பிரிகையைல் மாதாவின் சொரூபம்

கண்ணீர் வடிக்கும் தேவ குமாரன்

மாதாவின் இரத்தக் கண்ணீர்
மரப்பட்டையில் மாதா

அரிந்து அரியாமாலும் இருக்குக் கத்தரிக்காயில் அல்லா என்று அரபு மொழியில்

கண்ணாடியில் கடவுள்

இரத்தக் கண்ணீர் வடிக்கும் மாதா.....முள்ளிவாய்க்காலைப் பார்த்தாரோ????

சுவரில் சொரூபம்

Thursday, 5 April 2012

கூகிள்: மூக்குக் கண்ணாடிக்குள் கணனித் திரை

மூக்குக் கண்ணாடிக்குள் மின்னஞ்சல், கூகிள் தேடு பொறி, காணொளி அரட்டை, வழிகாட்டி(GPS) வானிலை அறிக்கை இன்னும் பல அம்சங்களை இணைத்து அதை ஒரு கணனித் திரைபோல ஆக்குகிறது கூகிள் நிறுவனம். Google X எனப்படும் மூக்குக் கண்ணாடியைக் கூகிள் உருவாக்கிக் கொண்டிருக்கிறது. அதில் செய்யப்பட வேண்டிய அபிவிருத்திகள் பற்றி பொது மக்களிடமிருந்து அபிப்பிராயம் கோருகிறது கூகிள்.
கண்ணாடிக்குள் காணொளி மூலமாக உங்கள் நண்பர்களுடன் உரையாடலாம்


உங்கள் நண்பர் எங்கு இருக்கிறார் என்பது உங்கள் மூக்குக் கண்ணாடியில்......தி.நகரில் கடைத்தெருக்களில் கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் தொலைத்தால் தேடிப் பிடிக்க பெரிய உதவியாக இருக்கும்.
ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்குச் செல்லும் வழிகாட்டி.....

கண்ணாடிக்குள் கால நிலை.

கூகிள் வெளியிட்டுள்ள காணொளியைக் காண கீழே சொடுக்கவும்:


Wednesday, 4 April 2012

கடாஃபி கணக்கற்ற பெண்களைக் கற்பழித்தாராம்

கடாஃபியின் கன்னி(?) காவலாளிகள்
 மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் அரங்கேற்றப்பட்ட புரட்சியில் கொல்லப்பட்ட லிபியாவின் முன்னாள் அதிபர் கேணல் மும்மர் கடாஃபி பதவியில் இருந்த போஒது பல பெண்களைக் கற்பழித்தமைக்கான ஆதாரம் இருப்பதாக ஜேர்மனிய ஊடகம் ஒன்று கூறுகிறது. இது தொடர்பான ஒரு சூடான ஆவணப்படத்தை அந்த தொலைக்காட்சி ஊடகம் தயாரித்துள்ளது. கடாஃபி பதவியில் இருந்த போது அவரைச் சந்திக்கப் பல பெண்கள் ஆவலாய் இருந்தனராம். ஆனால் அவர்கள் கடாஃபியைச் சந்தித்த போது அவர்கள் கற்பழிக்கப்பட்டனராம். ஆண்டோனியோ ரடோஸ் என்னும் பெண் ஊடகவியலாளர் இதை அம்பலப்படுத்துகிறார்.

கடாஃபியைச் சுற்றி எப்போதும் ஒரு பெண்கள் கூட்டம் மெய்பாதுகவலராக இருப்பர். அவர்கள் கன்னிக் காவலாளிகள் எனப்படுவர். அவர்களையும் கடாஃபி விட்டு வைத்ததில்லையாம். லிபிய மனோதத்துவவியலாளரான கலாநிதி சேர்கம் சேகேவா என்பவர் தனக்குத் தெரிய ஐந்து பெண் காவலாளிகள் அப்படிக் கற்பழிக்கப்பட்டனர் என்கிறார்.

கடாஃபிக்கு எதிரான கிளர்ச்சியின் போது கிளர்ச்சியில் ஈடுபட்டிருந்த பெண்களைக் கற்பழிக்குமாறு கடாஃபி உத்தரவிட்டார் என பன்னாட்டு நீதிமன்ற வழக்குத் தொடுனர் தெரிவித்திருந்தார். இதற்காக கடாஃபியின் படையினருக்கு வயகாரா மாத்திரைகளும் ஆணுறைகளும் வழங்கப்பட்டிருந்தனவாம்.


ஆண்டோனியோ ரடோஸ் என்னும் பெண் ஊடகவியலாளர் கடாஃபியால் பாதிக்கப்பட்ட பெண்களைச் சந்தித்து தனது ஆவணப்படத்தில் பதிவு செய்துள்ளார்.

மும்மர் கடாஃபியைச் சந்திக்க வரும் வெளிநாட்டு வர்த்தகர்கள் அவரது பலவீனத்தை அறிந்து அவருக்கு அழகிகளின் "சேவைகளை" வழங்குவார்களாம்.

கடாஃபிக்கு எதிரான கிளர்ச்சியின் போது அவரது கன்னிக் காவலாளிகளுக்கு நடந்தவை:

எச்சரிக்கை படங்கள் கொடூரமானவை. இளகிய மனதினர் பார்க்க வேண்டாம்
>

>

>

>


Tuesday, 3 April 2012

சீனாவிற்கு அமெரிக்கா போடும் முத்து மாலை

சீனா இந்தியாவைச் சுற்றி ஒரு முத்துமாலையைப் போட்டுள்ளது சகலரும் அறிந்தது. மியன்மாரில்(பர்மா) சிட்வே என்னும் இடத்திலும் பங்களாதேசத்தில் சிட்டகொங்கிலும் பாக்கிஸ்த்தானில் குவாடாரிலும் இலங்கையில் அம்பாந்தோட்டையிலும் ஏற்கனவே சீனா துறை முகங்களை அமைத்துவிட்டது. இத் துறை முகங்கள் வர்த்தக் நோக்கங்களுக்கானவை என்று சொல்லப்பட்ட போதிலும் இவை என்னேரமும் கடற்படைத் தளமாக மாற்றப் படக் கூடியவை. இவற்றுடன் நிற்கவில்லை சிசில்ஸில்(Seychelles) மேலும் துறைமுகங்களைச் சீனா அமைக்க விருக்கிறது. மேலும் மாலை தீவில் இருந்த இந்தியா சார்பு ஆட்சியாளரை சீன சார்பினர் விரட்டி விட்டனர். இனி மாலை தீவிலும் சீனா தளம் அமைக்கலாம்.

சிசில்ஸில்(Seychelles) சீன நீர்மூழ்கிக் கப்பல்கள்

பிராந்திய வல்லரசு எனப்படும் இந்தியா இவற்றை வெறும் பார்வையாளராக இருந்து பார்த்துக் கொண்டு இருக்கிறதது. இன்னும் சொல்லப் போனால் இலங்கையிலும் மியன்மாரிலும்  சீனாவுடன் இந்தியா இணைந்து செயற்பட்டது. இலங்கையில் தமிழர்கள் ஆளக்கூடாது என்ற உறுதியுடன் செயற்படும் புது டில்லிப் பார்ப்பனர்கள் இந்தியாவின் பிராந்திய நலனை தமது சாதிய நலன்களுக்காகப் பலியிட்டனர். ஆனால் மியன்மாரில் ஏன் இப்படி ஒரு விட்டுக் கொடுப்பை இந்தியா செய்தது என்பது கேள்விக் குறியே. புது டில்லிக் கொள்கை வகுப்பாளர்கள் சீனாவிடம் இருந்து தட்சணை பெறுகிறார்களா என்ற சந்தேகத்தை எழுப்புகிறது.


இந்தியா ஒரு பிராந்திய வல்லரசு அது தனது பிராந்திய நலன்களைப் பார்த்துக் கொள்ளும் என்று இருந்தால் சரிவராது என்று உணர்ந்த அமெரிக்கா  2010இல் இருந்து நேரடியாக ஆசியப் பிராந்தியத்தில் களமிறங்கியது. ஹிலரி கிளிண்டன் அமெரிக்க அரசச் செயலராகப் பதவி ஏற்ற பின்னர் அதிக பயணங்களை அவர் சீனாவைச் சுற்றியுள்ள நாடுகளுக்கு மேற் கொண்டார். அமெரிக்காவின் எதிர்காலப் படை வலிமைஆசிய பசுபிக் நாடுகளை மையம் கொண்டதாக அமையும். இத்தனை பொருளாதாரச் சிக்கல்களுக்கு மத்தியிலும் அமெரிக்காவின் பாதுகாப்புச் செலவீனம் மொத்த ஆசிய நாடுகளின் பாதுகாப்புச் செலவீனங்களிலும் இருபது மடங்கு அதிகமானது..
ஹிலரி கிளிண்டனின் பயணங்கள்

 களம் - 1 ஒஸ்ரேலியா
இந்தியாவிற்கு சீனா போட்ட முத்து மாலைத் திட்டம் என்னும் சுருக்குக் கயிற்றிற்கு பதில் நடவடிக்கையின் முதல் கட்டமாக ஒஸ்ரேலியாவில் அமெரிக்கா தனது படைத் தளங்களை அமைக்கவிருக்கிறது. அமெரிக்கா தனது எதிர்காலப் போர்களங்களில் ஆளில்லாப் போர் விமானங்களை பாவிக்க இருக்கிறது. அதன்படி ஒஸ்ரேலியாவில் Global Hawk surveillance drones என்னும் ஆளில்லா விமானங்கள் பல நிலை கொள்ளவிருக்கின்றன. அவற்றில் பெரும்பாலானவை ஒஸ்ரேலியத் தீவுகளான கொக்கோஸ் மற்றுக் கீலிங்கில் Cocos and Keeling Islands அமையவிருக்கின்றன. இவை தென் சீனக் கடலை கண்காணிக்கும் நோக்கம் கொண்டவை. சீனா தென் சீனக் கடல் முழுவது தன்னுடையது என்கின்றது. வியட்னாம், பிலிப்பைன்ஸ் தாய்லாந்து போன்ற நாடுகள் அதை எதிர்க்கின்றன. அத்துடன் பல நவீன போர் விமானங்களும் ஒஸ்ரேலியாவில் நிலை கொள்ளவிருக்கின்றன. இவை ஆளணித் தேவையை குறைக்கு நோக்கம் கொண்டவையாக இருந்த போதும் 2500 அமெரிக்கக் கடற்படையினரும் ஒஸ்ரேலியாவில் நிலை கொள்ளவிருக்கின்றனர். இத்துடன் நிற்கவில்லை அமெரிக்கா மேற்குப் பசிபிக்கில் மூன்று இடங்களில் தனது Marine Air-Ground Task Force (MAGTF) படையினரை நிலை கொள்ளவைக்கவிருக்கிறது.


களம் - 2 மியன்மார்(பர்மா)
1962இல் இருந்து இதுவரை காலமும் சீனாவின் பிடியில் சர்வாதிகார் ஆட்சியில் இருந்த மியன்மார் இப்போது மக்களட்சியை நோக்கி நகரவிருக்கிறது. அமெரிக்க ஆதரவாளரான ஆங் சான் சூ கீ இனது மக்களாட்சிக்கான தேசிய முன்னணிக் கட்சி இடைத் தேர்தலில் போட்டியிட்டு பெரு வெற்றியீட்டியுள்ளது. இது சிறு நகர்வாக இருந்த போதும் அமெரிக்கா திட்டமிட்டு அரங்கேற்றும் நாடகத்தின் ஒரு பகுதி இது. 2010 நவம்பரில் இருந்து அமெரிக்கா மியன்மாரில் காய்களை வேகமாக நகர்த்தி வருகிறது. மியன்மாரில் சீனாவின் ஆதிக்கம் குறைக்கப்பட்டு அமெரிக்க ஆதிக்கம் வலுவடையும் என்று எதிர்பார்க்கலாம். ஜப்பானும் பல ஐரோப்பிய நாடுகளும் பல நிதி உதவிகளையும் கடன்களையும் மியன்மார் அரசுக்கு வழங்கத் தொடங்கிவிட்டன. இதுவரைகாலமும் மியன்மாரின் பொருளாதார வளரிச்சியில் சீனா அதிக அக்கறை காட்டாமல் இருந்தது பல மியன்மாரியரை ஆத்திரத்திற்கும் உள்ளாக்கியிருந்தது. மியன்மார் ஒரு சீன அமெரிக்க ஆதிக்கப் போட்டிக் களமாக இப்போது உருவாகியுள்ளது.


களம் - 3 இலங்கை
இலங்கையில் போர் முடிவடைந்த பின்னர் அமெரிக்கா அங்கு காலூன்றப் பல வழிகளில் முயன்றது. அமெரிக்கா பல தூண்டில்களை இலங்கைக்குப் போட்டது. இது தொடர்பான பதிவை வாசிக்க இங்கு சொடுக்கவும்:
இலங்கைக்கு அமெரிக்க போடும் தூண்டில்கள்
இலங்கையுடனான அரசியல், படைத்துறை மற்றும் வர்த்தக ரீதியிலான உறவுகளை வலுப்படுத்திக் கொள்வதன் ஊடாகவே இலங்கையில் சீனாவின் தலையீட்டைக் குறைக்க அமெரிக்கா திட்டமிருந்தது.புவியியல் ரீதியாக இலங்கையில் அமைவிடம் மிகவும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால், இலங்கை மீதான கவனத்தை அமெரிக்கா இழக்கவில்லை. ஆனால் இலங்கை அமெரிக்காவைத் தவிர்த்தது. இதனால் அமெரிக்கா இலங்கைப் போர்க்குற்றத்தைக் கையில் எடுத்தது. விளைவு ஜெனீவாத் தீர்மானம். இலங்கையில் சீன ஆதிக்கத்தை அகற்றி இலங்கையை தன் வழிக்கு கொண்டுவர  அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்தின் கடுமையான வாசகங்களை இந்தியா கடும் எதிர்ப்புக் காட்டி மாற்றியது. இந்தியக் கொள்கை வகுப்பாளர்கள் இந்தியாவின் பிராந்திய நலனிலும் பார்க்க சிங்களவர்களுடனான உறவிற்கே அதிக மதிப்புக் கொடுக்கின்றனர். தமிழர்கள் அதிகாரம் பெறாமல் இருப்பதை உறுதி செய்வதே அவர்களின் ஒரே நோக்கம். ஆனால் அமெரிக்கா இன்னும் சில ஆண்டுகளில் மஹிந்த ராஜபக்சவைப் பதவிய்ல் இருந்து விரட்டி விடும். இதன் விபரங்களைக் காண இங்கு சொடுக்கவும்: மஹிந்தவின் எதிர் காலம்.
மஹிந்த ராஜபக்சவிற்குப் பின்னர் இலங்கையில் அமெரிக்கப் படைத்தளம் அமையலாம்.
களம் - 4 பாக்கிஸ்த்தான்
அமெரிக்காவிற்கும் பாக்கிஸ்த்தானிற்கும் இடையிலான உறவு பின் லாடன் கொலையையும் பாக்கிஸ்த்தான் பிரதேசங்களில் அமெரிக்க ஆளில்லா விமானங்களின் பல தாக்குதல்களையும் தொடர்ந்து சிக்கலடையத் தொடங்கியது. இதைத் தொடர்ந்து அமெரிக்க மூதவையில் தனிநாடு கோரிப் போராடும் பாலுச்சிஸ்தான மாகாணத்தின் சுயநிர்ணய உரிமை பற்றி உரையாடப்பட்டது. பாக்கிஸ்த்தான் அமெரிக்காவின் எதிரியாக மாறினால் பாலுச்சிஸ்தானை அமெரிக்கா போர்க்களமாக்கும். பாக்கிஸ்த்தானில் ஒரு சீனாவுடனான ஒரு படைத்துறைச் சமநிலையை அமெரிக்கா ஏற்படுத்தும்.

களம் - 5 தென் கொரிய ஜெஜு தீவு
தென் கொரியாவின் ஜெஜு தீவில் இருக்கும் அமெரிக்கப் படைத் தளம் சீனாவீற்கு மிக அண்மையாகவும் பல சீன நகரங்களைத் தாக்கக் கூடியதாகவும் இருக்கின்றது. இவை சீனாவிற்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறது. தென் கொரியாவும் தனது பாதுகாப்புச் செலவீனங்களை 24%த்தால் அதிகரித்துள்ளது. தென்கொரியப் படைகளும் சீனாவிற்கு எதிராக அமெரிக்காவுடன் இணைந்து செயற்படும்.

களம் - 6 ஜப்பான்
உலகின் அதி நவீன நீர்மூழ்கிக் கப்பற் படையை ஜப்பான் உருவாக்கியுள்ளது. ஜப்பானின் கடற்படைப் பலத்தை ஒரு ஊடகம் இப்படி விபரித்தது:
Japan’s Maritime Self-Defense Force (MSDF) deploys perhaps the most modern and capable diesel-electric submarine force in the world. The MSDF has 44,000 military personnel, 18 submarines, 9 frigates boats, and the second largest number of Aegis-equipped destroyers in the world, after the United States. சீனாவைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டியது ஜப்பானின் வர்த்தகத்திற்கு முக்கியமான ஒன்று. இந்து சமூத்திரப் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்தால் ஜப்பானின் வர்த்தகம் பெரிதும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும்.

இவ்வளவு காலமும் மேற்கு ஐரோப்பிய நாடுகளுடன் இணைந்து உலகக் காவற்துறையாகத் தன்னைத் தானே நியமித்துக் கொண்ட அமெரிக்கா இனி ஆசிய நாடுகளுடன் இணைந்து அந்த "சேவையைத்" தொடரவிருக்கிறது.

Monday, 2 April 2012

பின் லாடன் தங்கியிருந்த இன்னொரு மாளிகை கண்டுபிடிக்கப்பட்டது

அமெரிக்க கடற்படையின் சீல் பிரிவினரால் கொல்லப்பட்ட இசுலாமிய அடிப்படைவாதியும் விடுதலைப் போராட்டத் தலைவருமாகிய ஒசாமா பின் லாடன் பாக்கிஸ்த்தானில் மறைந்திருந்த இன்னொரு மாளிகையை பாக்கிஸ்த்தானிய உளவுத்துறையினர் கண்டறிந்துள்ளனர். பாக்கிஸ்த்தான் ஆப்க்கனிஸ்த்தான் எல்லை நகரமான ஹரிப்பூரில் ஒரு சேறு நிறைந்த ஒரு வீதியில் ஒரு சாதாரண இரு மாடி வீட்டில் பின் லாடன் சுமார் ஒரு ஆண்டுகளாக மறைந்திருந்தார். அந்த வீட்டில் ஒரு நிலக் கீழ் அறையும் இருந்தது.

பாக்கிஸ்தானின் ஓய்வு பெற்ற பிரிகேடியர் ஷௌகத் கதீர்  கடந்த எட்டு மாதங்களாக பின் லாடனின் இறுதிக்கால நகர்வுகளைத் தேடி வருகிறார். பின் லாடனின் இளைய மனைவி அம்ல் அஹமட் அட்பெல் ஃபற்றா அல்-சதாவிடமிருந்து பெற்ற தகவலகளின் அடிப்படையிலேயே இந்த மாளிகை கண்டறியப்பட்டது. இந்த மாளிகையில் இருந்து 2005-ம் ஆண்டு பின் லாடன் அவர் கடைசியாக இருந்த அபோட்டாபாத் மாளிகைக்கு மாறினார்.

2001-ம் ஆண்டு  கிழக்கு ஆப்கானிஸ்தான் டோரா போரா மலைத் தொடர் பகுதியில் இருந்து பின் லாடன் பாக்கிஸ்தானிற்குள் நுழைந்தார். அவர் ஒன்பது ஆண்டுகளில் பாக்கிஸ்தானில் ஐந்து வேறு வேறு வீடுகளில் தங்கியிருந்தார். அப்போது அவருக்கு 4 பிள்ளைகளும் பிறந்தன. பின் லாடன் பாக்கிஸ்தானில் தங்கியிருந்தமை பாக்கிஸ்தானிய அதிகாரிகளுக்கு தெரிந்து இருந்தமைக்கான ஆதாரங்கள் எதுவும் தமக்கு இதுவரை கிடைக்கவில்லை என ஐக்கிய அமெரிக்காவின் உளவுத்துறை தெரிவித்துள்ளது.

பின் லாடன் இருந்த மாளிகையை அவரின் தொடர்பாடல் ஆளாகச் செயற்பட்ட அபு அஹமட் அல்-குவைத்தி என்பவர் வாடகைக்கு எடுத்திருந்தார்.


உக்கிரம் அடைந்த சக்களத்திச் சண்டை
29 வயதான் பின் லாடனின் இளைய மனைவி அமல் சதாவிற்கும் 61வயதான மூத்த மனைவி கைரியாவிற்கும் இடையில் நடந்த போட்டிதான் பின் லாடனின் இருப்பிடம் தொடர்பான செய்திகள் கசியக் காரணமாக இருந்தன என பாக்கிஸ்தானிய உளவுத் துறையான ஐ.எஸ்.ஐ அறிந்து கொண்டது. தற்போது பாக்கிஸ்தானியச் சிறையில் இருக்கும் இவர்கள் ஒரு பெரும் குடுமிச் சண்டையின் பின்னர் தனித்தனியான சிறைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். மூத்த மனைவியே பின் லாடனைக் காட்டிக் கொடுத்ததாக இளைய மனைவி பாக்கிஸ்த்தான் உளவுத் துறைக்குத் தெரிவித்துள்ளார்.

பின் லாடன் குடும்பத்தினருக்கு 45 நாள் சிறைவாசம்
பாக்கிஸ்த்தானில் சட்ட விரோதமாகக் குடியிருந்தமைக்காக பின் லாடன் மனைவிகள் பிள்ளைகள் உட்படப் 16 பேருக்கு பாக்கிஸ்த்தான் நீதி மன்றம் 45 நாள் சிறைத்தண்டனையை இன்று(02-04-2012) விதித்துள்ளதுடன் 10,000ரூபா அபராதமும் செலுத்தும் படி கட்டளை இட்டது.. சட்டப்படி இவர்கள் 14 நாட்கள் மட்டு மே சிறையில் இருக்க வேண்டி இருக்கும். இதன் பின்னர் இவர்கள் நாடு கடத்தப்பட வேண்டும். பாக்கிஸ்த்தான் அரசு இவர்களுக்கு ஒரு நீண்ட சிறைத்தணடனை வேண்டும் என்று எதிர்பார்த்தது. அது பாக்கிஸ்தான் உளவுத் துறைக்கு இவர்கள் பாக்கிஸ்தானுக்குள் இருந்தமை தொடர்பான மேலதிக தகவல்களைப் பெற உதவியாக இருக்கும்.

Sunday, 1 April 2012

தொடரும் மனித உரிமைக் கழகமும் நழுவும் இலங்கையும்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைக் கழகத்தில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்னர் இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்ச கண்டியில் நடந்த கூட்டமொன்றில் பங்குபற்றியுள்ளார். இந்தக் கூட்டத்தின் அடிப்படை "இலங்கை ஒரே நாடு! ஒரே மக்கள்!!" என்பதாகும். இதுதான் மஹிந்த சிந்தனையின் கருப்பொருளுமாகும். இலங்கை சிங்கள நாடு!! இது சிங்கள மக்களுக்கே சொந்தமானது என்றே மஹிந்த கருதுகிறார். ஜெனீவாத் தீர்மானம் நிறைவேற்றப்படமைக்கு முக்கிய காரணம் மனித உரிமை அமைப்புக்களும் சனல் - 4 தொலைக்காட்சிச் சேவையும் தான் காரணமென்பதால் தனது நாடு வெளிநாட்டு ஊடகங்களால் பலியிடப்பட்டது என்றும் தனது நாட்டில் குழப்ப நிலையை ஏற்படுத்த வெளிநாட்டுத் தொண்டு நிறுவனங்கள் பின்னணியில் இருந்து செயற்படுகின்றன என்றும் தெரிவித்தார்.

தீர்க்க முடியாவிட்டல் குழப்பு
இலங்கை தனக்கு எதிரான பன்னாட்டு சமூக நிலைப்பாட்டை எதிர் கொள்ள முடியாத நிலையில்  நாட்டுக்கு உள்ளேயும் வெளியேயும் உள்ளவர்களைக் குழப்புவது உரிய வழி என கருதுகிறது. முதலில் வெள்நாட்டமைச்சர் ஜீ எல் பீரிஸ் மனித உரிமைக் கழகத் தீர்மானத்தை தாம் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்றார். அதைத் தொடர்ந்து இலங்கை அமைச்சரவைப் பேச்சாளர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன அது அரசின் கருத்து அல்ல பீரிஸின் தனிப்பட்ட கருத்து அது என்றார். மீண்டும் பீரிஸ் அதுதான் அரசாங்கத்தின் கருத்து என்றார். இம்மாதிரி பல முரண்பட்ட கருத்துக்களை வெயிட்டு கடந்த காலங்களில் இலங்கை பன்னாட்டு சமூகத்தை வெற்றீகரமாகக் குழப்பியதுண்டு.  இப்படிக் குழப்புவது  கால இழுத்தடிப்புத் தந்திரத்திற்குப் பெரிதும் உதவும். இப்படி அதிகம் ஏமாற்றப்பட்டது இந்தியாவே.

பீரிஸைக் கவனமாகக் கையாளும் எதிர்க்கட்சியினர்
இலங்கை வெளிவிவகார அமைச்சர் பீரிஸை பாரளமன்றத்தில் கிண்டல் செய்த எதிர்க் கட்சியினர் தமது கிண்டலை ஒரு மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே மேற்கொண்டனர். அவர்களுக்குத் தெரியும் அமைச்சர் பீரிஸ் எந்த நேரமும் கட்சிதாவலாம் என்று. இது அவருக்குக் கைவந்த கலை.

மௌனமாயிருக்கும் மஹிந்த
ஜெனீவாத் தீர்மானத்தின் பின்னர் மஹிந்த ராஜ்பக்ச தனது பேச்சை குறைத்துள்ளார். ஜெனீவாத் தீர்மானத்தை ஏற்கப் போகிறாரா இல்லையா என்று கருத்துச் சொல்வதைத் தவிர்த்துவிட்டு இலங்கையில் அன்னியத் தலையீடு ஏற்படுகிறது என்று கூச்சலிடுகிறார். ஜெனீவாத் தீர்மானத்தின் பின்னணியைத்தான் விமர்சிக்கிறார். அவர் கடாஃபிக்கு நடந்தது தனக்கு நடக்காது என்று கூறுவதில் அதிக நேரம் செலவிட்டார். அவரது கனவிலும் நினைவிலும் கடாஃபிதான் வருகிறார் போல் இருக்கிறது. கடாஃபியை சீனாவோ இரசியாவோ காப்பாற்ற முடியாமல் போனதை அவர் அறிவார். அதுமட்டுமல்ல சூடானிலும் ஈராக்கிலும் சீனாவாலோ இரசியாவாலோ எதையும் செய்ய முடியாமற் போனது என்பதையும் மஹிந்த அறிவார். இந்தியா ஈழத் தமிழர்களின் நண்பனாக நடித்து எப்படி கடைசியில் அவர்களைக் காலை வாரிவிட்டு பெரும் அழிவிற்கு வழிவகுத்தது என்பதையும் மஹிந்த அறிவார். இதே மாதிரி சிங்களவர்களுக்கும் துரோகம் செய்ய "நண்பன்" இந்தியா தயங்காது என்பதையும் மஹிந்த அறிவார்.

2013இல் 22-ம் கூட்டத் தொடர்
இலங்கைக்கு எதிரான ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக்கழகத் தீர்மானத்தில் உள்ள முக்கிய அம்சம் இலங்கைக்கு மனித உரிமைகள் தொடர்பாக மனித உரிமைக்கழகம் ஆலோசனை வழங்க வேண்டும் என்பதும் கழகத்தின் 22-ம் கூட்டத் தொடரில் இது பற்றிய அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்பதே. மனித உரிமைக் கழகம் இலங்கையில் இதற்கு ஒரு பணிமனையைத் திறக்கவிருக்கிறது. இது மனித உரிமைக்கழகம் இலங்கையை சும்மா விடுவதில்லை என்ற நிலைப்பாட்டில் இருக்கிறது என்பதைக் காட்டுகிறது. 2013வரை இலங்கைக்கு கால அவகாசம் இருக்கிறது. இலங்கை அரசு 2013 வரை காலத்தை இழுத்தடித்துவிட்டு 2013 மனித உரிமைக் கழகக் கூட்டத் தொடர் தொடங்குவதற்குச் சில நாட்களுக்கு முன்னர் மஹிந்த தனது மனித உரிமை பேணல் தொடர்பான சில திட்டங்களை வெளிவிட்டு மேலும் கால அவகாசம் கேட்கலாம். மஹிந்தவின் திட்டம் அடுத்த குடியரசுத் தலைவர் தேர்தல் வரை இனப்பிரச்சனையை இழுத்தடிக்க வேண்டும் என்பதே. ஆனால் 2012 மார்ச்சில் நடந்த கூட்டத் தொடருக்கு முன்னரும் இலங்கை இப்படி சில முன்மொழிவுகளை முன்வைத்தது. ஜெனீவாவில் தீர்மானம் வரப்போகிறது என்று தெரிந்ததும், கிளிநொச்சிப் படைத் தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் கிரிசாந்த டி சில்வா தலைமையில் ஐந்து பேர் கொண்ட இராணுவ நீதிமன்றம் ஒன்றை அமைத்துள்ளதாக அரசாங்கம் அறிவித்தது. ஆனால் எதுவும் எடுபடவில்லை. கடந்த இரு வாரங்களாக பன்னாட்டு ஊடகங்களில் எழுதப்பட்ட அரசியல் ஆய்வாளர்களின் பத்திகளில் இலங்கை அரசு இதுவரை பன்னாட்டு சமூகத்தை எப்படி ஏமாற்றியது என்பதை பல தரப்பினரும் உணர்ந்துள்ளனர் என்பது தெளிவாகத் தெரிகிறது. 2013 இல் நடக்கவிருக்கும் மனித உரிமைக் கழக்த்தின் 22 வது கூட்டத் தொடரில் கழகம் சமர்ப்பிக்கும் அறிக்கை இலங்கைக்கு சாதகமாக இல்லாவிடில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபையில் ஒரு பொருளாதாரத் தடைக்கான தீர்மானத்திற்கு வழிவகுக்கும். அது இலங்கையில் மஹிந்தவிற்கு எதிராக மக்களைக் கிளர்ந்து எழச் செய்யும். 2014இல் இலங்கையில் ஒரு வசந்தப் புரட்சி ஏற்படும்

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...