பாக்கிஸ்த்தானியப் படையினர் முதலில் பலத்த விமானக் குண்டு வீச்சுத் தாக்குதல்களை மேற்கொன்டு விட்டுப் பின்னர் தரை நகர்வை மேற்கொன்டனர். நானூற்றிற்கு மேற்பட்ட போராளிகளைக் கொன்றும் நூற்றிற்கு மேற்பட்ட அவர்களது மறைவிடங்களை அழித்தும் விட்டதாக ஜுலை மாதம் 9ம் திகதி பெருவாள் படை நடவடிக்கைக்குப் பொறுப்பான படையதிகாரி தெரிவித்தார். மிரான்ஸா நகரில் அல் கெய்தாப் போராளிகளும் இருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
2001-ம் ஆண்டிற்கும் 2013-ம் ஆண்டிற்கும் இடையில் பாக்கிஸ்த்தானில் 13,271 தீவிரவாதத் தாக்குதல்கள் நடந்துள்ளன. அவற்றில் ஐம்பதினாயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர். 2007-ம் ஆண்டிற்கும் 2013-ம் ஆன்டிற்கும் இடையில் 358 தற்கொடைத் தாக்குதல்கள் நடந்துள்ளன. இது உலகிலேயே அதிக அளவு எண்ணிக்கையாகும். கடந்த பத்து ஆண்டுகளாக தீவிரவாத நடவடிக்கைக்களால் பாக்கிஸ்த்தானிற்கு 78 பில்லியர் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான சொத்தழிவு ஏற்பட்டுள்ளது.
பாக்கிஸ்த்தானில் பலதரப்பட்ட தீவிரவாத அமைப்புக்கள் செயற்படுகின்றன. தலிபான், அல் கெய்தா, ஹக்கானி, லக்சர் இ தொய்பா ஆகியவை முக்கியமான அமைப்புக்களாகும். சில தீவிரவாத அமைப்புக்கள் பாக்கிஸ்த்தானிய அரச படைகளுக்கு மிகவும் வேண்டப்பட்டவையாக இருக்கின்றன. பாக்கிஸ்த்தானிய அரச படைகளிடமிருந்து நிதி, படைக்கலன், பயிற்ச்சி ஆகியவை பெறும் போராளிக்குழுக்களும் இருப்பதாகக் குற்றம் சாட்டப்படுகின்றது. ஆப்கானிஸ்த்தானில் இருக்கும் அமெரிக்கப்படைகளுக்கு எதிராகச் செயற்படும் அமைப்புக்களிற்கு பாக்கிஸ்த்தானில் பலதரப்பினரிடையும் ஆதரவு உண்டு. ஆனால் சீனாவின் உய்குர் இனப் போராளிகள், உஸ்பெக்கிஸ்த்தன் அரசுக்கு எதிராகப் போராடும் போராளிகள், இந்தியாவிற்கு எதிராகச் செயற்படும் போராளிகள் எனப் பலதரப்பினர் பாக்கிஸ்த்தானில் செயற்படுகின்றனர். இதனால் எல்லா அயல் நாடுகளின் நெருக்கத்திற்கும் பாக்கிஸ்த்தான் உள்ளாகியுள்ளது. கனடியக் குடிவரவு அமைச்சர் கிறிஸ் அலெக்சான்டர் பாக்கிஸ்த்தானிய அரசு பயங்கரவாதத்தை ஆதரித்து வளர்ப்பதாக பகிரங்கமாகவே இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் குற்றம் சுமத்தியிருந்தார். மேலும் அவர் பாக்கிஸ்த்தனின் குடிசார் நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளாமல் படையினர்தான் மேற்கொள்கின்றார்கள் என்றதுடன் எல்லா நாடுகளும் இணைந்து பாக்கிஸ்த்தானிற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேன்டும் என்றும் தெரிவித்தார். இதுவே பாக்கிஸ்த்தானிற்கான அபாயச் சங்கானது.
அமெரிக்காவிற்கும் பாக்கிஸ்த்தானிற்கும் இடையிலான உறவிற்கும் பாக்கிஸ்த்தானில் உள்ள தீவிரவாதத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. அமெரிக்காவிற்கும் பாக்கிஸ்த்தானிற்கும் இடையிலான உறவு 1954-ம் ஆண்டு கட்டி எழுப்பப்பட்டது. இந்தியா கூட்டுச் சேரக் கொள்கை என்னும் பெயரில் சோவியத் ஒன்றியத்துடன் நெருக்கமானதாலலதைச் சமாளிக்க பாக்கிஸ்த்தான் அமெரிக்காவுடன் அப்போது இணைந்து கொண்டது. பின்னர் 1971-ம் ஆண்டு நடந்த பங்களாதேசப் பிரிவினைப் போரின் போது அமெரிக்கா பாக்கிஸ்த்தானிற்கு நிறையப் படைக்கலன்களைக் கொடுத்து உதவியது. 1989-ம் ஆண்டு சோவியத் ஒன்றியம் ஆப்கானிஸ்த்தானை ஆக்கிரமித்ததைத் தொடர்ந்து அமெரிக்க பாக்கிஸ்த்தானிய உறவு நெருக்கமடைந்தது. அமெரிக்கா பல பில்லியன் கணக்கில் செலவழித்து பாக்கிஸ்த்தான் உளவுத் துறையுடன் இணைந்து ஆப்கானிஸ்த்தானை ஆக்கிரமித்துள்ள சோவியத் படைகளுக்கு எதிராக மதவாதப் போராளிகளை பயிற்றுவித்தது. அரபு ஆப்கானிஸ்த்தானியர் என்னும் பெயரில் உருவாக்கப்பட்ட போராளி அமைப்பில் பின் லாடனும் ஒருவராவர். பின் லாடனுக்கு அமெரிக்க உளவுத் துறையான சிஐஏ பயிற்ச்சி வழங்கியதாக நம்ப்பப்படுகின்றது.
சோவியத் ஒன்றியம் ஆப்கானிஸ்த்தானில் இருந்து வெளியேறியபின்னர் சவுதி அரேபிய செல்வந்தரும் பொறியியலாளருமான பில் லாடனும், எகிப்தில் வாழ்நாள் முழுக்கப் போராளியாக இருந்த ஜவாகிரி, பாக்கிஸ்த்தானியக் கல்விமானுமாகிய ஃப்டல் ஆகியோர் இணைந்து அல் கெய்தா அமைப்பை 1988-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 11-ம் திகதி உருவாக்கினர்கள். இவர்கள் தீவிர அமெரிக்க எதிர்ப்பாளர்களாக மாறினார்கள். இவர்களின் அமெரிக்க எதிர்ப்பின் உச்சக் கட்டமாக 2001 செப்டெம்பர் 11-ம் திகதி நிகழ்ந்த அமெரிக்காவின் நியூயோர்க் நகரின் இரட்டைக் கோபுரத் தாக்குதல் நடந்தது.
1998-ம் ஆண்டு பாக்கிஸ்த்தான் அணுக்குண்டுப் பரிசோதனை செய்ததைத் தொடர்ந்து அமெரிக்காவிற்கும் பாக்கிஸ்த்தானிற்கும் இடையிலான உறவு மிக மோசமடைந்தது. அமெரிக்கா பாக்கிஸ்த்தானிற்கு வழங்கி வந்த எல்லா உதவிகளும் நிறுத்தப்பட்டன. 2001-ம் ஆண்டு அமெரிக்கா பய்ங்கரவாதத்திற்கு எதிரான போரில் பாக்கிஸ்த்தானையும் இணைக்க மீண்டும் அமெரிக்காவும் பாக்கிஸ்த்தானும் தம் உறவை மேம்படுத்தி மீண்டும் பாக்கிஸ்த்தானுக்கான அமெரிக்க உதவி வழங்குதல் ஆரம்பிக்கப்பட்டது. 2009-ம் ஆண்டு அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா ஆப்-பாக் கேந்திரோபாயம் ஒன்றை வகுத்தார். அமெரிக்கப் பாதுகாப்புத் துறையிலும் இதற்கு என ஒரு தனிப் பிரிவு உருவாக்கப்பட்டது. இதன் மூல, இசுலாமியத் தீவிர வாதத்தை ஒழிக்கலாம் என அமெரிக்கா திட்டமிட்டிருந்தது. அமெரிக்கா பாக்கிஸ்த்தானிற்கு 7.5 பில்லியன் டொலர்கள் உதவியை ஐந்து ஆண்டுகளுக்கு வழங்குவதாக அறிவித்தது. 2010-ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் பாக்கிஸ்த்தானிய ஊடகர் சலீம் சஹ்ஜாட் பாக்கிஸ்த்தானிய உளவுத் துறையான ஐ.எஸ்.ஐ இன் தலைமைச் செயலகத்திற்கு அழைக்கப்பட்டு மிரட்டப்பட்டார். சலீம் சஹ்ஜாட் Asia Times Onlineஇல் பாக் உளவுத் துறையினருக்கும் தீவிர வாத அமைப்புக்களுக்கும் இடையிலான தொடர்புகளை அம்பலப் படுத்தியதைத் தொடர்ந்து 2011-ம் ஆண்டு மே மாதம்அவர் கடத்தப்பட்டு கொடூரமாக் கொல்லப்பட்டார். அவர் மீது விழுந்த அடிகள் அவர் விலா எழும்புகளை முறித்து ஈரலைக் கிழித்திருந்தன. அமெரிக்க கடற்படையின் அட்மிரல் மைக் முல்லன் பாக்கிஸ்தானின் ஐ.எஸ்.ஐ எனப்படும் உளவுத் துறைமீது வெளிப்படையாகவும் பகிரங்கமாகவும் நாடுகளுக்கிடையிலான வரம்புகளை மீறி குற்றம் சுமத்தியது பாக் அரசை ஆத்திரமடையச் செய்துள்ளது. அமெரிக்க அட்மிரல் அத்துடன் நிற்கவில்லை இந்த மாதிரியான கொலைகள் தொடர்ந்து நடக்கின்றன என்றார். இதனால் இரு நாடுகளுக்குமிடையிலான உறவு மோசமடைந்தது. பின் லாடனைக் கொல்ல வந்த அமெரிக்க கடற்படையின் சீல் பிரிவினர் பின் லாடன் தங்கி இருந்த மாளிகையில் இருந்து பல கணனிகளையும் கைப்பேசிகளையும் எடுத்துச் சென்றனர். அதிலிருந்து பாக் படையினர் மற்றும் உளவுத் துறையினருக்கும் தீவிரவாதிகளுக்கும்இடையிலான தொடர்புகள் பற்றிய தகவல்களை அமெரிக்கா பெற்றுக் கொண்டது. அவற்றின் அடிப்படையில் பாக்கிஸ்தான் அரசு தீவிரவாதிகளுடன் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமெரிக்கா வற்புறுத்தி வந்தது.
ஹிலரி கிளிண்டனின் பாக்கிஸ்தானியப் பயணம்
2011 மே 2-ம் திகதி பின் லாடன் கொல்லப்பட்ட சில வாரங்களுக்குள் அமெரிக்க அரசுச் செயலர் ஹிலரி கிளிண்டன் பாக்கிஸ்தானிற்கு சென்றது பலரையும் வியப்பில் ஆழ்த்தியது. பாக்கிஸ்த்தானில் உள்ள இசுலாமியத் தீவிரவாதிகளின் பட்டியல் பாக்கிஸ்தானிடம் ஹிலரியால் கையளிக்கப் பட்டது. பின் லாடனின் உதவியாளர் ஐமன் அல் ஜவகிரி, தலிபான் தலைவர் முல்ல, தலிபான் தளபதி ஒமர் சிராஜ் ஹக்கானி, லிபிய அல் கெய்தாத் தலைவர் அதியா அப்துல் ரஹ்மான் போன்றவர்கள் அப்பட்டியலில் இருந்தனர். இப்பட்டியல் கையளிக்கப் பட்டதன் நோக்கம் இவர்களை நீ பிடிக்கிறாயா அல்லது நான் பிடிக்கட்டுமா என்பதுதான் என்று சொல்லப்பட்டது. அமெரிக்காவின் பாக்கிஸ்த்தானுக்கான இரண்டு பில்லியன் டொலர் உதவி பின்னர் இடை நிறுத்தப் பட்டது. பாக்கிஸ்த்தானின் எல்லைக்குள் நுழைந்து அமெரிக்கப் படையினர் இசுலாமியத் தீவிரவாதிகளுக்கு எதிராக தாக்குதல் நடத்துவதற்கு பாக்கிஸ்த்தனிற்கு அமெரிக்கா கொடுக்கும் கைக்கூலியே பலமில்லியன் டொலர்கள் உதவியாக இருந்தது. அமெரிக்கா பாக்கிஸ்தானுக்கான உதவிகளை நிறுத்தினால் தாம் தமது படைகளை ஆப்க்கனிஸ்த்தான் எல்லைகளில் இருந்து விலக்க வேண்டி வரும் என்று பாக்கிஸ்தானிய பாதுகாப்பு அமைச்சர் அஹமட் முக்தார் அமெரிக்காவை 12-07-2011இலன்று மிரட்டினார். ஆனால் பாக் பாதுகாப்புத் துறை அமைச்சரிலும் பார்க்க படைத்துறைத் தளபதிகள் அதிக அதிகாரம் உள்ளவர்கள். 2011 ஜூலை 11-ம் திகதி பாக்கிஸ்த்தானுக்குள் ஏவப்பட்ட மூன்று ஏவுகணைகள் பல தீவிரவாதிகளைக் கொன்றன. இவை ஆப்கானிஸ்த்தான் எல்லையில் உள்ள அமெரிக்கப் படைகளால் ஏவப்பட்டிருந்திருக்கலாம்.
எல்லாத் தீவிரவாதிகளுக்கும் எதிரான கொள்கை வெற்றி தருமா?
பாக்கிஸ்த்தான் அரசையும் அதன் படையினரையும் பொறுத்த வரை அங்குள்ள தீவிரவாத அமைப்புக்கள் பல தேவையானவையாகவே இருக்கின்றன. பாக்கிஸ்த்தானின் வெளியுறவில் இவை பெரும் பங்கு வகிக்கின்றன. ஆனால் இப்போது அமெரிக்கா, சீனா, இந்தியா உட்படப் பல தரப்பில் இருந்தும் நெருக்குதல்கள் வருவதால் பாக்கிஸ்த்தான் தனது கொள்கையில் மாற்றம் ஏற்படுத்தியுள்ளதாக வெளிப்படுத்துகிறது. பாக்கிஸ்த்தானின் செல்லப் பிள்ளையாகக் கருதப்படும் ஹக்கானி அமைப்பு உட்பட எல்லாத் தீவிரவாத அமைப்புக்களிற்கும் எதிராக படைநடவடிக்கை எடுப்பதாகப் பாக்கிஸ்த்தான் சொல்கின்றது. பாக் படையினரின் நடவடிக்கைகளை அமெரிக்கப் படைநிபுணர்கள் நெறிப்படுத்துவதாகச் சொல்லப்படுகின்றது. ஹக்கானி அமைப்பு பாக்கிஸ்த்தானில் தாக்குதல் நடாத்துவதில்லை. ஹக்கானி அமைப்பினர் பாக் அரசுக்கும் மற்ற தீவிரவாத அமைப்புக்களுக்கும் அதிலும் முக்கியமாக தலிபான் அமைப்பினருக்கும் இடையில் ஒரு இணைப்புப் பாலமாகச் செயற்படுகின்றனர். ஆப்கானிஸ்த்தானில் இந்தியர்களுக்கு எதிராகப் பல தாக்குதல்களை நடாத்தியது. அல் கெய்தா இந்தியாவிற்கு எதிராகச் செயற்படுவதில்லை. லக்சர் இ தொய்பா அமைப்பு இந்தியாவிற்கு எதிராகச் செயற்படுதையே தலையாய பணியாய்க் கொண்டுள்ளது. பாக்கிஸ்த்தான் படையினர் போதிய முன்னறிவித்தல் கொடுத்துவிட்டே தமது தாக்குதல்களைத் தொடுத்துள்ளனர். வடக்கு வஜிரிஸ்த்தான் பிரதேசத்தில் இருந்து பொதுமக்கள் வெளியேற வேண்டும் என்பதற்காக முன்னறிவித்தல் கொடுக்கப்பட்டது. ஆனால் பல போராளிகள் தமது தாடிகளை மழித்து விட்டுப் பொதுமக்களோடு தாமும் பாதுகாப்பாக வெளியேறிவிட்டனர். வஜிரிஸ்த்தான் பகுதியில் அணைக்காலங்களாக சலூன்காரர்களுக்கு நல்ல வருமானம் என்கின்றது பாக்கிஸ்த்தானிய ஊடகம் ஒன்று. பாராபட்சமின்றி எல்லா அமைப்புக்களையும் ஒழிக்கப் போவதாக பாக்கிஸ்த்தானியப் படைகள் சொல்வது நம்பத்தகுந்ததாக இல்லை. ஹக்கானி அமைப்பின் தலைவருக்கு ஏற்கனவே பாக் படையினர் தமது நடவடிக்கை பற்றித் தெரிவித்து விட்டனர் எனச் சொல்லப்படுகின்றது. 2009-ம் ஆண்டும் பாக் படைகள் வஜிரிஸ்த்தானில் இருந்த போராளிகளுக்கு எதிராக ஒரு படை நடவடிக்கையை மேற் கொண்டன. அது தீவிரவாதத்தை ஒழிக்க வில்லை. அது போலவா இதுவும்?