இந்தியாவில் சரக்குகளுக்கான போக்கு வரத்துச்
செலவு சீனாவிலும் பார்க்க மூன்று மடங்குக்கு மேல் அதிகம். போக்குவரத்துக்கு
எடுக்கும் காலமும் அதிகம். இந்தியா தனது மின் உற்பத்திக்கு நிலக்கரியைப் பெரிதும்
நம்பியிருக்கின்றது. இந்திய மின் உற்பத்தியில் 69விழுக்காடு நிலக்கரியில் இருந்து
பெறப்படுகின்றது. நிலக்கரிக்கான போக்குவரத்துச் செலவு அதிகம்
என்ற படியால் மின் உற்பத்திச் செலவு இந்தியாவில் அதிகம். நிலக்கரிப்
போக்குவரத்தில் அதிக செலவு ஏற்படுவதால் இந்தியாவின் மின் உற்பத்திச் செலவு
சீனாவுடன் ஒப்பிடுகையில் அதிகமாக இருக்கின்றது. சீனாவில் மின் உற்பத்திச் செலவு 7
என்றால் இந்தியாவில் 12 ஆக இருக்கின்றது.
இந்தியாவில் மின்சாரத்திற்கான செலவும்
போக்குவரத்திற்கான செலவும் அதிகம் என்ற படியால் இந்தியாவில் எல்லாப் பொருட்களின்
உற்பத்திச் செலவு சீனாவுடன் ஒப்பிடுகையில் அதிகமாகவே இருக்கின்றது.
அந்நியனே அந்நியனே வா வா
உலகச் சந்தையில் ஏற்றுமதிக்காகவும் அந்நிய
முதலீட்டை கவர்வதிலும் சீனாவுடன் போட்டி போடுவதற்கு போக்குவரத்துச் செலவையும்
மின்சார உற்பத்திச் செலவையும் இந்தியா குறைக்க வேண்டும். உதாரணத்திற்குப்
பார்ப்போமானால் உருக்கு உற்பத்திச் செலவு இந்தியாவில் சீனாவிலும் பார்க்க 3 மடங்கு
அதிகம். டவோஸ் மாநாட்டில் இந்தியத் தலைமை அமைச்சர் நரேந்திர மோடி உரையாற்றும் போது
2025-ம் ஆண்டு இந்தியப் பொருளாதாரம் இரண்டு மடங்காகும் என்றார். அதற்கு
ஆண்டொன்றிற்கு 10 விழுக்காடு வளர்ச்சியை இந்தியப் பொருளாதாரம் எட்ட வேண்டும்.
இந்திய பாதிட்டு குறையை 3 விழுக்காடாக்க வேண்டும் என்பது இந்திய அரசின் திட்டம்.
2019 ஆண்டு பொதுத் தேர்தலை எதிர் கொள்ளும் ஆட்சியாளர்கள் தமது வெற்றியை உறுதி
செய்ய அரச செலவீனங்களை அதிகரிக்க வேண்டும். அதிகரிக்கும் எரிபொருள் விலையும் அரச
நிதியில் பாதிப்பை ஏற்படுத்தலாம். இதனால் சாகர்மாலத் திட்டத்திற்கு அதிக அளவு
வெளிநாட்டு முதலீடு தேவைப்படும். உலகின் பல நாடுகளில் 2017-ம் ஆண்டின் பொருளாதார
வளர்ச்சி 2016-ம் ஆண்டின் பொருளாதார வளர்ச்சியிலும் பார்க்க அதிகரித்திருக்கையில்
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறைவடைந்திருந்தது. அந்நிய முதலீட்டிற்கு சிவப்பு
நாடா நீக்கப்பட்டு சிவப்புக் கம்பளம் விரிக்கப்படும் என்ற வழமையான சுலோகத்தையும்
டவோஸில் முன்வைக்கத் தவறாவில்லை. இந்தியாவிற்குப் பயணிப்பது, முதலிடுவது, உற்பத்தி
செய்வது ஆகியவை இலகுபடுத்தப் பட்ட்டுள்ளது என்றார் மோடி அங்கே.
சீனா எவ்வழி இந்தியா அவ்வழி
சீனா தனது பொருளாதார அபிவிருத்தியையும்
சீர்திருத்தத்தையும் தனது கிழக்குக் கரையோரப் பகுதியில் ஆரம்பித்தது. அங்கு அந்நிய
முதலீட்டை ஊக்குவித்தது. அங்கிருந்து சீனா தனது ஏற்றுமதியை அதிகரித்து தொடர்ந்து
பல பத்தாண்டுகளாக பொருளாதார வளர்ச்சியை ஈட்டிய ஒரே ஒரு நாடு என்று பாராட்டப்படும்
நாடாகியது. பல கோடி மக்கள் வறுமையில் இருந்து விடுவிக்கப்பட்டார்கள். தனது
கரையோரத்தை பயன் படுத்தி தனது பொருளாதாரத்தை மேம்படுத்திய பின்னர் உலகெங்கும் தனது
விநியோகத்தையும் கொள்வனவையும் தங்கு தடையின்றி நடக்க முத்துமாலைத் திட்டத்தையும்
பட்டுப்பாதைத் திட்டத்தையும் நிறைவேற்றிக் கொண்டிருக்கின்றது சீனாவின் வழியில்
இந்தியாவும் சாகர்மாலத் திட்டத்தின் மூலம் பயணிக்க முயல்கின்றது.
வாஜ்பாயின் கனவுத் திட்டம்
கடற் போக்குவரத்துச் செலவு நிலப் போக்குவரத்துச்
செலவிலும் மிகவும் குறைவானதே. சாகர்மாலாத் திடத்தின் முக்கிய நோக்கம் இந்தியாவின்
போக்குவரத்துச் செலவையும் மின் உற்பத்திச் செலவையும் குறைத்து அந்நிய முதலீட்டை
கடலோரப் பகுதிகளில் அதிகரித்து பொருளாதார உற்பத்தியைத் தூண்டுவதே.2003-ம் ஆண்டு
இந்தியாவில் அப்போது ஆட்சியில் இருந்த அடல் பிகாரி வாஜ்பாய் தலைமையிலான பாரதிய
ஜனதாக் கட்சியால் சாகர்மாலத் திட்டம் இரகசியமாக தீட்டப்பட்டது. பின்னர் ஆட்சிக்கு
மன்மோகன் சிங் தலைமையில் வந்த காங்கிரசுக் கட்சியும் சாகர்மாலத் திட்டம் பற்றிய
இரகசியத்தைப் பேணியது. இரண்டு இந்தியப் பேரினவாதக் கட்சிகளும் சாகர்மாலத் திட்டம்
மாநிலங்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது என்பதால் அதை இரகசியமாக
வைத்திருந்தன.
130பில்லியன் டொலர் திட்டம்
சாகர் மாலா என்பது கடல் மாலை எனப்
பொருள்படும். இதற்கான மொத்தச் செலவு 130பில்லியன் அமெரிக்க டொலர்கள் அல்லது 8,000,000மில்லியன் இந்திய ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் 150,000 நேரடி வேலை வாய்ப்புக்களும் அதிலும் பல மடங்கான மறைமுக
வேலைவாய்ப்புக்களும் உருவாகும் என எதிர்பார்க்கப்பட்கின்றது. 7517 கிலோ மீட்டர்
கடற்கரையைக் கொண்டது இந்தியா. இந்தியாவின் 12 பெரும் துறைமுகங்களும் மற்றும்187 துறைமுகங்களும் இந்தியப்
பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
இத்திட்டம் பாவனையாளர்-சார்
பொருளாதாரக் கேந்திரோபயத் திட்டம் எனச் சொல்லப்படுகின்றது. ஏற்கனவே உள்ள
துறைமுகங்களை பெரிது படுத்துதலும் புதிதாகப் பல துறைமுகங்களை உருவாக்குவதும் இதன்
நோக்கமாகும். இந்தியாவின் மேற்கில் குஜராத் மாநிலத்தில் இருந்து கிழக்கில் ஒரிசா
மாநிலம் வரை இத்திட்டம் நீண்டிருக்கின்றது. ஆறுக்கு மேற்பட்ட பாரிய துறைமுகங்கள்
பதின்னாங்கிற்கு மேற்பட்ட கடற்கரைப் பொருளாதார வலயங்கள் உருவாக்கப்
படவிருக்கின்றன.
1. துறைமுகங்களை நவீனமயப்படுத்தல், 2. துறைமுகங்களை தொடர்புபடுத்தல்
3. துறைமுகம்-சார் அபிவிருத்தி, 4. கடற்கரை சமூக அபிவிருத்தி 5. ஆற்றுவழிப் போக்குவரத்துக்கள்
உருவாக்கபட்டு அவற்றைத் துறைமுகங்களுடன் இணைத்தல் ஆகியவை சாகர்மாலத் திட்டத்தின்
முக்கிய அம்சங்களாகும். இதில் பழைய துறைமுகங்களை சீரமைத்தல்,
புதிய துறைமுகங்களை உருவாக்குதல், துறைமுகங்களிடையேயான
இணைப்பு, துறைமுகங்களையும் பெரு நகரங்களையும் இணைத்தல்
ஆகியவையும் உள்ளடங்கும். இந்தியத் துறைமுகங்களை வெளிநாட்டுத் துறைமுகங்களுடன்
தொடர்பு படுத்துதல் ஆகியவையும் அடங்கும். தொடருந்துப் பாதைகளை துறைமுகங்களுடன்
இணைக்கப்படும். விமானப் போக்குவரத்தும் துறைமுங்களுடன் தொடர்பு படுத்தப்படும்.
குளிர்பதன வசதிகள், சேமிக்கும் வசதிகள் போன்றவை
உருவாக்கப்படும்.
சீனாவின் பாதைகள் பல
சீனா தான் 2013-ம் ஆண்டு ஆரம்பித்த பட்டுப்பாதைகளை Belt and Road,
One Belt One Road எனப் பல பெயர்களால் அழைத்தாலும் அதன் நோக்கம் உலக வர்த்தகத்திலும் போக்கு வரத்திலும்
தனது ஆதிக்கத்தை நிலை நாட்டுவதே. பொதுவாக இதைப் புதிய பட்டுப்பாதை என பலரும் அழைக்கின்றார்கள்.
சீனாவின் பழைய பட்டுப்பாதை ஆசியாவில் உள்ள நாடுகளிற்கும் மத்திய தரைக்கடலை ஒட்டிய நாடுகளிற்கும்
சீனாவின் பட்டை விற்பனை செய்வதையே முக்கிய நோக்கமாகக் கொண்டது. அந்தப் பெரும் பாதை
வலையமைப்பிற்கு பாதுகாப்பு வழங்கக் கூடிய சிறந்த கடற்படையையும் சீனா கொண்டிருந்தது.
சீனாவின் புதிய பட்டுப்பாதை இரு வழிகளைக் கொண்டுள்ளது. ஒன்று கடல்வழியானது மற்றது தரைவழியானது.
இது ஆசியா ஐரோப்பா தென் அமெரிக்கா ஆகிய கண்டங்களை உள்ளடக்கியது. துறைமுகங்கள், பெருந்தெருக்கள், தொடருந்துப்பாதைகள், பொருளாதார வலயங்கள், எரிபொருள் வழங்கு குழாய்கள்
போன்ற பலவற்றைக் கொண்டது. சீனா 124பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமாக புதிய
பட்டுப்பாதைத் திட்டத்திற்கு முதலீடு செய்யவுள்ளது. இதில் ஒன்பது பில்லியன் டொலர்கள்
வளர்முக நாடுகளின் அபிவிருத்திக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. தனது விநியோகம் மற்றும் கொள்வனவிற்கான
பாதைகளின் பாதுகாப்பும் சீனா வெளியில் சொல்லாத திட்டம் என பல ஐரோப்பிய அரசுறவியலாளர்கள்
கருதுகின்றனர். புதியபட்டுப் பாதையில் தனது படைத்தளங்களையும் சீனா நிறுவும் என அவர்கள்
எதிர்பார்க்கின்றனர். ஐரோப்பியப் பெரு நிலப்பரப்பில் சீனாவின் ஆதிக்கத்தை அதிலும் படைத்துறை
ஆதிக்கத்தை ஒரு சில நாடுகள் மட்டுமே ஆதரிக்கலாம்.
இந்தியாவின் 1200இற்கு மேற்பட்ட கடற்கரையோரத்
தீவுகள் வெளிநாட்டவர்களிடம் ஒப்படைக்கப்படலாம். 1450கடல் வழிப் பாதைகள்
உருவககப்படும். 12இற்கு மேற்பட்ட சுட்டிகை நகரங்கள் (Smart Cities) உருவாக்கப்படவும் திட்டமிடப்பட்டுள்ளது.
பனிபடர்ந்த பட்டுப்பாதை
சீனா கடல்வழிப் பட்டுப்பாதை, தரைவழிப்பட்டுப்பாதை ஆகிய இரண்டையும் முன்னெடுக்கும் சீனா
துருவப்பட்டுப்பாதை என மூன்றாவது பட்டுப்பாதையையும் உருவாக்கும் வெள்ளை அறிக்கையை
2018 ஜனவரி 26-ம் திகதி வெளியிட்டுள்ளது. புவி வெப்பமாவதால் வட துருவத்தில் உள்ள
பனி உருகி அதனூடாக கப்பல் போக்குவரத்துச் செய்யக் கூடிய நிலை தற்போது
உருவாகியுள்ளது புவியின் வட முனையான ஆர்க்டிக் வளையத்தில் கனடா, டென்மார்க், பின்லாந்து, ஐஸ்லாந்து,
நோர்வே, இரசியா, சுவீடன்
ஐக்கிய அமெரிக்கா ஆகிய நாடுகள் எல்லையைக் கொண்டிருந்தாலும் அதில் பெரும் பகுதி
உலகிலேயே பெரிய நிலப்பரப்பைக் கொண்ட இரசியாவுடையதே. ஆர்க்டிக் வளையத்தினூடாகச்
சீனா தனது ஏற்றுமதியை வட ஐரோப்பாவிற்கும் வட அமெரிக்காவுற்கும் மிகக் குறுகிய
தூரக் கப்பற் பயணத்தால் செய்ய முடியும். இந்தத் திட்டத்தை நிறைவேற்ற சீனா
இரசியாவுடன் நெருங்கிய ஒத்துழைப்பைச் செய்ய வேண்டி வரும் அது இந்தியாவிற்கு சவாலாக
அமையும்.
சீனாவின் இனிய கனவு இந்தியாவின் நித்திரையைக்
கெடுக்கிறது.
சீனாவின் புதிய பட்டுப்பாதையான ஒரு வளையம் ஒரு
பாதை திட்டம் உலக அரங்கில் சீனாவின் ஆதிக்கத்தை பொருளாதார ரீதியாக உறுதி
செய்வதாகும். அதன் குறுங்காலத் திட்டம் சீனாவில் மிகையாக உள்ள உற்பத்திச்
சாதனங்களை பயன் படுத்தி பல நாடுகளின் உட்கட்டுமானங்களை அபிவிருத்தி செய்து அந்த
நாடுகளை சீனாவுக்கு கடன் படச் செய்தல். நடுத்தர காலத் திட்டம் அத்திட்டத்துக்குள்
வரும் நாடுகளை தன்னைச் சார்ந்த பொருளாதாரக் கட்டமைப்புக் கொண்ட நாடுகளாக
மாற்றுவதும் அங்குள் வளங்களை தனது தேவைகளுக்குப் பயன்படுத்துவதும். நீண்ட
காலத்திட்டம் அந்த நாடுகளில் படைத்துறை ஆதிக்கத்தைச் செலுத்துவது. இன்னும் சில
ஆண்டுகளில் சீனாவிலும் பார்க்க அதிக அளவு மக்கள் தொகையைக் கொண்ட நாடாக
மாறவிருக்கும் இந்தியா தனது நாட்டு மக்களைப் பராமரிக்கக் கூடிய ஒரு பொருளாதாரத்தை
உருவாக்க உலகச் சந்தையில் தனது ஏற்றுமதியைக் கணிசமான அளவு அதிகரிக்க வேண்டும்.
அதைச் செய்ய இந்தியாவால் முடியாமல் போகும் நிலையை சீனா ஏற்படுத்தினால் இந்தியா
உலகிலேயே அதிக அளவு வறிய மக்களைக் கொண்ட நாடாக மாறலாம். அது இந்தியாவில் பல
உள்நாட்டுக் குழப்பங்களை உருவாக்கவும் நாடு பிளவுபடும் ஆபத்தை அதிகரிக்கவும்
செய்யும்.
இரசியாவின் ஆர்க்டிக் ஆதிக்கம்
வட துருவப் பகுதிகளில் கப்பலோட்டுவதில் இரசியா
அமெரிக்காவிலும் பார்க்க சிறந்து விளங்குகின்றது. ஆர்க்டிக் பிராந்தியத்தில் உள்ள
எரிபொருள் வளங்களையும் கனிம வளங்களையும் மேற்கு நாடுகள் சூறையாடமல் தடுப்பதற்கு
இரசியா பல நடவடிக்கைக்களை எடுக்கின்றது. வட துருவத்தினூடான கப்பல் போக்குவரத்தில்
மற்ற நாடுகள் அக்கறை செலுத்துவதை இரசியா அறியும். வடதுருவத்தின் ஆர்க்ரிக்சார்
நீர் பகுதியில் (subarctic waters) தன் ஆதிக்கத்தை நிலை நாட்ட பரென்ஸ் கடற்பகுதிக்கு 2018 ஜன்வரி இறுதியில் தனது போர்க்கப்பல்களை அனுப்பி அங்கு ஆட்டிலறி பயிற்ச்சிகளையும் ஏவுகணை எதிர்ப்புப் பயிற்ச்சிகளையும் செய்தது. இரசியாவின் கடல் கேந்திரோபாயத் திட்டத்தில் ஆர்க்டிக் பிராந்தியத்தில் இரசிய நலன்களைப் பாதிக்கக் கூடிய வகையில் அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் தமது வலிமையைப் பெருக்க முனைப்புக் காட்டுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
திசைமாறும் நட்புகள்
சீனாவும் இரசியாவும் துருவப் பட்டுப்பாதையில் கை
கோர்க்கும் போது அது இந்தியாவை அமெரிக்காவை நோக்கி மேலும் நகர்த்தும். ஏற்கனவே
இந்தியாவும் அமெரிக்காவும் Logistics Exchange Memorandum of Agreement
(LEMOA) என்னும் உடன்படிக்கை மூலம் இந்தியாவில் அமெரிக்கப் படைகள்
தமது படைக்கலன்களைப் பராமரிக்கவும் திருத்துதல் வேலைசெய்யவும் வழங்குதல்களைப்
பெறவும் முடியும். இந்தியாவின் சாகர்மாலா திட்டத்தில் ஈடுபட்டுள்ள உற்பத்தி
நிறுவனங்களையும் பாதுகாக்க வலிமை மிக்க கடற்படையைக் கொண்ட அமெரிக்காவின் உதவியை
இந்தியா நாட வேண்டியிருக்கும்.
சாகர்மாலா மாநில அதிகாரங்களைச் சாகடிக்குமா?
இந்தியாவின் கடற்கரை முழுவதும் நடுவண் அரசின்
கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்படும். இந்தியக் கடலோரம் வாழும் 25 கோடி மீனவர்களின்
வாழ்வாதாரங்கள் அழிக்கப்படும். கடலோரப் பகுதிகளில் இருந்து மீனவர்கள்
வெளியேற்றப்பட்டு பிற மாநிலத்தவர்களும் பிற நாட்டவர்களும் குடியேற்றப்படுவார்கள்.
தமிழர்களின் இறைமைக்கு ஆபத்து
. இந்துத்துவாவின் கொள்கை மாநிலங்களின்
அதிகாரங்களைப் பறிப்பதாகும். அதற்கான ஒரு கருவியாக சாகர்மாலா திட்டம்
பாவிக்கப்படலாம்.
தமிழ்நாட்டுக் கடற்கரை முழுவதும் நடுவண் அரசின்
கைக்குப் போவதாலும், தமிழ்நாட்டுக் கரையோரங்களில்
பிறநாட்டவர்களும் பிற மாநிலத்தவர்களும் குடியேற்றப்படுவதாலும், படைத்தளங்கள் அமைக்கப்படுவதாலும் தமிழர்களின் இறைமைக்கு ஆபத்து.
தமிழர்களின் கவசமாக இருப்பவர்கள் கரையோரங்களில் வாழும் மீனவர்கள். அவர்கள் முற்றாக
இல்லாமல் செய்யப்பட்டு மீன் பிடித்துறை முழுவதும் கூட்டாண்மை (corporate) நிறுவனங்களுக்குத் தாரைவார்க்கப்படும் ஆபத்தும் உண்டு
அதானிகளின் அடிமைகளாக தமிழர்கள்
பாரதிய ஜனதா ஆட்சியாளர்களின் முதலாளிகளான அதானி போன்றோரினதும் அவர்களுடன்
இணைந்து செயற்படும் வெளிநாட்டு கூட்டாண்மைகளினதும் பணியாளர்களாக தமிழர்கள் மாறி
அவர்களின் நிரந்தர அடிமைகளாக தமிழர்கள் ஆக்கப்படலாம். பிரித்தானிய ஆட்சியின் போது
தமிழ்நாட்டுத் தமிழர்களின் நீர்வளம் மிக்க நிலங்கள் பறிக்கப்பட்டு தெலுங்கு
ஜமீந்தார்களிடம் ஒப்படைக்கப்பட்டதால் தமிழர்கள் தம் வாழ்வாதரங்களை இழந்து
உலகெங்கும் உள்ள பிரித்தானியப் பெருந்தோட்டங்களில் கூலி வேலை செய்ய வேண்டிய நிலை
ஏற்பட்டது.
சாகர்மாலா தமிழ்த்தேசியத்திற்கு
ஆபத்தான ஒன்றே!