புவிசார் அரசியல் என்பது பரவலாகப் பாவிக்கப்படும் சொற்பதமாகும். இதற்கான
வரைவிலக்கணத்தை அறிய கடந்த ஐந்து ஆண்டுகளாக முயற்ச்சி செய்து கொண்டிருக்கின்றேன். அது
தொடர்ச்சியாக மாறிக்கொண்டே இருக்கின்றது. சிலர் இது ஒரு நாட்டின் பூகோள அமைவால் உருவாகும்
அரசியல் என மிகவும் குறுகலான வரைவிலக்கணத்தைக் கொடுக்கின்றனர். அண்மைக்காலங்களாக நாம்
கண்ணுக்குத் தெரியாத நச்சுக்கிருமி உலக அரசியலையும் பொருளாதாரத்தையும் ஆட்டிப்படைப்பதைப்
பார்த்துக் கொண்டிருக்கின்றோம். அதனால் நச்சுக்கிருமிகள் புவிசார் அரசியலில் ஒரு காரணி
எனச் சொல்வதை விட முடியாது. பெருந்தொற்று நோய்கள் பரவுவது அதிகரித்து வரும் சிலையில்
நாடுகளுக்கிடையில் உள்ள மருத்துவ மற்றும் சுகாதார ஒத்துழைப்பு புவிசார் அரசியலில் பங்கு
வகிக்கின்றது என்பதை நாம் ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும்.
மாறிக்கொண்டே
இருக்கும் புவிசார் அரசியல்
21-ம்
நூற்றாண்டில் புவிசார் அரசியலில் நீர்ப்பங்கீடு பெரும் பங்கு வகிக்கவிருக்கின்றது.
பல நாடுகள் ஒரு நதியைப் பங்கிடுவதிலும் ஒரு நாட்டில் உள்ள வெவ்வேறு இனக்குழுமங்கள்
நீர் வளங்களை இட்டும் நீர் வழங்கலையும் இட்டும் மோதிக்கொள்ளும். ஏற்கனவே சூழல் பாதுகாப்பு
புவிசார் அரசியலில் பங்கு வகிக்கத் தொடங்கிவிட்டது. சீனா தனது ஏற்றுமதி – இறக்குமதிக்கான
பாதையில் அதிக கவனம் செலுத்துவது பெரிய புவிசார் அரசியல் பிரச்சனையை உருவாக்கி விட்டது.
தென் அமெரிக்காவின் புவிசார் அரசியலில் பெரும் பிரச்சனையாக இருப்பது போதைப் பொருள்
உற்பத்தி. இன்று தாமாகவே நாடுகள் கடந்து செல்லும் வெட்டுக்கிளிகள் நாளை ஒரு புவிசார்
அரசியல் கருவியாகப் பாவிக்கப்பட்டு செயற்கையாவெ பரவச் செய்யப்படலாம்.
புவிசார்
அரசியலைப் பாதிக்கும் காரணிகள்:
1. ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் உள்ள மக்களின் அரசியல் ஆதிக்கம்
2. அக்குறிப்பிட்ட நிலப்பரப்பில் உள்ள பொருளாதார வளங்கள் மற்றும் மூல
வளங்கள் ச்மீதான ஆதிக்கத்தை யார் செலுத்துவது என்ற போட்டி.
3. அந்த நிலப்பரப்பில் உள்ள அரசு அல்லது அரசுகள்
தொடர்பாக அந்த நிலப்பரப்புடன் தொடர்புடைய அரசுகளின் வெளிநாட்டுக் கொள்கை.
4. அந்த
நிலப்பரப்பில் உள்ள அரசில்லாத அமைப்புக்களும் படைக்கலன் ஏந்திய குழுக்கள்.
5, அந்த
நிலப்பரப்பில் செயற்படும் குடிசார் சமூகங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள்.
6. அந்த
நிலப்பரப்பில் உள்ள தலைவர்களின் தலைமைத்துவப் பண்பு
7. அந்த
நிலப்பரப்பில் உள்ள மக்களின் மொழி, கலாச்சாரம், மதம், மக்கள் தொகைக்கட்டமைப்பு.
இதையே சுருக்கமாகச் சொல்வதானால்:
ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் உள்ள மக்கள், மதம், கலாச்சாரம், வளம் தொடர்பான அங்குள்ள
அதிகார மையங்களின் கொள்கைகளையும் தலைமைத்துவ ஆளுமைகளையும் அரசற்ற
அமைப்புக்களையும் அவற்றிற்கு இடையேயான உறவுகளையும் புவிசார் அரசியல் என அழைக்கப்படும்.
தமிழ்
அரசியல் அறிஞர்களும் கையாள்தலும்
எமது
அரசியல் அறிஞர்களுக்கு தெரிந்த புவிசார் அரசியல் என்பது பாக்கிஸ்த்தான் வந்தால் இந்தியா
வரும், இந்தியா வந்தால் சீனா வரும், சீனா வந்தால் அமெரிக்கா வரும், அமெரிக்கா வந்தால்
இரசியா வரும் என்பதாகும். அத்துடன் அவர்கள் திருகோணமலைத் துறைமுகத்தையும் இந்து மாக்கடலின்
வர்த்தகப் போக்குவரத்தின் முக்கியத்துவத்தையும் சொல்லுவாரகள். இந்த அரசியல் அறிஞர்களின்
கருத்துக்கள் நிலையானதாகவோ அல்லது உறுதியானதாகவோ இல்லை. அவர்களின் கருத்துக்கள் இப்படி
மாறிக் கொண்டு போகின்றது:
·
இந்தியா இலங்கையில் தமிழர்களுக்கு ஒரு தனிநாடு பெற்றுத்தரும்.
·
இந்தியா தமிழர்களுக்கு இணைப்பாட்சி பெற்றுத்தரும்
·
இந்தியா தமிழர்களுக்கு அதிகாரப் பரவலாக்கம் பெற்றுத் தரும்
·
இந்தியா தமிழர்களைக் கைவிடாது.
·
இந்தியாவை எதிர்த்து ஒன்றும் பயனில்லை.
ஆனால்
இந்தியா தொடர்ச்சியாக பாக்கு நீரிணைக்கு இரு புறமும் உள்ள தமிழர்களுக்கு விரோதமான செயற்பாடுகளை
தொடர்ந்து முன்னெடுத்து வரும் நிலையில் இவர்களால் இந்தியாவிற்கு சார்பாக அறிவு சார்ந்த
விவாதங்களை முன்வைக்க முடியாத நிலையில் ஒரு புதிய விவாதத்தை முன் வைக்கின்றனர். அதுதான்
நாம் “இந்தியாவை கையாள வேண்டும்”. தமிழர்களை இந்தியாவின் நிகழ்ச்சி நிரலுக்குள்
வைத்திருக்க இந்தியாவிற்கு சார்பானவர்கள் முன் வைக்கும் விவாதம்தான் இந்த கையாள்தல்
என்ற வாசகம்.
உலக அரங்கில்
கையாள்தல் கொள்கை
முன்னாள்
அமெரிக்க அதிபர்களான பில் கிளிண்டனும் பராக் ஒபாமாவும் அமெரிக்காவிற்கு எதிரான ஆட்சியாளர்களுடன்
மோதலை தவிர்த்து அவர்களை கையாளுதல் என்ற எண்ணத்தை தமது வெளியுறவுக் கொள்கையில் பாவித்தனர்.
அமெரிக்காவிற்கு ஒவ்வாத சர்வாதிகார ஆட்சியாளர்களுடன் முரண்படாமல் “கையாள்தல்” செய்ய
வேண்டும் என்பது அவர்களது நோக்கமாக இருந்தது. அமெரிக்காவிற்கு
ஒவ்வாத அரசுகளை அயோக்கிய அரசுகள் எனச்
சொல்லி முன்னாள் அமெரிக்க அதிபர்களான இரண்டு
ஜோர்ஜ் புஷ்களும் ஒதுக்கியது போல் ஒதுக்காமல் அவர்களுடன்
இருதரப்புக்கும் நலன் தரக்கூடிய வகையில் செயற்படுவதை
கையாளும் கொள்கை எனப்பட்டது. அவர்களைப் பொறுத்தவரை கையாள்தல் என்பது இறுதி இலக்கல்ல,
இலக்கை நோக்கிய நகர்வு. மியன்மார் படைத்துறையினரை அவர் கையாண்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்ட
ஆங் சான் சூக்கியை ஆட்சிப் பதவியில்
அமர வழிவகுத்தார். கியூபா, சீனா, வட கொரியா, ஈரான் போன்ற
நாடுகளுடன் செயற்படுத்திய கையாள்தல் கொள்கை போதிய பயனளிக்கவில்லை. பில் கிளிண்டனின்
வெளியுறவுத்துறையில் பணி புரிந்த ரொபேர்ட் சூட்டிங்கர் கையாளுதல் என்ற சொல் மோசமாக
வரையறைச் செய்யப்பட்டு அளவிற்கு அதிகமாகப் பாவிக்கப்படுகின்றது என்றார். மிக உயர்ந்த பேரம்
பேசல் வலுவில் உள்ள அமெரிக்காவிலேயே கையாளுதல் சரியாகப் பயன்படுத்தப் படவில்லை என்றால்
தமிழர்கள் கையாள்தல் கொள்கையைப் பாவித்து தமது நிலையை உயர்த்துவது எப்படி?
பரந்த
அறிவற்ற அரசியலறிஞர்கள்
ஈழத்
தமிழர்களைச் சூழவுள்ள புவிசார் அரசியலைப் பார்த்தோம் என்றால் சீனா இலங்கையை தனது பிடிக்குள்
வைத்திருக்க முயற்ச்சிக்கின்றது என்பது முதன்மையான உண்மை. அதை எதிர்க்க ஈழத் தமிழர்களை
இந்தியாவும் அமெரிக்காவும் தனித்தனியாகவோ இனைந்தோ பாவித்து இலங்கைமீது அழுத்தம் கொடுக்கும்.
அதை தமிழர்கள் வாய்ப்பாகப் பயன் படுத்தி இலங்கை அரசு தமிழர்களுக்கு உரிமைகளை வழங்க
அழுத்தம் கொடுக்கச் சொல்லி இலங்கை வாழ் தமிழர்கள் இந்தியாவுடனும் அமெரிக்காவுடனும்
பேரம் பேசலாம் என சில அரசியல் அறிஞர்கள் சொல்கின்றார்கள். அவர்கள் வெறும் அரசியல் அறிஞர்கள்
மட்டுமே. புவிசார அரசியல் அறிஞர்கள் அல்லர். இலங்கையின் ஏற்றுமதியில் 60%இற்கு மேலானவை
வட அமெரிக்க மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகளிற்கு செல்கின்றது. இவற்றைத்தான் மேற்கு
நாடுகள் எனச் சொல்கின்றனர். இலங்கை மேற்கு நாடுகளுக்குப் பாதகம் ஏற்படும் வகையில் சீனாவுடன்
இணைய முடியாது. பொருளாதாரத் தடை கொண்டு வருவோம் என மேற்கு நாடுகள் அறிவித்தால் இலங்கை
தனது கொள்கையை மேற்கு நாடுகளுக்கு இசைவாக மாற்றுவதைத் தவிர வேறு வழியில்லை. சீனாவிற்கு
இலங்கை செய்யும் ஏற்றுமதி சிங்கப்பூருக்குச் செய்யும் ஏற்றுமதியிலும் குறைவானது. இலங்கை
தொடர்பான பொருளாதார அறிவுள்ள அரசியல் ஆய்வாளர்கள் மட்டுமே இலங்கையில் மேற்கு நாடுகளும்
சீனாவும் இடையிலான போட்டியில் மேற்கு நாடுகளின் வலிமையை உணர்ந்து கருத்துச் சொல்லக்
கூடியவர்களாக இருப்பார்கள்.
இலங்கையில்
சீனப் படைத்தளப் பூச்சாண்டி
இலங்கையில்
சீனா படைத்தளம் அமைக்கலாம் அல்லது அமைக்க முயற்ச்சிக்கின்றது என படைத்துறை அறிவில்லாதவரகள்
மட்டுமே ஆணித்தரமாக முன்வைக்கின்றனர். இந்தியாவின் ஏவுகணை வீச்சு எல்லைக்குள் இந்தியாவிற்கு
எதிரான நாடு படைத்தளம் அமைக்க மாட்டாது என்பதை
உணர்ந்து கருத்துச் சொல்வதற்கு உலகெங்கும் உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கும் புதிய
படைக்கலன்களைப் பற்றிய அறிவு தேவை. B-21, C-5 எனப்படுபவை நெடுஞ்சாலைகளா எனக் கேட்பவர்களால்
புவிசார் அரசியலை உணர்ந்து கருத்துச் சொல்ல முடியாது. அண்மையில் ஒரு காணொலிச் செய்தியில்
அமெரிக்காவின் லேசர் படைக்கலன்களுக்கு சீனா அஞ்சி நடுங்குகின்றது என செய்தி வெளியிட்டிருந்தது.
ஆனால் சீனாவிடமும் லேசர் படைக்கலன்கள் உள்ளன என்பதை அந்த காணொலித் தயாரிப்பாளர்கள்
அறிந்திருக்கவில்லை. இப்படிப்பட்ட அறிவாளிகள் நடுவில் தொலைநோக்கம் ஏதுமே இல்லாத தலைவகளின்
வழிகாட்டுதலுடன் தமிழர்கள் தங்கள் அரசியல் செயற்பாட்டை முன்னெடுக்க வேண்டியுள்ளது.
பிரித்தலும்
புகுத்தலும்
தமிழர்களின்
எதிரி நாடுகள் தமிழர்களின் படைக்கலன் ஏந்திய போராட்டத்தை அழிக்க அதனுள் இருந்து சிலரை
வெளியே எடுத்து கொழும்பிற்கு கொண்டு சென்றன. இப்போது அதே நாடுகள் ஒருவர் பின் ஒருவராக
தமிழர்களின் அரசியல் கட்சிகளிடையே சில கொழும்பு அறிவாளிகளைப் புகுத்திக் கொண்டிருக்கின்றன.
தமிழர்கள் இலங்கையை சூழவுள்ள பிரதேசத்தின் புவிசார் அரசியலில் எந்த பாகமும் வகிக்க
முடியாத வகையில் அவர்களிடையே பல கட்சிகளை அவர்கள் உருவாக்கியுள்ளனர். இலங்கையிலும்
வெளிநாடுகளிலும் வாழும் தமிழர்கள் உலக தாராண்மைவாதிகளில் மீது அளவிற்கு அதிகமான நம்பிக்கையை
2009இன் பின்னர் வைத்தனர். பின்னர் அத் தாராண்மைவாதிகள் பல நாடுகளில் பின்னடைவுகளைச்
சந்தித்து அவர்களது ஆட்சி அரியணையில் பழமைவாதிகளும் தேசியவாதிகளும் ஆட்சியில் அமர்ந்துள்ள
நிலையில் தமிழர்கள் கையறு நிலையில் இப்போது இருக்கின்றனர்.
புவிசார் அரசியல் கோட்பாடுக்ளைப் பற்றி அறிய இந்த இணைப்பில் சொடுக்கவும்: