இரசிய
அதிபர் விளடிமீர் புட்டீன் தனது செல்வாக்கை இரசியர்கள் மத்தியில் உயர்ந்த இடத்தில்
வைத்திருப்பதற்கு அவ்வப்போது சில தீரச் செயல்களைச் செய்து கொண்டிருக்க வேண்டும். தனது
வாழ்நாள் முழுக்க ஆட்சியில் இருக்க விரும்பும் புட்டீனை அறுபது விழுக்காட்டிற்கும்
அதிகமான இரசியர்கள் விரும்புகின்றார்கள். உலகின் வேறு எந்த அரசு தலைவர் மீதும் அவர்கள்
ஆளும் மக்கள் இந்தளவு மதிப்பு வைத்திருக்கவில்லை. 2012-ம் ஆண்டு சீனாவில் ஆட்சிக்கு
வந்த அதிபர் ஜி ஜின்பிங் ஆட்சியில் தனது பிடியை வலியதாக்கிக் கொண்டுள்ளார் சீன அதிபர்
பதவி, கட்சியின் தலைமப் பதவி, படைத்துறை உச்சத் தளபதிப் பதவி ஆகிய மூன்றிலும் உறுதியான
ஆதிக்கத்தை நிலை நாட்டியுள்ளார். தனது வாழ் நாள் முழுவதும் ஆட்சியில் இருக்க அவரும்
சீனாவில் பல சாகசச் செயல்களைச் செய்ய வேண்டும்.
இரசியாவிற்கு உக்ரேன் அவசியம்
இரசியாவின் பாதுகாப்பிற்கு உக்ரேன் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். உக்ரேன் இரசியாவின் எதிரிகளுடன் இணைந்தால் இரசியா தனது வல்லரசு என்ற நிலையை இழக்க வேண்டியிருக்கும் என்பது படைத்துறை நிபுணர்களின் கருத்து. சோவியத் ஒன்றியத்தின் விவசாய உற்பத்தியும் படைத்துறை உற்பத்தியும் உக்ரேனிலேயே பெருமளவு செய்யப்பட்டது. சோவியத்தின் கடற்படையின் முதுகெலும்பாக உக்ரேனின் கிறிமியா பிராந்தியம் இருந்தது. சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சியின் பின்னர் தனி நாடாக உருவாகிய உக்ரேன் தொடர்ந்தும் இரசியாவுடன் பொருளாதார மற்றும் படைத்துறை ஒத்துழைப்பில் இருப்பதா அல்லது ஐரோப்பிய ஒன்றியத்திலும் நேட்டோ படைத்துறைக் கூட்டமைப்பிலும் இணைவதா என்ற விவாதம் நாளுக்கு நாள் வளரத் தொடங்கியது. இரசியா ஒரு புறமும் மேற்கு ஐரோப்பிய நாடுகளும் அமெரிக்காவும் மறுபுறமும் என உக்ரேனில் ஒரு ஆதிக்கப் போட்டி உருவானது. அது 2010களில் பெரும் குழப்பத்தை உருவாக்கியது. அது இரசியா உக்ரேனின் ஒரு பகுதியாக இருந்த கிறிமியாவை ஆக்கிரமித்து தன்னுடன் இணைப்பதிலும் இரசியர்கள் பெரும்பான்மையினராக வாழும் உக்ரேனின் கிழக்குப் பகுதியில் தனிநாட்டு போராட்டத்தையும் உருவாக்கியது.
சீனாவிற்கு அவசரமாக தைவான் தேவை
2030-ம் ஆண்டின் பின்னர் சீனாவின் மக்கள் தொகைக் கட்டமைப்பில் இளையோர் தொகை வெகுவாகக் குறைந்தும் முதியோர் தொகை வெகுவாக அதிகரித்தும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சீனாவின் பொருளாதாரத்திலும் படைவலிமையிலும் அது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். அதற்கு முன்னர் சீன அதிபர் சீனாவை உலகின் உயர்ந்த இடத்திற்கு கொண்டு போய்ச் சேர்க்க வேண்டும் எனக் கருதுகின்றார். அதற்கு தைவானை சீனாவுடன் இணைத்தல் சிறந்த நகர்வாக அமையும். உலகெங்கும் உள்ள துறைமுகங்களைத் தேடித் தேடி அபிவிருத்து செய்யும் சீனாவிற்கு 15 துறைமுகங்களைக் கொண்ட தைவான் பெரும் வாய்ப்பாகும். அவற்றில் பல ஆழ்கடல் துறைமுகங்களாகும். தைவானை சீனா கைப்பற்றினால் பசுபிக் பிராந்தியத்தில் அதன் ஆதிக்க வளர்ச்சிக்கு ஏதுவாக அமையும். 2019 ஜனவரியில் சீன அதிபர் ஜீ ஜின்பிங் தைவான் சீனாவினது ஒரு பகுதி என்றும் தேவை ஏற்படின் படைகளைப் பாவித்தாவது அதை சீனாவின் ஒரு பகுதியாக்குவோம் என முழங்கினார். ஆனால் தைவானின் தனித்துவத்தை காப்பாற்றுவோம் என அமெரிக்கா உறுதி பூண்டுள்ளதாக அறிவித்தது. அது தைவானியர்களின் சுதந்திரத்தில் கொண்ட அக்கறையால் அல்ல பசுபிக் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கத்தை தடுக்கவே. சீனாவின் தொழில்நுட்ப வலுவின்மையான புள்ளிகளில் semiconductors உற்பத்தியும் ஒன்று. தகவல் தொழில்நுட்பத்தின் உயிர்நாடியான அந்தத் துறையில் அமெரிக்கா, தென் கொரியா, தைவான் ஆகியவை உலகில் முன்னணியில் திகழ்கின்றன. தைவானை சீனாவின் ஒரு பகுதியாக்குதல் சீனாவின் தொழில்நுட்ப வளர்ச்சியை மேலும் துரிதப்படுத்தும்.
உக்ரேனும் தென் சீனக் கடலும்
தென் சீனக் கடலில் சீனா ஆதிக்கம் செலுத்துவதை பாராக் ஒபாமா அதிபராக இருந்த போது கடுமையாக எதிர்த்தார். அதற்காக அமெரிக்காவின் ஆசியச் சுழற்ச்சி மையம் என்ற கொள்கையையும் வகுத்தார். ஆனால் 2011இல் உருவான சிரியப் பிரச்சனையும் 2014 இரசியா செய்த கிறிமியா ஆக்கிரமிப்பும் அவரது கவனத்தை திசை திருப்பியது. அதைச் சாதகமாகப் பயன்படுத்தி சீனா தென் சீனக் கடலில் துரிதமாக செயற்கை தீவுகளை உருவாக்கி அங்கு தனது படை நிலைகளையும் நிறுத்திக் கொண்டது. அதை பல நாடுகள் எதிர்த்த போதும் சீனா அசையவில்லை. ஒரு போர் மூலம் மட்டுமே சீனா தென்சீனக் கடலின் பன்னாட்டுக் கடற்பிரந்தியத்தில் உருவாக்கிய தீவுகளில் இருந்து வெளியேற்ற முடியும். இரு வல்லரசுகள் ஒன்றுடன் ஒன்று போர் செய்ய முடியாது என்பதை சீனா நன்கு உணர்ந்து கொண்டது. அமெரிக்கா உட்பட பல நாடுகளின் ஆட்சேபனைகளுக்கு நடுவிலும் ஹொங் கொங் மக்களுக்கு வழங்கிய உறுதி மொழிகளை மீறி சீனா அங்குள்ள ஆட்சி முறைமைய மாற்றிக் கொண்டது.
அடுத்தது உக்ரேனும் தைவானுமா?
உக்ரேனை அதன் போக்கில் விட்டால் அது நாளடைவில் சுமூக நிலைக்கு திரும்பி அது ஐரோப்பிய ஒன்றியத்திலும் நேட்டோ படைத்துறைக் கூட்டமைப்பிலும் இணைந்துவிடும் என இரசிய அதிபர் புட்டீன் அறிவார். அதனால் 2021 ஏப்ரல் இரண்டாம் வாரத்தில் இரசியா பதினான்காயிரம் படையினரைக் கொண்ட பதினாறு படையணிகளை உக்ரேனுடனான எல்லையை நோக்கி நகர்த்தியுள்ளது. ஏற்கனவே உக்ரேன் எல்லையில் இருபத்தாறாயிரத்திற்கு மேற்பட்ட இரசியப் படையினரும் கிறீமியாவில் நாற்பதினாயிரம் இரசியப் படையினரும் நிலை கொண்டுள்ளனர். உக்ரேனை இரசியா ஆக்கிரமிக்கலாம என்ற அச்சம் உருவாகியுள்ளது. 2021 மார்ச் நடுப்பகுதியில் அமெரிக்க சீன அரசுறவியலாளர்களுக்கு இடையில் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் சீனா தைவானை சீனாவுடம் இணைப்பது தமது புனித பணி என சூளுரைத்துள்ளது. உக்ரேன் மீது இரசியாவும் தைவான் மீது சீனாவும் ஒரே நேரத்தில் ஆக்கிரமிப்பு போர் தொடுக்கும் போது ஒரேயடியாக இரு போர் முனைகளை அமெரிக்கா எதிர் கொள்ள வேண்டியிருக்கும். அது சீனாவினதும் இரசியாவினதும் படை நகர்வுகளுக்கு சாதகமான சூழலை ஏற்படுத்தலாம். அதை அமெரிக்கா மூன்று விதமாக எதிர் கொள்ளலாம். ஒன்று முழுவலிமையுடன் இரண்டு ஆக்கிரமிப்புக்களையும் முறியடித்தல், இரண்டு ஒன்றில் விட்டுக் கொடுத்து மற்றதில் அதிக கவனம் செலுத்துதல், மூன்று நேட்டோ நாடுகளின் உதவியுடன் இரசியாவையும் ஜப்பான், தென் கொரியா, ஒஸ்ரேலியா, இந்தியா, வியட்னாம் ஆகிய ஆசிய நாடுகளுன் இJணைந்து சீனாவையும் எதிர் கொள்ளலாம். இந்த மூன்றாம் தெரிவு ஒரு மூன்றாம் உலகப் போருக்கு வழிவகுக்கும்.
போர் என்று வந்தால் அது பெரும் அழிவில் முடியும் என்பதை எல்லா நாடுகளும் அறியும். தைவான் மீது வான் மற்றும் கடல் எல்லைகளில் தொடர்ந்து அத்து மீறல்களைச் சீனா செய்து கொண்டிருத்தலும் ஒரு போரால் தைவானை ஆக்கிரமிக்க முடியும் என்ற படை வலிமையை சீனா பெறுவதாலும் மற்ற நாடுகளிடமிருந்து சீனாவைத் தனிமைப் படுத்துவதாலும் தைவானை அடிபணிய வைக்க சீனா முயற்ச்சி செய்யும். தைவானை ஆக்கிரமித்தால் சீனா பெரும் ஆளணி இழப்புக்களைச் சந்திக்க வேண்டும் என்ற நிலையை உருவாக்கினால் சீனா தைவான் மீது படை எடுக்கத் துணியாது என தைவான் கருதுகின்றது. தைவான் மீது படை எடுத்தால் அமெரிக்கா, ஜப்பான், வியட்னாம், தென் கொரியா, ஒஸ்ரேலியா ஆகிய நாடுகள் சீனாவைத் தடுக்கும் என சீனாவை உணரவைக்க அமெரிக்கா தொடர்ந்து முயற்ச்சிக்கும். உக்ரேனின் கிழக்குப் பிராந்தியத்தில் தொடர்ந்து பிரச்சனை கொடுத்துக் கொண்டிருத்தால் ஒரு நாள் உக்ரேனில் இரசிய ஆதரவு ஆட்சியை நிரந்தரமாக அமைக்க முடியும் என இரசியா நம்புகின்றது. உக்ரேனின் கிழக்குப் பிராந்தியத்தில் வாழும் இரசியரக்ள் ஓரு போர்ச்சூழலில் வாழ விரும்பாமல் ஒரு நாள் தமது கிளர்ச்சியைக் கைவிடுவார்கள் என உக்ரேன் நம்புகின்றது. போர் என்பது வலிமை மிக்க நாடுகள் கடைசித் தெரிவு மட்டுமே.