எகிப்தில் புரட்சியை ஆரம்பித்து வைத்த அஸ்மா மஹ்புஸ் |
துனிசீய மக்கள் ஆரம்பித்து வைத்த அரபு வசந்தத்தால் உந்தப்பட்ட எகிப்திய மக்கள் ஒரு திடமான சக்தியாக திரண்டு அதிக இரத்தம் சிந்தாமல் 18 நாட்கள் நடத்திய "புரட்சியின்" மூலம் 2011பெப்ரவரி 11-ம் திகதி ஹஸ்னி முபாரக்கைப் பதவியில் இருந்து விரட்டினர். ஐக்கிய அமெரிக்காவின் உளவுத் துறை எகிப்தியப் படையினரை புரட்சியை எதிர்க்காமல் இருப்பதை உறுதி செய்தது. இதனால் எகிப்தியப் படைத்துறைக்கு புரட்சியாளர்களால் எந்த விதப் பாதிப்பும் ஏற்படவில்லை. எகிப்தியப் படைத்துறையின் உயர்பதவிகளில் இருப்போர் அமெரிக்காவில் பயிற்ச்சி பெற்றவர்கள். இந்தப் புரட்சியை முன்னெடுப்பதில் முன்னணியில் நின்று செயற்பட்டவர் ஒரு இளம் பெண். அஸ்மா மஹ்பூஸ் என்ற 26 வயதான எகிப்தியப் பெண் ஹஸ்னி முபராக்கின் அடக்கு முறைக்கு எதிராக தனியான ஒரு போராட்டத்தை ஆரம்பித்தாள். முதலில் முகவேட்டில் அனைவரையும் தஹ்ரீர் சதுக்கத்தில் திரளும்படி அழைப்பு விடுத்தாள். அவளது அழைப்பை மூன்று இளைஞர்கள் மட்டுமே வந்தனர். முகவேட்டின் மூலம் தகவலை அறிந்த காவற்துறை அவர்கள் நாலு பேருக்கும் முதல் அங்கு திரண்டுவிட்டனர். அந்த மூன்று இளைஞர்களையும் கைது செய்த காவற்துறையினர் அஸ்மா மஹ்பூஸை எச்சரித்து விட்டுச் சென்றனர். அத்துடன் அஸ்மா மஹ்பூஸ் சளைக்கவில்லை பின்னர் ஒரு காணொளியைத் தயாரித்து அதன் மூலம் நான் மீண்டும் தஹ்ரீர் சதுக்கம் செல்வேன் உங்களுக்குத் தன்னம்பிக்கை இருந்தால் என்னுடன் வாருங்கள் என்று அறை கூவல் விடுத்தாள்.
இசுலாமிய சகோதரத்துவ அமைப்பும் மோர்சியும்.
இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பு மூன்று இலட்சத்திற்கு மேற்பட்ட உறுப்பினர்களுடன் உலகிலேயே செல்வாக்கு மிகுந்த அமைப்பு. கடந்த 84 ஆண்டுகள் திரை மறைவு இயக்கமாக இருந்து வந்த இந்த அமைப்பில் பலர் மன்னர்களாலும் படைத்துறைத் தலைவர்களாலும் சிறைவாசம் அனுபவித்தனர். இது எகிப்தில் உள்ள ஒழுங்கு படுத்தப்பட்ட மிகப்பெரிய அரசியல் அமைப்புமாகும். இது மக்களும் அரசும் இஸ்லாமிய மத வழிகாட்டலுக்கு இணங்க நடக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது. புரட்சிக்குப் பின்னர் நடந்த தேர்தலில் இசுலாமிய சகோதரத்துவ அமைப்பின் அரசியல் பிரிவு வெற்றி பெற்று மொகமட் மோர்சி ஆட்சிக்கு வந்தார். மற்றக் கட்சிகள் ஒரு ஒழுங்கான கட்டமைபுடன் இருக்காதமையால் மோர்சி இலகுவாக ஆட்சிக்கு வரக்கூடியதாக இருந்தது. மோர்சியின் கட்சி இசுலாமியவாதக் கட்சியாக இருந்தமையும் இலகுவான் வெற்றிக்கு வழிவகுத்தது. ஆனால் ஹஸ்னி முபாராக்கிற்கு எதிராகப் புரட்சி செய்த இளைஞர்கள் எகிப்தில் ஒரு மத சார்பற்ற ஆட்சியையும் எகிப்தை முற்போக்குப் பாதையில் புதுமைப்படுத்த விரும்பியிருந்தனர். புரட்சியை முன்னெடுத்தவரகளின் கொள்கைகளுக்கு ஏற்ப எகிப்தின் புதிய அரசமைப்புச் சட்டமும் உருவாக்கப்படவில்லை.
பெண்ணிய விரோத இசுலாமிய சகோதரத்துவ அமைப்பு
ஆட்சிக்கு வந்த இசுலாமிய சகோதரத்துவ அமைப்பு பெண்களைப்பற்றிப் போதிப்பது என்ன? இசுலாமிய சகோதரத்துவ அமைப்பு பல தொண்டு நிறுவனங்கள் மூலமாக எகிப்திய மக்களுக்குப் போதிப்பது என்ன? :
- பெண்கள் நம்ப முடியாதவர்கள், உணர்ச்சிவசப்படுபவர்கள், நல்ல மனைவிகளாகவும் தாய்மார்களாகவும் ஆவார்கள் ஆனால் ஒரு போதும் ஆட்சியாளர்களாகவோ அல்லது தலைவர்களாகவோ மாட்டார்கள். தம்மை விரும்பும் கணவன்மார்களுக்குப் பணி செய்வதிலும் அடிபணிவதிலும் இன்பம் காண்பார்கள்.
எகிப்த்தியத் தேர்தலின்போது இசுலாமிய சகோதரத்துவ அமைப்புக்கு வாக்காளிக்காத தனது கர்ப்பிணி மனைவியை ஒருவர் அடித்துக் கொன்றார். இசுலாமிய சகோதரத்துவ அமைப்பின் விருப்பத்துக்குரிய ஷரியா சட்டப்படி ஒரு கணவன் தனக்குக் கீழ்ப்படியாத மனைவியை அடிக்கு உரிமை பெற்றிருக்கிறான். இசுலாமிய சகோதரத்துவ அமைப்பு எகிப்தில் ஆட்சிக்கு வந்ததில் இருந்து பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளன. இதைப்பற்றி முறையிடும் பெண்கள் ஆண்களைத் தூண்டும் விதத்தில் ஆடை அணிந்ததாகக் குற்றம் சாட்டப்படுகிறார்கள். எகிப்தில் பெரும்பாலான பெண்கள் இசுலாமிய முறைப்படி தலையை மூடித்தான் ஆடை அணிவாரக்ள்.
முன்பிலும் மோசமான நிலை
புரட்சியை முன்னெடுத்த இளைஞர்கள் எகிப்த்தின் தற்போதைய நிலையில் மிகவும் அதிருப்தி கொண்டுள்ளனர். ஹஸ்னி முப்பாரக்கிற்கு எதிரான போராட்டத்தில் அவர்கள் மீது பிரயோகிக்கப்பட்ட காவற்துறை வன்முறையிலும் பார்க்க மோசமான வன்முறை இப்போது அவர்கள் மீது கட்டவிழ்த்து விடப்படுகிறது. பொருளாதாரம் சீர் கெட்டுக் கொண்டு போகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 36பில்லியன் டாலர்களாக இருந்த எகிப்திய வெளிநாட்டுச் செலவாணிக் கையிருப்பு இப்போது 15 ஆகக் குறைந்துள்ளது. சுற்றுலாத் துறை வருமானம் ஹஸ்னி முபாரக் காலத்தில் இருந்தது போல் இன்று இல்லை. 45 மில்லியன் மக்கள் வறியவர்களாக இருக்கின்றனர். வேலையில்லாப் பிரச்சனை அதிகரிக்கிறது. அரச கடன் கட்டுக்கு அடங்காமல் நாட்டின் மொத்த பொருளாதார உற்பத்தியின் 80% ஆக இருக்கிறது. எகிப்திய நாணயம் பலவீனமடைவதால் வெளியார் முதலீடு குறைந்து செல்கிறது. பொருட்களின் விலைகள் அதிகரித்துச் செல்கிறது.
எகிப்தியப் புரட்சியை முன்னெடுத்த தாராண்மைவாதிகளும் மத சார்பற்றவர்களும் மக்களைத் தமது கொள்கைகளுக்கு ஏற்ப வாக்களிக்கச் செய்வதில் தோல்விகண்டுள்ளனர். நடந்த ஐந்து தேர்தலிலும் இசுலாமிய சகோதரத்துவ அமைப்புக்கு சாதகமாகவே முடிவுகள் அமைந்தன. அவர்கள் தங்கள் நியாயமான கொள்கைகளையும் கோரிக்கைகளையும் ஒரு அரசியற் செயற்திட்டமாக மாற்றுவதில் தோல்வி கண்டுள்ளனர். தனக்குச் சாதகமான ஒரு அரசமைப்பை உருவாக்குவதிலும் படைத்துறையினரின் உச்ச சபையிடமிருந்த (Supreme Council of the Armed Forces) அதிகாரத்தைப் பெறுவதிலும் மொஹமட் மோர்சி வெற்றி கண்டுள்ளார். புதிய அரசியலமைப்பு பேச்சுரிமைக்கு உகந்ததாக இல்லை.
மீண்டும் தஹ்ரீர் சதுக்கத்தில் புரட்சியாளர்கள்
எகிப்தியப் புரட்சியின் இரண்டாம் ஆண்டு நிறைவில் மீண்டும் புரட்சியாளர்கள் தஹ்ரீர் சதுக்கத்தில் கூடி வெளியேறு வெளியேறு என்று குரல் கொடுத்தனர். பேச்சுரிமையும் தன்னிச்சைப்படி செயற்படக்கூடிய நீதித் துறையும் தேவை என்பது அவர்களின் கோரிக்கைகளில் முன்னிலை வகிக்கிறது. மேற்கு ஐரோப்பிய மற்றும் வட அமெரிக்க நாடுகள் மக்களாட்சி முறைமை எகிப்தில் வெற்றியடைந்தால் அது மற்ற ஆபிரிக்க நாடுகளிலும் வெற்றியளிக்கும் என்று நம்புகின்றனர். ஆனால் சமூக நீதி பொருளாதார மேம்பாடு இல்லாத மக்களாட்சி வெற்றியளிக்காது. எகிப்தியப் புரட்சியின் இரண்டாம் ஆண்டு நிறைவு நாளில் மீண்டும் இளைஞர்கள் கூடி எதிர்ப்புத் தெரிவித்தமையும் அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டமையும் எகிப்தியப் புரட்சி முற்றுப் பெறவில்லை என்பதைக் காட்டுகிறது.