சீனாவின் பொருளாதார சிர்திருத்தத்தை அறிமுகம் செய்து ஒரு விவசாயம் சார் பொருளாதரத்தைக் கொண்டிருந்த சீனாவை உலகின் முன்னணிப் பொருளாதார நாடாக்கியவர் டெங் சியோபிங். 1978இல் இருந்து 1989வரை சீன ஆட்சியாளராக இருந்த டெங் சியோபிங் தனக்குப் பிறகு ஆட்சிக்கு வந்தவர்களுக்கு சீனா இனிவரும் காலங்களில் உலக ஆதிக்கம் செய்த்த முயலக் கூடாது என்றார். அவரது பொருளாதாரக் கொள்கையால் பாரிய பொருளாதார வளர்ச்சியை தொடர்சியாக் சீனா கண்டு வருகின்றது. சீனாவின் பொருளாதார வளர்ச்சியால் அது உலக அமைதிக்குப் பாதகம் ஏற்படுமா என்ற கேள்வி 2000-ம் ஆண்டளவில் பரவலாக அடிபடத் தொடங்கியது. அந்த கேள்விக்கு பதிலளிக்கு முகமாக சீனா “அமைதியான வளர்ச்சி” என்ற கொள்கையைக் கொண்டது எம 2003-ம் ஆண்டளவில் சீன ஆட்சியாளர்கள் உலக நாடுகளிடம் அடித்துச் சொன்னாரகள். சீனாவின் “அமைதியான எழுச்சி” கொள்கையை நம்பிய அமெரிக்க அதிபர்களான ஜோர்ஜ் புஷ், பில் கிளிண்டன், பராக் ஒபாமா ஆகியோர் சீனாவை பொருளாதார வளர்ச்சிப் பங்காளராக ஏற்றுக் கொண்டனர். உலக வர்த்த நிறுவனம் போன்ற உலக அமைப்புக்களில் சீனா இணைவதை ஊக்குவித்தனர்.
சீனாவின் அபரிமிதமான படைத்துறை வளர்ச்சி
சீனா, இந்தியா, ஜப்பான், தென் கொரியா, பாக்கிஸ்த்தான், தைவான், வட கொரியா, இந்தோனேசியா ஆகிய நாடுகள் ஒன்றிற்கு ஒன்று போட்டி போட்டுக் கொண்டு தமது படை வலிமையை பெருக்குகின்றன. இந்தோனேசியா, தாய்லாந்து ஆகிய நாடுகளின் படைத்துறைச் செலவீனம் ஆண்டு தோறும் பத்து விழுக்காட்டிற்கும் மேலாக அதிகரிக்கப்படுகின்றது. சீனா படைத்துறைக்கு ஆண்டு தோறும் செய்யும் செலவு இந்தியா, ஜப்பான், வட கொரியா, தென் கொரியா, தைவான் ஆகிய நாடுகளின் மொத்த படைத்துறைச் செலவிலும் பார்க்க அதிகமானதாகும்.2020 ஜூனில் சீனா கைத்துப்பாக்கி அளவிற்கு சிறியதாக்கப்பட்ட மின்காந்த துப்பாக்கிகளை உருவாக்கி பார்வைக்கு வைத்தது. பொதுவாக மின்காந்த துப்பாக்கிகளின் இருந்து பாயும் தோட்டாக்கள் ஒரு செக்கண்டில் ஒன்றரை மைல் (இரண்டரை கிலொமீட்டர்) என்னும் வேகத்தில் 400 கிலோமீட்டர் வரை பாயக் கூடியவை. சீனாவின் விமானம் தாங்கிக் கப்பல்களை அழிக்கும் DF-16 ஏவுகணைகள் உள்ளன. சீனாவிடம் உள்நாட்டில் உருவாக்கப்பட்ட ரடார்களுக்கு புலப்படாத விமானங்களும் இருக்கின்றன. நிலத்துக் கீழ் உள்ள பதுங்கு குழிகளில் இருந்து ஏவக்கூடிய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை சீனா வைத்திருக்கின்றது. ஒலியிலும் பார்க்க இருபது மடங்கு வேகமாகப் பாயக் கூடிய ஏவுகணைகள் இருக்கின்றன. தரையில் இருந்து ஏவி செய்மதிகளை அழிக்கக் கூடிய ஏவுகணைகளையும் சீனா வைத்திருக்கின்றது. இரசியாவிடமிருந்து படைக்கலன்களை வாங்கி வந்த சீனா இப்போது படைக்கல உற்பத்தியில் இரசியாவுடன் போட்டி போடும் நிலையை அடைந்துள்ளது.
அமைதியான எழுச்சி கொள்கையை சீனா கைவிட்டதா?
சீனாவின் படைவலிமைப் பெருக்கம் அதன் “அமைதியான எழுச்சி” என்ற கொள்கையில் இருந்து சீனா விலகிவிட்டது என்பதை உறுதி செய்யும் வகையில் அமைந்துள்ளது. சீனாவின் படைத்துறை வளர்ச்சி தொடர்பான கரிசனை ஆசிய நாடுகளையும் தாண்டி ஒஸ்ரேலியா நியூசிலாந்து ஆகிய நாடுகளையும் பிடித்துள்ளது. தென் சீனக் கடலை ஆக்கிரமித்து சீனா அங்கு செயற்கைத் தீவுகளை அமைத்தது. அங்கு படை நிலைகள் அமைக்கப்பட மாட்டாது என்று சொல்லிய சீனா பின்னர் அதை முழுமையாக தனது படைக்கலன்களைக் குவித்தது. இந்தியாவின் எல்லையில் சீனாவின் நடவடிக்கைகளும் அது ஓர் அமைதியை விரும்பும் நாடல்ல என்பதை உறுதி செய்கின்றது.
சீனாவுடன் போட்டி போட முடியாத ஆசிய நாடுகள்
சீனாவின் படை வலிமைப் பெருக்கம் என்பது அமெரிக்காவின் ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் மீதான ஆதிக்கத்திற்கு ஈடு கொடுக்கும் வகையில் அமைகின்றது. ஆனால் சீனாவின் படைவலிமைப் பெருக்கம் அதன் அயல் நாடுகளை அதிக கரிசனை கொள்ள வைத்தது. இந்தியா கரிசனை மட்டுமல்ல அச்சமும் கொண்டு தனது படைவலிமையைப் பெருக்கியது. அதனால் பாக்கிஸ்த்தானும் இந்தியாவிற்கு இணையாக தனது படைவலிமையைப் பெருக்கியது. ஆனால் இந்தியாவால் சீனாவிற்கு ஈடு கொடுக்க முடியாத நிலையில் அது அமெரிக்கா, ஜப்பான், ஒஸ்ரேலியா நாடுகளுடன் படைத்துறை ஒத்துழைப்பை அதிகரிக்க முயல்கின்றது. இந்தியாவின் படைவலிமைக்கு ஈடு கொடுக்க முடியாத பாக்கிஸ்த்தான் சீனாவுடன் தனது படைத்துறை ஒத்துழைப்பை அதிகரிக்கின்றது. சீனாவின் அயல் நாடுகளின் சிங்கப்பூர் மட்டுமே தனது மொத்த தேசிய உற்பத்தியில் இருபத்தி நான்கு விழுக்காட்டை படைத்துறைக்கு செலவு செய்கின்றது. இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், மலேசியா ஆகிய நாடுகளின் படைத்துறைச் செலவு அவற்றின் மொத்த தேசிய உற்பத்தியில் ஒரு விழுக்காடு மட்டுமே. ஜப்பானின் நிலைமை ஒரு விழுக்காட்டிலும் குறைவானதாக இருக்கின்றது. சீனாவின் அயல் நாடுகள் பல பாதுகாப்பிலும் பார்க்க வழுமை ஒழிப்பு, உட்கட்டுமான, அபிவிருத்தி, பொருளாதார வளர்ச்சி, கல்வித்துறை மேம்பாடு போன்றவற்றிற்கு அதிக முன்னுரிமை கொடுக்கின்றன. சில நாடுகள் தம்மை எப்படியும் சீனாவிடமிருந்து அமெரிக்கா பாதுகாக்கும் என்ற நம்பிக்கையைக் கொண்டுள்ளன.
படைக்கலப் போட்டியில் மூன்று அணுக்குண்டு நாடுகள்.
சீனா, இந்தியா, பாக்கிஸ்த்தான் ஆகிய நாடுகள் அணுக்குண்டுகளை வைத்திருக்கின்றன. இது ஆசியப் பிராந்தியத்திற்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றது. இந்தியா-சீனா மற்றும் இந்தியா-பாக்கிஸ்த்தான் இடையே அடிக்கடி எல்லை மோதல்களும் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. இந்த எல்லை மோதல் கட்டுகடங்காமல் போகும் போது ஓர் அணுக்குண்டுப் போர் வெடிக்கும் அபாயம் உள்ளது. அணுக்குண்டுகள தாங்கிச் செல்லும் ஏவுகணைகளின் வலிமையை சீனா நாளுக்கு நாள் வேகம், தூரம், புலப்படாத்தன்மை ஆகியவற்றில் மேம்படுத்திக் கொண்டே இருக்கின்றது. இந்தியாவின் எப்பாகத்திலும் அணுக்குண்டு வீசக் கூடிய வலிமை சீனாவிற்கு உண்டு. அமெரிக்காவும் சீனாவும் தற்போது விண்வெளிப் படையை உருவாக்கிக் கொண்டிருக்கின்றன. அதில் சீனா முன்னேற்றமடையும் போது அதற்கும் மற்ற ஆசிய நாடுகளுக்கும் இடையிலான வலிமை இடைவெளி இன்னும் அதிகமாகும்.
இணையவெளிப் போர்
இணையவெளித் தாக்குதல், ஊடுருவல் போன்றவற்றில் சீனா அமெர்க்காவையே திணற வைக்கின்றது. அந்த நிலையில் சீனாவின் அயல் நாடுகளின் நிலைமை மிகவும் மோசமானதாகவே இருக்கின்றது. எந்த நாடுகளின் படைத்துறை இரகசியங்கள் சீனா இணையவெளியூடாக திருடி வைத்திருக்கின்றது, எந்த அளவி எனத வகையான இணையவெளி உறங்குநிலைக் கலன்களை (sleeper cells) சீனா வைத்திருக்கின்றது என்பது பற்றி யாருக்குமே தெரியாது.
மொத்தத்தில் சீனாவின் எழுச்சி மற்ற நாடுகளின் மன அமைதியைக் கெடுத்துள்ளது.