Showing posts with label இணையவெளிப்போர். cyberwar. Show all posts
Showing posts with label இணையவெளிப்போர். cyberwar. Show all posts

Friday, 9 October 2026

உக்ரேனின் டெல்டா போர் முறைமை-BATTLEFIELD MANAGEMENT SYSTEM

  


உக்ரைனின் டெல்டா முறைமை என்பது போரில் பாவிக்க உருவாக்கப்பட்ட மென்பொருள் அல்லது செயலி. இது உக்ரேனின் இலத்திரனியல் போரியலின் வளர்ச்சியின் முக்கிய பகுதியாகும். இது முதலில் போர்க்கள எண்மிய வரைபடச் செயலியாக அதாவது digital map ஆகத் தொடங்கப்பட்டுப் படிபடியாக வளர்ச்சியடைந்துள்ளது. இது எதிரியின் படைக்கலச் சொத்துக்களின் இருப்பிடங்களை வரைபடமாக்குகிறது. பல்வேறு பிரிவுகளின் இயக்கங்களையும் போர்முனையில் நடக்கும் செயற்பாடுகளையும் ஆளிலிகளின் செயற்பாடுகளையும், படைப்பிரிவுகளின் இயக்கங்களையும் கட்டளை நிலையங்களையும் ஒருங்கின்றது.

பின்னர் இது ஒரு ஒருங்கிணைந்த கட்டளை அமைப்பாக வளர்ச்சியடைந்தது. இப்போது இது இரசிய இலக்குகளை விரைவாக அடையாளம் காணவும் தாக்குதல்களை ஒருங்கிணைக்கவும் பேருதவியாக இருக்கின்றது. 2022இல் உக்ரேன் டெல்டா மூலம் ஒரு நாளைக்கு 1,500இற்கு மேற்பட்ட இரசிய இலக்குகளை அடையாளம் கண்டது.

அமெரிக்காவின் வலையமைப்பு-மையப் போர் முறைமை



உக்ரேனின் டெல்டா முறைமை அமெரிக்கா 1990களில் உருவாக்கிய வலையமைப்பு-மையப் போர்முறைமையை Network-Centric Warfare (NCW) அடிப்படையாகக் கொண்டது. அது தகவல் மேலாண்மையை பாவித்து அதை மேம்பட்ட போர்த் திறனாக மாற்ற முயன்றது.

Cloud Based System

டெல்டா முறைமையானது ஆளிலிகள் எனப்படும் ட்ரோன்கள், உணரிகள் என்ற சென்சார்கள், செயற்கைக்கோள் தரவுகள் மற்றும் மனித அறிக்கைகளை  தொடர்ச்சியாக ஒன்று திரட்டிச் செயற்படும் கட்டளை-மற்றும்-கட்டுப்பாட்டுச் செயலியாகும். இது முகில் தரவகத்தில் அதாவது cloud data centre செயற்படுகின்றது. இதற்கான வசதிகள் Starlink என்ற செய்மதிச் தொடர்புச் சேவையைப் பயன்படுத்துகின்றது. இந்த தரவகம் இரசிய இணையவெளித் தாக்குதலில் இருந்து தப்புவதற்காக உக்ரேன் நாட்டுக்கு வெளியே நிறுவப்பட்டுள்ளது

 


டெல்டா முறைமை சிறு மடிக்கணினிகள் மற்றும் கைப்பேசிகளில் இயங்குகிற படியால் போர்க்களத்தில் முன்னணியில் சிறு குழுக்களாகவும் தனித்தும் செயற்படும் படையினராலும் பாவிக்கக் கூடியதாக இருக்கின்றது.  

டெல்டா முறைமையில் உள்ள தொகுதிகள்.

ஒவ்வொரு தொகுயிலும் Kill Chain எனப்படும் இணையவெளிப் பாதுகாப்பு முறைமை உள்ளது.

தொகுதி-1: Delta Monitor டெல்டா கணினித்திரை

எதிரி நிலைகள், நட்பு பிரிவுகள், ட்ரோன் ஊட்டங்கள், செயற்கைக்கோள் படங்கள் மற்றும் சென்சார் தரவுகளைக் காட்டும் நிகழ்நேர (live telecasting) புவியியல் வரைபட இடைமுகப்பு (Interface).

தொகுதி-2: பணிக்கட்டுப்பாடு (Mission Control)

இது ஆளிலிகளின் செயற்பாடுகளை ஒருங்கிணைக்கவும் கட்டுப்படுத்தவும்  2026 இல் அறிமுகப்படுத்தப்பட்டது. ஒவ்வொரு ஆளிகள் பதிவு செய்யும் படங்களையும் காணொலிகளையும் திரட்டி அறிக்கையாக கொடுக்க வல்லது. 2026 ஜூன் மாதத்தில் மட்டும், டெல்டா உக்ரேன் செய்த 200,000 ஆளிலித் தாக்குதல்களைப் பதிவு செய்தது

தொகுதி-3: பதிலடித் தொகுதி

இது நாள்தோறும் 75,000இற்கும் அதிகமான காணொலிகளையும் படங்களையும் நுண்ணோக்கு (Scan) செய்து எதிரியின் போர்த்தாங்கிகள் பீராங்கிகள், பதுங்குகுழிகள் போன்றவற்றை இருப்பிடங்களை துல்லியமாக அறிந்து கொள்கின்றது.

தொகுதி-4 Target Hub:

DELTA அமைப்பில் Target Hub எனப்படும் தொகுதி எதிரியின் படை அலகுகளின் இருப்பிடத்தை நேரடியாக எண்மிய (டிஜிட்டல்) வரைபடத்தில் அடையாளமிட்டு அவற்றின் மீதான தாக்குதல் பணிகளை ஒதுக்குகிறது. இது தாக்கப்படவேண்டிய இலக்குகளைக் கொண்ட பட்டியல்களை உருவாக்குகிறது. தாக்குதல்களுக்கான பணிகளை வழங்கல், மற்றும் அலகுகளுக்கிடையில் தரவை பரிமாற்றத்திற்கு உதவுகிறது.

டெல்டா முறைமை உருவான பின்னர் எதிரியின் இடமறிந்து தாக்குதல் செய்ய மூன்று முதல் ஐந்து நிமிடங்கள் எடுக்கின்றன. அதற்கு முன்னர் 20நிமிடத்திற்கும் அதிக நேரம் எடுத்தது.

இந்த முடுக்கம் உக்ரைனிய படைகள் கொடிய கொலை மண்டலங்களை உருவாக்க அனுமதிக்கிறது, அங்கு கண்காணிக்கப்படும் பகுதிக்குள் நுழையும் ரஷ்ய பிரிவுகள் விரைவாகக் கண்டறியப்பட்டு, முன்னுரிமை அளிக்கப்பட்டு, அவை சிதறவோ அல்லது அரண் அமைக்கவோ முடியும் முன் தாக்கப்படுகின்றன. இதனால் உக்ரேன் இரசியப் போர் முனை ஒரு கொலைமண்டம் என அழைக்கப்படுகின்றது.


தரவு மூலங்களை டெல்டா ஒருங்கிணைக்கிறது:

• வணிக மற்றும் படையினரின் ஆளிலிகள்

• செயற்கைக்கோள் படங்கள்

• தரையில் உள்ள உணரிகள் (சென்சார்கள்)

• GPS/இரசியாவின் GLONASS ஆகியவை மூலம் திரட்டப்படும் தகவல்கள்.

• நேட்டோ நாடுகளிடமிருந்து கிடைக்கும் உளவுத்தகவல்கள்

• உக்ரேனிய படைத்துறை அதிகாரிகளின் அறிக்கைகள்

இந்த பல-மூல (multi-source) இணைப்பு உக்ரைனுக்கு காத்திரமான போர்க்கள உள் தகவல்களை வழங்குகிறது.

உக்ரேனின் டெல்டா முறைமை சில மேற்கத்திய முறைமைகளை விட மிகவும் இலகுவாக பயன்படுத்தக் கூடிய பயனர்-நட்பானது என்று நேட்டோ அதிகாரிகள் விவரித்துள்ளனர்.

டெல்டா முறைமையில் பலவீனங்கள் & சவால்கள்

டெல்டா பல கட்டமைப்பு சவால்களை (Structural Challenges) எதிர்கொள்கிறது:

இரசிய இணைய வெளித்தாக்குதல்கள்

அமெரிக்கக் கட்டுப்பாடில் உள்ள  Starlink மீது தங்கியிருப்பது.

சிலவேளைகளில் அளவிற்கு மிஞ்சிய தரவு. டெல்டா மாதத்திற்கு எட்டு மில்லியன் அறிக்கைகளைக் கையாள்கின்றது.

Sunday, 28 February 2021

மத்திய கிழக்கில் தீவிரமடையும் இணையவெளி போர்

  


உலகில் அதிக அளவு இணையவெளிப்போர் செய்யும் நாடுகள் ஈரானும் இஸ்ரேலும் இருக்கின்றன. 2012-ம் ஆண்டு ஈரானிய யூரேனியம் பதப்படுத்தும் ஆலைகளின் கணினித் தொகுதியில் இஸ்ரேலும் அமெரிகாவும் இணைந்து STUXNET என்னும் கணினி நச்சுக்கிருமி மூலம் நடத்திய இணையவெளித் தாக்குதலின் பின்னர் ஈரானும் தனது இணையவெளிப்படையை மேம்படுத்திக் கொண்டது. 2020-ம் ஆண்டு அமெரிக்க நாடளமன்றத்திற்கு சமர்பிக்கப்பட்ட அறிக்கையின் படி 2012-ம் ஆண்டின் பின்னர் ஈரான் அமெரிக்காவிற்கு எதிராக இணையவெளித் தாக்குதல்கள் செய்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது. உலகின் இணையவெளிபோர் STUXNET தாக்குதலின் பின்னர் மோசமடைந்தது. STUXNET தாக்குதலின் பின்னர் உருவான இணையவெளித் தாக்குதல் போட்டியை சோவியத் ஒன்றியம் ஸ்புட்நிக் செய்மதி அனுப்பிய பின்னர் தோன்றிய விண்வெளிப் போட்டிக்கு ஒப்பிடுவர்.

ஈரானின் அடியும் இஸ்ரேலின் பதிலடியும்

2020 ஏப்ரல் மாதம் 23-ம் திகதி இஸ்ரேலின் நீர் வழங்கல் துறையினரின் ஒரு நீர் இறைக்கும் இயந்திரம் நிற்பாட்ட முடியாமல் வேலை செய்து கொண்டிருந்தது. இன்னொரு இயந்திரத்தை வேறு யாரோ கட்டுப்படுத்திக் கொண்டிருந்தனர். அதை இஸ்ரேலிய தொழில்நுட்பவியலாளர்களால் இயக்க முடியவில்லை, அவர்களுடைய தரவுப் பரிமாற்றத்தில் திட்டமிடாத மாற்றங்கள் இணையவெளியூடாக ஊடுருவிச் செய்யப்படிருந்தன. இப்படி இஸ்ரேலின் பல நீர் வழங்கல் நிலையங்களில் நடந்தன. இஸ்ரேலியர்கள் அவசரமாக தங்கள் நீர் வழங்கல் முறைமைகளின் கடவுட்சொற்களை மாற்றினர். அந்த ஊடுருவல் ஈரானில் இருந்து மேற்கொள்ளப்பட்டதை அறிந்த இஸ்ரேலின் பதிலடியும் காத்திரமானதாகவே இருந்தது. அத் தாக்குதல் இஸ்ரேலியக் குடிமக்களுக்கு வழங்கப்படும் நீரில் குளோரினின் அளவை அதிகரிப்பதை நோக்கமாக கொண்டதாக செய்திகள் வெளிவந்தன. இஸ்ரேல் நீர் வழங்கலில் தாக்குதல் நடந்த இரண்டு வாரங்கள் கழித்து ஈரானின் மிகப்பெரிய துறைமுகமான பந்தர் அபாஸ்ஸில் உள்ள ஷகிட் ரெஜீ முனையம் (Shahid Rajaee terminal) இணையவெளித்தாக்குதலுக்கு உள்ளானது. இது ஹோமஸ் நீரிணையில் உள்ளது. ஈரானிய வர்த்தகத்தில் 60% இத் துறைமுகத்தினூடாக நடக்கின்றது.  இத்தாக்குதலுக்கு இஸ்ரேல் உரிமை கோரவில்லை. ஆனால் இஸ்ரேலிய பாதுகாப்புத் துறை அதிகாரி இஸ்ரேல் தனது எதிரிகளுக்கு தனித்துவமான முறையில் பதிலடி கொடுக்கும் என்றார். அமெரிக்க பாதுகாப்புத் துறையினர் ஈரானியத்துறைமுகம் மீதான் தாக்குதல் இஸ்ரேலில் இருந்து செய்யப்பட்டது போலுள்ளது என்றனர். வாஷிங்டன் போஸ்ற் பத்திரிகையும் அதை உறுதிப்படுத்தியது. இணையவெளிப் பாதுகாப்பிலும் தாக்குதலிலும் இஸ்ரேல் உலக வல்லரசு எனக் கருதப்படுகின்றது. அதன் மீது தாக்குதல் செய்வது ஈரானிய நிபுணர்களின் திறமையைப் பறைசாற்றியது. 2020 மே மாதம் இஸ்ரேலின் பல முக்கிய இணையத் தளங்கள் செயலிழக்கச் செய்யப்பட்டன. அவற்றில் உள்ள தகவல்கள் அழிக்கப்பட்டு மிரட்டல் செய்திகள் பதிவேற்றப்பட்டிருந்தன.

ஈரான் - சவுதி இணையவெளிப் போர்

2020 செப்டம்பரில் சவுதி அரேபியாவின் எரிபொருள் உற்பத்தி நிலையங்களில் உள்ள கணினித் தொகுதிகள் மீது இணையவெளித் தாக்குதல் செய்யப்பட்டு செயலிழக்கச் செய்யப்பட்டன. சவுதி அரேபியாவும் ஈரானும் முப்பது ஆண்டுகளுக்கு மேலாக ஒன்றுடன் ஒன்று போர் செய்யாமல் பல்வேறுவழிகளில் தாக்குதல்கள் செய்து கொண்டிருக்கின்றன. அவற்றிற்கு கிடைத்த அற்புதமான வழி இணையவெளிப் போர். ஈரான் தனது இணையவெளிப் போர்முறைமைகளைத் தானே உருவாக்க சவுதி அந்த முறைமைகளை இஸ்ரேல், அமெரிகா, பிரித்தானியா ஆகிய நாடுகளிடமிருந்து வாங்குகின்றது. தன்மீது பலவழிகளில் இணையவெளித் தாக்குதல்கள் நடப்பதால் ஈரான் தனக்கே என வெளியுலக தொடர்பில்லாத ஒரு இணையவெளியை இரசியாவின் உதவியுடன் உருவாக்கியது. ஈரானும் சவுதியும் தத்தமது மதநெறியைப் பரவுவதற்கு இன்னொரு வகையான இணைவெளித்தாக்குதல் முறைமையான நயத்திருட்டு அல்லது சமூகத்தாக்குதலைப் (Social Engineering) பாவிக்கின்றன.

சவுதியின் இணையவெளி உளவு

அல் ஜசீராவின் ஊடகங்களையும் ஊடகவியலாளர்களையும் சவுதி அரேபிய ஆட்சியாளர்கள் கடுமையாக எதிர்க்கின்றார்கள். இதனால் கட்டார் நாட்டுக்கு எதிராக பல பொருளாதார நடவடிக்கைகளையும் அவர்கள் மேற்கொண்டார்கள். அல் ஜசீராவின் ஊடகங்களையும் ஊடகவியலாளர்களையும் கண்காணிக்கவும் அவர்களின் தகவல்களைத் திரட்டவும் இஸ்ரேலின் உளவுநிரல்களைப்(Spywares) பாவிக்கின்றது. சவுதி ஆட்சியாளர்கள் தம்மீது அதிருப்தி கொண்டு செயற்படும் தம் நாட்டு மக்களைக் கண்காணிக்கவும் உளவுநிரல்களைப் பெரிதும் பயன்படுத்துகின்றன. சவுதி அரேபியா தனது இணையவெளி போர் முறமையையும் உளவு வலிமையையும் அதிகரிக்க அமெரிகாவின் கலிபோர்ணியா மாநிலத்தில் உள்ள உயர் தொழில்நுட்பத்திற்கு பெயர் பெற்ற சிலிக்கன் வலி (Silicon Valley) பிராந்தியத்தில் புதிதாக ஆரம்பிக்கும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பெருமளவு முதலீடு செய்கின்றது. சவுதி அரேபியா இஸ்ரேலிடமிருது வாங்கிய Pegusus Spyware உலகிலேயே கைப்பேசிகளை ஒற்றுக் கேட்டல், கைப்பேசிய்களூடாகப் பரிமாறப்படும் குறுந்தகவல்களையும் மின்னஞ்சல்களையும் படங்களையும் களவாடல் போன்றவற்றிற்கு மிகச்சிறந்த உளவுநிரலாகும்.

 

தனியார்துறையிலும் இணையவெளி ஊடுருவல் அதிகம்

Ponemon Institute, ஐபிஎம் ஆகிய இரு நிறுவனங்களும் செய்த ஆய்வின் படை 2020-ம் ஆண்டு மத்திய கிழக்கில் உள்ள நிறுவனம் ஒன்று சராசரியாக 6.53மில்லியன் டொலர்கள் இழப்பீட்டை தகவல் திருட்டு மூலம் இழக்கின்றன. இது உலக சராசரியான 3.86மில்லியன் டொலர்களுடன் ஒப்பிடுகையில் மிக அதிகமானதாகும். மத்திய கிழக்கு நாடுகளின் இணையவெளித் தாக்குதல் 2020-ம் ஆண்டு 250 விழுக்காடு அதிகரித்திருந்தன என்றார் ஐக்கிய அமீரகத்தின் இணையவெளிப் பாதுகாப்புத் துறை அதிகாரி.

ஐக்கிய அமீரகத்தின் வழி தனி வழி

ஈரான் உள்நாட்டில் இணையவெளிப் போர் முறமையை உருவாக்குகின்றது. சவுதி அரேபியா அதைக் காசு கொடுத்து வாங்குகின்றது. ஐக்கிய அமீரகம் அமெரிகாவின் இணையவெளிப் போர் முறைமை நிபுணர்களை அவர்களுக்கு அமெரிக்காவில் கொடுக்கப்படும் ஊதியத்திலும் பார்க்க மிக அதிகமாகக் கொடுத்து பணிக்கு அமர்த்தியுள்ளது. அத்துடன் அது இஸ்ரேலிடமிருந்தும் பல தொழில்நுட்பங்களை வாங்குகின்றது. அதன் மூலம் இணையவெளித் தாக்குதல், பாதுகாப்பு, உளவாடல் போன்றவற்றில் அமெரிக்காவிற்கு இணையாகும் வகையின் தன் வலிமையைக் கட்டி எழுப்புகின்றது. அமெரிக்கா மற்ற மத்திய கிழக்கு நாடுகளிலும் பார்க்க ஐக்கிய அமீரகத்தை அதிகம் நம்புகின்றது. அதனால் அமெரிக்க உயர் தொழில்நுட்பம் அமீரகத்திற்கு செல்வதை அது தடை செய்யவில்லை. 2020 ஓகஸ்ட் மாதம் இஸ்ரேலுடன் ஐக்கிய அமீரகம் அரசுறவுகளை ஏற்படுத்திய பின்னர் அமீரகத்தின் மீதான இணையவெளித்தாகுதல்கள் பெருமளவில் அதிகரித்துள்ளன. அமீரகத்தின் இணையவெளிச் செயற்பாடுகள் DarkMatter என்ற நிறுவனத்தின் மூலமாகவே மேற்கொள்ளப்படுகின்றன. அமீரகத்தின் இணையவெளி வலிமை பாதுகாப்பு நோக்கங்களுக்காக மட்டுமே உருவாக்கப்பட்டதாக அமீரகம் சொன்னாலும் DarkMatter நிறுவனத்தின் ஊழியர்கள் கசியவிட்ட தகவல்களின் படி DarkMatter பல தாக்குதல் நடவடிக்கைகளையும் உளவு நடவடிக்கைகளையும் செய்வதாக அறியப்படுகின்றது.

முன்பு சோவியத் ஒன்றியமும் அமெரிக்காவும் தமது புதிய படைக்கலன்களை மத்திய கிழக்கு நாடுகளிடையே நடக்கும் போர்க்களங்களில் பரீட்சித்துப் பார்த்தது போல தற்போது மத்திய கிழக்கு நாடுகளிடையே நடக்கும் முறுகல்களைப் பாவித்து அமெரிக்கா, இஸ்ரேல், சீனா, இரசியா பிரித்தானியா ஆகிய நாடுகள் தம் இணையப் போர் முறைமையை பரீட்சித்துப் பார்க்கின.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...