இரசியாவிற்கு எட்டாப் பொருத்தமான எட்டாம் மாதம்
ஓகஸ்ட் மாதம் என்பது இரசியாவிற்கு மோசமான மாதம் என பல வரலாற்றுப் பதிவுகள் சொல்கின்றன. சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சி 1991-ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் ஆரம்பமானது. 1999-ம் ஆண்டு ஓகஸ்ட்டில் செஸ்னியப் போர் தொடங்கியது. அதே மாதம் மொஸ்கோவில் பெரும் குண்டு வெடிப்பு நடந்தது. 2000-ம் ஆண்டு இரசிய நீர்மூழ்கிக் கப்பல் வெடித்து 118 கடற்படையினர் கொல்லப்பட்டனர். 2008-ம் ஆண்டு ஜோர்ஜியாவுடன் போர். 2009-ம் ஆண்டு அணைக்கட்டு உடைப்பு. 2010-ம் ஆண்டு காட்டுத்தீ. 2011-ம் ஆண்டு வெள்ளப் பெருக்கு. 2016 எட்டாம் மாதம் நடந்து கொண்டிருக்கும் ஒலிம்பிக் போட்டியில் இரசியா பல பின்னடைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கின்றது. இந்த மோசமான நிகழ்வுகள் வரிசையில் 2016-ம் ஆண்டு ஓகஸ்ட்டில் விளடிமீர் புட்டீன் தனது நெருங்கிய தோழரும் படைத்துறைக்குப் பொறுப்பானவருமான செர்கீ இவனோவ் (Sergei Ivanov) பதவியில் இருந்து விலக்கப் பட்டார்.
இரண்டாம் இடத்தில் இருந்த செர்கீ இவனோ
செர்கீ இவனோவின் (Sergei Ivanov) பதவிநீக்கம் உலகையே ஆச்சரியப் படவைத்தது. புட்டீனுக்கு அடுத்தபடியாக அதிகரத்தில் இருந்தவர் அவர். புட்டீனுடன் ஒன்றாகப் பயின்றவர்கள். புட்டீனைச் சுற்றியுள்ள அவரது முக்கிய ஆதரவாளர்கள் சிலொவிகி குழுவினர் (siloviki group) என அழைக்கப்படுவர். அவர்களில் பெரும்பான்மையானோர் சோவியத் ஒன்றியத்தின் உளவுத் துறையின் உச்ச அதிகாரியாக புட்டீன் இருந்த போது அவருடன் பணியாற்றியவர்களும் அவரின் நம்பிக்கைக்கு உரியவர்களுமாகும். உக்ரேன் தொடர்பாக புட்டீனின் ஆதரவாளரக்ளிடையே ஏற்பட்டுள்ள கருத்து முரண்பாடே செர்கீ இவனோவின் பதவி விலக்கலுக்கான காரணமாகவும் கருதப்படுகின்றது. ஆனால் புட்டீன் அவரை சூழல் பாதுகாப்புத் துறைக்குப் பொறுப்பாக நியமித்து அவரின் பதவி விலகல் தொடர்பாக ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியையும் ஏற்பாடு செய்து எல்லாம் நல்ல படியாக நடக்கின்றது என நாட்டு மக்களுக்குக் காட்ட முயன்றார். செர்கீ இவனோவின் இடத்திற்கு 44 வயதான அண்டன் வைனோ என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். புட்டீன் ஏற்கனவே பல முதியோரைப் பதவியில் இருந்து ஓய்வு பெறச் செய்து இளையோரால் அவர்களது இடங்களை நிரப்பியுள்ளார். அது புதிய சிந்தனையை நாட்டின் முகாமையில் கொண்டு வருவதற்காகவா அல்லது தனக்கு எதிராக எவரும் பதவிப் போட்டிக்கு வராமல் செய்யவா என்ற வினா எழுப்பப்படுகின்றது.
இரசியாவை எதிர்க்க புட்டீன் உயர்வார்
விளடிமீர் புட்டீனை மேற்கு நாடுகள் எதிர்க்கும் போதெல்லாம் அவரது செல்வாக்கு இரசியர்கள் மத்தியில் அதிகரிக்கும். இரசியாவிற்கு எதிராக மேற்கு நாடுகள் பொருளாதாரத் தடை கொண்டு வந்தபோது அவரது செல்வாக்கு இரசியாவில் அதிகரித்தது. இரசிய விளையாட்டு வீரர்கள் போதைப் பொருள்களைப் பாவித்தனர் என்ற குற்றச்சாட்டை மேற்கு நாடுகள் முன்வைத்த போது புட்டீனின் செல்வாக்கு அதிகரித்தது. இரசியா சிரியாவில் தலையிட்டதை மேற்கு நாடுகள் எதிர்க்க புட்டீனின் செல்வாக்கு அதிகரித்தது.
எல்லை தாண்டியதா உக்ரேன்
2016 ஓகஸ்ட்டில் மேலும் ஒரு நிகழ்வு நடந்தது. இரசியா தன்னுடன் இணைத்து வைத்திருக்கும் கிறிமியாவின் எல்லையோரக் கிராமத்தில் கிறிமியாவில் உள்ள இரசியப் படைநிலைகள் மீது தாக்குதல் நடத்த ஊடுருவிய உக்ரேனிய உளவுப் படையினரை இரசியப் படையினர் துப்பாக்கிச் சண்டையின் பின்னர் கைது செய்தனர். இதைத் தொடர்ந்து விளடிமீர் புட்டீன் உக்ரேன் பிரச்சனையைத் தீர்க்க ஏதும் செய்யாமல் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றது என்றார். கைது செய்யப் பட்டவர்களில் ஒருவர் இரசிய வானொலியில் தோன்றி தானும் தன்னுடன் ஊடுருவலில் ஈடுபட்டவர்களும் உக்ரேனின் உளவுத் துறையின் உயர் நிலையைச் சேர்ந்தவர்கள் என்றார். உக்ரேனின் "பயங்கரவாத" நடவடிக்கைகளுக்குப் பதிலடியாக உக்ரேனின் கிழக்குப் பிராந்தியத்தில் வசிக்கும் இரசியரகளின் பிரிவினைவாதிகளை உக்ரேனிற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வைக்கப் போவதாகவும் இரசியா மிரட்டுகின்றது. அது நடக்கும் போது நிதி நெருக்கடியில் இருக்கும் உக்ரேனுக்கு மேற்கு ஐரோப்பிய நாடுகளும் வட அமெரிக்க நாடுகளும் படைக்கலன்கள் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக முன்வைக்கப் படும். அந்த நாடுகளில் அதற்கு பெரும் ஆதரவு இருந்த போதும் ஐக்கிய அமெரிக்காவும் ஜேர்மனியும் அப்படிச் செய்து இரசியர்களின் ஆத்திரத்தைத் தூண்ட விரும்பவில்லை.
படைகளை நகர்த்திய இரசியா
உக்ரேனிய உளவாளிகள் கிற்மியாவிற்குள் ஊடுருவினார்கள் எனச் சொன்ன இரசியா அந்த ஆபத்தில் இருந்து தனது பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாக்க வேண்டும் என்ற போர்வையில் தனது படையணிகளை மேலும் உக்ரேனை நோக்கி நகர்த்தியது. அதில் இரசியாவின் எஸ்-400 என்னும் ஏவுகணை எதிர்ப்பு முறைமையும் அடங்கும். ஆனால் எஸ்-400 2016 டிசம்பர் மாதமளவில்தான் கிறிமியாவில் செயற்பட முடியும் எனச் சொல்லப்படுகின்றது. உக்ரேனின் உளவாளிகளைக் கைது செய்வதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்னர் இருந்தே கிறிமியாவிற்கு இரசியாவில் இருந்து பெருமளவு படைக்கலன்களும் படையினரும் நகர்த்தப் படுவது நடந்து கொண்டிருக்கின்றது. உக்ரேனின் கிழக்கு எல்லையில் 40.000 இரசியப் படையினர் தாங்கிகள், கவச வண்டிகள் ஆகியவற்றுடன் நிலை கொண்டிருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அதில் விமானப்படைப்பிரிவுகளும் அடக்கம். இரசியாவின் இந்தப் படை நகர்வுகளைத் தொடர்ந்து ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு அவைக் கூட்டத்தை உக்ரேன் அவசரமாகக் கூட்டியது. உக்ரேன் உளவாளிகள் கைது என்பது உக்ரேன் மீது படை எடுப்பதற்காக அரங்கேற்றப் பட்ட நாடகம் என உக்ரேன் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. இரசியாவின் ஒரு பகுதியான செஸ்னியா மீது கொடூரமான படைத் தக்குதல் செய்வதற்காக 1999-ம் ஆண்டு செஸ்னியத் தீவிரவாதிகள் இரசியாவில் குண்டுத் தாக்குதல் செய்ததாக ஒரு நாடகத்தை இரசிய உளவுத்துறையான Federal Security Service (FSB) செய்தது என்றும் குற்றம் சாட்டப்படுகின்றது.
இரசியாவும் உக்ரேனும் வரலாற்றுப் பின்னணி
சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் தனது ஆதிக்க நிலப்பரப்பை இரசியா விரிவாக்கவே விரும்பியது. உக்ரேன் முன்னாள் சோவியத் ஒன்றியத்தில் ஒரு முக்கிய நாடாகும். இரசிய விரிவாக்கத்தின் முதல் முயற்ச்சியாக இரசியாவும், உக்ரேனும், பெலரசும் இணைந்து சுதந்திர நாடுகளின் பொதுநலவாயம் என்னும் கூட்டமைப்பை 1991-ம் ஆண்டு டிசம்பர் மாதம் உருவாக்கின. பின்னர் இதில் ஆர்மினியா, அஜர்பைஜான், கஜகஸ்த்தான், கிர்க்கிஸ்த்தான், மோல்டோவா, தேர்க்மெனிஸ்த்தான், தஜிகிஸ்த்தான், உஸ்பெக்கிஸ்த்தான் ஆகிய நாடுகள் இணைந்தன. 1993-ம் ஆண்டு ஜோர்ஜியாவும் இணைந்து கொண்டது. பின்னர் உக்ரேன், ஜோர்ஜியா, தேர்க்மெனிஸ்த்தான் ஆகிய நாடுகளில் நடந்த ஆட்சி மாற்றத்தால் அவை இந்த இரசியா தலைமையிலான சுதந்திர நாடுகளின் பொதுநலவாயம் என்னும் கூட்டமைப்பில் இருந்து வெளியேறின. சுதந்திர நாடுகளின் பொதுநலவாய நாடுகளிடையே ஒரு சுதந்திர வர்த்தக உடன்படிக்கை கைச்சாத்திட இரசியா முயற்ச்சித்த போதும் அதற்கு சில நாடுகள் ஒத்துக் கொள்ள மறுத்தன. 2013-ம் ஆண்டு உக்ரேன், இரசியா, மோல்டோவா, ஆர்மீனியா ஆகிய நாடுகள் ஒரு பொது சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை ஏற்றுக் கொண்டன. மேற்கு ஐரோப்பிய நாடுகள் ஐரோப்பிய ஒன்றியம் என்னும் பெயரில் தமது நிலப்பரப்பையும் பொருளாதார வலயத்தையும் விரிவாக்கிக் கொண்டு முன்னாள் சோவியத் நாடுகளையும் இரசிய ஆதிக்க வலய நாடுகளையும் தம்முடன் இணைக்க இரசியாவிற்கு தான் ஓரம் கட்டப்பட்டு விடுவேனோ என்ற அச்சம் பற்றிக்கொண்டது. அத்துடன் முன்பு இரசியாவுடன் வார்சோ ஒப்பந்த நாடுகள் கூட்டமைப்பில் இணைந்திருந்த நாடுகளான போலாந்து, ஹங்கேரி, ருமேனியா, செக் குடியரசு, குரேசியா ஆகிய நாடுகளும் முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகளான எஸ்தோனிய, லத்வியா, லித்துவேனியா ஆகியவையும் ஐக்கிய அமெரிக்கா தலைமையிலான நேட்டோவில் இணைந்ததும் இரசியாவைச் சிந்திக்க வைத்தது. பதிலடியாக தானும் யூரோ ஏசிய பொருளாதார சமூகத்தை உருவாக்கியது. ஐரோப்பிய ஒன்றியத்தின் விரிவாக்கத்தை இரசியா ஒரு ஜேர்மனிய ஆக்கிரமிப்பாகவே கருதியது. ஐரோப்பாவில் ஒரு முக்கிய நாடாகிய உக்ரேனை யார் பக்கம் இழுப்பது என்ற போட்டி இதை ஒட்டி ஆரம்பமானது. உக்ரேன் தனது யூரோ ஆசிய பொருளாதர சமூகத்தில் இணைய வேண்டும் என இரசியா உக்ரேனை நிர்ப்பந்தித்தது. மறுபுறம் நேட்டோவின் விரிவாக்கத்தை ஒரு அமெரிக்க ஆக்கிரமிப்பாகவும் இரசியா பார்த்தது. விளைவு உக்ரேனில் கிளர்ச்சிகள், இரத்தக் களரிகள் போன்றவை அரங்கேற்றப் பட்டு ஆட்சி மாற்றம் நிகழ்ந்தது. இரசிய ஆதரவு விக்டர் ஜனுக்கோவிச் பதவியில் இருந்து விரட்டப்பட்டு ஜேர்மனிக்கும் அமெரிக்காவிற்கும் ஆதரவான பெற்றோ பொறொசெங்கோ உக்ரேனிய 2014-ம் ஆண்டு அதிபரானார்.
மீண்டும் சோவியத் பேரரசு?
சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சி இருபதாம் நூற்றாண்டில் நடந்த ஒரு மோசமான விபத்து இரசியா மீண்டும் சோவியத் ஒன்றியப் போன்ற ஒரு பேரரசைக் கட்டி எழுப்ப வேண்டும் என்ற கொள்கையைக் கொண்ட விளடிமீர் புட்டீன் உக்ரேனில் 2014-ம் ஆண்டு நடந்த இரசியாவிற்கு எதிரான ஆட்சி மாற்றத்தால் வெகுண்டு எழுந்தார். உக்ரேனின் கிழக்குப் பகுதியில் இரசியர்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றனர். அவர்கள் உக்ரேனிற்கு எதிராகக் கிளர்ந்து எழுந்தனர். இரசியாவின் பெரும் கடற்படைத்தளம் அமைந்திருந்த உக்ரேனின் ஒரு பகுதியான கிறிமியாவை இரசியா ஒரு கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு நடாத்தி ஒரு வேட்டுக் கூட வெடிக்காமல் தன்னுடன் இணைத்துக் கொண்டது. அதைத் தொடர்ந்து இரசியாவிற்கு எதிராக பல ஐரோப்பிய நாடுகளும் வட அமெரிக்க நாடுகளும் பொருளாதாரத் தடை கொண்டு வந்தன. அத்துடன் தனது ஏற்றுமதி வருமானத்திற்கு எரிபொருளில் இரசியா பெரிதும் தங்கியிருப்பதால் எரிபொருள் விலை வீழ்ச்சியடையச் செய்யப் பட்டது. இது இரசியப் பொருளாதார வளர்ச்சியை இல்லாமல் செய்தது.
இரசியாவிற்கு உக்ரேனின் முக்கியத்துவம்
1. உக்ரேன் இரசியாவின் எதிரிகளின் கையில் இருந்தால் இரசியா தனது வல்லரசு என்ற நிலையை இழக்க வேண்டியிருக்கும் என்பது படைத்துறை நிபுணர்களின் கருத்து.
2. இரசியாவின் எரிபொருள் ஏற்றுமதியில் பெரும் பகுதி உக்ரேனுடாகச் செல்லும் குழாய்களூடாகவே நடக்கின்றன.
3. ஏற்கனவே லத்வியா, லித்துவேனியா, எஸ்த்தோனியா ஆகிய இரசியாவின் எல்லை நாடுகள் நேட்டோவில் இணைந்துள்ள நிலையில் நேட்டோ என்னும் அமெரிக்காவின் ஆதிக்கத்தில் உள்ள படைத்துறைக் கூட்டமைப்பில் இருந்து ஒரு கவசம் போல இரசியாவிற்கு இருந்தது உக்ரேன் மட்டுமே.
4. இரசியாவின் யூரோ-ஏசிய பொருளாதாரக் கூட்டமைப்பில் உக்ரேனின் இணைவு முக்கியமான ஒன்றாகும்.
5. இரசியா உக்ரேனைத் தனது பிடியில் இருந்து இழப்பது உலக அரங்கில் இரசியாவின் ஆதிக்கத்தை இல்லாத ஒன்றாக்கிவிடும்.
உக்ரேனை இரசியாவால் கைப்பற்ற முடியுமா?
அமெரிக்காவுடனான நேரடி அல்லது மறைமுகப் போருக்கு இரசியாக் காத்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. தனது படைவலுவை உலகிற்கு காட்ட இரசியா துடித்துக் கொண்டிருக்கின்றது. இரசியாவின் Satan 2 என சுருக்கமாக அழைக்கப்படும் Sarmat intercontinental ballistic missile ஒன்றை இரசியாவில் இருந்து வீசும் போது அது வானில் இருந்து வேறு வேறு இலக்குகளை நோக்கி தானாகவே 16 அணுக்குண்டுகளை வீசக் கூடியது. அதனால் ஒரு நாட்டையே அழிக்கலாம். உக்ரேனை இரசியாவால் கைப்பற்றுவது படைத்துறை ரீதியில் கடினமான ஒன்றல்ல. 2014-ம் ஆண்டின் பின்னர் இரசியர்கள் பெரும்பாலும் வாழும் டொன்பாஸ் என அழைக்கப் படும் உக்ரேனின் கிழக்குப் பிராந்தியத்தில் இரசியா உருவாக்கிய உள்நாட்டுப் போரால் அங்கு வாழும் 3.3 மில்லியன் மக்களில் 1.3 மில்லியன் மக்கள் உக்ரேனின் மேற்குப் பகுதிக்கு இடம் பெயர்ந்தார்கள். 500,000 மக்கள் இரசியாவிற்கு தப்பி விட்டார்கள். 100,000 மக்கள் வேறு நாடுகளுக்குச் சென்று விட்டார்கள். ஆனாலும் டொன்பாஸ் பிராந்தியத்தை உக்ரேனில் இருந்து பிரித்து தன்னுடன் இணைக்கவோ அல்லது தனி நாடாக்கவோ இரசியாவால் இதுவரை முடியவில்லை. இதற்குக் காரணம் படைத்துறை வலுவின்மையல்ல. இரசியாவிற்கு எதிரான பொருளாதாரத் தடையை நேட்டோ நாடுகள் மேலும் இறுக்கலாம் என்ற கரிசனையே. ஆறு இலட்சம் சதுர கிலோ மீட்டரைக் கொண்ட உக்ரேனைக் கைப்பற்றி தனது ஆதிக்கத்தில் வைத்திருப்பது இலகுவான காரியமல்ல. மசகு எண்ணெயின் விலை ஐம்பது டொலர்களுக்கும் குறைவாக இருக்கும் நிலையில் இரசியா பொருளாதார ரீதியில் உக்ரேனைக் கைப்பற்றி வைத்திருப்பது சாத்தியமல்ல.
உள்நாட்டுப் பொருளாதாரப் பிரச்சனை, சுற்றவர இருக்கும் பதவிப் ஆசை கொண்டவர்களின் பிரச்சனை, இரசியாவில் இருந்து மக்களும் மூலதனங்களும் வெளியேறும் பிரச்சனை ஆகியவற்றில் இருந்து தப்புவதற்கு பன்னாட்டு அரங்கில் இரசியாவை ஒரு போர் முனையில் வைத்திருப்பது புட்டீனின் செல்வாக்கிற்கும் பதவிக்கும் பாதுகாப்பாக அமையும். 2016 செப்டம்பர் மாதம் நடக்கவிருக்கும் பாராளமன்றத் தேர்தல் எப்படி நடக்கும் என்ன முடிவுகளைத் தரும் என்பதை புட்டீனால் தீர்மானிக்கும் அளவிற்கு அவரின் செல்வாக்கு இரசியாவில் உறுதியாக உள்ளது. ஆனால் இரசியாவின் பொருளாதாரம்?