சோவியத்
ஒன்றியம் இருக்கும் போது இரசியாவைச் சுற்றவர பல நாடுகள் இரசியாவிற்கு கவசப் பிரதேசங்களாக
இருந்தன. தற்போது இரசியாவுடன் பாதுகாப்பு உறவுகளைப் பேணும்
நாடுகள் ஆர்மீனியா, பெலருஸ், கஜக்ஸ்த்தான், கிரிகிஸ்த்தான், தஜிகிஸ்த்தான் ஆகிய நாடுகளாகும். இவற்றில்
இரசியாவின் மேற்கு எல்லையில் உள்ள பெலருஸ் அதன் பாதுகாப்பிற்கு மிகவும்
முக்கியமானதாகும். அந்த பெலருஸில் நடந்த தேர்தலில் இரசிய ஆதரவு ஆட்சியாளர் அலெக்சாண்டர் லுகஷெங்கோ முறைகேடாக வெற்றி
பெற்றதாக மக்கள் அவருக்கு எதிராக கிளர்ந்து எழுந்துள்ளனர். 1994-ம்
ஆண்டில் இருந்து நடந்த எல்லாத் தேர்தல்களிலும் வெற்றி பெற்ற அலெக்சாண்டர்
லுகஷெங்கோ 2020 ஓகஸ்ட் 9-ம் திகதி
நடந்து முடிந்த தேர்தலிலும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
யூரியூப்பில் எதிர்ப்புக் காட்டியவர்
கைது
காணொலித் துண்டங்கள் மூலம் அலெக்சாண்டர் லுகஷெங்கோவின் ஆட்சியின் ஊழல்களை அம்பலப்படுத்திய திகனொவிஸ்காயா கைது செய்து சிறையிலடைக்கப்பட்டார். இதனால் சினமடைந்த அவரது 37 வயது மனைவி அலெக்சாண்டர் லுகஷெங்கோவிற்கு எதிராக தேர்தலில் களமிறங்கினார். அவரது பரப்புரைக் கூட்டத்திற்கு மக்கள் பெருமளவில் கலந்து கொண்டனர். அவர் எழுபது விழுக்காடு வாக்குகளைப் பெற்று அதிபர் தேர்தலில் வெற்றியடைவார் என எதிர் பார்க்கப் பட்டது. ஆனால் தேர்தல் முடிவில் அலெக்சாண்டர் லுகஷெங்கோ எண்பது விழுக்காடு வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஐரோப்பிய ஒன்றியம், பிரித்தானியா, கனடா ஆகிய நாடுகள் தேர்தல் முடிவை ஏற்க மறுத்ததுடன் ஐரோப்பிய ஒன்றியம் தேர்தல் முறைகேடுகளுக்குப் பொறுப்பானவர்கள் மீது பொருளாதாரத் தடை விதித்தது. ஐரோப்பிய ஒன்றியம் தேர்தல் முடிவை ஏற்காத போதிலும் பெலருஸின் எதிர்க்கட்சிகள் கேட்டதைப் போல ஒரு மறுதேர்தலை இன்னும் வலியுறுத்தவில்லை. ஐரோப்பிய ஒன்றியம் தான் ஓர் அமைதியான ஆட்சி மாற்றத்தை விரும்புவதாகச் சொல்கின்றது. ஜேர்மனிய அதிபர் எஞ்சலாமேக்கல் தேர்தலில் வென்றதாக அறிவிக்கப்பட்ட அலெக்சாண்டர் லுகஷெங்கோவுடன் தொலைபேசியில் உரையாட முயன்றபோது அவர் மறுத்துவிட்டார். தனக்கு எதிராக தேர்தலில் போட்டியிட முயன்ற பலரை போட்டியிடும் தகுதியற்றவராக்கியிருந்தார் அலெக்சாண்டர் லுகஷெங்கோ. அவர்களின் மனைவியரும் திருமதி திகனொவிஸ்காயாவிற்கு ஆதரவாக களமிறங்கினார்கள். பொதுவாக கடும் குளிர்காலமான ஜனவரி அல்லது பெப்ரவரியில் லுகஷெங்கோ தேர்தலை நடத்துவது வழமை. பனிப்பொழிவால் மக்கள் நடமாட முடியாத நிலை அப்போது இருக்கும். அதனால் பரப்புரையும் அதிகம் நடக்காது அதிக வாக்களிப்பும் நடக்காது. லுகஷெங்கோ தனக்கு ஏற்றபடி வாக்களிப்புக்களைச் செய்யலாம்.
பெலருஸின் முக்கியத்துவம்
இரசியாவின்
மேற்குப் புறமாக உள்ள போலாந்து, லித்துவேனியா, லத்வியா, எஸ்த்தோனியா
ஆகிய நாடுகள் நேட்டோப் படைத்துறைக் கூட்டமைப்பில் இணைந்த பின்னர் இரசியாவின்
மேற்கு கவசப் பிராந்தியம் மிகவும் வலுவிழந்தது. பனிப்போருக்குப்
பின்னர் இரசியா தனது மிகப்பெரிய போர்ப்பயிற்ச்சியை 2017-ம் ஆண்டு செப்டம்பரில் பெலருசுடன் இணைந்து செய்தது. Zapad 2017 என்னும்
பெயரிடப்பட்ட இந்தப் போர்ப்பயிற்ச்சி நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும். இரசியாவின் Zapad 2017 என்னும் போர்ப் பயிற்ச்சி
இரசியாவின் மேற்குப் புறத்திலும் லித்துவேனியா, லத்வியா,
எஸ்தோனியா ஆகிய போல்ரிக் நாடுகளினதும் போலாந்தினதும் எல்லையிலும்
உள்ள பெலருஸ் நாட்டிலும் இரசியாவின் கட்டுப்பாட்டில் உள்ள கலினின்கிராட் என்ற போல்ரிக்கடற் துறைமுகத்திலும் நடந்தது. இரசியாவை சுற்றியுள்ள நாடுகளில் இரசிய சார்பு ஆட்சியாளர்கள் ஆட்சியில்
இருந்து அகற்றப்பட்டு மேற்கு நாடுகளுக்கு ஆதரவானவர்கள் ஆட்சிக்கு வரும் போதெல்லாம்
இரசியா கடுமையாக நடந்து கொள்ளும். ஜோர்ஜியா, உக்ரேன் ஆகிய இரண்டு நாடுகளிற்கு எதிராக
இரசியா படை நடவடிக்கைகளை மேற்கொண்டது.
பெலருஸில் இரசியக் கூலிப்படைகளா?
2020
ஓகஸ்ட் 9-ம் திகதி நடந்த தேர்தலுக்கு முன்னர் பெலருஸின் 33 இரசியக்
கூலிப்படையினரைக் கைது செய்ததாக பெலருஸ் அரசு அறிவித்திருந்தது.
இருநூறு இரசியக் கூலிப்படையினர் பெலருஸுக்குள் ஊடுருவியிருப்பதாக
கருதப்படுகின்றது. கடந்த சில மாதங்களாக இரசியாவிற்கும் பெலருஸின்
அதிபர் அலெக்சாண்டர்
லுகஷெங்கோவிற்கும்
இடையில் உறவு சற்று சீர் குலைந்திருந்தது. இரசியாவில் இருந்து பெலருஸிற்கு
வரும் நிதி உதவிகளும் குறைந்திருந்தது. சிரியா, லிபியா ஆகிய நாடுகளில் செயற்படும் இரசியத்
தனியார் படை அமைபான வக்னர் குழுவைச் சேர்ந்தவர்கள்தான் பெலருஸ் தேர்தலைக் குழப்ப முயன்றனர் என நம்பப்படுகின்றது. இரசியாவிற்கு
வேண்டியவரான லுகஷெங்கோ தேர்தலில் தோல்வியடையலாம் என்ற எதிர்பார்ப்பினால் இரசியக் கூலிப்படையினர்
தேர்தலை குழப்ப முயன்றனர் எனவும் கருதப்படுகின்றது. அப்படி தேர்தலைக் குழப்புவதிலும்
பார்க்க முறைகேடான தேர்தல் மூலம் தான் வெற்றி பெறலாம் என லுகஷெங்கோ நம்பிச் செயற்பட்டதால்
தேர்தலின் போது இரசியாவும் லுகஷெங்கோவும் எதிர் எதிராகச் செயற்பட்டிருக்கலாம். முறைகேடான
தேர்தலைச் சாட்டாக வைத்துக் கொண்டு மேற்கு நாடுகள் பெலருஸில்
தலையிடலாம் என இரசியா கரிசனை கொண்டிருந்திருக்கலாம். ஆனால் தேர்தல் முடிந்த பின்னர்
இரசிய அதிபர் விளாடிமீர் புட்டீன் அலெக்சாண்டர்
லுகஷெங்கோவிற்கு தனது வாழ்த்துச் செய்தியைத் தெரிவித்தார்.
வாழ்த்துச் செய்தி தெரிவித்த பின்னர் கூலிப்படையினர் எனச் சொல்லி கைது செய்து வைத்திருந்தவர்களை
லுகஷெங்கோ விடுதலை செய்தார்.
ஆர்ப்பாட்டம்
செய்பவரகள் மீது கடும் தாக்குதல்
அலெக்சாண்டர்
லுகஷெங்கோவின் ஆட்சிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்பவர்கள்
மீது அவரது கறுப்பு ஆடையணிந்த குண்டர்கள் குடமையாக தாக்குதல் செய்வதாக செய்திகள் வெளிவந்துள்ளன.
ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு ஆதரவாக ஓசை எழுப்பும் கார்களை அவர்கள் நொருக்குகின்றார்கள்.
இந்தக் குண்டர்களிடமிருந்து தப்ப பெலருஸ் ஆர்ப்ப்பாட்டக்காரர்கள்
சீனாவிற்கு எதிராக ஹொங் கொங் ஆர்ப்பாட்டக்காரர்கள் செய்தவற்றைப் பின்பற்றுகின்றார்கள்.
தாக்குதலுக்கு வரும் குண்டர்களின் நடமாட்டங்களை உன்னிப்பாகக் கவனித்து கைப்பேசிகள்
மூலமாக தகவல் பரிமாற்றம் செய்து ஆர்பாட்டம் செய்யும் இடங்களை மாற்றிக் கொண்டிருக்கின்றார்கள்.
அலெக்சாண்டர் லுகஷெங்கோ தனக்கு எதிராகப் போட்டியிட்ட திருமதி
திகனொவிஸ்காயாவையும் அவரது பிள்ளைகளையும் மிரட்டி அயல் நாடான
எஸ்தோனியாவிற்கு அனுப்பிவிட்டார். அப்படி அனுப்புவதால் ஆர்ப்பாட்டத்தை தணிக்கலாம் என
அவர் நம்பினார். ஆனால் அவர் எதிர்பார்த்தமைக்கு மாறாக ஆர்ப்பாட்டம் உக்கிரமாக நடக்கின்றது.
பிள்ளைகளை பணயக்கைதிகள் போல் வைத்திருந்து திருமதி திகனொவிஸ்காயாவை மிரட்டியதாகவும்
சொல்லப்படுகின்றது. இதற்கு முன்னரும் தன் அரசியல் எதிரிகளின் குடும்பத்தினரை சிறையிலடைத்து
மிரட்டினார் என அலெக்சாண்டர் லுகஷெங்கோவிற்கு எதிரனாவர்கள் சொல்கின்றார். திருமதி திகனொவிஸ்காயாவின் கணவர் இப்போதும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சீனா கரம் கொடுக்குமா?
அலெக்சாண்டர் லுகஷெங்கோ தேர்தலில் வெற்றி
பெற்றதாக அறிவித்தவுடன் அவருக்கு முதல் வாழ்த்துச் சொல்லியவர் சீன அதிபர் ஜீ ஜின்பிங்
ஆகும். சீன அதிபர் தனது வாழ்த்துச் செய்தியில் சீனாவிற்கும் பெலருஸிற்கும்
இடையிலான காத்திரமான கேந்திரோபாய பங்காண்மையை இரு தரப்பினருக்கும் பல துறைகளில்
நன்மை தரக்கூடிய வகையில் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வோம் எனக்
குறிப்பிட்டுள்ளார். சீனாவின் வாழ்த்து ஐரோப்பிய ஒன்றியத்தை அதிருப்தியடைய வைத்துள்ளது.
புட்டீன் படை
அனுப்புவாரா?
தேர்தலுக்கு முன்னர்
தேர்தலை இரசியா குழப்ப முயல்வதாக குற்றம் சாட்டிய அலெக்சாண்டர் லுகஷெங்கோ தேர்தலுக்குப்
பின்னர் தனது நாட்டில் மேற்கு நாடுகள் குழப்பம் விளைவிக்க முயல்வதாக குற்றம் சாட்டினார்.
2020 ஓகஸ்ட் 27-ம் திகதி இரசிய அதிபர் விளடிமீர் புட்டீன் அல் ஜசீராவிற்கு வழங்கிய
செவ்வியில் இரசியப் படையினர் பெலருஸிற்கு செல்லத் தயாராக இருப்பதாகவும் ஆனால் அனுப்புவதற்கான
தேவை இப்போது இல்லை எனவும் கூறியிருந்தார். மேலும் அச் செவ்வியில் பெலருஸின் அதிபர்
அலெக்சாண்டர் லுகஷெங்கோ தமது நாட்டில் அமைதியை நிலை நாட்ட இரசிய சட்ட அமூலாக்கப்
பிரிவினர் தயாராக இருக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டதாகவும் புட்டீன் தெரிவித்தார்.
பெலருஸில் மக்கள் அரசுக்கு எதிராக செய்யும் ஆர்ப்பாட்டம் வெற்றி பெற்றால் அதனால்
இரசியர்களும் உந்தப்பட்டு புட்டீனிற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் இறங்கலாம். பெலரஸு மக்கள் தங்கள் ஆர்ப்பாட்டத்தை அளவோடு வைத்திருக்க வேண்டும் அளவிற்கு மிஞ்சினால் இரசியா தலையிடும் என புட்டீன் எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.
"பெலருஸுக்கான எமது செய்தி தெளிவானது. வன்முறையை
ஏற்க முடியாது. அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படவேண்டும். மனித உரிமைகள்
மதிக்கப்படவேண்டும்" என்கின்றார் நெதர்லாந்து தலைமை அமைச்சர் மார்க் ரட்டே. ஆட்சியாளரை மாற்றுவது கடினம் என மேற்கு நாடுகள் கருதும்
இடங்களில் அந்த ஆட்சியாளரின் மனதை தமக்கு சாதகமாக மாற்ற முயல்வார்கள். அப்படி நடக்கும்
போது மனித உரிமை ஓரம் கட்டப்படும்.