Tuesday 8 December 2020

ஜப்பானுக்கு எதிராக புட்டீனின் குங்ஃபூ நகர்வு

 


வட மேற்கு பசுபிக் கடலில் இரசியாவிற்கும் ஜப்பானிற்கும் இடையில் பிராந்தியம் என்கின்றனர். இத்தீவுகள் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையிலான பிணக்கு நூறு ஆண்டுகளுக்கு மேல் தொடர்கின்றது. 2020 டிசம்பர் முதலாம் திகதி அத்தீவுகளில் இரசியா தனது எஸ்-300 ஏவுகணை எதிர்ப்பு முறைமைகளை நிறுத்தியது பிணக்கை தீவிரப்படுத்தியுள்ளது.


இரண்டு போர்களும் பல ஒப்பந்தங்களும்

1786-ம் ஆண்டு இரசியப் பேரரசி கதரீன் கியூரில் தீவுக் கூட்டம் தனது நாட்டின் ஒரு பகுதி எனப் பிரகடனம் செய்திருந்தார். 1855-ம் ஆண்டு இரசியாவும் ஜப்பானும் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படி கியூரில் தீவுக் கூட்டங்களின் நான்கு தீவுகள் ஜப்பானுக்கு உரியவை என்றும் ஏனைய வட பகுதி தீவுகள் இரசியாவிற்கு உரியவை என்றும் ஒத்துக் கொள்ளப்பட்டது. 1905-1906 இல் நடந்த ஜப்பானுக்கும் இரசியாவிற்கும் இடையிலான போரில் இரசியா தோல்வியடைந்ததால் கியூரில் தீவுக் கூட்டத்தின் சக்லின் தீவின் தென் பகுதி ஜப்பானுக்கு சொந்தமானது என ஒத்துக் கொள்ளப்பட்டது. பின்னர் இரண்டாம் உலக போரின் முடிவில் இரசியா (சோவியத் ஒன்றியம்) முழு கியூரில் தீவுக் கூட்டத்தையும் தனதாக்கிக் கொண்டது. அங்கிருந்த ஜப்பானிய மொழி பேசும் மக்கள் வெளியேற்றப்பட்டனர். இரண்டாம் உலகப் போரின் பின்னர் உலக அமைதியை நிலைநாட்ட 1951-ம் ஆண்டு நடந்த சன் ஃபிரான்சிஸ்க்கோ மாநாட்டில் ஜப்பான் கியூரில் தீவுகள் மீதான எல்லா உரிமைகளையும் கைவிட வேண்டும் என்று முடிவு செய்ததுடன் கியூரில் தீவுகளின் மீதான இரசியாவின் (சோவியத் ஒன்றியத்தின்) இறையாண்மையையும் அங்கு ஏற்றுக் கொள்ளப்படவில்லை. அதில் சக்கலின் தீவு தொடர்பாக ஒரு முடிவு எட்டப்படவில்லை. அது இரு நாடுகளுக்கும் சொந்தமானவை எனக்கருதப்பட்டது.



பனிப்போர்க்காலம்

1956-ம் ஆண்டு சோவியத் ஒன்றியமும் ஜப்பானும் மீண்டும் ஓர் உடன்படிக்கையை செய்து கொண்டன. அதன் படி கியூரில் தீவுக் கூட்டத்தின் சிறுபகுதியான சிக்கோட்டன், ஹபோமாய் ஆகிய தீவுகள் ஜப்பானிற்கு வழங்கப்பட்டன. 1960-ம் ஆண்டு ஜப்பானும் அமெரிக்காவும் பாதுகாப்பு உடன்படிக்கையை செய்து கொண்டதை விரும்பாத சோவியத் ஒன்றியம் ஜப்பானின் அந்நியப் படைகள் இருக்கும் வரை கியூரில் தீவில் ஜப்பானுக்கு இடமில்லை எனவும் 1956-ம் ஆண்டு செய்த ஒப்பந்தத்தை இரத்துச் செய்வதாகவும் அறிவித்தது. கியூரில் தீவுக் கூட்டங்களில் அமெரிக்கப் படைகள் நிலை கொள்ளலாம் என சோவியத் கரிசனை கொண்டிருந்தது.

சோவியத் வீழ்ச்சிக்குப் பின்னர்

1991 சோவியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் இரசியாவும் ஜப்பானும் கியூரில் தீவுக் கூட்டங்கள் தொடர்பாக தொடர் பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டன.

இதுருப், குணசீர், சிக்கோட்டன், ஹபோமை ஆகிய நான்கு தீவுகள் தொடர்பாக 2000-ம் ஆண்டில் விளடிமீர் புட்டீன் ஜப்பானுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். 2013-ம் ஆண்டு ஒரு தீவிர பேச்சு  வார்த்தையை இரு நாடுகளும் தொடங்கி நடத்திக் கொண்டிருக்கையில் இரசியா உக்ரேனுக்கு எதிராக செய்த நடவடிக்கைகளுக்கு ஆட்சேபனை தெரிவிக்கும் முகமாக ஜப்பான் பேச்சு வார்த்தையை நிறுத்திக் கொண்டது.

ஜப்பானின் புதிய தலைமை அமைச்சர்

ஜப்பானின் புதிய தலைமை அமைச்சர் யோசிகிடே சுகா பதவிக்கு வந்த பின்னர் 2020 செப்டம்பரில் இரசிய அதிபர் புட்டீனுடன் தொடர்பு கொண்டு கியூரில் தீவுப் பிரச்சனையை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டாம் எனத் தெரிவித்தார். அத்துடன் இரசிய ஜப்பானிய வர்த்தகத்தை விரிவு படுத்தும் விருப்பத்தைத் தெரிவித்தார். அவரின் எண்ணத்தை விளடிமீட் புட்டீன் தனது கவனத்தில் எடுத்துக் கொண்டார்.

 

இரசியாவின் பசுபிக் வாசலில் அந்நியரா?

இரசியாவில் இருந்து பசுபிக் நாடுகளுக்கும் தெற்காசிய நாடுகளுக்கும் வர்த்தகம் நடை பெறுவதற்கு இரசியாவின் கிழக்கெல்லையில் உள்ள கியூரில் தீவுக் கூட்டம் முக்கியமான ஒன்றாகும். நடுவண் ஆசிய நாடுகளில் சீனாவின் ஆதிக்கத்தை இரசியா எதிர் கொள்வதற்கும் கியூரில் தீவுக் கூட்டம் இரசியாவிற்கு அவசியமானதாகும்.

புட்டீனின் குங்குஃபூ அடி

சிரியா, உக்ரேன் ஆகிய நாடுகளில் செய்தது போல் தனது திடீர் படை நகர்வுகள் மூலம் பிராந்திய நலன்களை தூக்கி நிறுத்துவதில் மீண்டும் ஒரு முறை புட்டீன் வெற்றி கண்டுள்ளார். கியூரில் தீவில் தனது படை நிலைகளை வலுப்படுத்தியதன் மூலம் புட்டீன் ஜப்பானுடன் செய்யும் பேச்சு வார்த்தைகளில் தனது நிலையை வலிமையாக்க செய்த நகர்வுதான் கியூரில் தீவுகளில் எஸ்-300 ஏவுகணை ஏதிர்ப்பு முறைமைகளை நிறுத்தியது. இரசியாவுடன் இதுவரை மட்டுப்படுத்தப் பட்ட வர்த்தகத்தை செய்யும் ஜப்பான் தனது பொருளாதாரத்தை மேம்படுத்த இரசியாவுடன் அதிக வர்த்தகம் செய்ய விரும்புகின்றது என்பதை புட்டீன் ஜப்பானிய தலைமை அமைச்சருடனான பேச்சு வார்த்தையின் போது உணர்ந்து கொண்டுள்ளார். குங்குஃபு சண்டை வீரரான புட்டீன் எதிரியின் வலுவற்ற புள்ளியை அறிந்து தாக்குதல் செய்கின்றார்.


Monday 7 December 2020

நுண்மிய நாணயத்தில் புகலிடம் தேடும் அமெரிக்கா

  


பெரும் செல்வந்தர்கள் தமது மிகை நிதிக் கையிருப்பை பங்குச் சந்தை, அரசுகளின் கடன் முறிகள், புதிய முயற்ச்சிகள், தனியார் நிறுவனங்களின் கடன் முறிகள், தங்கம் போன்ற உயர் பெறுமதி உலோகங்கள், விளைபொருள் எதிர் நோக்கு ஒப்பந்தம், வங்கிக் கணக்குகள் போன்றவற்றில் முதலீடு செய்வார்கள். பொருளாதார நிலைமைகளுக்கு ஏற்ப தமது நிதியைப் பெருக்குவதையும் பாதுகாப்பதையும் நோக்கமாகக் கொண்டு தங்கள் முதலீடுகளை அவர்கள் அடிக்கடி மாற்றிக் கொள்வர். வங்கிகள், காப்புறுதி நிறுவனங்கள் ஊழியர் நலன் நிதியம், ஊழியர் ஓய்வூதிய நிதியம் போன்றவை தமது நிதியைப் பெருக்கவும் பாதுகாக்கவும் என்றும் விழிப்புடன் இருந்து பல துறைகளின் முதலீடு செய்கின்றன.

உறுதியான பொருளாதாரமும் முதலீடும்

பல நாடுகள் தங்களின் வெளிநாட்டுச் செலவாணிக் கையிருப்பை தங்கம், பன்னாட்டு நாணய நிதியம், அமெரிக்க திறைசேரி கடன் முறிகள் போன்றவற்றில் முதலீடு செய்கின்றன. அமெரிக்க டொலர், ஜப்பானிய யென், ஐரோப்பிய ஒன்றியத்தின் யூரோ ஆகிய நாணயங்கள் பன்னாட்டு நாணயங்கள் எனப்படுகின்றன. வலுவான பொருளாதாரம், உறுதியான ஆட்சி, வெளிப்படைத்தன்மையுள்ள நிதிக் கொள்கை, நம்பிக்கையான நடுவண் வங்கி ஆகியவற்றைக் கொண்டுள்ள நாடுகளின் நாணயங்களிலும் கடன் முறிகளிலும் மற்ற நாடுகள் தங்கள் வெளிநாட்டுச் செலவாணிக் கையிருப்பை முதலீடு செய்வர். உலகில் ஓர் உறுதியற்ற பொருளாதார நிலவும் போது நம்பிக்கையான நாடுகளின் நாணயங்களில் பெரும்பாலான முதலீட்டாளர்கள் முதலீடு செய்வர். பல அரசுகளும் முதலீட்டாளர்களும் அமெரிக்க திறைசேரியின் கடன்முறிகளில் முதலீடு செய்வதை வழமையாகக் கொண்டுள்ளனர். அவர்கள் வாங்கும் கடன் முறிகளின் கிடைக்கும் விலை அதிகரிப்பும் வட்டியும் அவர்களுக்கான வருவாயாக அமையும். அமெரிக்காவின் பணவீக்க விழுக்காட்டிலும் பார்கக வட்டி விழுக்காடு குறைவாக இருப்பதால் டொலரின் பெறுமதி குறையும். அமெரிக்காவால் வட்டி விழுக்காட்டை கூட்ட முடியாத நிலை தற்போது உள்ளது.



வலுவிழந்து நிற்கும் அமெரிக்க டொலர்

ஒரு நாட்டின் நாணயத்தின் பெறுமதி அந்த நாட்டின் பொருளாதார நிலை, வட்டி விழுக்காடு, அரசியல் உறுதிப்பாடு, பாதீட்டு குறை, ஏற்றுமதி/இறக்குமதி இடையிலான வித்தியாசம் போன்றவற்றில் தங்கியுள்ளது. 2020இன் பிற்பகுதியில் உள்ள பெறுமதியுடன் ஒப்பிடுகையில் 2023 டொலர் 15% வீழ்ச்சியடையலாம் என கோல்ட்மன் சாக்ஸ் எதிர்வு கூறியுள்ளது. Standard Chartered வங்கியின் சிங்கப்பூரில் உள்ள ஓர் ஆய்வாளரான Eric Robertsen அதை உறுதி செய்துள்ளார். தற்போது டொலரின் பெறுமதி உண்மையான பெறுமதியிலும் பார்க்க அதிகமாக உள்ளது என்பது கோல்ட்மன் சாக்ஸின் கருத்து. அதற்கான காரணம் கொவிட்-19 தொற்று நோயால் ஏற்பட்ட உலகப் பொருளாதார உறுதியற்ற தன்மையால் பல முதலீட்டாளர்கள் டொலரில் தங்கள் முதலீடுகளைச் செய்தமையே. உலக பொருளாதாரம் சீரடையும் போது அவர்கள் டொலரை விற்பனை செய்து வேறு இடங்களில் முதலீடு செய்யும் போது டொலரின் பெறுமதி வீழ்ச்சியடையும்.

புகலிடம் தேடும் முதலீட்டாளர்கள்

கொவிட்-19 தொற்று நோயின் பின்னர் அமெரிக்காவின் வட்டி விழுக்காட்டை அதிகரிக்க முடியாத அளவிற்கு அமெரிக்கப் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது. இதனால் பல முதலீட்டாளரகளும் அரசுகளும் தங்கள் வெளிநாட்டுச் செலவாணிக் கையிருப்பை அமெரிக்காவில் இருந்து எடுத்து வேறு நாடுகளில் முதலீடு செய்கின்றார்கள். தற்போது பெறுமதி குறைந்திருக்கும் இந்திய ரூபாயில் பலர் முதலீடு செய்கின்றார்கள். அமெரிக்க – சீன வர்த்தகப் போர், தொழில்நுட்பப் போர், நாணயப் போர் ஆகியவை தீவிரமடையும் போது சீனா அமெரிக்க திறைசேரியின் கடன் முறிகளை வாங்குவதைக் குறைக்கும் போது அல்லது நிறுத்தும் போது அமெரிக்க டொலரின் பெறுமதி பெருமளவு வீழ்ச்சியடையலாம்.



நுண்மிய நாணயங்கள்

அமெரிக்க டொலரின் பெறுமதி கேள்விக்குறியான நிலையில் நுண்மியமிய நாணயங்களில் (Cryptocurrency) பெருமளவு முதலீடு செய்யப்படுகின்றது. உலகெங்கும் பல நுண்மியமிய நாணயங்கள் இருக்கின்றன. அவற்றில் முதன்மையானதும் அதிகம் பேசப்படுவதும் பிட்கொயின்(Bitcoin) ஆகும். 2020-ம் ஆண்டு பின்கொயினின் பெறுமதி 13%இற்கு மேல் அதிகரித்துள்ளது. அதேவேளை அமெரிக்க டொலர் சுட்டியின் மதிப்பு 9% வீழ்ச்சியடைந்துள்ளது. பிட்கொயினின் பெறுமதி அதிகரிப்பு தங்கத்தின் பெறுமதி அதிகரிப்பிலும் மற்றும் பல நாடுகளின் பங்குச் சுட்டிகளின் அதிகரிப்பிலும் அதிகமாக உள்ளது. ஆரம்பத்தில் நுண்மியமிய நாணயங்கள் மீது முதலீட்டாளர்கள் நம்பிக்க அற்றவர்களாக இருந்தனர். அவற்றின் தொடர்ச்சியான் பெறுமதி வளர்ச்சியால் பல நாடுகளின் அரசுகள் நுண்மியமிய நாணயங்களை உருவாக்கியுள்ளன. சமூக வலைத்தளமான முகநூலும் 2021-ம் ஆண்டு லிப்ரா என்னும் நுண்மியமிய நாணயத்தை உருவாக்கவுள்ளது.

அமெரிக்க டொலருக்கு போட்டியாக மற்ற நாட்டு நாணயங்களின் பெறுமதி அதிகரிப்பைத் தடுக்கவும். உலகெங்கும் உள்ள முதலீட்டாளர்கள் நுண்மியமிய நாணயங்களில் முதலீடு செய்வதைத் தடுக்கவும் அமெரிக்காவின் நடுவண் வங்கி (Federal Reserve) தானும் ஒரு நுண்மியமிய நாணயத்தை உருவாக்க முடிவு செய்துள்ளது.

எண்மிய நாணயங்களும் நுண்மிய நாணயங்களும் (Digital Currencies and Cryptocurrencies)

இணையவெளியில் பலநாட்டு நாணயங்கள் பரிமாறப்படுகின்றதுடன் கொள்வனவுகளுக்கான கொடுப்பனவுகளாகவும் இருக்கின்றன. அவை எண்மிய நாணயங்கள் (Digital Currencies) எனப்படுகின்றன. ஆனால் நாடுகளின் நடுவண் வங்கிகள் பொருளாதார முகாமைக்காக உருவாக்கும் நாணயங்கள் போல இணையவெளியில் உருவாக்கப்பட்ட நாணயங்கள் நுண்மிய நாணயங்கள் (Cryptocurrencies) என அழைக்கப்படுகின்றன. எண்மிய நாணயங்களிற்கு என பெறுமதி இல்லை எந்த நாட்டு நாணயம் இணையவெளியில் பரிமாறப்படுகின்றதோ அந்த நாணயத்தின் பெறுமதிதான் அதற்கு உண்டு. தனாக பெறுமதி அதிகரிப்பதுமில்லை குறவதுமில்லை. ஆனால் நுண்மிய நாணயங்கள் தமக்கென ஒரு பெறுமதியைக் கொண்டுள்ளன. அவற்றில் செய்யப்படும் முதலீடுகளுக்கு ஏற்பவும் அவற்றின் மீதுள்ள நம்பிக்கைக்கு ஏற்பவும் அவற்றின் பெறுமதி ஏறி இறங்கும். மரபு வழி நாணயங்களின் பின்னால் ஓர் அரசு, அதன் நடுவண் வங்கி ஆகியவை இருக்கும். நாணயத் தாள்களில் அவற்றின் நாடுகளின் நடுவண் வங்கி சார்பில் கையொப்பமிட்டிருக்கும். பிட்கொயின் போன்ற நுண்மியநாணயங்களுக்கு அந்த மாதிரி இல்லை. இணையவெளியிலும் ஊழல்கள் நடக்க வாய்ப்புண்டு எனது பெயரில் இருக்கும் நுண்மிய நாணயம் எனக்குத் தெரியாமல் இன்னொருவர் பெயருக்கு மாற்றப்படலாம்.



அரச நணயத்தாள்கள் (Fiat Currencies): தங்கம் போன்றவற்றின் ஆதாரப் பின்னணியின்றி நாட்டில் அரசு புழக்கத்தில் விட்டுள்ள நாணயங்கள்

தொகுப்புச் சங்கிலிப் பேரேடு: இது ஒரு வகையான இணையவழி பேரேடு. இது வெளிப்படைத்தன்மையும் பாதுகாப்பும் மிகுந்தது. இதன் பாவனையாளர்கள் வெளி உதவியின்றி தாமாகவே தமது நாணய இருப்பைக் கையாளலாம். எண்மிய நாணயங்கள், நுண்மிய நாணயங்கள் போன்றவற்றின் செயற்பாடுகளுக்கு தொகுப்புச் சங்கிலிப் பேரேடு தொழில்நுட்பம் அவசியமானதாகும்.

எண்மிய நாணயங்கள் (Digital currencies): இவை வங்கிகளால் எண்மிய வடிவத்தில் பாவனைக்கு விடப்பட்ட நாணயங்களாகும்.

நுண்மிய நாணயங்கள் (Cryptocurrency): இவை பாதுகாப்பான நுண்மிய நாணயங்களாகும். தகவல்மறைப்பியல் அல்லது கமுக்கவியல் (Cryptography) என்ற தொழில்நுட்பத்தைப் பாவிப்பதால் இவை அந்தப் பெயரைப் பெற்றன. அத்தொழில்நுட்பம் பாவிக்கப்படுவதால் போலி நாணயங்களை உருவாக்க முடியாது. ஒரு நாணயக்கையிருப்பின் மூலம் இரட்டைக் கொடுப்பனவு செய்யும் ஏமாற்று வேலைகள் செய்ய முடியாது. பொதுவாக இவை எந்த ஓர் அரசினாலோ நடுவண் வங்கியாலோ கட்டுப்படுத்தப்படுத்தப் படாதவை. அதனால் இவை பரவலாக்கப்பட்ட நாணயங்கள் எனவும் அழைக்கப்படுகின்றன.

நடுவண் வங்கி எண்மியநாணயங்கள் (Central Bank Digital Currency)

எண்மிய நாணயங்களும் நுண்மிய நாணயங்களும் அதிகமாகப் பாவிக்கப்படுவதால் பல அரசுகளும் அவற்றின் நடுவண் வங்கிகளும் அவற்றில் அக்கறை காட்டத் தொடங்கியுள்ளன. நடுவண் வங்கிகளின் நுண்மியநாணயங்களை உருவாக்கத் தொடங்கியுள்ளன. அவை நடுவண் வங்கி எண்மியநாணயங்கள் (Central Bank Digital Currency) என அழைக்கப்படுகின்றன. உலகெங்கும் 200பில்லியன் டொலர் பெறுமதியிலும் அதிகமான 5400இற்கும் மேற்பட்ட நுண்மிய நாணயங்கள் புழக்கத்தில் உள்ளன. முதல் எண்மிய நாணயமான e-Gold என்பது கடன் அட்டை மோசடி செய்யும் சட்ட விரோதக் கும்பல்களால் நடத்தப்பட்டது. பிரேசில், இரசியா, இந்தியா, சீனா தென் ஆபிரிக்கா ஆகிய நாடுகளைக் கொண்ட பிரிக்ஸ் அமைப்பு அமெரிக்க டொலரின் உலக ஆதிக்கத்தை எண்மிய நாண்யத்தின் மூலம் ஒழிக்க முடியும் என்ற கருத்தையும் முன் வைத்திருந்தன.

எக்குவேடர், சீனா, சிங்கப்பூர், செனகல், தூனீசியா ஆகிய நாடுகள் நுண்மிய நாணயங்களை புழக்கத்தில் விட்டுள்ளன.

கொவிட்-19 தொற்று நோய்களுக்கான கொரோனா கிருமிகள் நாணயத்தாள்கள் மூலமும் பரவும் என்ற அச்சமும் எண்மிய நாணயங்களின் புழக்கத்தை அதிகரித்துள்ளன. எண்மிய நாணயங்களும் நுண்மிய நாணயங்களும் கொடுப்பனவுகளையும் பணப்பரிமாற்றத்தையும் செய்ய இலகுவானவையாகவும் மலிவானவையாகவும் இருக்கின்றன. எண்மிய நாணய கொடுப்பனவுகள் அமெரிக்க டொலரின் உலகளாவிய பாவனையைக் குறைக்கும் என நம்பப்படுகின்றது. அந்த இடைவெளியை அமெரிக்க நடுவண் வங்கி தனது சொந்த நுண்மிய நாணயத்தால் நிரப்ப முயல்கின்றது. நுண்மிய நாணயங்களை நடுவண் வங்கிகளும் அறிமுகம் செய்வதால் இணையவெளியில் நடக்கும் கொடுப்பனவகளைப் பற்றியும் நாணயப் புழக்கத்தையும் நடுவண் வங்கிகளால் அறிந்து கொள்ளவும் கட்டுப்படுத்தவும் முடியும். வரி எய்ப்பு மற்றும் பணச்சலவை போன்றவற்றை தடுக்க முடியும். 

சீனாவும் எண்மிய நாணயமும்

சீனாவில் பெருமளவு கொடுப்பனவுகள் எண்மிய நாணயத்தால் செய்யப்படுகின்றது. சீனர்கள் அதிக அளவு கைப்பேசிகளைப் பாவிப்பதால் அது நடக்கின்றது. சீனாவில் பிச்சைக்காரர்களுக்கு கூட எண்மியக் கொடுப்பனவுகள் செய்யப்படுகின்றன. 2020 ஜூன் மாதத்தில் சீன நடுவண் வங்கி தனது நுண்மியநாணயத்தை பரீட்சார்த்த அடிப்படையில் ஆரம்பித்தது. சீனாவில் 2020-ம் ஆண்டு நடக்கவிருக்கும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிக்கு பல்வேறு நாடுகளில் இருந்தும் வருபவர்கள் பாவிக்கக் கூடியவகையில் சீனா செயற்படுகின்றது. அதன் மூலம் சீனாவின் நுண்மியநாணயத்தின் பாவனையை உலகெங்கும் பரப்பலாம் என்பது சீனாவின் இலக்கு. பிட்கொயின் தனது நாட்டில் பாவிக்கப்படுவதை இல்லாமல் செய்வதற்கும் அமெரிக்க டொலர் மீது சீன அரசும் மக்களும் தங்கியிருப்பதைத் தடுப்பதற்கும் சீனா தனது நுண்மியநாணயத்தை அறிமுகம் செய்துள்ளது.

2020 செப்டம்பரில் அமெரிக்கா நுண்மியநாணய உருவாக்கத்தை திவிரப்படுத்தியமைக்கு இரண்டு காரணங்கள் உள்ளன. உலகில் மற்ற நாடுகள் தமது நாட்டு நாணயத்தில் நம்பிக்கை குறையும் போது அமெரிக்க டொலருக்கு தம் கையிருப்பை மாற்றுவர். இப்போது அமெரிக்க டொலர் மீது நம்பிக்கை குறைந்த நிலையில் வேறு நாடுகளின் நாணயத்திற்கு டொலர் மாற்றப்படாமல் இருக்க அமெரிக்கா தனது நுண்மிய நாணயத்தை உருவாக்குகின்றது. புதிய தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்வதில் சீனா முதலிடம் பெறாமல் இருப்பதில் அமெரிக்கா தற்போது அதிக கரிசனை காட்டுகின்றது. நுண்மிய நாணயத்தில் சீனாவிற்கு இணையாக அல்லது முன்னதாக நுண்மிய நாணயத்தை அமெரிக்க மக்கள் மத்தியில் மிகவும் பரவலாக பாவிக்கப்பண்ண அமெரிக்கா முயல்கின்றது.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...