Monday 14 September 2020

சீனாவால் ஏமாற்றப்பட்ட இந்தியாவின் சினம் எல்லை தாண்டுமா?

 

2020 செப்டம்பர் 7-ம் திகதி இந்தியா தனது ஒலியிலும் பார்க்க ஆறுமடங்கு வேகத்தில் பாயும் ஏவுகணைகளுக்கான செலுத்தியை வெற்றீகரமாகப் பரிசோதித்துள்ளது. அமெரிக்காஇரசியாசீனா ஆகிய நாடுகளின் வரிசையில் இந்தியாவும் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை வைத்திருக்கக் கூடிய நாடாக இணைந்துள்ளது. ஒலியிலும் பார்க்க ஐந்து மடங்கிற்கும் அதிகமாக பாயும் ஏவுகணைகளை (அதாவது மணித்தியாலத்திற்கு 6200கிலோ மீட்டர் வேகத்திலும் அதிகமாக) ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் என்பர். சீனா இதே பரிசோதனையை 2014-ம் ஆண்டில் செய்துவிட்டது. சீனாவிடம் தற்போது இருக்கும் ஹைப்பர்சோனிக் ஏவுகணை ஒலியிலும் பார்க்க பத்து மடங்கு வேகத்தில் பாயக் கூடியது. சீனா ஒலியிலும் பார்க்க இருபது மடங்கு வேகத்தில் பாயக் கூடிய ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை தற்போது உருவாக்கி வருகின்றது. இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான படைத்துறை தொழில்நுட்ப இடைவெளியை இது சுட்டிக்காட்டுகின்றது.

வட கிழக்கு இந்தியாவின் கோழிக்கழுத்து

இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களான அருணாசல பிரதேசம், அசாம், மிசோரம், நாகலாந்து, மணிப்புரி, திரிபுரா ஆகியவற்றை இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்துடன் இணைக்கும் அகலம் குறைந்த பாதை சில்குரி இணைப்புப் பாதை எனப்படும். இப்பாதையை துண்டித்தால் சீனாவால் இந்த இந்திய மாநிலங்களை இலகுவாக கைப்பற்ற முடியும். அதனால் இந்த சில்குரி இணைப்புப்பாதையை இந்தியாவின் கோழிக்கழுத்து என்பர். சீனாவின் சம்பி பள்ளத்தாக்கு இந்தியாவின் கோழிக்கழுத்துக்கு வைக்கப்பட்டுள்ள ஓர் ஆபத்தாக அமைந்துள்ளது. ஆனால் சம்பி பள்ளத்தாக்கினூடாக படையினரை பாரவகைப் படைக்கலன்களுடன நகர்த்துவது மிகவும் சிரமமான ஒன்றாக இருந்தது. பெருந்தெருக்கள் போடுவதில் அண்மைக்காலமாக அனுபவமும் திறனும் பெற்ற சீனா அந்த சம்பி பள்ளத் தாக்கினூடாக ஒரு தெருவை அமைத்து விட்டது அந்தத் தெருவை பூட்டானின் டொலம் அல்லது டொக்லா சமவெளியுடன் தொடுக்கும் வகையில் நீட்ட சீன முயற்ச்சி எடுத்த போது அதற்கு பூட்டான் ஆட்சேபனை தெரிவித்தது. பூட்டானின் வேண்டு கோளின் பேரின் அதனுடன் பாதுகாப்பு ஒப்பந்தம் செய்து கொண்ட இந்தியா தனது படையினரை அங்கு 2017 ஜூன் 16-ம் திகதி அனுப்பி அதை நிறுத்தும்படி வேண்டுகோள் விடுத்தது. பூட்டானில் இருக்கும் டொலம் சமவெளியில் இருந்து இந்தியாவின் சில்குரி இணைப்பாதை நோக்கி கீழ்முகமாகச் சரியும் நிலப்பரப்பு இருக்கின்றது. அதனால் இஸ்ரேலுக்கு கோலான் குன்றுகள் போலவும் இரசியாவிற்கு உக்ரேன் போலவும் இந்தியாவின் சிலிகுரி இணைப்பாதைக்கு டொலம் சமவெளி இருக்கின்றது. கீழ் நோக்கி சரிந்த நிலப்பரப்பினூடாக பாரவகைப் படைக்கலன்களை நகர்த்துவதும் தாக்குதல் செய்வதும் இலகுவானதாகும். இதனால் சினாவின் சம்பி பள்ளத்தாகில் இருந்து இந்தியாவிற்கு தொல்லை கொடுப்பதை சீனா பெரிதும் விரும்பி இருந்தது. இந்த வழமை மாறி 2020 மார்ச் மாத்தத்தில் இருந்து சீனா இந்தியா வசமுள்ள கஷ்மீரின் லடாக் பிரதேசத்தில் இந்தியாவிற்கு தொல்லை கொடுக்க தொடங்கியுள்ளது.

கொவிட்-19 வாய்ப்பாக்கிய சீனா

இந்தியா தனது ஹைப்பர்சோனிக் ஏவுகணையைப் பரிசோதித்த வேளையில் தற்போது கொதிநிலையில் உள்ள லடாக் பிரதேசத்தில் இந்தியாவும் சீனாவும் அச்சுறுத்தும் வகையில் வானை நோக்கி துப்பாக்கி வேட்டுகளைத் தீர்த்ததாக ஒன்றை ஒன்று குற்றம் சாட்டியுள்ளன. இந்தியா ஆண்டு தோறும் மார்ச் மாதத்தில் சீன எல்லையில் செய்யும் போர்ப்பயிற்ச்சியைக் கொவிட்-19 தொற்று நோய் காரணமாக இம்முறை செய்யவில்லை. மார்ச் மாதத்தில் இந்தியாவில் கொவிட்-19 தொற்று நோய் தீவிரமடைந்தும் சீனாவில் பெருமளவு தணிக்கப் பட்டும் இருந்த படியால் சீனா கஷ்மீரின் பௌத்தர்கள் அதிகம் வாழும் லடாக் பிரதேசம் சீனாவுடன் கொண்டுள்ள எல்லையில் பல படை நகர்வுகளை இரகசியமாகச் செய்து வலிமையாக நிலை எடுத்துக் கொண்டது. பின்னர் இரு நாட்டுப்படையினரும் படைக்கலன்களின்றி லடாக் எல்லைப் பிரதேசத்தில் மோதிய போது இந்தியப் படையினர் இருபது பேர் கொல்லப்பட்டனர். சீனா தனது தரப்பு உயிரிழப்பை வெளிவிடாத போதிலும் நாற்பது பேர்வரை கொல்லப்பட்டிருக்கலாம் எனச் சொல்லப்படுகின்றது.


பொருளாதாரத் தொடர்புச் சிக்கல். 
 

சீனாவின் மூன்றடி முன்னேறி பின் பேச்சு வார்த்தையில் பின்னர் இரண்டடி “பெருமையுடன்” பின்வாங்கும் தந்திரம் இந்தியாவை விரக்தியில் விளிம்பிற்கு தள்ளிவிட்டது. மேலும் இந்திய சீனா இடையிலான் வர்த்தகத்தின் சமநிலை இந்தியாவிற்கு பெரும் பாதகமான நிலையில் இருக்கின்றது. சீன தொழில்நுட்ப நிறுவனங்கள் உலகளாவிய ரீதியில் தம் முதலீடுகளை விரிபடுத்த முன்னர் இந்தியாவின் தமது முதலீட்டைச் செய்து பரீட்சித்துப் பார்க்கின்றன. 2019-ம் ஆண்டு சீனத் தொழில்நுப்ட நிறுவனங்கள் இந்தியாவில் 3பில்லியன் டொலருக்கும் அதிகமான முதலீடுகளைச் செய்தன. இந்திய நிறுவனங்களுக்கு சீனாவின் மலிவு விலைத் தொழில்நுட்பங்கள் தேவையான் ஒன்றாகவே இருக்கின்றன. 


எல்லையில் சீனப் படை நடவடிக்கைகளிலும் பார்க்க சீனாவின் பொருளாதார நடவடிக்கைகளே இந்தியாவிற்கு நீண்ட கால அடிப்படையில் ஆபத்து விளைவிக்கக் கூடியவையாக இருக்கினறன. இந்தியாவை ஆளும் கட்சிகளுக்கு நிதி உதவி செய்யும் பெரும் பணக்காரர்கள் இந்திய சீன வர்த்தகத்தால் பெரும் இலாபம் ஈட்டுகின்றார்கள். 2020 ஜுனில் நடந்த லடாக் எல்லைப் பகுதியில் நடந்த இந்திய சீன மோதலின் பின்னர் சீனாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்களை துறைமுகங்களிலும் விமான நிலையங்களிலும் வைத்து அனுமதிக்கும் செயலில் வேண்டுமென்றே நீண்ட தாமதத்தை செய்தது. அத்துடன் சீனாவின் பல செயலிகள் இந்தியாவில் தடைசெய்யப்பட்டன. ஆனால் ஹுவாவே நிறுவனத்தின் தொழில்நுட்பங்களை அமெரிக்காவைப் போல இந்தியாவால் தடை செய்ய முடியவில்லை. அந்தத் தொழில்நுட்பங்களைப் பாவிக்கும் இந்தியக் கைப்பேசி நிறுவனங்களின் உரிமையாளர்கள் இந்திய ஆட்சியாளர்களுக்கு வேண்டப் பட்டவர்களாக இருக்கின்றனர்.ச் எல்லையில் தொல்லை கொடுப்பதால இந்தியாவிற்கு பல பொருளாதார நெருக்கடிகளை சீனாவால் ஏற்படுத்த முடியும். ஆனால் உலகெங்கும் தற்போது சீனாவிற்கு எதிரான ஒரு மனப்பாங்கு பல தரப்பிலும் அதிகரிக்கும் நிலையில் சீனா பல பின்னடைவுகளை நீண்ட கால அடிப்படையில் சந்திக்க வேண்டி வரலாம். 


அமெரிக்கா இந்தியாவைத் தூண்டியதா?

சீனா தைவாவானை தன்னுடன் இணைக்கும் படைநகர்வைச் செய்தால் அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையில் போர் வெடிக்கும். 2019-ம் ஆண்டில் இருந்து சீனா தைவானைக் கைப்பற்றலாம் என செய்திகள் வந்து கொண்டிருந்த வேளையில் அமெரிக்க சீனப் போர் நடக்கும்போது சீன வலிமையை ஐதாக்குவதற்காக இந்தியா தனது சீன எல்லையில் படைநகர்வுகளை மேற்கொள்ள வேண்டும் என அமெரிக்கா இந்தியாவை வேண்டியிருந்தது. அதனால் ஊக்கமடைந்த இந்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா 2019 ஓகஸ்ட்டில் இந்தியப் பாராளமன்றத்தில் முழுக் கஷ்மீரையும் (பாக்கிஸ்த்தான் வசமுள்ளதும் சீனா வசமுள்ளதும்) கைப்பற்றுவோம் என சூளுரைத்திருந்தார். இதனால் சீனம் கொண்ட சீனா அன்றில் இருந்து கஷ்மீர் எல்லையில் இந்தியப் படைகளுக்கு தொந்தரவு கொடுப்பதையும் எல்லை தாண்டிச் சென்று படை நிலைகளை அமைப்பதையும் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றது. அது மட்டுமல்ல அமெரிக்காவின் வேண்டுகோளின்படி இந்தியா சீனாவிற்கு எதிராக படை நகர்வுகளை மேற்கொண்டால் பாக்கிஸ்த்தானும் இந்திய எல்லையில் தனது இந்திய எதிர்ப்பு நடவடிக்கைகளை செய்யலாம எனவும் நம்பப்படுகின்றது. முன்னர் சீனாவின் பல எல்லைத் தொல்லைகள் அருணாச்சலப் பிரதேசத்தையும் இந்திய வடகிழக்கு மாநிலங்களை நடு இந்தியாவுடன் இணைக்கும் கோழிக்கழுத்து எனப்படும் அகலம் குறைந்த நிலப்பரப்பையும் இலக்கு வைத்தே செய்யப்பட்ட்ன.




சீனப்படையினர் மீது திபெத்தியர் தாக்குதல்

2020 ஓகஸ்ட் 31-ம் திகதி இந்தியாவின் இரண்டாம் காலாண்டிற்கான மொத்தத் தேசிய உற்பத்தி 23.9 விழுக்காட்டால் வீழ்ச்சியடைந்ததுள்ளது என்ற செய்தி வெளிவந்தது. மறுநாள் லடாக் பிரதேசத்தில் பாங்கொங் ஏரியில் வடக்குப்புறமாக உள்ள Spanggur ஏரிக்கு அண்மையாக உள்ள ஒரு சிறிய சமதரையான Spanggur Gap என்ற இடத்தில் சீனப்படையினரும் சீனாவின் மலையேறிகளும், குத்துச் சண்டைக்காரர்களும் நிலைகொண்டனர். இதை ஓரு தாக்குதலுக்குரிய நகர்வாக (offensive deployment) இந்தியா பார்த்தது. திபெத்தியர்களைக் கொண்ட சிறப்பு எல்லைப் படையினரை களத்தில் இறக்கி சீனாவின் Spanggur Gap சுற்றவர உள்ள குன்றுகளின் சிகரங்களைக் இந்தியா கைப்பற்றியது. இதனால் உள்ள சீனப் படையினரைச் சுற்றவர இந்தியப் படைகள் உயரமான இடங்களில் நிலைகொண்டனர். இதனால் Spanggur Gap இல் சீனாவிற்கு மிகவும் பாதகமான நிலை உருவாகியுள்ளது. சிகரங்களைக் கைப்பற்ற செய்த தாக்குதலில் இந்தத் தாக்குதலி நியிமா தென்ஞின் (Nyima Tenzin) என்ற தீபெத்தியப் போராளி கொல்லப்பட்டார். இந்தச் செய்தியை இந்திய ஊடகங்கள் உடனடியாக வெளியிட்டதுடன் தாக்குதல் செய்தவர் இந்தியாவின் உளவுத்துறையான ரோவின் கீழ் மிக இரகசியமாகச் செயற்படும் தீபெத்தியர்களைக் கொண்ட ஒரு சிறப்புப் படையணியைச் சேர்ந்தவர் என்ற தகவலையும் வெளிவிட்டன. வழமைக்கு மாறாக இம்மோதலை உறுதி செய்த சீனா தாம் எந்த ஒரு இந்தியப் படைவீரரையும் கொல்லவில்லை என்றும் சொல்லியது. இந்த உடனடிச் செய்தி வெளியிடல் இந்தியப் பொருளாதாரம் தொடர்பாக ஆளும் கட்சிக்கு பாதகமான செய்தியைத் திசை திருப்பவா அல்லது இந்தியா சீனாவிற்கு ஒரு புதிய செய்தியைத் தெரிவிக்கவா?

இந்திய உளவுத்துறையின் கீழ் திபெத் படையணி

1959-ம் ஆண்டு திபெத்தை சீனா ஆக்கிரமித்த பின்னர் பல தீபெத்தியர் இந்தியாவில் தஞ்சம் புகுந்தனர். 1962-ம் ஆண்டு சீனா இந்தியா மீது போர் தொடுத்த பின்னர் இந்தியாவில் உள்ள திபெத்தியர்களுக்கு படைப்பயிற்ச்சி அளிக்கப்பட்டு அவர்கள் இந்திய உளவுத்துறையின் கீழ் மிக இரகசியமாகச் செயற்படுகின்றனர். அந்தப் படையணி தொடர்பான எந்தப் பதிவேடுகளும் இந்தியப் படைத்துறையினரிடம் இல்லை. ஆரம்பத்தில் இவர்களுக்கு அமெரிக்க உளவுத்துறையான சிஐஏயும் எல்லைதாண்டிச் சென்று தாக்குதல் செய்வது உட்பட பல பயிற்ச்சிகளை வழங்கியது. 

எட்டு விரல்களில் எட்டா விரலாக நாலாம் விரல்

கஷ்மீரின் ஒரு பகுதியான லாடாக்கில் இந்திய சீன எல்லையில் பங்கொங் என்னும் ஏரி உள்ளது. உலகிலேயே கடல் மட்டத்தில் இருந்து மிக உயரனாம இடத்தில் அதாவது பதினான்காயிரம் அடி உயரத்தில்  இருக்கும் இந்த ஏரியின் (மேற்குப் பக்கமாக 45 கிலோ மீட்டர்) மூன்றில் ஒரு பகுதி இந்தியா வசமும் (கிழக்குப் பக்கமாக 135கிலோ மீட்டர்) மூன்றில் இரண்டு பகுதி சீனா வசமும் உள்ளன. லடாக் மொழியில் பங்கொங் என்றால் உள்வளைவு எனப் பொருள்படும். இந்த உப்பு நீர் கொண்ட ஏரிக்கு என ஒரு பொருளாதார முக்கியத்துவமோ அல்லது கேந்திர முக்கியத்துவமோ இல்லை. இந்த ஏரியை நோக்கி சீனா கடந்த பல ஆண்டுகளாக பல படைத்துறை உட்கட்டுமானங்களை தொடர்ந்து செய்து தமது படை நகர்த்தல்களை இலகுவாக்கியுள்ளது. இந்த ஏரியின் வடபுறத்தில் உள்ள மலைகளில் இருந்து ஏரியை நோக்கிச் சரியும் பள்ளத்தாக்குகள் எட்டு உள்ளன. அதன் உச்சியில் படையினர் நிலை கொண்டிருப்பது எதிரியைத் தாக்குதவற்கு இலகுவானதாகும். எட்டு விரல்களில் நான்கு விரல்கள் இந்தியா வசமும் நான்கு விரல்கள் சீனா வசமும் இருக்கின்றன. இந்திய சீன எல்லையை ஒட்டி இருக்கும் நான்காம் விரல் இந்தியாவின் வசம் உள்ளது இதன் உச்சி மற்றவற்றிலும் பார்க்க உயரமானது. 1962இல் நடந்த இந்திய சீனப் போரில் இந்த நான்காம் விரலில் இருந்து ஆயிரக்கணக்கன சீனப் படையினரை சில நூற்றுக் கணக்கான இந்தியப் படையினர் பெரும் இழப்புக்களுடன் விரட்டினர்.

மலாக்காவில் மல்லாக்காக வீழ்த்துதல்

இந்தியாவிற்கு கஷ்மீர் எல்லைப் பகுதியில் தொல்லை கொடுத்தால் சீனாவின் சரக்குக்கப்பல்கள் மீது மலாக்கா நீரிணையில் வைத்து இந்தியா தாக்குதல் நடத்தும் எனச் சில செய்திகள் இந்தியாவில் இருந்து வெளிவந்தன அதற்கு சீனா மசியாத நிலையில் திபெத்தியர்களைக் கொண்ட படையணியின் செய்தி கசிய விடப்பட்டுள்ளது. திபெத்தியர்கள் மூலம் சீனாவிற்கு தொல்லை கொடுப்போம் என்ற செய்தியை இந்தியா சீனாவிற்கு சொல்கின்றதா. அமெரிக்க உளவுத்துறையிடம் திபெத் திட்டம் ஒன்று நீண்ட நாட்களாக இருந்து வருகின்றது. இந்திய அமெரிக்க உளவுத் துறைகள் திபெத்தில் இணைந்து செயற்படலாம்.

நான்காம் விரலைக் கைப்பற்றுவதற்கு இந்தியா என்ன எதிர்வினையாற்றும் என்பது பற்றி சீனா குறைத்து மதிப்பிட்டு விட்டது. சீனப் படையினர் எல்லை தாண்டிச் சென்றதற்கான செய்மதிப் படங்களைப் பார்த்த இரசியாவும் சீனாமீது விசனமடைந்துள்ளது. அதன் விளைவை இரசிய அதிபர் விளடிமீர் புட்டீன் ஏற்பாடு செய்த மொஸ்க்கோ பேச்சு வார்த்தையின் போது அது வெளிப்பட்டது. ஆறாயிரம் முதல் ஏழாயிரம் திபெத்தியப்படையினரைக் கொண்ட ஒரு படையணியால் சீனாவிற்கு பெரும் படைத்துறை இழப்பைச் செய்ய முடியாது என்றாலும் சிறு குழுக்களாக இந்திய எல்லையில் செயற்படும் சீனப் படையினருக்கு அவர்கள் பெரும் அச்சுறுத்தலாக இருப்பர். இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் உள்ள உடன்பாட்டின்படி எல்லையில் இருதரப்புப் படைகளும் படைக்கலன்கள் இன்றியே நடமாட வேண்டு. அந்த உடன்பாடு திபெத்தியப் படையினரைக் கட்டுப்படுத்தாது. அவர்களைப் பொறுத்தவரை அது இந்திய திபெத்திய எல்லை.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...