Tuesday, 21 November 2017

சவுதி அரேபிய ஈரானிய பிராந்திய ஆதிக்கப் போட்டி

சிரியா, ஈராக், லெபனான், யேமன் ஆகிய நாடுகளில் நடக்கும் மோதல்களுக்கும் இரத்தக்களரிக்கும் காரணம் சுனி இஸ்லாமியர்களுக்கும் சியா இஸ்லாமியர்களுக்கும் இடையில் நடக்கும் மோதல் அல்ல. அந்தப் போர்வையில் ஈரானிய ஆட்சியாளர்களுக்கும் சவுதி அரேபிய ஆட்சியாளர்களுக்கும் இடையில் இடையில் உள்ள பிராந்திய ஆதிக்கப் போட்டியே காரணமாகும். லெபனானின் தலைமை அமைச்சர் சாட் ஹரிரீ 2017 நவம்பர் 4-ம் திகதி தன்னைக் கொல்ல ஒரு சதி நடப்பதால தான் பதவி விலகுவதாகச் சொல்லும் ஒலிப்பதிவு செய்யப்பட்ட ஒரு செய்தி சவுதி அரேபிய ஊடகங்களில் வெளிவந்தது. அதில் அவர் லெபனானில் தலையிடுவதாக ஈரானையும் லெபனானை ஒரு பணயக் கைதி போல் வைத்திருப்பதகா ஹிஸ்புல்லா அமைப்பையும் குற்றம் சாட்டியிருந்தார்.  இது சவுதி அரேபியாவிற்கும் ஈரானுக்கும் இடையிலான போட்டி லெபனானில் தீவிரமடையப் போவதைக் கட்டியம் கூறியது. 

ஹிஸ்புல்லாவிற்கு எதிரான சவுதியின் முதல் நகர்வு
சவுதி அரேபியா லெபனான் தலைமை அமைச்சர் சாட் ஹரிரீயை மிரட்டிப் பதவி விலக வைப்பதாகப் பரவலான குற்றச் சாட்டுகள் எழுந்தன. லெபனானியப் படைத்துறையினரும் அதன் அதிபர் மைகேல் ஔனும் லெபனானில் ஹரிரீக்கு ஆபத்தில்லை எனத் தெரிவித்தனர். ஹரிரீயின் பதவி விலகலைத் தொடர்ந்து லெபனானில் உள்ள சவுதி அரேபியக் குடிமக்களை நாடு திரும்புமாறு கோரும் அறிவுறுத்தலை அரசு வெளியிட்டது. சவுதி அரேபியாவின் ஆட்சியில் அதிக அதிகாரம் செலுத்தும் இளவரசர் முஹம்மது பின் சல்மன் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பல தீவிர நடவடிக்கைகளை மேற் கொள்கின்றார். அவரது நடவடிக்கைகள் அவரை பயமறியா இளங்கன்றா என ஒரு புறமும் சிறு பிள்ளை வேளாண்மை என மறு புறமும் சிந்திக்க வைக்கின்றன. அமெரிக்காவின் சமாதானத் திட்டத்தை பலஸ்தீனியர்களின் தலைவரனால மஹ்மூட் அப்பாஸ் ஏற்க வேண்டும் அல்லது பதவி விலக வேண்டும் என சவுதி அரேபியா உத்தரவிட்டதாக இஸ்ரேலிய ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டதை பலஸ்தீனிய அதிகாரிகள் மறுத்துள்ளனர். ஈரானின் பிராந்திய ஆதிக்கத்தின் முக்கிய கருவியான ஹிஸ்புல்லாவை ஒழித்துக் கட்டும் முயற்ச்சியில் சவுதி அரேபியா தீவிரமாக இறங்கப் போவதற்கான முதல் நகர்வுதான் ஹரிரீயின் பதவி விலகல்.  


ஹிஸ்புல்லாவின் தோற்றமும் வளர்ச்சியும்
லெபனானை மையமாகக் கொண்டு செயற்படும் ஹிஸ்புல்லா அமைப்பு ஈரானின் ஆதரவுடன் செயற்படும் அமைப்புக்களில் வலிமை மிக்கதாகும். 1978இல் அமெரிக்க நகர் காம்ப் டேவிட்டில் எகித்தும் இஸ்ரேலும் ஒப்பந்தம் கைச்சாத்திட்ட பின்னர் ஜோர்தானும் பலஸ்த்தீனிய விடுதலை அமைப்பில் அக்கறை இன்றி இருந்தது. அதை தனக்கு வாய்ப்பாகப் பயன் படுத்தி கலிலீ படை நடவடிக்கை முலம்  தெற்கு லெபனானை ஆக்கிரமித்து அங்கு இருந்த பலஸ்த்தீனிய விடுதலை அமைப்பினரை விரட்டியது. பின்னர் இஸ்ரேல் அங்கு தொடர்ந்து நிலை கொண்டது. இஸ்ரேலியப் படையினரை எதிர்க்க லெபனானில் வாழும் சியா இஸ்லாமியர்களைக் கொண்டு ஈரானால் ஹிஸ்புல்லா அமைப்பு உருவாக்கப்பட்டது. 22 ஆண்டு கால ஆக்கிரமிப்பை ஹிஸ்புல்லாப் போராளிகளின் தொடர் போராட்டத்தால் 2000-ம் ஆண்டு வெளியேறியது. 1983-ம் ஆண்டு அமைதிப் படை என்ற பெயரில் லெபனானில் நிலை கொண்டிருந்த அமெரிக்க மற்றும் பிரெஞ்சுப் படைகள் மீது தற்கொடைத் தாக்குதல் மேற்கொண்டு 241 அமெரிக்கப் படையினரையும் 58 பிரெஞ்சுப் படையினரையும் கொன்றனர். 2006-ம் ஆண்டு ஈரானிய ஆதரவுடன் லெபனானில் இயங்கும் சியா முஸ்லிம் அமைப்பான ஹிஸ்புல்லா இஸ்ரேலுக்குள் சென்று தாக்குதல் நடத்தி ஐந்து இஸ்ரேலியப் படையினரைக் கொண்டு இருவரைச் சிறைப்பிடித்தது. இவற்றால் ஹிஸ்புல்லாவை ஒரு வலிமை மிக்க போராளி அமைப்பாக உலகம் பார்க்கத் தொடங்கியது. ஹிஸ்புல்லா ஒரு அமைப்பாக இருந்தாலும் மேற்காசியாவில் உள்ள பல அரச படைகளை வெட்கமடையச் செய்யுமளவிற்கு அது போர் செய்யும் திறன் மிக்கது.

பிரச்சனை மிக்க லெபனானில் வலிமை மிக்க ஹிஸ்புல்லா
சிரியா, ஈராக், யேமன் ஆகிய நாடுகளில் ஹிஸ்புல்லா அமைப்பு ஈரானிற்கு ஆதரவாகவும் சவுதி அரேபியாவின் நலன்களுக்கு எதிராகவும் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது. 30,000இற்கு மேற்பட்ட படையினரைக் கொண்ட ஹிஸ்புல்லா அமைப்பு லெபனான் அரச படைகளிலும் பார்க்க வலிமை மிக்கதாகும். ஹிஸ்புல்லா அமைப்பிடம் ஒரு வலிமை மிக்க அரசியல் பிரிவும் உண்டு. லெபனானில் 27 விழுக்காடு சியா முஸ்லிம்கள், 27 விழுக்காடு சுனி முஸ்லிம்கள், 5.6 விழுக்காடு துரூஷ் இனத்தவர்கள், 40.4 விழுக்காடு கிறிஸ்த்தவர்கள் வாழ்கின்றனர். முதலாம் உலகப் போரின் பின்னர் பிரித்தானியாவும் பிரான்ஸும் திட்டமிட்டு லெபனானை ஒரு கிறிஸ்த்தவர்களைப் பெரும் பான்மையினராகக் கொண்ட நாடாக உருவாக்கின. ஆனால் இஸ்லாமியர்களின் மக்கள் தொகை பின்னர் அதிகரித்து விட்டது.

ஐ எஸ் அமைப்பைப் போன்ற சவுதி
சிரியாவிலும் ஈராக்கிலும் ஐ எஸ் அமைப்பு தமது ஆதிக்கத்திற்கு உட்பட்ட நிலப்பரப்பில் இஸ்லாமிய சட்டத்தை நடைமுறைப் படுத்திய போது சவுதி அரேபியாவில் நடப்பதும் அதுதான் எனப் பல ஆய்வாளர்கள் கருத்து வெளியிட்டனர். ஒரு நாடு தமது உலக வர்த்தகத்திற்கு பாதிப்பு இல்லாமல் இருக்கும் வரை அந்த நாட்டின் ஆட்சி என்பது எப்படி நடக்கின்றது என்பதையிட்டு மேற்கத்தைய நாடுகள் அலட்டிக் கொள்ள மாட்டாது. ஆட்சியாளர்கள் தமது பொருளாதார ஒழுங்குக்கு விரோதமாகச் செயற்படும் போது மட்டும் அவர்களின் ஆட்சி முறைமை மனித உரிமைச் செயற்பாடுகள் பற்றிப் பெரிது படுத்துவார்கள். மும்மர் கடாஃபின் ஆட்சியின் கீழ் லிபியாவும் சதாம் ஹுசேய்னின் ஈராக்கும் அவர்களின் ஆட்சியில் இருந்த நிலையுடன் ஒப்பிடுகையில் மிக மிக மோசாமான நிலையில் இப்போது இருக்கின்றன

தொடரும் சவுதிச் சறுக்கல்கள்
சவுதி அரேபியா தொடர்ச்சியாகச் செய்து வரும் அரசுறவியல் தவறுகளால் சிரியாவிலும் யேமனிலும் இரத்தக் களரி தொடர்கின்றது; இஸ்ரேல் தட்டிக் கேட்பாரின்றி இருக்கின்றது; லெபனானில் மீண்டும் ஓர் உள்நாட்டுப் போர் உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது. வளைகுடா நாடுகளிடையேயான ஒற்றுமை ஆபத்துக்கு உள்ளாகின்றது. கட்டாருக்கு எதிரான சவுதி அரேபியாவின் நகர்வுகள் இரசியாவிற்கு மேலும் ஒரு பிடியை மேற்காசியாவில் வழங்குகின்றது. சிரியாவில் அதிபர் அல் அசாத்தை ஆட்சியில் இருந்து அகற்றுதல், ஈரானிய ஆதிக்கத்தை ஒழித்தல், ஹிஸ்புல்லாவை அடக்குதல் ஆகிய மூன்று நோக்கங்களிலும் சவுதி அரேபியா தோல்வி கண்டுவிட்டது. இத்தனைக்கும் நடுவில் டொனால்ட் டிரம்பின் ஆட்சியின் ஆதரவு சவுதி அரேபியாவிற்கு உண்டு.

சவுதி அரேபியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான உறவு 1933இல் இருந்து 1945 வரை அமெரிக்க அதிபராக இருந்த ஃபிராங்லின் ரூஸ்வெல்ற் காலதில் இருந்து கட்டி எழுப்பப்பட்டது. மேற்காசியாவிலிருந்தும் வட ஆபிரிக்காவிலிருந்தும் சீரான எரிபொருள் விநியோகத்தை உறுதி செய்வதற்கு இரு நாடுகளும் இணைந்து செயற்பட்டன. அமெரிக்காவிலிருந்து அதிக படைக்கலன் கொள்வனவு செய்யும் நாடாக சவுதி அரேபியா இருந்து வருகின்றது. அரேபியா தனது பாதுகாப்பை தாமே பர்த்துக் கொள்ளாமல் அமெரிக்கா எப்போதும் உத்தரவாதமளிக்கும் என தொடர்ந்தும் நம்பியிருப்பது அமெரிக்கப் பாதுகாப்புத் துறையினரை விரக்திக்கு உள்ளாக்கி விட்டது. அமெரிக்கா தன் நிலையை மாற்றிய போது சவுதி அரேபியா அமெரிக்காவைத் திருப்திப் படுத்த கட்டுப்பாட்டுக்குள் வைந்திருந்த தனது பிராந்தியக் கொள்கையை கட்டவிழ்த்து விட்டுள்ளது. அதனால் சவுதி அரேபியா சிரியா போல் ஆகுமா என அரசியல் ஆய்வாளர்கள் கேள்வி எழுப்பும் அளவிற்கு நிலைமை மோசமடைகின்றது. அமெரிக்காவிற்கு சவுதி அரேபியாவில் பிடித்தது அதன் எரிபொருள் வளம் மட்டுமல்ல அங்கு உள்ள உறுதியான ஆட்சியும் அமெரிக்கா விரும்புகின்ற ஒன்றாகும். இரண்டுக்குமாக அங்கு நடக்கும் மக்களாட்சிக்கு எதிரான நிலைமையயும் மனித உரிமை மீறல்களையும் அமெரிக்கா கண்டு கொள்ளாதது போல் இருக்கின்றது.


சவுதி அரேபிய இளவரசர் பின் சல்மன் சவுதியின் பொருளாதாரம் எரிபொருளில் தங்கியிப்பதை தவிர்த்தல், சவுதி அரேபிய இஸ்லாமை சீர் திருத்துதல், சமய போதகர்களின் ஆதிக்கத்தில் இருந்து நாட்டை மீட்டல், அரச குடும்பத்தில் உள்ளோரின் ஊழலை ஒழித்தல் ஆகிய நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டிருக்கையில் யேமனில் இருந்து ஒரு ஏவுகணை சவுதி அரேபியாவை நோக்கி வீசப்பட்டது. இந்த நடவடிக்கைகள் உள்நாட்டில் பெரும் குழப்பத்தை உருவாக்கலாம். இப்படி இருக்க சவுதியைச் சூழவுள்ள நாடுகளில் ஈரானின் ஆதிக்கத்தை ஒழிக்கும் இளவரசரின் நடவடிக்கை மேற்கு ஆசியாவிலும் வட ஆபிரிக்காவிலும் பெரும் குழப்பத்தை உருவாக்கலாம்.

ஈரான் சவுதி உறவு
1979இல் ஈரானில் நடந்த மதவாதப் புரட்சி அங்கு மன்னர் ஆட்சியை ஒழித்தது போல் சவுதியில் நடக்கலாம் என்ற அச்சத்தில் சவுதி அரேபிய அரச குடும்பம் ஈரானிய ஆட்சியாளர்களை அச்சத்துடன் பார்க்கத் தொடங்கியது. 1980-1988 ஈராக்-ஈரானியப் போரின் போது சவுதியின் மூன்று துறைமுகங்கள் ஈராக்கிற்கான படைக்கல விநியோகத்திற்குப் பாவிக்கப் பட்டன. 1988இல் சவுதியில் ஈரானிய ஹஜ் பணிகளுக்கு எதிரான நடவடிக்கைகளின் எதிரொலியாய சவுதிக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் ஈரானில் ஒரு சவுதி அரேபியாவின் அரசுறவியலாளர் கொல்லப்பட்டார். 1996-ம் ஆண்டு சவுதி அரேபியாவின் கோபர் கோபுரம் தீவிரவாதிகளால் வெடிமருந்து நிரப்பிய பாரா ஊர்தியை வெடிக்க வைத்து தகர்க்கப்பட்டதன் பின்னணியில் ஈரான் இருந்ததாக சவுதி அரேபியா ஐயம் கொண்டதால் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு பாதிக்கப்பட்டது. ஈரானின் ஆதரவுடன் ஹிஸ்புல்லா ஒரு வலிமை மிக்க அமைப்பாக உருவாகியது அதனால் உறுதி செய்யப்பட்டது. ஈரான் முழு லெபனானையும் கைப்பற்றும் என்ற கரிசனையும் சவுதி அரேபிய ஆட்சியாளர்களிடம் ஏற்பட்டது.

2004-ம் ஆண்டு ஈரானின் சியா பிறைத் திட்டம்
அமெரிக்கா சார்பு நிலைப்பாடுடைய ஜொர்தான் மன்னர் அப்துல்லா – 2 அவர்கள் 2004-ம் ஆண்டு ஈரானிடம் ரெஹ்ரானில் இருந்து பெய்ரூட் வரை ஒரு நீண்ட நிலப்பரப்பைத் தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வரும் திட்டம் ஈரானிடம் இருக்கின்றது என்றார். மேலும் பல மேற்கத்தைய பன்னாட்டரசியல் ஆய்வாளர்கள் ஈரான் லிபியா, எகிப்து, அல்ஜீரியா ஆகிய நாடுகளை ஆக்கிரமித்து ஒரு வல்லரசாக உருவெடுக்கத் திட்டமிடுகின்றது என எழுதித் தள்ளினர். இவை எல்லாம் ஈரானின் மேற்குலக எதிர்ப்புப் போக்கால் உருவாக்கப்பட்ட பொய்களாகவும் இருக்கலாம். அப்பொய்கள் மூலம் ஈரானின் அயல் நாடுகளை ஈரானுக்கு எதிரான நிலைப்பாடு எடுக்கச் செய்த சதிகளாகவும் இருக்கலாம். அமெரிக்காவிற்கு அழிவு வரட்டும் என்ற ஈரானிய ஆட்சியாளர்களின் கொள்கையும் இஸ்ரேல் என்ற ஒரு நாடு இருக்கக் கூடாது என்ற அவர்களின் நிலைப்பாடும் அவர்களுக்கு எதிரான பல உலகளாவிய அரசுறவியல் நகர்வுகளையும் சதிகளையும் கொண்டுவரும் என்பதில் ஐயமில்லை.

சவுதி அரேபியா லெபனானில் தலையிடுவது ஹிஸ்புல்லாவை அடக்குவதற்காக எனச் சொல்லப்பட்டாலும் ஹிஸ்புல்லாவிற்கு எதிராக சவுதி அரேபியா எடுக்கும் நடவடிக்கைகள் அதை மேலும் வலிமையடையச் செய்யலாம். ஏவுகணைகள், எறிகணைகள் போன்றவை மூலமாகவும் தீவிரவாதத் வழிகளிலும் சவுதி அரேபியாவின் மீதான தாக்குதல்கள் எரிபொருள் விலையை அதிகரிக்கச் செய்யலாம். அது ஈரானியப் பொருளாதாரத்தை வலிமையடையச் செய்வதுடன் ஹிஸ்புல்லாவிற்கான ஈரானின் ஆதரவை அதிகரிக்கச் செய்யும்.

இஸ்ரேலும் களமிறங்குமா?

2017 நவம்பர் அமெரிக்கா இரண்டு A-29 Super Tucano என்னும் இரண்டு தாக்குதல் விமானங்களை லெபனானிய அரச படைகளுக்காக அனுப்பியதும் சவுதியும் அதன் நட்பு நாடுகளும் தமது குடி மக்களை லெபனானில் இருந்து தமது குடிமக்களை வெளியேறும் படி கோரியதும் லெபனானில் ஒரு தாக்குதல் நடக்கலாம் என்பதை சுட்டிக் காட்டுகின்றன. போர் முனை அனுபவம் குறைந்த சவுதி அரேபியப் படைகள் யேமனில் தடுமாறுவதுடன் அப்பாவிகளை அதிக அளவில் கொல்கின்றன. அப்படிப் பட்ட சவிதி அரேபியப் படைகளால் சுமார் நாற்பது ஆண்டுகளாகப் போர் செய்யும் ஹிஸ்புல்லா அமைப்பை அழிக்க முடியுமா? ஹிஸ்புல்லாவின் வளர்ச்சியால் கரிசனை கொண்டுள்ள இஸ்ரேலின் இரகசிய ஆதரவு சவுதி அரேபியாவிற்குக் கிடைக்குமா?

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...