அமெரிக்கா
சீனாவிற்கு எதிராகத் தொடுத்துள்ள வர்த்தகப் போரால் பாதிக்கப் பட்ட அமெரிக்க
விவசாயிகளுக்கு அமெரிக்க அரசு 12 பில்லியன் டொலர்களை நிவாரணமாக வழங்க முடிவு
செய்துள்ளது. அடிச்ச கைப்புள்ளைக்கே இந்தளவு காயம் என்றால் அடிவாங்கியவனின் கதி? 2017-ம் ஆண்டு அமெரிக்காவிற்கு சீனா செய்த ஏற்றுமதி 506 பில்லியன் டொலர்கள்
பெறுமதியாதகாவும் அமெரிக்காவிலிருந்து செய்த இறக்குமதி 130பில்லியன் டொலர்கள்
பெறுமதியானதாகவும் இருந்தது. சீனாவுடனான இந்த பெரும் பற்றாக்குறை தொடர்ந்து
அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. இதைச் சீர் செய்ய கடந்த காலங்களில் அமெரிக்கா
எடுத்த முயற்ச்சிகள் சரிவராத நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தான்
சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பல பொருட்கள் மீதான சுங்க வரியை அதிகரித்தார்.
இதற்குப் பதிலடியாக சீனாவும் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும்
பொருகளுக்கு வரி விதித்தது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகப் போர்
ஆரம்பித்தது. தனது பொருட்களுக்கு அமெரிக்கர்கள் அதிக விலை கொடுப்பதைத் தவிர்க்க
சீனா தனது நாணய்த்தின் பெறுமதியைக் குறைத்தது. அதற்குப் போட்டியாக அமெரிக்காவும்
தனது நாணயத்தின் பெறுமதியைக் குறைத்தால் அது நாணயப் போராக உருவெடுக்கும்.
இப்படியிருக்கையில் அமெரிக்க நடுவண் வங்கியான பெடரல் ரிசேர்வ் அமெரிக்காவின் வட்டி
விழுக்காட்டை அதிகரித்தது அமெரிக்க அதிபரை ஆத்திரப்படுத்தியுள்ளது. அமெரிக்காவின்
வட்டி விழுக்காடு அதிகர்க்கும் போது அமெரிக்க நாணயமான டொலரின் பெறுமதி
அதிகரிக்கும். இதனால் உலகெங்கும் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு
குறைந்த விலை கொடுக்க வேண்டிய நிலை உருவாகும். இது சீனாவிற்கு வாய்ப்பாக அமையும்.
இதனால் அமெரிக்க மரபை மீறி அமெரிக்க நடுவண் வங்கியின் ஆளுநரைத் தாக்கி டிரம்ப்
தனது டுவிட்டரில் பதிவிட்டார்.
நாணயப் போர் என்றால் என்ன?
ஒரு நாடு மற்ற நாடுகளில் தனது உற்பத்திப் பொருட்களை மலிவு
விலையில் சந்தைப் படுத்துவதற்காக தனது நாட்டின் நாணயத்தை மற்றைய நாடுகளின் நாணயத்தினுடன்
ஒப்பீட்டளவில் மதிப்பைக் குறைத்து வைத்திருக்க விரும்புகிறது. இந்த சொந்த நாணய
மதிப்புக் குறைப்பை பல நாடுகள் போட்டி போட்டுக்கொண்டு செய்யும் போது நாணயப் போர்
உருவாகிறது.
பிரச்சனையின்
வரலாறு
2008-ம் ஆண்டு உருவான
உலகப் பொருளாதாரப் பின்னடைவும் நிதி நெருக்கடியும் அதைத் தொடர்ந்து 2011இல் உருவான
ஐரோப்பிய கடன் நெருக்கடியும் இரு தப்பான சொத்து வகைகளால் உருவானவையாகும் வங்கிகளுக்கு
இடையிலான குறுங்கால கடன்கள் உலக நிதி முறைமையின் இரத்தோட்டமாகும். வங்கிகளின்
ஈட்டுக்கடன்களை நிதி ஆவணங்களாக நிதிச் சந்தையில் பல வங்கிகள் வாங்கியமை உலக நிதி
நெருக்கடியின் ஆரம்பப் புள்ளியாக அமைந்தது. பெரும்பாலான ஈட்டுக்கடன்கள் மீளளிக்க
முடியாதவையாக இருந்தபடியால் அந்த ஆவணங்கள் பெறுமதியற்றவையாகும். இது வங்கிகளின்
அறவிட முடியாக் கடன்களை அதிகரித்தது. இதனால் வங்கிகளின் நிதிக் கையிருப்பு பாதிக்கப்பட்டு
வங்கிகளுக்கு இடையிலான குறுங்காலக் கடன் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. இதில்
பெரும் பகுதி அமெரிக்காவில் நடந்தது. வங்கிகளிடையேயான கடன் நடவடிக்கைக்களை
அதிகரிக்க அமெரிக்கத் திறைசேரி பிரச்சனைக்குரிய சொத்து நிவாரண
நிகழ்ச்சித்திட்டத்தை Troubled
Asset Relief Program (TARP), அறிமுகம்
செய்தது. இதனால் தனியார் கடன்களை திறைசேரி தன் தலையில் தாங்கிக் கொண்டது. இதனால்
தனியார் துறைக் கடன் நெருக்கடி அரச கடன் நெருக்கடியானது. 2011-ஆண்டு உருவான
நிதி நெருக்கடி ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள நாடுகளில் 17 நாடுகள்
இணைந்திருந்த யூரோ வலய நாடுகளிடையே உருவானது. யூரோவைப் பொது நாணயங்களாகக் கொண்ட
இந்த நாடுகளில் பல முக்கியமாக கிரேக்கம், ஸ்பெயின், இத்தாலி நாடுகள், ஜேர்மனியின் பொருளாதாரத்திற்கு ஏற்ப உருவாக்கப்பட்ட
நிதிக்கொள்கையால் பெரிதும் பாதிக்கப்பட்டன. 2008-ம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் இந்த நாடுகளின்
அரசுகளின் வரி வருமானம் குறைந்தன. அரசு அளவிற்கு மிஞ்சிக் கடன் பெறவேண்டிய நிலைமை
உருவானது. இந்த அரச கடன் நெருக்கடி உலகின் பல்வேறு நாடுகளுக்குப் பரவின. உலக நிதி
நெருக்கடி 2011இல் உருவானது. G-20 நாடுகள் பல
கூட்டங்களை நடத்தில் உலக நிதி நெருக்கடி மோசமடையாமல் பார்த்துக் கொண்டன. 2011-ம் ஆண்டு ஏற்பட்ட
உலக நெருக்கடியின் பின்னர் உலகில் அதிக வர்த்தகம் செய்யும் நாடாக சீனா உருவெடுத்து
அமெரிக்காவை இரண்டாம் இடத்திற்கு தள்ளியது. 2014-ம் ஆண்டு பொருளியல் வாங்கும் திறன் சமநிலை (purchasing power parity) அடிப்படையில்
உலகிலேயே மிகப்பெரிய பொருளாதாரமாக சீனா உருவாகியது.
ஆரம்பப்புள்ளி பொறாமை
2015-ம் ஆண்டு பல நாடுகள் 2008-ம் ஆண்டு உருவான பொருளாதார
நெருக்கடியில் இருந்தும் 2011-ம் ஆண்டு நிதி நெருக்கடியில் இருந்தும்
விடுபட்டுவிட்டன. இதனால் G-20 உருவாக்கிய
நாடுகளிடையேயான ஒத்துழைப்பு பல நாடுகளுக்கு அவசியமற்ற ஒன்றாகி விட்டது. சீனா
அமெரிக்காவிலும் பார்க்க பொருளாதாரத்தில் மேம்பட்டுச் செல்வது பல அமெரிக்க
அரசியல்வாதிகளையும் பெரும் செல்வந்தர்களையும் சிந்திக்க வைத்தது. அதன் விளைவாக
அமெரிக்காவை முதன்மையானது என்ற கொள்கையைக் கொண்ட டொனால்ட் டிரம்ப் 2016-ம் ஆண்டு
நவம்பரில் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றார். அவர்
நாடுகளிடையிலேயான ஒத்துழைப்பின் அவசியத்தைப் புறம் தள்ளி விட்டு வர்த்தகப் போரை
ஆரம்பித்தார். 2018 ஜூன் மாதம் சீனாவின் வெளிநாட்டுச் செலவாணிக் கையிருப்பு 1.51
பில்லியன் டொலர்களால் அதிகரித்து 3.112 ரில்லியன் டொலர்களானது.
சண்டை என்றால் எல்லோர் சட்டையும் கிழியும்
அரச தூண்டுதல்களால் வளர்ச்சியடைந்து கொண்டிருக்கும் சீனப்
பொருளாதாரமும் பல உள் பிரச்சனைகளை எதிர் கொள்கின்றது. 2017-ம் ஆண்டு சீனாவின்
பொருளாதார வளர்ச்சி 6.7 விழுக்காடு என சீன ஆட்சியாளர்கள் சொன்னாலும் உலக வங்கியின்
மதிப்பீட்டின் படி அது 1.1 விழுக்காடு மட்டுமே. டிரம்பின் வர்த்தகப் போர் சீனாவின்
பொருளாதார வளர்ச்சியை பாதிக்கும். அதைத் தவிர்க்க சீனா தனது பொருளாதாரத்தினுள்
100பில்லியன் டொலர்கள் பெறுமதியான பணத்தை உட் செலுத்தவுள்ளது. அது நாணயப்
புழக்கத்தை அதிகரித்து நாணயத்தின் மதிப்பைக் குறைக்கும். இதை அமெரிக்கா சீனா
திட்டமிட்டு தன் நாணயத்தின் மதிப்பைக் குறைக்கும் நாணயப் போர் நடவடிக்கை எனப்
பார்க்கின்றது. அமெரிக்காவும் சீனாவும் ஒன்றுக்கு ஒன்று போட்டியாகச் செய்யும்
இறக்குமதி மீதான வரி அதிகரிப்பால் இரு நாடுகளினதும் பொருளாதார வளர்ச்சி 0.1
விழுக்காடு முதல் 0.2 விழுக்காடு வரையில் குறையலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
பிரித்தானிய நடுவண் வங்கியின் மதிப்பீட்டின்படி உலகப் பொருளாதார வளர்ச்சியில்
2.5விழுக்காடு குறைவும் பிரித்தானியப் பொருளாதாரத்தில் 2 விழுக்காடு குறைவும்
ஏற்படும். பெருமளவு பாதிப்பு அமெரிக்காவிற்கே ஏற்படும் என அந்த நடுவண் வங்கி
மதிப்பிடுகின்றது. அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சி 5விழுக்காட்டால்
வீழ்ச்சியடையும்.
அமெரிக்க விட்டதை சீனா பிடிக்கின்றது.
ஆபிரிக்க நாடுகளுடனான சீனாவின் வர்த்தகம் அமெரிக்காவுடனான
ஆபிரிக்க நாடுகளின் வர்த்தகத்திலும் அதிகமானது. 1978-ம் ஆண்டு சீனா ஆபிரிக்க நாடுகளுடன் செய்த வர்த்தகம் 765 மில்லியன்
டொலர்களாக இருந்தது. 2017-ம் ஆண்டு அது 170 பில்லியன் டொலர்களாக அதிகரித்தது. தென்
ஆபிரிக்காவில் நடந்த பிரேசில், , இரசியா, இந்தியா, சீனா, தென் ஆபிரிக்கா ஆகிய நாடுகளைக் கொண்ட பிரிக்ஸ்
அமைப்பின் மாநாட்டுக்குச் செல்லும் வழியில் சீன அதிபர் ஜீ ஜின்பிங் Rwanda,
Angola, Gabon, and São Tomé and Príncipe ஆகிய நாடுகளுக்குச்
சென்று அவற்றை சீனாவின் ஒரு பட்டி ஒரு பாதை என்னும் புதிய பட்டுப்பாதைத்
திட்டத்தில் இணைய வேண்டுதல் விடுத்தார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்
ஆபிரிக்க நாடுகளை “மலவாசல்” நாடுகள் என அழைத்ததால் அந்த நாடுகளில் அமெரிக்காவிற்கு
எதிரான ஆத்திரத்தை சீனா சாதுரியமாகத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக்
கொண்டிருக்கின்றது.
விற்றுப் பிழைக்கின்றதா சீனா?
சீனாவின்
காப்புறுதி நிறுவனங்கள் உட்படப் பல முதலீட்டு நிறுவனங்கள் கடந்த பத்து ஆண்டுகளாக அமெரிக்காவில் கட்டங்களை வாங்கி வந்தன. சின அரசின் வேண்டுகோளுக்கு இணங்க அவை இப்போது விற்பனை செய்யப்படுகின்றது. 2018இன் இரண்டாம் காலாண்டில் 1.29 பில்லியன் டொலர்கள் பெறுமதியான கட்டடங்களை விற்பனை செய்துள்ளன. வாங்கிய கட்டிடங்களின் பெறுமதி 126.2 மில்லியன் டொலர்கள் மட்டுமே. ஒரு பில்லியன் டொலர்கள் பெறுமதியான நிகர விற்பனை சீனா தனது வெளிநாட்டு முதலீட்டைக் குறைக்கும் திட்டத்துடன் இருக்கின்றது என்பதைக் காட்டுகின்றது. சீனாவின் இன்னும்
ஒரு பிரச்சனை அதன் அதிகரித்துச் செல்லும் உள்நாட்டுக்கடனாகும். சீனாவின்
உள்நாட்டுக்கடன் அதன் பொருளாதார வளர்ச்சியிலும் பார்க்க ஒன்றரைப் பங்கு
அதிகரித்துக் கொண்டு போகின்றது.
மார்க்கோ போலோ போன பாதை
இதுவரை
காலமும் சீனா மார்க்கோ போலோ பாதையில் (Marco Polo route) உள்ள நாடுகளில் பல கட்டிடங்களில் முதலீடு செய்து வந்தது. தனது நாட்டில் இருந்து ஐரோப்பிய மற்றும் அமெரிக்கக் கண்டகள் வரையான பாதையில் ஆதிக்கம் செலுத்துவதில் அதிக கவனம் செலுத்தியமையைச் சுட்டிக் காட்டியது. புவிசார் அரசியல் காரணங்களுக்காக் சீனா பல நாடுகளுக்குக் கடன் கொடுத்து உருவாக்கிய திட்டங்கள் நட்டத்திலேயே செயற்படுவதால் அந்த நாடுகளின் கடன் சுமையை அதிகரித்துள்ளது. மேற்கு நாட்டு ஊடகங்கள் சீனாவிற்கு எதிரான பரப்புரைக்கு சீனா இலங்கைக்கு கொடுத்த கடன்களை உதாரணமாகக் காட்டுகின்றன.
சீனாவா கொக்கா?
2007-ம் ஆண்டு உலகப் பொருளாதார வளர்ச்சியின் 18 விழுக்காடு
சீனாவின் பங்களிப்பாகும். 2017-ம் ஆண்டு அது 30 விழுக்காடாக அதிகரித்திருந்தது.
2008-ம் ஆண்டு நடந்த உலகப் பொருளாதாரப் பிரச்சனையின் பின்னர் உலகப் பொருளாதார
வளர்ச்சி முன்னணி வளர்முக நாடுகளான சீனா, இந்தியா, பிரேசில்
போன்ற நாடுகளில் இருந்து தான் தூண்டப்பட வேண்டும் எனப் பொருளாதார நிபுணர்கள்
எதிர்பார்த்தனர். அவர்களின் எதிர்பார்ப்பு வீண் போகவில்லை. அமெரிக்கா தொடுத்துள்ள
பொருளாதாரப் போரால் சீனாவின் பொருளாதார வளர்ச்சி குன்றினால் சீனாவிற்கு
மூலப்பொருள்களை ஏற்றுமதி செய்யும் நாடுகளின் பொருளாதார வளர்ச்சி குன்றும். அந்த
நாடுகள் எல்லாம் அமெரிக்காவில் இருந்து செய்யும் இறக்குமதி குன்றும். இறுதியில்
பாதிப்பு சுற்றிச் சுழன்று கொண்டே இருக்கும். இதை அமெரிக்க அதிபர் டொனால்ட்
டிரம்பும் நன்கு அறிவர். ஆனால் அமெரிக்காவிற்கு ஏற்படும் இழப்பிலும் பார்க்க
சீனாவிற்கு ஏற்படவிருக்கும் இழப்பு பெரிதாக இருக்கும் என்றபடியால் சீனா அடிபணிந்தே
ஆக வேண்டும் என அவர் நம்புகின்றார். அவர் நினைப்பது நடக்குமா?