Thursday 16 April 2020

உலகப்பொருளாதாரத்தையும் தொற்றிய நோய்


நூற்றிற்கு மேற்பட்ட நாடுகள் கொவிட்-19 நோயால் தமது நாட்டுக்கில் வெளிநாட்டவர் வராமல் பயணத்தடை விதித்துள்ளன. அந்த நோயின் பரவலைத் தடுக்க அரசுகள் பிறப்பித்த மூடிப்பூட்டல் உத்தரவால உலக மக்கள் தொகையின் மூன்றில் ஒரு பங்கினர் வீடுகளுக்குள் முடக்கப்பட்டுள்ளனர். ஆசிய அபிவிருத்தி வங்கி உலகப் பொருளாதார உற்பத்தி கொவிட்-19 ஆல் 5% வீழ்ச்சியடையும் என்கின்றது. பன்னாட்டு நாணய நிதியம் அதை மூன்று விழுக்காடு என மதிப்பிட்டுள்ளது. பநா நிதியம் அடுத்த இரண்டு ஆண்டுகளில் உலக மொத்த உற்பத்தியில் ஒன்பது ரில்லியன் டொலர் பெறுமதியான குறைப்பை கொவிட்-19 தொற்று நோய் ஏற்படுத்தும் என்கின்றது.

பன்னாட்டு நாணய நிதியத்தின் அரையாண்டு அறிக்கை
பன்னாட்டு நாணய நிதியத்தின் அரையாண்டு அறிக்கையின் படி ஐக்கிய அமெரிக்காவின் பொருளாதாரம் 5.9 விழுக்காட்டாலும், யூரோ வலய நாடுகள் 7.5விழுக்காட்டலும், ஜப்பான் 5.2விழுக்காட்டாலும் பிரித்தானியா 6.5 விழுக்காட்டாலும் பொருளாதார தேய்வை 2020இல் சந்திக்கும். ஆண்டுக்கு குறைந்தது  எட்டு விழுக்காடு வளர வேண்டிய கட்டாயத்தில் உள்ள சீனாவினதும் இந்தியாவினதும் பொருளாதாரங்கள் 2020இல் சொற்ப அளவே வளரும். சீனாவின் பொருளாதாரம் 1.2 விழுக்காட்டாலும் இந்தியாவின் பொருளாதாரம் 1.9 விழுக்காட்டாலும் வளர்ச்சியடையும் எனவும் அந்த நிதியம் எதிர்வுகூறியுள்ளது. 2020இல் ஆப்கானிஸ்த்தான், பாக்கிஸ்த்தான், இலங்கை ஆகிய நாடுகள் பெரும் பொருளாதாரப் பின்னடைவை சந்திக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. அறுபது வளர்முக நாடுகள் கடன் கேட்டு பன்னாட்டு நாணய நிதியத்தின் கதவுகளைத் தட்டுகின்றன. கொரொனா நச்சுக் கிருமியின் கொவிட்-19 நோயால் பாதிக்கப் பட்ட வளரு முக நாடுகளுக்கு உதவும் வகையில் பன்னாட்டு நாணயத்தின் சிறப்பு பணமெடுப்பு உரிமையை (Special Drawing Rights) ஒரு ரில்லியன் டொலர்களாள் அதிகரிக்கும் படி பல ஐரோப்பிய மற்றும் ஆபிரிக்க நாட்டு தலைவர்களும் முன்னாள் தலைவர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் அமெரிக்கா அதற்கு தயக்கம் காட்டுகின்றது. 


பாரிய தாக்கம்
பன்னாட்டு தொழில் அமைப்பின் தகவலின் படி கொவிட்-19 தொற்றுநோய் 3.3 பில்லியன் உலக உழைப்பாளர்களில் 40 விழுக்காட்டினரை வேலை செய்யாமல் பண்ணியுள்ளது. 1.25பில்லியன் மனிதர்களின் உழைப்பு இழப்பு உலகப் பொருளாதாரத்தை உலுப்பியதுடன் பல ஆட்சியாளர்களின் தூக்கத்தைக் கெடுத்துள்ளது. பல முன்னணிப் பொருளாதார நாடுகளில் தொற்றுநோய் பரவும் வேகம் குறையாத படியால் உண்மையான பாதிப்பு இன்னும் அதிகமாக இருக்கும். இறுதியில் 25 மில்லியன் உழைப்பாளர்கள் நிரந்தரமாக வேலையிழக்கும் நிலை வரலாம். இது 2008-ம் ஆண்டு உருவான உலக நிதி நெருக்கடியின் போது ஏற்பட்ட பாதிப்புலும் அதிகமானது. அதனால் உலக வங்கியும் பன்னாட்டு நாணய நிதியமும் பல அரசுகள் முன்வைத்துள்ள கடன் நிவாரணத் திட்டம் போதுமானதாக இருக்காது எனச் சொல்லியுள்ளன.
கோவிட்-19 நோய் பரவலைத் தடுக்க ஹங்கேரி மக்களாட்சியில் இருந்து தனியொருவர் ஆட்சிக்கு மாறிவிட்டது எனச் சொல்லக் கூடிய அளவிற்கு அதன் பாராளமன்றம் தலைமை அமைச்சர் விக்டர் ஓபனுக்கு எல்லா அதிகாரங்களையும் வழங்கியுள்ளது.

அதிகரிக்கும் அமெரிக்க சீன விரோதம்.                
அமெரிக்காவின் இரு பெரும் கட்சிகளும் சீனாவிற்கு எதிரான கொள்கைகளைக் கொண்டுள்ளன. டிரம்ப் கொரோனாவை சீன நச்சுக் கிருமி என அழைத்தமையை மக்களாட்சிக் கட்சியினர் விரும்பாத போதிலும் அந்தக் கிருமி பரவுவதற்கு சீனாவே காரணம் என்கின்றனர். கொவிட்-19 தாக்கதிற்கு பின்னர் சீன அமெரிக்க உறவு முன்பை விட மோசமாகும் என்பதில் ஐயமில்லை. 90% குடியரசுக் கட்சியினரும் 67% மக்களாட்சிக் கட்சியினரும் சீனாவே கொரோனா நச்சுக் கிருமியின் பரவலுக்கு பொறுப்பு என நம்புகின்றனர். மற்ற நாடுகளின் இழப்பீட்டிற்கு சீனா ஈடு செய்ய வேண்டும் என்ற கருத்தும் அமெரிக்காவில் வலுப்பெறுகின்றது. இந்தக் கருத்தை அமெரிக்க ஊடகங்கள் உலகெங்கும் பரவச் செய்தால் சீனாவிற்கு உலக அரங்கில் பெரும் பாதிப்பு ஏற்படும். ஏற்கனவே பல நாடுகளில் சீனர்கள் மீது தாக்குதல் செய்வது அதிகரித்துள்ளது.

சீனா சிதறுமா சீறுமா
2020 ஜனவரி பெப்ரவரி மாதங்களில் சீனாவின் ஏற்றுமதி 17.5% வீழ்ச்சியடைந்தது. 2020 ஜனவரியில் 50% ஆக இருந்த சீனாவின் தொழிற்றுறைக்கான கொள்வனவு முகாமையாளர் சுட்டி 2020 பெப்ரவரியில் 37.5% ஆக வீழ்ச்சியடைந்தது. பின்பு மார்ச் மாதம் அது 52% ஆக உயர்ந்தது. சீனாவின் உள்நாட்டு உற்பத்தி துரிதமாக சீரடைந்தமை ஒரு நல்ல செய்தி. ஆரம்பத்தில் தவறுகள் செய்தாலும் தான் எடுத்த கடுமையான நடவடிக்கைகளால் தொற்றுநோய் நெருக்கடியை சீனா சிறந்த முறையில் கையாண்டுள்ளது. சீனாவின் உற்பத்தித் துறை வழமைக்குத் திரும்பியுள்ளமையும் எரிபொருள் விலை வீழ்ச்சியடைந்தமையும் சீனாவின் பொருளாதாரத்திற்கு எந்த அளவில் உதவப் போகின்றது? சீனப் பொருளாதாரம் பெருமளவு ஏற்றுமதியில் தங்கியுள்ளது. அது ஏற்றுமதி செய்யும் நாடுகள் பல கொவிட்-19 நெருக்கடியில் இருந்து மீள இன்னும் மூன்று மாதங்களுக்கு மேல் எடுக்கும். அதனால் சீனாவின் பொருளாதாரம் அடுத்த 6 மாதங்களுக்கு பல சவால்களை எதிர் நோக்கும். கொவிட்-19 தாக்குதலுக்கு முன்னரே சீனாவின் தொழில்நுட்பத்துறையில் செய்யப்படும் முதலீடு பாதிப்படையத் தொடங்கியது. 2020 முதலாம் காலாண்டில் அது 31% வீழ்ச்சியடைந்தது. 2020 முதலாம் காலாண்டில் ஏற்பட்ட உற்பத்தி இழப்பை ஈடு செய்ய அதிக உற்பத்தியை இரண்டாம் காலாண்டில் சீனா செய்யும் போது இரண்டாம் காலாண்டில் அதிக உற்பத்தியை செய்யலாம். ஆனால் சீனாவில் உற்பத்தி செய்யும் பல வெளிநாட்டு நிறுவனங்கள் தமது உற்பத்தியை தமது நாட்டுக்கு நகர்த்த முயன்றால் அது சீனப் பொருளாதாரத்தைப் பாதிக்கும். பறகலங்களின் (Drones) உலக விற்பனையில் 70% சீன நிறுவனமான DJIஇற்கு உரியது. இவை பறந்து கொண்டிருக்கையில் எதிர்கொள்பனவனற்றை தாமாகவே உணர்ந்து அவற்றுடன் மோதலைத் தவிர்க்கும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் இணைக்கப்பட்டுள்ளன. இனிவரும் காலங்களில் தபால்துறை பொதி விநியோகத்துறை போன்றவற்றில் மட்டுமல்ல படைத்துறையிலும் இந்த பறகலங்கள் பெரிதும் பயன்படுத்தப்படவிருக்கின்றன. இது போல பல புதிய தொழில்நுட்ப உற்பத்திகள் சீனாவிற்கு கைகொடுக்கலாம்.

மீண்டும் தன்னிறைவுக் கொள்கை
கொவிட்-19 தாக்கத்தின் பின்னர் பல நாடுகள் தமக்குத் தேவையானவற்றை தமது நாட்டிலேயே உற்பத்தி செய்ய வேண்டும் என்ற தன்னிறைவுக் கொள்கையைக் கடைப்பிடிக்கத் தொடங்கலாம். அத்துடன் வெளிநாட்டு முதலீடுகளுக்கு எதிரான நிலைப்பாட்டையும் பல நாடுகள் எடுக்கலாம். உலகெங்கும் பல கிராமங்கள் அக்கொள்கையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்ற முடிவை அவற்றின் மக்கள் எடுத்துள்ளனர். இது பல் பன்னாட்டு நிறுவனங்களின் உற்பத்தியைப் பாதிக்கலாம்.

உயர் தொழில்நுட்ப நிறுவனங்கள்
எந்த ஒரு மோசமான பொருளாதா நெருக்கடியும் சில நிறுவனங்களுக்கு சாதகமான சூழலை ஏற்படுத்தும். கொவிட்-19 நோய்த்தாக்கம் பேஸ்புக், கூகிள், அமேசன், நெட்ஃபிளிக்ஸ் ஆகிய நிறுவனங்களின் வருமானத்தை அதிகரித்துள்ளது. இந்த நோய்த்தாக்கம் பலரை தமது வீடுகளில் இருந்து கணினிகள் மூலம் இணையவெளித் தொடர்புகளைப் பயன் படுத்தி பணிபுரியும் தேவையை அதிகரித்துள்ளது. அதற்குரிய மென்பொருளை உருவாக்கும் நிறுவனங்களின் வருமானமும் அதிகரித்துள்ளது. இத்துறைக்கு புதிதாக வந்துள்ள Slack & Zoom நிறுவனத்தின் வருமானமும் அதிகரித்துள்ளது. நோயாளர்களின் தகவல்களைத் திரட்டி செயற்கை விவேகத்தின் மூலம் மிகத் துரிதமாக நிரைப்படுத்தலுக்கான தேவையும் தற்போது அதிகரித்துள்ளது. 2020 ஜவரியில் இருந்து உலகெங்கும் பங்குச் சுட்டிகள் வீழ்ச்சியடைந்த நிலையில் கூகிள், அமேசன், அப்பிள், பேஸ்புக் ஆகிய நிறுவனங்களின் பங்கு விலைகள் பெருமளவில் அதிகரித்துள்ளன.

இந்திய வங்கித்துறையும் பொருளாதாரமும்
இந்திய வங்கித்துறைக்கான பங்குகளின் சுட்டி 2020 மார்ச் மாதத்தில் 41 விழுக்காடு வீச்சியடைந்தது. கொவிட்-19இன் தாக்கத்திற்கு முன்னரே இந்திய வங்கித்துறை அறவிட முடியாக்கடன் (வாராக்கடன்) பிரச்சனையில் மூழ்கியிருந்தது. கொவிட்-19 பரவுவதைத் தடுக்க நான்கு மணித்தியால அவகாசம் மட்டும் கொடுத்து மூன்று வார ஊரடங்கு உத்தரவை நரேந்திர மோடி பிறப்பித்தார். Fitch Ratings என்ற தரப்படுத்தும் நிறுவனத்தின் கணிப்பின் படி இந்தியப் பொருளாதார வளர்ச்சி 2020 ஏப்ரல் முதல் 2021 மார்ச் வரை இரண்டு விழுக்காடாக மட்டுமே இருக்கும். இது சுதந்திர இந்தியாவின் மிகக் குறைந்த பொருளாதார வளர்ச்சியாகும். ஆண்டு தோறும் படித்து முடித்து வேலை தேடி வரும் இந்திய இளைஞர்களுக்கு வேலை கொடுக்க இந்தியா ஆகக் குறைந்தது எட்டு விழுக்காடு வளர்ச்சியடைய வேண்டும். அமெரிக்கா மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகளால் தமது மொத்த தேசிய உற்பத்தியின் பத்து விழுக்காட்டை தங்களுடைய பொருளாதார நிலைத் தரம் தாழ்த்தப் படாமல் மக்கள் நலனுக்காக செலவிட முடியும். இந்தியா பெருமளவு தொகையை மக்கள் நலனுக்காக செலவளித்தால் அதன் பொருளாதாரத் தரம் குறைக்கப்படும். அதனால் இந்திய ரூபாயின் மதிப்பு குறைவடையும். வெளிநாட்டு முதலீடுகளைப் பெறுவது கடினமாகும். பணவீக்கம் அதிகரிக்கும், இந்திய நிதித் துறை முன்னாள் செயலாளரான சுபாஷ் சந்திர கார்க்கின் கருத்துப்படி இந்தியாவின் மூன்று வார பூட்டி மூடல் இந்தியப் பொருளாதாரத்திற்கு எட்டு இலடசம் கோடி இழப்பு ஏற்படும். அதை ஈடு செய்ய இந்தியா தனது உள்நாட்டு உற்பத்தியில் 2 முதல் 2.5 சதவிகிதம் பெறுமதியான கடன் வாங்க வேண்டும் அதாவது 4 முதல் 5 லட்சம் கோடி ரூபா வரை கடன் வாங்க வேண்டும்.

அமெரிக்காவில் இரண்டு ரில்லியன் திட்டம்
கொவிட்-19 ஆல் பாதிக்கப் பட்ட பொருளாதாரத்தை மீட்க இரண்டு ரில்லியன் டொலர்களை பொருளாதாரத்தினுள் செலுத்தும் திட்டத்தை அமெரிக்கா முன்னெடுத்துள்ளது. அதன் ஒரு பகுதியாக $99000இலும் குறைந்த வருமானமுள்ள ஒவ்வொரு தனிப்பட்ட அமெரிக்கர்களுக்கும் 1200 டொலர்களையும் தம்பதிகளுக்கு 2400 டொலர்களையும் பிள்ளைகளுக்கு 500 டொலர்களையும் அமெரிக்க அரசு வழங்குகின்றது. அமெரிக்கர்களின் கொள்வனவு குறைந்தால் அமெரிக்க முதலாளிகளின் வருமானம் குறையும் என்பதால் நாட்டில் கொள்வனவை அதிகரிக்க அமெரிக்கா இந்த திட்டத்தை முன்னெடுக்கின்றது.
ஐரோப்பிய ஒன்றியம்
ஐரோப்பிய ஒன்றியம் 810பில்லியன் டொலர் பெறுமதியான சொத்து-வாங்கல் செய்யப் போவதாக அறிவித்துள்ளது. அதனால் வங்கிகளிற்கு குறைந்த வட்டியில அதிக நிதி கிடைக்கும். அதை அவ்வங்கிகள் பொருளாதார மேம்பாட்டிற்கான கடனாக நிறுவனங்களிற்கும் பொதுமக்களுக்கும் வழங்கலாம். 2020 ஏப்ரல் 7-8 திகதிகளில் நடந்த ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் நிதியமைச்சர்கள் கூட்டத்தில் ஒருமித்த முடிவை எடுக்கவில்லை. இத்தாலி ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறும் நிலைக்கு தள்ளப்படலாம்.

எரியும் எரிபொருள் உற்பத்திக்குள் நெய் ஊறிய கொரோனா
சவுதி அரேபியாவிற்கும் இரசியாவிற்கும் இடையில் உருவான போட்டியால் மசகு எண்ணெயின் விலை முப்பது டொலருக்கும் கீழ் வீழ்ச்சியடைந்த நிலையில் உலக உற்பத்தியும் போக்கு வரத்தும் கொரோனா நச்சுக் கிருமியால் பாதிப்படைந்தது. இந்திய சீனா போன்ற நாடுகள் மலிந்த விலையில் தமது எரிபொருள் கையிருப்பை பெருமளவு அதிகரித்தன. பின்னர் மசகு எண்ணெய் விலை 20டொலர்கள் வரை வீழ்ச்சியடைந்தது. இதைத் தொடர்ந்து அமெரிக்காவின் தலையீட்டினாலும் அமெரிக்கா சவுதி அரேபியா மீது கடுமையான மிரட்டல்களைப் பிரயோகித்ததாலும் இரசியாவும் சவுதியும் எரிபொருள் உற்பத்திக் குறைப்பிற்கு ஒத்துக் கொண்டன. ஆனாலும் பன்னாட்டு எரிபொருள் முகவரகம் எரிபொருள் கொள்வனவு கொவிட்-19 நோய் தாக்கத்தால் இந்த ஆண்டு பெரிதும் குறையும் என எதிர்வு கூறியத அடுத்து 2020 ஏப்ரல் 15-ம் திகதி மசகு எண்ணெய் விலை இருபது டொலரிலும் குறைந்துள்ளது. இதனால் எரிபொருள் உற்பத்தி நாடுகளின் பொருளாதாரம் பாதிக்கப்படும் போது அந்த நாடுகளில் பணிபுரியும் வெளிநாட்டவர்கள் வருமானத்தை இழப்பதுடன் அந்த நாடுகளுக்கான ஏற்றுமதியும் குறையும். இந்திய இந்தியா, பாக்கிஸ்த்தான், இலங்கை ஆகியவற்றுடன் பல கிழக்காசிய நாடுகளின் பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

வேலை வாய்ப்பு குறையும்
அமெரிக்க கோர்னெல் பல்கலைக்கழகப் பேராசிரியரும் இந்திய அரசின் பொருளாதார ஆலோசகருமான  கலாநிதி கௌசிக் பாசு செல்வந்தர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையிலான வருமான இடைவெளிய கொவிட்-19இன் தாக்கம் அதிகரிக்கும் என்கின்றார்.  கொவிட்-19இன் பின்னர் பெரிய உற்பத்தி நிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவைப் பாவித்து தமது உற்பத்திகளை மேலும் கணினி மயமாக்கும். அதனால் வேலை வாய்ப்புக்கள் குறையும். மேலும் அவர் வீட்டில் இருந்து வேலை செய்வது இனி வரும் காலங்களில் அதிகரிக்கும் என்கின்றார்.

1930களில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியிலும் பார்க்க 2007இல் உருவான உலக நிதி நெருக்கடியிலும் பார்க்க கொவிட்-16இன் தாக்கத்தால் உலகப் பொருளாதாரம் பெரிய பாதிப்பைச் சந்திக்கவிருக்கின்றது. இன்னும் தொற்று நோய் பரவிக் கொண்டிருப்பதாலும் எப்போது கட்டுப்பாட்டுக்குள் வரும் என சொல்ல முடியாத நிலை இருப்பதாலும் உலகப் பொருளாதாரம் எந்த அளவு பாதிக்கப்படும் என இப்போது அளவிட முடியாது.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...