Tuesday, 8 May 2018

ஈரான் மீது இஸ்ரேல் போர் தொடுக்குமா?


இஸ்ரேல் என ஒரு நாடு உலக வரைபடத்தில் இருக்கக் கூடாது என்பதில் இன்றுவரை உறுதியாக இருக்கும் இஸ்லாமிய நாடு ஈரானே. இஸ்ரேலுக்கு எதிராக காசா நிலப்பரப்பில் செயற்படும் ஹமாஸ் அமைப்பு, பலஸ்த்தீனிய இஸ்லாமிய ஜீஹாதி அமைப்பு மற்றும் லெபனானில் செயற்படும் ஹிஸ்புல்லா அமைப்பு, சிரியாவில் இருந்து செயற்படும் பலஸ்தீனிய விடுதலைக்கான பிரபல முன்னணி போன்ற தீவிரவாத அமைப்புக்களுக்கு நிதி உதவிகளையும் படைக்கல உதவிகளையும் வழங்கி வருகின்றது. இதனால் இஸ்ரேலும் அமெரிக்காவும் ஈரானை பயங்கரவாதத்திற்கு உதவும் நாடு என அழைக்கின்றன.

ஈரானுக்கு எதிரான பரப்புரைகள்
ஐரோப்பியப் பாராளமன்றத்தின் வெளியுறவுத் துறைக்கான தெரிவுக் குழுவின் முன் உரையாற்றும் போது சவுதி அரேபிய வெளியுறவுத் துறை அமைச்சர் அடெல் அல் ஜுபியர் ஈரானிய அரசியலமைப்பு பயங்கரவாதத்திற்கு ஆதரவு வழங்குகின்றது என்றார். அதற்குச் சவால் விடுத்த போர்த்துகேயப் பிரதிநிதி அது எந்தப் பிரிவில் உள்ளது எனக் காட்டும்படி சவால் விடுத்தார். அதற்கு ஜுபியர் பதல் கொடுக்கவில்லை. ஈரானின் அரசியலமைப்பு பயங்கரவாதத்திற்கு ஆதரவு கொடுக்கின்றது என்ற பரப்புரை சவுதி அரேபியாவில் இருந்து தொடர்ந்த் முன் வைக்கப்படுகின்றது. ஈரானிய அரசியலமைப்பில் மதவாதப் புரட்ச்சி ஈரானிற்கு உள்ளேயும் வெளியேயும் முன்னெடுக்கப்பட வேண்டும் என அதன் முன்னுரையில் கூறுகின்றது. அதன் பொருள் சவுதி அரேபியாவிலும் ஒரு மதவாதப் புரட்ச்சியை உருவாக்கை அங்கும் மன்னராட்சியை ஒழித்துவிட்டு மதத் தலைவர்களையும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளையும் கொண்ட ஆட்சி உருவாக்குதல் என சவுதி அரேபிய மன்னர் குடும்பம் கருதுகின்றது.

இஸ்ரேலின் துணிகரமான தாக்குதல்கள்
2018-ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 10-ம் திகதி ஈரானுக்கும் சிரியாவிற்கும் இடையிலான நேரடி மோதல் ஆரம்பமானது. அன்று ஈரானிய ஆளில்லாவிமானம் இஸ்ரேலுக்குள் பறந்த போது அதை இஸ்ரேல் சுட்டு வீழ்த்தியது. அந்த விமானம் வந்த இடத்தை தமது வேவு முறைமைமூலம் அறிந்து கொண்டதாகச் சொன்ன இஸ்ரேல் சிரியாவில் அது ஏவப்பட்ட ரீ-4 என்னும் பெயருடைய ஈரானியத் தளத்தின் மீது தனது F-16 போர் விமானங்களால் தாக்குதல் நடத்தியது. ஈரானின் ஆளில்லாவிமானத்திற்கு பொறுப்பான அதிகாரி உட்படப் பல அத்தாக்குதலில் கொல்லப்பட்டனர். சிரியா விமான எதிர்ப்பு ஏவுகணை ஒரு F-16 விமானத்தை சுட்டு வீழ்த்தியது. அதில் இருந்து சிரியாவில் ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான முறுகல் தீவிரமடைந்தது. 2012-ம் ஆண்டில் இருந்து இஸ்ரேலியப் போர் விமானங்கள் சிரியாவினுள் அத்து மீறிச் சென்று நூற்றுக்கு மேற்பட்ட தடவைகள் தாக்குதல்கள் செய்தன. அவை எல்லாம் ஹிஸ்புல்லா அமைப்பு லெபனானுக்கு படைக்கலன்களை எடுத்துச் செல்வதைத் தடுக்கும் தாக்குதல்களாகவே இருந்தன. அவை ஈரானும் இஸ்ரேலும் செய்துவரும் மறை முகப் போர். ஆனால் இப்போது இஸ்ரேல் நேரடியாகவே சிரியாவில் உள்ள ஈரானியப் படைநிலைகள் மீது தாக்குதலை ஆரம்பித்துள்ளது.

படைக்கலக் களஞ்சியத்தில் தாக்குதல்
2018 ஏப்ரல் மாதம் 29-ம் திகதி சிரியாவின் ஹொமா பிராந்தியத்தில் உள்ள ஈரானியப் படைநிலை மீதும் படைக்கலக் களஞ்சியத்தின் மீதும் குண்டுகள் வீசப்பட்டன. ஈரான் அந்த இடத்தில் பெருமளவு படைக்கலன்களை அண்மையில் கொண்டு வந்து குவித்தமையை தனது உளவுத் துறை மூலம் அறிந்து  இஸ்ரேல் தாக்குதல் நடத்தியிருக்கலாம் என நம்பப்படுகின்றது. இஸ்ரேலும் ஈரானும் அத்தாக்குதலை மறுத்திருந்தன. அங்கு வைக்கப்பட்டிருந்த ஈரானின் 200 பலிஸ்றிக் ஏவுகணைகள் முற்றாக அழிக்கப்பட்டன. அங்கு ஒரு சிறு பூமிஅதிர்ச்சி ஏற்பட்டது போல் உணரப்பட்ட அத்தாக்குதலில் 26 ஈரானியப் படையினர் கொல்லப் பட்டிருக்கலாம் என நம்பப்படுகின்றது. இஸ்ரேல் மீது தாக்குதல் செய்யக் கொண்டு வந்த அந்த ஏவுகணைகள் பொருத்தல் வேலைகள் தொடங்கு முன்னரே இஸ்ரேல் அழித்து விட்டது. இத்தாக்குதலுக்கும் F-15 போர் விமானங்களே பாவிக்கப்பட்டன. அவை இம்முறை சிரிய விமான எதிர்ப்பு முறைமைகளின் கண்களில் மண் தூவி விட்டன. சிரியாவிலோ லெபனானிலோ எந்த ஒரு ஈரானியப் படை நிலைகளும் இருக்கக் கூடாது என்பதில் இஸ்ரேல் உறுதியாக இருக்கின்றது. அது தனது இருப்புக்கு ஆபத்து என இஸ்ரேல் உறுதியாக நம்புகின்றது. ஈராக், சிரியா, லெபனான், யேமன் ஆகிய நாடுகளில் ஈரான் ஆதிக்கம் செலுத்துவதை சவுதி அரேபியாவும் அமெரிக்காவும் விரும்பவில்லை. ஈரான் மீது மீண்டும் பொருளாதாரத் தடைகளைக் கொண்டு வந்து அதை அடிபணிய வைக்கலாம் என அமெரிக்காவும் சவுதி அரேபியாவும் நம்புகின்றன. இஸ்ரேலியப் பாதுகாப்புத் துறையில் சிலர் சிரிய மண்ணில் மட்டுமல்ல ஈரானிய மண்ணிலும் தாக்குதல்கள் செய்ய வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.

ஈரானின் எக்காளம்
இஸ்ரேலுக்கு கடும் எச்சரிக்கை விடும் வகையில் ஈரானையப் படைத்தளபதி ஹுசேயின் சலாமி  ஏப்ரல் 26-ம் திகதி தொழுகையின் பின்னர் உரையாற்றியிருந்தார். சியோனிஸ்ட்டுக்களே உங்களை நாம் நன்கறிவோம். நீங்கள் வலுவற்றவர்கள். உங்கள் திய செயல்கள் அதிகரிக்கின்றன. உங்களுடன் போர் என ஒன்று நடந்தால் அது உங்களைக் காணாமற் போகச்செய்யும் என்பதை கேட்டறிந்து கொள்ளுங்கள்.” என்பதே அவரின் அறைகூவலாக இருந்தது. உச்சத் தலைவர் கொமெய்னி ஒரு படி மேற் சென்று மேற்காசியாவில் அமெரிக்காவின் கால் உடைக்கப்படும் என்றார். இப்பேச்சுக்களின் பின்னர் இஸ்ரேலின் அமைச்சரவையும்

போர் நோக்கிய நகர்வுகள்
2018 மே மாதம் முதலாம் திகதி அமெரிக்காவின் சி.என்.என் ஊடகம் ஈரானும் இஸ்ரேலும் முன்பு எப்போதும் இல்லாதவகையில் ஒரு போரை நோக்கி நகர்கின்றன என்ற செய்தியை வெளிவிட்டது. ஹாரஜ் என்னும் இஸ்ரேலிய ஊடகம் ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் போர்க்காற்று விசுகின்றது என்று சொல்கின்றது. அதில் இஸ்ரேலுக்கு அமெரிக்கா உதவி செய்யும் எனவும் அது தெரிவித்துள்ளது. லெபனானிய எல்லையை நோக்கி இஸ்ரேலின் பெருமளவு கவச வாகனங்களும் தாங்கிகளும் நகர்த்தப்படுவதாகச் செய்திகள் வெளிவந்தன. ஈரானுடன் சிரியாவில் ஓர் போர் செய்வதன் மூலமே அதை சிரியாவிலிருந்தும் லெபனானில் இருந்தும் வெளியேற்ற முடியும் என இஸ்ரேல் கருதுகின்றது. சிரியாவில் உள்ள ஈரானியப் படைநிலைகள் மீது அடிக்கடி தாக்குதல்களை இரகசியமாக நடத்தி ஈரானின் ஆத்திரத்தைக் கிளறிவிட இஸ்ரேல் துடிக்கின்றது. ஆத்திரத்தில் ஈரான் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினால் சிரியாவில் உள்ள ஈரானின் எல்லப் படைநிலைகளையும் அழிக்க இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது. அப்படிச் செய்யக் கூடிய வகையில் இஸ்ரேலின் படைத்துறை தொழில்நுட்பத்தில் மேம்பட்டதாக இருக்கின்றது.

இரசியாவின் நிலைப்பாடு
சிரிய விவகாரம் தொடர்பாக இஸ்ரேலிய அரசுறவியலாளர்களும் படைத்துறையினரும் இரசியர்களுடன் பல பேச்சு வார்த்தைகளை நடத்தியுள்ளனர். இஸ்ரேலுக்கு எதிராக எந்த ஒரு செயற்பாட்டையும் இரசியா மேற்கொள்ளாது என்ற உத்தரவாதத்தை இரசியா இஸ்ரேலுக்கு வழங்கியிருக்கலாம். ஈரான் சிரியாவில் தனது படை நிலைகளை இரசியப் படை நிலைகளுக்கு மிக நெருக்கமாக அமைத்து வந்தது. அப்படிச் செய்வதால் இஸ்ரேலியப் படைகளின் தாக்குதல் சிரமமாகும் என ஈரான் கருதியது. ஆனால் ஈரான் தனது படைத் தளங்களுக்கு அணையில் படை நிலைகளை உருவாக்குவதை இரசியா விரும்பவில்லை. அனுமதிக்கவுமில்லை. ஈரானும் இஸ்ரேலும் மோதினால் இரசியா நடுநிலை வகிப்பதற்கான வாய்ப்புக்களே அதிகம். இரசிய அதிபர் விளடிமீர் புட்டீனுடன் இணைந்து செயற்படும் இரசிய மரபுவழித் திருச்சபையினர் இரசியா இஸ்ரேலுடன் மோதுவதை விரும்பவில்லை; இது இஸ்ரேலுக்கு கிடைத்த ஓர் அரசுறவியல் வெற்றியாகும்.

அமெரிக்க நிலைப்பாடு
அமெரிக்காவின் புதிய வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பொம்பியோ இஸ்ரேல் சென்று பேச்சு வார்த்தை நடத்திய போது ஈரானின் பிராந்திய ஆதிக்கத்தில் அதிக கவனம் செலுத்தப்பட்டது. அதே வேளை இஸ்ரேலியப் பாதுகாப்புத் துறை அமைச்சரும் அமெரிக்கப் பாதுகாப்புத் துறைச் செயலரும் சந்தித்து உரையாடிய போது ஈரான் விவகாரம் முக்கிய பங்கை வகித்திருக்கும்.

ஈரானுக்கு எதிராக இஸ்ரேலின் குற்றச்சாட்டு
இஸ்ரேலியத் தலைமை அமைச்சர் ஒரு பத்திரிகையாளர் மாநாட்டைக் கூட்டி ஒரு அப்பிள் நிறுவனம் தனது புதிய கைப்பேசியை அறிமுகம் செய்வது போல் ஒரு காணொலிக் காட்சியுடன் ஈரான் 2015-ம் செய்யப்பட்ட உடன்படிக்கையை மீறி அணுக்குண்டு உற்பத்தியில் மிகத் தீவிரமாக ஈடுபட்டுள்ளது என்ற குற்றச் சாட்டை முன்வைத்தார். ஈரான் 2003-ம் ஆண்டு வரை அணுக்குண்டு உற்பத்தி நடவடிக்கைகளில் ஈடுபட்டது. பொருளாதாரத் தடைகளால் அதை அப்போதே கைவிட்டு யூரேனியப் பதப்படுத்தலை மட்டும் தொடர்ந்து செய்து கொண்டே வந்தது. 2015-ம் ஆண்டின் பின்னர் அதையும் பெருமளவு மட்டுப்படுத்தி மருத்துவ மற்றும் விஞ்ஞான ஆராய்ச்சிக்குத் தேவையான அளவு பதப்படுத்தலை மட்டும் 2015 செய்த உடன்படிக்கையின் படி செய்து வருகின்றது. 2003-ம் ஆண்டின் முன்னர் ஈரான் செய்த அணுக்குண்டு ஆராய்ச்சி தொடர்பான ஆவணங்களை பத்திரப்படுத்தி களஞ்சியப்படுத்தியுள்ளது. அவற்றின் பிரதிகளை இஸ்ரேலிய உளவாளிகள் பெற்று ஈரான் பொய் சொல்கின்றது. அது தொடர்ந்தும் அணுக்குண்டு உற்பத்தி நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றது என்றான் இஸ்ரேலியத் தலைமை அமைச்சர் நெத்தன்யாஹூ. 2015 உடன்படிக்கையில் கையொப்பமிட்ட நாடுகளில் அமெரிக்கா தவிர மற்ற நாடுகள் அவரின் குற்றச்சாட்டை ஏற்கவில்லை. 2015 செய்த உடன்படிக்கையின் படி ஈரான் எல்லாவற்றையும் நிறுத்தி ஆவணங்களை பூட்டி வைத்துள்ளது. அதை திரையில் காட்டுவதை வைத்துக்கொண்டு ஈரான் அணுக்குண்டு உற்பத்தி செய்கின்றது என்ற முடிவுக்கு வரமுடியாது என்கின்றன இரசியா, பிரான்ஸ், பிரித்தானியா, சீனா, ஜேர்மனி ஆகிய நாடுகள். ஐக்கிய நாடுகள் சபையின் அணுவலுவிற்கான முகவரகம் ஈரான் சென்று பல ஆய்வுகளையும் திடீர்ச் சோதனைகளையும் செய்து ஈரான் 2015-ம் ஆண்டு உடன்படிக்கையின் படி நடந்து கொள்வதாக உறுதி செய்துள்ளதை ஈரானிய வெளியுறவுத் துறை அமைச்சர் சுட்டிக் காட்டினார். 200 அணுக்குண்டுகளை இரகசியமாக வைத்திருக்கும் இஸ்ரேலின் தலைமை அமைச்சரின் ஆதாரமற்ற குற்றச் சாட்டு ஈரான் மீது களங்கம் கற்பித்து அமெரிக்காவுடன் இணைந்து ஈரான் மீது தாக்குதல் செய்வதற்கான ஒரு முன்னேற்பாடாகவும் இருக்கலாம்.

ஈரானின் வியூகம் இன்னும் தயாரில்லை
இஸ்ரேலுடனான ஒரு போரை ஈரானிய ஆட்சியாளர்கள் தற்போது விரும்பவில்லை. இன்னும் வலுவான நிலையில் இருந்து கொண்டே அவர்கள் போர் புரிய விரும்புவார்கள் என்பதில் ஐயமில்லை. அதற்கு முன்னர் ஈரானை ஒரு வலுச்சண்டைக்கு இழுத்து அதில் ஈரானை வலிமை குன்றிய ஒரு நாடாக்கவே இஸ்ரேல் விரும்புகின்றது போல் தெரிகின்றது.
1948-ம் ஆண்டுப் போரில் ஜோர்தானையும் 1973-ம் ஆண்டுப் போரில் எகிப்த்தையும் அடக்கியது போல் ஈரானையும் இஸ்ரேல் அடக்குமா?

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...