Showing posts with label இந்தியா-சீனா. Show all posts
Showing posts with label இந்தியா-சீனா. Show all posts

Thursday, 13 January 2022

"இந்தியாவே வெளியேறு” இயக்கம் மாலைதீவில் தீவிரமாகின்றது

 

 

முன்னாள் மாலைதீவு அதிபர் அப்துல்லா யாமீன் அப்துல் கயூம் அவர்கள் “இந்தியாவே வெளியேறு” இயக்கத்திற்கு ஆதரவு தெரிவித்திருப்பது அந்த இயக்கத்திற்கு பெரும் வலுவைச் சேர்த்துள்ளது. மாலை தீவு இலங்கை நகர் கொழும்பில் இருந்து தென் மேற்காக 843 கிலோ மீட்டர் தொலைவிலும் இந்தியாவின் கேரளா மாநிலத்தில் இருந்து 914 கிலோ மீட்டர் தொலைவிலும் இருக்கின்ற ஒரு சிறிய தீவுக் கூட்டமாகும். இந்து மாக்கடல் பிரதேசத்தில் அமெரிக்கா, இந்தியா, சீனா ஆகிய நாடுகள் தீவிரமாகப் போட்டி போடும் நிலையில் மாலை தீவும் ஒரு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் இருக்கின்றது.

மாலைதீவின் வரலாறு

கிமு 300இற்கு முன்பு இருந்தே தமிழர்கள் மாலைதீவில் வாழ்ந்தார்கள். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் சோழர்களால் ஆளப்பட்ட மாலை தீவு 12-ம் நூற்றாண்டில் இஸ்லாமிய நாடாக்கப்பட்து. மாலைதீவை 16-ம் நூற்றாண்டில் போர்த்துக்கேயரும், 17-ம் நூற்றாண்டில் டச்சுக்காரர்களும் 18-ம் நூற்றாண்டில் ஆங்கிலேயரும் கைப்பற்றி ஆட்சி செய்தனர். 1953-ம் ஆண்டில் பொதுநலவாய நாடுகளின் கீழ் ஒரு குடியரசாகியது. 1965-இல் மாலைதீவு முழுமையான சுதந்திர நாடாகியது. சிறிய நாடக இருந்த போதிலும் உலக அரங்கில் அது தனது செயற்பாட்டில் அதிக அக்கறை காட்டியது. பொதுநலவாயம், சார்க், கூட்டுச்சேரா அமைப்பு போன்றவற்றில் உறுப்புரிமையும் பெற்றது. 1980இல் இருந்து அது உல்லாசப் பயணிகளைக் கவரும் நாடாக மாறியது. அதன் பொருளாதாரம் மீன்வளத்திலும் உல்லாசப் பயணத்திலும் தங்கியுள்ளது. 150 தீவுகளைக் கொண்ட மாலைதீவின் நிலப்பரப்பு 90,000 சதுர கிலோ மீட்டராகும். அங்கு 540,000 மக்கள் வசிக்கின்றனர். மாலை போன்ற தோற்றம் கொண்ட தீவுக் கூட்டம் என்பதால் மாலை என்னும் தமிழ்ச்சொல்லில் இருந்தே அது மாலைதீவு என்ற பெயர் பெற்றது என்றும் சொல்லப்படுகின்றது. அதேவேளை மஹால் என்ற அரபுச் சொல்லில் இருந்து திரிபடைந்து மாலைதீவு என்னும் பெயர் வந்தது என்றும் சொல்லப்படுகின்றது. மாலைதீவின் அதிபராக அப்துல்லா யாமீன் அப்துல் கயூம் 2013-ம் ஆண்டில் இருந்து 2018-ம் ஆண்டு வரை இருந்தார். 2018இல் நடந்த தேர்தலில் அவர் தோற்கடிக்கப்பட்டார்.

சீன மாலைதீவு நட்புறவுப் பாலம்

மாலைதீவின் அதிபராக அப்துல்லா யாமீன் அப்துல் இருந்த போது மாலைதீவின் இரண்டு முக்கிய தீவுகளான மாலேயையும் ஹுல்ஹூலேயையும் இணைக்கும் நீண்ட நான்வழிச் சாலைகளைக் கொண்ட பாலம் ஒன்று சீனக் கடனில் கட்டப்பட்டது. அந்தப் பாலத்திற்கு சீன-மாலைதீவு நட்புறவுப் பாலம் என்ற பெயர் சூட்டப்பட்டது. இது 1972-ம் ஆண்டு உருவான சீன மாலைதீவு நட்புறவில் முக்கிய மைல்கல்லாக அமைந்தது. சீனாவின் Belt & Road Initiative திட்டத்தின் கீழ்க் கட்டப்பட்ட இந்தப் பாலம் மாலைதீவு மக்களுக்கு பல வசதிகளைச் செய்து கொடுத்துள்ளது. அப்துல்லா யாமீன் அப்துல் சீனாவுடன் நெருங்கிய நட்பு பாராட்டியபடியால் அமெரிக்காவும் இந்தியாவும் அவரை ஆட்சியில் இருந்து அகற்றும் முயற்ச்சியில் இறங்கின. மாலைதீவின் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்ய பல நூறு மில்லியன் டொலர் பெறுமதியான் கடனை சீனாவிடமிருந்து அப்துல்லா யாமீன் அப்துல் பெற்றுக் கொண்டார். அவர் மீது பல மனித உரிமை மீறல் குற்றச் சாட்டுகள் சுமத்தப்பட்டன. நாட்டை அபிவிருத்திப் பாதையில் இட்டுச் சென்று கொண்டிருந்த அப்துல்லா யாமீன் அப்துல் 2018 செப்டம்பரில் நடந்த அதிபர் தேர்தலில் யாரும் எதிர்பார்த்திருக்காத வகையில் தோல்வியடைந்தார். இந்தியாவிற்கு சார்ப்பான மாலைதீவு மக்களாட்சிக் கட்சியின் இப்ராஹிம் சொலி வெற்றியடைந்து நாட்டின் அதிபரானார்.

சீனக் கடன்

அஹமட் சியாம் என்ற மாலைதீவுத் தொழிலதிபருக்கு மாலைதீவு அரசின் உறுதியின் பேரில் 127.5மில்லியன் டொலர் கடனை சீனாவின் எக்ஸிம் வங்கி ஓர் ஆடம்பர உல்லாச விடுதி கட்டுவதற்கு வழங்கியிருந்தது. தனக்கு வேண்டிய ஆட்சியாளர் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டதால் விசனமடைந்த சீனா 2020இல் கடனை அஹமட் சியாம் அல்லது மாலைதீவு அரசு திருப்பிச் செலுத்த வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தை செய்தது. 2020இல் கொவிட்-19 தொற்று நோயால் மாலைதீவின் உல்லாசப் பயணத்துறை பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தது. தனியார் கடனுக்கு அரசு உறுதி வழங்குவது எங்கும் எப்போதும் இல்லாத ஒன்றாகும். சீனக் கடன் பொறி என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. கடன் வாங்கிய தொழிலதிபர் அஹமட் சியாமின் கட்சியும் முன்னாள் அதிபர் அப்துல்லா யாமீர் அப்துல்லின் கட்சியும் கூட்டணியாக இயங்கின. இதனால் அரசு வழங்கிய உறுதி ஓர் ஊழலாகக் கருதப்பட்டது. மாலைதீவு அரசுக்கு சீனா வழங்கிய கடன் 1.5 பில்லியன் டொலர். மொத்த தேசிய உற்பத்தியாக 3.9 பில்லியன் டொலரைக் கொண்ட மாலைதீவுக்கு இது ஒரு பாரிய கடன் சுமையாகும். அரசின் உறுதி மொழியில் தனியாருக்கு வழங்கப்பட்ட கடன் எவ்வளவு என்பது பற்றி சரியான தகவல் இல்லை.

இந்தியா முதன்மையானது இந்தியாவே வெளியேறு என மாறியது

2018-ம் ஆண்டு சீன சார்பு அதிபர் யாமீர் அப்துல்லைத் தோற்கடித்து ஆட்சிக்கு வந்த இந்திய மற்றும் அமெரிக்க சார்பு இப்ராஹிம் மொஹமட் சொலியின் முதல் வெளிநாட்டுப்பயணம் இந்தியாவிற்கானதே. அவரது கொள்கையும் “இந்தியா முதன்மையானது” என அழைக்கப்பட்டது. இந்தியா அவருக்கு 1.4 பில்லியன் டொலர் கடனை வழங்கியதுடன் மாலைதீவின் கடற்படைத் துறைமுகத்தை அபிவிருத்து செய்யும் பொறுப்பையும் இந்தியா பெற்றுக் கொண்டது. புதிய இந்திய சார்பு அதிபர் பழைய சீன சார்பு அதிபரை 2018-ம் ஆண்டு பணச்சலவைக் குற்றச்சாட்டில் கைது செய்து சிறையிலடைத்தது. 2021 நவம்பர் மாதம் அந்த சீன சார்பு அதிபர் யாமீர் அப்துல்லாவை மாலைதீவு நீதிமன்றம் விடுதலை செய்தது. 2018-ம் ஆண்டு இந்திய சார்பு அதிபர் மொஹமட் சொலி தேர்தலில் வெற்றி பெற்றதில் இருந்து மாலைதீவில் இந்தியாவிற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் ஆங்காங்கு அவ்வப்போது சீன சார்புக் கட்சியான மாலைதீவு முற்போக்குக் கட்சியின் ஏற்பாட்டில் நடந்து வந்தன. அது பின்னர் “இந்தியாவே வெளியேறு” என்ற இயக்கமாக வளர்ச்சி பெற்றது. மாலைதீவுக் கடற்படைத்தளத்தில் இந்தியக் கடற்படையினர் அபிவிருத்தி என்ற போர்வையில் வந்து நிலை கொண்டிருப்பதாக மாலைதீவில் மக்கள் விசனமடைந்துள்ளனர்.

“இந்தியாவே வெளியேறு” இயக்கத்தை மாலைதீவில் சிறையில் இருந்து விடுதலையான முன்னாள் அதிபர் யாமீன் அப்துல் தீவிரப்படுத்தியுள்ளார். அவருக்கு சீனா மறைமுகமாக உதவி செய்தால் அவரால் இதை ஆட்சிக்கவிழ்ப்பு வரைக்கும் இட்டுச் செல்ல முடியுமா?. 2018இல் மாலைதீவில் செய்யப்பட்ட ஆட்சி மாற்றத்திற்கு இந்தியாவிற்கு அமெரிக்காவும் உறுதுணையாக இருந்தது. அந்த ஆட்சி மாற்றத்தை பாதுகாக்கவும் அமெரிக்காவின் உதவி அவசியம். இந்தியாவிடம் அதன் சுற்றவுள்ள நாடுகளைக் கையாளும் திறன் இல்லை.

Sunday, 7 November 2021

இலங்கையில் சீனா படைத்தளம் அமைக்குமா?

  


இலங்கையில் சீனா படைத்தளம் அமைக்க முயல்கின்றது என அமெரிக்காவின் பாதுகாப்புத்துறை அமெரிக்கப் நாடாளுமன்றத்திற்கு கொடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் அதிகரிக்கும் போது அமெரிக்காவும் இந்தியாவும் இணைந்து தமிழர்களுக்கு விடுதலை பெற்றுக் கொடுக்கும் என மனப்பால் குடித்துக் கொண்டிருந்தவர்களின் காதில் இந்தச் செய்தி தேனாகப் பாய்ந்துள்ளது. அது மட்டுமல்ல அமெரிக்காவின் வெளியுறவுத்துறை தமிழ் சட்டவாளர்களான மதியாபரணம் சுமந்திரன், கனக ஈஸ்வரன், திருமதி சந்திரகாசன் ஆகியோரை வாஷிங்டனுக்கு அழைத்துள்ளது என்ற செய்தியும் வெளிவந்ததால் தமிழர்களுக்கு தனிநாடே கிடைத்து விட்டது என்பது போல் துள்ளிக் குதிக்கின்றனர். ஓர் ஊடகம் பீதியில் தென்னிலங்கை எனச் செய்தியும் வெளிவிட்டுள்ளது.

அமெரிக்கா சொல்வதெல்லாம் உண்மையல்ல. அமெரிக்கப் பாதுகாப்புத்துறை அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு பொய் சொல்வதுமுண்டு. அமெரிக்கப் பாதுகாப்புத்துறை அதன் அதிபரின் கீழ் உள்ள ஓர் அமைச்சு. அதற்கு தேவையான நிதி ஒதுக்கீட்டை அது நாடாளமன்றத்தில் இருந்தே பெறவேண்டும். அமெரிக்க நாடாளுமன்றதின் மக்களவைக்கு நிதி தொடர்பாக அதிக அதிகாரமும் மூதவைக்கு வெளியுறவுக் கொள்கை தொடர்பாக கணிசமான அதிகாரமும் உள்ளன. வளரும் சீனாவை இலகுவாக எதிர் கொள்வதற்கு அதிக நிதி அமெரிக்கப் பாதுகாப்புத் துறைக்கு தேவைப்படுகின்றது. அமெரிக்காவில் உள்ள படைக்கல உற்பத்தி முதலாளிகளும் தமது வருமானத்தைப் பெருக்குவதற்கு அமெரிக்க பாதுகாப்புத்துறைக்கு அதிக நிதி பெற உண்மைக்கு மாறான தகவல்களை பாதுகாப்புத்துறையை வழங்கும் படி தூண்டுவதுண்டு. அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அது தெரியும். அவர்களுக்கும் படைக்கல உற்பத்தியாளர்கள் “கவனித்துக்” கொள்வாரகள்.

பெண்டகன் எனப்படும் அமெரிக்கப் பாதுகாப்புத்துறையின் அறிக்கையில் உள்ள ஒரு பந்தியில்:

The PRC has likely considered a number of countries, including Cambodia, Myanmar, Thailand, Singapore, Indonesia, Pakistan, Sri Lanka, United Arab Emirates, Kenya, Seychelles,

Tanzania, Angola, and Tajikistan, as locations for PLA facilities. எனச் சொல்லப்பட்டுள்ளது.

இதில் உள்ள likely considered என்ற சொற்றொடரை வைத்துப் பார்க்கும் போது சீனா நிச்சயம் தனக்கான படைத்துறை வசதிகளை இலங்கையில் அமைக்கும் என்ற கருத்து அதில் இல்லை. அப்படிக் “கருத்திற் கொண்டிருக்க வாய்ப்புள்ளது” என்றுதான் பொருள் கொள்ள வேண்டும். பெண்டகனின் கருத்தை மறுத்த கொழும்பில் உள்ள சீனத் தூதுவரகம் “ஒரு கள்வன் மற்ற எல்லோரையும் கள்வன் என்பான். உலகெங்கும் 750இற்கு மேற்பட்ட படைத்தளங்களை வைத்துள்ளது அமெரிக்கா” என்றது.

இலங்கையில் சீனா படைத்தளம் அமைத்தால் அதற்கான வழங்கற் பாதை மிகவுக் கடினமானதாகவே அமையும். இலங்கையில் சீனா படைத்தளம் அமைத்தால் அதை ஒரு போர் ஆகவே இந்தியா கருதி அதன் மீது இந்தியா கடலில் இருந்து வானில் இருந்து தரையில் இருந்து என பல முனைத் தாக்குதல்களை நடத்தலாம். இந்தியாவின் எப்பாகத்தில் இருந்தும் இலங்கையில் உள்ள சீனப் படைத்தளம் மீது தாக்குதல் நடத்தலாம். இலங்கையில் இருந்து மிகத் தொலைவில் உள்ள இந்தியாவின அருணாசலப் பிரதேசத்தில் இருந்து இலங்கைக்கான தூரம் 4450கிமீ, கஷ்மீரில் இருந்து 4000கிமீ. இந்தியா அண்மையில் பரிசோதித்த அக்னி-5 ஏவுகணைகள் 5500 முதல் 8000கிமீ வரை பாயக் கூடியது. தமிழ்நாட்டுக் கரையோரத்தில் இருந்து குறுந்தூர ஏவுகணைகள் மூலம் இலங்கையின் எப்பகுதியிலும் தாக்குதல் செய்யலாம். இந்தியா Nuclear Triad நாடுகளில் ஒன்றாகும். அமெரிக்கா, சீனா, இந்தியா, இரசியா, பிரான்ஸ், இஸ்ரேல் ஆகிய நாடுகள் தரையில் இருந்தும், வானில் இருந்தும் கடலுக்குள் நீர்மூழ்கிக் கப்பல்களில் இருந்தும் அணுக்குண்டுகளை வீசக்கூடியவை என்பதால் அவை Nuclear Triad என அழைக்கபடுகின்றன. அதனால் இந்தியாவால் அம்மூன்று முனைகளில் இருந்தும் இலங்கையில் உள்ள நிலைகள் மீது அணுக்குண்டுகளையும் வீசலாம். தமிழ்நாட்டில் உள்ள தஞ்சாவூர் விமானப்படைத்தளத்தில் இந்தியாவும் இரசியாவும் இணைந்து உருவாக்கிய SU-31 MKI போர்விமானங்கள 122 பிரம்மோஸ்-2 ஏவுகணைகளுடன் நிறுத்தப்பட்டுள்ளன. அதிமீயொலி (ஹைப்பர்சோனிக்) வேகத்தில் பாயக் கூடிய பிரம்மோஸ்-2 ஏவுகணைகளால் இலங்கையில் உள்ள எந்தப் பெரிய படைத்தளத்தையும் அழிக்க முடியும். இந்தியாவின் காளி ஏவுகணைகள் திட்டம் முழு வெற்றியளித்தால் அவற்றால் எதிரிகளின் அதிமீயொலி வேக ஏவுகணைகளையும் அழிக்க முடியும்.

 

இலங்கையில் சீனா படைத்தளம் அமைக்காது ஆனால் இந்தியாவிற்கு எதிரான போர் என்று வரும்போது இலங்கையை சீனா பாவிக்கும் என்பது உண்மையா எனப்பார்ப்போமானால்:

1. மலாக்கா நீரிணை வழியான நீண்ட கடல் பாதை 3108கடல் மைல்கள் அதனூடாக இலங்கைக்கு வரும் சீனாவின் கப்பல்களையும் நீர்மூழ்கிக் கப்பல்களையும் இந்தியா அந்தமான் தீவில் வைத்து தாக்கும்.

2. மியன்மார் ஊடாகவும் வங்கக் கடலூடாகவும் சீனா தன் படைகளைக் கொண்டு வரலாம். உலகின் மிக பெரிய விரி குடா. தரைவழியாக படகுகளை மட்டும் நகர்த்தலாம். அப்படி இலங்கை வரும் சீனப் படைகளை அந்தமான் நிக்கோபார் விசாகப்பட்டினம், சென்னை ஆகிய துறைமுகங்களி இருந்து இந்தியா தாக்குதல் நடத்தும்.

3. பாக்கிஸ்த்தான் ஊடாக குவாடர் துறைமுகம். அங்கிருந்து அம்பான்தோட்டை.க்கு சீனா தனது படைகளைக் கொண்டு வரலாம். தற்போது எந்த ஒரு கடற்கலன்களும் பாக்கிஸ்த்தானின் குவாடர் துறை முகத்தில் இல்லை. பாக்கிஸ்த்தானின் கடற்படைக் கலன்களை சீனா பாவிக்கலாம். ஆனால் இந்தியாவின் மேற்கு கரையில் உள்ள ஆறுக்கு மேற்பட்ட துறைமுகங்களில் இருந்து இந்தியாவால் தாக்குதல் செய்ய முடியும்.

சீனாவால் பகிரங்கமாக ஒரு படைத்தளத்தை இலங்கையில் வைத்திருக்க முடியாது. கொழும்பு மற்றும் அம்பாந்தோட்டை துறை முகங்களில் பெரிய கொள்கலன்களில் இந்தியாவைத் தாக்கக் கூடிய அசையும் ஏவுகணைச் செலுத்திகளை மறைத்து வைத்திருந்து தேவை ஏற்படும் போது இந்தியா மீதோ அல்லது இலங்கையை ஒட்டிய கடற்பரப்பில் பயணிக்கும் அமெரிக்க கப்பல்கள் மீதோ சீனாவால் தாக்குதல் செய்ய முடியும்.

ஜிபுக்தியில் ஆயிரம் முதல் இரண்டாயிரம் வரையிலான படையினரைக் கொண்ட ஒரு படைத்தளத்தை சீனா வைத்துள்ளது. அங்கிருந்து சீனாவின் எதிரி நாடுகள் மீது தாக்குதல் நடத்த முடியாது. கடற் கொள்ளையரிடமிருந்து தனது சரக்குக் கப்பல்களைப் பாதுகாக்கவே சீனா அங்கு ஒரு படைத்தளத்தை வைத்துள்ளது. அங்கு சீனா மட்டுமல்ல அமெரிக்கா, பிரான்ஸ் போன்ற நாடுகளும் படைத்தளம் அமைத்துள்ளன.

இலங்கை ஆட்சியாளர்களுக்கும் சீனா இலங்கையில் படைத்தளம் அமைத்தால் தமது நாடு போர்க்களமாகும் என்பது தெரியும்.

2019 ஒக்டோபரில் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சரின் பயணம் தோல்வியில் முடிந்ததைத் தொடர்ந்து இலங்கைக்கு எதிராக அமெரிக்கா பல நகர்வுகளைச் செய்கின்றது. அவற்றில் ஒன்றாக பெண்டகனின் அறிக்கையைப் பார்க்க வேண்டும்.

Thursday, 29 April 2021

சீனாவிடமிருந்து இந்தியாவை அமெரிக்கா பாதுகாக்குமா?

  


பராக் ஒபாமா அமெரிக்க அதிபராக இருந்தபோது அமெரிக்க இந்திய உறவை மேம்படுத்துவதற்கான அடித்தளம் அமைக்கப்பட்டது. சீனா பொருளாதாரம், படைத்துறை, தொழில்நுட்பம் ஆகியவற்றில் அசுர வேகத்தில் முன்னேறியதும் சீன விரிவாக்கத்திற்கு சீனா தயாராகின்றது என்ற நிலையுமே அமெரிக்க இந்திய உறவிற்கு வித்திட்டது. பராக் ஒபாமாவின் ஆசியச் சுழற்றி மையம் கொள்கையில் இந்தியாவிற்கு முக்கிய இடம் கொடுக்கப்பட்டது. தனது நாட்டிலோ அல்லது அயல்நாடுகளிலோ வல்லரசு நாடுகளின் படையினர் இருக்கக் கூடாது என்ற கொள்கையை நீண்ட காலமாக கடைப்பிடித்து வந்த இந்தியா அமெரிக்காவுடன் The Logistics Exchange Memorandum Agreement (LEMOA) என்ற ஒப்பந்தத்தை இந்தியா செய்து கொண்டது. அதன் படி அமெரிக்கப் படையினர் இந்தியாவில் உள்ள படைத்தளங்களை தேவை ஏற்படும் போது பாவிக்கலாம். இந்தியா ஒரு வல்லரசு நாடாக இல்லாத போதிலும் ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையில் நடக்கும் போட்டியில் படைத்துறைச் சமநிலையை தீர்மானிக்கும் நாடாக இருக்கின்றது. அமெரிக்கா சீனாவிற்கு எதிராக அமெரிகாவுடன் பெருமளவில் படைத்துறை ஒத்துழைப்பை மேற்கொண்டால் ஆசிய பசுபிக் படைத்துறைச் சமநிலை சீனாவிற்கு பெரும் பாதகமாக அமையும். அமெரிக்காவின் உடனடி தேவை சீனா தைவான் தீவைக் கைப்பற்றுவதை தடுப்பதாகும்.

நேட்டோவின் பங்காண்மை நாடாக இந்தியா

2021 ஜூன் 14-ம் திகதி நடக்கவிருக்கும் நேட்டோ படைத்துறைக் கூட்டமைப்பு நாடுகளின் உச்சி மாநாட்டில் இந்தியாவை நேட்டோவின் பங்காளியாக்க வேண்டும் என்ற ஆலோசனை ஒரு நிபுணர் குழுவால் முன்வைக்கப்படவுள்ளது. அக்குழுவின் இணைத்தலைவரான அமெரிக்காவின் முன்னாள் துணை வெளியுறவுத் துறைச் செயலர் வெஸ் மிசேல் இந்துஸ்த்தான் ரைம்ஸ் பத்திரிகையில் இந்திய – நேட்டோ ஒத்துழைப்பைப் பற்றி ஒரு கட்டுரையை எழுதியுள்ளார். அது நேட்டோ இந்தியாவை பங்காளியாக இணையும் அழைப்பை விடுக்க வேண்டும், அதை தன் தயக்கத்தை எறிந்துவிட்டு இந்தியா ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற வாசகத்துடன் அவர் தனது கட்டுரையை ஆரம்பித்துள்ளார். நேட்டோ படைத்துறைக் கூட்டமைப்பிற்கு ஆப்கானிஸ்த்தான், ஒஸ்ரேலியா, ஈராக், பாக்கிஸ்த்தான், கொலம்பியா, ஜப்பான், நியூசீலாந்து, மொங்கோலியா, தென் கொரியா ஆகிய ஒன்பது பங்காண்மை நாடுகள் உள்ளன. பங்காண்மை நாடுகளுக்கு உறுப்புரிமையுள்ள நாடுகளுக்கு இருப்பது போன்ற கூட்டு பாதுகாப்பு பொறுப்பு இல்லை. நேட்டோவின் அமைப்பு விதிகளின் ஐந்தாவது பிரிவின் படி ஒரு உறுப்பு நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் மற்ற நாடுகள் அந்த அச்சுறுத்தல் தமக்கு வந்தது போல் கருதிச் செயற்பட வேண்டும். நேட்டோவின் பங்காண்மை நாடுகளுடன் இணையவெளிப் பாதுகாப்பு, பயங்கரவாத ஒழிப்பு போன்றவற்றில் பெருமளவில் ஒத்துழைக்கும்.

தயக்கத்தை கைவிட்ட இந்தியா

சீனாவை அடக்கும் அமெரிக்கக் கொள்கையை ஒட்டிய செயற்பாட்டில் இந்தியாவையும் இணைக்க அமெரிக்கா விரும்புகின்றது என்கின்றது சீனா. மேலும் சீனா இந்தியாவும் தனது வெளியுறவுக் கொள்கையை அமெரிக்காவுக்கு சார்பாக மாற்றி வருகின்றது எனக் கருதுகின்றது. சீனாவின் பாதுகாப்புச் செலவு இந்தியாவின் பாதுகாப்புச் செலவிலும் பார்க்க மூன்று மடங்காகும். சீனாவிற்கு எதிராக இந்தியா அமெரிக்காவுடன் கூட்டுச் சேர்வதில் தயக்கம் காட்டி வந்தது. சீனாவுடன் நல்ல உறவில் இருந்தால் மட்டுமே ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபையில் நிரந்தர உறுப்புரிமை பெற முடியும் என இந்தியா கருதி இருந்தது. 2017-ம் ஆண்டு இந்திய சீன எல்லையை ஒட்டியுள்ள டோக்லம் பிரதேசத்தில் இந்தியப் படைகளுக்கும் சீனப் படைகளுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்ட பின்னர் இந்தியா அமெரிக்காவுடன் இணைந்து செயற்பட முடிவு செய்தது. ஜப்பான் முன்வைத்த குவாட் அமைப்பில் இணைய இந்தியா காட்டிய தயக்கத்திற்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டது.

ஜேர்மனி என்னும் அமெரிக்கா வளர்த்த கடா

இரண்டாம் போரில் இரு கூறுகளாக்கப் பட்ட ஜேர்மனியின் மேற்குப் பகுதியை பொதுவுடமை சோவியத் ஒன்றியத்திடமிருந்து பாதுகாப்பதில் அமெரிக்கா முக்கிய பங்கு வகித்தது. அமெரிக்கவிற்கும் சோவியத் ஒன்றியத்திற்கும் இடையில் நடந்த பனிப்போரில் ஜேமனியின் பாதுகாப்பு முக்கியத்துவம் பெற்றதுடன். பனிப்போரின் முடிவில் கிழக்கு ஜேர்மனியையும் மேற்கு ஜேர்மனியையும் ஒன்றிணைக்கப்பட்டது. மேற்கு ஐரோப்பாவில் பொருளாதார வலிமை மிக்க நாடாக உருவெடுத்தமைக்கு ஜேர்மனை அமெரிக்காவிற்கு செய்த ஏற்றுமதியும் ஒரு காரணமாகவும். ஆனால் அமெரிக்காவின் எதிர்ப்பையும் மீறி ஜேர்மனி தற்போது நோட்ஸ்ரீம்-2 என்னும் குழாய்த்திட்டத்தின் மூலம் இரசியாவிடமிருந்து பெருமளவு எரிவாயுவை இறக்குமதி செய்ய முனைகின்றது. இரசியா மீது பொருளாதாரத் தடைகளை விதித்து அதன் விரிவாக்க முயற்ச்சிக்கு தடை போட நினைக்கும் அமெரிக்காவிற்கு ஜேர்மன் – இரசிய வர்த்தகம் தடையாக அமைகின்றது.

இன்றைய சீனாவின் நிலையை நாளை இந்தியா எடுக்குமா?

இன்று சீனாவிடமிருந்து அமெரிக்கா எதிர் கொள்ளும் சவால்களை இன்னும் இருபது ஆண்டுகளில் இந்தியாவிடமிருந்தும் அமெரிக்கா எதிர் கொள்ள வேண்டியிருக்கும். சீனா தனது பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டிய வசதிகளை அமெரிக்கா 1980களில் சீனாவிற்கு செய்து கொடுத்தது. சீனாவில் சந்தைப் பொருளாதாரத்தை வளர்த்தால் அதுவும் ஒரு முதலாளித்துவ நாடாக மாறிவிடும் என அமெரிக்கா நம்பியது. சீனாவின் பொருளாதார வளர்ச்சியைத் தொடர்ந்து தக்க வைக்க அது அமெரிக்காவைப் போல் ஒரு முதளாளித்துவ நாடாக மாறியே ஆக வேண்டும் என அமெரிக்கா நம்பியிருந்தது. ஆனால் அந்த மாற்றங்கள் ஏதும் நடக்கவில்லை. சீனப் பொதுவுடமைக் கட்சியின் பிடி நாட்டில் தளரவில்லை. மாறாக மேலும் இறுக்கமடைந்துள்ளது. ஜி ஜின்பிங்கின் பிடி சீனப் பொதுவுடமைக் கட்சியிலும் சீனப் படைத்துறையிலும் கடுமையாக இறுக்கமடைந்துள்ளது. சீன அதிபர் ஜி ஜின்பிங் ஒரு சர்வாதிகாரி போலச் செயற்படுகின்றார்.

பொறுப்பு ஏற்க விரும்பாத அமெரிக்கா

இரண்டாம் உலகப் போரின் பின்னர் மேற்கு ஐரோப்பாவின் பாதுகாப்பில் தாம் தேவைக்கு அதிகமான பங்கு வகித்ததாக அமெரிக்கர்கள் கருதுகின்றனர். அமெரிக்கா தம்மை பாதுகாக்கும் என்ற நம்பிக்கையில் மேற்கு ஐரோப்பிய நாடுகள் தமது பாதுகாப்பிற்கு போதிய நிதியை ஒதுக்கவில்லை எனவும் அமெரிக்கர்கள் கருதுகின்றனர். மேற்கு ஐரோப்பாவில் விட்ட தவறை ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் விட அமெரிக்கா விரும்பவில்லை. அதனால்தான் 2021 ஜனவரியில் குவாட் என்னும் ஜப்பான், ஒஸ்ரேலியா, இந்தியா, அமெரிக்கா ஆகிய நாடுகளைக் கொண்ட அமைப்பில் அமெரிக்கா பாதுகாப்பு பொறுப்பை ஏற்க மாட்டாது என அறிவித்துள்ளது.

இந்தியாவுடன் பாதுகாப்பு ஒத்துழைப்பை அமெரிக்கா பெரிதும் விரும்புகின்றது. ஆனால் இந்தியாவின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொறுப்பை அமெரிக்கா ஏற்றுக் கொள்ள மாட்டாது. அதே வேளை இந்தியாவை சீனா போரில் தோற்கடிக்கும் நிலை ஏற்பட்டால் சீன வெற்றியைத் தவிர்க்க அமெரிக்கா பல வகையிலும் இந்தியாவுடன் ஒத்துழைக்கும். அப்படி ஒரு நிலை இருக்கும் போது சீனா இந்தியா மீது போர் தொடுப்பதை தவிர்க்கும். 


Monday, 26 October 2020

விமானம் தாங்கி கப்பல் போட்டியில் இந்தியா

 

கடல் எல்லைகளைக் கொண்ட நாடுகளின் பாதுகாப்பிற்கு வலிமையான கடற்படை அவசியம். கடலோர வளங்களையும் கரையில் இருந்து 200 கிலோ மீட்டர் தூர கடற்பொருளாதார வளத்தையும் பாதுகாப்பதற்கும் கடற்போக்குவரத்தை பாதுகாப்பதற்கும் கடற்படை அவசியமானதாகும். முன்பு பிரித்தானியாவும் தற்போது அமெரிக்காவும் தமது கடற்படை வலிமை மூலமாகவே தம் உலக ஆதிக்கத்தை நிலை நிறுத்தின. இரண்டாம் உலகப் போரின் பின்னர் அமெரிக்காவின் உலக ஆதிக்கத்தை அதன் பொருளாதார வலிமையும் கடற்படை வலிமையுமே தூக்கி நிறுத்தின.

சீனாவினதும் அமெரிக்காவினதும் விமானம் தாங்கிக் கப்பல்கள்

சீனாவிடம் தற்போது இரண்டு விமானம் தாங்கிக் கப்பல்கள் உள்ளன. முதலாவது இரசியாவிடமிருந்து வாங்கிய லியோனிங். மற்றது சீனாவே உருவாக்கிய ஷாண்டோங். சீனா மேலும் இரண்டு புதிய விமானம் தாங்கிக் கப்பல்களை சீனா உருவாக்கிக் கொண்டிருக்கின்றது. அவை அறுபதாயிரம் தொன் எடையுள்ள நடுத்தர அளவு விமானம் தாங்கிக் கப்பல்களாகும். சீனாவின் மூன்றாவது விமானம் தாங்கிக் கப்பல் 2023இல் சேவைக்கு வரும் என எதிர்பார்க்கப் படுகின்றது. அமெரிக்காவின் பதினொரு விமானம் தாங்கிக் கப்பல்களும் மீக-விமானம் தாங்கிக் கப்பல்களாகும் (Super-Carriers). விமானம் தாங்கிக் கப்பல்களின் தரவரிசை அவற்றின் எடை, தங்கிச் செல்லும் விமானங்களின் எண்ணிக்கை, அவற்றில் இருந்து விமானங்கள் கிளம்பிச் செல்லும் முறைமை போன்றவற்றைக் கருத்தில் கொண்டு முடிவு செய்யப்படும். விமானம் தாங்கிக் கப்பல்களில் மிகச் சிறந்தவை மீக-விமானம் தாங்கிக் கப்பல்களாகும் (Super-Carriers). அவை:

1. ஒரு இலட்சம் தொன் அல்லது அறுபத்தி நான்காயிரம் மெட்ரிக் தொன் எடையுள்ளவை

2. தொண்ணூறு விமானங்களைக் கொண்டிருக்கும்.

3. மின்காந்த தொழில்நுட்பம் மூலம் குறைந்த அளவு தூரம் பறந்து விமானங்கள் வானில் பறக்கும்.

அமெரிக்காவின் மீக-விமானம் தாங்கிக் கப்பல்களில் இருந்து ஒவ்வொரு நிமிடமும் இரண்டு விமானங்கள் பறந்து செல்லக் கூடியவை.

பின் தங்கிய சீனா

சீனா தனது விமானம் தாங்கிக் கப்பல்களுக்கு இரசியாவின் எஸ்யூ-33 போர்விமானங்களை வாங்க முயற்ச்சித்த போது இரசியா அவற்றை விற்பனை செய்ய மறுத்து விட்டது. பின்னர் சீனா உக்ரேனிடமிருந்து அரைகுறையாக வடிவமைக்கப் பட்ட எஸ்யூ-33 விமானங்களை வாங்கி Reverse Engineering மூலம் உருவாக்கிய விமானங்கள் சரியாக வேலை செய்யவில்லை. Reverse Engineering மூலம் இயந்திரஙக்ளை உருவாக்குவது மிக மிக கடினமானது என்ற படியால் சீனாவால் சிறந்த போர் விமானங்களை உருவாக்க முடியவில்லை. அமெரிக்கா தனது ஐந்தாம் தலைமுறைப் போர்விமானமான F-35ஐ தனது விமானம் தாங்கிக் கப்பல்களில் சேவையில் ஈடுபடுத்தியுள்ளது.

சீனாவின் ஒரு துருவ ஆசியா – இரு துருவ உலகம்

சீனாவின் இலக்கு ஒரு துருவ ஆசியாவும் இரு துருவ உலகமுமாகும். அதாவது ஆசியவில் சீனா தனியாதிக்கம் செலுத்த வேண்டும். உலகின் மற்றப்பகுதிகளில் அமெரிக்காவும் சீனாவும் ஆதிக்கம் செலுத்த வேண்டும். அந்த நோக்கத்தை நிறைவேற்ற சீனா தனது படைவலுவைப் பெருக்கும் போது இந்தியா பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகின்றது. அதனால் சீனாவிற்கு போட்டியாக இந்தியா தன் படைவலுவைப் பெருக்க வேண்டிய நிர்ப்பந்தம் உருவாகியுள்ளது. இந்தியாவின் மொத்த தேசிய உற்பத்தியிலும் பார்க்க சீனாவின் மொத்த தேசிய உற்பத்தி ஐந்து மடங்கானது. ஆனல் சீனாவின் பாதுகாப்புச் செலவு இந்தியாவின் பாதுகாப்புச் செலவிலும் பார்க்க மூன்றரை மடங்கானது. இதனால் இந்தியாவின் பாதீட்டில் அதிக பிரச்சனையை எதிர் கொள்ள வேண்டியுள்ளது.



இந்தியவினதும் சீனாவினதும் கரையோரங்கள்

இந்தியாவின் கரையோரம் 7516கிலோ மீட்டர் நீளமானது. சீனாவின் கரையோரம் 32,000கிலோ மீட்டர் நீளமானது. சீனாவின் கரையோரங்களில் உள்ள தென் கொரியா, ஜப்பான், வியட்னாம், பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளை சீனா சமாளிக்க வேண்டியுள்ளது. இந்தியா பங்களாதேசம், மியன்மார், இலங்கை பாக்கிஸ்த்தான் ஆகிய நாடுகளை தன் கரையோர அயல் நாடுகளாகக் கொண்டுள்ளது. இந்தியாவிற்கு கடல் வழியாக வந்த தீவிரவாதிகள் 2008-ம் ஆண்டு மும்பை நகரை தொடர்ந்து 64 மணித்தியாலங்கள் தாக்கினர். இந்தியா கடல்வழியாக தீவிரவாதிகளின் அச்சுறுத்தலையும் எதிர் கொள்கின்றது. தென் சீனக் கடலின் தொண்ணூறு விழுக்காடு தன்னுடையது என உரிமை கொண்டாடும் சீனா பல நாடுகளின் எதிர்ப்பை எதிர் கொள்கின்றது.

மலபார் போர்ப்பயிற்ச்சி

இந்தியாவின் கரையோரப் பாதுகாப்பில் மலபார் போர்ப்பயிற்ச்சி முக்கிய பங்கு வகிக்கும். 1992இல் இருந்து அமெரிக்கா, இந்தியா, இணைந்து செய்து வந்த இப்போர்ப்பயிற்ச்சியில் 2015இல் ஜப்பான் இணைந்து கொண்டது. ஆரம்பத்தில் இருந்தே இப்போர்ப்பயிற்ச்சியை சீனா ஐயத்துடனும் சினத்துடனும் பார்த்தது வருகின்றது. மலபார் போர்ப்பயிற்ச்சியில் இனி ஒஸ்ரேலியாவும் இணைந்து கொள்ளவிருக்கின்றது. அமெரிக்கா, ஜப்பான், இந்தியா, ஒஸ்ரேலியா ஆகிய நான்கு நாடுகளும் இணைந்து குவாட் என்னும் பெயரில் ஒரு கூட்டமைப்பை உருவக்கி வருகின்றன. இது ஒரு படைத்துறைக் கூட்டமைப்பாக உருவாகும் என்பதை மலபார் போர்ப்பயிற்ச்சியில் ஒஸ்ரேலியாவும் இணைந்தமை எடுத்துக் காட்டுகின்றது. இந்தியாவிற்கு எதிரான போர் ஏற்படும் போது இந்த மூன்று நாடுகளும் இந்தியாவிற்கு உதவக் கூடிய வகையில் ஒப்பந்தம் செய்தல் அவசியமானதாகின்றது.

அமெரிக்க தளங்களைப் பாவிக்கக் கூடியக இந்தியா

2016—ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் ஐக்கிய அமெரிக்காவும் இந்தியாவும் செய்து கொண்ட செயலாதார பரிமாற்ற ஒந்தக் குறிப்பணை(Logistics Exchange Memorandum of Agreement) இந்தியாவிற்கு உலகின் பல பகுதிகளிலும் உள்ள அமெரிக்க படைத்தளங்களை பாவிக்கும் வசதியை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. அதை முழுமையாகப் பயன்படுத்தி இந்தியாவின் கடற் போக்கு வரத்தின் பாதுகாப்பை உறுதி செய்ய இந்தியாவிற்கு வலிமை மிக்க கடற்படை தேவை. இந்தியாவின் இரண்டாவது வி/தா கப்பல் முப்பதினாயிரம் எடையுள்ள சிறிய வகை வி/தா கப்பலாகும்.. இந்தியா இரசியாவிடமிருந்து 2013இல் வாங்கி மேம்படுத்திய வி/தா கப்பலான விக்கிரமாதித்தியா 44,500 தொன் எடையுள்ளது. அமெரிக்காவிடமிருந்து மின் காந்தம் மூலம் விமானங்களை கப்பல்களில் இருந்து பறக்கவைக்கும் தொழில் நுட்பத்தை வாங்கும் அனுமதிய இந்தியாவிற்கு அமெரிக்கா வழங்கியுள்ளது. சீனா அத்தொழில் நுட்பத்தை உருவாக்கும் முயற்ச்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

இந்தியாவின் மூன்றாம் விமானம் தாங்கிக் கப்பல்

சீனா விரைவில் நான்கு விமானம் தாங்கி கப்பல்களைக் கொண்ட ஒரு நாடாக உருவெடுப்பதால் இந்தியாவிற்கு மேலும் ஒரு விமானம் தாங்கிக் கப்பல் அவசியமானதாகின்றது. ஒரு விமானம் தாங்கிக் கப்பல் பராமரிப்பிற்காக மூன்று மாதம் வரை ஓய்வெடுக்க வேண்டி இருக்கும். சீனா தனது நான்கு விமானம் தாங்கிக் கப்பல்களையும் ஒரே நேரத்தில் இந்தியாவிற்கு எதிராக நகர்த்த முடியாது என்றாலும் இந்தியா அரபிக்கடல், இந்து மாக்கடல், வங்கக்கடல் ஆகிய முப்பெரும் கடல்களையும் தன் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்க மூன்றாம் விமானம் தாங்கிக் கப்பல் அவசியமாகின்றது. இந்தியாவின் விக்ராந்த் விமானம் தாங்கிக் கப்பல் சீனாவினுடையவற்றிலும் பார்க்க சிறியதாகும். இந்தியக் கடற்படையினரும் மூன்றாவது கப்பலுக்கு நீண்ட காலமாக வேண்டு கோள் விடுத்து வருகின்றனர். விமானம் தாங்கிக் கப்பல் என்பது ஒற்றைக் கப்பல் அல்ல. அதற்கு என்று பல பரிவாரக் கப்பல்கள் அவசியம். ஒரு விமானம் தாங்கிக் கப்பலைச் சுற்றிவர நாசகாரிக் கப்பல்கள், நீர்மூழிகிக்கப்பல்கள், கரையோரக் கப்பல்கள் என்பன எப்போதும் இருக்க வேண்டும்.

சீனா விமானம் தாங்கிக் கப்பல்களை அழிப்பதற்கு என்று பலவகையான  ஏவுகணைகளையும் நீர்மூழ்கிக்கப்பல்களையும் தானுந்தி நீரடி ஏவுகணைகளையும் (Torpedoes) உருவாக்கி வைத்துள்ளது. அவற்றில் இருந்து தனது விமானம் தாங்கிக் கப்பல்களைப் பாதுகாப்பதற்கான இடைமறிப்பு ஏவுகணைகளை இந்தியா அமெரிக்காவிடமிருந்து பெற வேண்டியதும் அவசியமானதாகின்றது. அத்துடன் இரு நாடுகளும் இதில் இணைந்து பாதுகாப்பு முறைமைகளை உருவாக்கவும் வேண்டும்.

Monday, 5 October 2020

அச்சுறுத்தலுக்கு உள்ளான இந்தியாவின் பாதுகாப்பு

  


அணுக்குண்டுகளை வைத்திருக்கும் ஒரு நாடு அணுக்குண்டுகளை வைத்திருக்கும் இன்னொரு நாட்டின் மீது போர் தொடுப்பதை எப்போதும் தவிர்த்துக் கொள்ளும். சீனா சிறிது சிறிதாக இந்தியாவின் நிலப்பரப்பை படைக்கலன்களைப் பாவிக்காமல் இரகசியமாக ஆக்கிரமித்து கைப்பற்றிக் கொண்டிருக்கின்றது. 2500 ஆண்டுகளுக்கு முன்னரே சீனப் போரியல் நிபுணர் “போர்க்கலையின் உச்சம் எனப்படுவது போர் செய்யாமல் எதிரியை விழுத்துவது” என்றார். சீனா கைப்பற்றிய இந்திய நிலங்களை ஒரு போரால் மட்டுமே இந்தியாவால் மீளக் கைப்பற்ற முடியும். ஆனால் போர் தொடுத்தால் பல விதத்திலும் பெரும் இழப்புக்களை இரண்டு நாடுகளும் சந்திக்க வேண்டி வரும். சீனாவும் இந்தியாவும் அணுக்குண்டை தாம் முதலில் பாவிப்பதில்லை என்ற கொள்கையைக் கொண்டன. அணுக்குண்டு பாவிக்காமல் போர் செய்தாலும் இரு நாடுகளும் பெரும் ஆளணி இழப்புக்களை, உட்கட்டுமான அழிவுகளை, பொருளாதாரப் பின்னடைவுகளைச் சந்திக்க வேண்டியிருப்பதுடன். இரண்டு நாடுகளுக்கும் இடையில் நடக்கும் போர் ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். இரண்டு நாடுகளுக்கும் இடையிலான போர் தரை, கடல், வான், விண்வெளி, இணையவெளி ஆகிய தளங்களில் உக்கிரமாக நடக்கும்.

பொருளாதார வலிமை மிக்க சீனா

இந்தியாவின் வான் படையினரும் தரைப்படையினரும் சீனா இந்திய நிலப்பரப்பைக் கைப்பற்றுவதை தடுக்கும் முயற்ச்சியில் வெற்றியடைந்தாலும் சீனாவின் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் உட்பட பல் வேறுபட்ட ஏவுகணைகளை சமாளிப்பது இந்தியாவிற்கு முடியாத காரியமாகலாம். சீனாவின் பாதுகாப்புச் செலவு இந்தியாவின் பாதுகாப்புச் செலவிலும் பார்க்க இரண்டரை மடங்காக இருக்கின்றது. சீனாவிடமிருக்கும் 3.4ரில்லியன் டொலர் பெறுமதியான வெளிநாட்டுக் கையிருப்பு இந்தியாவினதிலும் பார்க்க எட்டு மடங்காகும். 2008-ம் ஆண்டு உலக பொருளாதார வீழ்ச்சியின் பின்னர் சீனாவின் பொருளாதார வளர்ச்சி மற்ற முன்னணி நாடுகளுடன் ஒப்பிடுகையில் மேன்மை மிக்கதாக அமைந்தது. 2008இன் பின்னர் உலகப் பொருளாதார வளர்ச்சியில் மூன்றில் ஒரு பங்கு சீனாவினுடையதாக இருந்தது. அதே போல 2020-ம் ஆண்டு கொவிட்-19 தொற்றுநோயின் பின்னர் பல முன்னணி நாடுகளின் பொருளாதாரம் தேய்வடையும் போது சீனாவினுடைய பொருளாதாரம் வளர்ச்சியடைகின்றது. 2008இன் பின்னர் உலக அரங்கில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்தது போல் 2020இன் பின்னர் சீனாவின் ஆதிக்கம் அதிகரிக்கும் என்பதற்கான எடுத்துக் காட்டாகத்தான் இந்தியாவுடனான எல்லையில் சீனாவின் நடவடிக்கைகள் அமைந்திருக்கின்றன. சீனாவின் பொருளாதாரம் வளரும் போது அதற்கு உரிய மரியாதை உலக அரங்கில் செலுத்தப்பட வேண்டும் என சீன ஆட்சியாளர்கள் எதிர்பார்க்கின்றார்கள். 2017-ம் ஆண்டே சீனா உலக மேடையை முழுமையாக எடுக்க வேண்டும் என சீன அதிபர் தெரிவித்திருந்தார். சீனா தனது ஒரு ரில்லியன் டொலர் Road & Belt Initiative மூலம் உலக ஆதிக்கத்தின் மையப்புள்ளியை அத்லாண்டிக்கில் இருந்து பசுபிக்கிற்கு மாற்ற நினைக்கின்றது என்றார் ஹென்றி கிஸ்ஸிங்கர். 

கடலில் விழுமா சீனா?

சீனாவின் எரிபொருள் தேவையில் 87விழுக்காடு வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றது. சீனாவால் 77 நாட்களுக்கு பாவிக்கக் கூடிய எரிபொருளை மட்டும் இருப்பில் வைத்திருக்க முடியும். சீனாவின் எரிபொருள் வழங்கலைத் துண்டிக்க சீனாவிற்கு எதிராக இந்தியாவால் இரண்டு கடல் முற்றுகைகளைச் செய்ய வேண்டும். ஒன்று அந்தமான் நிக்கோபார் தீவுகளில் இருந்து செய்யும் விமான மற்றும் ஏவுகணைத் தாக்குதல்கள் மூலம் சீனக் கப்பல்கள் மலக்காய் நீரிணையூடாக பயணிப்பதைத் தடுத்தல்.  இரண்டாவது பாக்கிஸ்த்தானின் குவாடர் துறை முகத்தையும் அதை ஒட்டியுள்ள கரையோரப் பிரதேசங்களை முற்றுகையிட வேண்டும். அதனால் சீனாவிற்கு செல்லும் எரிபொருள் மற்றும் பல மூலப் பொருள்கள் செல்வதையும் சீனாவில் இருந்து அதன் ஏற்றுமதிகள் உலகெங்கும் செல்வதையும் இந்தியா தடுக்க வேண்டும். இதற்கு பாக்கிஸ்த்தானின் கடற்படையை முற்றாக அழிக்க வேண்டும். அதனால் பாக்கிஸ்த்தான் ஒரு முழுமையான போரில் இந்தியாவிற்கு எதிராக களமிறங்கும். ஆகையால் இரண்டாவது முற்றுகை தரைப்போரில் இந்தியாவிற்கு பாதகமாக அமையலாம். அந்தமான் நிக்கோபார் தீவில் இந்தியாவின் கடற்படை வலிமை சீனக் கடற்படை மலாக்கா நீரிணையை தாண்டி வர முடியாதபடி செய்யும் அளவிற்கு இருக்க வேண்டும். ஒஸ்ரேலியாவின் கொக்கோஸ் தீவில் {Cocos (Keeling) islands} இந்தியா துரிதமாகப் படைக்கலன்களை குவிக்கக் கூடிய வகையில் இருக்க வேண்டும். உலக அரங்கில் துணிச்சலாக முடிவெடுக்கக் கூடிய பிரான்ஸ் இந்தியாவிற்கு ஆதரவாக களம் இறங்கும் முடிவை எடுக்கச் செய்தால் இந்து மாக்கடலில் உள்ள பிரெஞ்சு தீவுகளில் இருந்து இந்தியக் கடற்படைக்கு பிரெஞ்சுக் கடற்படை உதவி செய்யும் நிலை உருவாக்கலாம்.

படைத்துறைக் கூட்டமைப்பில் இந்தியா இணைய வேண்டும்.

அடுத்த இருபது ஆண்டுகளில் சீனாவிற்கும் இடையிலான படைத்துறைச் சமநிலை சீனாவிற்கு சாதகமாகத்தான் இருக்கும். அப்படியான ஒரு நிலையில் இந்தியாவின் நிலங்களை சிறிது சிறிதாக சீனா அபகரிப்பதை தடுப்பதற்கு இந்தியா தன்னை படைக்கல அடிப்படையிலும் அரசுறவியல் அடைப்படையிலும் பொருளாதார அடிப்படையிலும் வலிமையாக வைத்திருக்க வேண்டும். அடுத்த பதினைந்து ஆண்டுகளுக்கு இந்தியா பொருளாதார அடிப்படையில் சீனாவிலும் வலிமையாக இருப்பதற்கான வாய்ப்புக்கள் குறைவாக இருப்பதால் இந்தியா தன் படைத்துறை வலிமை  சீனாவிற்கு சவால் விடக்கூடிய வகையில் வைத்திருக்க வேண்டும். அதற்கு இந்தியா பல பொருளாதார தியாகங்களைச் செய்ய வேண்டும்.ன்ச்அரசுறவியல் அடிப்படையில் இந்தியா தன்னை வலிமைப்படுத்தச் சில விட்டுக் கொடுப்புக்களைச் செய்ய வேண்டும். இந்திய சீனப் போர் நடக்கும் போது பாக்கிஸ்த்தானும் நேரடியாக போரில் இறங்கலாம் அல்லது இந்தியாவிற்கு பல வகைகளில் தொல்லைகள் கொடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு சீனாவிற்கு சாதகமாக போரைத் திருப்ப முயலலாம். இந்தியாவின் நிலங்களை சீனா அபகரிப்பதை நிறுத்த இந்தியாவின் படைத்துறை சீனாவிலும் வலிமையானதாக இருக்க வேண்டும் அல்லது இந்தியா சீனாவிற்கு அச்சுறுத்தல் விடக்கூடிய ஒரு படைத்துறைக் கூட்டமைப்பில் இணைந்திருக்க வேண்டும். இரண்டாம் உலகப் போரின் பின்னர் பல சிறிய மேற்கு ஐரோப்பிய நாடுகள் சோவியத் ஒன்றியத்திற்கு அச்சுறுத்தல் விடக்கூடிய நேட்டோ படைத்துறைக் கூட்டமைப்பில் இணைந்து கொண்ட படியால் எந்த ஒரு நாடும் அந்த நாடுகளை ஆக்கிரமிக்கவில்லை. ஜப்பான் அடிக்கடி வலியுறுத்தும் குவாட் என்னும் அமெரிக்கா, ஜப்பான், ஒஸ்ரேலியா, இந்தியாவைக் கொண்ட படைத்துறைக் கூட்டமைப்பில் இணைவதற்கு இந்தியா காட்டி வந்த தயக்கம் அந்தப் படைத்துறைக் கூட்டமைப்பை உருவாக்குவதில் சிக்கலை ஏற்படுத்தியது. அதே வேளை தென் கொரியாவும் வியட்னாமும் அந்தக் கூட்டமைப்பில் இணைய விரும்புகின்றன.

இரசியாவுடன் பாதுகாப்பு ஒப்பந்தமும் இணைந்த படைக்கல உற்பத்தியும்

இரசியாவும் இந்தியாவும் ஒன்றை ஒன்று பாதுகாப்பு ஒப்பந்தத்தை செய்ய வேண்டும். அதனால் சீனாவும் பாக்கிஸ்த்தானும் இணைந்து இந்தியாவைத் தாக்குதல் செய்வதை தடுக்கவோ சமாளிக்கவோ முடியும். சீன பல புதிய படைக்கலன்களை இரசியாவிடமிருந்தே வாங்குகின்றது. இரசியாவும் இந்தியாவும் இணைந்து புதிய படைக்கல உற்பத்தியில் ஈடுபட வேண்டும் அப்படி உற்பத்தி செய்யும் படைக்கலன்களை ஒரு நாட்டின் அனுமதியின்றி மற்ற நாடு எந்த ஒரு நாட்டுக்கும் விற்பனை செய்ய முடியாது என்ற ஒப்பந்தத்தை செய்ய வேண்டும். பிரம்மோஸ் ஏவுகணை உற்பத்தி இந்த அடிப்படியிலேயே செய்யப்பட்டது. இரசிய தொழில்நுட்பங்களை இரசியாவிடமிருந்து வாங்கும் படைக்கலன்களில் இருந்தே சீனா பெறுகின்ற படையால் இது சீனாவை படைக்கல உற்பத்தியில் பின்னடைவைச் சந்திக்க வைக்கும். உலகின் மிகச் சிறந்த வான் பாதுகாப்பு முறைமையான எஸ்-400ஐ இந்தியாவிற்கு விற்பனை செய்ய இரசியா முன்வந்துள்ளது. அதை சீனாவிற்கு விற்பனை செய்வதும் தடைப்பட்டுள்ளது. இந்தியா அடுத்த தலைமுறை வான்பாதுகாப்பு முறைமைகளை இரசியாவுடன் இணைந்து உற்பத்தி செய்ய முடியும்.

அமெரிக்காவுடன் பாதுகாப்பு ஒப்பந்தம்

2016-ம் ஆண்டு இந்தியாவை அமெரிக்கா முன்னணி பாதுகாப்பு பங்காண்மை நாடாக அறிவித்தது. சீனாவின் எதிரி நாடுகளுடன் இந்தியா ஒத்துழைக்க வேண்டும் என்பதை இந்தியா அமெரிக்காவுடன் The Logistics Exchange Memorandum Agreement ( LEMOA) என்னும் உடன்படிக்கையை பத்து ஆண்டுகள் இழுபறிக்குப் பின்னர் 2016-ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் செய்து கொண்டமை சுட்டிக் காட்டுகின்றது. இதன் மூலம் அமெரிக்கப் படைத் தளங்களை இந்தியாவும் இந்தியப் படைத்தளங்களை அமெரிக்காவும் தேவையேற்படும் போது பாவிக்க முடியும். இதைத் தொடர்ந்து இரு நாடுகளும் Communications Compatibility and Security Agreement (COMCASA) என்னும் பாதுகாப்புத் தகவல் பரிமாற்ற ஒபந்தத்திலும் கைச்சாத்திட்டன. அடுத்ததாக இரண்டு நாடுகளும் Basic Exchange and Cooperation Agreement (BECA) என்னும் ஒப்பந்தத்தில் கையொப்பமிடவுள்ளன. இதன் மூலம் நிலத்தோற்றம் தொடர்பாக செய்மதி மூலம் திரட்டப்படும் துல்லியத் தகவல்களை இரண்டு நாடுகளும் பகிர்ந்து கொள்ளும். இதன் மூலம் எதிரியின் படை நிலைகள் தொடர்பான தகவல்களை துல்லியமாக திரட்டி அவற்றின் மீது எறிகணைகள் ஏவி அழிக்க முடியும். எதிரியின் படை நகர்வுகள் தொடர்பான தகவல்களையும் பெற முடியும்.

அரசுறவியல் மேம்பாடு

சீனாவிற்கும் இந்தியாவிற்கும் போர் நடக்கும் போது அமெரிக்காவும் ஜப்பானும் மேலும் பல நாடுகளும் சீனாவிற்கு எதிராக பொருளாதாரத் தடை விதிக்கச் செய்யும் அளவிற்கு இந்திய அரசுறவுகள் மேம்பட்டவையாக இருக்க வேண்டும். சீனாவுடன் போர் செய்யும் இந்தியாவிற்கு எதிராக பொருளாதாரத் தடை கொண்டு வரும் அளவிற்கு சீனாவிற்கு நட்பு நாடுகள் இல்லை என்பது இந்தியாவிற்கு வாய்ப்பானதாகும். வியட்னாம் இஸ்ரேல் ஆகிய நாடுகள் இந்தியாவுடன் படைத்துறை ஒத்துழைப்பை பெரிதும் விரும்புகின்றன. வியட்னாமுடனான ஒத்துழைபு சீனாவை ஆத்திரப் படுத்தும் என இந்தியா இதுவரை தயக்கம் காட்டியது.

இந்தியாவில் அமெரிக்கப் படைத்தளம்.

கொல்கத்தாவில் அமெரிக்க கடற்படைத்தளமும் வான்படைத்தளமும் அமைத்தால் இந்திய சீனப் படைத்துறைச் சமநிலை சீனாவிற்கு மிகவும் பாதகமாக அமையும். ஜப்பானும் தென் கொரியாவும் தமது நாடுகளில் அமெரிக்கப் படைத்தளஙக்ளை அமைக்க அனுமதித்துள்ளன. இதனால் அந்த நாடுகளின் வெளியுறவுக் கொள்கையிலோ உலக அரங்கின் அவற்றின் தனித்துவமான கொள்கைகளிலோ விட்டுக்கொடுப்புக்களை பெரிதாகச் செய்வதில்லை. இந்தியாவின் வட கிழக்கு மாகாணங்களுக்கான தொடர்பு பகுதியான சில்கிரி இணைப்புப் பாதையை சீனாவல் அசைக்க முடியாத நிலையையும் ஏற்படுத்தலம். அமெரிக்காவின் F-35 போவிமானங்கள் ஐம்பதையாவது இந்தியா வாங்க வேண்டும். அதற்கு ஏற்ப இரு நாடுகளின் ஒத்துழைப்பு அதிகரிக்கப் படவேண்டும்.

பல் துறைப் படைக்கலன்கள்

ஆழ்கடலில் செயற்படக் கூடிய கடற்படை, அணுவலுவில் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்கள், போர் முனை அனுபவம் கொண்ட படைத்துறை, அமெரிக்கா, இரசியா, பிரான்ஸ் இஸ்ரேல் ஆகிய நாடுகளின் படைக்கலன்களை வாங்கக் கூடிய ஒரே நாடு என்ற நிலைமை இந்தியாவிற்கு சாதகமாக இருக்கின்றன. சீனாவின் மிகப் பெரிய பின்னடைவு பல ஆண்டுகளாக போர் முனை அனுபவம் இல்லாத படைத்துறை என்பதே. இந்திய சீனப் போர் என ஒன்று வரும்போது இந்தியாவின் செய்மதிகளை சீனா அழித்து இந்தியப்படையினரைன் தொடர்பாடல்களை சிதைக்கலாம். பதிலுக்கு இந்தியாவும் சீனச் செய்மதிகளை அழிக்கும் வல்லமையைப் பெற்றிருக்க வேண்டும். இணையவெளித்தாக்குதல் பலவற்றை சீனா செய்யலாம். அவற்றை எதிர்கொள்வதற்கு இந்தியா இஸ்ரேல் அமெரிக்கா போன்ற நாடுகளின் உதவியைப் பெறவேண்டும். சுவீடனின் Gripen E fighter விமானங்கள் இலத்திரனியல் போரில் சிறந்தவை என நிருபணமானவை. சீனாவின் உளவு விமானங்களை இந்தியா செயலிழக்கச் செய்வதற்கு Gripen E fighter வாங்க வேண்டும். சீனாவின் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளையும் அவற்றின் ஏவுநிலைகளையும் போரின் ஆரம்பத்திலேயே இந்தியா அழிக்கும் அளவிற்கான தகவல்களை அமெரிக்காவிடமிருந்து இந்தியா பெறவேண்டும். அவற்றை அழிக்க தரையில் இருந்தும் வானில் இருந்தும் பெருமளவு ஏவுகணைகளை போர் தொடங்கிய ஒரு சில நிமிடங்களில் இந்தியா வீச வேண்டும். அதற்கு வேண்டிய உதவிகளை இந்தியாவிற்கு இரகசியமாக வழங்க அமெரிக்கா தயங்காது. இந்திய சீனப் போர் என்று ஒன்று வந்தால் சீனாவின் பொருளாதார நிலைகளை இந்தியா துவம்சம் செய்யும் என்ற உணர்வை சீனாவிற்கு இந்தியா ஏற்படுத்த வேண்டும். சீனா இந்தியாவிற்கு ஆறுபது பில்லியன் டொலருக்கும் அதிமான ஏற்றுமதியை இந்தியாவிற்கு செய்கின்றது.

இந்தியா மீதான அச்சத்தை சீனாவிற்கு ஏற்படுத்துவது இலகுவான ஒன்றல்ல அதே வேளை அது இயலாத ஒன்று அல்ல. இப்போதிருக்கும் இந்தியாவையிட்டு சீனா கலவரப்படவில்லை. ஆனால் எதிர்கால இந்தியாவையிட்டு சீனா அச்சமடைந்துள்ளது. இந்தியா தனது தற்போதைய நிலையை மாற்றாவிடில் அடுத்த பத்து முதல் பதினைந்து ஆண்டுகளுக்கு சீனாவிடமிருந்து பல பிரச்ச்னைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். 

Monday, 14 September 2020

சீனாவால் ஏமாற்றப்பட்ட இந்தியாவின் சினம் எல்லை தாண்டுமா?

 

2020 செப்டம்பர் 7-ம் திகதி இந்தியா தனது ஒலியிலும் பார்க்க ஆறுமடங்கு வேகத்தில் பாயும் ஏவுகணைகளுக்கான செலுத்தியை வெற்றீகரமாகப் பரிசோதித்துள்ளது. அமெரிக்கா, இரசியா, சீனா ஆகிய நாடுகளின் வரிசையில் இந்தியாவும் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை வைத்திருக்கக் கூடிய நாடாக இணைந்துள்ளது. ஒலியிலும் பார்க்க ஐந்து மடங்கிற்கும் அதிகமாக பாயும் ஏவுகணைகளை (அதாவது மணித்தியாலத்திற்கு 6200கிலோ மீட்டர் வேகத்திலும் அதிகமாக) ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் என்பர். சீனா இதே பரிசோதனையை 2014-ம் ஆண்டில் செய்துவிட்டது. சீனாவிடம் தற்போது இருக்கும் ஹைப்பர்சோனிக் ஏவுகணை ஒலியிலும் பார்க்க பத்து மடங்கு வேகத்தில் பாயக் கூடியது. சீனா ஒலியிலும் பார்க்க இருபது மடங்கு வேகத்தில் பாயக் கூடிய ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை தற்போது உருவாக்கி வருகின்றது. இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான படைத்துறை தொழில்நுட்ப இடைவெளியை இது சுட்டிக்காட்டுகின்றது.

வட கிழக்கு இந்தியாவின் கோழிக்கழுத்து

இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களான அருணாசல பிரதேசம், அசாம், மிசோரம், நாகலாந்து, மணிப்புரி, திரிபுரா ஆகியவற்றை இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்துடன் இணைக்கும் அகலம் குறைந்த பாதை சில்குரி இணைப்புப் பாதை எனப்படும். இப்பாதையை துண்டித்தால் சீனாவால் இந்த இந்திய மாநிலங்களை இலகுவாக கைப்பற்ற முடியும். அதனால் இந்த சில்குரி இணைப்புப்பாதையை இந்தியாவின் கோழிக்கழுத்து என்பர். சீனாவின் சம்பி பள்ளத்தாக்கு இந்தியாவின் கோழிக்கழுத்துக்கு வைக்கப்பட்டுள்ள ஓர் ஆபத்தாக அமைந்துள்ளது. ஆனால் சம்பி பள்ளத்தாக்கினூடாக படையினரை பாரவகைப் படைக்கலன்களுடன நகர்த்துவது மிகவும் சிரமமான ஒன்றாக இருந்தது. பெருந்தெருக்கள் போடுவதில் அண்மைக்காலமாக அனுபவமும் திறனும் பெற்ற சீனா அந்த சம்பி பள்ளத் தாக்கினூடாக ஒரு தெருவை அமைத்து விட்டது அந்தத் தெருவை பூட்டானின் டொலம் அல்லது டொக்லா சமவெளியுடன் தொடுக்கும் வகையில் நீட்ட சீன முயற்ச்சி எடுத்த போது அதற்கு பூட்டான் ஆட்சேபனை தெரிவித்தது. பூட்டானின் வேண்டு கோளின் பேரின் அதனுடன் பாதுகாப்பு ஒப்பந்தம் செய்து கொண்ட இந்தியா தனது படையினரை அங்கு 2017 ஜூன் 16-ம் திகதி அனுப்பி அதை நிறுத்தும்படி வேண்டுகோள் விடுத்தது. பூட்டானில் இருக்கும் டொலம் சமவெளியில் இருந்து இந்தியாவின் சில்குரி இணைப்பாதை நோக்கி கீழ்முகமாகச் சரியும் நிலப்பரப்பு இருக்கின்றது. அதனால் இஸ்ரேலுக்கு கோலான் குன்றுகள் போலவும் இரசியாவிற்கு உக்ரேன் போலவும் இந்தியாவின் சிலிகுரி இணைப்பாதைக்கு டொலம் சமவெளி இருக்கின்றது. கீழ் நோக்கி சரிந்த நிலப்பரப்பினூடாக பாரவகைப் படைக்கலன்களை நகர்த்துவதும் தாக்குதல் செய்வதும் இலகுவானதாகும். இதனால் சினாவின் சம்பி பள்ளத்தாகில் இருந்து இந்தியாவிற்கு தொல்லை கொடுப்பதை சீனா பெரிதும் விரும்பி இருந்தது. இந்த வழமை மாறி 2020 மார்ச் மாத்தத்தில் இருந்து சீனா இந்தியா வசமுள்ள கஷ்மீரின் லடாக் பிரதேசத்தில் இந்தியாவிற்கு தொல்லை கொடுக்க தொடங்கியுள்ளது.

கொவிட்-19 வாய்ப்பாக்கிய சீனா

இந்தியா தனது ஹைப்பர்சோனிக் ஏவுகணையைப் பரிசோதித்த வேளையில் தற்போது கொதிநிலையில் உள்ள லடாக் பிரதேசத்தில் இந்தியாவும் சீனாவும் அச்சுறுத்தும் வகையில் வானை நோக்கி துப்பாக்கி வேட்டுகளைத் தீர்த்ததாக ஒன்றை ஒன்று குற்றம் சாட்டியுள்ளன. இந்தியா ஆண்டு தோறும் மார்ச் மாதத்தில் சீன எல்லையில் செய்யும் போர்ப்பயிற்ச்சியைக் கொவிட்-19 தொற்று நோய் காரணமாக இம்முறை செய்யவில்லை. மார்ச் மாதத்தில் இந்தியாவில் கொவிட்-19 தொற்று நோய் தீவிரமடைந்தும் சீனாவில் பெருமளவு தணிக்கப் பட்டும் இருந்த படியால் சீனா கஷ்மீரின் பௌத்தர்கள் அதிகம் வாழும் லடாக் பிரதேசம் சீனாவுடன் கொண்டுள்ள எல்லையில் பல படை நகர்வுகளை இரகசியமாகச் செய்து வலிமையாக நிலை எடுத்துக் கொண்டது. பின்னர் இரு நாட்டுப்படையினரும் படைக்கலன்களின்றி லடாக் எல்லைப் பிரதேசத்தில் மோதிய போது இந்தியப் படையினர் இருபது பேர் கொல்லப்பட்டனர். சீனா தனது தரப்பு உயிரிழப்பை வெளிவிடாத போதிலும் நாற்பது பேர்வரை கொல்லப்பட்டிருக்கலாம் எனச் சொல்லப்படுகின்றது.


பொருளாதாரத் தொடர்புச் சிக்கல். 
 

சீனாவின் மூன்றடி முன்னேறி பின் பேச்சு வார்த்தையில் பின்னர் இரண்டடி “பெருமையுடன்” பின்வாங்கும் தந்திரம் இந்தியாவை விரக்தியில் விளிம்பிற்கு தள்ளிவிட்டது. மேலும் இந்திய சீனா இடையிலான் வர்த்தகத்தின் சமநிலை இந்தியாவிற்கு பெரும் பாதகமான நிலையில் இருக்கின்றது. சீன தொழில்நுட்ப நிறுவனங்கள் உலகளாவிய ரீதியில் தம் முதலீடுகளை விரிபடுத்த முன்னர் இந்தியாவின் தமது முதலீட்டைச் செய்து பரீட்சித்துப் பார்க்கின்றன. 2019-ம் ஆண்டு சீனத் தொழில்நுப்ட நிறுவனங்கள் இந்தியாவில் 3பில்லியன் டொலருக்கும் அதிகமான முதலீடுகளைச் செய்தன. இந்திய நிறுவனங்களுக்கு சீனாவின் மலிவு விலைத் தொழில்நுட்பங்கள் தேவையான் ஒன்றாகவே இருக்கின்றன. 


எல்லையில் சீனப் படை நடவடிக்கைகளிலும் பார்க்க சீனாவின் பொருளாதார நடவடிக்கைகளே இந்தியாவிற்கு நீண்ட கால அடிப்படையில் ஆபத்து விளைவிக்கக் கூடியவையாக இருக்கினறன. இந்தியாவை ஆளும் கட்சிகளுக்கு நிதி உதவி செய்யும் பெரும் பணக்காரர்கள் இந்திய சீன வர்த்தகத்தால் பெரும் இலாபம் ஈட்டுகின்றார்கள். 2020 ஜுனில் நடந்த லடாக் எல்லைப் பகுதியில் நடந்த இந்திய சீன மோதலின் பின்னர் சீனாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்களை துறைமுகங்களிலும் விமான நிலையங்களிலும் வைத்து அனுமதிக்கும் செயலில் வேண்டுமென்றே நீண்ட தாமதத்தை செய்தது. அத்துடன் சீனாவின் பல செயலிகள் இந்தியாவில் தடைசெய்யப்பட்டன. ஆனால் ஹுவாவே நிறுவனத்தின் தொழில்நுட்பங்களை அமெரிக்காவைப் போல இந்தியாவால் தடை செய்ய முடியவில்லை. அந்தத் தொழில்நுட்பங்களைப் பாவிக்கும் இந்தியக் கைப்பேசி நிறுவனங்களின் உரிமையாளர்கள் இந்திய ஆட்சியாளர்களுக்கு வேண்டப் பட்டவர்களாக இருக்கின்றனர்.ச் எல்லையில் தொல்லை கொடுப்பதால இந்தியாவிற்கு பல பொருளாதார நெருக்கடிகளை சீனாவால் ஏற்படுத்த முடியும். ஆனால் உலகெங்கும் தற்போது சீனாவிற்கு எதிரான ஒரு மனப்பாங்கு பல தரப்பிலும் அதிகரிக்கும் நிலையில் சீனா பல பின்னடைவுகளை நீண்ட கால அடிப்படையில் சந்திக்க வேண்டி வரலாம். 


அமெரிக்கா இந்தியாவைத் தூண்டியதா?

சீனா தைவாவானை தன்னுடன் இணைக்கும் படைநகர்வைச் செய்தால் அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையில் போர் வெடிக்கும். 2019-ம் ஆண்டில் இருந்து சீனா தைவானைக் கைப்பற்றலாம் என செய்திகள் வந்து கொண்டிருந்த வேளையில் அமெரிக்க சீனப் போர் நடக்கும்போது சீன வலிமையை ஐதாக்குவதற்காக இந்தியா தனது சீன எல்லையில் படைநகர்வுகளை மேற்கொள்ள வேண்டும் என அமெரிக்கா இந்தியாவை வேண்டியிருந்தது. அதனால் ஊக்கமடைந்த இந்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா 2019 ஓகஸ்ட்டில் இந்தியப் பாராளமன்றத்தில் முழுக் கஷ்மீரையும் (பாக்கிஸ்த்தான் வசமுள்ளதும் சீனா வசமுள்ளதும்) கைப்பற்றுவோம் என சூளுரைத்திருந்தார். இதனால் சீனம் கொண்ட சீனா அன்றில் இருந்து கஷ்மீர் எல்லையில் இந்தியப் படைகளுக்கு தொந்தரவு கொடுப்பதையும் எல்லை தாண்டிச் சென்று படை நிலைகளை அமைப்பதையும் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றது. அது மட்டுமல்ல அமெரிக்காவின் வேண்டுகோளின்படி இந்தியா சீனாவிற்கு எதிராக படை நகர்வுகளை மேற்கொண்டால் பாக்கிஸ்த்தானும் இந்திய எல்லையில் தனது இந்திய எதிர்ப்பு நடவடிக்கைகளை செய்யலாம எனவும் நம்பப்படுகின்றது. முன்னர் சீனாவின் பல எல்லைத் தொல்லைகள் அருணாச்சலப் பிரதேசத்தையும் இந்திய வடகிழக்கு மாநிலங்களை நடு இந்தியாவுடன் இணைக்கும் கோழிக்கழுத்து எனப்படும் அகலம் குறைந்த நிலப்பரப்பையும் இலக்கு வைத்தே செய்யப்பட்ட்ன.




சீனப்படையினர் மீது திபெத்தியர் தாக்குதல்

2020 ஓகஸ்ட் 31-ம் திகதி இந்தியாவின் இரண்டாம் காலாண்டிற்கான மொத்தத் தேசிய உற்பத்தி 23.9 விழுக்காட்டால் வீழ்ச்சியடைந்ததுள்ளது என்ற செய்தி வெளிவந்தது. மறுநாள் லடாக் பிரதேசத்தில் பாங்கொங் ஏரியில் வடக்குப்புறமாக உள்ள Spanggur ஏரிக்கு அண்மையாக உள்ள ஒரு சிறிய சமதரையான Spanggur Gap என்ற இடத்தில் சீனப்படையினரும் சீனாவின் மலையேறிகளும், குத்துச் சண்டைக்காரர்களும் நிலைகொண்டனர். இதை ஓரு தாக்குதலுக்குரிய நகர்வாக (offensive deployment) இந்தியா பார்த்தது. திபெத்தியர்களைக் கொண்ட சிறப்பு எல்லைப் படையினரை களத்தில் இறக்கி சீனாவின் Spanggur Gap சுற்றவர உள்ள குன்றுகளின் சிகரங்களைக் இந்தியா கைப்பற்றியது. இதனால் உள்ள சீனப் படையினரைச் சுற்றவர இந்தியப் படைகள் உயரமான இடங்களில் நிலைகொண்டனர். இதனால் Spanggur Gap இல் சீனாவிற்கு மிகவும் பாதகமான நிலை உருவாகியுள்ளது. சிகரங்களைக் கைப்பற்ற செய்த தாக்குதலில் இந்தத் தாக்குதலி நியிமா தென்ஞின் (Nyima Tenzin) என்ற தீபெத்தியப் போராளி கொல்லப்பட்டார். இந்தச் செய்தியை இந்திய ஊடகங்கள் உடனடியாக வெளியிட்டதுடன் தாக்குதல் செய்தவர் இந்தியாவின் உளவுத்துறையான ரோவின் கீழ் மிக இரகசியமாகச் செயற்படும் தீபெத்தியர்களைக் கொண்ட ஒரு சிறப்புப் படையணியைச் சேர்ந்தவர் என்ற தகவலையும் வெளிவிட்டன. வழமைக்கு மாறாக இம்மோதலை உறுதி செய்த சீனா தாம் எந்த ஒரு இந்தியப் படைவீரரையும் கொல்லவில்லை என்றும் சொல்லியது. இந்த உடனடிச் செய்தி வெளியிடல் இந்தியப் பொருளாதாரம் தொடர்பாக ஆளும் கட்சிக்கு பாதகமான செய்தியைத் திசை திருப்பவா அல்லது இந்தியா சீனாவிற்கு ஒரு புதிய செய்தியைத் தெரிவிக்கவா?

இந்திய உளவுத்துறையின் கீழ் திபெத் படையணி

1959-ம் ஆண்டு திபெத்தை சீனா ஆக்கிரமித்த பின்னர் பல தீபெத்தியர் இந்தியாவில் தஞ்சம் புகுந்தனர். 1962-ம் ஆண்டு சீனா இந்தியா மீது போர் தொடுத்த பின்னர் இந்தியாவில் உள்ள திபெத்தியர்களுக்கு படைப்பயிற்ச்சி அளிக்கப்பட்டு அவர்கள் இந்திய உளவுத்துறையின் கீழ் மிக இரகசியமாகச் செயற்படுகின்றனர். அந்தப் படையணி தொடர்பான எந்தப் பதிவேடுகளும் இந்தியப் படைத்துறையினரிடம் இல்லை. ஆரம்பத்தில் இவர்களுக்கு அமெரிக்க உளவுத்துறையான சிஐஏயும் எல்லைதாண்டிச் சென்று தாக்குதல் செய்வது உட்பட பல பயிற்ச்சிகளை வழங்கியது. 

எட்டு விரல்களில் எட்டா விரலாக நாலாம் விரல்

கஷ்மீரின் ஒரு பகுதியான லாடாக்கில் இந்திய சீன எல்லையில் பங்கொங் என்னும் ஏரி உள்ளது. உலகிலேயே கடல் மட்டத்தில் இருந்து மிக உயரனாமன இடத்தில் அதாவது பதினான்காயிரம் அடி உயரத்தில்  இருக்கும் இந்த ஏரியின் (மேற்குப் பக்கமாக 45 கிலோ மீட்டர்) மூன்றில் ஒரு பகுதி இந்தியா வசமும் (கிழக்குப் பக்கமாக 135கிலோ மீட்டர்) மூன்றில் இரண்டு பகுதி சீனா வசமும் உள்ளன. லடாக் மொழியில் பங்கொங் என்றால் உள்வளைவு எனப் பொருள்படும். இந்த உப்பு நீர் கொண்ட ஏரிக்கு என ஒரு பொருளாதார முக்கியத்துவமோ அல்லது கேந்திர முக்கியத்துவமோ இல்லை. இந்த ஏரியை நோக்கி சீனா கடந்த பல ஆண்டுகளாக பல படைத்துறை உட்கட்டுமானங்களை தொடர்ந்து செய்து தமது படை நகர்த்தல்களை இலகுவாக்கியுள்ளது. இந்த ஏரியின் வடபுறத்தில் உள்ள மலைகளில் இருந்து ஏரியை நோக்கிச் சரியும் பள்ளத்தாக்குகள் எட்டு உள்ளன. அதன் உச்சியில் படையினர் நிலை கொண்டிருப்பது எதிரியைத் தாக்குதவற்கு இலகுவானதாகும். எட்டு விரல்களில் நான்கு விரல்கள் இந்தியா வசமும் நான்கு விரல்கள் சீனா வசமும் இருக்கின்றன. இந்திய சீன எல்லையை ஒட்டி இருக்கும் நான்காம் விரல் இந்தியாவின் வசம் உள்ளது இதன் உச்சி மற்றவற்றிலும் பார்க்க உயரமானது. 1962இல் நடந்த இந்திய சீனப் போரில் இந்த நான்காம் விரலில் இருந்து ஆயிரக்கணக்கன சீனப் படையினரை சில நூற்றுக் கணக்கான இந்தியப் படையினர் பெரும் இழப்புக்களுடன் விரட்டினர்.

மலாக்காவில் மல்லாக்காக வீழ்த்துதல்

இந்தியாவிற்கு கஷ்மீர் எல்லைப் பகுதியில் தொல்லை கொடுத்தால் சீனாவின் சரக்குக்கப்பல்கள் மீது மலாக்கா நீரிணையில் வைத்து இந்தியா தாக்குதல் நடத்தும் எனச் சில செய்திகள் இந்தியாவில் இருந்து வெளிவந்தன அதற்கு சீனா மசியாத நிலையில் திபெத்தியர்களைக் கொண்ட படையணியின் செய்தி கசிய விடப்பட்டுள்ளது. திபெத்தியர்கள் மூலம் சீனாவிற்கு தொல்லை கொடுப்போம் என்ற செய்தியை இந்தியா சீனாவிற்கு சொல்கின்றதா. அமெரிக்க உளவுத்துறையிடம் திபெத் திட்டம் ஒன்று நீண்ட நாட்களாக இருந்து வருகின்றது. இந்திய அமெரிக்க உளவுத் துறைகள் திபெத்தில் இணைந்து செயற்படலாம்.

நான்காம் விரலைக் கைப்பற்றுவதற்கு இந்தியா என்ன எதிர்வினையாற்றும் என்பது பற்றி சீனா குறைத்து மதிப்பிட்டு விட்டது. சீனப் படையினர் எல்லை தாண்டிச் சென்றதற்கான செய்மதிப் படங்களைப் பார்த்த இரசியாவும் சீனாமீது விசனமடைந்துள்ளது. அதன் விளைவை இரசிய அதிபர் விளடிமீர் புட்டீன் ஏற்பாடு செய்த மொஸ்க்கோ பேச்சு வார்த்தையின் போது அது வெளிப்பட்டது. ஆறாயிரம் முதல் ஏழாயிரம் திபெத்தியப்படையினரைக் கொண்ட ஒரு படையணியால் சீனாவிற்கு பெரும் படைத்துறை இழப்பைச் செய்ய முடியாது என்றாலும் சிறு குழுக்களாக இந்திய எல்லையில் செயற்படும் சீனப் படையினருக்கு அவர்கள் பெரும் அச்சுறுத்தலாக இருப்பர். இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் உள்ள உடன்பாட்டின்படி எல்லையில் இருதரப்புப் படைகளும் படைக்கலன்கள் இன்றியே நடமாட வேண்டு. அந்த உடன்பாடு திபெத்தியப் படையினரைக் கட்டுப்படுத்தாது. அவர்களைப் பொறுத்தவரை அது இந்திய திபெத்திய எல்லை.

Monday, 27 July 2020

இந்தியா வாங்கிக் குவிக்கும் படைக்கலன்கள்

கஷ்மீரின் லடாக் பிரதேசத்தில் சீனாவுடன் ஏற்பட்ட முறுகலுக்குப் பின்னர் இந்தியா புதிதாக ஐந்தரை பில்லியன் டொலர்கள் பெறுமதியான படைக்கல கொள்வனவை செய்யவுள்ளதுடன் பிரான்சிடமிருந்து செய்யும் ரஃபேல் பற்பணி விமானக் கொள்வனவையும் துரிதப் படுத்தியுள்ளது. இந்தியப் பாதுகாப்பு கொள்வனவுச் சபையின் சிறப்புக் கூட்டம் 2020 ஜூலை 15-ம் திகதி நடைபெற்றது. இந்தியத் தரைப்படை தனது பீஷ்மா போர்த்தாங்கிகளில் (T-90 Bhishma Tanks) பொருத்துவதற்கென 1512 கண்ணிவெடிகளை அகழ்ந்து எடுக்கும் கருவிகளை வாங்குகின்றது. சீனாவுடனான எல்லையைக் கண்காணிப்பதற்கு இந்திய தனது உள்ளூர்த் தயாரிப்பு கண்காணிப்பு விமானங்களையும் சேவையில் ஈடுபடுத்தியுள்ளது. Igla-S என்கின்ற வான் பாதுகாப்பு முறைமையையும் அவசரமாக வாங்குகின்றது. மேலும் இந்தியாவின் அவசரக் கொள்வனவில் இரசியாவிடமிருந்து புதிய 21 மிக்-29 ஜெட் விமானங்களும் ஏற்கனவே வாங்கிய 59 விமானங்களை மேம்படுத்துதலும் அடங்கும். லடாக் பிரதேச முறுகலின் பின்னர் அவசர தேவை அடிப்படையில் இந்தியா பல படைக்கலன்களைக் கொள்வனவு செய்வதால் வழமையாகக் கடைப்பிடிக்க வேண்டிய நிதிக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை இந்திய அரசு தவிர்க்கலாம். அமெரிக்காவிடமிருந்து வாங்கிய CH-47 Chinook heavy-lift helicopters என்னும் உலங்கு வானூர்திகளை லடாக் பிரதேசத்திற்கு இந்தியா அனுப்பியுள்ளது.

ரஃபேல் கொள்வனவு
பாக்கிஸ்த்தானுடன் போர் செய்வதற்கும் சீனாவுடன் போரைத் தவிர்ப்பதற்கும் இந்தியா படைக்கலன்களை வாங்கிக் குவித்துக் கொண்டே இருக்க வேண்டும். 2007இல் பாக்கிஸ்த்தானிடமுள்ள F-16 போர்விமானங்களையும் சீனாவின் J-10 போர்விமானங்களையும் கருத்தில் கொண்டு இந்திய விமானப்படை தமக்கு நடுத்தர பற்பணி தாக்குதல் போர்விமானங்கள் (Medium multi-role combat aircraft ) வேண்டும் என்ற வேண்டுகோளை இந்திய அரசிடம் விடுத்தது. அமெரிக்கா அப்போது இந்தியாவிற்கு நவீன படைக்கலன்களை வழங்குவதில்லை. அமெரிக்கா இந்தியாவிற்கு போக்குவரத்து விமானங்களான C 130, C 17ஆகியவற்றையும் ரோந்து விமானமன P 8I  ஐயும் விற்பனை செய்தது. இந்தியாவிற்கு தற்காப்பு படைக்கலன்களை மட்டுமே வழங்குவது என்ற கொள்கையை அமெரிக்கா முன்பு கடைப்பிடித்தது. அதனால் பிரான்சிடமிருந்து தனக்குத் தேவையான பற்பணி விமானங்களை வாங்க முடிவு செய்தது. அதன் பின்னணியில் பல அரசியற் பிரச்சனைகள் இந்திய உச்ச நீதிமன்றம் வரை சென்றது. இந்தியா இரசியாவிடமிருந்து புதிய பன்னிரண்டு Su-30MKI போர்விமானங்களையும் 1.53பில்லியன் டொலர்களுக்கு வாங்க திட்டமிட்டுள்ளது. இரசியா தாமதப் படுத்திய எஸ்-400 ஏவுகணை எதிர்ப்பு முறைமையை இரசியா தற்போது துரிதப்படுத்த ஒத்துக் கொண்டுள்ளது. இஸ்ரேலிடமிர்ந்து தாங்கி எதிர்ப்பு ஏவுகணைகளையும் (Spike anti-tank guided missiles) இந்தியா வாங்குகின்றது. இந்தியாவின் கொள்வனவுப் பட்டியலில் ஜேர்மனியில் இருந்து வாங்குக் 72000 துமுக்கி துப்பாக்கிகளும் (sig 716 rifle) அடங்கும்.
இரண்டு ரஃபேல் படையணிகள்
ஆறு ரஃபேல் போர் விமானங்கள் ஜூலை 27 அன்று இந்தியாவின் ஹரியானா மாநிலட்தில் உள்ள அம்பாலா ராணுவ விமான தளம் போய்ச் சேருகின்றன. ஆனால் அவை போருக்குத்தயார் நிலைக்கு வர 2 மாதங்கள் எடுக்கலாம். ஏற்கனவே இந்திய விமானிகளுக்கு பிரான்சில் வைத்து ரஃபேல் போர்விமானங்களை பறக்கும் பயிற்ச்சி வழங்கப்பட்டுள்ளது. அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் மொத்தம் முப்பத்தியிரண்டு ரஃபேல் விமானங்களைக் கொண்ட இரண்டு விமானப்படையணியை இந்தியா உருவாக்கவுள்ளது. ஒரு படையணி ஹரியானாவில் அம்பாலாவிலும் மற்றது மேற்கு வங்கத்தில் உள்ள ஹசிமாரா விமானத் தளத்திலும் நிலைகொள்ளவுள்ளன. இந்திய விமானப்படையின் மேற்கு கட்டளையகத்தின் கீழ் வரும் அம்பாலா விமானத்தளம் சீன எல்லையில் இருந்தும் பாக்கிஸ்த்தான் எல்லையில் இருந்தும் சம தொலைவில் உள்ளது. ஹசிமாரா விமானத் தளம் இந்தியாவின் ஏழு வட கிழக்கு மாநிலங்களை இந்தியப் பெரு நிலப்பரப்புடன் இணைக்கும் கோழிக்கழுத்து என அழைக்கப்படும் சில்குரி பாதையை பாதுகாக்கும் நோக்கத்தை கொண்டதாகும். இது பங்களாதேசத்திற்கும் நேப்பாளத்திற்கும் இடையில் உள்ள குறுகிய பாதையாகும். அத்துடன் இரு விமானத் தளங்களும் இந்தியக் கட்டுப்பாட்டில் உள்ள கஷ்மீரை சீனாவிடமிருந்தும் பாக்கிஸ்த்தானிடமிருந்தும் பாதுகாக்கவும் பயன்படுத்தப்படும்.
ரஃபேல் விமானத்தில் பொருத்தக் கூடிய ஏவுகணைகள்:
1. MBDA Scalp ஏவுகணைகள் (Air To Ground Cruise Missile). பிரித்தானியாவும் பிரான்சும் இணைந்து உருவாக்கிய இந்த MBDA Scalp ஏவுகணைகள் 5.1 மீட்டர் நீளமும் 450 கிலோகிராம் எடை 1000கிமீ/வினாடி தூரம் 560 கிலோ மீட்டர். 
2. Meteor ஏவுகணைகள் Air To Air Missile இவை தற்போது உள்ள வானில் இருந்து வானிற்கு தாக்குதல் செய்யக் கூடிய மிகச்சிறந்த ஏவுகணைகளாகும். Meteor ரக ஏவுகணைகள் : 3.7 மீட்டர்  190 கிலோக எடையும் கொண்டவை. இவை ஒலியிலும் பார்க்க நான்கு மடங்கு (Mach4) வேகத்தில் சென்று, 100 கிலோ மீட்டர் வரை உள்ள எதிரி போர் விமானங்களை தாக்கும் வலிமையுள்ளவை.
3. இரசியாவும் இந்தியாவும் இணைந்து தயாரித்த பிரம்மோஸ் ஏவுகணைகள். பிரம்மோஸ்-எம் ஏவுகணைகள் ஆறு மீட்டர் நீளமும் அரை மீட்டர் விட்டமும் உடையவை. இவை ஒலியிலும் பார்க்க மூன்றரை மடங்கு வேகத்தில் பாயக் கூடியவை. அத்துடன் இரு நூறு முதல் முன்னூறு எடையுள்ள குண்டுகளைத் தாங்கிக் கொண்டு 290 கிலோமீட்டர் தூரம் வரை பாயக்கூடியவை.  ரஃபேல் விமானங்களும் அவற்றில் பொருத்தப்படவுள்ள ஏவுகணைகளும் இந்திய எல்லையில் பறந்து கொண்டே ரஃபேல் விமாங்களால் னபாகிஸ்தானில் உள்ள பல இலக்குகளை அழித்துவிட முடியும். அதே போலவே சீனாவின் பல பிரதேசங்கள் ரஃபேலின் தாக்குதல் எல்லைக்குள் வருகின்றன.
இந்தியாவிற்கு என தனித்துவமான ரஃபேல்


பதின் மூன்று ரஃபேல் விமானக்கள் இந்தியாவிற்கு என தனித்துவமாக உருவாக்கப்பட்டுள்ளன. அவை கடல் மட்டத்தில் இருந்து மிக உயரமான இடத்தில் குளிரான கால நிலையில் விமானம் மேலெழும்பக் கூடிய வகையில் அவை வடிவமைக்கப்பட்டுள்ளன. இவை India Specific Enhancements (ISE) என அழைக்கப்படுகின்றன. இமயமலைக்கு அண்மையாக உள்ள கஷ்மீர் பிரதேசத்தின் புவி அமைப்பைக் கருத்தில் கொண்டே இவை உருவாக்கப்படுகின்றன. கிடைக்கப் பெற்ற தகவல்களின் படி இமய மலைச் சாரலில் இருந்து விமானங்களை தரையில் இருந்து எழும்பச் செய்வதில் சீனா பெரும் பின்னடைவு நிலையில் உள்ளது.
சீனாவின் ஐந்தாம் தலைமுறைப் போர்விமானங்கள்
சீனா அமெரிக்காவின் எஃப்-22 போர் விமானங்களின் இரகசியங்களை இணையவெளி ஊடுருவல் மூலம் அபகரித்து தனது ஜே-20 ஐந்தாம் தலைமுறைப் போர்விமானங்களை உருவாக்கியுள்ளதாக குற்றம் சாட்டப்படுகின்றது. இப்போது சீனா ஜே-20-பி என ஒரு மேம்படுத்தப்பட்ட போர்விமானங்களைப் பெருமளவில் உற்பத்தி செய்கின்றது. ரஃபேல் விமானங்கள் புலப்படாத் தன்மை கொண்டவை அல்ல. ஆனால் சீனாவின் ஜே-20 போர்விமானங்களும் ஜே-31 போர் விமானங்களினதும் புலப்படாத் தனமை கேள்விக்குறியாகவே உள்ளது. சீன பாதுகாப்புத் துறை ஊடகங்கள் தமது ஐந்தாம் தலைமுறைப் போர்விமானங்களை இந்தியாவின் ரஃபேல் விமானங்களால் எதிர் கொள்ள முடியாது என மார்தட்டுகின்றன. ஒரு போர் நடக்கும் போது மட்டும் ரஃபேல் எந்த அளவுக்கு சீனாவிற்கு அச்சுறுத்தலானது என அறிய முடியும். விமானிகளின் போர் முனை அனுபவம் எனப்பார்க்கும் போது இந்திய விமானிகள் சிறப்பான நிலையில் இருக்கின்றனர்.
சீனாவை அச்சப்பட வைக்க அமெரிக்காவிடமிருந்து இந்தியா ஐந்தாம் தலைமுறைப் போர் விமானங்களை வாங்க வேண்டியிருக்கும்.


Monday, 29 June 2020

நேபாளத்தில் சீனாவின் பூபாளம் இந்தியாவின் முகாரி

இந்தியாவுடன் நேபாளம் எல்லைப் பிரச்சனையில் முறுகல் நிலையில் இருக்கையில் 24-06-2020 புதன்கிழமை நேப்பாளத்தின் 33ஹெக்டேயர் நிலப்பரப்பை சீனா ஆக்கிரமித்துள்ளது. நேபாள அரசின் நில அளவைத் திணைக்களத்தின் தகவலின் படி பத்து இடங்களில் சீனாவின் ஆக்கிரமிப்பு நிகழ்ந்துள்ளது. நேபாளத்தின் மீதான சீன ஆக்கிரமிப்பு படைத்துறையை மட்டும் கொண்டதல்ல. கடந்த பல ஆண்டுகளாக சீன உல்லாசப் பயணிகளும், சீன பௌத்த மதகுருக்களும் நேபாளத்தில் சீன ஆதிக்கத்தை பல்வேறு வழிகளில் அதிகரித்து வருகின்றனர். நேபாளத்தின் வர்த்தகம் போக்குவரத்து போன்றவற்றில் சீனர்கள் முதலீடு செய்து அதன் பொருளாதாரத்தை படிப்படியாக தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து கொண்டிருக்கின்றனர். சீனா கைப்பற்றி வைத்துள்ள தீபெத்தில் இருந்து நேபாளத்தை நோக்கி பல தெருக்களை சீனா நிர்மாணிக்கின்றது. அத்தெருக்கள் எல்லை தாண்டியும் செல்கின்றன. சீனாவின் பாணியில் நேபாளத்தில் ஆட்சி செய்வது, மக்களைக் கட்டுப்படுத்துவது, போன்றவற்றில் நேபாளத்திற்கு சீனா பயிற்ச்சியளித்து வருகின்றது.



இரண்டு யானைகளுக்கிடையில் நேபாளம்
நேபாளத்தின் பூகோள அமைப்பு இந்திய சீன புவிசார் அரசியல் போட்டியில் முக்கிய இடம் வகிக்கின்றது. தீபெத்தை இந்தியாவிடமிருந்து பாதுகாக்கவும் இந்தியாவிற்கு எதிரான கவசப் பிரதேசமாகவும் சீனா நேபாளத்தைக் கருதுகின்றது. இரண்டு யானைகள் சண்டையிட்டாலும் காதல் செய்தாலும் அதன் காலடியில் இருக்கின்ற புற்கள் நசிக்கப்படுவது போல் சீன இந்திய உறவிலும் போட்டியிலும் நேபாளியர்கள் மிதிபடுகின்றார்கள் என ஒரு நேபாளக் குடிமகன் பிரித்தானிய ஊடகம் ஒன்றிற்கு தெரிவித்திருந்தார். 1992-ம் ஆண்டு இந்தியாவும் சீனாவும் வர்த்தக உறவை மேம்படுத்திய போது லிபுலேக் கடவையூடாக இரு நாடுகளுக்கும் இடையிலான தரைவழி வர்த்தகப் பரிமாற்றத்தை செய்ய ஒப்புக்கொண்டன. ஆனால் லிபுலாக் கடவை தனது ஆதிக்கத்திற்கு உட்பட்ட பிரதேசத்தில் உள்ளது என நேபாளம் ஆட்சேபித்த போது  இரு நாடுகளும் அதை உதாசீனம் செய்தன. லிபுலேக் கடவையூடாக சீனா இந்தியாமீதும் இந்தியா சீனாமீதும் ஊடுருவலை மேற்கொள்ள முடியும் என இரு நாடுகளும் கருதுகின்றன.. இதனால் அது இரண்டு நாடுகளுக்கும் இடையிலான போட்டிக்களமாகவும் அது உள்ளது. இது இந்தியாவில் லிபுலேக் கடவை என்றும் சீனாவில் கியங்லா பாதை எனவும் அழைக்கப்படுகின்றது லிபுலேக் கடவையில் இந்தியா தனது படையினரை நிறுத்தியதுடன் அதற்கான பாதைகளையும் மேம்படுத்தியுள்ளது. கைலாசத்தின்ற்கு புனிதப் பயணம் செய்வோரின் வசதிக்காக அந்தப் பாதை செப்பனிடப்பட்டதாக இந்தியா சொன்னது. 2019 நவம்பரில் லிபுலேக் கடவையை உள்ளடக்கிய கல்பானி பிரதேசத்தை தனது வரைபடத்தில் இந்தியா உள்ளடக்கியிருந்தது.


முன்னாள் நண்பன் இன்னாள் பகைவன்
நேபாளத்தின் பொதுவுடமைவாதத் தலைவர் மதன் பண்டாரியின் நினவு நாளில் உரையாற்றிய கே பி சர்மா ஒலி  தன்னைப் பதவியில் இருந்து அகற்ற இந்தியாவில் இருந்தும் நேபாளத்திற்கு உள்ளிருந்தும் சதிகள் மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவித்தார். முன்பு நேபாளத்தின் வெளியுறவுத் துறை அமைச்சராக சர்மா ஒலி இருந்த போது இந்திய நேபாள உறவை அவர் வளர்தெடுத்தார். 2015-ம் ஆண்டு அவர் நேபாள தலைமை அமைச்சரானார். 2015இல் நேபாளத்தில் ஏற்பட்ட நில நடுக்கத்தின் பின்னர் நேபாளத்தின் மீது இந்தியா பொருளாதாரத் தடை விதித்தது. மூன்று புறம் இந்தியாவையும் நான்காம் புறத்தில் சீனாவையும் எல்லையில் கொண்ட நாடாகிய நேபாளம் தனது தேவைகள் பலவற்றை இந்தியாவிலிருந்து செய்யப்படும் இறக்குமதி மூலமாகப் பெறுகின்றது. நேபாளம் புதிய அரசியலமைப்பை நிறைவேற்றியதை இந்தியா வெறுத்ததால் இந்தியா பொருளாதாரத் தடையைக் கொண்டு வந்தது. நேபாளம் நிறைவேற்றிய புதிய அரசிலமைப்பு யாப்பு நேபாள இந்திய எல்லையில் வாழும் மாதேசிய இன மக்களுக்கு என போதுமான நிலப்பரப்பை ஒதுக்கவில்லை என்ற படியால் இந்தியா வெறுப்படைந்திருந்தது. மாதேசிய இனமக்கள் இந்தியாவுடன் நெருங்கிய தொடர்புடையவர்கள்.



இந்தியாவுடன் முரண்படும் நேபாளம்
உத்தராகண்ட் மாநிலத்தின் பகுஹிகள் என இந்தியா உரிமை கோரும் லிம்பியாதுரா, காலாபானி, லிபுலேக் ஆகிய பகுதிகளை நேபாளம் தன் நாட்டின் பகுதிகளாகச் சேர்க்கும் வகையில் நேபாள பாராளமன்றம் தனது அரசியலமைப்பை திருத்தியுள்ளது. 335 சதுர கிலோ ழ்மீட்டர்(129 சதுர மைல் கொண்ட இந்தப் பிரதேசம் சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையில் உள்ள அகலம் குறைந்த ஆனால் நீளமான நிலப்பரப்பாகும். புதிய நேபாள வரைபடத்தை வைத்துக் கொண்டு நேபாள தலைமை அமைச்சர் சீனாவில் இருந்தும் இத்தாலியில் இருந்தும் வரும் கொரொன நச்சுக்கிருமிகளிலும் பார்க்க இந்தியாவில் இருந்து வரும் நச்சுக் கிருமிகள் ஆபத்தனவை என்றார். இந்தியாவும் சீனா கஷ்மீரின் லடாக் பகுதியில் மோதிக் கொண்டிருக்கையில் நேப்பாளம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டது இந்தியர்களுக்கு கடும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.
நேபாளத்தின் வரலாறு
1768-ம் ஆண்டு கூர்க்காக்கள் உருவாக்கிய நேபாளத்தின் விரிவாக்கத்தை முதலில் திபெத்தியர் தடுத்து நிறுத்தினர். 1792-ம் ஆண்டு நேபாளத்தை கைப்பற்ற கிழக்கிந்திய வர்த்தகக் கம்பனி எடுத்த முயற்ச்சி இழப்பு மிக்க போராகியது. அதன் பின்னர் நேபாளத்தில் இருந்து சிக்கிம் பிரிக்கப்பட்டது. பிரித்தானியாவும் நேபாளமும் செய்த உடன்படிக்கையின் படி தற்போதிய நேபாளம் ஊருவானது. 1923-ம் ஆண்டு பிரித்தானியாவும் நேபாளமும் செய்த உடன்படிக்கையின் படி நேபாளத்தின் இறையாண்மை ஒரு மன்னராட்சியின் கீழ் பாதுகாக்கப்பட்டது. ஆனால் பிரித்தானியா தனது புவிசார் அரசியல் சதுரங்க ஆட்டத்தில் நேபாளத்தை ஒரு காயாகப் பவித்தது.
நேபாள பொருளாதாரம்
147,181 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட நேப்பாளம் கடல் மட்டத்தில் இருந்து 1400 மீட்டர் உயரத்தில் உள்ளது. அத்துடன் 8000மீட்டர் உயரமான மலைத்தொடர்களையும் கொண்டது. உலகின் வறுமை மிக்க நாடுகளில் ஒன்றான நேப்பாளம் வெளிநாட்டு உதவிகளிலும் உல்லாசப் பிரயாணிகளின் வருகையிலும் பெரிதும் தங்கியுள்ளது. காற்பங்கு மக்களை வறுமைக் கோட்டின் கீழ் கொண்டுள்ள நாடாகிய நேபாளத்தின் பொருளாதாரம் கொவிட்-19 தொற்று நோயினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. நேபாள அரசு தனது திறனற்ற ஊழல் நிறைந்த ஆட்சியில் இருந்து மக்களைத் திசை திருப்பவே இந்திய நிலப்பரப்பை நேப்பாளத்தினுடையது என்னும் சட்டம் நிறைவேற்றப்பட்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. தரையால் சூழப்பட்ட நேபாளத்தின் வர்த்தகத்தின் மூன்றில் இரண்டு பங்கு இந்தியாவுடன் செய்யப்படுகின்றது. நேபாளத்தின் வெளிநாட்டு முதலீடுகளில் அரைப்பங்கு இந்தியாவில் இருந்து செய்யப்படுகின்றது. நேபாளத்தின் நாணயம் இந்திய நாணயத்தின் பெறுமதியுடன் இணைக்கப்பட்டுள்ளது. நேபாளத்தில் நெடுஞ்சாலைகள், இணையவெளி தொடர்புகள், மருத்துவக் கல்லூரிகள், தொழில்நுட்பக் கறகை நிலையங்கள், நலன்புரி நிலையங்கள், பாலங்கள் போன்றவற்றை கடந்த பல ஆண்டுகளாக இந்தியா நிர்மாணித்து வருகின்றது. பிரித்தானியாவிடமிருந்து சுதந்திரம் பெற்ற பின்னர் இந்தியாவும் நேபாளமும் சிறந்த உறவைப் பேணி பல துறைகளில் ஒத்துழைப்புக்கள் செய்தன. 1950-ம் ஆண்டு இரு நாடுகளும் செய்த உடன்படிக்கையின் படி ஒரு நாட்டுக் குடிமகன் மற்ற நாட்டுக்கு கடவுட் சீட்டின்றி சென்று பணி புரியலாம், தொழில்கள் ஆரம்பிக்கலாம், சொத்துக்கள் வாங்கலாம். இந்த உடன்படைக்கையால் இந்தியாவிற்ல்கும் நேபாளத்திற்கும் இடையில் உள்ள 1800கிமீ(1118மைல்) நீளமான எல்லை ஒரு கட்டுப்பாடற்ற எல்லையாக இருக்கின்றது. அந்த உடன்படிக்கையில் நேபாளம் தனது பாதுகாப்புத் தேவைகளுக்கு இந்தியாவில் தங்கியிருக்கும் ஏற்பாடு இருப்பதை நேபாளியர்கள் வெறுக்கின்றார்கள். இந்தியாவில் பணிபுரியும் நேபாளியர்களிலும் பார்க்க அதிக அளவு இந்தியர்கள் நேபாளத்தில் பணிபுரிகின்றார்கள். அத்துடன் இந்தியாவில் பணிபுரியும் நேபாளியர்கள் காவலாளிகள் போன்ற குறைந்த ஊதிய தொழிலைச் செய்ய நேபாளத்தில் பணி புரியும் இந்தியர்கள் அதிக வருமானமுள்ள பணிகளைச் செய்கின்றார்கள். நேபாளத்தை உருவாக்கிய தேசத் தந்தை பிரித்வி நாராயண ஷா அவர்களின் திவ்வியபோதனையின் படி நேபாளம் அதன் தென் திசை அயல்நாடான இந்தியாவை விரும்பவில்லை.
புத்தமத வியாபாரம்
கௌதம புத்தர் பிறந்த நேபாளத்தில் தியானம், யோகா போன்றவற்றை உள்ளடக்கிய உல்லாசப்பயணத்துறை பெரும் இலாபகரமான ஒன்றாக இருக்கின்றது. இதில் சீனர்கள் தமது ஆதிக்கத்தை செலுத்த விரும்புகின்றார்கள். நேபாளத்தில் 80 விழுக்காடு இந்துக்களும் பத்து விழுக்காடு இந்துக்களும் இருக்கின்றனர். நேபாளத்தின் இனக் கட்டமைப்பைப் பார்க்கும் போது 82விழுக்காட்டினர் இந்திய-ஐரோப்பியர்களாகவும் 17விழுக்காட்டினர் சீன-திபெத்தியர்களாகவும் இருக்கின்றனர். ஒரே ஒரு இந்து நாடாக இருந்த நேபாளம் தற்போது மதசார்பற்ற நாடாக இருக்கின்றது. இருந்தும் இந்திய நேபாளிய நட்பு மோசமாக இருப்பதற்கு நேபாளத்தின் அரசியல்வாதிகள் இந்தியாவை வெறுப்பதாகச் சொல்லப்படுகின்றது.
சீனா நேபாளத்திற்கு பூ-பாலம் அமைத்திசைக்கும் பூபாளம் இந்தியாவின் முகாரியாகும்.
நேபாளத்தை தன் கவசமாக மாற்ற முயல்வது இந்தியாவிற்கு நேபாளம் கேந்திர முக்கியத்துவம் மிக்க சவாலாகும். நேபாளம் சீனாவின் கைக்குப் போனால் அதைத் தொடர்ந்து ஒரு டொமினோ தொடர் சரிவாக பூட்டானும் சீனா வசமாகலாம். அது இந்தியாவின் இந்தியாவின் சிலிகுரி இணைப்பாதைக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தும். இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களான அருணாச்சலப் பிரதேசம், அசாம், மணிப்புரி, மிஸ்ரோம் மேகாலயா, நாகலாந்து. திரிபுரா ஏழும் சீனா, பூட்டான், மியன்மார் பங்களாதேசம் ஆகியவற்றால் நாற்புறமும் சூழ்ந்திருக்கின்றது. 17 கிலோமீட்டர் அகலமுள்ள சில்குரி இணைப்பாதை இந்தியாவின் பிரதான பகுதியுடன் இந்த ஏழு மாநிலங்களையும் இணைக்கின்றது. இந்தப் பாதையை சீனா துண்டித்தால் அது கோழியின் கழுத்தைத் துண்டித்த நிலைதான் என்கின்றனர் இந்தியப் படைத் துறை நிபுணர்கள். சீனாவின் பட்டியும் பாதையும் முன்னெடுப்பு (BELT & ROAD INITIATIVE - BRI) என்னும் புதிய பட்டுப்பாதைத் திட்டத்தில் 2017-ம் ஆண்டு நேபாளம் இணைந்து கொண்டது. ஆனால் ஒத்துக் கொள்ளப்பட்ட பல திட்டங்கள் இன்னும் நிறைவேற்றப்படாமலே இருக்கின்றது. புதிய பட்டுப்பாதைத் திட்டம் சீனா நேபாளத்தில் ஆழமாகவும் அகலமாகவும் கால் பதிக்க வழிவகுக்கும்.
இந்தியாவைச் சூழவுள்ள நாடுகளில் சீனா ஆதிக்கம் அதிகரிப்பதை அமெரிக்கா விரும்புவதில்லை. இந்தியாவுடன் இணைந்து அந்த ஆதிக்கத்தை வலுவிழக்கச் செய்யும் நடவடிக்கைகளை அமெரிக்க செய்யும். இலங்கை, மியன்மார், பங்களாதேசம், மால தீவு போன்ற நாடுகளில் அமெரிக்கா அப்படிச் செய்தது. அதை நேபாளத்திலும் செய்யும் என நம்பும் வகையில நேபாளத்தின் வெளியுறவுத்துறை அமைச்சர் பிரதீப் குமார் கியவாலியுடன் அமெரிக்க வெளியுறவுத்துறைச் செயலர் மைக் பொம்பியோவுடன் 24-06-2020 புதன்கிழமை தொலைபேசியில் உரையாடினார்.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...