Monday 31 August 2020

புவிசார் அரசியல் கோட்பாடுகளின் தோற்றமும் மாற்றமும்

 


புவிசார் அரசியல் எப்போது தோன்றியது என்று சரியாகச் சொல்ல முடியாது. ஆனால் புவிசார் அரசியல் கோட்பாடுகளின் தோற்றத்திற்கு காரணமாயிருந்தவர்களுள் Friedrich Ratzel என்ற ஜேர்மனியர் முதன்மையானவர். இவருக்குப் பின்னர் பிரித்தானியப் புவியியல் நிபுணர் Halford Macinder, அமெரிக்க கடற்படைத்தளபதி Alfred Thayer Mahan, அமெரிக்க அரசறிவியலாளர் Nicholas John Spykman, அமெரிக்க அரசறிவியலாளர் Samuel Huntington முக்கியமான புவிசார் அரசியல் கோட்பாடுகளை முன்வைத்தனர்.

Friedrich Ratzelஇன் அசேதனக் கோட்பாடு

உயிரியல் மற்றும் மக்கள் இன அமைவியல் (ethnography) கற்றுப் பின்னர் புவியியலும் கற்றவரான Friedrich Ratzel  அரசு என்பது ஓர் உயிரினம் போன்றது என்றார். பூமியில் உயிரனங்களின் பரம்பலை மிகவும் உன்னிப்பாக கவனித்து தனது புவிசார் அரசியல் கோட்பாட்டை இவர் வகுத்தார். ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் தமக்கு என ஓர் அரசின் கீழ் வாழும் மக்களின் தொகை அதிகரிக்கும்போது அவர்களின் மொத்த உற்பத்தியும் அதிகரிக்கும். அதனால் அவர்க்ளுக்கு மேலதிக நிலம் தேவைப்படும் போது அயலில் உள்ள வலிமை குறைந்த மக்களின் நிலப்பரப்பை ஆக்கிரமிப்பாளர்கள். இதை அவர் டார்வினின் தக்கன பிழைத்து வாழ்தல் (Survival of the Fittest) என்ற கோட்பாட்டுடன் இணைத்து முன் வைத்தார். உயிரினங்கள் தப்பி வாழ உணவு தேடித்திரிவது போல் அரசுகள் நிலங்களைத் தேடித்திரியும் என்ற இவரது கோட்பாடு சேதன கோட்பாடு (Organic Theory) என  அழைக்கப்படுகின்றது. 1844 முதல் 1904 வரை வாழ்ந்த இவரது கோட்பாடு ஜேர்மன் பல்கலைக்கழகங்களில் போதிக்கப்பட்டது. ஜேர்மனிய அதிபராக இருந்த ஹிட்லர் அயல் நாடுகள் மீது போர் தொடுத்தமைக்கு இவரது கோட்பாடே உந்து வலுவாக இருந்தது.


இதய நிலக் கோட்பாடு

1904-ம் ஆண்டு Sir Halford John என்பவர் முன்வைத்த The Geographical Pivot of History" (சரித்திரத்தின் புவியல் சுழற்ச்சி மையம்) என்ற கட்டுரையே புவிசார் அரசியலின் முக்கிய புள்ளியாக கருதப்படுகின்றது. புவியியல் நிபுணராகவும் பாராளமன்ற அரசியல்வாதியாவும் இரசியாவிற்கான பிரித்தானியத் தூதுவராகவும் இருந்தவர் இவர்.புவிசார் அரசியலின் தந்தை எனப்படுகின்றார். கால ஓட்டத்திற்கு இணங்க அவரே தனது கருத்துக்களில் மாற்றங்கள் செய்தார். புவிசார் அரசியல் என்பது எப்போதும் மாற்றத்திற்கு உள்ளாகிக் கொண்டிருக்கும் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

1861 முதல் 1947 வரை வாழ்ந்த Sir Halford John இரண்டு உலகப் போர்களை அனுபவித்தவர். தற்போது ரெடிங் பல்கலைக் கழகம் என்னும் பெயரில் இயங்குவது University Extension College என்னும் பெயரில் இருக்கும் போது அதன் முதல்வராக இருந்தவர். 1910 ஆண்டு முதல் 1922-ம் ஆண்டு வரை ஐக்கிய இரச்சியப் பாராளமன்றத்தின் உறுப்பினராகவும் இருந்தவர்.

ஒக்ஸ்போர்ட் பலகலைக்கழத்தின் புவியியல் துறையில் படிப்பாளியாகவும் பணியாற்றியவர். பல்கலைக்கழகங்களில் உலக அளவில் நிபுணராக இருப்பவர்களை படிப்பாளியாக நியமிக்கும் வழமை பிரித்தானியாவில் இருக்கின்றது.  London School of Economicsஐ ஆரம்பித்தவர்களில் ஒருவரான Sir Halford John Mackinder அதில் புவியியல் பேராசிரியராகவும் பணிபுரிந்தார்.

1902-ம் ஆண்டு பிரித்தானியாவும் பிரித்தானியக் கடலும் என்ற நூலை எழுதியவர். நில உருவாக்கவியலை முதலில் அறிமுகம் செய்தவரும் இவரே. தனது அரசியல் மற்றும் அரசுறவியல் அனுபவங்களையும் தனது உன்னதமான புவியியல் அறிவையும் வைத்து அவர் புவிப்பந்தை மூன்று பெரும் பிரதேசங்களாக வகுத்தார். 1904-ம் ஆண்டு உலகத்தீவும் இதயநிலமும் என்ற கட்டுரையை இவர் சமர்ப்பித்தார். அதில் அவர் புவியை பின்வரும் பிரதேசங்களாக வகுத்தார்.

1. உலகத்தீவு (The World-Island). அவரது உலகத்தீவில் ஆசியா, ஐரோப்பா வட ஆபிரிக்கா ஆகியவை உள்ளடக்கப்பட்டிருந்தன. இதை அவர் உலகின் பெரிய, மக்கள்தொகை அதிகமுள்ள, செல்வந்தமிக்க பிரதேமாக அடையாளமிட்டார்.

2. கடல்கடந்த தீவுகள் (The offshore islands) இதில் பிரித்தானியா, ஜப்பான் ஆகியவற்றை உள்ளடக்கி இருந்தார்.

3. வெளித்தீவுகள் (The outlying islands) இதில் வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, பசுபிக் தீவுக் கூட்டம் (Oceania) ஆகியவற்றை உள்ளடக்கியது.  

4. உலகத்தீவின் இதய நிலம் (Heartland): சீனா, இரசியா ஜேர்மனி உட்பட்ட கிழக்கு ஐரோப்பா.

5. உலகத்தீவின் வளைய நிலம் (Rimland) : உலகத்தீவின் இதய நிலம் தவிர்ந்த ஏனைய பகுதிகள் வளைய நிலம் ஆகும். இதில் உள்ளவை வட அமெரிக்காமேற்கு ஐரோப்பாமத்திய கிழக்குஈரான்இந்தியாசீனக்கரையோரம்ஜப்பான்இரசியாவின் தூர கிழக்குப்பகுதி.



கிழக்கு ஐரோப்பாவை ஆள்பவன் இதய நிலத்தை ஆள்வான். இதய நிலத்தை ஆள்பவன் உலகத் தீவை ஆள்வான், உலத்தீவை ஆள்பவன் உலகத்தை ஆள்வான் என்பது இவர் முன்வைத்த கோட்பாடு. இது இதய நிலக் கோட்பாடு என்று அழைக்கப்படுகின்றது.  

வளையநிலக் கோட்பாடு


நெதர்லாந்தில் பிறந்த Nicholas Spykman உலகின் பல பகுதிகளில் ஊடகவியலாளராகப் பணியாற்றியவர். 1920-ம் ஆண்டு அமெரிக்காவில் குடியேறிய இவர் கலிபோர்ணியா பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழகத்தில் பன்னாட்டு கற்கை நெறியை ஆரம்பித்தவர்களுள் இவரும் ஒருவர். வெளியுறவுக் கொள்கை பற்றி இரண்டு நூல்களை எழுதியவர். Nicholas Spykman (1893-1943) மக்கிண்டரின் இதயநிலக் கோட்பாட்டை அடிப்படையாக வைத்து தனது கோட்பாட்டை முன்வைத்தார். Nicholas Spykman வளைய நிலத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தார். வளையநிலத்தை ஆள்பவன் இதயநிலத்தை ஆள்வான். இதயநிலத்தை ஆள்பவன் உலகத்தை ஆள்வான் என்றார். இவரது கோட்பாடு வளையநிலக் கோட்பாடு எனப்படுகின்றது. 1. புவி என்றுமே மாறாமல் இருப்பதால் ஒரு நாட்டின் வெளியுறாவுக் கொள்கையில் புவியியல் முக்கிய பங்கு வகிக்க வேண்டும். 2 அதிகார அரசியலை அடிப்படையாகக் கொண்டும் பன்னாட்டு உறவுகளை அடிப்படையாகக் கொண்டும் வெளியுறவுக் கொள்கை வகுக்கப்பட வேண்டும். 3. போருக்கும் அமைதிக்குமான பெரும் கேந்திரோபாயம் புவியியல் நிலமைகளைக் கருத்தில் கொண்டு வகுக்கப்பட வேண்டும். என்பவை இவரது கொள்கைகளாகும். யேல் பல்கலைக் கழகத்தில் தனது மாணவர்கள் புவியியல் தொடர்பான ஆழமான அறிவைக் கொண்டிருக்க வேண்டும் என இவர் வலியுறுத்தினார். அமெரிக்கா உலக அரங்கில் கவனம்(ஆதிக்கம்) செலுத்துவதா அல்லது தனது பாட்டை தான் பார்த்துக் கொள்வதா என்ற விவாதம் அமெரிக்காவில் தீவிரமாக நடந்த போது இவர் அமெரிக்கா உலகத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்ற கருத்தை அமெரிக்கர்களை ஏற்கச் செய்வதில் முக்கிய பங்கு வகித்தார். இரசியாவை அமெரிக்கா அடக்கி வைக்க வேண்டும் என்ற கொள்கையை அமெரிக்க வெளியுறவுக் கொள்கையின் முக்கிய அம்சமாக்கினார். இதனால் இவர் "அடக்கலின் ஞானத் தந்தை" எனப்படுகின்றார்.

கடல்வலிமைக் கோட்பாடு


அமெரிக்கரான Alfred Thayer Mahan பட்டப்படிப்பின் பின்னர் அமெரிக்கக் கடற்படையில் இணைந்தவர். பின்னர் அமெரிக்காவின் கடற்போர்க் கல்லூரியில் விரிவுரையாளராகவும் கடமையாற்றியவர்.. பிரித்தானியாவிற்கும் டச்சு தேசத்திற்கும் மற்றும் பிரித்தானியாவிற்கும் பிரான்சிற்கும் இடையில் நடந்த போர்களில் பிரித்தானியாவின் கடல் வலிமை வெற்றியைத் தீர்மானித்ததை உணர்ந்த இவர் ஒரு தேசத்தின் பெருமை அதன் கடற்படையில் தங்கியுள்ளது என்ற கருத்தை முன் வைத்தார். 1. புதிய கடற்கலன்களிலும் அதன் பணியாளர்களிலும் முதலீடு செய்ய வேண்டும். 2. எதிரியின் கப்பல்களை குறிவைக்கும் கேந்திரோபாயங்களை உருவாக்க வேண்டும். 3. உலக கடற்போக்குவரத்தின் திருகுப்புள்ளிகளைக் கட்டுப்படுத்த வேண்டும். என்பவை இவரது கோட்பாடுகளாகும். இவரது கோட்பாடுகளால்தான் அமெரிக்கா உலகின் வலிமை மிகுந்த கடற்படையை அமெரிக்கா தற்போது வைத்திருக்கின்றது.

நாகரீக கோட்பாடு


அமெரிக்கரானா Samuel Phillips Huntington (1927- 2008) ஹாவார்ட் பல்கலைக்கழக்த்தில் மாணவப் பருவம் முதல் ஐம்பது ஆண்டுகள் கழித்தவர். 1993இல் இவர் வெளியிட்ட நாகரீகங்களின் மோதல் (Clash of Civilizations) என்ற நூலில் வைத்த கோட்பாடு புதிய புவிசார் அரசியல் சிந்தனைக்கு முக்கியமானதாகும். மேற்கு நாடுகள்லத்தின் அமெரிக்க நாடுகள்இஸ்லாமிய நாடுகள்சீனாஇந்துமரபு வழியினர்ஜப்பான் என எழு கலாச்சாரங்களை இவர் தனது நூலில் அடையாளப்படுத்தியுள்ளார் வருங்காலத்தில் போர் நாடுகளிடையே நடக்காமல் நாகரீகங்களிடையே நடக்கும் என்றார். மேற்கு நாடுகளின் உலக ஆதிக்கத்திற்கு இஸ்லாமிய தீவிரவாதம் பெரும் சவாலாக அமையும் என்றார். அமெரிக்க குடிமக்களுக்கும் படையினருக்கும் இடையிலான உறவிற்கு புது வடிவம் கொடுப்பதற்கு இவர் பேருதவியாக இருந்தவர். உலகப் பல்கலைக்கழகங்களின் அரசுறவியல் துறைகளில் அதிகம் பேசப்படும் ஒருவராக Samuel Phillips Huntington இப்போது இருக்கின்றார்.

எல்லா புவிசார் அரசியல் நிபுணர்களும் உலக அமைதியிலும் பார்க்க உலக ஆதிக்கத்தில் அதிக கவனம் செலுத்தியுள்ளனர்.

அடுத்த கட்டுரையைக் காண இந்த இணைப்பில் சொடுக்கவும்

புவிசார் அரசியலில் வான்வலிமையும் பொருளாதாரமும்

அடுத்த கட்டுரை இந்த இணைப்பில் உண்டு:

https://www.veltharma.com/search/label/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...