Monday, 20 July 2015

சீனப் பங்குச் சந்தை வீழ்ச்சி சீன ஆட்சியாளர்களுக்கு சவாலா?

சீனப் பங்குச் சந்தையின் சுட்டியான ஷாங்காய் கொம்பசிற் சீன அரசின் தீவிர நடவடிக்கைகளையும் மீறி ஜுலை 14-ம் 15-ம் திகதிகளில் சரிவைச் சந்தித்தது. சீனப் பொருளாதாரம் ஏழு விழுக்காடு வளர்ச்சியில் உறுதியாக இருக்கின்றது என்ற செய்தி 15-ம் திகதி வெளிவந்த வேளையிலும் பங்குச் சந்தையின் வீழ்ச்சியைத் தடுக்க முடியவில்லை.

வட்டி சுட்டதடா!!!!

ஏற்றுமதியில் பெரிதும் தங்கியிருக்கும் சீனப் பொருளாதாரத்தை மாற்றி அமைப்பது சீன அரச முதலாளித்துவவாதிகளின் தலையாய கொள்கையாகவும் முதன்மைப் பணியாகவும் இருக்கின்றது. அதற்கு உள்ளாட்டுக்  கொள்வனவாளர்களை பொருளாதார ரீதியில் வலுவிக்கவர்களாக மாற்றுவது அவசியமான ஒன்றாகிவிட்டது. . 1978-ம் ஆண்டில் இருந்து சீனா உலகச் சந்தையில் தனது பொருட்களின் போட்டியிடு திறனை அதிகரிக்க உள்ளூர் ஊதியத்தையும் சேமிப்புக்கள் மீதான வட்டி வீதத்தையும் திட்ட மிட்ட முறையில் நசுக்கி வைத்திருந்தது. இதனால் சீன மக்களின் கொள்வனவு வலு அதிகரிக்கவில்லை. குறைந்த வட்டி வீதம் அரசின் உற்பத்தி நிறுவனங்களுக்கு மலிவான வட்டி வீதத்தில் நிதியைக் கொடுத்தது. இதனால் அரச உற்பத்தி நிறுவனங்கள் நாடெங்கும் பாரிய உட்கட்டுமானங்களை உருவாக்கின. கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேலாக சீன ஆட்சியாளர்கள் ஏற்றுமதிப் பொருட்களின் உற்பத்திச் செலவை அதிகரிக்காமல் எப்படி உள்ளூர் மக்களின் கொள்வனவு வலுவை அதிகரிப்பது என்பதில் தங்கள் தலை முடியை பிய்த்துக் கொண்டிருக்கின்றனர். சீன மக்களை கட்டிடங்கள் வாங்கச் செய்வதாலும் பங்குச் சந்தையில் முதலீடு செய்யச் செய்வதாலும் அவர்களின் கொள்வனவு வலுவை அதிகரிக்கலாம் என சீன ஆட்சியாளர்கள் திட்டமிட்டுச் செயற்பட்டனர். இதனால் கடந்த இருபதுஆண்டுகளாக சீனாவில் கட்டிடங்களின் (அசையாச் சொத்துக்கள்) விலைகள் அதிகரித்துக் கொண்டே போயின. கடந்த ஆண்டில் இருந்து பங்குச் சந்தையிலும் பெரும் விலை அதிகரிப்பு ஏற்பட்டது. கடந்த சில ஆண்டுகளாக உலகப் பொருளாதார நிபுணர்கள் சீனாவின் அசையாச் சொத்து அளவிற்கு மிஞ்சிய விலை அதிகரிப்பைக் கண்டுள்ளது; அவற்றின் விலைகள் திடீர்ப் பெரும் சரிவைச் சந்திக்கலாம்; அப்படி நடக்கும் போது சீன அவற்றை வாங்கக் கடன் கொடுத்த வங்கிகள் பெரும் இழப்பீட்டைச் சந்திக்கும்; அது ஒரு கடன் நெருக்கடிக்கு வழிவகுக்கும் என எச்சரித்துக் கொண்டிருந்தனர்.

பங்குச் சந்தையின் பங்கு அதிகரிக்கப் பட்டது.
நீண்ட காலமாக சீனப் பொருளாதாரத்தில் பங்குச் சந்தையின் பாகம் சிறிய அளவிலேயே இருந்தது. கடந்த ஓராண்டாக பங்குச் சந்தையின் வளர்ச்சி அபரிமிதமாக இருக்கின்றது. சீன வளங்களை திறன் மிக்க வகையில் பகிர்வதற்கு முதலாளித்துவ நாடுகளில் உள்ளது போன்ற ஒரு பங்குச் சந்தை அவசியம் என சீன ஆட்சியாளர்கள் கருதியதனால் அவர்கள் சீனப் பங்குச் சந்தையை திட்ட மிட்ட முறையில் வளர்த்தெடுத்தனர். கடன் வாங்கி பங்குகளில் முதலீடு செய்வது அனுமதிக்கப்பட்டது.  சீனப் பொருளாதாரத்தில் நிதிச் சேவையின் பங்கு அதிகரித்தது.

லட்சோப லட்சம் தொலைந்தது
சீனப் பங்குகள் மூன்று ரில்லியன்(மூன்று இலட்சம் கோடி) அமெரிக்க டொலர்கள் பெறுமதியான இழப்பீட்டைச் சந்தித்திருக்கும் வேளையில் சீனாவின் பொருளாதாரம் தொடர்பாக சீன ஆட்சியாளர்கள் மட்டுமல்ல பல வளர்ச்சியடைந்த நாடுகளும் கடும் கரிசனை கொண்டுள்ளனர். சீனாவில் ஏற்பட்ட சொத்திழப்பீடு உலக வரலாற்றில் என்றும் ஏற்படாத சொத்திழப்பு எனக் கருதப்படுகின்றது. சீனப் பொருளாதாரம் மோசமடைந்தால் அது சீன ஆட்சியாளர்களுக்கு ஆபத்தாக முடியும் என்பதை சீன ஆட்சியாளர்கள் நன்கறிவர். சீனாவில் நடக்கும் இயற்கை அனர்த்தங்களில் இருந்து தென் சீனக் கடலில் உள்ள முரன்பாடுகள் வரை எந்தப் பிரச்சனைகளிலும் தாம் ஊடகங்களில் தோன்றி மக்களுக்கு ஆறுதலும் உறுதியும் வழங்கிக் கொண்டிருந்த சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் சீனத் தலைமை அமைச்சர் லீ கேகியாங்கும் சீனப் பங்குகளின் விலை 25 நாட்களில் 32 விழுக்காடு வீழ்ச்சியக் கண்ட போது மௌனமாக இருக்கின்றார்கள். தாம் தாய் நாடு எல்லாத் துறையிலும் முன்னேறி உலகின் முதல்தர நாடாக உருவாகப் போகின்றது என நம்பிக் கொண்டிருந்த சீன மத்திய தர வர்க்கத்து மக்களின் நம்பிக்கை தளரத் தொடங்கிவிட்டது. அதிலும் கடன் பட்டு பங்குகளை வாங்கிய மத்திய தர வர்க்கத்து அபிவிருத்தி விரும்பிகள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர்.

நகரவாசிகளின் நரகமான பங்குச் சந்தை
சீன நகரவாசிகளில் எண்பது விழுக்காட்டினர் பங்குச் சந்தையில் முதலீடு செய்துள்ளனர். அண்மைக் காலங்களாக சீன அரசு மக்களைப் பங்குச் சந்தையில் முதலீடு செய்யுமாறு உக்குவித்து வந்தது. நாட்டின் பொருளாதார வளர்ச்சியைத் தொடர்ந்து பேண நிறுவனங்களில் முதலீடு அதிகம் தேவைப்பட்ட போது அவறின் பங்குகளில் முதலீடு செய்யும் படி மக்கள் தூண்டப்பட்டனர். சீன அரச நிறுவங்களின் பங்குகளில் மக்கள் செய்யும் முதலீட்டின் அதிகரிப்பு நாட்டின் பொருளாதாரத்தில் அரசின் பிடியைத் தளர்த்துவதாக சீன அரசு பரப்புரை செய்தது. அதே வேளை ஆட்சியில் பொதுவுடமைக் கட்சியின் முக்கிய புள்ளிகளின் பிடியை மேலும் இறுக்கவும் அது வழிவகுத்தது. சீன நகரவாசிகளில் 80 விழுக்காட்டினர் பங்குச் சந்தையில் முதலீடு செய்த போதிலும் அது சீனாவின் மொத்த மக்கள் தொகையில் 15 விழுக்காடு மட்டுமே.

அன்று ஜப்பானில் இன்று சீனாவில்
2008-ம் ஆண்டின் பின்னர் அமெரிக்க டொலரில் பார்க்கும் போது சீனாவின் மொத்தத் தேசிய உற்பத்தி இருமடங்காக அதிகரித்துள்ளது. சீனப் பங்குச் சந்தை 2015-ம் ஆண்டு மார்ச் மாதத்தின் பின்னர் அடைந்த விலை அதிகரிப்பை மட்டுமே இழந்துள்ளது. சென்ற ஆண்டின் பெறுமதியுடன் பார்க்கும் போது சீன பங்கு 75 விழுக்காடு விலை அதிகரிப்பில் இப்போதும் இருக்கின்றத்து. கடன் வாங்கி பங்குச் சந்தையில் செய்யப்பட்ட முதலீடுகளால் பங்குகள் பெரும் விலை அதிகரிப்பை 2015 மார்ச் மாதத்தின் பின்னர் பெற்றன. சீனாவில் தற்போது நடப்பது தொண்ணூறுகளில் ஜப்பானில் நடந்ததை ஒத்தது என்கின்றனர் சில பொருளாதார நிபுணர்கள். அப்போது ஜப்பானிய அசையாச் சொத்துக்களினதும் பங்குகளினதும் விலைகள் தொடர் வீழ்ச்சியைக் கண்டன. இதைத் தொடர்ந்து உலகச் சந்தையில் மூலப் பொருட்களின் விலைகள் வீழ்ச்சி கண்டன. அது உலகப் பொருளாதாரத்திற்கு சாதகமாக அமைந்தது. இதே நிலை இப்போதும் நடக்கலாம் எனவும் நம்பப்படுகின்றது.

சீன அடி சிலம்படி சரியான இடத்தில் விழவில்லை
பங்குச் சந்தை விலைச் சரிவை சீன ஆட்சியாளர்கள் தமது மிகத் தீவிர கவனத்தில் எடுத்தார்கள். பல அதிரடி நடவடிக்கைகளிலும் ஈடுபட்டார்கள். ஜூன் 26-ம் திகதி எழு விழுக்காடு விலை வீழ்ச்சி சீனப் பக்குச் சந்தையில் ஏற்பட்டதைத் தொடர்ந்து ஜூன் 27-ம் திகதி வட்டி வீதம் குறைக்கப் பட்டது. ஜூன் 29-ம் திகதி உள்ளூராட்சிச் சபைகள் பங்குச் சந்தையில் முதலீடு செய்வதற்கு எதிரான தடை நீக்கப்பட்டது. ஜூலை முதலாம் திகதி பங்கு வர்த்தகத்திற்கான கட்டணம் குறைக்கப்பட்டது. வங்கிகள் மைய வங்கியில் வைப்பிலிட வேண்டிய இருப்பு விகிதம் குறைக்கப்பட்டது. இவற்றால் நாட்டில் பணப் புழக்கத்தை அதிகரிக்கச் செய்யப்பட்டது. ஜூலை 2-ம் திகதி வங்கிகள் பங்குச் சந்தையில் முதலீடு செய்பவர்களுக்கு வழங்கும் கடன் தொடர்பான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. சீன அரச நிறுவனங்கள் புதிதாக பங்கு விற்பனை செய்வது இடை நிறுத்தப்பட்டது. ஜூலை 8-ம் திகதி பெரிய அளவில் பங்குகளை வைத்திருப்போர் பங்குகளைப் பெருமளவில் விற்பது தடை செய்யப்பட்டது. பங்கு சந்தையில் குறுகிய கால விற்றல் (short selling) தடை செய்யப்பட்டு அதை மீறுபவர்கள் கைது செய்யப்படலாம் என மிரட்டல் சீன அரசால் விடுக்கப்பட்டது. short selling என்பது பங்குளை வாங்க முன்னரே விற்பதற்கான ஏற்பாடுகளைச் செய்வது. ஆனால் சீன ஆட்சியாளர்கள் சீனப் பங்குகளின் விலை அளவுக்கு மிஞ்சி மிகைப்படுத்தப் பட்டிருந்தன என்பதை உணரவில்லை. சீனப் பங்குகள் அதன் உச்ச விலை நிலையில் ஜூன் 12-ம் திகதி இருந்த போது சீனப் பங்குகளின் விலை சராசரியாக அவை கொடுக்கும் பங்கிலாபத்திலும் பார்க்க 25 மடங்காக இருந்தன. இந்த அளவிற்கு மிஞ்சிய விலை குறைக்கப் படவேண்டிய ஒன்று அது விழுவதைத் தடுக்கக் கூடாது என மேற்குலக ஊடகங்கள் கருத்து வெளிவிட்டன.சீன நிறுவனங்களின் இலாபம் வீழ்ச்சியடையும் போது அவற்றின் விலைகள் உயர்ந்தமை விடும்பத்தகாதா ஒன்று மட்டுமல்ல நடக்கக் கூடாத ஒன்றுமாகும். சீன ஊடகங்கள் சீன அரசு பங்குச் சந்தையின் மீது போர் தொடுத்துள்ளது என்றும் அது ஓர் அணுப் படைக்கலப் போர் என்றும் விமர்சித்தன. சீனப் பங்குச் சரிவைப்பற்றி சீன ஊடகம் ஒன்று இப்படி எழுதியிருந்தது:
  • In 1999, just before the epic Nasdaq technology bubble burst, the average Nasdaq stock traded on a multiple of 59 times earnings; in China, the Shenzhen ChiNext, the country's version of the tech-heavy index, had topped out with an average price-to-earnings ratio of 150 times.

Price-to-earnings ratio உயர்வாக இருக்கும் போது பங்கு விலை மோசமாக உயர்ந்திருக்கின்றது எனச் சொல்லலாம்.

H-பங்குகளும் A-பங்குகளும்
சீனாவின் ஷாங்காய் பங்குச் சந்தையிலும் ஷென்ஷென் பங்குச் சந்தையிலும் குறிந்த சீனாவின் A-பங்குகள் விற்பனையும் கொள்வனவும் நடக்கும். இவற்றில் வெளிநாட்டவர்கள் பங்கு பற்றுவது மட்டுப் படுத்தப்பட்டுள்ளது. ஹொங்ஹொங் பங்குச் சந்தையில் H-பங்குகள் விற்பனையும் கொள்வனவும் நடக்கும். அங்கு வெளிநாட்டினர் சாதாரணமாகப் பங்கு பற்றலாம். A-பங்குகள் மட்டும்தான் 2015-ம் ஆண்டு ஜூன் வரை கன்னாபின்னா என விலை அதிகரிப்புக் கண்டு பின்னர் கடும் சரிவைக் கண்டது. H-பங்குகள் பெரும் ஏற்ற இறக்கத்தை அனுபவிக்கவில்லை. சீனாவின் A-பங்குகளில் வெளிநாட்டு பெருமுதலீட்டாளர்களின் பாதிப்பு மிகக் குறைவு.
.
அமெரிக்காவிடமிருந்து அடித்த கொப்பி
1990களில் அமெரிக்காவில் பங்குச் சந்தையில் விலைகள் சடுதியான சரிவதைத் தடுக்க என ஒரு இரகசிய நடவடிக்கைக் குழு அமைக்கப்பட்டது. 2008-ம் ஆண்டு ஜனவரியில் அமெரிக்கப் பங்கு விலைகள் சரிந்த போது அமெரிக்காவில் வட்டி வீதம் குறைக்கப்பட்டது. அமெரிக்கா செய்ததை சீனாவும் செய்ய முயல்கின்றது எனச் சொல்லப்படுகின்றது. ஆனால் அமெரிக்கா தலையிட்டது சரியான விலை நிலையிலும் பார்க்க பங்கு விலைகள் குறையாமல் இருப்பதற்கு. கடந்த ஐந்து ஆண்டுகளாக அமெரிக்கா நாட்டில் பணப்புழக்கத்தை அதிகரிக்க எடுக்கும் நடவடிக்கைகள் பங்கு விலைகளை அதிகரிக்க வைக்கின்றன. ஆனால் நாட்டின் பங்கு விலை அளவுக்கு அதிகமாக இருக்கும் போது அதன் வீழ்ச்சியைத் தடுக்க அரசு செய்யும் செலவு விழலுக்கு இறைத்த நீராகும். அமெரிக்க அரசு தாம் பங்குச் சந்தையில் நேரடித் தலையீடு செய்வதில்லை என்கின்றது. பங்குச் சந்தையின் முக்கிய அம்சம் நிறுவனங்கள் மலிவாகவும் பொது மக்களிடமிருந்து நேரடியாகவும் நிதியை பெறுவதும் பொதுமக்கள் சேமிப்பு கணக்கிலும் பார்க்க சிறந்த பங்கிலாபத்தைப் பெறுவதுமாகும். சீனாவின் அரச நிறுவங்கள் தொடர்ந்து பொதுமக்களிடமிருந்து முதலீட்டைப் பெற பங்குச் சந்தை மீது அவர்களுக்கு நம்பிக்கை அவசியம். இந்த ஆண்டு சீன நிறுவனங்கள் 72 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்குச் சமானமான நிதியை பொதுமக்களிடமிருந்து திரட்ட ஏதுவாக அமைந்தது அப்படிப்பட்ட நம்பிக்கையே. எல்லா முதலாளித்துவ அரசுகளும் பங்குச் சந்தை விலை வீழ்ச்சியடையும் போது தலையிடுவதுண்டு ஆனால் சீனாவின் தலையீடு அதிக நேரடியானதாகவும் தீவிரமானதாகவும் இருக்கின்றது. எந்த ஒரு பொதுவுடமைவாதியும் சீன அரசு உழைக்கும் வர்க்கத்தினருக்குப் போக வேண்டிய நிதி வளத்தை  பங்குச் சந்தையில் கொள்ளை இலாபமீட்டும் குட்டி பூர்ஷுவாக்களைப் பாதுகாக்கப் பயன்படுத்துகின்றது என வாதிட முடியும். சீனாவின் உயர் பணக்காரர்கள் 400 பேர் 100பில்லியன் டொலர்களை இழந்தது நாட்டின் இழப்பீடா என அவர்களால் கேள்வி எழுப்ப முடியும். சீனப் பொதுவுடமைக் கட்சியின் உயர் பீடத்தினரும் பெரும் இழப்பீட்டைச் சந்தித்திருக்க வேண்டும்.

சீனாவால் திட்டமிட்டுத் தப்ப முடியும்

சீனச் சிறு முதலீட்டாளர்களுக்கு பங்குச் சந்தை அனுபவம் மிகக் குறைவு ஜுலை மாதம் அவர்களுக்கு ஏற்பட்ட இழப்பு அவர்களுக்கும் மேலும் பல புதிதாக வரவிருக்கும் முதலீட்டாளர்களுக்கும் நல்ல படிப்பினை. இந்தப் படிப்பினை சீனாவின் முதலீட்டுத் துறைக்கு உதவியாகவும் வள ஒதுக்கீட்டில் சீன அரசு சிறப்பாகச் செயற்படவும் உதவும். முதலீட்டாளர்கள் நாட்டுப்பற்றுடன் செயற்படுவதில்லை என்பதை சீன அரசு உணர்ந்து கொள்ள வேண்டும். சீனப் பொருளாதாரம் தற்போது எழு விழுக்காடு வளர்கின்றது இது 2009-ம் ஆண்டிற்கான வளர்ச்சியான 12 விழுக்காட்டுடன் ஒப்பிடுகையில் குறைவானதாகும். ஆனால் 2007-ம் ஆண்டு சீனாவின் மொத்தத் தேசிய உற்பத்தியில் ஏற்பட்ட அதிகரிப்புடன் ஒப்பிடுகையில் தற்போது ஏற்படும் அதிகரிப்பு இரு மடங்காகும். வளரிச்சி அதிகரிக்கின்றது. ஆனால் கடந்த ஆண்டின் வளர்ச்சியுடன்  இந்த ஆண்டின் வளர்ச்சிகும் இடையிலான வளர்ச்சி அதிகரிப்பு விழுக்காடு மட்டுமே குறைகின்றது. இருந்தும் ஏழு விழுக்காடு வளர்ச்சியே சீன ஆட்சியாளரின் இலக்காகும். பங்குச் சந்தை வேறு பொருளாதாரம் வேறு என்பதை சீனா நிரூபிக்கும் ஆனால் சீனாவின் நாணயத்தை உலக நாணயமாக்குவதற்கு ஒரு அரச தலையீடு குறைந்த பங்குச் சந்தை அவசியம்.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...