இரண்டாம் உலக போர் நடக்கும்போதே புவிசார் அரசியல் கோட்பாடுகள் பல மாற்றத்திற்கு உள்ளானது. புவிசார் அரசியல் கோட்பாடுகள் வெறும் பூகோள அமைப்புடன் மட்டும் நின்றுவிடாமல் பொருளாதாரம், வரலாறு, இனப்பரம்பல், மக்கள்தொகைக் கட்டமைப்பு, போரியல் போன்ற பலவற்றுடன் தொடர்புபட்டுள்ளது. வேறும் பல அம்சங்கள் அதில் தொடர்ச்சியாக உள்ளடக்கப் பட்டுக் கொண்டிருக்கின்றன. இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஹல்போர்ட் மக்கிண்டர் புவிசார் அரசியலுக்கு கொடுத்த வரைவிலக்கணம் இப்போது பல மாற்றங்களுக்கு உள்ளாகிக் கொண்டிருக்கின்றது.
முன்னையிட்ட கோட்பாடுகள்
ஹல்போர்ட் மக்கிண்டர் ஜேர்மனியையும் உள்ளடக்கிய கிழ்க்கு ஐரோப்பாவை உலகின் இதய நிலம் எனபெயரிட்டு அதை ஆள்பவன் உலகில் ஆதிக்கம் செலுத்துவான் என்ற கோட்பாட்டை முன் வைத்தார். நிக்கொலஸ் ஸ்பீக்மன் ஐரோப்பா மற்றும் ஆசியக் கண்டங்களின் தென் கரை ஓரத்தை ஆள்பவன் உலகில் ஆதிக்கம் செலுத்துவான் என்றார். அல்பிரட் ரி மஹான் கடல்களை ஆள்பவனே உலகில் ஆதிக்கம் செலுத்துவான் என்றார்.
வான்படை வலுக் கோட்பாடு
அலெக்சாண்ட பி டி செவெர்ஸ்கியின் வான்படை வலுக்கோட்பாடு:
1. வான்வலு தரைப்படைப் போர்களை செல்லுபடியற்றதாக்குகின்றது
2. வான்வெளியை ஆதிக்கத்தில் வைத்திருப்பவையே உலக வல்லரசாகும்.
3. நாடுகளின் வான் ஆதிக்கபரப்புக்கள் சந்திக்கும் இடங்கள் ஆதிக்கத்தை முடிவு செய்யும் இடங்களாகும். அந்த சந்திக்கும் பரப்புக்களைக் கட்டுப்படுத்தும் நாடே ஆதிக்க நாடாகும்.
வான்படைக் கோட்பாட்டை முன்வைத்த இரசியாவில் பிறந்த அலெக்சாண்ட பி டி செவெர்ஸ்கி இரசியக் கடற்படையிலும் வான்படையிலும் பணிபுரிந்தவர். பின்னர் அமெரிக்காவிற்கு சென்று விமான உற்பத்தியில் ஈடுபட்டவர். 1942-ம் ஆண்டு தனது வான்படை வலிமை மூலமான வெற்றி என்னும் நூலை வெளியிட்டார்.
1. வான்படைகளது தாக்கு திறனும் தாக்குதல் தூரமும் அதிகரித்துக் கொண்டிருப்பது அமெரிக்காவிற்கு ஆபத்தானது. பிரித்தானியாவை ஜேர்மன் வான்படையினர் 1940-41இல் நிர்மூலம் செய்தமை அமெரிக்காவிற்கும் நடக்கலாம்.
2. இதை மறுப்பவர்கள் பிரான்சின் மகிநொட் கோடு என்ற பாதுகாப்பு அரண் மனப்பாங்குடன் இருப்பவர்களாகும்
3. மாக்கடல்களூடாக நடக்கவிருக்கும் புவிப்பந்தின் இரு பாதிகளுக்கும் இடையிலான போருக்கு அமெரிக்கா உடனடியாக தயாராக வேண்டும்.
4. உலகின் கடல்வலிமை மிக்க நாடாக பிரித்தானிய இருந்தது/இருப்பது போல் அமெரிக்கா உலகின் வான் வலிமை மிக்க நாடாக வேண்டும்.. சுதந்திரமான விமானப்படை அமைக்கப்படவேண்டும். மூவாயிரம் மைல்களுக்கும் மேலாக கண்டம் விட்டுக் கண்டம் செல்லக் கூடிய தொலைதூர குண்டு வீச்சு விமானங்கள் உருவாக்கப்பட வேண்டும்.
1941-ம் ஆண்டு அமெரிக்கா ஜப்பான் மீது செய்த பேர்ல் துறைமுகத் தாக்குதலின் பின்னர் செவெர்ஸ்கியின் கருத்துக்கள் பிரபலமாகியதுடன் காரசாரமாக விவாதிக்கப்பட்டது. இவரது நூல் அப்போது அதிக விற்பனையாகி சாதனையும் படைத்தது. இந்த நூலால் கவரப்பட்ட வால்ட் டிஸ்னி அவரின் கருத்து எல்லோரையும் போய்ச் சேரவேண்டும் என உணர்ந்து 1943-இல் அதை திரைப்படமாக வெளியிட்டார்.
உலக முறைமைக் கோட்பாடு – இம்மானுவேல் வல்லரஸ்ரைன்
மற்றவர்கள் புவியியலையும் போரியலையும் அடிப்படையாக வைத்து புவிசார் அரசியல் கோட்பாடுகளை வகுக்க இம்மானுவேல் வல்லரஸ்ரைன் பொருளாதாரத்தையும் சமூக நிலைமைகளையும் கருத்தில் கொண்டு தனது புவிசார் அரசியல் கோட்பாட்டை முன்வைத்தார். அமெரிக்காவின் யேல் பலகலைக் கழகத்தில் 2000-ம் ஆண்டில் இணைந்து 2019இல் இறக்கும் வரை அங்கு பணியாற்றினார். சமூகவியலாளரான இம்மானுவேல் வல்லரஸ்ரைன் உலக பொருளாதார முறைமை சில நாடுகளுக்கு சாதகமாகவும் பல நாடுகளுக்கு பாதகமாகவும் இருப்பதை அவதானித்தார். அந்த அவதானிப்பை ஆதாரமாக வைத்து அவர் உலக முறைமைக் கோட்பாட்டை முன்வைத்தார். அவரது கோட்பாட்டில் உலக நாடுகளை உள்ளக நாடுகள், அரை-வெளியக நாடுகள், வெளியக நாடுகள் என மூன்று பெரும் பிரிவுகளாக வகுத்தார்.
1. உள்ளக நாடுகள் வெளியக் நாடுகள் மீது முலப்பொருட்களுக்கும் மனித உழைப்பிற்கும் சுரண்டுவதற்காக ஆதிக்கம் செலுத்துகின்றன.
2. வெளியக நாடுகள் தங்கள் மூலதனத்திற்காக உள்ளக நாடுகள் மீது தங்கியிருக்கின்றன.
3. அரை-வெளியக நாடுகள் உள்ளக நாடுகளின் தன்மைகளையும் வெளியக் நாடுகளின் தன்மைகளையும் கொண்டுள்ளன.
4. உலக சமூக கட்டமைப்பில் சமத்துவமின்மை நிலவுகின்றது.
5. உள்ளக நாடுகள் படைவலிமை மிகுந்ததாக இருப்பதுடன் மற்ற நாடுகளில் தங்கியிருப்பதில்லை. அவற்றின் உற்பத்தி முலதனம் மிகுந்ததாகவும் செயற்திறன் நிறைந்ததாகவும் இருக்கின்றது. மற்ற நாடுகளின் மூலப்பொருட்களுக்கும் மனித உழைப்பிற்கும் அவை குறைந்த விலைகளைக் கொடுக்கின்றன. வெளியக நாடுகளுக்கு விற்பனை செய்யும் பொருட்களுக்கு உள்ளக நாடுகள் அதிக விலைகளை விதிக்கின்றன. இந்த சமத்துவமின்மையை உள்ளக நாடுகள் தொடர்ச்சியாக மீளுறுதி செய்து கொண்டிருக்கின்றன.
உள்ளக நாடுகள்: ஐக்கிய அமெரிக்கா, பிரித்தானியா, இத்தாலி, ஜேர்மனி, பிரான்ஸ், ஜப்பான், கனடா, ஆகிய நாடுகள்
அரை வெளியக நாடுகள்: ஒஸ்ரேலியா, ஆர்ஜெண்டீனா, சீனா, தென் கொரியா, சவுதி அரேபியா, துருக்கி, இந்தோனேசியா, இரசியா, தைவான், மெக்சிக்கோ, பிரேசில் இந்தியா போன்ற நாடுகள். சீனா அரைவெளியக நாடுகளுக்கும் உள்ளக நாடுகளுக்கும் இடைப்பட்ட நிலையில் இருக்கின்றது எனச் சொல்லலாம். ஜீ-7 நாடுகளின் பட்டியலில் இன்னும் சீனா இல்லை என்பதும் கவனிக்கத்தக்கது.
வெளியக நாடுகள்: மேற்கூறிய உள்ளக மற்றும் அரை உள்ளக நாடுகள் அல்லாத நாடுகள் (ஜி-20 நாடுகளின் பட்டியலில் இல்லாத நாடுகள்)
ஆபிரிக்க கண்டத்தின் பல பகுதிகளுக்கும் பயணம் செய்த இம்மானுவேல் வல்லரஸ்ரைன் புதிய உலக முறைமை-1: முதலாளித்துவ விவசாயமும் ஐரோப்பிய முதலாளித்துவத்தின் ஆரம்பமும் என்ற நூலை 1974இல் எழுதினார். இம்மானுவேல் வல்லரஸ்ரைன் தொடர்ச்சியாக எழுதிய கட்டுரைகள் Geopolitics and Geoculture (புவிசார் அரசியலும் புவிசார் கலாச்சாரமும்) என்னும் பெயரில் மூன்று நூலகளாக வெளியிடப்பட்டன. மற்ற புவிசார் அரசியல் கோட்பாட்டாளர்கள் தமது நாடுகள் எப்படி உலகில் ஆதிக்கம் செலுத்துவது என்பது பற்றிக் கவனம் செலுத்த இம்மானுவேல் வல்லரஸ்ரைன் மட்டும் வளர்ச்சியடைந்த நாடுகள் வளரச்சியடைந்து கொண்டிருக்கும் நாடுகளைச் சுரண்டுவது பற்றிக் கவனம் செலுத்தினார்.
மூன்றாம் அலைக் கோட்பாடு
புவிசார் அரசியலுக்கான மரபுவழிக் கோட்பாடுகளும் அதன் பின்னர் வந்த கோட்பாடுகளையும் தவிர்த்து முன்வைக்கப்பப்பட்டது "மூன்றாம அலைக் கோட்பாடு"
1. நாடுகளின் இறைமையை மதிக்க வேண்டும்
2. தேவை ஏற்படும் போது வலிய நாடுகள் மற்ற நாடுகள் மீது மென்வலு அழுத்தம் பாவிக்கலாம்
3. பன்னாட்டு உறவுகளுக்கான புதிய உலக ஒழுங்கு ஏற்படுத்துதல்
4. நாடுகளுக்கிடையிலான முரண்பாடுகளைத் தவிர்த்து உலகப் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.
மேற்காசியாவிலும் வட ஆபிரிக்காவிலும் அரபு வசந்தம் எழுச்சி, இஸ்லாமியத் தீவிரவாதத்திற்கு எதிரான அமெரிக்க படை நடவடிக்கைகள், உக்ரேனை இரசியா ஆக்கிரமித்தமை, தென் சீனக் கடலில் சீனா அதிகரித்த ஆதிக்கம் ஆகியவை நிலவிய சூழலில் மூன்றாம் அலைக் கோட்பாடு உருவாக்கப்பட்டது.
கொவிட்-19 தொற்று நோய்த்தாக்கத்தால் உலகப் பொருளாதாரமும் உலக நாடுகளிற்கு இடையிலான உறவுகளும் சீர் குலைந்துள்ள நிலையில் எந்த ஒரு கோட்பாடும் உலகப் பிரச்சனைகளுக்கு தீர்வாகாது.
முன்னைய கட்டுரையைக் காண இந்த இணைப்பில் சொடுக்கவும்:
புவிசார் அரசியல் கோட்பாடுகளின் தோற்றமும் மாற்றமும்