
அமெரிக்கா இலங்கையில் நடந்த போர்க்குற்றம் தொடர்பாக வெளியிட்ட அறிக்கையும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜீஎஸ்பி வர்த்தகச் சலுகை தொடர்ந்து கிடைக்குமா என்ற சந்தேகமும் கடந்த இரண்டு மாதங்களாக இலங்கை ஆட்சியாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பன்னாட்டு மட்டத்தில் இலங்கை பல சிக்கல்களை எதிர் கொள்ள வேண்டும் என்ற நிலை உருவானது. இலங்கை அரசு எதிர்பார்த்தது போல் ஹிந்து ராம் இலங்கை முகாமிற்கு கொடுத்த "நற்சான்றிதழ்" எந்தப் பலனையும் வழங்கவில்லை. இலங்கையின் இந்தச் சிக்கல் நிலையை இந்தியாவின் உதவியுடன் தீர்க்க இலங்கை முயன்றது. விளைவு ஒரு பன்னாடைக் கூட்டம் இலங்கைக்கு வந்து மஹிந்த ராஜபக்சேயிற்குப் பொன்னாடை போர்த்தியது. முகாமில் இருந்து மக்கள் விடுவிக்கப் பட்டனர். அவர்களில் சிலருக்கு ஐயாயிரம் ரூபா மட்டும் வழங்கப் பட்டது. பலர் முன்பின் தெரியாத ஊர்களில் வேண்டுமென்றே நள்ளிரவில் கொண்டுபோய் இறக்கப் பட்டனர். இவற்றை மீள் குடியேற்றம் என்று இலங்கை அரசு சொல்கிறது. ஆனால் உண்மையில் மக்கள் முகாம்களில் இருந்து வெளியேற்றப் படுகின்றனர்.
ஐக்கிய நாடுகளின் மனிதாபிமானத்திற்கான பிரதிச் செயலர் ஜோன்ஸ் ஹொல்ம்ஸ் அவர்களின் வருகை வேண்டுமென்று பிற்போடப் பட்டது. அவர் வருகைக்கு முன்னர் மாரிகாலத்தைக் கருத்தில் கொண்டு பலர் முகாம்களில் இருந்து வெளியேற்றப் பட்டனர்.
முகாம்களில் இருந்து மக்கள் வெளியேற்றப் பட்டமைக்கு மற்ற ஒரு காரணம் வரவிருக்கும் தேர்தலில் தமிழர் வாக்குகளைப் பெறுவது.
நேற்று ஜோன்ஸ் ஹொல்ம்ஸ் மீண்டும் "காட்சி முகாம்" ஆக இலங்கை அரசு வைத்திருக்கும் மெனிக் பாம் முகாமிற்கு சென்று பார்த்து விட்டு இலங்கை அரசை பாராட்டி அறிக்கை விட்டார் .
காட்சி முகாம் போலவே இலங்கை அரசு காட்சி மீள் குடியேற்றத் திட்டத்தையும் வைத்திருக்கிறது. அவை மன்னாரிலும் யாழ்ப்பாணத்திலும் ஏற்படுத்தப் பட்டுள்ளன. ஜோன்ஸ் ஹொல்ம்ஸ் அவற்றையும் பார்வையிட்டுப் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
ஜோன்ஸ் ஹொல்ம்ஸ் அவர்கள் இடம் பெயர்ந்த மக்களின் நிலைபற்றி பரிசோதனை(inspection) செய்ய வந்ததாகச் சொல்லப் படுகிறது. இது போன்ற நடவடிக்கைகளைப் பரிசோதனைகளைச் செய்பவர்கள் தாம் பரிசோதிப்பவற்றை
எழுமானத் தெரிவு ( random selection) மூலம் தெரிந்து பரிசோதனை செய்ய வேண்டும். ஆனால் ஜோன்ஸ் ஹொல்ம்ஸ் செய்வது பரிசோதனை அல்ல. அது ஒரு நெறிப்படுத்தப் பட்ட சுற்றுலா(guided tour). பொன்னாடை போர்க்க வந்த பன்னாடைகள்தான் அப்படிச் செய்கின்றன என்றால்
ஜோன்ஸ் ஹொல்ம்ஸ் கூட அப்படிச் செய்கிறாரே!
முகாம்களில் இருந்து பலரை வெளியேற்றி அவர்களை இலங்கை அரசு மீண்டும் கைது செய்து சிறைகளில் அடைத்துள்ளது. அப்படிச் செய்வது முகாம்களில் இருந்து வெளியேற்றப் படும் மக்களின் தொகையைக் கூட்டிக் காட்டும் தந்திரமே.
முகாம்களில் இருந்து வெளியேற்றப் பட்டு யாழ்ப்பாணத்தில் உறவினர்களுடன் வாழும் மக்களிடம் ஆரிய-சிங்களக் கூட்டமைப்பின் அடிவருடிகளாகச் செய்றபடும் குழுக்கள் மீண்டும் கைது செய்யப் படுவீர்கள் என்று மிரட்டிப் பணம் பறிக்கிறது. பணம் கொடுக்க மறுத்தவர்கள் மீண்டும் கைது செய்யப் படுதல் காணாமல் போதல் போன்றவை நடக்கின்றன. இலங்கையைப் பொறுத்த வரை காணமல் போதல் என்ற பத்த்திற்கு அர்த்தம் வேறு.
வன்னியை முழுமையாகக் கைப்பற்றிய இலங்கை இராணுவம் அங்கு முதலில் செய்த வேலை பௌத்த விகாரைகளையும் பாரிய சிறைச் சாலைகளையும் அங்கு அவசர அவசரமாகக் கட்டியமைதான்.
இப்போது மீள்குடியேற்றம் என்ற போர்வையில் வனனிமுகாம்களில் இருந்து வெளியேற்றப் படுபவர்கள் தேர்தலின் பின் கைது செய்யப் பட்டு மீண்டும் சிறையில் அடைக்கப் படுவார்கள்.
ஜீஎஸ்பீ வர்த்தகச் சலுகை இழக்கும் பட்சத்தில் இச்சிறைச் சாலகளுக்கு ஆடை உற்பத்தித் தொழில்கள் மாற்றப் பட்டு மிகக் குறைந்த கூலியில் அங்கு ஆடை உற்பத்திகள் செய்யப் படலாம்.