ஜப்பான் நாடு பல நெருக்கடிகளுக்கு இடையில் அகப்பட்டுள்ளது. பொருளாதார நெருக்கடி, கிழக்குச் சீனக் கடலில் சீனாவின் விரிவாக்கக் கொள்கையால் உருவான நெருக்கடி, வட கொரியாவின் படைவலுப் பெருக்க நெருக்கடி, ஜப்பானை ஒரு போர் புரியக் கூடிய அரசாக மாற்றும் தலைமை அமைச்சர் சின்சே அபேயின் திட்டத்துக்கு மக்களிடையே தோன்றியுள்ள எதிர்ப்பால் உருவாகியுள்ள நெருக்கடி என்பவை ஜப்பானிய அரசுக்குப் பெரும் சவால்களாக அமைந்துள்ளன. ஜப்பானின் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சரும் தற்போது பன்னாட்டுக் கேந்திரோபாயங்களுக்கான நிறுவனத்தின் தலைவருமான ஹிட்டோசி தனக்கா எப்படி சீனாவை கையாள்வது என்பதிலேயே ஜப்பானின் எதிர்காலம் இருக்கின்றது என்றார்.
குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கும் சீனா
கிழக்குச் சீனக் கடலில் உள்ள தீவுக்கூட்டத்திற்கு ஜப்பானும் சீனாவும் உரிமை கொண்டாடி வருகின்றன. மக்களற்ற இத்தீவுக் கூட்டங்களை ஜப்பானியர்கள் செங்காகு எனவும் சீனர்கள் டயாகு எனவும் அழைக்கின்றனர். 2016-ம் ஆண்டு ஓகஸ்ட் 5-ம் திகதி சீனாவின் 230 மீன்பிடிப் படகுகளும் 13 கரையோரப் பாதுகாப்புப் கப்பல்களும் செங்காகு/டயாகு தீவுக் கூட்டங்களில் இருந்து 12 கடல்மைல்களிலும் குறைந்த தொலைவு வரை சென்று மீன் பிடிப்பில் ஈடுபட்டன. இந்தத் தீவுக் கூட்டம் யாருக்கு சொந்தம் என்பதிலிரு நாடுகளும் முரண்பட்டுக் கொண்டிருக்கின்றன. இதற்கு இரண்டு மாதங்களிற்கு முன்னர் சீனாவின் கடற்படைக் கப்பல் ஒன்று ஜப்பானின் சக்கிஷீமாத் தீவுக்கு அண்மையாகச் சென்றது. 2010-ம் ஆண்டு சீனக் கப்பலும் ஜப்பானியக் கப்பலும் செங்காகு தீவிற்கு அண்மையாக முட்டி மோதிக் கொண்டன. 2016 ஜூலை இறுதியில் சீனா கிழக்குச் சீனக் கடலில் உள்ள தனது எரிவாயு மேடையில் ஒரு ரடாரைப் பொருத்தியமைக்கு சீனாவிடம் ஜப்பான் தனது கடும் ஆட்சேபனையைத் தெரிவித்திருந்தது.
ஜப்பானிய மக்களால் நெருக்கடி
ஜப்பானிடம் குறிப்பிடத்தக்க அளவிலான எந்த வளமும் இல்லை. தனக்குத் தேவையான முழு எரிபொருளையும் ஜப்பான் இறக்குமதி செய்கின்றது. பெரும்பாலான கனிம வளங்களை இறக்குமதி செய்கின்றது. இவை மத்திய தரைக்கடல், ஹோமஸ் நீரிணை, மலாக்கா நீரிணை, தென் சீனக் கடல் கிழக்குச் சீனக் கடல் ஆகியவற்றைக் கடந்தே வரவேண்டியிருக்கின்றது. இது ஒரு கேந்திரோபாய வலுவற்ற நிலையாகும். சினாவால் ஜப்பானிற்கான கடற்போக்குவரத்தின் பெரும் பகுதியைத் தடை செய்ய முடியும். அது ஜப்பானின் ஏற்றுமதியையும் இறக்குமதியையும் பெரிதும் பாதிக்கும். கிழக்குச் சீனக் கடலிலும் தென் சீனக் கடலிலும் சீனா அதிகரித்துக் கொண்டிருக்கும் ஆதிக்கம் அமெரிக்காவிற்குப் பிரச்சனைகளை மட்டும் கொடுக்கும் ஆனால் ஜப்பானின் இருப்பையே அச்சத்திற்கு உள்ளாக்கும். சீனாவும் அமெரிக்காவும் தமக்கிடையே உள்ள பிணக்குகளைத் தீர்த்து படைத்துறை மற்றும் பொருளாதாரத் துறைகளில் ஒத்துழைக்கத் தொடங்கினால் ஜப்பானின் நிலை பரிதாபத்திற்கு உள்ளாகலாம். அதைத் தவிர்க்க ஜப்பான் தனது பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு பெற்றே ஆக வேண்டும். அதற்கு ஜப்பான் தனது அரசியலமைப்பு யாப்பை மாற்றி ஒரு போர் புரியக் கூடிய நாடாக தன்னை உருவாக்க வேண்டும். ஆனால் ஜப்பானில் 52 விழுக்காட்டினர் அந்த மாற்றத்தை விரும்பவில்லை. தற்போது தலைமை அமைச்சர் சின்சே அபேயிற்கு பாராளமன்றத்தின் இரு அவைக்களிலும் அரசியலமைப்பு யாப்பை மாற்றக் கூடிய பெரும்பான்மை வலு இருக்கின்றது.
ஜப்பானியப் பேரரசரால் வந்த நெருக்கடி
ஜப்பானின் பேரரசர் அகிஹிட்டோ , தான் முடி துறக்க விரும்புவதாகக் கருத்து வெளியிட்டது ஜப்பானின் அரசியல் சூழ்நிலையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியைச் சுட்டிக் காட்டுகின்றது. பேரரசரின் உரை ஒளிபரப்பானவுடன், அவரின் விருப்பங்களை கவனத்துடன் கருத்தில் கொள்வதாக தலைமை அமைச்சர் சின்சே அபே கூறினார். ஜப்பானின் அரசியலமைப்பு யாப்பை மாற்றி ஜப்பானை அமைதியான மக்களாட்சி என்ற நிலையில் இருந்து விலக்கி போருக்குத் தயாரான அரசாக்குவதற்கு நாட்டு மக்களிடையே உருவாகி உள்ள எதிர்ப்பு பேரரசரை சங்கடத்திற்கு உள்ளாக்கியுள்ளது. 2016 ஆகஸ்ட் மாதம் எட்டாம் திகதி தொலைக்காட்சியில் தோன்றி ஜப்பானியப் பேரரசர் நாட்டு மக்களுக்கான உரை ஒன்றை ஆற்றினார். அவருடைய முதிய வயதும், உடல் நலமின்மையும், அரசப் பணிகள் முழுவதையும் நிறைவேற்ற இயலாமல் போக செய்யுமென கவலையடைவதாக தனது உரையில் 83 வயதான பேரரசர் குறிப்பிட்டிருந்தார். ஜப்பான் ஒரு போர் புரியக் கூடிய நாடாக மாற்றப் படுவதை பேரரசர் விரும்பவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது. ஜப்பானியப் பேரரசர் அரசியலில் தலையிட முடியாது. ஆனால் அவர் தனது முடியைத் துறப்பது தலைமை அமைச்சர் அபேயிற்கு நெருக்கடியைக் கொடுக்கக் கூடியதே.
அமெரிக்கா திணித்த அரசியலமைப்பு யாப்பு
இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பானைக் கைப்பற்றிய அமெரிக்கா அங்கு ஆட்சியில் இருந்தவர்களை முற்றாக ஒழித்துக் கட்ட விரும்பவில்லை. ஜேர்மனியில் நாஜிகளை ஒழித்துக் கட்டிய அமெரிக்கா, உலக வரலாற்றின் மிக மோசமான போர் குற்றவாளிகளான அப்போதைய ஜப்பானிய ஆட்சியாளர்கள் சோவியத் ஒன்றியத்தின் பக்கம் சேராமல் தடுப்பதில் அதிக அக்கறை காட்டியது. இரண்டாம் உலகப் போரின் பின்னர் ஏழு ஆண்டுகள் ஜப்பானைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த அமெரிக்கா ஜப்பானுக்கான அரசியலமைப்பு யாப்பை 1947இல் உருவாக்கியது. ஜப்பான் எந்த ஒரு நாட்டின் மீது படையெடுக்க முடியாமலும் ஜப்பான் ஒரு பாதுகாப்புக்கு மட்டுமான ஒரு படைத்துறையை மட்டும் கொண்டிருக்கலாம் தாக்குதலுக்கான படைத்துறையைக் கொண்டிருக்க முடியாமாலும் அரசியலமைப்பு யாப்பு வரையப்பட்டது. ஐக்கிய அமெரிக்காவால் ஜப்பான் மீது நிர்ப்பந்திகப் பட்ட போர் புரிய முடியாத அரசியலமைப்பு யாப்பையிட்டு அமெரிக்காவே கொரியப் போரின் போது கவலையடைந்தது. கொரியா பொதுவுடமைவாதிகளின் பிடியில் போவதை இரண்டு நாடுகளுமே விர்ரும்பவில்லை. ஆனால் தனது அரசியலமைப்பு யாப்பை சுட்டிக் காட்டி கொரியாவிலும் வியட்னாமிலும் அமெரிக்காவுடன் இணைந்து போர் செய்வதை ஜப்பான் தவிர்த்துக் கொண்டது.
பாதுகாப்புப் படையணி ஆனால் காரம் பெரியது
ஒரு பாதுகாப்புக்கு மட்டுமான படையணி என்னும் பெயரில் ஜப்பான் ஏற்கனவே உலகிலேயே மிகச்சிறந்த படைத்துறையைக் கொண்டுள்ளது. அமெரிக்காவிடமிருந்து வாங்கிய பல நவீன போர் விமானங்கள் ஜப்பானிடம் உள்ளன. இஜுமோ ( Izumo) என்னும் பெயரில் ஜப்பான் ஒரு உலங்கு வானூர்தி தாங்கிக் கப்பலை வைத்திருக்கின்றது. ஜப்பான் ஒரு விமானம் தாங்கிக் கப்பலை வைத்திருக்க முடியாது. ஆனால் ஜப்பானின் இஜுமோ (Izumo) கப்பலில் ஐக்கிய அமெரிக்கா தற்போது உருவாக்கியுள்ள F-35 போர் விமானங்கள் ஓடு பாதை தேவையில்லாமல் உலங்கு வானூர்தி போல் எழும்பிப் பறக்கக் கூடியவை. அவற்றை அல்லது வேறு செங்குத்தாக எழும்பிப் பறக்கக் கூடிய போர் விமானங்களை ஜப்பான் தனது
இஜுமோவில் விரைவில் பாவனைக்கு உட்படுத்தி ஒரு விமானம் தாங்கிக் கப்பலாக எளிதாகவும் விரைவாகவும் மாற்ற முடியும். ஜப்பானின் சொரியு வகையைச் சார்ந்த டீசல் மின்வலு நீர் மூழ்கிக்கப்பல்கள் (Soryu-class Diesel Electric Submarines) உலகிலேயே அணுவலுவில் இயங்காத நீர்மூழ்கிக்க் கப்பல்களில் முதன்மையானவையாகும். ஜப்பானின் F-15 போர் விமானங்களும் எதிரி நாடுகளுக்கு அச்சமூட்டக் கூடியவை. அத்துடன் ஜப்பானிடம் இரண்டு வழிகாட்டல் ஏவுகணை தாங்கி நாசகாரிக்கப்பல்களும் இருக்கின்றன.
அமெரிக்காவில் தங்கியிருக்கும் ஜப்பான்
உலகப் படைத் துறை தரவரிசையில் சீனா மூன்றாம் இடத்திலும் ஜப்பான் ஏழாம் இடத்திலும் இருக்க்கின்றன. மக்கள் தொகை அடைப்படையில் சீனா ஜப்பானிலும் பார்க்கப் பத்து மடங்கு பெரியது. ஜப்பானிடம் 250,000 படையினரும் சீனாவிடம் 2,335,000 படையினரும் இருக்கின்றனர். ஜப்பானிடம் 287 போர் விமானங்களும் சீனாவிடம் 1385 போர் விமானங்களும் இருக்கின்றன. ஜப்பானிடம் 678 தாங்கிகளும் சீனாவிடம் 9150 தாங்கிகளும் இருக்கின்றன. ஜப்பானியப் படை வலுவிலும் பார்க்கச் சீனப் படைவலு பல மடங்கானதாகும். இதனால் ஜப்பான் தனது பாதுகப்பிற்கு அமெரிக்காவில் பெரிதும் தங்கியிருக்கின்றது. ஜப்பான் தனது படைவலுவைப் பெருக்குவதையும் ஒரு போர் புரியக் கூடிய நாடாக மாறுவதையும் அமெரிக்கா பெரிதும் விரும்புகின்றது. அதன் மூலம் ஜப்பானுக்கு மேலும் படைக்கலன்களை அமெரிக்காவால் விற்க முடியும் என்பது மட்டுமல்ல ஒரு படைவலு மிக்க ஜப்பான் ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் அமெரிக்காவுடன் சிறப்பாக ஒத்துழைக்கவும் முடியும். ஆனால் ஜப்பானால் பெரிதும் பாதிக்கப் பட்ட அயல் நாடுகள் ஜப்பான் படைவலுவில் மீள் எழுச்சி பெறாமல் தொடர்ந்தும் அமெரிக்காவில் தங்கி இருப்பதையே பெரிதும் விரும்புகின்றன. ஜப்பானிய பேரரசின் அடக்கு முறை மிகுந்த கடந்தகால ஆக்கிரமிப்புக்கள் அதற்கான காரணமாகும். இதில் பெரும் கரிசனை கொண்டிருப்பது அமெரிக்காவுடன் நெருங்கிய உறவைக் கொண்டுள்ள தென் கொரியாவே. ஐக்கிய அமெரிக்காவின் அதிபராக டொனால்ட் ட்ரம்ப் தேர்ந்தெடுக்கப் பட்டால் ஜப்பான் பெரும் பாதுகாப்பு நெருக்கடியைச் சந்திக்க வேண்டியிருக்கும். 1960 -ம் ஆண்டு ஐக்கிய அமெரிக்காவும் ஜப்பானும் பாதுகாப்பு உடன்படைக்கை ஒன்றைச் செய்து கொண்டன. ஜப்பான் 2015-ம் ஆண்டு அமெரிக்கப் படையினர் ஜப்பானியப் பாதுகாப்பை உறுதிசெய்வதற்காக அமெரிக்காவிற்கு 1.7 பில்லியன் டொலர்களை வழங்கியிருந்தது. ஜப்பான் ஆண்டு தோறும் அமெரிக்காவிற்குச் செலுத்தும் தொகையை அதிகரிக்க வேண்டும் என்றார் டொனால்ட் ட்ரம்ப். ஜப்பானில் ஐம்பதினாயிரம் அமெரிக்கப் படையினர் நிலைகொண்டுள்ளனர். பிரித்தானியாவும் ஜப்பானும் 2013-ம் ஆன்டு பாதுகாப்பு உபகரண ஒப்பந்தம் செய்துள்ளன. 02/12/2013 ஜப்பானியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் பிரித்தானியக் கடற்படைத் தளபதியை சந்தித்து ஜப்பனின் மீது ஒருதலைப்பட்சமான தாக்குதல் நடக்கும் போது பிரிதானியா ஜப்பானைப் பாதுகாக்க களத்தில் இறங்கும் என பிரித்தானியக் கடற்படைத் தளபதி உறுதியளித்தார். ஜப்பான் ஒரு முழுமையான சுதந்திர நாடாக மாறுவதற்கு டொனால் ட்ரம்ப் போன்றவர்கள் அமெரிக்காவிற்கு அதிபராக வேண்டும் என ஜப்பானின் தீவிர வலது சாரிகளும் தீவிர இடதுசாரிகளும் நம்புகின்றனர். அமெரிக்காவால் புறக்கணிக்கப் படும் போதுதான் ஜப்பான் படைத்துறையில் தன்னைத் தானே பாதுகாக்க வேண்டிய அவசியத்தை ஜப்பானிய மக்கள் முழுமையாக உணருவார்கள் என்பது அவர்களின் நிலைப்பாடு.
வட கொரிய அச்சுறுத்தல் நெருக்கடி
அணுப்படைக்கலன்களை தன் வசம் வைத்திருக்கும் வட கொரியா தனது ஏவுகணைகளையும் மேம்படுத்தி வருகின்றது. 2016 ஓகஸ்ட் மாத ஆரம்பதில் வட கொரியாவின் எறியிய ஏவுகணைகள் ( Ballistic missiles) 1000கிலோ மீட்டர் அல்லது 620 மைல்கள் தாண்டி ஜப்பானியக் கடல் எல்லைக்குள் சென்று விழுந்தமை ஜப்பானை கரிசனை கொள்ள வைத்துள்ளது. உலக வரலாற்றில் அணுக்குண்டால் தாக்கப்பட்ட ஒரே ஒரு நாடான ஜப்பான் வட கொரியாவின் அணுக்குண்டு வீச்சு எல்லைக்குள் இருப்பது ஜப்பானிய மக்களுக்கு மிகவும் அச்ச மூட்டக் கூடிய ஒன்றாகும். இந்த ஏவுகணைப் பிரயோகத்தை சின்சே அபே ஒரு மன்னிக்க முடியாத வன்முறை நடவடிக்கை என்றார்.
பொருளாதார நெருக்கடி
குறைந்த பிறப்பு விகிதாசாரமும் மிகக் குறைந்த குடிவரவும் கொண்ட ஜப்பானின் மக்கள் தொகை அடுத்த நாற்பது ஆண்டுகளில் மூன்று கோடிகளால் குறையவிருக்கின்றது. ஜப்பானில் இளையோர் தொகை குறைந்து வயோதிபர் தொகை அதிகரித்துக் கொண்டும் போகின்றது. அது ஜப்பானில் பொருளாதார நெருக்கடியையும் கொடுக்கவிருக்கின்றது. ஜப்பானியப் பொருளாதாரத்தினுள் ஜப்பான் செலுத்திய பல ரில்லியன் டொலர்கள் போதிய பொருளாதார வளர்ச்சியைக் கொண்டு வரவில்லை. ஜப்பானியப் பணவீக்கத்தை இரண்டு விழுக்காட்டிற்கு உயர்த்தும் முயற்ச்சியும் வெற்றியளிக்கவில்லை. ஜப்பானியப் பொருளாதாரக் கட்டமைப்பில் சரியான மாற்றத்தையும் தலைமை அமைச்சர் சின்சே அபேயால் கொண்டு வரமுடியவில்லை. அபே ஜப்பானிய நிறுவனங்களை ஊழியர்களுக்கான ஊதியத்தை அதிகரிக்கும்படி வேண்டு கோள் விடுத்து ஜப்பானிய கூட்டாண்மை வரியை(corporation tax) 32இல் இருந்து 30 விழுக்காடாகக் குறைத்தார். ஜப்பானியக் கடன் பளுவும் அதன் மொத்தத் தேசிய உற்பத்தியின் 250 விழுக்காடாக உள்ளது.2016-ம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் ஜாப்பானின் தேசிய உற்பத்தி வளர்ச்சி ஏதும் அடையவில்லை. ஆண்டு அடிப்படையில் 0.2 விழுக்காடு மட்டுமே வளர்ச்சி அடைந்துள்ளது. இது திட்டமிட்டிருந்த 0.7விழுக்காட்டிலும் பார்க்கக் குறைவானதே. பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகும் முடிவை எடுத்தவுடன் உலகச் சந்தையில் ஜப்பானிய நாணமான யென்னின் மதிப்பு அதிகரித்து. அதனால் ஜப்பானின் ஏற்றுமதி பாதிக்கப் பட்டுள்ளது.
பன்முகப்பட்ட ஜப்பானின் நெருக்கடிகளுக்கு உடனடித் தீர்வுகள் இல்லை.
Monday, 15 August 2016
Subscribe to:
Posts (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
பிரபாகரன் கொல்லப் பட்டு விட்டாராம். அவரது உடல் கண்டு எடுக்கப் பட்டுள்ளது. இலங்கைத் தொலைக் காட்சியில் காட்டப் பட்ட படம் இரண்டாவதாக உள்ளது. அத...