Monday 24 February 2020

உலக ஆதிக்கமும் 5G அலைக்கற்றையும்


சீனாவின் 5ஜீ அலைக்கற்றை உலகெங்கும் பாவிக்கப் பட்டால் உலக ஒழுங்கு குலைக்கப்படும், சீனா உலகெங்கும் உளவு பார்க்கும், சீனா உலகெங்கும் உள்ள விஞ்ஞான தொழில்நுட்ப தகவல்களையும் தொழிற்றுறை இரகசியங்களையும் திருடும், சீனா உலகில் ஆதிக்கம் செலுத்தும் என்ற குற்றச்சாட்டு அமெரிக்காவின் பாதுகாப்புத் துறையைச் சேர்ந்த பல்வேறு பிரிவுகளாலும் அதிகாரிகளாலும் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே ஆண்டு தோறும் அரை ரில்லியன் டொலர் பெறுமதியான தொழில்நுட்பத் தகவல் திருட்டுக்களை அமெரிக்காவில் இருந்து சீனா செய்வதாக அமெரிக்கா குற்றம் சாட்டுகின்றது. அலைக்கற்றைச் செயற்பாட்டின் மூலம் 4.7மில்லியன் வேலைவாய்ப்பும் 47பில்லியன் வருமானமும் அமெரிக்காவிற்கு கிடைக்கின்றது. சீனாவின் ஹுவாவே (ஹுவாய்) நிறுவனம் தமது தொழில்நுட்பங்களைத் திருடியதாக அமெரிக்காவின் கூகிள், கோல்கொம் ஆகிய நிறுவனங்கள் பகிரங்கக் குற்றச் சாட்டுக்களை முன்வைத்தன.

5ஜீ சீனாவை பொருளாதாரத்தில் உலகின் முதன்மை நாடாக்கும்
தற்போது பல நாடுகளிலும் பாவிக்கப்படும் 4ஜீ (நான்காம் தலைமுறை) என்பது Long Term Evolution (LTE) என்பதாகும். அது அது 3ஜீ இலும் பார்க்க பத்து மடங்கு வேகமாக தகவற் பரிமாற்றம் செய்யக் கூடியது. 4G அலைக்கற்றையில் பாவிக்கப்படும் LTE தொழில்நுடம் ஒரு செக்கண்டிற்கு 100MB தகவலைப்பரிமாறும். Wi-Fi மூலம் 11MB தகவலை மட்டும் பரிமாறும். இந்த தொழில்நுட்பத்தில் அடுத்த நிலை வளர்ச்சிதான் 5ஜீ தொழில்நுட்பம். 5ஜீ அலைக்கற்றை 4ஜீ அலைக்கற்றையிலும் நூறு மடங்கு வேகத்தில் செயற்படக் கூடியது. 4ஜீ தொழில்நுட்பமுள்ள கைப்பேசியில் இரண்டு மணித்தியாலத் திரைப்படத்தை தரவிறக்கம் செய்ய ஏழு நிமிடங்கள் எடுக்கும். 5ஜீ தொழில்நுட்பம் உள்ள கைப்பேசிக்கு 6 செக்கன்கள் மட்டுமே எடுக்கும். கைப்பேசிகளில் மட்டுமல்ல தானாக இயங்கு மகிழூந்துகள், ஆளில்லாப் போர்விமானங்கள் போன்றவற்றிலும் 5ஜீ பாவிக்கப்படும். ஒரு நாட்டில் இருக்கும் மருத்துவர்கள் இன்னொரு நாட்டில் உள்ள நோயாளிகளைப் பரிசோதிப்பதையும் சிகிச்சை செய்வதையும் 5ஜீ தொழில்நுட்பம் மேலும் இலகுவானதாகவும் சிறப்பானதாகவும் மாற்றும். போக்குவரத்து, தொழிற்றுறை உற்பத்தி, வர்த்தகம் போர்முறைமை போன்றவற்றை இலத்திரனியல் மயப்படுத்தும் நான்காம் தொழிற்புரட்சியை 5ஜீ தொழில்நுட்பம் இலகுவாகவும் துரிதமாகவும் சாத்தியமானதாக்கும். கணினிகள் தாமகச் சிந்திந்து செயற்படும் செயற்கை நுண்ணறிவுப் பாவனைக்கும் 5ஜீ தொழில்நுட்பம் வழிவகுக்கும். உதாரணத்திற்கு ஆளே இல்லாத கடையில் ஒருவர் போய் தனக்குத் தேவையான பொருட்களை எடுத்து வீடு வரலாம். அதற்குரிய பணத்தை உங்கள் வங்கிக் கணக்கில் இருந்து அந்தக் கடைக்கு உரியவர் எடுத்துக் கொள்வார். உங்கள் முகத்தை வைத்தும் நீங்கள் வாங்கும் பொருளில் உள்ள இலத்திரனியல் குறியீடுகளை வைத்தும் இவை செய்யப்படும். 5ஜீ தொழில்நுட்பத்தில் முன்னோடியாகச் செயற்படும் நாடு உலகப் பொருளாதாரத்தில் முன்னோடியாகச் செயற்படும் என நம்பப்படுகின்றது.


5ஜீ தொழில்நுட்பத்தில் சீனா முன்னணி.
5ஜீ தொழில்நுட்பத்தை உருவாக்க அமெரிக்கா, தென் கொரியா, ஜப்பான் சீனா ஆகிய நாடுகளின் பல நிறுவனங்கள் போட்டி போட்டன. நாடுகளின்  ஆனால் சீனாவின் ஹுவாவே நிறுவனம் முந்திக் கொண்டு விட்டது. 2015-ம் ஆண்டில் இருந்து அமெரிக்கா 5ஜீ செலவு செய்த தொகையிலும் பார்க்க சீனா 24மில்லியன் டொலர்கள் அதிகமாகச் செலவு செய்தது. 5ஜீ அலைக்கற்றைகளுக்கான 350,000 தொடர்புக் கோபுரங்கள் சீனாவில் உருவாக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவில் 30,000மட்டுமே உள்ளன. உலகிலேயே அதிக அளவு கைப்பேசியூடான கொடுப்பனவுகள் சீனாவில் நடக்கின்றன. சீனாவின் WeChat Pay, Alipay ஆகியவை சீனாவின் கொடுப்பனவுகளில் ஆதிக்கம் செலுத்துகின்றன. அங்கு Paypal, Apple Pay போன்றவை பயனில் இருந்தாலும் குறைந்த அளவே பாவிக்கப்படுகின்றன. சீனாவில் கடன் அட்டைகள் பாவனை மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைவானது. அமெரிக்காவிலும் பார்க்க நான்கில் ஒரு பங்கு கடன் அட்டைகள் சீனாவில் பாவிக்கப்படுகின்றன. இப்போது கைப்பேசியூடான கொடுப்பனவுகளுக்குப் பதிலாக முகத்தை இனங்காணும் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகின்றது.

5ஜீ பாவனை
2019-ம் ஆண்டு அப்பிள் நிறுவனம் வெளியிட்ட ஐ-ஃபோன்-11இல் 5ஜீ அலைக்கற்றைகள் பாவிக்கும் வசதிகள் இல்லை ஆனால் 1) Samsung Galaxy S10, 2)OnePlus 7 Pro, 3)Huawei Mate X, 4)Huawei Mate 30 Pro 5) Oppo Reno, LG V50 ThinQ, 6) Xiaomi Mi Mix 3 ஆகிய கைப்பேசிகளில் 5ஜீ அலைக்கற்றை பாவிக்கக் கூடிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டன. 2020இன் பிற்பகுதியில் வெளிவரவிருக்கும் ஐ-ஃபோன்களில் 5ஜீ தொழில் நுட்பம் இருக்கும். 2019இல் 5ஜீ பரவலான பாவனையில் இருக்காது என்ற உறுதியான நம்பிக்கையிலேயே அப்பிள் நிறுவனம் 5ஜீ தொழில்நுட்பத்தைப்பற்றி கரிசனை கொள்ளவில்லை. தற்போது வளர்நிலையில் உள்ள செயற்கை நுண்ணறிவு(AI), பகவக்கணினியம் (quantum computing), குறியீட்டுவரைபு (cryptography), முகமினங்காணல் (facial recognition) போன்ற தொழில்நுட்பங்களை கைப்பேசிகளில் சிறப்பாகச் பிரயோகிக்க 5ஜீ தொழில்நுட்பம் அவசியம்.

பட்டுப்பாதையைப் பளபளக்கவைக்கும் 5ஜீ
சீனாவின் ஒரு ரில்லியன் டொலர் பெறுமதியான புதியபட்டுப்பாதை  (belt-and-road initiative-BRI) திட்டத்திற்கு 5ஜீ தொழில்நுட்ப வளர்ச்சி சிறந்த கவர்ச்சிகரமான அம்சமாக அமையும். BRIயும் 5ஜீயும் 2049-ம் ஆண்டு பொதுவுடமை அரசின் நூற்றாண்டு நிறவு நாள் வரும் போது சீனாவை உலகின் முதற்தர நாடாக்கும் திட்டத்திற்கு சிறந்த பங்களிப்பைச் செய்யும். பட்டுப்பாதையில் எண்மியப்பாதை (Digital Road) என்பதும் ஒரு முக்கிய அம்சமாகும்.  செய்மதிகள் மூலம் செயற்படும் போக்குவரத்து வழிகாட்டித் தொழில்நுட்பமான Global Positioning System (GPS)ஐ இந்தியா உருவாக்கிய பின்னரே சீனா உருவாக்கியது.  ஆனால் 5ஜீ தொழில்நுட்பத்தால் சீனாவின் GPS உலகின் முதற்றரமானதாக மாறும்.

சீனாவின் சட்டத்தை வைத்து அமெரிக்கா போடும் கட்டம்
சீனாவை 5ஜீ தொழில்நுட்பத்தில் முன்னணிக்கு கொண்டு வந்த ஹுவாவே (ஹுவாய்) நிறுவனம் 1987-ம் ஆண்டு சீன படையில் பொறியியலாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற ரென் ஜென்ஃபே என்பவரால் 1987-ம் ஆண்டு ஒரு தனியார் நிறுவனமாக ஆரம்பிக்கப்பட்டது. தற்போது 140,000 பணியாட்களைக் கொண்ட அந்த நிறுவனத்தில் 46% பேர் ஆய்வு ஆராய்ச்சிப் பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர். அதன் ஆய்வு கூடங்கள் கனடா, துருக்கி, அயர்லாந்து, சுவீடன், இரசியா எனப் பலநாடுகளில் வியாபித்துள்ளது. உலகின் 140 நாடுகளில் ஹுவாவேயின் உற்பத்திப் பொருட்கள் பாவனையில் உள்ளன. சீன நிறுவனங்கள் தம்மிடம் உள்ள தகவல்களை சீன உளவுத்துறையுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற சட்டம் சீனாவில் உள்ளது. அதை அடிப்படையாக வைத்தே அமெரிக்கா ஹுவாவே உருவாக்கிய 5ஜீ தொழில்நுட்பத்திற்கு எதிரான பரப்புரையைச் செய்கின்றது. அமெரிக்காவில் ஹுவாவேயைத் தடைசெய்யும் அரச ஆணையை அதிபர் டிரம்ப் பிறப்பித்தார். ஈரானுக்கு எதிரான பொருளாதாரத் தடையில் சீனா ஒத்துழைக்காமைக்குப் பழிவாங்கவே ஹுவாவேயிற்கு எதிராக டிரம்ப் செயற்படுகின்றார் எனவும் குற்றச்சாட்டப்படுகின்றது. Facebook, Apple, Amazon, Netflix, Google ஆகிய இலத்திரனியல் துறை நிறுவனங்களின் உலக ஆதிக்கத்தை சீனாவின் 5ஜீ தொழில்நுட்ப வளர்ச்சி இல்லாமல் செய்துவிடும் என்ற அச்சத்திலேயே ஹுவாவேயிற்கு எதிராக அமெரிக்கா நடவடிக்கை எடுக்கின்றது என்ற குற்றச் சாட்டும் உண்டு. ஹுவாவேயுடன் வர்த்தகம் செய்யும் நிறுவனங்கள் மீதும் அமெரிக்கா பொருளாதாரத் தடை விதிக்கும் எனவும் மிரட்டப்படுகின்றது.

அச்சப்பட வேண்டிய இந்தியா அச்சப்படவில்லை.
சீனாவின் ஹுவாவே நிறுவனத்தின் ஐந்தாம் தலைமுறை அலைக்கற்றை வரிசையை 2020-ம் ஆண்டின் ஆரம்ப நிலைப்படி ஒஸ்ரேலியா, நியூசிலாந்து, ஜப்பான், தைவான், ஐக்கிய அமெரிக்கா ஆகியவை தமது நாட்டில் உள்ள கைப்பேசி நிறுவனங்கள் சீனாவின் ஐந்தாம் தலைமுறை அலைக்கற்றை பாவிக்கப்படுவதை தடைசெய்திருந்தன. அமெரிக்காவின் பல நிர்ப்பந்தங்களுக்கு இடையிலும் பிரித்தானியா சீனாவின் 5ஜீ அலைக்கற்றையை மட்டுப்படுத்தப் பட்ட அளவில் தமது நாட்டில் பாவிப்பதற்கு அனுமதி செய்வதாக முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கும் பிரித்தானியத் தலைமை அமைச்சர் பொறிஸ் ஜோன்சனுக்கும் இடையில் நடந்த உரையாடல் சூடான விவாதமாக மாறி டிரம்ப் சினத்துடன் தொலைபேசியைத் துண்டித்ததாகச் செய்திகள் வெளிவந்திருந்தன. பிரித்தானிய நிபுணர்கள் செய்த ஆய்வின் படி சீனாவின் 5ஜீ அலைக்கற்றையைப் பாவிப்பதால் ஏற்படும் ஆபத்து சமாளிக்கக் கூடியது. சீனாவின் மோசமான அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கும் இந்தியாவில் 5ஜி ஸ்பெக்ட்ரம் சேவை, பரிட்சார்த்த முறையில் துவங்கப்படும் என்று தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் 2019-ம் ஆண்டின் இறுதியில் தெரிவித்தார்.

ஹைப்பர்சோனிக் படைக்கலன்களும் 5ஜீயும்
ஒலியின் வேகத்திலும் பார்க்க ஐந்து மடங்கு வேகத்தில் பாயக் கூடிய படைக்கலன்கள் ஹைப்பர்சோனிக் படைக்கலன்கள் எனப்படும். இரசியா, சீனா, அமெரிக்கா, பிரான்ஸ் ஆகிய நாடுகள் இதில் முன்னணியில் உள்ளன. இரசியாவிடம் ஒலியிலும் பார்க்க 20 மடங்கு வேகத்தில் பறக்கும் ஏவுகணைகள் உள்ளன. அவற்றை உரிய பாதையில் செலுத்துவதற்கு மிகத்துரிதமான தகவல் பரிமாற்றம் அவசியம். அசையும் இலக்குகளை நோக்கிச் செலுத்தப்படும். ஹைப்பர்சோனிக் ஏவுகணைக்கு எதிரான நடவடிக்கைகளை ஒரு நிமிடத்திலும் குறைவான நேரத்தில் செய்து முடிக்க வேண்டும். அதற்கு 5ஜீ தொழில்நுட்பமும் செயற்கை நுண்ணறிவும் இணைக்கப்பட வேண்டும். அப்போதே தாக்க வரும் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்க முடியும். ஹைப்பர்சோனிக் ஏவுகணையை ஏவுபவர்க்கும் ஏவப்படுபவர்க்கும் 5ஜீ அவசியம்.

இரசிய இரகசியங்கள்
2018-ம் ஆண்டு இரசியாவில் நடந்த உலகக் காற்பந்தாட்டப் போட்டியில் சீனாவின் 5ஜீ தொழில்நுட்பம் பாவிக்கப்பட்டது. இரசியாவில் சீனாவின் ஹுவாவே நிறுவனம் தனது 5ஜீ அலைக்கற்றையின் பரீட்சார்த்த சேவையை 2019 செப்டம்பரில் ஆரம்பித்துள்ளது. இரசியாவின் குடிமக்கள் கணக்கெடுப்பைச் செய்வதற்கு 360,000 பட்டிகைக் கணினிகளில் (Tablets) சீன 5ஜீ இணைக்கப்பட்டது. இரசிய இரகசியங்களை சீனா திருடமாட்டாதா என இரசிய நிபுணர்களிடம் அமெரிக்க ஊடகர்கள் கேள்வி எழுப்பினர். 2018-ம் ஆண்டில் 27,000 இணையவெளி ஊடுருவல்கள் இரசியாமீது செய்யப்பட்ட பின்னர் இரசியா தன்னை முழுமையாக பாதுகாத்துக் கொண்டுள்ளது; அதன் இரகசியங்களை இனியாரும் திருட முடியாது என்பது அவர்களின் பதில்.

அமெரிக்கா அகற்றப்பட வேண்டிய தலைவன் என்பதும் சீனா நம்பமுடியாத தோழன் என்பதும் உண்மையே. இந்த இரு பெரிய அண்ணன்களுக்கு இடையிலான போட்டியில் தம்பிகளின் தலைக்கு ஆபத்து.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...