Showing posts with label உலகமயமாதல். Show all posts
Showing posts with label உலகமயமாதல். Show all posts

Monday, 30 March 2020

உலகமயமாதலும் இணைபிரித்தலும் (Decoupling)



மகாநதி திரைப்படத்தின் இறுதிக் கட்டத்தில் கதாநாயகனும் வில்லனும் உயர் மாடி ஒன்றில்மோதிய போது இருவரின் கைகளும் சங்கிலியால் பிணைக்கப்பட்டிருக்கும். வில்லன் சண்டையில் வில்லன் மொட்டை மாடியில் இருந்து சறுக்கி விழுந்து அந்தச் சங்கிலியில் தொங்கிக் கொண்டிருப்பான். அந்த இடத்திற்கு காவற்துறையினர் வந்து கொண்டிருப்பர். அவர்கள் வந்து வில்லைனைக் காப்பாற்ற முன்னர் அவனைக் கொல்ல கதாநாயகன் தன் கையை வெட்டி வில்லனை உயரத்தில் இருந்து விழச் செய்து கொல்வார். உலகமயமாதல் அதிகரித்த போது வல்லரசு நாடுகள்கூட ஒன்றின் மீது ஒன்று அளவிற்கு அதிகமாகத் தங்கியிருப்பது வேண்டத் தகாத ஒன்றாகி விட்டது. இதன் ஆபத்து கொரோனாநச்சுக்கிருமி உலகப் போக்குவரத்தை துண்டித்த போது ஏற்பட்ட பொருளாதார அதிர்வால் உணரப்பட்டுள்ளது.


உலகமயாக்கல்
உலகமயமாக்கல் என்பது நாடுகளின் பொருளாதாரங்களையும் கலாச்சாரங்களையும் அதிகம் ஒன்றிணைத்து உலக வர்த்தகத்தையும் மூலதனப் பரம்பலையும் தொழில்நுட்பப்பகிர்வையும் அதிகரிப்பதாகும். உலகமயமாக்கல் உலகச்சந்தையை திறந்து விட்டது; உலக விநியோக வலையமைப்பை உருவாக்கியது; அடம் சிமித் என்னும் பழம் பெரும் பொருளியலாளரின் உழைப்புப்பகிர்வு, தனித்திறனுருவாக்கல் ஆகியவற்றிற்கு வழிவகுத்தது. உலக நாடுகளின் மொத்தத் தேசிய உற்பத்தியில் ஏற்றுமதி 1960-ம் ஆண்டு 12விழுக்காடாக இருந்தது. உலகமயமாக்கலின் பின்னர் அது 30விழுக்காடாக உயர்ந்தது. ஒரு உற்பத்திப் பொருளின் பாகங்கள் பல நாடுகளில் இப்போது உற்பத்தி செய்யப்படுகின்றது. அதனால் ஒரு பொருளின் உற்பத்தி பல நாடுகளில் தங்கியிக்கும் நிலை ஏற்பட்டது. ஒரு நாட்டில் ஏற்படும் பிரச்சனை உற்பத்தியைப் பாதிக்கச் செய்கின்றது. கோவிட்-19 தொற்று நோயால் ஒரு நாட்டில் தொழிற்சாலைகள் மூடப்பட்டபோது பல நாடுகளின் உற்பத்திகள் பாதிப்புக்கு உள்ளாகின. பல நாடுகள் மூச்சுக்கவசங்களின் ஏற்றுமதியைத் தடை செய்தமை உலகமயமாக்கல் கொள்கைக்கு எதிரானவையாக குற்றம் சாட்டப்பட்டன. ஜேர்மனி உருவாக்கவிருக்கும் கோவிட்-19 தொற்று நோய்த் தடுப்பு மருந்து முழுவதையும் அமெரிக்கா வாங்க முற்பட்ட போது ஜேர்மன் அரசு தலையிட்டு அதைத் தடுத்ததும் உலமயமாக்கல் கொள்கைக்கு எதிரானதே.

சீனாவும் உலகமயமாதலும்
சீனா தனது பொருளாதாரத்தைச் சூழும் ஆபத்தை 1979இல் உணர்ந்து கொண்டு செயற்படத் தொடங்கினாலும் கணிசமான பொருளாதாரச் சீர்திருத்தத்தை 1989- ம் ஆண்டு ஏற்பட்ட தினமன் சதுக்க நெருக்கடிக்குப் பின்னரே செய்யத் தொடங்கியது. சீனா தனது நாட்டு இளையோருக்கு வேலை வாய்ப்பளிப்பதன் முக்கியத்துவத்தையும் உணர்ந்து கொண்டது. உலக வர்த்தக  நிறுவனத்தில் 2001-ம் ஆண்டு இணைந்து கொண்டது. அதனால் இன்று வரை சீனப் பொருளாதாரம் 10 மடங்கிற்கு மேல் வளர்ந்துள்ளது. சீனா உலக வர்த்தகத்தில் இணைந்து கொண்டமை உலகமயமாதலின் முக்கிய நிகழ்வாகும். சீனாவிற்கான உலக வர்த்தகத்தை மேற்கு நாடுகள் இலகுவாக்கின. அதனால் சீனாவை உலக உற்பத்தி நிறுவனங்கள் தமது பொருத்து நிலையமாக (assembly plant of the world) மாற்றின. வெளிநாட்டு நிறுவனங்களின் தொழிநுட்பங்களைப் பிரதிபண்ணுவதும் திருடுவதும் சீனாவிற்கு இலகுவானவையாக்கப்பட்டன. அதைப் பாவித்து சீனாவின் பொருளாதாரம், தொழில்நுட்பம், படைத்துறை ஆகியவை மேற்கு நாடுகளுக்கு சவால் விடக்கூடிய வகையில் வளர்ந்தன. 19-ம் நூற்றாண்டில் பிரித்தானியா உலகத்தின் தொழிற்சாலை என அழைக்கப்பட்டது போல் தற்போது சீனா அழைக்கப்படுகின்றது. சீனாவின் உவாவே நிறுவனத்தின் 5ஜீ தொழில்நுட்ப வளர்ச்சி மேற்கு நாடுகளுக்கு சீனாவின் பொருளாதார வளர்ச்சியையும் தொழில்நுட்ப வளர்ச்சியையும் உணரவைத்தது.


தொழில்நுட்ப ஆபத்து நாடுகளைத் துண்டிக்கின்றது.


2019 டிசம்பரில் அமெரிக்காவின் வர்த்தகத்துறைச் செயலர் வில்பர் ரொஸ் அமெரிக்கப் பாதுகாப்பிற்கு குந்தகம் விளைவிக்கக் கூடிய தொழில்நுட்பங்களை அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்வதை தடை செய்ய வேண்டும் என்றார். இது சீனாவின் உவாவே கைப்பேசி நிறுவனத்தை மட்டும் இலக்காக வைத்துச் சொல்லப்பட்டதல்ல. அமெரிக்காவின் எதிரி நாடுகளுடன் தொடர்புகளை வைத்துள்ள ஐரோப்பாவில் உள்ள அமெரிக்க நட்புறவு நாடுகளின் மென்பொருள், வன்பொருள் உற்பத்தி நிறுவனங்களுக்கும் தரவு செயற்படுத்தும் நிறுவனங்களுக்கும் அது பொருந்தும். தொழில்நுட்பங்களை உருவாக்கும் நிறுவனங்கள் இணையவெளியில் அதிகம் தங்கியிருப்பதும் அவற்றின் மென்பொருட்களிலோ அல்லது வன் பொருட்களிலோ உளவறியும் நச்சுநிரல்கள் (computer virus) இணைக்கப்பட்டிருக்கலாம் எனற அச்சமும் அமெரிக்காவைக் கரிசனை கொள்ள வைத்துள்ளது. உலக நாடுகளுடனான தொழில்நுட்ப உறவுகள் இணையவெளித் தொடர்புகள் கடுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டிய நிர்ப்பந்தத்தில் அமெரிக்கா இருக்கின்றது. சுருங்கச் சொல்வதாயின் அமெரிக்காவின் தொழில்நுட்பங்களை சீனா திருடுவதையும் அமெரிக்கப் படைத்துறையை சீனா உளவு பார்ப்பதையும் தடுப்பதற்கு புதிய தொழில்நுட்பங்களூடான உலகத் தொடர்பை அமெரிக்கா துண்டிக்க அல்லது கட்டுப்படுத்த வேண்டிய நிர்ப்பந்தத்தில் அமெரிக்கா இருக்கின்றது. உலகத்தை ஒரு சந்தையாக்கும் உலகமயமாக்குதலின் நோக்கம் இங்கு பெருமளவு பாதிக்கப்படுகின்றது. உலகமயமாதலின் ஒரு அம்சமாக தொழில்நுட்பப் பரம்பல் இருக்கின்றது. நாடுகள் தொழில்நுட்பங்களைப் பகிர்ந்து கொள்ளல் மூலம் சீனாவும் இரசியாவும் தொழில்நுட்பத்தில் அமெரிக்காவை விஞ்சிவிடும் என்ற அச்சம் அமெரிக்காவை ஆட்டிப்படைக்கின்றது. 


உயர்ந்த சீனாவை விழுத்தும் முயற்ச்சி
2015-ம் ஆண்டு சீனாவின் ஏற்றுமதி உச்சமடைந்தது. அதைத் தொடர்ந்து உலகமயமாக்கல் சீனாவிற்கு சாதகமாகவும் மேற்கு நாடுகளுக்கு பாதகமாகவும் இருப்பது உணரப்பட்டது. ஆனாலும் ஏற்றுமதியில் தங்கியிருப்பதை சீனாவால் மாற்றுவது சிரமமாக இருந்தது. மேற்கு நாடுகள் உலகமயமாக்கலை மாற்ற வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டன. உலகமயமற்றதாக்கல் (Deglobalisation) 2016-ம் ஆண்டில் இருந்து பேசப்பட்டு வருகின்றது. சீனாவும் தனது பொருளாதாரம் ஏற்றுமதியில் அதிகம் தங்கியிருப்பதை உணர்ந்து கொண்டது. உலகப் பொருளாதாரம் சரியும் போது சீனப் பொருளாதாரம் சரிவது தவிர்க்க முடியாததாக அமைந்துள்ளது. சீனாவால் உலகமயமாக்குதலில் இருந்து விலக முடியாமல் இருக்க மேற்கு நாடுகள் அதிலிருந்து விலக முடிவெடுத்தன. 2019 ஜூனில் நடந்த ஜீ20 மாநாட்டில் மேற்கு நாடுகள் காப்பியல் (protectionism) கொள்கையைக் கடைப்பிடித்து உலக வர்த்தக் ஒழுங்கை சிதைக்க முயல்வதாக சீன அதிபர் ஜீ ஜின்பிங் குற்றம் சாட்டினார்.

தன்னிறைவு, உலகமயமாதல், அந்நிய முதலீடு
அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையில் நடக்கும் வர்த்தகப் போர் இரு நாடுகளையும் ஒன்றில் ஒன்று தங்கியிருப்பதை எப்படித் தவிர்ப்பது என்பதை நோக்கமாகக் கொண்டதே. உலகமயமாதல் முதலீட்டாளர்களையும் அவர்களுக்காக பணி புரிவோரையும் உலகெங்கும் பயணிப்பதை அதிகரிக்கச் செய்தது. அதனாலேயே கொரோனாநச்சுக்கிருமி மிக வேகமாக உலகெங்கும் பரவியது. 1970களில் அப்போது மூன்றாம் உலக நாடுகள் என அழைக்கப்பட்ட வளர்முக நாடுகளில் பொருளாதாரத் தன்னிறைவு என்ற பதம் அதிகம் விரும்பப்பட்டதாக இருந்தது. உலகமயமாக்குதல் அதை இல்லாமல் செய்து “அந்நிய நேரடி முதலீடு” என்ற சொற்றொடர் பலராலும் விரும்பப்பட்டதாக உருவெடுத்தது.

சீன அமெரிக்க இணைப்புச் சங்கிலி
அமெரிக்கா உட்பட பல நாடுகளுக்கு சீனா அதிக ஏற்றுமதியைச் செய்வதால் சீனாவிடம் அதிக வெளிநாட்டுச் செலவாணிக் கையிருப்பு உள்ளது. அதை கையில் வைத்துக் கொண்டிருக்க முடியாது. எங்காவது முதலீடு செய்ய வேண்டும். அமெரிக்கர்கள் சீன உற்பத்தியை மிக மலிவான விலையில் வாங்குகின்றார்கள். உள்ளூர் உற்பத்தி குறைந்ததால் அமெரிக்க அரசின் வரிச் சேகரிப்பு குறைந்தது அமெரிக்க அரசின் வருமானம் குறைகின்றது. அதனால் அமெரிக்க அரசு கடன் வாங்க வேண்டிய நிர்ப்பந்தம் உருவானது. அமெரிக்காவிற்கு சீனா தன் வெளிநாட்டுச் செல்வாணிக் கையிருப்பை கடனாகக் கொடுக்கத் தொடங்கியது. அப்படி சீனா கொடுக்காவிட்டால் அமெரிக்க டொலரின் பெறுமதி குறையும். குறைந்தால் சீன ஏற்றுமதி குறையும். அமெரிக்காவிற்கு சீனாவின் ஏற்றுமதியும் அமெரிக்காவிற்கு சீனா கொடுக்கும் கடனும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்த சங்கிலி. இது போலப் பலவகைகளில் உலகமயமாதல் பிரிப்பதற்கு கடினமான சங்கிலிகளால் நாடுகளைப் பிணைத்துள்ளது. இந்த பிணைப்பைப் பற்றியோ அதை துண்டிப்பதால் ஏற்படும் ஆபத்தைப் பற்றியோ உணரக் கூடிய அறிவுடையவர்களாக எந்த ஒரு முன்னணி நாட்டினதும் ஆட்சியாளர்கள் இல்லை.

உலகமயமாதலை தீவிரமாக முன்னெடுத்த தாராண்மைவாதக் கட்சிகள் பல உலகெங்கும் தோற்கடிக்கப்பட்டு தேசியவாதத் தலைவர்கள் பல முன்னணி நாடுகளில் ஆட்சியில் அமர்ந்துள்ளமையும் உலகமயமாக்குதலைப் பின்தள்ளியுள்ளது. 2018-ம் ஆண்டில் இருந்து “உலகமயமாதலை இணைபிரித்தல்” (Decoupling Globalization) என்ற சொற்றொடர் அரசியல் மற்றும் பொருளாதார ஆய்வாளர்களால் அதிகம் பாவிக்கப்படுகின்றது. உலகமயமாக்குதல் உருவாக்கியுள்ள நாடுகளிடையேயான சங்கிலிப் பிணைப்பை துண்டிக்க மகாநதி திரைப்படத்தின் கதாநாயகன் போல தன் கையையே தான் துண்டிக்க வேண்டிய நிலை உள்ளது. தற்போதைய தேசியவாத அரசுத் தலைவர்கள் அதைச் செய்ய மாட்டார்கள் எனச் சொல்ல முடியாமல் இருக்கின்றது. உலகப் பொருளாதாரம் பெரும் அதிர்ச்சியைத் தாங்கக் கூடிய நிலையிலும் இல்லை. உலகத் தலைவர்களிடையே சரியான புரிதலும் தேவையான சகிப்புத் தன்மையும் இல்லை.



Wednesday, 29 March 2017

தேசியவாதங்களும் தொழில்நுட்பமும் பொருளாதார வளர்ச்சியும்

முதலாளித்துவப் பொருளாதாரக் கொள்கைகள் பிழைத்துப் போகின்ற வேளைகளில் அந்தக் கொள்கைகளில் மாற்றம் செய்யப்படாமல் இருப்பதற்காக நடக்கின்ற பிழைகளுக்கு வேறு காரணங்களை காட்டி வெற்றி பெறுவது முதலாளித்துவவாதிகள் தொடர்ந்து செய்யும் செயல். இனவாதம், மத மோதல் போன்றவை அவர்கள் விரும்புக் கருவிகள். 2007-ம் ஆண்டின் பின்னர் உருவான பொருளாதார வீழ்ச்சிக்கு குடிவரவையும் வளர்முகநாடுகளில் இருந்து செய்யப்படும் இறக்குமதியும் காரணம் என தொடர்ந்து முன் வைக்கப் பட்டுக்கொண்டிருக்கின்றது. சீனா தனது நாணயத்தின் பெறுமதியை வேண்டுமென்றே தாழ் நிலையில் வைத்திருக்கின்றது என்ற குற்றச் சாட்டும் முன்வைக்கப்படுகின்றது. அமெரிக்க அரசின் மொத்த கடன் தொகையான 20ரில்லியன் டொலர்களில் சினாவின் பங்கு 1.157ரில்லியனும், ஜப்பானின் பங்கு 1.136 ரில்லியனுமாகும். 

பணவீக்கம் அதிகரிக்காமையும்(Deflation) மீள்வீக்கமும் (Reflation)
கடந்த சில ஆண்டுகளாக பணவீக்கம் அதிகரிக்காமை (Deflation) பொருளாதாரப் பிரச்சனையாக இருந்தது. இப்போது கட்டுப்படுத்தப்பட்ட விலைவாசி அதிகரிப்பு பல நாடுகளில் செய்யப்படுகின்றது. இது மீள்வீக்கம் (Reflation) என அழைக்கப்படுகின்றது. 2007-ம் ஆண்டு உருவான உலகப் பொருளாதார நெருக்கடி ஓரளவுக்கு தீர்க்கப்பட்டு இப்போது உலகப் பொருளாதாரம் வளரும் அறிகுறிகள் தென்படுகின்ற வேளையில் பலவிதமான தேசிய வாதங்கள் எழுந்துள்ளன. வெள்ளைத் தேசியவாதமும் பொருளாதாரத் தேசியவாதமும் உலக அமைதிக்கும் செழிப்பிற்கும் பாதகமான நிலையை எடுத்துள்ளன. 

பரப்பியவாதிகள் (Populists)
பரப்பியவாதிகள் என்போர் மக்களிடையே எது பிரபலமாக இருக்கின்றதோ அதை தமது கொள்கைகளாக வகுத்துக் கொள்ளும் சந்தர்ப்பவாதிகளாகும். மக்களிடையே குடிவரவுக்கு எதிரான கருத்து அதிகரிக்கும் போது அவர்கள் குடிவரவுக்கு எதிரான கொள்கைகளைத் தமதாக்கிக் கொள்வர். ஒரு நல்ல ஆட்சியாளர் எடுத்த சிறந்த தொடர் நடவடிக்கைகள் மக்களுக்கு பல  குறுகிய காலத்தில் சுமைகளைக் கொடுத்தாலும் அவை நீண்டகாலத்தில் நாட்டுக்கும் மக்களுக்கும் நன்மைகளைக் கொண்டுவரும். குறுங்காலத்தில் மக்கள் சிரமங்களுக்கு முகம் கொடுத்துக் கொண்டிருக்கையில் பரப்பியவாதிகள் தங்கள் கொள்கைகளை மக்களின் குறுங்கால நோக்கங்களுக்கு ஏற்ப வகுத்துக் கொள்வர். அதை வைத்து ஆட்சியையும் பிடித்துக் கொளவர். நல்ல ஆட்சியாளர் எடுத்த நடவடிக்கையின் பயன் தரும் போது பரப்பியவாதிகள் ஆட்சியில் இருப்பர். யாரோ போட்ட விதையின் அறுவடைகளைத் தாம் செய்து கொள்வர். 

குடிவரவு எதிர்ப்பு
பரப்பியவாதம், பொருளாதாரத் தேசியவாதம், வெள்ளைத் தேசியவாதம் ஆகியவற்றைக் கொள்கையாகக் கொண்டவர்களின் பரப்புரைகள் பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேற வேண்டுமா என்ற கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பில் வெளியேறவேண்டும் என்பதற்கு அதிகப்படியானோர் வாக்களித்தனர். இதே போலத்தான் 2016 நவம்பரில் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவும் அமைந்தது. இது ஒரு தொடர் சரிவாக வட அமெரிக்காவிலும் மேற்கு ஐரோப்பாவிலும் பரவுமா எனப் பலரும் அஞ்சிக் கொண்டிருக்கையில் நெதர்லாந்தில் தேசியவாதிகள் தேர்தல் தோல்வியைச் சந்தித்தனர். ஆனால் மதவாதம் இஸ்லாமிய எதிர்ப்புவாதம் ஆகியவற்றைக் கொண்ட வலதுசாரியினர் இந்தியாவின் அதிக மக்கள் தொகையைக் கொண்ட அதாவது பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி ஆகிய நாடுகளின் மொத்த மக்கள் தொகையிலும் பார்க்க அதிக மக்கள் தொகையைக் கொண்ட உத்தரப் பிரதேச மாநில சட்டசபைத் தேர்தலில் பெரு வெற்றியீட்டியுள்ளனர். அடுத்தாக பிரான்சில் 2017 ஏப்ரல் 23-ம் திகதி நடக்கவிருக்கும் அதிபர் தேர்தல் உலகக் கவனத்தை ஈர்த்துள்ளது. அடிக்கடி சடுதியான அரசியல் மாற்றங்களைக் கொண்டுவரும் பிரான்ஸில் நீண்ட காலமாகப் பெரும் அரசியல் மாற்றங்கள் நடக்கவில்லை. குடிவரவுக்கு எதிரான கொள்கைகான ஆதரவு பிரான்சில் அதிகரித்து வருகின்றது

வர்த்தகப்பாதுகாப்புக் கொள்கை(trade protectionism)
1988-ம் ஆண்டில் இருந்து சீனா செய்து வரும் பொருளாதாரச் சீர்திருத்தங்களும் 2011-ம் ஆண்டு அது உலக வர்த்தக அமைப்பில் இணைந்து கொண்டதும் அதன் ஏற்றுமதியைப் பெருமளவில் அதிகரிக்கச் செய்தன. சீனா உலகின் தொழிற்ச்சாலையானது. அதனால் பல வட அமெரிக்க மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகளில் பல வேலைவாய்ப்புக்கள் இல்லாமல் போயின. வர்த்தகப்பாதுகாப்புக் கொள்கை(trade protectionism), குடிவரவு எதிர்ப்பு, உள்நாட்டு முதலாளிகளுக்கு அழுத்தம் கொடுத்தல், பயமுறுத்தல் கலந்த ஒருபக்கச்சார்பு (belligerent unilateralism) ஆகியவையின் கலவையே தற்போதைய அமெரிக்க ஆட்சியாளர்களின் கொள்கை. தன்னுடய பதவியேற்பு உரையில் வர்த்தகப்பாதுகாப்புக் கொளை செழிப்பையும் வலிமையையும் தரும் என்றார் டொனால்ட் டிரம்ப். முதலாம் உலகப் போருக்கும் இரண்டாம் உலகப் போருக்கும் இடையில் உருவான பொருளாதார மந்தத்தின் போது தீவிரமான பொருளாதாரத் தேசியவாதம் பல நாடுகள் இறக்குமதிக்கு எதிரான வரிவிதிப்புக்களையும் தடைகளையும் செய்தன. அப்போதைய உலகப் பொருளாதாரக் கட்டமைப்புப் போல் 2007-ம் ஆண்டு இருக்கவில்லை. உலகமயமாதல் சென்ற நூற்றாண்டின் பிற்பகுதியில் அநேகமாக எல்லா நாடுகளையும் பொருளாதார ரீதியில் ஒன்றில் ஒன்று தங்கியிருக்கும் நிலையை ஏற்படுத்தியது. ஒரு நாட்டில் நிலவும் பொருளாதார ஏற்றத்தாழ்வு பல நாடுகளை பாதிக்கக் கூடிய சிக்கலான நிலைமை இப்போது நிலவுகின்றது.

எரிபொருள் அரசியல்
அமெரிக்க அதிபர் டிரம்பின் அமைச்சரவை பற்றிப் பல குற்றச் சாட்டுகள் வந்த போதிலும் அவரது வெளியுறவுத் துறைச் செயலர் ரெக்ஸ் ரில்லர்சனும் எரிபொருள் வளத்துறை அமைச்சர் ரிக் பெரியும் உலக எரிபொருள் உற்பத்தி பாவனை விநியோகம் ஆகியவற்றில் நிபுணர்கள். அமெரிக்கா உலகின் முதலாவது எரிபொருள் உற்பத்தி நாடாக உருவெடுத்த வேளையில் அவர்கள் தங்களது பதவியை ஏற்றுள்ளார்கள். அமெரிக்கா தனது வெளியுறவுத் துறையில் எரிபொருளை ஒரு கருவியாகப் தனக்கு ஏற்ப பாவிக்கக் கூடிய நிலைய அடைந்துள்ளது. 2011-ம் ஆண்டு அமெரிக்கா உலகிலேயே அதிக அளவு எரிவாய் உற்பத்தி செய்யும் நாடாக உருவெடுத்து இரசியாவை இரண்டாம் இடத்திற்கு தள்ளியது. 2014-ம் ஆண்டு அது அதிக அளவு மசகு எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடாகவும் உருவெடுத்தது. ஒபெக் நாடுகள் கூட்டமைப்பு தமது உற்பத்தியை கட்டுப்படுத்தி எரிபொருள் விலையை அதிகரிக்கச் செய்ய முயன்ற போது அமெரிக்கா தனது எரிபொருள் உற்பத்தியை அதிகரித்து எரிபொருள் விலையை வீழ்ச்சியடையச் செய்கின்றது. 2017-ம் ஆண்டில் மசகு எண்ணெயின் விலை ஐம்பது டொலருக்கு மேல் அதிகரிக்க அமெரிக்கா அனுமதிக்காது போல் தெரிகின்றது. இது எரிபொருள் ஏற்றுமதியில் பெரிதும் தங்கியிருக்கும் இரசியாவின் பொருளாதாரம் தலையெடுக்காமல் செய்யும் உத்தியாகும். எரிபொருள் விலை வீழ்ச்சியடைந்திருப்பது பல வளர்முக நாடுகளுக்கு அதிலும் முக்கியமாக இந்தியாவிற்கும் சீனாவிற்கும் பெரும் வாய்ப்பாகும். ஆனால் எரிபொருள் உற்பத்தி நாடுகளின் பொருளாதாரம் பாதிக்கப்படுவதால் அந்த நாடுகள் உலகின் பல் வேறு நாடுகளில் இருந்து செய்யும் இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளது. மேற்காசிசாவிலும் வட ஆபிரிக்காவிலும் உள்ள எரிபொருள் உற்பத்தி நாடுகளுக்கு பல வளர்முக நாடுகளில் இருந்து சென்று வேலைசெய்வோர் மூலமாகக் கிடைக்கும் வருமானம் வீழ்ச்சியடைந்துள்ளது. அமெரிக்காவின் எரிபொருள் கொள்கை பல்வேறுவிதமான தாக்கங்களை உலகப் பொருளாதாரத்தில் ஏற்படுத்துகின்றது. 

முப்பரிமாண அச்சும் செயற்கை விவேகமும்
2007-ம் ஆண்டுக்கு முன்னர் உருவான தொழில்நுட்ப வளர்ச்சி அதிலும் குறிப்பாக தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி 2008-ம் ஆண்டு உருவான் பொருளாதார நெருக்கடிக்கு ஏதுவாக அமைந்தது. தற்போது முப்பரிமாண அச்சுக்கலையும் செயற்கை விவேகமும் (artificial intelligence) உலகப் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தவிருக்கின்றன. முப்பரிமாண அச்சு பல தொழிலாழர்கள் செய்யும் வேலைய மிகக் குறுகிய காலத்தில் மிகக்குறைந்த செலவுடன் செய்யக் கூடியது. செயற்கை விவேகம் பல தொழில்நெறிஞர்களின் வேலைகளைச் செய்யக் கூடியதாக உருவெடுத்துக் கொண்டிருக்கின்றது. பல கணக்கியல் மற்றும் சட்டத்துறையைச் சார்ந்த பெரு நிறுவனங்கள் செயற்கை விவேக ஆராய்ச்சிக்கு அதிக நிதி செலவிடுகின்றன. இதனால் பல சட்டம் மற்றும் கணக்கியல் படித்தவர்களின் வேலைகளை கணினிகள் மூலம் செய்யக் கூடியவகையில் செயற்கை விவேகத் தொழில்நுட்பம் வேகமாக வளர்கின்றது. முப்பரிமான அச்சுக்கலையாலும் செயற்கை விவேகத்தாலும் மேற்கு நாடுகளில் வெளிநாட்டவர்கள் தேவையில்லை என்ற நிலை உருவாக இருப்பதால் தேசியவாதிகள் குடிவரவுக்கு எதிரான கொள்கைய தீவிரப்படுத்தி வருகின்றார்கள். தற்போது 700மில்லியன் மக்களைக் கொண்ட ஐரோப்பா 2050-ம் ஆண்டு 557முதல் 653 மில்லியன் மக்களையும் கொண்டதாகவிருக்கின்றது என ஐக்கிய நாடுகள் சபை எதிர்வு கூறியுள்ளது. அந்த ஊழியர் இடைவெளியை அவர்கள் தொழில்நுட்ப வளர்ச்சியைக் கொண்டு நிரப்பவிருக்கின்றார்கள். 

ஜப்பானின் பிரச்சனைக்குத் தீர்வு
உலக மக்கள் தொகை 1950இல் இருந்து 2000 வரை மூன்று பில்லியன்களில் இருந்து ஆறு பில்லியன்களாக அதிகரித்தது. ஆனால் 2000-ம் ஆண்டில் இருந்ததில் இருந்து 2050-ம் ஆண்டு ஐம்பது விழுக்காடு அதிகரிப்பை மட்டும் காணும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. ஜப்பானில் முதியோர் தொகை அதிகரித்தும் இளையோர் தொகை குறைந்து கொண்டும் செல்வதால் ஏற்பட்டுள்ள நெருக்கடியைச் சமாளிக்க ஜப்பான் வெளிநாடுகளில் இருந்து வேலைக்கு ஆட்களைத் தேட வேண்டி வருமென இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் பல பொருளாதார நிபுணர்கள் கருத்து வெளியிட்டிருந்தனர். ஜப்பானியத் தேசியவாதிகள் அதைக் கடுமையாக எதிர்த்தார்கள். அதன் விளைவாக ஜப்பானில் செயற்கை விவேகத்தில் அதிக முதலீடு செய்ய வேண்டியிருந்தது. Fukoku Mutual Life Insurance என்ற ஜப்பானிய நிறுவனம் செயற்கை விவேகத்தில் 200மில்லியன் யென் முதலீடு செய்ததன் விளைவாக உற்பத்தித் திறன் அதிகரித்ததால் முதலாம் ஆண்டில் மட்டும் 140மில்லியன்கள் சேமிக்கக் கூடியதாக இருந்தது எனத் தெரிவித்துள்ளது. ஏற்கனவே இயந்திர மனிதர்கள் எனப்படும் ரொபோக்களை உற்பத்தி செய்யும் தொழில்நுட்பத்தை வளர்ச்சி நிலையில் வைத்துள்ள ஜப்பானுக்கு செயற்கை விவேகத் தொழில்நுட்ப வளர்ச்சி பெரும் நன்மையைக் கொடுக்கின்றது. 

இந்தியாவும் சீனாவும்
இந்தியாவும் சீனாவும் அதிக மக்கள் தொகையைக் கொண்ட் வளர்முக நாடுகள். குறைந்த ஊதியத்தில் தொழில்செய்யக் கூடிய பலதரப்பட்ட ஊழியர்களையும் கொண்ட நாடுகள். இரண்டும் வேகமாக வளரும் பொருளாதாரங்கள். இர்ண்டு நாடுகளிலும் உறுதியான தலைமை உருவெடுத்துள்ளது. இரண்டு நாடுகளினதும் புள்ளி விபரங்கள் நம்பத்தகுந்தவை அல்ல. உள்நாட்டு அரசியல் காரணங்களுக்காக அவை திரித்து வெளிவிடப்படுகின்றன. இரண்டு நாடுகளிலும் ஊழல் நிறைந்துள்ளது. சீனாவின் அதிகரிக்கும் முதியோர் தொகை பெரும் பிரச்சனையாகிக் கொண்டிருக்கின்றது. இந்தியாவில் நீர்த்தட்டுப்பாடு மோசமாகிக் கொண்டிருக்கின்றது. அது தேசிய ஒருமைப்பட்டிற்கு அச்சுறுத்தலாக இருக்கின்றது. உலகமயமாதல் இருநாடுகளிலும் பல கோடி மக்களை வறுமைக் கோட்டுக்குக் கீழ் இருந்து நீக்கியுள்ளது. இரு நாடுகளும் தான் எதிர்கால உலகப் பெரு வல்லரசுகளாக இந்த நூற்றாண்டின் பிற்பகுதியில் உருவெடுக்கும் என எதிர்வு கூறப்பட்டது. ஆனால் மேற்கு நாடுகளில் பெருகும் தேசியவாதம், முப்பரிமாண அச்சுக்கலை, செயற்கை விவேகம் ஆகியவை இரு நாடுகளையும் கடுமையாகப் பாதிக்கவிருக்கின்றது. தொழில்நுட்ப வளர்ச்சி இவை உலகப் பெரு வல்லரசுகளாகுமா என்பதை ஐயத்திற்கு இடமாக்கியுள்ளது.  வேலை செய்யக் கூடிய மக்கள் தொகையைக் குறைவாகக் கொண்டுள்ள ஜப்பான் முப்பரிமாண அச்சுக்கலை, செயற்கை விவேகம் ஆகியவற்றில் அதிக முதலீடு செய்துள்ளது. ஜப்பானின் மிற்சுபிசி நிறுவனம் 2030-ம் ஆண்டு செயற்கை விவேகத்தால் 7.4 மில்லியன் வேலைகள் பறிபோகவிருக்கின்றது என்றும் ஐந்து மில்லியன் வேலைகள் மட்டும் உருவாக்கப்படவிருக்கின்றது என்றும் எதிர்வு கூறியுள்ளது.


மேற்கு நாடுகள் எனச் சொல்லப்படும் மேற்கு ஐரோப்பிய நாடுகளும் வட அமெரிக்க நாடுகளும் தேசியவாதத்தையும் தொழில்நுட்ப வளர்ச்சியையும் இணைத்து ஆசிய நாடுகள் பொருளாதாரத்தில் மேம்படாமல் தடுக்க முயல்கின்றன. அவை அதிகம் குறிவைப்பது சீனாவையும் இந்தியாவையுமே

Friday, 23 December 2016

உலகமயமாதல் இனி பின்வாங்குமா?

உலகமயமாதல் என்பது தொழில்நுட்பம், பொருளாதாரம், கலாச்சாரம், சூழல் ஆகியவற்றில் ஏற்பட்ட மாறுதல்களினதும் வளர்ச்சிகளினதும் விளைவாக உருவானது. நாடுகள் இவற்றை தமக்கிடையே பகிர்ந்து கொள்வதன் மூலம் தமது செல்வத்தைப் பெருக்க முயல்வதே உலகமயமாதலாகும். ஆனால் பெரு முதலாளிகள் உலகெங்கும் தமது ஆதிக்கத்தை விரிவாக்குவதே உலகமயமாதலின் உண்மையான நோக்கமாகும்.

உலகமயமாதலின் வரலாறு
உலகமயமாதல் என்ற சொல் 1970களில் உருவானது. அப்போது அதிகரித்துக் காணப்பட்ட உலக வர்த்தகம், முதலீடு, பயணங்கள், தகவற்பரிமாற்றம் போன்றவை தொடர்பான ஆய்வுகளின் விளைவாக இந்தச் சொல் உருவானது. உண்மையான உலகமயமாதலின் ஆரம்பப் புள்ளியாக எதைக் கொள்வது என்பதில் சில முரண்பாடுகள் நிலவுகின்றன. சிலர் கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டறிந்ததுதான் உலகமயமாதலின் ஆரம்பம் என்கின்றனர். வேறு சிலர் கைத்தொழிற்புரட்சியே உலகமயமாதலின் ஆரம்பம் என்கின்றனர்.  இற்றைக்கு இரண்டாயிரத்து முன்னூறு ஆண்டுகளிடையேயான வர்த்தகம் உருவானது.   உலக வர்த்தகத்தின் முதலாம் கட்டத்தில்   நறுமண உணவுப் பொருட்களும் அறிவுமே அதிகம் பண்டமாற்று அடிப்படையில் பரிமாறப்பட்டன. ஆனால் 1400களில் ஏற்பட்ட தொழில்நுட்ப வளர்ச்சியே உலக வர்த்தகத்தை பெரிய அளவில் வளரச் செய்தது.  மனிதர்களும் பண்டங்கள் போல் பாவிக்கப்பட்டு அடிமை வியாபாரம் செய்யப்பட்டனர். இது உலக வர்த்தகத்தின் இரண்டாம் கட்டம். இதில் படைவலு மிக்க நாடுகள் மற்ற நாடுகளை ஆக்கிரமித்தன. இப்படிப்பட்ட ஆக்கிரமிப்பாளர்களுக்கு இடையிலான போரே முதலாம் இரண்டாம் உலகப் போர்களாகும். இரண்டாம் உலகப் போரின் பின்னர் ஒரு புதிய “உலக ஒழுங்கு” உருவானது. அது உலக வர்த்தகத்தின் மூன்றாம் கட்டமாகும். 19-ம் நூற்றாண்டில் பிரித்தானியாவே உலகின் பெரு வல்லரசாகவும் பெரிய செல்வந்த நாடாகவும் இருந்தது. அதன் நாணயமே உலக நாணயமாக விளங்கியது. 

தொழில்நுட்ப வளர்ச்சியும் உலகமயமாதலும்.
1765இல் ஜேம்ஸ் வற் அவர்கள் நீராவி இயந்திரத்தைக் கண்டு பிடித்தது உலக வர்த்தகத்தின் முக்கிய அம்சமாகும். அது உலக வர்த்தகத்தை மேம்படுத்தியதுடன் பிரித்தானியாவின் உலக ஆதிக்கத்திற்கு உந்து வலுவானது. தொழில்நுட்பத்தால் இலகுவாக்கப் பட்ட போக்கு வரத்து வசதிகளும் தொடர்பாடல் வசதிகளும் உலகமயமாக்குவதை கொண்டிருக்கின்றன.  1830களில் கண்டு பிடிக்கப்பட்ட மின்சாரத் தந்தியும் உலக வர்த்தகத்தை மேம்படுத்தப் பயன்பட்டது.  கைத்தொழிற் புரட்சியின் பின்னர் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை உலகெங்கும் விற்பனை செய்யவும் அந்த உற்பத்திகளுக்கு தேவையான மலிவான மூலப்பொருட்களை இறக்குமதி செய்யவும் நீராவியில் இயங்கும் கப்பல்களும் மின்சாரத் தந்திகளும் பெரிதும் பயன்பட்டது. 1971இல் கண்டு பிடிக்கப்பட்ட மைக்குறோ புறொசெஸர் (Micro processor) தற்போது இணைய வெளியூடான வர்த்தக நடவடிக்கைகளுக்கும் பணப்பரிமாற்றங்களுக்கும் வழிவகுத்தது. 

உலகமயமாதலுக்கான அமைப்புக்கள்
1946-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட பன்னாட்டு நாணய நிதியம் (IMF), 1947இல் செய்யப்பட்ட வரிகளுக்கும் வர்த்தகத்துக்குமான பொது உடன்படிக்கை, 1947இல் உருவாக்கப்பட்ட உலகவங்கி, 1957இல் உருவாக்கப் பட்ட ஐரோப்பிய பொருளாதார சமூகம் ஆகியவை நாடுகளிடையேயான வர்த்தகத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டவையே. பல பன்னாட்டு மாநாடுகள் கூட்டங்கள் உலகமயமாக்குதலை இலகுவாக்குவறகான உடன்படிக்கைகளைச் செய்வதற்க்கு கூட்டப்பட்டன. பல நாட்டு ஆட்சியாளர்களின் உலகப் பயணங்கள் வர்த்தக மேம்பாட்டை நோக்கமாகக் கொண்டே மேற்கொள்ளப்பட்டன.

சொன்னவை வேறு நடந்தவை வேறு
உலகமயமாதல் சூழல் பாதுகாப்பிற்கு உகந்தது என வாதிடப்பட்டது. ஆனால் சூழல் பாதுகாப்பு பற்றி நிறையப் பேசினார்கள் ஆனால் செயலில் ஏதும் இல்லை. சூழல் பாதுகாப்புத் தொடர்பான ஒப்பந்தகள் தற்போது அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளன. வளர்முக நாடுகளின் மூளைவளங்களை கடத்துவதே வளர்ச்சியடைந்த நாடுகளின் பணியாக இருக்கின்றது. உலகமயமாதலினால் மகிழ்ச்சியடைந்த அமெரிக்காவின் புதிய-தாராண்மைவாதிகள் உலகம் ஒரே குடையின் கீழ் கொண்டுவரப்படும் என நம்பினார். உலகெங்கும் ஒரேமாதிரியான ஆட்சி முறைமை, ஒரேமாதிரியான பொருளாதாரக் கொள்கை, ஒரேமாதிரியான வெளியுறவுக் கொள்கை வருமென நம்பினர். ஜோர்ஜ் புஷ், பில் கிளிண்டன், பராக் ஒபாமா, மார்கிரெட் தச்சர், ரொனி பிளேயர் ஆகியோர் இவர்களில் முக்கியமானவர்கள். இவர்களின் மென்வலு அழுத்தங்கள் சரிவராத இடங்களில் இவர்கள் தாராண்மைத் தலையீட்டாளர்களாக மாறினார்கள். முதலாவது தலையீடு ஆப்கானிஸ்த்தானில் நடந்தது. இது இவர்களின் உலகமயமாதல் கொள்கை தொடர்பான ஐயங்களை உலகெங்கும் ஏற்படுத்தியது. உலகமயமாதல் என்னும் போர்வையில் இவர்கள் உலகெங்கும் தமது ஆதிக்கத்தை நிலைநாட்ட முயல்கின்றார்கள் என்பது வெளிப்படையானது.
உலகமயமாதலால் சீனா பெரும் நன்மையடைந்ததா?
1989- ம் ஆண்டு ஏற்பட்ட தினமன் சதுக்க நெருக்கடிக்குப் பின்னர் சீனா தனது நாட்டு இளையோருக்கு வேலை வாய்ப்பளிப்பதன் முக்கியத்துவத்தை உணர்ந்து கொண்டது. அதனால் தனது பொருளாதாரத்தை சீர்திருத்த வேண்டியதன் அவசியத்தையும் உலக வர்த்தகத்தில் தான் ஈடுபட வேண்டியதன் முக்கியத்துவத்தையும் சீனாப் பொதுவுடமை ஆட்சியாளர்கள் உணர்ந்து உலக வர்த்தக  நிறுவனத்தில் 2001-ம் ஆண்டு இணைந்து கொண்டது. அதனால் இன்று வரை சீனப் பொருளாதாரம் 10 மடங்காக வளர்ந்துள்ளது. சீனா உலக வர்த்தகத்தில் இணைந்து கொண்டமை உலகமயமாதலின் முக்கிய நிகழ்வாகும். இலகுவான உலக வர்த்தகத்தால் சீனா கைத்தொழில்நாடாக மாறிக் கொண்டிருக்கின்றது. மேற்கு நாட்டு உற்பத்தி நிறுவனங்கள் சீனாவில் முதலீடு செய்வது என்னும் பெயரில் சீனத் தொழிலாளர்களை மிகக் குறைந்த ஊதியம் வழங்கி தமது உற்பத்திச் செலவைக் குறைத்துக் கொண்டன. உலகத்தின் தொழிற்சாலை (factory of the world) உலக உற்பத்திவலுவின் நிலையம் (the world’s manufacturing powerhouse) ஆகிய பட்டங்கள் சீனாவிற்குச் சூட்டப்பட்டன. 19-ம் நூற்றாண்டு பிரித்தானியாவிற்கு இந்தப் பட்டங்கள் வழங்கப்பட்டிருந்தன. பிரித்தானியா தனது கண்டுபிடிப்புக்கள் மூலம் இந்தப் பட்டங்களைப் பெற்றிருந்தது. ஆனால் உலக உற்பத்தி நிறுவனங்கள் பொருத்து நிலையமாகவே (assembly plant of the world) சீனா உண்மையில் இருக்கின்றது. வெளிநாட்டு நிறுவனங்களின் தொழிநுட்பங்களைப் பிரதிபண்ணுவதும் திருடுவதும் சீனாவிற்கு இலகுவானவையாக்கப்பட்டன. அதனால் சீனாவின் உள்நாட்டுக் கண்டுபிடிப்புக்கள் மழுங்கடிக்கப்பட்டன. உலக அரங்கில் போட்டி போட்டு வர்த்தகம் செய்யக் கூடிய உயர் தொழில்நுட்பத் திறன் பெறாத நாடுகள் கைத்தொழில் மயமாக்கப்பட முடியாத நாடுகளாகும். சீனா தனது பொருளாதார வளர்ச்சிக்கு அதிக அளவில் ஏற்றுமதியில் தங்கியிருப்பது சீனாவையே கவலையடைய வைத்துள்ளது. சீனாவின் தொழிலாளர்கள் குறைந்த அளவு ஊதியம் பெறுவதால் சீனாவின் உள்நாட்டுக் கொள்வனவு மிகவும் தாழ்ந்த நிலையிலேயா உள்ளது. அமெரிக்காவின் உள்நாட்டு கொள்வனவு அதன் தேசிய உற்பத்தியில் மூன்றில் இரண்டு பங்காக இருக்கையில் சீனாவில் அது மூன்றில் ஒரு பங்காக இருக்கின்றது. இதனால உலகப் பொருளாதாரத்தின் வீழ்ச்சியடையும் போது அது சீனாவை மோசமாகப் பாதிக்கின்றது. 2015-ம் ஆண்டில் இருந்து சீனா இதில் அதிக அக்கறையும் கரிசனையும் கொண்டுள்ளது.

மாறுகிறது நெஞ்சங்கள்
 தற்போது 161 நாடுகள் இறக்குமதிகளுக்கு பெறுமதிசேர் வரிகள் விதிக்கின்றன. அமெரிக்கா சீனாவில் இருந்து செய்யும் இறக்குமதியால் அமெரிக்காவின் 3.2,மில்லியன் பேர்கள் வேலைகளை இழந்ததாகவும் ஜப்பானிடமிருந்து செய்யும் இறக்குமதியால் 896,000இற்கு மேற்பட்டவர்கள் வேலைகளை இழந்ததாகவும் அமெரிக்காவில் இருந்து கூச்சல்கள் எழுகின்றன. உலகமயமாதல் அமெரிக்காவை கைதொழிலற்றதாக்குகின்றது (deindustrializing) எனவும் குற்றச் சாட்டு முன்வைக்கப்படுகின்றது. 2008-ம் ஆண்டில் உருவான உலகப் பொருளாதார வீழ்ச்சியைத் தொடர்ந்து யூரோநாணய வலயத்தில் ஏற்பட்ட நெருக்கடி, ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலக வேண்டும் என்ற கருத்து வலுப்பெற்றமை, பல ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் வலதுசாரிகளின் செல்வாக்கு அதிகரித்தமை, டொனால்ட் டிரப்பின் வெற்றி ஆகியவை உலகமயமாதல் செல்வந்த நாடுகளான வட அமெரிக்க மற்றும் மேற்கு ஐரோப்பிய நாட்டு மக்களையும் பொருளாதார ரிதியாகப் பாதித்துள்ளது 2016 நவம்பரில் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்பிற்கு வெற்றியைக் கொடுத்ததில் முக்கியமானது உலக வர்த்தகம் தொடர்பாக அவர் முன்வைக்க கருத்துக்களே. உலகமயமாதல் எமது தொழிற்சாலைகளையும் எமது செல்வங்களையும் வெளிநாடுகளுக்கு அனுப்பி விட்டன என்றார் அவர். ஹிலரி கிளிண்டன் வென்றிருக்க வேண்டிய பென்சில்வேனியா, மிச்சிக்கன், விஸ்கொன்சின் ஆகிய மாநிலங்களில் டிரம்ப் பெரு வெற்றியீட்டியமைக்குக் காரணம் அந்த மாநிலங்களில் பல தொழிற்சாலைகள் மூடப்பட்டமையே.

மக்களின் விசனமும் டிரம்பின் வெற்றியும்.
உலகமயமாதல் மேற்கு ஐரோப்பா மற்றும் வட அமெரிக்க நாடுகளின் பெரு முதலாளிகளுக்கு மட்டுமே வாய்ப்பாக அமைந்தது. அவர்கள் பல நாடுகளில் செயற்படுவதால் பல வருமான வரி ஏய்ப்புக்களைச் செய்யக் கூடியதாக இருந்தது. இந்த நாடுகளில் பலர் வேலைகளை இழந்ததால் அவர்கள் செலுத்தும் வரியும் இல்லாமல் போனது. இவற்றால் அரச வருமானங்கள் குறைந்து கொண்டே போனது. அதனால் சமூக நலக் கொடுப்பனவுகள் பெருமளவில் குறைக்கப்பட்டன. உட்கட்டுமானங்களின் பராமரிப்புகளும் மேம்படுத்துதல்களும் மோசமடைந்தன. பல தொழிற்சாலைகள் மூடப்பட்டன. இதனால் பல பொதுமக்கள் விசனமடைந்துள்ளனர். உலகமயமாதல் அமெரிக்காவிற்கு நன்மையளிக்கவில்லை சில செல்வந்தர்களுக்கு மட்டும் நன்மையளித்தன என அமெரிக்கர்கள் நம்பத் தொடங்கி விட்டனர் என்பதை உணர்ந்த டொனால்ட் டிரம்ப் அதற்கு ஏற்பத் தனது தேர்தல் பரப்புரை வியூகத்தை வகுத்து வெற்றி கண்டார். இதையே Robert Putnam தனது Bowling Alone  என்னும் நூலில் American elites had been building an empire at the expense of a nation எனக் குறிப்பிட்டார். இதுதான் உலகமயமாக்குதலை இப்போது பின்வாங்கச் செய்கின்றது. அமெரிக்கா பல நாடுகளுடன் செய்த மற்றும் செய்ய முயன்று கொண்டிருக்கும் வர்த்தக உடன்படிக்கைகள் இனிச் செல்லுபடியற்றதாக்கும்.

தேவை ஒரு புதிய உலக ஒழுங்கு
உலக நாடுகள் தமது பொருளாதார மேம்பாட்டிற்கு ஒன்றின் மீது ஒன்று தங்கியிருப்பது தவிர்க்க முடியாத ஒன்று. உலகெங்கும் உள்ள வர்த்தக நிறுவனங்களை உலகளாவிய  போட்டி போடவைத்து தரமான மலிவான பொருட்களை உற்பத்தி செய்ய முடியும். ஒரு சில நாடுகளில் உள்ள வர்த்தக நிறுவனங்கள் மட்டும் உலகளாவிய ரீதியில் ஆதிக்கம் செலுத்த வைக்கும் நிலையை மாற்றி உலங்கெங்கும் உள்ள நிறுவனங்கள் உலக மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு தமது வர்த்தகங்களைச் செய்து உலகெங்கும் நன்மையளிக்கும் வகையில் செயற்பட்டு இலாபமீட்டும் புதிய உலக ஒழுங்கு ஒன்று உருவாக்கப்படல் வேண்டும்.


Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...