ஜனவரி-25-ம் திகதி எகிப்தில் அரபு வசந்தந்தின் ஐந்தாவது ஆண்டு நிறைவு நாள். கடந்த நான்கு ஆண்டுகளாக ஜனவரி-25ம் திகதி அதிக சுதந்திரம் கோரும் பெரும் ஆர்ப்பாட்டங்களுடன் நினைவு கூரப்படும். இந்த ஆண்டு எதுவும் நடக்கவில்லை. நடக்காமல் விட்டதற்கான காரணம் போதிய சுதந்திரம் கிடைத்தமையால் அல்ல உள்ள சுதந்திரமும் பறிக்கப் பட்டுவிட்டது. மக்கள் கைது செய்யப் படலாம் என்ற அச்சத்தில் எகிப்திய அரபு வசந்தத்தம் உருவான தஹ்ரீர் சதுக்கப் பக்கம் போகவில்லை. ஜனவரி - 25இற்கு மூன்று மாதங்களுக்கு முன்னரே பலர் கைது செய்யப்பட்டுவிட்டனர். ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்யக் கூடியவர்கள் கடுமையாகக் கண்காணிக்கப் பட்டனர். அவர்கள் கூடக் கூடிய இடங்கள் தீவிர சோதனைகளுக்கு உள்ளாக்கப் பட்டன.
அரபு வசந்தத்தின் பிறப்பிடமான துனிசியாவில் அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் மீண்டும் தலை தூக்கியுள்ளன. அங்கு எழு இலட்சம் பேர் வேலையின்றி இருக்கின்றார்கள். இது மக்கள் தொகையின் 15 விழுக்காடாகும். 62 விழுக்காடான பட்டதாரிகள் வேலையின்றியும், இளையோரில் 38 விழுக்காட்டினர் வேலையின்றியும் இருக்கின்றனர். இது ஒரு மக்கள் எழுச்சியின் பிறப்பிடமாக மீண்டும் உருவாகியுள்ளது. ஊரடங்குச் சட்டம் அங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
துனிசியாவின் மொஹமட் பௌஜிஜி (Mohamed Bouazizi) மறக்கப்பட்டுவிட்டார். எகிப்த்தின் அஸ்மா மஹ்பூஸ் என்றால் யாருக்கும் தெரியாது. இஸ்லாமியர்களின் வேலை இறை நம்பிக்கை அற்ற அமெரிக்கர்களை ஒழித்துக் கட்டுவதே என அல் கெய்தா பரப்புரை செய்து கொண்டிருக்க. இஸ்லாமியப் "பயங்கரவாதத்திற்கு" எதிராக அமெரிக்கா போராடிக் கொண்டிருக்க. இஸ்லாமியர்களும் மனிதர்களே அவர்களும் இம்மண்ணில் வாழ வேண்டும் என எழுந்தவர்கள் இவர்கள் இருவரும். அரபு மக்கள் தமது மக்கள் எழுச்சியை மல்லிகைப் புரட்சி என அழைத்தனர். மேற்கு நாட்டு ஊடகங்கள் அதை அரபு வசந்தம் என அழைத்தன. துனிசியா, எகிப்து, லிபியா, சூடான் ஆகிய நாடுகளில் ஆட்சியாளர்கள் பதவியில் இருந்து விரட்டப்பட்டனர். 14 மாத எழுச்சியில் 4 ஆட்சியாளர்களின் மொத்த 117 ஆண்டுகால ஆட்சி முடிவிற்குக் கொண்டு வரப்பட்டது.
துனிசியாவில் தந்தையற்ற தன் குடும்பத்தைக் காப்பாற்ற தெருவோரம் பழவியாபாரம் செய்து கொண்டிருந்த மொஹமட் பௌஜிஜியை எழு அமெரிக்க டொலர்கள் பெறுமதியான பணத்தை இலஞ்சமாகக் கொடுத்த மறுத்தமைக்காக துனிசிய அரச காவற்துறையைச் சேர்ந்த பெண் ஒருத்தி தாக்கி அவன் முகத்தில் காறி உமிழ்ந்தாள். அவன் தற்கொலை செய்து கொள்ள துனிசியாவில் உருவான இளையோர் எழுச்சி மேற்காசியவிலும் வட ஆபிரிக்காவிலும் உள்ள பல நாடுகளிற்கும் பரவியது. அல்ஜீரியா, லிபியா, எகிப்து, சிரியா, சூடான், சவுதி அரேபியா, பாஹ்ரேன், ஈராக் எனப் பல நாடுகளில் மக்கள் ஆடம்பர வாழ்கை வாழும் அக்கிரம ஆட்சியாளர்களுக்கு எதிராகக் கிளர்ந்தனர். மன்னராட்சி அல்லது படைத்துறையினரின் ஆட்சி மட்டுமே மேற்காசிய மற்றும் வட ஆபிரிக்க நாடுகளில் நடக்கின்றன.
ஒரு புரட்சி என்பது அக்கிரமம் பிடித்த ஆட்சியாளர்களை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும், ஆட்சி முறைமையை மாற்ற வேண்டும், ஆட்சி பிழையானவர்களின் கைகளுக்குப் போகமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மக்கள் வாழ்வு மேம்பட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். எகிப்திய மக்கள் 18நாட்கள் நடத்திய "புரட்சியின்" மூலம் பெப்ரவரி 11-ம் திகதி ஹஸ்னி முபாரக்கைப் பதவியில் இருந்து விரட்டினர். ஆனால் புரட்சி என்பது ஒரு ஆட்சியாளரை மாற்றுவதுடன் முற்றுப் பெறுவதல்ல என்பதற்கு எகிப்து ஒரு நல்ல உதாரணமாக அமைகிறது. எகிப்த்தில் உருவான மக்கள் எழுச்சி அமெரிக்காவின் பாதுகப்புத்துறையினரையும் உளவுத் துறையினரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. அமெரிக்கா தான் பாதுகாத்து வந்த அடக்கு முறை ஆட்சியாளர்களில் ஒருவரான ஹஸ்னி முபாரக்கைக் கைவிடும் அளவிற்கு நிலை மோசமாக இருந்தது.
துனிசீய மக்கள் ஆரம்பித்து வைத்த அரபு வசந்தத்தால் உந்தப்பட்ட எகிப்திய மக்கள் ஒரு திடமான சக்தியாக திரண்டு அதிக இரத்தம் சிந்தாமல் 18 நாட்கள் நடத்திய "புரட்சியின்" மூலம் 2011பெப்ரவரி 11-ம் திகதி ஹஸ்னி முபாரக்கைப் பதவியில் இருந்து விரட்டினர். ஐக்கிய அமெரிக்காவின் உளவுத் துறை எகிப்தியப் படையினரை புரட்சியை எதிர்க்காமல் இருப்பதை உறுதி செய்தது. இதனால் எகிப்தியப் படைத்துறைக்கு புரட்சியாளர்களால் எந்த விதப் பாதிப்பும் ஏற்படவில்லை. எகிப்தியப் படைத்துறையின் உயர்பதவிகளில் இருப்போர் அமெரிக்காவில் பயிற்ச்சி பெற்றவர்கள். இந்தப் புரட்சியை முன்னெடுப்பதில் முன்னணியில் நின்று செயற்பட்டவர் ஒரு இளம் பெண். அஸ்மா மஹ்பூஸ் என்ற 26 வயதான எகிப்தியப் பெண் ஹஸ்னி முபராக்கின் அடக்கு முறைக்கு எதிராக தனியான ஒரு போராட்டத்தை ஆரம்பித்தாள். முதலில் முகவேட்டில் அனைவரையும் தஹ்ரீர் சதுக்கத்தில் திரளும்படி அழைப்பு விடுத்தாள். அவளது அழைப்பை மூன்று இளைஞர்கள் மட்டுமே வந்தனர். முகவேட்டின் மூலம் தகவலை அறிந்த காவற்துறை அவர்கள் நாலு பேருக்கும் முதல் அங்கு திரண்டுவிட்டனர். அந்த மூன்று இளைஞர்களையும் கைது செய்த காவற்துறையினர் அஸ்மா மஹ்பூஸை எச்சரித்து விட்டுச் சென்றனர். அத்துடன் அஸ்மா மஹ்பூஸ் சளைக்கவில்லை பின்னர் ஒரு காணொளியைத் தயாரித்து அதன் மூலம் நான் மீண்டும் தஹ்ரீர் சதுக்கம் செல்வேன் உங்களுக்குத் தன்னம்பிக்கை இருந்தால் என்னுடன் வாருங்கள் என்று அறை கூவல் விடுத்தாள். அது பெரும் மக்கள் எழுச்சியாக மாறி 18 நாட்களில் ஹஸ்னி முபராக்கின் ஆட்சியை எகிப்த்தில் இருந்து அகற்றியது. ஆனால் தொடர்ந்து ஆட்சியைக் கைப்பற்றியவர்களோ புரட்சியை முன்னெடுத்த இளைஞர்களின் மதசார்பற்ற கொள்கைக்கு முரணான இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பினர். அவர்களின் ஆட்சி ஹஸ்னி முபாராக்கின் ஆட்சியிலும் பார்க்க மோசமானதாக அமைந்தது. இதனால் இளைஞர்கள் மீண்டும் கிளர்ந்து எழுந்தபோது இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பை ஆட்சியில் இருந்து அகற்றி விட்டு படையினர் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்டனர். மீண்டும் மக்கள் அடக்கு முறை ஆட்சிக்கு உள்ளாகி உள்ளனர். இன்னும் ஒரு மக்கள் எழுச்சி எகிப்தில் ஏற்பட தற்போது வாய்ப்பில்லை. எகிப்தின் தேசிய வருமானத்தில் முக்கிய பங்கு வகித்த உல்லாசப் பயணத்துறை மோசமாகப் பாதிக்கப் பட்டுள்ளது. இளையோர் மத்தியிலான வேலைவாய்ப்பின்மையே அரபு வசந்தத்திற்கு வித்திட்டது. அது அரபு வசந்த எழுச்சிக்கு முன்பிருந்ததை விட இப்போது அதிகரித்துள்ளது. எகிப்தின் பாதீட்டுப் பற்றாக்குறை பத்து விழுக்காட்டிலும் அதிகம். அதன் கடன் பளு அதன் அதன் மொத்தத் தேசிய உற்பத்தியிலும் அதிகமானதாகும்.
லிபியாவில் அரபு வசந்தம் ஒரு பெரும் உள்நாட்டுப் போராக வெடித்தது. கடாஃபியைப் பதவியில் இருந்து வெளியேற்றத் துடித்த மேற்கு நாடுகள் அவரது படையினருக்கு எதிராக போர் விமனத் தாக்குதல்கள் வழிகாட்டி ஏவுகணைத் தாக்குதல்களைத் தொடுத்து அவரை ஆட்சியில் இருந்து அகற்றிக் கொல்ல வழி வகுத்தன. தேர்தலுக்காக கடாஃபியிடம் இருந்து பணம் பெற்ற அரசியல்வாதிகளின் இரகசியங்கள் அவருடன் அழிக்கப்பட்டன. லிபியா இப்போது ஒரு தேறாத தோல்வியடைந்த நாடக இருக்கின்றது. இரண்டு அரசுகள் இப்போது அங்கு ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டிருக்கின்றன. பல போர்ப்பிரபுக்கள் மத்தியில் லிபிய மக்கள் சிக்குண்டு கொண்டிருக்கின்றனர். ஆபிரிக்காவின் செல்வந்த நாடுகளில் ஒன்றான லிபியாவில் உலகின் தலை சிறந்த சமூக நலக் கொடுப்பனவுகள் கடாஃபியின் ஆட்சியால் செய்யப்பட்டன. அறுபது இலட்சம் மக்களும் நன்கு வாழக்கூடிய எண்ணெய் வளம் அங்கு இருக்கின்றது. ஆனால் 2015-ம் ஆண்டு டிசம்பரில் லிபியாவின் அரசியல்வாதி ஒருவர் அடுத்த சோமாலியாவாக லிபியா மாறப்போகின்றது என எச்சரித்தார்.
சிரியாவின் அரபு வசந்த எழுச்சி முதலில் சியா மற்றும் சுனி முஸ்லிம்களுக்கு இடையிலான போட்டியாக மாறியது. பின்னர் ஈரானுக்கும் சவுதி அரேபியாவிற்கும் இடையிலான போட்டிக்களமானது. தற்போது உலக வல்லரசுகளின் போட்டிக் களமாகியுள்ளது. சிரிய நகரங்களின் அரைவாசி தரைமட்டமாகிவிட்டது. தற்போது பிரச்சனை பஷார் அல் அசாத்தின் அடக்குமுறை மிக்க ஆட்சியை அகற்றுவதல்ல இஸ்லாமியத் தீவிரவாதத்தை எப்படி ஒழிப்பது என்பதே! மற்ற எல்லா நாடுகளையும் விட மோசமான உயிரிழப்பு சிரியாவிலேயே ஏற்பட்டது. மூன்று இலட்சத்திற்கு மேலான அப்பாவிகள் கொல்லப் பட்டனர். 65இலட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் இடப்பெயர்வுக்கு உள்ளாகியுள்ளனர்.
அரபு வசந்தத்தின் பின்னர் ஈராக் மூன்றாகப் பிளவு பட்டுள்ளது. சியா முஸ்லிம்களின் ஆட்சி, குரிதிஷ் மக்களின் ஆட்சி, ஐ எஸ் அமைப்பினரின் ஆட்சி என மூன்று ஆட்சிகள் அங்கு நிலவுகின்றன. அதன் பொருளாதாரம் மோசமாகின்றது. ஈராக்கில் யதீஷியர்கள் இனக்கொலைக்கு உள்ளானார்கள்.
சவுதி அரேபியாவிலும் பாஹ்ரேனிலும் உருவான மக்கள் எழுச்சியையும் அதை சவுதி அரேபியப் படைகள் மூர்க்கத்தனமாக அடக்கியதைப் பற்றியும் மேற்கு நாட்டுப் பத்திரிகைகள் பெரிது படுத்தவில்லை. அமெரிக்காவின் படைத்தளமுள்ள பாஹ்ரேனில் ஈரானிய ஆதரவுக் கிளர்ச்சிக்காரர்கள் பெரும் போராட்டம் செய்தனர். நிலைமை மோசமானவுடன் சவுதி அரேபியா தனது படைகளை அங்கு அனுப்பி கிளர்ச்சிக்காரர்களை அடக்கியது. பஹ்ரேனில் அரபு வசந்தத்தின் பின்னர் மோசமான அடக்கு முறை நிலவுகின்றது.
அரபு நாடுகளில் ஓர் நல்ல ஆட்சி முறைமை இருந்ததில்லை. அவ்வப்போது வந்த ஒரு சில ஆட்சியாளர்களைத் தவிர மற்ற எல்லா ஆட்சியாளர்களும் ஊழல் மிக்கதும் திறனற்றதுமான ஆட்சியையே செய்தனர். துனிசியாவைத் தவிர எல்லா நாடுகளிலும் அரபு வசந்தத்திற்கு முன்னர் இருந்ததிலும் பார்க்க மோசமான ஆட்சி, மோசமான அடக்கு முறை, மோசமான மனித உரிமை மீறல்கள், மோசமான பொருளாதாரச் சூழல் ஆகியவை நிலவுகின்றன. இவற்றில் மாற்றம் ஏற்படக் கூடிய நிலைமை அண்மையில் இல்லை. அரபு வசந்தம் துயரைத் தவிர வேறு எதையும் கொண்டு வரவில்லை.
Tuesday, 26 January 2016
Subscribe to:
Posts (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
பிரபாகரன் கொல்லப் பட்டு விட்டாராம். அவரது உடல் கண்டு எடுக்கப் பட்டுள்ளது. இலங்கைத் தொலைக் காட்சியில் காட்டப் பட்ட படம் இரண்டாவதாக உள்ளது. அத...