முதலாம்
உலகப் போரில் தரைப்படைகளின் நகர்வுகள் முக்கிய பங்கு வகித்தன. அதற்குத்
துணையாகத்தான் மற்றப் படை நடவடிக்கைகள் அமைந்தன. போர்விமானங்கள் ஆரம்ப நிலையில்
இருந்தன. இரண்டாம் உலகப் போரில் தாங்கிகளும் ஆட்டிலறிகளும் முக்கிய பங்கு வகித்தன.
இரண்டாம் உலகப் போரின் போதே நீர்மூழ்கிக் கப்பல்களும் களங்களில் இறக்கப்பட்டன.
1950முதல் 1953வரை நடந்த கொரியப் போரில் முதல் முறையாக வானில் விமானங்கள்
போரிட்டுக் கொண்டன. 2003-ம் ஆண்டு நடந்த ஈராக் போரில் வான்
படையும் தொலைதூர ஏவுகணைகளுமே முக்கிய பங்குகள் வகித்தன. மூன்றாம் உலகப் போரில்
முதல் களத்தில் இறங்கவிருப்பது இணையவெளிப் படைப்பிரிவாகும். செயற்கை விவேகம்
மூன்றாம் உலகப் போரில் பயன்படுத்தப்படும்.
கணினிகளின்
போர்
மூன்றாம்
உலகப் போரில் இணையவெளிப் படைப்பிரிவுகள் பெருமளவில் ஈடுபடுத்தப்படும்.
எதிரிநாட்டின் கணினித் தொகுதிகளை ஊடுருவி அழிக்கும் செயல் பரவலான சேதங்களை
ஏற்படுத்தும். மருத்துவமனைகள், போக்குவரத்து, மின்வழங்கல்,
எரிபொருள் வழங்கல், உணவு விநியோகம் எனப்
பலதரப்பட்ட குடிசார் சேவைகள் செயலிழக்கச் செய்யப்படும். போர்விமானங்கள், போர்க்கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள்
போன்றவற்றில் உள்ள கணினித் தொகுதிகள் செயலிழக்கச் செய்யப்படும். தகவல் பரிமாற்றம் மற்றும்
ஊடகங்கள் செயலிழக்கச் செய்யப்படும். மூன்றாம் உலகப் போரில் லேசர் படைக்கலன்களும்
மைக்குறோவேவ் படைக்கலன்களும் பாவிக்கப்படும். குறைந்த நேரத்தில் குறைந்த செலவில்
பெரும் அழிவுகளை இந்தப் படைக்கலன்கள் ஏற்படுத்தும். முப்பரிமாண அச்சுக் கலையால்
படைக்கலன்கள் குறைந்த செலவிலும் குறுகிய நேரத்திலும் உருவாக்கப்படும். செயற்கை
மனிதர்கள் களமிறக்கப்படுவர்.
எப்போது
ஆரம்பமாகும்?
உடனடியாக
மூன்றாம் உலகப் போர் ஆரம்பவாதற்கான சாத்தியக் கூறுகள் மிகக் குறைவானவையே. அப்படி
உடனடியான மூன்றாம் உலகப் போர் ஆரம்பித்தால் அது வட கொரியாவில் ஆரம்பமாகலாம் எனப்
பலர் கருதுகின்றனர். அதில் சீனாவும் இரசியாவும் இணைந்து செயற்படலாம் எனவும்
சொல்கின்றனர். ஆனால் அதற்கான வாய்ப்புக்கள் குறைவு. பெரும்பாலும் இரசியா 2020-ம்
ஆண்டின் முன்னர் ஒரு பெரும் போரில் ஈடுபடுவதற்கான வாய்ப்புக்கள் குறைவே. இரசியா
ஒரு போரை ஆரம்பிப்பதாயின் அதன் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் கொடுக்கக்
கூடியவகையில் நேட்டோவில் இரசியாவின் எல்லையில் உள்ள நாடுகள் இணைக்கப்பட்டால்
இரசியா அதைத் தடுப்பதற்காகச் செய்யும் படை நடவடிக்கைகளால் போர் மூண்டு அது
நேட்டோப் படைகளுக்கும் இரசியாவிற்கும் இடையில் பெரும் போராக மாறலாம்.
எங்கு போர் நடக்கும்?
இரசியாவின் கிழக்கு எல்லை, தென் சீனக் கடல், கிழக்குச் சீனக் கடல், வட கொரியா ஆகியவை மூன்றாம் உலகப் போர் ஆரம்பமாகக் கூடிய
ஆபத்தான இடங்களாக இருக்கின்றன. மூன்றாம் உலகப் போர் 1. அமெரிக்கா
உலகெங்கும் தன் பிடியைத் தளர்த்தாவிடில் ஏற்படும். 2. இரசியா
தனது ஆதிக்க நிலப்பரப்பை முன்னள் சோவியத் ஒன்றிய நாடுகளில் மீண்டும் ஏற்படுத்த
முயன்றால் ஏற்படும். 3. சீனாவின் விரிவாக்கம் இந்தியா,
கிழக்குச் சீனக் கடல், தென் சீனக் கடல்,
மத்திய ஆசியா ஆகியவற்றின் கடல் மற்றும் நிலப்பரப்புக்களை
ஆக்கிரமிக்க முயன்றால் ஏற்படலாம். வட கொரியாவின் அணுக்குண்டு
மற்றும் ஏவுகணைப் பரிசோதனை ஒரு உலகப் போராக வெடிப்பதற்கான வாய்ப்புக்கள் குறைவு.
ஆனால் வட கொரியாவுடனான ஒரு போர் மோசமான மனித உயிரழப்புக்களை
ஏற்படுத்தும். வட கொரியா அணுக்குண்டை வைத்துக் கொண்டு ஒரு
மரபு வழிப் போரை மட்டும் நடத்தாது. அதன் மரபுவழிப்
படைக்கலன்கள் மிகவும் பழமையானவை.
இரசியா மற்ற நாடுகளை ஆக்கிரமித்து தன்னை பெரிய நாடாக்கியுள்ளது
என்ற குற்றச் சாட்டு உண்டு. 1900-ம் ஆண்டின் முன்னர் இரசியா நாள்
ஒன்றிற்கு சராசரியாக ஐம்பது சதுர மைல் நிலபரப்பை ஆக்கிரமித்தது. பொதுவுடமைப்
புரட்சிக்குப் பின்னரும் அது தொடர்ந்தது. சோவியத் ஒன்றியம் என்னும் பெயரில் அது
நடந்தது.
இரசியாவின் கிழக்கு கறுக்கின்றது.
2017 செப்டம்பரில் இரசியாவும் பெலரஸும் இணைந்து Zapad-2017 என்னும்
பெயரில் ஒரு போர்ப்பயிற்ச்சியை நடத்தியது.
அதே வேளை நேட்டோவில் இல்லாத சுவீடனும் பின்லாந்தும் ஐக்கிய அமெரிக்கா, டென்மார்க், எஸ்த்தோனியா, லத்வியா,
லித்துவேனியா, பிரான்ஸ், நோர்வே ஆகிய நாடுகளுடன் இணைந்து ஒரொரா-17 என்னும் பெயரில் ஒரு
போர்ப்பயிற்ச்சியை நடத்தின. இது இரசியாவிற்குக் கிழக்குப் புறமாக ஓர் ஆதிகக்ப்
போட்டி கடுமையாக வளர்கின்றது எனச் சுட்டிக் காட்டுகின்றது. அதிலும் போல்ரிக்
கடலின் நடுவில் உள்ள சுவீடனுக்குச் சொந்தமான கொட்லண்ட் தீவை இரசியா
ஆக்கிரமிக்கலாம் என்ற அச்சம் சுவீடனுக்கு உண்டு. மூன்றாம் உலகப் போர் இரசியாவின்
கிழக்குப் புறமான விரிவாக்கத்தால் உருவாகலாம். இரசியாவின் கிழக்காக உள்ள நாடுகள்
நேட்டோவில் இணைந்தமையை தற்போது இரசியா கடும் விசனத்துடன் பார்க்கின்றது.
இக்கட்டான நிலை இரசியாவிற்கு வேண்டாம்
இரசியாவின் பாதுகாப்பு அரண்களில் முதன்மையானது அதன் மிகப் பெரிய
நிலப்பரப்பாகும் அந்தப் பெருநிலப்பரப்பை ஆக்கிரமிக்கக் கூடிய படை எந்த நாட்டிடமும்
இல்லை. அதன் இரண்டாவது பாதுகாப்பரண் இரசியாவில் நிலவும் கால நிலை. நெப்போலியனையும்
ஹிட்லரையும் இரசியா தோற்கடிக்க உதவியது இரசியாவின் கால நிலையாகும். இரசியாவின் கிழக்கு
எல்லையில் பின்லாந்து, எஸ்த்தோனியா, லித்துவேனிய, லத்வியா, பெலரஸ் ஆகிய நாடுகள் இருக்கின்றன. அவற்றில் மேற்குலக நாடான பின்லாந்து
நேட்டோ கூட்டமைப்பில் இல்லை. சுவீடன் நேட்டோவில் இணைய வேண்டும் என்ற கருத்து வலுவடைந்து
வருகின்றது. 2018-ம் ஆண்டு சுவீடனில் நடக்கவிருக்கும் தேர்தலில் வலதுசாரிகள் வெற்றி
பெற்றால் சுவீடன் நேட்டோவில் இணைவது நிச்சயம். அது நேட்டோவில் இணைந்தால் பின்லாந்தும்
அதைத் தொடரலாம். இது வட துருவத்தில் இரசியாவிற்கு அச்சுறுத்தலாக அமையும் என விளடிமீர்
புட்டீன் கருதலாம். எஸ்த்தோனியா, லித்துவேனியா, லத்வியா ஆகிய நாடுகள் நேட்டோவில் இணைந்துள்ளன. பெலரஸை தனது வட்டத்துக்குள்
தொடர்ந்து வைத்திருக்க இரசியா பெரும் முயற்ச்சி எடுக்கின்றது. அங்கு நடக்கும் சர்வாதிகார
ஆட்சி இரசியாவிற்கு வாய்ப்பாக இருக்கின்றது.
இரசியாவிற்கான கவசப் பிரதேசம் தேவை என்பதில் விளடிமீர் புட்டீன் உறுதியாக இருக்கின்றார். இரசியாவிற்கு கலினின்கிராட் துறைமுகத்துக்கான தரைவழிப் பாதை தேவை. அதற்கு அது லித்துவேனியாவை நேட்டோவில் இருந்து விலகச் செய்ய வேண்டும் அல்லது அதை ஆக்கிரமிக்க வேண்டும். அந்த ஆக்கிரமிப்பு நேட்டோவிற்கும் இரசியாவிற்கும் இடையிலான போரைக் கொண்டுவரும் என நேட்டோ நாடுகள் பல தடவைகள் தெரிவித்து விட்டன. கலினின்கிராட் நகரமும் துறை முகமும் இரசியாவசம் இருப்பதற்கு போலந்து குறைந்தது ஒரு நடுநிலை நாடாக இருக்க வேண்டும். நேட்டோ உறுப்பு நாடான போலாந்து இரசியாவிற்கு எதிரான நிலைப்பாட்டில் தீவிரமாக இருக்கும் ஒரு நாடாகும். லித்துவேனியாவின் நெமுனாஸ் நதியூடாக (Nemunas or Neman river) இரசியா போல்ரிக் கடலில் தனது ஆதிக்கத்தை நிலை நாட்டலாம். கலினின்கிராட்டையும் பாதுகாக்கலாம். ஒரு போர் மூலமே இரசியாவால் போலந்தையும் லித்துவேனியாவையும் தனது வலயத்தினுள் கொண்டு வர முடியும். இரசியர்கள் தாம் எப்போது மேற்கு ஐரோப்பிய நாடுகளுடன் போரில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதாக நம்புகின்றார்கள். அதனால் நேட்டோப் படைகளிற்கும் இரசியாவிற்கும் இடையில் போர் நடப்பதற்கான சாத்தியங்கள் குறைவு எனச் சொல்ல முடியாது.
சில நாடுகளில் இரத்தக் களரி ஏற்படலாம்
மூன்றாம் உலகப் போரில் இரசியப் படைகளை
ஐதாக்கவும் அவர்களை அகலக் கால்வைக்க விடுவதும் நேட்டோப்படையினரின் தந்திரோபாயமாக
இருக்கும். இரசியா நோர்வே, பின்லாந்து,
சுவீடன் ஆகிய நாடுகளைக் கூடக் கைப்பற்ற முதலில் அனுமதிக்கப்படலாம். ஜேர்மனியின்
கிழக்குப் பகுதியையும் இரசியா ஆக்கிரமிக்கலாம். பின்னர் நேட்டோப் படையினர் தமது
ஏவுகணைகள் மூலம் இரசியப் படைகள் மீதும் இரசியாவின் கேந்திர முக்கியத்துவ நிலைகள்
மீதும் கடும் தாக்குதலை மேற்கொண்டு முறியடிப்பார்கள். இரசியா இந்த நாடுகளைக்
கைப்பற்ற எடுக்கும் காலத்தில் அமெரிக்க தனது முழுமையான படை நகர்வையும் வழங்கல்
வசதிகளையும் அட்லாந்திக் மாக்கடலைத் தாண்டிக் கொண்டு வந்து சேர்த்துவிடும்.
பிரித்தானியா ஏற்கனவே ஆங்கிலக் கால்வாய்க்குக் கீழாகச் செல்லும் பாதையூடாக தனது
போர்த் தாங்கிகளையும் தளபாடங்களையும் கொண்டு செல்லும் பயிற்ச்சியைச் செய்து
முடித்துள்ளது. பிரித்தானியாவும் இரசியப் படைகளை எதிர் கொள்ளக் கூடிய வகையில் தனது
படைகளை நகர்த்தி பிரெஞ்சும் படைகளுடன் இணைந்து ஏனைய ஐரோப்பிய நாடுகளைப்
பாதுகாக்கத் தயாராகிவிடும்.
உதவிகளும் தொழில்நுட்பங்களும்
உலகின் மற்ற நாடுகளுக்கு உதவி செய்யும்
பட்டியலில் அமெரிக்கா முதலாம் இடத்திலும் பிரித்தானியா இரண்டாம் இடத்திலும்
இருக்கின்றன. இந்த உதவிகள் மூலம் அவர்கள் தமக்கு வேண்டியவர்களைப் பல நாடுகளில்
ஆட்சியின் வைத்திருக்கின்றனர். உலக அரங்கில் மேற்கு நாடுகளின் செல்வாக்கை
தக்கவைத்துக் கொண்டிருப்பதும் பல நாடுகளை அவர்கள் சுரண்டுவதற்கு வசதியாக
இருப்பதும் இந்த உதவிகளே. ஒரு போர் என்று வரும் போது இரசியாவின் பின்னால் நிற்கும்
நாடுகள் மிகக் குறைவே. உலகின் பத்து உயர்தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்பது
அமெரிக்க நிறுவனங்களாகும். அதனால் ஒரு போர் என்று வரும் போது உயர்
தொழில்நுட்பங்களைப் பாவிக்கக் கூடிய திறன் அமெரிக்காவிடமே இருக்கின்றது.
சீனாவிற்கு காசு முக்கியம்
2020-ம் ஆண்டிற்கும் 2025-ம் ஆண்டிற்கும் இடையில்
மூன்றாம் உலகப் போர் நடந்தால் அதில் சீனா பங்கு பெறுவதற்கான வாய்ப்புக்கள் குறைவு.
சீனா தன்னை பொருளாதார அடிப்படையிலும் படைத்துறையிலும் உலகின்
முன்னணி நாடாக 2030-ம் ஆண்டு மாற்றும் திட்டத்துடன்
செயற்படுகின்றது. தற்போதைய சீனப் பொருளாதார வளர்ச்சி வேகம்
குறைந்த நிலையும் அதன் உள்ளகக் கடன் பிரச்சனைகளும் அது ஒரு போரில் அடுத்த ஐந்து
ஆண்டுகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவே எல்லா நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் என
அடித்துச் சொல்லலாம். சீனா அமைதியான எழுச்சி என்ற பதத்தை பல
பத்து ஆண்டுகளாகப் பாவித்து வந்தது. தற்போது அதை மாற்றி
அமைதியான வளர்ச்சி எனப் பெயரிட்டுள்ளது. சீனர்களின் தனிநபர்
வருமானத்திலும் பார்க்க அமெரிக்கர்களின் தனிநபர் வருமான எட்டு மடங்காகும். இந்த இடைவெளியைக் குறைக்காமல் சீனா ஒரு போரில் ஈடுபட மாட்டாது. சீனா படைத்துறைக்குச் செய்யும் செலவிலும் பார்க்க அமெரிக்கா நான்கு மடங்கு
செலவு செய்கின்றது. இந்த இடைவெளியை நிரப்ப சீனா தனது
பொருளாதாரத்தில் இன்னும் பத்து ஆண்டுகளுக்கு மேல் கவனம் செலுத்த வேண்டும்.
2030-ம் ஆண்டின்
பின்னர் சீனா போரில் இறங்கலாம்
2030-ம் ஆண்டின் பின்னர் சீனாவின் விரிவாக்கம் தீவிரமடையும். அதற்கு எதிராக ஜப்பான், அமெரிக்கா, இந்தியா ஆகிய நாடுகளின் தலைமையில் சில நாடுகள் சீனாவின் விரிவாக்கத்தைத் தடுக்க முற்படும் போது ஒரு போர் உருவாகலாம். அந்தப் போரில் இரசியா சீனாவுடன் இணைந்தால் அது ஒரு போராக உருவெடுக்க வாய்ப்புண்டு. அதில் மேற்கு ஐரோப்பிய நாடுகளும் இணையும் போது அது உலகப் போராகும். சீனா தனது ஒலியிலும் பார்க்கப் பன்மடங்கு வேகத்தில் பாயக்கூடிய ஹைப்பர் சோனிக் ஏவுகணைகளையும் வலிமை மிக்க நீர்மூழ்கிக் கப்பல்களையும் பாவிக்கும் 2030-ம் ஆண்டு சீனாவிடம் ஐந்து விமானம் தாங்கிக் கப்பல்கள் இருக்கும். சீனாவின் செய்மதிகளில் இருந்து எதிரி நாட்டு செய்மதிகளை நோக்கி ஏவுகணைகள் வீசி அழிக்கும் முயற்ச்சி மேற்கொள்ளப்படலாம். சீனாவின் விமானப்படை 2030இல் அமெரிக்காவிற்கு சவால் விடக்கூடியதாக அமையலாம். லேசர் படைக்கலன்கள் பரவலாகப் பாவிக்கப்படலாம்.
இந்தியா விலகி இருந்தால் கோடிகள் குவியும்
மூன்றாம் உலகப்
போரில் இந்தியா இரசியாவுடனும் சீனாவுடனும் கூட்டுச் சேரலாம் அல்லது நேட்டோப்
படையுடன் இணைந்து செயற்படலாம். எந்த ஒரு அணியிலும் இணையாமல் தனித்திருந்து தனது
படைக்கலன்களையும் உதிரிப்பாகங்களையும் போர்புரியும் நாடுகளுக்கு வழங்கலாம். இதனால்
பெரும் வருமான அதிகரிப்பைப் பெற்று போர் முடிவில் இந்தியா ஒரு செல்வந்த நாடாக
மாறலாம்.. சீனாவுடனான எல்லைத்
தகராற்றை இந்தியா சுமூகமாகத் தீர்த்தால் மட்டுமே இவை சாத்தியம். சீனாவின் வட கிழக்கு
மாநிலங்களை சீனா அபகரிக்கும் எண்ணத்தை கைவிடுமா?
இஸ்லாமியர்கள்
கொல்லப்படுவார்கள்
ஐரோப்பாவில் மிகக் கொடுமையான இன அழிப்பு
யூதர்களுக்கு எதிராக இரண்டாம் உலகப் போரில் நடந்தது போல் ஐரோப்பாவின் உள்ள
இஸ்லாமியர்கள் பெருமளவில் கொல்லப்பட்டு விரட்டப்பட்டுவார்கள். 2065-ம் ஆண்டளவில்
உலகில் இஸ்லாமியர்கள் தொகை கிரிஸ்த்தவர்களின் தொகையிலும் பார்க்க அதிகரித்துவிடும்
என எதிர்பார்க்கப் படுகின்றது. ஐரோப்பாவில் வாழும் இஸ்லாமியர்களின் பிறப்பு விகிதம்
அதிகம் என்பதால் அவர்களின் எண்ணிக்கை தொடர்பாக அச்சம் ஒன்று ஏற்கனவே
உருவாகிவிட்டது. அது அடுத்த பத்து ஆண்டுகளில் இன்னும் மோசமாகலாம். அதனால் பல
ஐரோப்பிய இனவாதிகள் இதற்கென்றே ஒரு போரை உருவாக்கி ஐரோப்பாவில் உள்ள
ஆபிரிக்கர்களையும் ஆசியர்களையும் விரட்ட வேண்டும் அல்லது கொல்ல வேண்டும் என்ற
கொள்கையைப் பற்றிச் சிந்திக்கத் தொடங்கிவிட்டார்கள். அப்படி நடக்கும்
இனக்கொலையின் பின்னர் இஸ்லாமியர்கள் தங்களுக்கு இடையிலான ஒற்றுமை பற்றிச் சிந்திப்பார்கள்.
22-ம் நூற்றாண்டில் அவர்களும் வல்லரசுகளாக உருவெடுப்பார்கள்.