Monday, 23 May 2016

வல்லரசுகள் இடையிலான வான் மேலாதிக்கப் போட்டி

வான் மேலாதிக்கம் போர்களை வெல்லும் என்பதை எல்லாப் படைத்துறை நிபுணர்களும் ஏற்றுக் கொள்ளாத போதிலும் அது போர் தோல்வியைத் தடுக்கும் என்பதை எல்லோரும் ஏற்றுக் கொண்டுள்ளனர். ஐக்கிய அமெரிக்கா எந்த ஒரு போரையும் வான் மேலாதிக்கம் இன்றி வெற்றி கொள்ளவில்லை. அரை நூற்றாண்டு காலமாக ஐக்கிய அமெரிக்கா சோவியத் ஒன்றியத்துடன் வான் மேலாத்திக்கப் போட்டியில் ஈடுபட்டிருனது. 1991இல் சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் அமெரிக்கா கால் நூற்றாண்டு காலம் வான் மேலாதிக்கம் செலுத்தி வந்தது. தற்போது அந்த மேலாதிக்கம் குறைந்து வருகின்றது. இந்தக் குறைவு அமெரிக்கா தனது மேலாதிக்கத்தை இழப்பதில் போய் முடியுமா?

வான் மேலாதிக்க வரலாறு
1911-ம் ஆண்டு இத்தாலிக்கும் துருக்கிக்கும் இடையில் நடந்த போரில் விமானத்தில் சென்று குண்டு வீசுவது ஆரம்பித்தது. 1939-ம் ஆண்டு போலந்தின் விமானப் படையை அழித்த பின்னர் ஜேர்மனிய விமானப் படையினர் போலந்தின் தரைப்படையினர் மீது தாக்குதல் தொடுத்து ஜேர்மனியத் தரைப் படையினர் இலகுவாக போலாந்தை ஆக்கிரமிக்க முடிந்தது. இதே வழியில் ஜேர்மனி பிரான்சையும் கைப்பற்றியது. இரசியாவை விமான மேலாண்மையால் கைப்பற்றி ஆக்கிரமித்துக் கைப்பற்றிய ஜேர்மனியப் படைகள் மீது பனி பொழியும் காலத்தில் இரசியப் படைகள் தாக்குதல் செய்யும் போது ஜேர்மனியத் தரைப் படைகளுக்கு உதவியாக விமானப் படையினர் செல்ல காலநிலை உகந்ததாக இருக்கவில்லை. 1950இல் கொரியப் போரில் முதற்தடவையாக வானில் இருந்து போர் விமானங்கள் மோதிக் கொண்டன. 1967இல் சிரியாவிடமிருந்த விமான எதிர்ப்பு ஏவுகணைகளை இஸ்ரேல் முதலில் அழித்தது. பின்னர்ம்எகிப்தினதும் சிரியாவினதும் விமானப் படைகளை இஸ்ரேல் துவம்சம் செய்து அரபு-இஸ்ரேலியப் போரில் பெரு வெற்றி ஈட்டியதுடன் பெரும் நிலப்பரப்பையும் கைப்பற்றிக் கொண்டது. அரபு இஸ்ரேலியப் போரில் அமெரிக்கா, பிரான்ஸ், இரசியா ஆகிய நாடுகளின் போர்விமானங்கள் பரீட்சிக்கப் பட்டன. பங்களா தேசப் போரின் போது இந்தியா பாக்கிஸ்த்தானிய விமானப் படையை செயலிழக்க வைத்தது.
போர் விமான வகைகள்
வானில் வைத்து எதிரி விமானங்களுடன் சண்டை செய்யும் விமானங்கள் சண்டை விமானங்கள் .
எதிரி இலக்குகள் மீது குண்டு வீசுபவை குண்டு வீச்சு விமானங்கள்.
எதிரிகளின் படையினர் மீது தாக்குதல் செய்பவை தாக்குதல் விமானங்கள்.
 எதிரியை உளவு பார்ப்பவை வேவு விமானங்கள்
எதிரியின் நடமாட்டங்களை பார்த்துத் தகவல் வழங்குபவை கண்காணிப்பு விமானங்கள்.
எதிரியின் கணனிகளை ஊடுருவிச் செல்லும் கணனிகளைக் கொண்டவை இலத்திரனியல் போர்விமானங்கள் .
மேற்கூறிய செயற்பாடுகளில் ஒன்றிற்கு மேற்பட்ட செயல்களைச் செய்யக் கூடியவை பற்பணி விமானங்கள்.
ஆளில்லாப் போர் விமாங்களைப் பல நாடுகள் உற்பத்தி செய்கின்றன. இஸ்லாமியத் தீவிரவாதிகளுக்கு எதிராகப் பரவலாக் ஆளில்லாப் போர் விமானங்களைப் பயன்படுத்துவதன் மூலம் அமெரிக்கா இத்துறையில் பெரும் அனுபவத்தைப் பெற்றுள்ளது.

இரசியாவிற்கான நட்பின் பரிசு
இரண்டாம் உலகப் போரின் முடிவில் பிரித்தானியா இரசியாவிற்கு போரில் இணைந்து செயற்பட்ட நாடு என்ற வகையில் இரசியாவிற்கு Rolls-Royce Nene centrifugal-flow jet engine என்னும் விமான இயந்திரங்களை வழங்கியது. இதில் இருந்து தரமான விமானங்களை உற்பத்தி செய்யும் தொழில்நுட்பத்தை இரசியா வளர்த்துக் கொண்டது. 1979இல் ஈரானின் மன்னர் ஷாவின் வீழ்ச்சிப் பின்னர் ஈரானிடமிருந்த அமெரிக்கப் போர்விமானங்களில் உள்ள தொழில் நுட்பங்களை இரசியா பெற்றுக் கொண்டது. கொரியப் போரில் அமெரிக்காவின் F-86 போர் விமானம் வட கொரியாவில் சுட்டு வீழ்த்தப் பட்டு அதன் தொழில்நுட்பம் இரசியாவால் பெற்றுக் கொள்ளப்பட்டது.  வியட்னாம் போரின் போது  ஐக்கிய  அமெரிக்காவின் 250இற்கு மேற்பட்டா விமானங்களைச் சுட்டு வீழ்த்திய இரசியாவின் S-75A Dvina என்னும் சாம் ஏவுகணைகளை இரசியா இப்போது மிகவும் மேம்படுத்தியுள்ளது. அத்துடன் சீனாவிற்கும் அவற்றை விற்றுள்ளது.

ரடார்களும் ரடார்களுக்கு புலப்படாத் தன்மையும்
வான் மேலாதிக்கப் போட்டியில் முக்கிய பங்கு வகிப்பது விமானங்களை இனம் காணும் ரடார்களும் அவற்றிற்குப் புலப்படாமல் இருக்கும் Stealth தொழில்நுட்பத்திற்கும் இடையிலான போட்டியே.  1970களில் எண்மியப் படுத்தப்பட்ட(Digital) ரடார்களை இரசியா உருவாக்கியது. இதனால் 1970களில் இரசிய விமான எதிர்ப்பு முறைமைகளுக்கும் ரடார்களுக்கும் புலப்படாத விமானம் அமெரிக்காவிற்குத் தேவைப்பட்டது. அது தொலைதூரம் பறக்கக் கூடியதாகவும் அதிக அளவு எடையுள்ள குண்டுகளைத் தாங்கிச் செல்லக் கூடியதாகவும் இருக்க வேண்டும். இப்படிப்பட்ட ஒரு போர் விமானத்தை உருவாக்கும் ஒப்பந்தம் அமெரிக்கப் பாதுகாப்புத் துறையினரால் தெரிந்தெடுக்கப்பட்ட சில விமான உற்பத்தியாளர்களுக்கு மிகவும் இரகசியமாக வழங்கப்பட்டது. இப்படிப்பட்ட விமானத்தை முதலில் உருவாக்குவதில் முதலில் வெற்றி கண்டது Northdrop நிறுவனம். 1988-ம் ஆண்டு B-2 போர்விமானம் உருவாக்கப் பட்டது. 172 அடி அகலமும் 17 அடி உயரமும் கொண்டது B-2 போர்விமானம். இதன் 80 விழுக்காடு அல்மினியத்திலும் பாரம் குறைந்ததாகவும் உருக்கிலும் பார்க்க உறுதியானதுமான கரி இழைகளால் உருவாக்கப்பட்டது. ஆறாயிரம் மைல்கள் எரிபொருள் மீள் நிரப்புச் செய்யாமல் தொடர்ந்து பறக்கக் கூடியதாகவும் 40,000 இறாத்தல் எடையுள்ள அணுக்குண்டு உட்படப் பலதரப்பட்ட படைக்கலன்களைத் தாங்கிச் செல்லக் கூடியதாகவும் B-2 போர்விமானம் உருவாக்கப்பட்டது. எதிரியின் ரடார்களில் இருந்து வரும் ஒலி அலைகளை உறிஞ்சக் கூடிய radar-absorbent material (RAM) பூச்சு இதன் மேற்பரப்பில் பூசப்பட்டிருக்கும். மிகவும் அழுத்தமானதாகும் அழகிய வளைவுகளைக் கொண்டதாகவும் இதன் மேற்பரப்பு வடிவமைக்கப் பட்டது. அத்துடன் எதிரியின் ரடாரில் இருந்து வரும் அலைகளைக் குழப்பும் இலத்திரனியல் கருவிகளும் B-2இல் உள்ளடக்கப் பட்டிருந்தன. ஒரு B-2 இன் உற்பத்திச் செலவு இரண்டு பில்லியன்களாகும். 1990களில் B-2 பாவனைக்கு வந்த போது சோவியத் ஒன்றியம் வீழ்ச்சியடைந்தது. இதனால் B-2 விமான உற்பத்தி குறைக்கப்பட்டது. ஐக்கிய அமெரிக்கப் பாதுகாப்புத்துறை 16 ஆண்டுகளாக 396பில்லியன் டொலர்கள் செலவு செய்து F-25 போர் விமானங்களை உருவாக்கியது. இது நன்கு பாதுகாக்கப்பட்ட வான்பரப்பினூடாக எந்த ரடார்களுக்கும் புலப்படாத வகையில் பறந்து செல்லக் கூடியதாக அமைந்தது. கடந்த 30 ஆண்டுகளாக அமெரிக்காவின் புலப்படாத் தொழில் நுட்பம் (stealth technology) அவர்களது வான் மேலாதிக்கத்தில் முக்கிய பங்கு வகித்தது. கடந்த முப்பது ஆண்டுகளாக விமானாங்களை புலப்படாமற் பண்ணும் தொழில்நுட்பங்களிற்கும் அத் தொழில்நுட்பம் கொண்ட விமானங்களை எப்படிக் கண்டு பிடிப்பது என்ற தொழில்நுட்பங்களிற்கும் இடையில் மிக உக்கிரமான போட்டி நடந்து கொண்டிருக்கின்றது. 1980களில் சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்கு முன்னர் இரசியாவும் புலப்படாத் தொழில் நுட்பத்தை (stealth technology) உருவாக்கி விட்டது. 1999-ம் ஆண்டு கோசோவா போரின் போது அமெரிக்காவின் F-117 விமானம் செக் படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டது. விழுந்த விமானத்தின் விமானியை நேட்டோப் படையினரின் உலங்கு வானூர்திகள் மீட்ட போதிலும் அந்த விமானத்தின் உடைந்த பாகங்களை சீனாவும் இரசியாவும் உள்ளூர் விவசாயிகளிடமிருந்து வாங்கிக் கொண்டனர்.  அதிலிருந்து சீனா புலப்படாத் தொழில் நுட்பத்தை உருவாக்கியது.
சிறந்த 10 போர் விமானங்கள்
இலத்திரனியல்
1960களில் விமானங்களை அவற்றின் வெப்பத்தில் இருந்து இனம் காண்பதற்கு  infrared உணரிகள் உருவாக்கப்பட்டன. ஒளியில் உள்ள ஏழு நிறங்களில் ஒன்றான் சிவப்பின் அலைவரிசையிலும் அதிகமானதாகவும் microwavesஇன் அலைவரிசைகளிலும் குறைவானதாகவும் உள்ள அலைவரிசையை infrared அலைவரிசை என்பர். விமானங்களின் வெப்பத்தில் இருந்து வரும் கதிர்வீச்சின் infrared அலைவரிசையைக் கொண்டு  விமானத்தை இனம் காணும் முறைமையை  infra-red search and track (IRST)  என அழைப்பர். இவை மேம்படுத்தப் பட்டு 1980களில் வெப்பத் தேடிச்செல்லும் ஏவுகணைகள் உருவாக்கப்பட்டன. விமானத்தில் இருந்து வெளிவரும் அதிலும் முக்கியமாக விமானத்தில் உள்ள கணனித் தொகுதிகளில் இருந்து வெளிவரும் மின்காந்த அலைகளை வைத்து விமானத்தை இனம்காண Electro Magnetic Snooper உருவாக்கப்பட்டன.
தானியங்கி விமான எதிர்ப்பு முறைமை
அமெரிக்காவின் போர் விமானங்களை இனம் கண்டு அழிக்கக் கூடிய ஏவுகணைகளை உருவாக்கி அவற்றை அமெரிக்காவின் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் நாடுகளுக்கு விற்பனை செய்வது இரசியாவின் புவிசார் அரசியலுக்கு அவசியமான ஒன்றாகியது. இரசியா தான் உருவாக்கிய விமான மற்றும் ஏவுகணை எதிர்ப்பு முறைமைகளை சீனாவிற்கு விற்பனை செய்கின்றது. இரசியா சீனாவிற்கு விற்பனை செய்த S-300PMU-2 என்னும் நடமாடும் ஏவுகணை எதிர்ப்பு முறைமை ஒரேயடியாக நூறு இலக்குகளை இனம் காணக் கூடியது. . F-35ஐ உற்பத்தி செய்த லொக்கீட் மார்ட்டின் நிறுவனம் F-35ஐ இனம் காணவரும் எல்லாவற்றையும் அது குழப்பிவிடும் என மார்தட்டியது. ஆனால் இரசியாவின் எஸ்-400 விமான மற்றும் ஏவுகணை எதிர்ப்பு முறைமை அதை உலுப்பி விட்டது. அமெரிக்கா உருவாக்கும் F-35 Lightning I விமானங்களில் அது காவிச் செல்லும் படைக்கலன்களை வெளியில் பொருத்தாமல் விமானத்தினுள் பொருத்தப்பட்டிருக்கும். இது ரடார்களைத் தவிர்க்கும் ஒரு உத்தியாகும். ஆனால் இதற்கு முந்திய விமானங்களிலும் பார்க்க இந்த விமானத்தை இலகுவில் இனம் காண முடியும் என்கின்றனர் படைத்துறை நிபுணர்கள். ஆனால் F-35இல் பொருத்தப் பட்டிருக்கும் Active Electronically Scanned Array (AESA) என்னும் ரடார் எதிரி விமானங்களையும் இலக்குகளையும் இலகுவில் இனம் காணக் கூடியது.
அமெரிக்காவின் அதிரடியான B-21
அமெரிக்காவின் வான் மேலாதிக்கத்தை நிலை நிறுத்த B-21 போர்விமான உற்பத்தி 2015-ம் ஆண்டு Northrop Grumman நிறுவனத்திடம் ஓப்படைக்கப்பட்டது. அமெரிக்காவின் வலுவை உலகமயப்படுத்தும் செயற்திட்டத்தின் ஒரு பகுதியாகவும் அடுத்த ஐம்பது ஆண்டுக்கான கேந்திரோபாய முதலீடாகவும் B-21 நீள் தூரத் தாக்குதல் குண்டுவீச்சு விமானம் முன்னெடுக்கப்பட்டுள்ளது என்றார் அமெரிக்கப் பாதுகாப்புத் துறைச் செயலர் அஸ்டன் கார்ட்டர்.  B-21இன் பின்புறம் W வடிவத்திலும் இறக்கைகள் 33 பாகைகள் சரிவானதாகவும் இருக்கும். Northrop Grumman நிறுவனத்தின் சிறந்த வெப்ப முகாமைத் (Thermal management) தொழில் நுட்பம் அதனிடம் B-21 விமான உற்பத்தி ஒப்படைக்கப் பட்டமைக்கான முக்கிய காரண்மாகக் கருதப்படுகின்றது. சிறந்த வெப்ப முகாமையால் எதிரிகளின் வெப்பம்-தேடி ஏவுகணைகளால் தாக்கப்பட முடியாத தன்மையை B-21 பெறுகின்றது. Northrop நிறுவனத்தின் ஆறாம் தலைமுறைத் தாக்குதல் விமானத் தொழில் நுட்பங்களில் சிறந்த stealth எனப்படும் ரடாருக்குப் புலப்படாத்ட்தன்மை, , சிறந்தswept-wing fighter பொறிமுறை, பல் வேறுபட்ட இலக்குகளை தாக்கும் வலிமை மிக்க லேசர் படைக்கலன்கள் போன்றவை  உள்ளன. இணைய வெளி ஊடுருவல்கள் மூலம் எதிரி நாடுகள் B-21  இன் இரகசியங்களைத் திருடாமல் இருக்க பெரு முயற்ச்சிகள் எடுக்கப் பட்டுள்ளன.
விமானத் தொழில்நுட்பத்தின் ஒரு முக்கியமான அம்சம் ஒரு விமானம் எவ்வளவு தொலைவில் வைத்து எதிரி விமானங்களை இனம் காணும் என்பதாகும். எதிரி விமானம் தன்னை இனம் காணமுன்னர் எதிரிவிமானத்தை இனம் காண்டு கொண்டால் எதிரியை முந்திக் கொண்டே அதை நோக்கித் தாக்குதலைத் தொடுக்கலாம். அமெரிக்காவிடம் இந்த துரித இனம்காணும் தொழில்நுட்பம் இரசியாவிலும் பார்க்கவும் சீனாவிலும் பார்க்கவும் சிறந்தவையாக இருக்கின்றது. இரசியாவின் SU-35 விமானங்கள் அமெரிக்காவின் F-35 விமானங்களை இனம் காணுவதற்கு நூறு மைல்களுக்கு முன்னதாகவே F-35 விமானங்கள் அவற்றை இனம் கண்டுவிடும்.
அமெரிக்காவிடம் இருக்கும் ஏவுகணை எதிர்ப்பு முறைமைகளில் மிகவும் நம்பகத் தன்மை வாய்ந்தது THAAD எனச் சுருக்கமாக அழைக்கபடும் Terminal High Altitude Area Defense ஆகும். THAAD ஏவுகணை எதிர்ப்பு முறைமை என்பது Ballistic Missiles களுக்கு எதிரான பாதுகாப்பு முறைமையாகும். உலகில் முப்பதுக்கு மேற்பட்ட நாடுகள் Ballistic Missiles வைத்திருக்கின்றன. தாட் ஏவுகணை எதிர்ப்பு முறைமை எதிரிகள் ஏவும் Ballistic Missileகளை இடைமறித்து அழிக்கவல்லன. 

குமையி
வான் மேலாதிக்கத்தின் முக்கிய அம்சமாக ஜாமிங் எனப்படும் குமையியை அமெரிக்காஅ உருவாக்குகின்றது. அமெரிக்க வான் படையினரும் Raytheon என்னும் தொழில் நுட்ப நிறுவனமும் இணைந்து இலத்திரனியல் போர் முறையின் முக்கிய அம்சமாக அடுத்த தலைமுறை  குமையியை (next generation jammer) உருவாக்குவதற்கான முதற்படி வடிவமைப்பு வேலைகளை வெற்றிகரமாக முடித்துள்ளன. இது ஒரு  வான்வழி இலத்திரனியம் தாக்குதல் முறைமையாகும் ( airborne electronic attack system). இரு வகையான குமையிகள் உள்ளன. முதலாவது பொறிமுறைக் குமையிகள்(mehcanical jammers) இரண்டாவது இலத்திரனியல் குமையிகள் (elctronic jammers). பொறிமுறைக் குமையிகள் எதிரியின் ரடார்களைப் பிழையான வகையில் செயற்படச் செய்யும். இலத்திரனியற் குமையிகள் எதிரியின் ராடர்களுக்குச் செறிவான வலுமிக்க சமிக்ஞைகளை அனுப்பி அவற்றைச் செயலிழக்கச் செய்யும். அடுத்த தலைமுறை இலத்திரனிய்ற் குமையிகள் எதிரி விமானங்களுக்கு ஒரு போலியான விமானத்தை உணரவைக்கும்.

சீனா
கடந்த 30 ஆண்டுகளாக சீனா போர் விமானங்களைத் தயாரித்து வருகின்ற போதிலும் விமான இயந்திரத் தொழில்நுட்பத்தில் மற்ற முன்னணி நாடுகளுடன் ஒப்பிடுகையில் சீனா பின் தங்கியே இருக்கின்றது. சீனாவின் J-22 மற்றும் J-31ஆகிய போர் விமானங்களின் பறப்பு வேகம் அமெரிக்காவின் F-22, F-35 ஆகியவற்றின் பறப்பு வேகத்திலும் பார்க்கக் குறைந்ததே.  சூ பின் என்ற சீனர் அமெரிக்காவின் போர்விமான உற்பத்தி இரகசியங்களை இணையவெளியூடாகத் திருடிய குற்றத்தை 2016 மார்ச் மாதம் ஒத்துக் கொண்டது சீனா தனது படைத்துறை இரகசியங்களைத் திருடுவதாக அமெரிக்கா தொடர்ந்து வைத்த குற்றச் சாட்டை உறுதி செய்தது. சீனாவின் இரட்டை இயந்திரங்களைக் கொண்ட புலப்படாத் தொழில்நுட்பத்துடன் கூடிய J-20 போர் விமானங்கள் அமெரிக்காவின் F-22 ரப்டர் விமானங்களையும் சீனாவின் இரட்டை இயந்திரங்களைக் கொண்ட பல பணிகள் செய்யக் கூடிய  J-31 போர் விமானங்கள் அமெரிக்காவின் F-35 விமானங்களையும் ஒத்தனவாக இருப்பதற்குக் காரணம் சீனா இணையவெளி மூலம் ஊடுருவி அமெரிக்க விமானத் தயாரிப்பு நிறுவனமான லொக்கீட் மார்ட்டினின் போர் விமானங்களின் தொழில்நுட்பத்தைத் திடுடியமையே எனக் குற்றம் சாட்டப்படுகின்றது.  சீனாவின் J-20 விமானங்களுக்கான எஞ்சின் சோவியத் ஒன்றியம் இருந்த காலத்தில் உருவாக்கப் பட்ட மிக்-29 போர் விமானங்களின் எஞ்சின்களே. சீனா இரசியாவின் SU-35 என்னும் ஐந்தாம் தலைமுறை போர் விமானங்கள் இருபத்தி நான்கை வாங்கும் ஒப்பந்தத்தை 2015-ம் ஆண்டு ஜூன் மாதம் கைச்சாத்திட்டது. இது சீன விமானப் படைக்கும் அமெரிக்க விமானப் படைக்கும் இடையிலான இடைவெளியைக் குறைத்தது. ஆனால் சீனா விமான உருவாக்கற் தொழில்நுட்பத்தை அதிலும் எஞ்சின்கள் உருவாக்கும் வல்லமையை எப்படியாவது வளர்த்திட வேண்டும் என்பதில் மிகவும் கரிசனை கொண்டுள்ளது. இரசியாவிடமிருந்து சீனா வாங்கிய SU-27 விமானங்களில் உள்ள தொழில்நுட்பத்தை reverse engineering முறையில் பிரதி பண்ணி சீனா தனது J-11-D போர் விமானங்களை உருவாக்கியதாக் இரசிய ஊடகமான ஸ்புட்நிக் குற்றம் சாட்டியிருந்தது. இரசியாவின் SU-35ஐ சீனா வாங்க முற்பட்ட போது இரசியா மறுத்துவிட்டது.

வான் மேலாதிக்கப் போட்டி முடிவின்றித் தொடரும்
அமெரிக்காவிற்கும் மற்ற வல்லரசு நாடுகளிற்கும் இடையிலான போர்விமானத் தொழில்நுட்ப இடைவெளி குறைந்து வருவதை அமெரிக்கப் படைத்துறை வல்லுனர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். அமெரிக்க விமானங்களில் லேசர் தொழில்நுட்பவும் மைக்குரோவேவ் தொழில் நுடபமும் இணைக்கப்படும் போது அவற்றின் வான் ஆதிக்கம் மிகவும் வலுவடையும். இரசியா தனது எஸ்-400 விமான மற்றும் ஏவுகணை எதிர்ப்பு முறைமையை மேம்படுத்தி எஸ்-500ஐ உருவாக்கி வருகின்றது. ஐக்கிய அமெரிக்கா தனது ஆறாவது தலைமுறைப் போர் விமானங்களை உருவாக்கி வருகின்றது. இரசியா தற்போது எதிர்கொள்ளும் பொருளாதாரப் பின்னடைவைச் சமாளித்தால் அது அமெரிக்காவின் வான் மேலாதிக்கத்திற்கு தொடர்ந்து சவால் விடுவது மட்டுமல்ல இணையாகவும் உருவெடுக்க முடியும். 2014-ம் ஆண்டு இரசியா தனது 6-ம் தலைமுறைப் போர்விமான உருவாக்கத்தை அறிவித்தது.  விமானத்தின் உடல் எடையில் இரசியா அதிக கவனம் செலுத்துகின்றது. குறைந்த எடையில் நீண்டகாலம் பாவிக்கக் கூடிய வகையில் உலோகக் கலவையை அது உருவாக்குகின்றது. காற்றில்லாத வானவெளியிலும் பறக்கக்கூடியதாக இரசியாவின் 6-ம் தலைமுறைப் போர் விமானங்கள் அமையவிருக்கின்றன. இவையும் சிறப்பான இலத்திரனியல் தொடர்பாடல்களைக் கொண்டிருக்கும். முழுமையான விபரங்கள் இரகசியமாக வைக்கப்பட்டுள்ளன.
சீனாவில் இருந்து இணைய வெளியின் ஊடாக ஊடுருவி தகவல்களைப் பெறுவதை அமெரிக்காவால் தற்போது தடுக்கமுடியாமல் இருக்கின்றது. சீனாவிற்கு அமெரிக்காவின் வான் மேலாதிக்கத்தைச் சமாளிக்க இரசியாவின் தொழில் நுட்பம் தற்போது தேவைப்பட்டாலும் அதனால் நீண்டகால அடிப்படையில் முன்னணி வகிக்க முடியும். பிரான்ஸ், பிரித்தானியா, ஜேர்மனி போன்ற ஐரோப்பிய நாடுகள் ஒன்றிணைந்து தமது வான் மேலாதிக்கத்தை தக்கவைக்க முடியும். அடுத்த 25 ஆண்டுகளும் வல்லரசு நாடுகள் வான் மேலாதிக்கத்தில் அதிக கவனம் செலுத்தும்.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...